The end of Dasaratha's life | Ayodhya-Kanda-Sarga-064 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தசரதன், இறந்துபோன ரிஷியின் பெற்றோரிடம் சென்றதைக் கௌசல்யையிடம் சொன்னது; தசரதனின் மரணம்...
தர்மாத்மாவான அந்த ராகவன் {தசரதன்}, ஏற்கத்தகாத வகையில் நேர்ந்த அந்த மஹரிஷியின் {சிரவணனின்} வதத்தைக் குறித்துப் புலம்பியபடியே மீண்டும் கௌசல்யையிடம் {பின்வருமாறு} பேசினான்:(1) "அஞ்ஞானத்தால் அந்த மகத்தான பாபத்தைச் செய்த நான், இந்திரியங்கள் {புலன்கள்} குழம்பி, "நல்லதைச் செய்வது எப்படி? {எதைச் செய்தால் நல்லது?}" என்ற புத்தியுடன் தனியாகச் சிந்தித்தேன்.(2) பிறகு, அந்த கடத்தில் {குடத்தில்} நன்னீரை பூர்ணமாக நிரப்பிக் கொண்டு, அறிவிக்கப்பட்ட பாதையில் சென்று, அந்த ஆசிரமத்தை அடைந்தேன்.(3) பலவீனர்களும், பார்வையற்றவர்களும், முதிர்ந்தவர்களும், பாதுகாக்க யாருமற்று, சிறகிழந்த பறவைகளைப் போலிருப்பவர்களுமான அவரது பெற்றோர்களை நான் அங்கே கண்டேன்.(4) எத்தொழிலுமற்று, அசைவற்று அநாதைகளாக அமர்ந்திருந்தவர்களும், என்னால் தங்கள் நம்பிக்கையை {ஆசை மகனை} இழந்தவர்களுமான அவர்கள் அப்போது தங்கள் மகனைக் குறித்தே பேசிக் கொண்டிருந்தனர்.(5)
சோகத்தால் பீடிக்கப்பட்ட சித்தத்துடனும், எதிர்வரும் ஆபத்தைக் குறித்த பயத்தால் கலங்கிய மனத்துடனும் கூடிய நான், அந்த ஆசிரமபதத்தை அடைந்ததும் மேலும் {அதிகமான} சோகத்தால் பீடிக்கப்பட்டேன்.(6) என் பாத சப்தத்தைக் கேட்ட அந்த முனி {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னார், "புத்திரா, ஏன் தாமதித்தாய்? சீக்கிரம் நீரை என்னிடம் கொண்டு வா.(7) குழந்தாய், நீரில் இவ்வாறு நீ விளையாடி வருவதற்கான காரணமென்ன? உன் மாதா கவலையுடன் இருக்கிறாள். சீக்கிரம் ஆசிரமத்திற்குள் பிரவேசிப்பாயாக.(8) புத்திரா, குழந்தாய், நானோ, உன் மாதாவோ உனக்கு விருப்பமில்லாத எதையும் செய்திருந்தால், தபஸ்வியான நீ அதை உன் மனத்திற்குள் வைத்துக் கொள்வது தகாது.(9) அகதிகளான {கதியற்றவர்களான} எங்களுக்கு நீயே கதியாக இருக்கிறாய். பார்வையற்றவர்களான எங்களுக்கு நீயே கண்களாக இருக்கிறாய். எங்கள் பிராணன் உன்னையே பற்றியிருக்கிறது {நீயே எங்கள் பிராணனாக இருக்கிறாய்}. நீ ஏன் எங்களிடம் ஏதும் பேசாமலிருக்கிறாய்?" {என்று கேட்டார் அந்த முனிவர்}.(10)
