The advise of Kaushalya | Ayodhya-Kanda-Sarga-039 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மன்னனின் ஆணையின் பேரில் தேரை ஏற்பாடு செய்த சுமந்திரன்; சீதைக்குக் கொடுக்கப்பட்ட விலைமதிப்புமிக்க ஆடை ஆபரணங்கள்; சீதைக்கு கௌசலையின் அறிவுரை; சிற்றன்னைகளிடம் விடைபெற்ற ராமன்...
பாரியைகளுடன் கூடிய அந்த ராஜா {மனைவிகளுடன் கூடிய தசரதன்}, ராமனின் சொற்களைக் கேட்டும், முனிவேஷம் தரித்திருந்த அவனைக் கண்டும் மயக்கமடைந்தான். துக்கத்தில் எரிந்தவனும், மனம் கலங்கியவனுமான அவனால், ராகவனைக் காணவும் இயலவில்லை, அவனிருந்த திசையை நோக்கி மறுமொழி கூறவும் முடியவில்லை.(1,2) மஹாபாஹுவான அந்த மஹீபதி {பெருந்தோள்களைக் கொண்ட அந்த பூமியின் தலைவன்} ஒரு முஹூர்த்த நேரம் மயங்கியிருந்தான். பிறகு ராமனை மட்டுமே நினைத்து மனம் வருந்தி துக்கமடைந்தான்.(3)
அவன் {தசரதன்}, "பூர்வத்தில் {முற்பிறவியில்} என்னால் பலர் தங்கள் பிள்ளைகளிடம் இருந்து பிரிக்கப்பட்டிருக்க வேண்டும், அல்லது, பிராணிகள் {உயிரினங்கள் என்னால்} ஹிம்சிக்கப்பட்டிருக்க வேண்டும். எனவேதான் இவ்வாறு நேர்கிறதென நான் நினைக்கிறேன்.(4) காலம் நேராமல் தேஹத்திலிருந்து ஜீவிதம் விலகுவதில்லை {உடலில் இருந்து உயிர் பிரிவதில்லை}. சூக்ஷ்ம வஸ்திரங்களை {மெல்லிய ஆடைகளைக்} களைந்து, தபஸ்வியின் உடையை உடுத்தி, என் முன்னால் பாவகனின் {அக்னியின்} பிரகாசத்துடன் என் மகன் நிற்பதைக் கண்டும், கைகேயியால் துன்புறுத்தப்பட்டும் எனக்கு மிருத்யு {மரணம்} நேராதிருக்கிறது.(5,6) மறைமுகமான சுயநல எண்ணத்துடன் வஞ்சனையைப் புகலிடமாக நாடும் கைகேயியால் மட்டுமே இந்த ஜனங்கள் {யாவரும்} துன்புறுகின்றனர்" {என்றான் தசரதன்}.(7)
இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு, ஒரேயொரு முறை "ராமா" என்று சொல்ல முடிந்தவனின் கண்ணீரால் இந்திரியங்கள் தடைபட்டு மேலும் அவனை பேச முடியாதவனாக்கின.(8) ஒரு முஹூர்த்தத்திற்குப் பிறகு, நனவு மீண்ட அந்த மஹீபதி {தசரதன்}, கண்கள் நிறைந்த கண்ணீருடன் சுமந்திரனிடம் இதைச் சொன்னான்:(9) "செலுத்தத் தகுந்ததும், உத்தமஹயங்கள் {சிறந்த குதிரைகள்} பூட்டப்பட்டதுமான ரதத்துடன் வந்து, இந்த மஹாபாகனை {பாக்கியவானை} இந்த ஜனபதத்தை {கோசலத்தைக்} கடந்து அழைத்துச் செல்வீராக.(10) சாதுவும், வீரனுமான ஒருவன், பிதாவாலும், மாதாவாலும் நாடு கடத்தப்படுவதால் இதுவே குணவானின் குணங்களுக்கான பலன் என்று சொல்லலாமென நினைக்கிறேன்" {என்றான் தசரதன்}.(11)
