Monday, 1 August 2022

சித்திரகூடம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 056 (38)

Chitrakuta | Ayodhya-Kanda-Sarga-056 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சித்திரகூடம் வர்ணனை; வால்மீகியைச் சந்தித்த ராமன்; ஓலைக் குடிசையைக் கட்டிய லக்ஷ்மணன்; தேவர்களுக்கு உரிய வழிபாட்டைச் செய்து மங்கல நேரத்தில் குடிசைக்குள் நுழைந்தது...

Leaf hut build by Lakshmana

அப்போது ராமன், இரவு கடந்து அநந்தரம் {கடந்தபின்பும்} உறங்கிக் கொண்டிருந்த[1] லக்ஷ்மணனை மெதுவாக {பின்வருமாறு} எழுப்பினான்:(1) சௌமித்ரியே {சுமித்ரையின் மகனான லக்ஷ்மணா}, வனவிலங்குகளின் ஒலி அழகாக எதிரொலிப்பதைக் கேட்பாயாக. இது பிரஸ்தானத்திற்கான காலம் {இது நம் பயணத்திற்கான நேரமாகும்}. நாம் புறப்படுவோம்" {என்றான் ராமன்}.(2)

[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "ஸ்ரீராமர், இரவு கழிந்தவுடன், அப்பொழுது தியானத்திலிருந்த லக்ஷ்மணரைப் பார்த்து, உடனே ஆகவேண்டியதைப் பற்றித் தேனொழுகும்வண்ணமாய், பின்வருமாறு அருளிச் செய்தனர்" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பிறகு ராத்திரி கடந்தவுடன் ராமன், தான் தூங்கியெழுந்திருந்த பின்பு கொஞ்சம் நித்ரை போகின்ற லக்ஷ்மணனை மெதுவாக எழுப்பி" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அநந்தரம் இரவு நீங்கிப் பொழுது விடிந்து கதிரவன் குணதிசைச் சிகரம் வந்தணைகையில், பெருமாள் துயிலெழுந்து, துயிலின்றிப் புறத்தில் விழித்துக் காத்திருக்கும், இளையபெருமாளை யழைத்து" என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-கீர்வானி, பிபேக்திப்ராய், மத்மதநாததத்தர், ஹரிபிரசாத்சாஸ்திரி ஆகியோரில் அவரவரின் ஆங்கிலப் பதிப்புகளில், கே.எம்.கே. மூர்த்தி பதிப்பில் காண்பதுபோல் மேற்கண்டவாறே இருக்கிறது.

உறங்கிக் கொண்டிருந்த லக்ஷ்மணன், தன்னுடன் பிறந்தவனால் சரியான நேரத்தில் எழுப்பப்பட்டதும், உறக்கம், சோம்பல், வழியில் விளைந்த களைப்பு ஆகியவற்றைத் துறந்தான்.(3) அதன்பிறகு அவர்கள் அனைவரும் எழுந்து நதியின் மங்கல ஜலத்தை ஸ்பரிசித்து {ஆற்றின் நன்னீரைத் தீண்டி}, சித்திரகூடத்திற்குச் செல்வதற்கு ரிஷி {பரத்வாஜ முனிவர்} சொன்ன பாதையைப் பின்பற்றிச் சென்றனர்.(4)