சித்தம் பீடிக்கப்பட்டவனான நான், அந்த முனிவரைக் கண்டு, மெய்யெழுத்துகளும், பொருளுமற்ற தொனியில் அவரிடம் பேசத் தொடங்கினேன்.(11) பிறகு என் வாக்குபலத்தை திடப்படுத்திக் கொண்டும், முயற்சியால் மன பயத்தை அடக்கிக் கொண்டும், அவரது புத்திரனின் மரணத்தால் உண்டான ஆபத்தை {பின்வருமாறு} அவரிடம் சொன்னேன்:(12) "நான் ஒரு க்ஷத்திரியன், தசரதன் {என்பது என் பெயர்}. நான் மஹாத்மாவான உங்கள் புத்திரனல்லன். நன்மக்கள் இகழும் என் செயலால் இந்த துக்கம் விளைந்தது.(13) பகவானே, நீரருந்த வரும் கஜத்தையோ, வேறேதேனும் கொடும் விலங்கையோ கொல்லும் நோக்குடனும், கையில் வில்லுடனும் நான் சரயுவின் தீரத்திற்கு வந்தேன்.(14) அப்போது கும்பத்தில் நீர் நிறையும் சப்தத்தைக் கேட்ட நான், துவிபமென {யானையெனக்} கருதி அதை நோக்கி ஒரு பாணத்தை எய்தேன்.(15)
பிறகு நதியின் தீரத்தை அடைந்து, ஹிருதயத்தில் கணை துளைக்கப்பட்டுப் புவியில் பிராணனற்றாற்போலக் கிடக்கும் ஒரு தபஸ்வியைக் கண்டேன்.(16) பகவானே, கஜத்தைக் கொல்லும் விருப்பத்துடன் சப்தத்தை இலக்காகக் கொண்டு ஒரு நாராசத்தை {அம்பை} நீருக்குள் ஏவியதால் உமது சுதன் {மகன்} கொல்லப்பட்டார்.(17) பரிதபித்துக் கொண்டிருந்த அவரை அணுகி, அவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது மர்மத்தில் இருந்து அந்த பாணத்தை உடனே பிடுங்கினேன்.(18) அந்த பாணம் பிடுங்கப்பட்டதும், பெற்றோரான நீங்கள் இருவரும் பார்வையற்றவர்கள் என்று புலம்பியவாறு அங்கேயே அவர் ஸ்வர்க்கத்தை அடைந்தார்.(19) அஞ்ஞானத்தாலும், எதிர்பாராமலும் உமது புத்திரனை நான் கொன்றுவிட்டேன். இந்நிலையில் செய்ய வேண்டியது என்னவோ அதை முனிவர் {முனிவரான நீர்} சொல்லவேண்டும்" {என்றேன்}.(20)
பகவானான அந்த ரிஷி, நான் செய்த பாபத்தை அறிவிக்கும் வகையில் சொல்லப்பட்ட அந்தக் கொடுஞ் சொற்களைக் கேட்டுத் தீவிர ஆயாசத்தை {வேதனையைப்} பொறுத்துக் கொள்ளும் சக்தியற்றவராக இருந்தார்.(21) சோகத்தால் பீடிக்கப்பட்டுக் கண்ணீரால் நனைந்த வதனத்துடன், பெருமூச்சுவிட்ட அந்த மஹாதேஜஸ்வி, கைகளைக் கூப்பியபடி அருகில் சென்ற என்னிடம் இதைச் சொன்னார்:(22) "இராஜன், இந்த அசுப கர்மத்தை {தீச்செயலை} என்னிடம் நீயே தானாக வந்துசொல்லாமல் இருந்திருந்தால் உடனே உன் தலை சதசஹஸ்ர {நூறாயிரம் / லக்ஷம்} துண்டுகளாகச் சிதறியிருக்கும்.(23) ஞானப்பூர்வமாக {அறிந்தே} ஒரு க்ஷத்திரியனால் செய்யப்படும் வதம், விசேஷமாக {ஒரு க்ஷத்திரியன் ஒரு} வானப்ரஸ்தனை வதம் செய்வது, இந்திரனையே ஸ்தானத்திலிருந்து தள்ளிவிடும்.(24) தபம் செய்யும் முனிவர்கள், அல்லது பிரம்மசாரிகள் குறித்த காரியத்தில் அறிந்தே சஸ்திரத்தை {ஆயுதத்தை} ஏவுபவனின் தலை ஏழு துண்டுகளாகப் பிளக்கும்.(25) அஞ்ஞானத்தில் {அறியாமையில்} இந்தச் செயலைச் செய்த காரணத்தினாலேயே நீ ஜீவித்திருக்கிறாய். {இல்லையெனில்} மொத்த இக்ஷ்வாகு குலமே கூட இன்று அழிந்திருக்கும்; நீ எம்மாத்திரம்?" {என்றார்}.(26)