{தசரத} ராஜனின் சொற்களுக்குக் கீழ்ப்படிந்த சுமந்திரன், சீக்கிரமாக நடந்து சென்று, முறையாக அலங்கரிக்கப்பட்டு, அஷ்வங்கள் பூட்டப்பட்ட ரதத்தை அங்கே கொண்டு வந்து சேர்த்தான்.(12) அந்த சூதன் {சுமந்திரன்}, கூப்பிய கைகளுடன் அந்த ராஜபுத்திரனிடம் {ராமனிடம்}, கனகத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்டதும், பரம வாஜிகள் {குதிரைகள்} பூட்டப்பட்டதுமான அந்த ரதத்தைக் குறித்துச் சொன்னான்.(13) தேசகாலமறிந்தவனான அந்த ராஜா {தசரதன்}, உறுதியானவனும், அனைத்து வகையிலும் நேர்மையாளனுமான கருவூல அதிகாரியை விரைவாக அழைத்து, இதைச் சொன்னான்:(14) "இந்த {இவர்கள் வனத்தில் வசிக்கப்போகும்} வருஷங்களைக் கருத்தில் கொண்டு, பெரும் மதிப்பிலான ஆடைகளையும், உயர் தரத்திலான ஆபரணங்களையும் சீக்கிரம் வைதேஹிக்குக் கொண்டு வருவீராக" {என்றான் தசரதன்}.(15)
நரேந்திரனால் இவ்வாறு சொல்லப்பட்டதும், கோசகிருஹத்திற்கு {கருவூலத்திற்கு} சென்றவன், அவை அனைத்தையும் போதுமான அளவுக்குக் கொண்டு வந்து சீதையிடம் கொடுத்தான்.(16) வனத்திற்குப் புறப்பட்டவளும், சுஜாதையுமான {உன்னத பிறப்பைக் கொண்டவளுமான} அந்த வைதேஹி, விசித்திர ஆபரணங்களால் தன் அழகிய உடலை அலங்கரித்துக் கொண்டாள்.(17) நன்கு அலங்கரித்துக் கொண்ட அந்த வைதேஹி, உதிக்கும் விவஸ்வானின் {சூரியனின்} பிரபையால் ஒளிரும் காலை நேர வானைப் போல அந்த வேஷ்மத்தை {வீட்டை} ஒளிரச் செய்தாள்.(18)
பரிதாபத்திற்குரியவளாக ஒரு போதும் நடந்து கொள்ளாத மைதிலியைத் தன் கைகளில் அணைத்துக் கொண்ட மாமியார் {கௌசல்யை}, அவளது நெற்றியை முகர்ந்து {பின்வருமாறு} சொன்னாள்:(19) "இந்த உலகம் முழுவதிலும் சத்தியமற்ற ஸ்திரீகள் {உண்மையில்லாத பெண்கள்}, தங்கள் அன்புக்குரியவரால் எப்போதும் துதிக்கப்பட்டாலும், {கொடும் நாட்களில்} பாதகத்தில் விழுந்த அந்த பர்த்தாவை {கணவரை} மதிப்பதில்லை.(20) பூர்வத்தில் சுகத்தை அனுபவித்து விட்டு, {பின்னர்} அற்பமான கஷ்டம் நேர்ந்து விட்டாலும், துஷ்டர்களாகி {கணவரைக்} கைவிடுவதே நாரீகளின் சுபாவம் {பெண்களின் இயல்பு}.(21)
பாப சங்கல்பம் கொண்ட யுவதிகள் {இளம்பெண்கள்}, அசத்தியசீலைகளாகவும் {உண்மையான ஒழுக்கமற்றவர்களாகவும்}, ஆசையால் பீடிக்கப்பட்டவர்களாகவும், புரிந்து கொள்ளக் கடினமான ஹிருதயத்தைக் கொண்டவர்களாகவும் க்ஷண மாத்திரத்தில் மாறி வெறுப்பை அடைகிறார்கள்[1].(22) அந்த ஸ்திரீகள், குலத்தையோ, செயல்பாட்டையோ {உதவியையோ}, வித்யையோ {கல்வியையோ}, தத்தத்தையோ {கொடையையோ}, ஒற்றுமையான இணக்கத்தையோ ஹிருதயத்தில் கிரஹிக்காமல் நிலையற்ற ஹிருதயம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(23)