விடியலில் சௌமித்ரி சகிதனாகப் புறப்பட்ட ராமன், கமல இதழ் கண்களைக் கொண்ட சீதையிடம் இதைச் சொன்னான்:(5) "வைதேஹி, இதோ இந்தக் குளிர் காலத்தின் இறுதியில், தீப்பற்றி எரிவது போல் முற்றுமுழுதாகப் பூத்திருக்கும் இந்தக் கிம்சுக மரங்களை {பலாச மரங்களைப்} பார்.(6) மலர்களால் நிறைந்தவையும், பழங்களாலும், பத்ரைகளாலும் {இலைகளாலும்} வளைந்தவையுமான இந்த பல்லாதகங்கள்[2] {முந்திரி மரங்கள்}, நரர்களால் {மனிதர்களால்} தீண்டப்படாமல் {நாம்} ஜீவிக்கத் தகுந்ததாக இருப்பதைப் பார்.(7) இலக்ஷ்மணா, நீர்க்குடம் அளவுக்குத் தேனீக்களால் சேகரிக்கப்பட்ட தேனடைகள் {இங்கே இருக்கும்} ஒவ்வொரு மரத்திலும் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்.(8) புஷ்பப் படுக்கைகள் அடர்ந்திருக்கும் இந்த ரமணீய வனதேசத்தில் {அழகான வனப்பகுதியில்}, நச்சுக்குருவியின் கூவலுக்குப் பதிலுரைப்பது போல் சிகீ {மயில்} அகவுகின்றது.(9) மாதங்க பந்தியால் {யானைப் பந்தி / யானைக் கூட்டத்தால்} அடிக்கடி நாடப்படுவதும், பக்ஷிக்கூட்டங்களால் எதிரொலிக்கப்படுவதும், உயர்ந்திருக்கும் பர்வத சிகரங்களைக் கொண்டதுமான இந்த சித்திரகூட கிரியைப் பார்.(10) ஐயா, சமதளங்களைக் கொண்டதும், ரம்மியமானதும், புண்ணிய மரங்கள் பலவும் அடர்ந்திருப்பதுமான இந்தச் சித்திரகூடக் கானகத்தில் நாம் களித்திருப்போம்" {என்றான் ராமன்}.(11)

[2] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "முந்திரி மரங்கள்" என்றிருக்கிறது.

Ayodhya - Sringaverapura - Chitrakuta

அப்போது சீதை சகிதராக பாதநடையாகச் சென்ற அவர்கள், ரம்மியமானதும், மனோஹரமானதுமான சித்திரகூட சைலத்தை {மலையை} அடைந்தனர்.(12) நானாவித பக்ஷிகணங்களுடனும் {பறவைக்கூட்டங்களுடனும்},  ஏராளமான கிழங்குகளுடனும், பழங்களுடனும் கூடியதும், பாயும் நீர்வளத்துடன் ரம்மியமாகத் திகழ்வதுமான அந்தப் பர்வதத்தை அடைந்ததும், {ராமன்},(13) "மனோகரமானதும், நானாவித மரங்களாலும், கொடிகளாலும் நிறைந்ததும், பல்வேறு கிழங்குகளையும், பழங்களையும் கொண்டதுமான இந்த கிரி {மலை} தன்னிறைவை அளிக்கக்கூடியதாக எனக்குத் தோன்றுகிறது.(14) சௌம்யா {மென்மையானவனே}, மஹாத்மாவான முனிவர்கள் இந்த சைலத்தில் {மலையில்} தங்கியிருக்கிறார்கள். இதுவே நம் வசிப்பிடமாகட்டும். இங்கே நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம்" {என்றான் ராமன்}.(15)

இவ்வாறு தீர்மானித்தபிறகு சீதை, ராமன், லக்ஷ்மணன் ஆகியோர் அனைவரும் கூப்பிய கைகளுடன் வால்மீகியின் ஆசிரமத்தை[3] அடைந்து, அவருக்கு வணக்கஞ்செலுத்தினர்.(16) மகிழ்ச்சியில் நிறைந்திருந்த தர்மவித்தான அந்த மஹாரிஷி {வால்மீகி}, அவர்களைப் பூஜித்து, ஸ்வாகதம் சொல்லி {நல்வரவு சொல்லி வரவேற்று}, அமருமாறு அவர்களை வேண்டினார்.(17)

[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ராமன் சித்ரகூடத்திற்குப் போகுங் காலத்தில் வால்மீகி மஹர்ஷி சித்ரகூடத்தில் வஸித்திருந்தனர். பரதன் அந்தச் சித்ரகூடத்திற்கு வந்தபின்பு ரிஷி அதை விட்டுப் போனாரென்கையால் அதுமுதலாகத் தமஸாநதி தீரத்தில் வஸித்திருந்தாரென்று தெரிகின்றது" என்றிருக்கிறது.