மேலும் அவர், "நிருபனே {மன்னா}, எங்கள் புத்திரன், உதிரத்தால் உடல் நனைந்து, மான் தோலாடை கிழிந்து, தர்மராஜனின் {யமனின்} வசத்தில் நனவில்லாமல் புவியில் எங்கே சயனித்திருக்கிறானோ அங்கே எங்களை அழைத்துச் செல்வாயாக. அவனது கடைசி தரிசனத்தை இப்போது நாங்கள் தரிசிக்க விரும்புகிறோம்" {என்றார்}.(27,28)
பின்னர் பெரிதும் அழுது கொண்டிருந்த அவர்கள் இருவரையும் அந்த இடத்திற்குத் தனியாக அழைத்துச் சென்று, அந்த முனிவரையும், அவரது பாரியாளையும் அந்தப் புத்திரனை ஸ்பரிசிக்க {தொடச்} செய்தேன்.(29) பரிதாபத்திற்குரியவர்களான அவ்விருவரும் தங்கள் புத்திரனை நெருங்கி ஸ்பரிசித்து, அவரது சரீரத்தில் விழுந்தனர். அப்போது அவரது பிதா இதைச் சொன்னார்:(30) "வத்ஸா {அன்புக் குழந்தாய்}, இப்போது நீ என்னை வணங்கவும் இல்லை, என்னிடம் பேசவும் இல்லை. பூமியில் ஏன் உறங்கிக் கொண்டிருக்கிறாய்? கோபத்தில் இருக்கிறாயா?(31) தார்மிகப் புத்திரா, நான் உன் பிரியத்திற்குரியவன் இல்லையெனில் உன் மாதாவையாவது பார். புத்திரா நீ ஏன் எங்களை ஆலிங்கனம் செய்யாமலிருக்கிறாய் {ஆரத்தழுவாமல் இருக்கிறாய்}? சுகுமாரா {நல்ல இளைஞனே}, ஏதாவது சொல்.(32)
ஹிருதயத்தைத் தீண்டும் மதுரமான குரலில் சாஸ்திரங்களையோ, வேறு உரைகளையோ விசேஷமாக அபரராத்திரியில் {குறிப்பாக இரவின் முடிவில் / வைகறை யாமத்தில்} நான் யாரிடம் கேட்பேன்?(33) புத்திரா, எவன் ஸ்நானம் செய்து, சந்தியையை உபாசித்து {சந்தியாவந்தனம் செய்து}, அக்னியில் ஆகுதிகள் இட்டு[1], என் அருகில் அமர்ந்து சிலாக்கியமாக {பொருத்தமாகப்} பேசி, சோகத்திலும், பயத்திலும் பீடிக்கப்பட்டிருக்கும் என்னை {உன்னைப் போலினி எவன்} பார்த்துக் கொள்ளப் போகிறான்?(34) கர்மங்கள் {செயல்கள்} ஏதும் செய்யாதவனும், எதையும் கொண்டு வந்து கொடுக்காதவனும், ஆதரவற்றவனுமான எனக்கு, பிரியத்திற்குரிய அதிதிக்குக் கொடுப்பதைப் போல நீரில் விளையும் கிழங்குகளையும் {தாமரைக் கிழங்கு போன்றவை}, நிலத்தில் விளையும் {சேம்பு முதலிய} கிழங்குகளையும், பழங்களையும் எவன் போஜனமாகக் கொடுப்பான்?(35)