[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "யுவதசையிலிருக்கும் பெண்கள் எப்பொழுதும் நம்பிக்கை துரோகத்தால் விளையும் ஒழுக்கமுடையவர்கள். காமம், குரோதம், மதம், மாத்ஸர்யம், டம்பம், லோபம் இது முதலிய மனோவிகாரங்களுக்கு ஈடுபட்டு நடக்கின்றவர்கள். உள்ளத்திலுள்ளதை உள்ளபடி எவராலுமறியமுடியாத உள்ளம் படைக்கப்பெற்றவர்கள். அனியாயத் தொழில்களிலும் மனம் கூசாது துணிந்துவிடும் ஸ்வபாவமுடையவர்கள். ஒரு க்ஷணப்பொழுதில் பதியெனும் பந்துத்வத்தையே துறந்துவிடுபவர்கள்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "ஸ்திரீகளுக்குப் பொய்யுரைப்பதே இயற்கையாயிருக்கும். க்ஷணந்தோறும் மனது மாறிக்கொண்டேயிருக்கும். அவர்களது மனது இப்படிப்பட்டதென்று தெரிந்து கொள்வதே கஷ்டம். அவர்கள் பாபகார்யங்களையே நினைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய ப்ரீதி ஒரு நொடிப்பொழுதில் மாறிப்போய்விடும், ஒரு க்ஷணங்கூட நிலைநின்றிராது" என்றிருக்கிறது.
ஆனால், சத்தியத்திலும் {உண்மையிலும்}, சீலத்திலும் {ஒழுக்கத்திலும்}, ஸ்ருதியிலும் {சாத்திரங்களிலும்}, பொறுமையிலும் நிலைநிற்கும் ஸ்திரீகளுக்கு, பதி ஒருவனே {கணவன் மட்டுமே} அனைத்திலும் சிறந்த பரமபவித்ரமானவனாக இருக்கிறான்.(24) நாடு கடத்தப்பட்டவன் என்று என் புத்திரனை நீ இகழ்ந்துவிடாதே. அவன் தனவந்தனாக இருந்தாலும், தனமற்றவனாக இருந்தாலும் அவனே உன் தைவமாவான் {தெய்வமாவான்}" {என்றாள் கௌசல்யை}.(25)
தர்மத்தின் அர்த்தம் பொதிந்த அவளது {கௌசல்யையின்} சொற்களைப் புரிந்து கொண்ட சீதை, தன் முன் நின்று கொண்டிருந்த தன் மாமியாரிடம் கைகளைக் கூப்பியபடியே {பின்வரும்} மறுமொழியைக் கூறினாள்:(26) "ஆரியையான நீர் சொன்ன நெறிகள் அனைத்தின்படியும் நான் செயல்படுவேன். பர்த்தாவிடம் {கணவரிடம்} எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை நான் அறிவேன். இதை நான் {முன்பே} கேட்டிருக்கிறேன்.(27) ஆரியையான நீர், சத்ஜனங்களல்லாதோருடன் {தீய மனிதர்களுடன் / தீய பெண்களுடன்} என்னை இணைவைப்பது தகாது. சந்திரனிடம் உள்ள பிரபையைப் போல ஒருபோதும் நான் தர்மத்திலிருந்து விலக மாட்டேன்.(28)
தந்திகளில்லாமல் வீணையில் வாத்தியமில்லை. சக்கரங்கள் இல்லாமல் தேர் ஓடுவதில்லை. அதேபோல நூறு பிள்ளைகள் இருந்தாலும் பதியற்றவளால் {கணவன் இல்லாதவளால்} சுகமாக வாழ இயலாது.(29) உண்மையில் பிதா மிதமாகவும் {அளவாகவும்}, மாதா மிதமாகவும், சுதன் {மகன்} மிதமாகவும் தத்தம் செய்கையில், எதையும் அளவில்லாமல் தத்தம் செய்யும் பர்த்தாவை எவள் பூஜிக்கமாட்டாள்?(30) சிரேஷ்டர்களிடம் {சிறந்த பெண்களிடம்} இருந்து, {மனைவியின்} சாமான்ய தர்மங்களையும், விசேஷ தர்மங்களையும் கேட்டிருக்கும் என்னால் எவ்வாறு இவரை இகழ முடியும்? ஆரியையே, உண்மையில் பர்த்தாவே ஸ்திரீகளுக்குத் தைவமாவார் {கணவரே பெண்களுக்கு தெய்வமாவார்}" {என்றாள் சீதை}.(31)
