Sumitra consoles | Ayodhya-Kanda-Sarga-044 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் பெருமையை எடுத்துரைத்து, கௌசல்யைக்கு ஆறுதலளித்த சுமித்திரை...
தர்மத்தில் நிலைநிற்கும் சுமித்திரை, பெண்களில் உத்தமியும், இவ்வாறு புலம்பிக் கொண்டிருந்தவளுமான கௌசல்யையிடம் இந்த தர்ம வாக்கியங்களைச் சொன்னாள்:(1) "ஆரியையே, சத்குணங்களை {நல்ல குணங்களைக்} கொண்ட உன் புத்திரன் {ராமன்} புருஷோத்தமன் {உத்தம மனிதன்} ஆவான். நீ ஏன் இவ்வாறு பரிதாபமாக அழுது புலம்புகிறாய்?(2) ஆரியையே, மஹாபலவானான உன்னுடைய புத்திரன், ராஜ்ஜியத்தைத் தியாகம் செய்து, தன் பிதாவை {தசரதரை} மஹாத்மாவாகவும், சத்தியவாதியாகவும் சரியாக நிறுவியிருக்கிறான்.(3)
சிஷ்யர்களால் எப்போதும் சரியாக ஆசரிக்கப்படுவதும் {பின்பற்றப்படுவதும்}, இறந்த பிறகும் பலன் கொடுப்பதுமான தர்மத்தில் அவன் திடங்கொண்டவனாக இருந்தான். சிரேஷ்டனான {சிறந்தவனான} அந்த ராமன், ஒருபோதும் புலம்பல்களுக்குத் தகாதவன்.(4) குற்றமற்றவனும், சர்வ பூதங்களிடமும் தயவுள்ளவனுமான {அனைத்து உயிரினங்களிடமும் கருணை கொண்டவனுமான} லக்ஷ்மணன், எப்போதும் ராமனிடம் உத்தம ஒழுக்கத்துடன் நடந்து கொள்வான். அஃது அந்த மஹாத்மாவுக்கு லாபமாகும்[1].(5) சுகத்திற்கே பழக்கப்பட்டவளான வைதேஹி, வரப்போகும் துக்கத்தை அறிந்தும், தர்மாத்மாவான உன் ஆத்மஜனை {உன் மகன் ராமனைப்} பின்தொடர்ந்து செல்கிறாள்.(6)
[1] இங்கே வரும் "அந்த மஹாத்மாவுக்கு லாபம்" என்ற சொற்றொடருக்கு சில பதிப்புகளில், "இராமனுக்கு லாபம்" என்றும், சில பதிப்புகளில் "இலக்ஷ்மணனுக்கு லாபம்" என்றும் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.
உலகத்தில் கீர்த்தியுடன் படபடக்கும் பதாகைகளைக் கொண்ட பிரபுவும், தர்ம சத்திய விரதனுமான உன்னுடைய மகன் அடையாததென்ன?(7) இராமனின் உத்தமத் தூய்மை, மாஹாத்மியம் {மகிமை} ஆகியவற்றை அறிந்த சூரியன், தன் கதிர்களால் அவனது உடலைத் துன்புறுத்த மாட்டான் என்பது வெளிப்படையானது.(8) மங்கலமானவனும், சுகமானவனுமான அனிலன் {வாயு / தென்றல்}, சர்வ காலங்களிலும் கானகத்தில் மிதமான சீதோஷ்ணத்துடன் வீசி ராகவனை சேவிப்பான்.(9) சந்திரனோ, இரவில் ஓய்ந்திருக்கும் அவனைத் தன் குளிர்ந்த கதிர்களால் மென்மையாகத் தீண்டி, ஒரு தந்தையைப் போல அரவணைத்து அவனுக்கு உற்சாகத்தை அளிப்பான்.(10) புருஷவியாகரனான அந்த சூரன் {ராமன்}, தன் கைகளின் பலத்தை மட்டுமே சார்ந்து, வீட்டிலிருப்பதைப் போலவே அரண்யத்திலும் அச்சமில்லாமல் வசிப்பான். தானவேந்திரனான திமித்வஜசுதனின் வதத்தை ரணகளத்தில் {திமிங்கலக் கொடி கொண்ட சம்பாசுரனின் மகனான சுபாஹு கொல்லப்பட்டதை போர்க்களத்தில்} கண்ட பிரம்மன்[2], பெருங்காந்தியுடைய அவனுக்கு {ராமனுக்கு} திவ்ய அஸ்திரங்களைத் தந்தான்.(11,12)
[2] சில பதிப்புகளில் விஷ்வாமித்ரர் என்றிருக்கிறது.