[1] அயோத்தியா காண்டம் சர்க்கம் 63:53ல் சிரவணன், தான் வைசிய சூத்திரக் கலப்பில் பிறந்தவன் என்று சொல்கிறான். ஆண் வைசியராக இருந்து, பெண் சூத்திரராக இருக்கும் பட்சத்தில் பிறக்கும் மகனும் வைசியனாவான் என்று மஹாபாரதம், அநுசாஸன பர்வம் 48:8ல் சொல்லப்படுகிறது. இருபிறப்பாளர்களெனும் மூவர்ணத்தில் வைசியர்களும் வருவதால் அக்னி ஹோத்ரம் அவர்களின் கடமையாகும். அநுசாஸன பர்வம் 47:7ல் இருபிறப்பாளர்கள் எந்த மூவர்ணத்தினர் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
வத்ஸா {அன்புக்குழந்தாய்}, பார்வையற்றவளும், முதிர்ந்தவளும், பரிதாபத்திற்கும், கிருபைக்கும் உரியவளும், புத்திரனுக்காக வருந்திக் கொண்டிருப்பவளும், உன் மாதாவுமான இவளை இனி எவ்வாறு நான் ஆதரிப்பேன்?(36) புத்திரா, நில். யமனின் வீட்டிற்குச் செல்லாதே. நாளை என்னுடனும், உன் அன்னையுடனும் சேர்ந்து நீ அங்கே செல்வாயாக.(37) உன்னை இழந்து துன்பத்தால் பீடிக்கப்பட்டவர்களும், வனத்தில் அநாதைகளாக இருப்பவர்களும், கிருபைக்குரியவர்களுமான நாங்கள் இருவரும் உன்னுடன் சேர்ந்து யமனின் வசிப்பிடத்திற்கு வருகிறோம்.(38) பிறகு அந்த வைவஸ்தனை {யமனைக்} கண்டு, அவனிடம் நான், "தர்மராஜாவே, என்னைப் பொறுத்துக் கொள்வாயாக. இவன் தன் பெற்றோரைப் பராமரிக்கட்டும்" என்ற இந்தச் சொற்களைச் சொல்வேன்.(39) பெரும் புகழ்பெற்றவனும், தர்மாத்மாவுமான அந்த லோகபாலனே {யமனே}, இந்நிலையில் அழியாத ஒரே அபய தக்ஷிணையை {பயம் விலக்கும் கொடையை} எனக்கு தத்தம் செய்யத் தகுந்தவனாவான்.(40)
புத்திரா, பாப கர்மத்தால் நீ கொல்லப்பட்டாய். நீ பாபமற்றவன் என்ற அந்த சத்தியத்தின் மூலம் சஸ்திரயோதிகள் {ஆயுதத்துடன் போரிட்டு மடிந்தவர்கள்} எந்த லோகத்தை அடைவார்களோ அதை விரைவில் நீ அடைவாய்.(41) புத்திரா, பகைவரை நேர்முகமாகச் சந்தித்துக் கொல்லப்பட்டுப் போர்க்களத்திற்குத் திரும்பாத சூரர்கள் அடையும் பரம கதியை நீ அடைவாயாக.(42) சகரன், சைப்யன், திலீபன், ஜனமேஜயன், நஹுஷன், துந்துமாரன் ஆகியோர் அடைந்த கதியை நீ அடைவாயாக.(43) புத்திரகா, சர்வ சாதுக்களும் எந்த கதியை அடைவார்களோ, சாத்திரக் கல்வியினால் எந்த கதி அடையப்படுமோ, தபம், பூமிதானம், புனித நெருப்பைப் பாதுகாத்தல், ஏகபத்னி விரதம் ஆகியவற்றால் எது அடையப்படுமோ, ஆயிரம் கோதானங்களால் எது அடையப்படுமோ, குருவுக்கு செய்யும் தொண்டால் எது அடையப்படுமோ, தேகங்களைக் கைவிட்டவர்களால் {உடலைக் களைந்தவர்களால்} எது அடையப்படுமோ அந்த கதியை நீ அடைவாயாக.(44,45) இந்தக் குலத்தில் ஜனித்தவன் குசலமற்ற கதியை அடையமாட்டான். ஆனால் என் பந்துவான நீ எவனால் கொல்லப்பட்டாயோ அவன் அதை {அந்த குசலமற்ற கதியை} அடைவான்" {என்றார் அந்த ரிஷி}.(46)