அப்போது, மஹாபாஹுவான பிரபு லக்ஷ்மணாக்ரஜன் {ராமன்}, நியாயப்படி தங்களைக் குறித்த அனைத்தையும் அந்த ரிஷியிடம் சொல்லிவிட்டு லக்ஷ்மணனிடம் இதைச் சொன்னான்:(18) "இலக்ஷ்மணா, சௌம்யா {மென்மையானவனே}, திடமான மரக்கட்டைகளைத் தேடிக் கொண்டு வந்து ஒரு வசிப்பிடத்தைக் கட்டுவாயாக. இங்கே வசிப்பதை என் மனம் விரும்புகிறது" {என்றான் ராமன்}.(19)

அந்த வசனத்தைக் கேட்ட சௌமித்ரி, விதவிதமான மரக்கட்டைகளைக் கொண்டு வந்தான். அதன்பிறகு, அந்த அரிந்தமன் {பகைவரை அழிப்பவனான லக்ஷ்மணன்} ஒரு பர்ணசாலையை {ஓலைக்குடிசையைக்} கட்டினான்.(20)

திடமாக வேயப்பட்டதும், காண்பதற்கு இனியதுமான அதைக் கண்ட ராமன், சிதறாத கவனத்துடன் ஆணையைக் கேட்டுக் கொண்டிருந்தவனிடம் {லக்ஷ்மணனிடம்} இந்தச் சொற்களைச் சொன்னான்:(21) "சௌமித்ரியே,  ஐணேய மாமிசத்தை {மான் இறைச்சியைக்} கொண்டு வருவாயாக. சிரஞ்சீவியாக வாழ விரும்புவோர் செய்ய வேண்டிய வாஸ்து சமனத்தை {கிருஹப்ரவேசத்திற்குச் செய்ய வேண்டிய வாஸ்து சாந்தியைச்} செய்து, இந்த சாலையை {பர்ணசாலையை / ஓலைக்குடிசையை} நாம் வழிபடுவோம்.(22) நீண்ட விழிகளைக் கொண்ட லக்ஷ்மணா, அம்மிருகத்தை {மானைக்} கொன்று சீக்கிரம் இங்கே கொண்டு வா. சாத்திர நோக்கில் விதிப்படி செயல்படுவதே தர்மம் என்பதை மனத்தில் கொள்வாயாக" {என்றான் ராமன்}.(23) 

பகைவீரர்களைக் கொல்பவனான அந்த லக்ஷ்மணன், தன்னுடன் பிறந்தவனின் சொற்களைப் புரிந்து கொண்டு, ராமன் சொன்னபடியே செயல்பட்டதும், அவன் {ராமன்} {லக்ஷ்மணனிடம்} மீண்டும் இதைச் சொன்னான்:(24) "சௌம்யா {மென்மையானவனே}, இந்த ஐணேயத்தை {மானிறைச்சியை} சமைப்பாயாக. நாம் இந்த சாலையை வழிபடுவோம். இந்த நாளும், இந்த முஹூர்த்தமும் திடம் வாய்ந்தவை. துரிதமாகச் செயல்படுவாயாக" {என்றான்}.(25)

சௌமித்ரியும், பிரதாபவானுமான அந்த லக்ஷ்மணன், அப்போது கொல்லப்பட்ட புனிதமான கிருஷ்ணமிருகத்தை {கருப்பு மானை} மூட்டப்பட்ட நெருப்பில் இட்டான்.(26) குருதி எஞ்சாமல் பக்குவமாக அது சமைக்கப்பட்டதைத் தெரிந்து கொண்ட லக்ஷ்மணன், அதன் பிறகு, புருஷவியாகரனான ராகவனிடம் {மனிதர்களில் புலியான ராமனிடம்} இதைச் சொன்னான்:(27) "இந்தக் கிருஷ்ண மிருகத்தின் {கருப்பு மானின்} மொத்த அங்கங்களும் என்னால் முழுமையாகச் சமைக்கப்பட்டன. தேவனுக்கு ஒப்பானவரே, நல்லவரான நீர் தேவர்களை வழிபடுவீராக" {என்றான்}.(28)