எவனுடைய கணைகளின் இலக்கு சத்ருக்களுக்கு அழிவைக் கொண்டு வருமோ அத்தகையவனுடைய சாசனத்தின் {ஆணையின்} கீழ் பிருத்வி {பூமி} ஏன் நிலைக்காது?(13) இராமனின் மகிமை, தைரியம், நலத்திற்கான வலிமை ஆகியவை அரண்யவாசம் முடிந்ததும் சீக்கிரமாக அவனுக்குத் தன் ராஜ்ஜியத்தை பெற்றுத் தரும்.(14) தேவி, அவன் சூரியனுக்குச் சூரியனாகவும், அக்னிக்கு அக்னியாகவும், பிரபுக்களின் பிரபுவாகவும், செல்வத்திற்குச் செல்வமாகவும், கீர்த்தியில் முதன்மையான கீர்த்தியாகவும், பொறுமைக்குப் பொறுமையாகவும், தைவதங்களுக்கு தைவதமாகவும், பூதங்களில் {உயிரினங்களில்} முதன்மையான பூதமாகவும் இருக்கிறான். {அப்படிப்பட்டவனிடம்} வனத்திலோ, நகரத்திலோ என்ன குணமின்மை நேரப்போகிறது?(15,16)
புருஷரிஷபனான ராமன், பிருத்வியுடனும், வைதேஹியுடனும், ஸ்ரீயுடனும் சேர்ந்து சீக்கிரமாக அபிஷேகம் செய்து {முடிசூட்டிக்} கொள்வான்.(17) எவன் வெளியேறுவதைக் கண்டு அயோத்தியின் சர்வ ஜனங்களும் துக்கத்தில் பிறந்த சோகவேகத்தில் பீடிக்கப்பட்டவர்களாக கண்ணீர் சிந்துகிறார்களோ, குசப்புல்லாலான ஆடைகளைத் தரித்து, லக்ஷ்மிதேவியைப் போன்ற சீதை பின்தொடர எவன் செல்கிறானோ அத்தகையவனுக்கு எதை அடைவதுதான் துர்லபம் {அரிதாகும்}?(18,19) தனுவைத் தரிப்பவர்களில் சிறந்தவனான லக்ஷ்மணன், தானே பாணங்களையும், வாளையும், அஸ்திரங்களையும் ஏந்தி முன்னே நடந்து செல்லும்போது அவனுக்கு {ராமனுக்கு} எதை அடைவதுதான் துர்லபம்?(20)
தேவி, வனவாசத்தை முடித்துவிட்டு திரும்பி வரப்போகும் அவனை நீ காண்பாய். சோகத்திலிருந்தும், மோஹத்திலிருந்தும் {சோக மயக்கத்திலிருந்து} விடுபடுவாயாக. நான் உனக்கு சத்தியத்தையே சொல்கிறேன்.(21) கல்யாணி {மங்கலமானவளே}, நிந்தனைக்குத் தகாதவளே, உன் புத்திரன், சிரசால் உன் பாதங்களை வணங்கி சந்திரனைப் போல உதிப்பதை {எழுவதை} நீ காண்பாய்.(22) பெருங்காந்தியுடன் மீண்டும் தோன்றி அபிஷேகம் செய்து கொள்ளும் அவனைக் கண்டு சீக்கிரத்தில் ஆனந்தக் கண்ணீரைச் சிந்தப் போகிறாய்.(23) தேவி, சோகத்தையோ, துக்கத்தையோ அடையாதே. இராமனிடம் எந்த மங்கலமின்மையும் தென்படவில்லை. சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் கூடிய உன் புத்திரனை {ராமனை} சீக்கிரமாக நீ காண்பாய்.(24) தேவி, இப்போது உன் ஹிருதயம் கலங்கியிருக்கிறது. என்ன இது? பாவமற்றவளே, ஜனங்களுக்கு நீயே ஆறுதல் சொல்ல வேண்டும். (25)
தேவி, இராகவனை மகனாகப் பெற்ற உனக்கு துக்கம் தகாது. ராமனைக் காட்டிலும் சத்பாதையில் {நல்வழியில் / நன்னெறியில்} நிலைத்து நிற்கும் வேறு எவனும் உலகத்தில் இல்லை.(26) நண்பர்களுடன் சேர்ந்து வணங்கும் உன் சுதனை {மகன் ராமனைக்} கண்டு, மகிழ்ந்து, மழைக்கால மேகங்களைப் போல சீக்கிரம் நீ கண்ணீர் சிந்தப் போகிறாய்.(27) வரதனான {வரங்களை அருள்பவனான} உன் புத்திரன் சீக்கிரம் அயோத்திக்குத் திரும்பி, மிருதுவானவையும், பருத்தவையுமான தன் கைகளால் உன் பாதங்களைத் தழுவுவான்.(28) நண்பர்களுடன் கூடியவனும், சூரனுமான உன் சுதன் {மகன்}, உன்னை நமஸ்கரித்து மதிப்புடன் வழிபடும்போது, அசலத்தில் {மலையில்} பொழியும் மேகங்களைப் போல மகிழ்ச்சியுடன் நீ கண்ணீர் சிந்துவாய்" {என்றாள் சுமித்திரை}.(29)
வாக்கியங்களைப் பயன்படுத்துவதில் திறன்மிக்கவளும், குற்றமற்றவளும், அழகியுமான அந்த சுமித்திராதேவி, இவ்வாறான விதவிதமான வாக்கியங்களைச் சொல்லி, ராமனின் மாதாவுக்கு ஆறுதல் கூறி நிறுத்தினாள் {மௌனமானாள்}.(30) லக்ஷ்மணனின் மாதாவுடைய {சுமித்திரையுடைய} வாக்கியங்களைக் கேட்டதும், சரத்காலத்தில் {கூதிர்க்காலத்தில்} அற்பமான நீரைக் கொண்ட மேகம் மறைவதைப் போலவே, நரதேவனின் பத்தினியும் {மனிதர்களின் தலைவனான தசரதனின் மனைவியும்}, ராமனின் மாதாவுமான அவளுடைய {கௌசல்யையின்} சோகமானது சரீரத்தைவிட்டு சீக்கிரமாக மறைந்தது.(31)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 044ல் உள்ள சுலோகங்கள் : 31
Previous | | Sanskrit | | English | | Next |