இவ்வாறே அந்த முனிவர் மீண்டும் மீண்டும் அங்கே பரிதாபமாக அழுது கொண்டிருந்தார். பிறகு அவரும் அவரது பாரியையும் சேர்ந்து ஈம காரியத்தைச் செய்யத் தொடங்கினர்.(47) தர்மவித்தான அந்த முனிபுத்திரர் {முனிவரின் மகன்}, தமது ஸ்வகர்மத்தால் திவ்ய ரூபத்தை அடைந்து சக்ரனுடன் {இந்திரனுடன்} சேர்ந்து சீக்கிரமாக சுவர்க்கத்தை அடைந்தார்.(48) சக்ரனுடன் கூடிய அந்த தபஸ்வி {முனிகுமாரர் சிரவணர்}, முதிர்ந்தவர்களான தமது பெற்றோருக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவர்களிடம் இந்த வாக்கியத்தைச் சொன்னார்:(49) உங்கள் இருவருக்கும் செய்த தொண்டின் மூலம் நான் மகத்தான ஸ்தானத்தை அடைந்திருக்கிறேன். நீங்கள் இருவரும் சீக்கிரமாக என் நிலையை அடைவீர்கள்" {என்றார் அந்த முனிபுத்திரர் சிரவணர்}.(50)
ஜிதேந்திரியரான {புலன்களை வென்றவரான} அந்த முனிபுத்திரர், இவ்வாறு பேசிவிட்டு, திவ்யமானதும், அழகிய வடிவத்தைக் கொண்டதுமான விமானத்தில் ஏறி சீக்கிரமாக திவத்திற்கு {ஸ்வர்க்கத்திற்கு} உயர்ந்தார்.(51) மஹாதேஜஸ்வியான தபசியும், தமது பாரியையுடன் சேர்ந்து சீக்கிரமாக ஈமக் காரியங்களைச் செய்துவிட்டு, கூப்பிய கைகளுடன் தங்கள் அருகில் நின்று கொண்டிருந்த என்னிடம் {பின்வருமாறு} சொன்னார்:(52) "இராஜன், ஏக புத்திரனை {ஒரேயொரு மகனைக்} கொண்ட என்னை ஒரு சரத்தின் {கணையின்} மூலம் புத்திரனற்றவனாக்கிவிட்டாய். இப்போது என்னையும் கொல்வாயாக. எனக்கு மரணத்தில் அச்சமேதுமில்லை.(53) அஞ்ஞானத்தினால் நீ என் உன்னத சுதனை {நன்மகனைக்} கொன்றிருந்தாலும், உனக்கு துக்கத்தைத் தரும் வகையில் அதிகொடூரமாக நான் உன்னை சபிக்கப் போகிறேன்.(54) இராஜன், இப்போது புத்திர விசனத்தால் இந்த துக்கம் எனக்கு விளைந்ததன் காரணமாக, நீயும் புத்திர சோகத்தால் மரணமடைவாய்.(55) நராதிபா, க்ஷத்திரியனான நீ அஞ்ஞானத்தால் முனிஹதம் செய்ததால் {அந்த முனிவனைக் கொன்றதால்}, பிரம்மஹத்தி உன்னை உடனடியாகப் பீடிக்காது[2].(56) ஜீவிதத்தை கோரமானதாகவும், அந்தகாரமானதாகவும் ஆக்கும் இதற்கு ஒப்பான உணர்வு, தக்ஷிணையால் கொடையாளிக்குக் கிடைக்கும் பலனைப் போல உன்னை சீக்கிரத்தில் வந்தடையும்" {என்று சபித்தார் அந்த ரிஷி}.(57)
[2] க்ஷத்திரியனான நீ அறியாமையில் கொன்றதால் பிரம்மஹத்தி உடனே பீடிக்காது என்பதில், அறிந்து செய்திருந்தால் பிரம்மஹத்தி பீடிக்கும் என்ற செய்தி மறைந்திருக்கிறது. பிரம்மஹத்தி பீடிக்கவேண்டுமென்றால் இவர்கள் பிராமணர்களாயிருத்தல் வேண்டும். இஃது அயோத்தியா காண்டம் சர்க்கம் 63:53ல், "நான் கலப்பு வர்ணத்தவன்" {அல்லது வைசியன்} என்று சொல்வதற்கு முரணாக இருக்கிறது.