குணவானும், ஜபிப்பதை அறிந்தவனுமான ராமன், ஸ்நாநம் செய்து {நீராடி}, மனத்தை அடக்கி, {வாஸ்து சாந்திக்கான} சத்ராவசானிக மந்திரங்கள் அனைத்தையும் சுருக்கமாகச் சொன்னான்.(29) தேவதாகணங்கள் அனைத்தையும் வழிபட்டுத் தூய்மையடைந்து, அந்த வசிப்பிடத்திற்குள் நுழைந்ததும், அமித தேஜஸ்வியான {எல்லையற்ற ஒளிபடைத்த} ராமனின் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.(30) வைஷ்வதேவ பலியை நடத்திய ராமன், ரௌத்திர, வைஷ்ணவ பலியையும் நடத்தி, மங்கலமான வாஸ்து காரியங்களையும் செய்து, நியாயப்படியான {சாஸ்திரப்படியான} ஜபங்களையும் செய்து, விதிப்படி நதியில் ஸ்நானம் செய்து, பாபங்களை அகற்றும் உத்தம பலியை மீண்டும் செலுத்தினான்[4].(31,32) சைத்தியங்களுக்கும் {கணேசரின் வழிபாட்டுக்குரிய இடங்களுக்கும்}, ஆயதனங்களுக்கும் {விஷ்ணு, மற்றும் பிற தேவர்களின் வழிபாட்டுக்குரிய  இடங்களுக்கும்} தகுந்தபடி அந்த ஆசிரமத்தின் திக்குகள் அனைத்திலும் ராகவன் {லக்ஷ்மணன்} வேதிஸ்தலங்களை ஸ்தாபித்தான்[5].(33) சுபலக்ஷணங்களைக் கொண்ட சீதை சகிதரான அந்த ராகவர்கள், மலர்மாலைகளாலும், வனங்களில் விளையும் பழங்கள் மற்றும் கிழங்குகளின் மாலைகளாலும், நீரில் பக்குவம் செய்யப்பட்ட மாமிசங்களாலும், வேதங்களில் சொல்லப்பட்ட ஜபங்களாலும், தர்ப்பைகளாலும், சமித்துகளாலும் {விறகுகளாலும்} பூதங்களை நிறைவடையச் செய்த பிறகு, அந்த சுபசாலைக்குள் {குடிலுக்குள்} நுழைந்தனர்.(34,35) மனோகரமானதும், நன்றாக அமைக்கப்பட்டதும், காற்று புகும் வழிகளைக் கொண்டதுமான அந்தத் தகுந்த பிரதேசத்தில், சுதர்மம் என்று அழைக்கப்படும் சபைக்குள் தேவர்கள் நுழைவதைப் போல அவர்கள் அனைவரும் தங்கள் வசிப்பிடமாகப் போகும் அந்த விருக்ஷ பர்ணச்சதனத்திற்குள் {மரங்களாலான பர்ணசாலைக்குள் / குடிலுக்குள்} நுழைந்தனர்.(36)


[4] நரசிம்மாசாரியர் பதிப்பில், "ராமன் வைஷ்தேவபலியையும், ருத்ரபலியையும், விஷ்ணுபலியையும் நடத்தி வாஸ்து சாந்தியின் பொருட்டு க்ருஹத்திலுள்ள பீடைகளெல்லாம் ஒழியும்படிக்கும், மிகுந்த மங்களங்கள் உண்டாகும்படிக்கும், அதற்குரிய புண்யாஹவாசன சாந்திஜபாதிகளைச் செய்து க்ரமந்தவறாமல் அந்தந்த மந்த்ரங்களையும் ஜபித்து, விதியின்படி மீளவும் நதியில் ஸ்னானஞ் செய்து ஸமஸ்த பாபங்களும் சாந்தமாகும்படி ஸமஸ்த பூதங்களையும் உத்தேசித்து மறுபடியும் உத்தமமான பலியை நடத்தினன்" என்றிருக்கிறது. 