சீதை சொன்னதைக் கேட்டு ஹிருதயம் கனத்தவளும், தூயமனம் கொண்டவளுமான கௌசல்யை, திடீரென துக்கமும், மகிழ்ச்சியுமடைந்து கண்ணீர் சிந்தினாள்.(32) பரம தர்மாத்மாவான ராமன், மாதாக்களின் மத்தியில் இருந்தவளும், பெரும் மதிப்புக்குரியவளுமான தன் மாதாவிடம் {கௌசல்யையிடம்} கைகளைக் கூப்பியபடியே இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(33) "அம்ப {அம்மா}, நீ துக்கமடையாதே. என் பிதாவைப் பார்த்துக் கொள்வாயாக. வனவாசத்தின் முடிந்ததும் மிக சீக்கிரமாக நான் வருவேன்.(34) உறங்கி எழுந்ததும் காண்பதைப் போல இந்த நவபஞ்ச வருஷங்களும் {பதினான்கு ஆண்டுகளும்} கடந்து, நண்பர்கள் சூழ குறைவில்லாமல் இங்கே வரும் என்னை நீ காண்பாய்" {என்றான் ராமன்}.(35)
அர்த்தத்தை உணர்ந்து இவ்வாறான சொற்களைச் சொன்னவன், ஆலோசித்தவாறே {எண்ணிக்கையில்} த்ரயசதம் சத அர்த்தமாக {மூன்றுநூறும், நூறில் பாதியுமாக / முன்னூற்றைம்பதாக} இருந்த மாதாக்களையும் கண்டான்.(36) அந்த தசரதாத்மஜன் {தசரதனின் மகன் ராமன்}, இவ்வாறே வருந்திக் கொண்டிருந்த மாதாக்களிடம் கைகளைக் கூப்பியவாறு தர்மத்திற்கு இணக்கமான இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(37) "சம்வாசத்தாலோ {ஒரே இடத்தில் ஒன்றாக வசிப்பதாலோ}, அறியாமையாலோ சிறு தீங்கையும் நான் செய்திருந்தால் அவற்றைப் பொறுத்து அனுமதிக்க வேண்டுகிறேன். உங்கள் அனைவரிடமும் நான் விடைபெற்றுக் கொள்கிறேன்" {என்றான் ராமன்}.(38)
சோகத்தால் பீடிக்கப்பட்ட மனம் கொண்ட அந்த ஸ்திரீகள் அனைவரும், தர்மத்திற்கு இணக்கமாகவும், அடக்கமாகவும் சொல்லப்பட்ட ராகவனின் இந்தச் சொற்களைக் கேட்டனர்.(39) இராகவன் இவ்வாறு பேசிய பிறகு, பெண் கிரௌஞ்சங்களின் கூச்சலைப் போல அந்த மானவேந்திரனின் பத்தினிகளிடமிருந்து {மனிதர்களின் இந்திரனான தசரதனின் மனைவியரிடமிருந்து} சன்னதம் {பேரொலி} எழுந்தது.(40) பூர்வத்தில் மேக கோஷங்களைப் போல, முரசு, பணவங்களின் தொனி நிறைந்த தசரதனின் மாளிகையில், இப்போது துன்ப காலத்தில் எழும் புலம்பலும், அழுகையும் நிறைந்திருந்தது.(41)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 039ல் உள்ள சுலோகங்கள் : 41
Previous | | Sanskrit | | English | | Next |