இவ்வாறு என்னை சபித்துவிட்டு, அவ்விருவரும் பரிதாபகரமாக மீண்டும் மீண்டும் அழுத பிறகு, தங்கள் தேகங்களை சிதையில் ஏற்றி ஸ்வர்க்கத்திற்குச் சென்றனர்.(58) தேவி, சப்தவேதி சஸ்திரத்தை இருப்புக்கு அழைத்து {ஒலியால் இலக்கை வீழ்த்தும் ஆயுதத்தை இருப்புக்கு அழைத்து} பால்யத்தில் என்னால் இழைக்கப்பட்ட இந்த பாபத்தையே இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன்.(59) பத்தியமற்ற அன்னரசங்களை {தூய்மையற்ற உணவையும், பானங்களையும்} உண்ட பிறகு உண்டாகும் வியாதியைப் போல, அந்த கர்மத்தினாலேயே {செயலாலேயே} இந்த விளைவு உண்டானது.(60) பத்ரையே {அன்புக்குரியவளே}, "புத்திரசோகத்தால் நான் என் ஜீவிதத்தைக் கைவிடுவேன்" என்று அந்த உன்னத தவசி சொன்ன சொல்லே இப்போது நடக்கிறது {உண்மை ஆகியிருக்கிறது}.(61)
கௌசல்யே, என் கண்களைக் கொண்டு என்னால் உன்னைப் பார்க்க முடியவில்லை. என்னை ஸ்பரிசிப்பாயாக {தொடுவாயாக}" என்று கேட்டுக் கொண்ட தசரதன், பயங்கரமாக அழுது கொண்டிருக்கும் தன் பாரியையிடம் இதைச் சொன்னான்:(62) "தேவி, நான் ராகவனுக்குச் செய்தது எனக்குத் தகாது. அவன் எனக்குச் செய்தது அவனுக்கே தகும். {இராமன் எனக்குச் செய்ததை வேறு யாராலும் செய்ய முடியாது}.(63) புத்திரன் துர்விருத்தம் {தீய நடத்தை} கொண்டவனாக இருந்தாலும் புவியில் எந்த விவேகியால்தான் அவனைக் கைவிட இயலும்? நாடு கடத்தப்படும் எந்த மகன்தான் தன் பிதாவிடம் கோபமடையமாட்டான்?(64) இராமனால் இனிமேல் என்னைத் தீண்ட முடியுமா? என்னிடம் வர முடியுமா? {அவ்வாறெனில் நான் பிழைப்பேன்}. யமலோகத்தை அடைந்த மனிதர்களால் தங்கள் உற்றார் உறவினரைக் காண முடியாது.(65)
கௌசல்யே, என் கண்களைக் கொண்டு என்னால் உன்னைப் பார்க்க முடியவில்லை. என் நினைவும் மங்குகிறது. வைவஸ்வதனின் {யமனின்} தூதர்கள் என்னை துரிதப்படுத்துகிறார்கள்.(66) தர்மத்தை அறிந்தவனும், சத்யபராக்ரமனுமான ராமனை இவ்வாறான என் மரண காலத்தில் நான் காண முடியாமல் இருப்பதைவிட எனக்கு துக்கமானது எது?(67) ஒப்பற்ற காரியங்களைச் செய்யும் மகனைக் காணாததால் எழும் சோகம், நீர்த்துளியை உறிஞ்சும் ஆதவனைப் போல என் உயிரை உறிஞ்சுகிறது.(68)