[5] தாதாசாரியர் பதிப்பில், "வைசுவதேவபலியுஞ் செய்தருளி, ருத்திரனைக் குறித்தும், ஸ்ரீ மஹாவிஷ்ணுவைக் குறித்தும், ஹோமஞ் செய்து, கிருஹபீடைகளைப் போக்கவல்ல சாந்திகளையும், நன்மை பயக்கவல்ல புண்யாஹவசனம் முதலிய மந்திரங்களையும் அநுசந்தித்து, நீதிப்படி ஜபமுச் செய்தருளி விதியின்படி ருத்திரனைக் குறித்து ஹோமஞ் செய்தமையால், அந்த அசுசி நீங்கும்படி மீளவும் நதியில் ஸ்நாநஞ் செய்தருளி, பாவங்கள் தொலையத்தக்க பலியினையும் நிறைவேற்றி, ஆசிரமத்திற்குத் தக்கவாறு அங்கதேவதைகளுக்கும், முக்கியமான ஸ்ரீமந் நாராயணனுக்கும் சுற்றிலும், ஆலயங்கள் செய்வித்துப் பிரதிஷ்டை செய்தருளி இளையபெருமாளுடனும், பிராட்டியுடனும், காட்டிலுள்ள மலர்களாலும், கனிகளாலும், கிழங்குகளாலும், பக்குவஞ் செய்யப்பட்ட மாம்ஸங்களாலும், நன்னீர்களாலும், ஜபங்களாலும், தர்ப்பங்களாலும், ஸமித்துக்களாலும், தூப்புற்களாலும், பூதங்களெல்லாவற்றையும் விதிப்படி பூஜித்து மகிழ்வித்து, மற்றுமுள்ள ரிஷிகணங்களுடன்கூடி, தேவதைகளுடன் தேவேந்திரன் ஸுதாமாஸ் பாப்பிரவேசஞ் செய்வது போல" என்றிருக்கிறது.

அநேகமானவையும், நானாவிதமானவையுமான மிருக பக்ஷி குலங்களாலும் {விலங்கு, பறவைக் கூட்டங்களாலும்}, மரங்களாலும் நிறைந்ததும், விசித்திரமான புஷ்ப மகுடங்களைக் கொண்டதும்,  மிருகங்களின் ஒலிகளை எதிரொலிப்பதுமான அந்த உத்தம வனத்திற்குள் அந்த ஜிதேந்திரியர்கள் {புலன்களை வென்றவர்களான இராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோர்} இவ்வாறே சுகமாகத் திரிந்து கொண்டிருந்தனர்.(37) இரம்மியமானதும், நல்ல தீர்த்தங்களுடன் கூடியதும், மிருகபக்ஷிகளால் அடிக்கடி நாடப்படும் மால்யவதி நதியைக் கொண்டதுமான சித்திரகூடத்தை அடைந்ததும் அவர்கள் தங்கள் நகரத்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட துக்கத்தில் இருந்து விடுபட்டனர்.(38)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 056ல் உள்ள சுலோகங்கள் : 38

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அசுவபதி அத்ரி அம்சுமான் அம்பரீசன் அனசூயை அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இல்வலன் உமை கங்கை கசியபர் கபிலர் கரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் குஹன் கேசினி கைகேயி கௌசல்யை கௌசிகி கௌதமர் சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபளை சரபங்கர் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தாடகை திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திலீபன் தூஷணன் நளன் நாரதர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரம்மதத்தன் பிரம்மன் பிருகு மந்தரை மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாரீசன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விபாண்டகர் விராதன் விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸோமதை ஸ்கந்தன் ஹனுமான் ஹிமவான்