Thursday, 18 August 2022

கௌசல்யை புலம்பல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 060 (23)

The lament of Kaushalya | Ayodhya-Kanda-Sarga-060 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: அழுது புலம்பிய கௌசல்யை; ஆறுதல் கூறிய சுமந்திரன்...

Kaushalya and Sumantra

அப்போது தெளிவான மனநிலையின்றி, பூதத்தால் பீடிக்கப்பட்டவளைப் போலத் தரையில் கிடந்து தொடர்ந்து நடுங்கிக் கொண்டிருந்த கௌசல்யை, அந்த சூதனிடம் {சுமந்திரனிடம், பின்வருமாறு} பேசினாள்:(1) "காகுத்ஸ்தனும் {ராமனும்}, சீதையும் எங்கேயிருக்கின்றனரோ, லக்ஷ்மணன் எங்கே இருக்கின்றானோ அங்கே என்னை அழைத்துச் செல்வீராக. அவர்கள் இல்லாமல் ஒரு க்ஷணமும் இங்கே ஜீவித்திருக்க எனக்கு விருப்பமில்லை.(2) இரதத்தை சீக்கிரம் திருப்புவீராக. என்னையும் தண்டகத்திற்கு {தண்டகவனத்திற்கு} அழைத்துச் செல்வீராக. இனியும் அவர்களைப் பின்தொடராமல் இருந்தால் யம க்ஷயத்தையே {யமனின் வசிப்பிடத்தையே} நான் அடைவேன்" {என்றாள் கௌசல்யை}.(3)

கண்ணீர் பெருக்கினால் தடைபட்டுக் குரலுடைந்த அந்த சூதன், கூப்பிய கைகளுடனும், மெல்லிய தொனியுடனும் அந்த தேவியை {கௌசலையை} ஆசுவாசப்படுத்துவதற்காக இதைச்சொன்னான்:(4) "சோகத்தையும், மோஹத்தையும், துக்கத்தில் பிறந்த குழப்பத்தையும் கைவிடுவாயாக. சந்தாபத்தை {மனத்துன்பத்தைக்} கைவிட்டு வனத்தில் வசிக்க ராமனால் இயலும்.(5) ஜிதேந்திரியனும் {புலன்களை வென்றவனும்}, தர்மஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும்}, வனத்தில் ராமனின் பாதங்களில் பரிசரணமடைந்தவனுமான லக்ஷ்மணனும், பரலோகத்தையே ஆராதித்து {தொழுது} கொண்டிருக்கிறான்.(6) 

சீதையின் மனத்தில் ராமனே நிலைத்திருப்பதால், ஜனங்களற்ற வனத்திலும் கிருஹத்திற்கு ஒப்பான வசிப்பிடத்தை அடைந்ததைப் போன்ற தன்னம்பிக்கையுடன் நிம்மதியாக இருக்கிறாள்.(7) சூக்ஷ்மமாகவோ, மிகச் சிறிய அளவிலோ கூட அவளிடம் {சீதையிடம்} தைன்யத்தை {மனத்தளர்ச்சியை} நான் காணவில்லை. அந்த வைதேஹி, பிரவாசானங்களுக்கு உசிதமானவள் {நாடுகள் பல கடந்து பயணிக்கத் தகுந்தவள்} போல எனக்குத் தோன்றுகிறது.(8) பூர்வத்தில் நகர உபவனத்தை எவ்வாறு ரசித்தாளோ, அவ்வாறே ஜனங்களற்ற வனத்திலும் மகிழ்ச்சியுடன் இருக்கிறாள்.(9) பால சந்திரனுக்கு ஒப்பான முகத்தைக் கொண்ட அழகியும், ராமனிடம் மனத்தை நிலைக்கச் செய்தவளுமான சீதை, ஜனங்களற்ற வனத்தில் இருந்தாலும், ஒரு சிறுமியைப் போல மகிழ்ச்சியுடன் இருக்கிறாள்.(10) அவளது ஹிருதயம் அவனிடம் செல்கிறது, அவளது ஜீவிதமும் அவனிடம் நிலைத்திருக்கிறது. இராமன் இல்லாத அயோத்தியே அவளுக்கு வனமாகும்.(11) அயோத்தியிலிருந்து ஒரு குரோசம் மாத்திரமே அகன்றிருப்பதைப் போலவும், ஏதோ அதன் {அயோத்தியின்} தோட்டத்தில் இருப்பதைப் போலவும் அந்த வைதேஹி, கிராமங்களையும், நகரங்களையும், நதிகளின் வழிகளையும் {பிரவாஹங்களையும்}, விதவிதமான மரங்களையும் கண்டு ராமனிடமோ, லக்ஷ்மணனிடமோ விசாரித்து அவற்றைக் குறித்து அறிந்து கொள்கிறாள்.(12,13) அவளைக் குறித்து இவற்றை மட்டுமே நான் நினைவில் கொண்டிருக்கிறேன். கைகேயி குறித்து அவள் திடீரெனச் சொன்ன வாக்கியம் என் நினைவுக்கு வர மறுக்கிறது" {என்றான் சுமந்திரன்}.(14) 