பஞ்சதச வருஷத்தில் சுப குண்டலங்களுடன் {பதினைந்தாம் ஆண்டில் மங்கலமான காதணிகளுடன்} கூடிய ராமனின் அழகிய முகத்தை மீண்டும் காண்பவர்கள் எவரோ அவர்கள் மனுஷர்களல்ல தேவர்கள்.(69) பத்மபத்ரங்களுக்கு {தாமரை இலைகளுக்கு} ஒப்பான கண்களையும், அழகிய புருவங்களையும், அழகிய பற்களையும், அழகிய நாசியையும் கொண்டதும், தாராதிபனுக்கு {தாரையின் தலைவனான சந்திரனுக்கு ஒப்பானதுமான} ராமனின் முகத்தைக் காண்பவர்களே தன்யர்கள் {நற்பேறு பெற்றவர்கள் / பாக்கியசாலிகள்}.(70) சரத்கால இந்துவுக்கு {கூதிர் காலச் சந்திரனுக்கு} ஒப்பானதும், சுகந்தம் கமழ்வதும், முற்றும் மலர்ந்த கமலத்திற்கு ஒப்பானதுமான ராமனின் முகத்தைக் காண்பவர்களே தன்யர்கள்.(71) மார்க்க கதியில் திரும்பும் {தன் வழியில் திரும்பும்} சுக்ரனைப் போல, வனவாசத்தை முடித்துக் கொண்டு, மீண்டும் அயோத்திக்குத் திரும்பும் ராமனைக் காண்பவர்களே மகிழ்ச்சிமிக்கவர்கள்.(72)
கௌசல்யே, சித்தமோஹகத்தால் என் ஹிருதயம் பீடிக்கப்படுகிறது. சப்தம் {ஒலி}, ஸ்பரிசம் {தீண்டல்}, ரசம் {சுவை} தொடர்பான எதையும் என்னால் உணர முடியவில்லை.(73) எண்ணெய் இல்லாத தீபத்தின் {விளக்கின்} கதிர்களைப் போல சித்த நாசத்தால் என் சர்வ இந்திரியங்களும் ஒடுங்குகின்றன.(74) என்னால் உண்டான இந்த சோகம், நதியோட்டத்தின் வேகத்தால் கரை அழிவது போல, அநாதையும் {நாதனற்றவனும்}, சித்தம் கலங்கியவனுமான என்னை ஒழிக்கிறது.(75) ஹா ராகவா, மஹாபாஹுவே {வலிமைமிக்க கரங்களைக் கொண்டவனே}, ஹா ஆயாச நாசனா {துன்பத்தை அழிப்பவனே}, ஹா பித்ருபிரியா {தந்தையை விரும்புகிறவனே}, என் நாதா, ஹா சுதனே {மகனே}, நீ எங்கே சென்றுவிட்டாய்?(76) ஹா கௌசல்யே, ஹா பரிதாபத்திற்குரிய சுமித்ரே, ஹா கொடூரியே, அமித்ரையே {எதிரியே}, குலத்தைக் கெடுக்க வந்த கைகேயியே நான் சாகிறேன்" {என்றான் தசரதன்}.(77)
இவ்வாறு ராமனின் மாதா {கௌசல்யை}, சுமித்ரை ஆகியோர் முன்னிலையில் அழுதுகொண்டே அந்த தசரத ராஜா ஜீவிதாந்தத்தை {வாழ்வின் முடிவை} அடைந்தான்.(78) உன்னதத் தோற்றம் கொண்டவனான அந்த நராதிபன், புத்திரனை நாடுகடத்தியதால் தீனமடைந்து, அர்த்தராத்திரி கதியில் ஆதீத துக்கத்தால் பீடிக்கப்பட்டவனாக தன் பிராணனைக் கைவிட்டான்.(79)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 064ல் உள்ள சுலோகங்கள் : 79
Previous | | Sanskrit | | English | | Next |