அந்த சூதன் {சுமந்திரன்}, கவனமின்றி தன் உதட்டருகே வந்த அந்த வாக்கியங்களை விலக்கிவிட்டு, மகிழ்ச்சியான, மதுரமான சொற்களையே அந்த தேவியிடம் {கௌசல்யையிடம்} சொன்னான்:(15) "சந்திரக்கதிர்களுக்கு நிகரான சீதையின் பிரபையானது {உடற்பிரகாசமானது}, பயணத்தினாலோ, வாயு வேகத்தினாலோ, வனத்தின் திகைப்பினாலோ, சூரிய வெப்பத்தினாலோ வதங்கவில்லை.(16) பொதுநலத்தில் அக்கறையுடன் கூடியதும், பூர்ண சந்திரனுக்கு ஒப்பானதுமான பிரபையை {பிரகாசத்தைக்} கொண்ட வைதேஹியின் வதனம் {முகம்} வாட்டமேதும் அடையாமலிருந்தது.(17) அவளது சரணங்கள் {பாதங்கள்}, அலக்தம் {செம்பஞ்சுக் குழம்பு / மருதாணி} பூசப்படாவிட்டாலும், அந்த அலக்தம் போலவே சிவப்பாகவும், செந்தாமரை மொட்டுகளுக்கு இணையான காந்தியுடனும் இருந்தன.(18) சிணுங்கும் நூபுரங்களுடன் {சிலம்புகளுடன்} விளையாடியபடியே நடந்து செல்லும் பாமினியான அந்த வைதேஹி, அவனிடம் {ராமனிடம்} கொண்ட அன்பினால் இப்போதும் பூஷணங்களை {ஆபரணங்களைக்} கைவிட்டிருக்கிறாள்.(19) இராமனின் கரங்களில் தஞ்சம்புகுந்து, வனத்தில் வசித்திருக்கும் அவள், கஜத்தையோ, சிம்மத்தையோ, வியாகரத்தையோ {யானை, சிங்கம், புலி ஆகியவற்றைக்} கண்டு அச்சமடையாமல் இருக்கிறாள்.(20) அவர்களுக்காகவோ, நமக்காகவோ, மன்னருக்காகவோ நாம் பரிதாபப்பட வேண்டியதில்லை. இந்தக் கதை எப்போதும் உலகில் விருத்தியடைந்து கொண்டிருக்கும்.(21) அவர்கள் சோகத்தைக் கைவிட்டு, மகிழ்ச்சியான மனத்துடன், மஹாரிஷிகளின் பாதையைப் பின்பற்றி, வனத்தின் பழங்களை உண்டு, வனவாழ்வில் மகிழ்ந்து, தங்கள் தந்தைக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காத்து வருகின்றனர்" {என்றான் சுமந்திரன்}.(22)

நன்றாகப் பேசிக்கொண்டிருந்த அந்த சூதனால் இவ்வாறு தடுக்கப்பட்டாலும், அந்த தேவி தன் மகன் நிமித்தமாக உண்டான சோகத்தில் மெலிந்து, "இராகவா" என்றும், "பிரியமான புத்திரா" என்றும், நிறுத்தாமல் {ஓயாமல்} அழுது கொண்டிருந்தாள்.(23)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 060ல் உள்ள சுலோகங்கள் : 23

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை