Pitcher sound | Ayodhya-Kanda-Sarga-063 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: முன்பு செய்த பாபத்தை நினைவுகூர்ந்த தசரதன்; முனிமகன் ஒருவன் குடத்தில் நீர் எடுக்கும் ஓசையை யானை நீர் அருந்தும் ஒலியெனத் தவறாகக் கருதி அம்பெய்தது; தெரியாமல் செய்துவிட்ட தவறை உணர்ந்தது...
அந்த ராஜா {தசரதன்}, ஒரு முஹூர்த்த காலத்திற்குப் பிறகு, மீண்டும் விழித்தெழுந்து, சோகத்தில் மயங்கிய மனத்துடன் சிந்திக்கத் தொடங்கினான்.(1) வாசவனுக்கு {இந்திரனுக்கு} ஒப்பான அவன், இராமனும், லக்ஷ்மணனும் நாடு கடந்து சென்றதால், அசுரனால் {ராஹுவால்} இருளடைந்த சூரியனைப் போல பெருந்துன்பத்தில் வீழ்ந்தான்.(2) இராமன் தன் பாரியையுடன் {சீதையுடன்} சென்றபிறகு, தான் செய்த தீச்செயலை நினைவுகூர்ந்து அந்த கோசலேச்வரன் {கோசல நாட்டின் தலைவனான தசரதன்}, கடைக்கண்கள் கருத்த கௌசல்யையிடம் பேச விரும்பினான்.(3) இராமன் நாடு கடந்து வனத்திற்குச் சென்ற ஆறாம் நாள் அர்த்தராத்திரியில் தசரதன் தான் செய்த தீச்செயலை நினைவுகூர்ந்தான்.(4)
புத்திர சோகத்தால் பீடிக்கப்பட்ட அந்த ராஜா, தன் தீச்செயலை நினைவுகூர்ந்ததும், புத்திர சோகத்தால் பீடிக்கப்பட்டவளான கௌசல்யையிடம் இந்தச் சொற்களைச் சொன்னான்:(5) "கல்யாணி {அருளப்பட்டவளே / மங்கலமானவளே}, பத்ரையே {நன்மையைச் செய்பவளே}, சுபத்தையோ, அசுபத்தையோ செய்யும் எந்த கர்த்தாவும் அதன் கர்மஜத்தை நிச்சயம் அடைகிறான் {நன்மை, தீமைகளைச் செய்பவன் எவனும் அதனதன் விளைவை நிச்சயம் அடைகிறான்}.(6) எவன் பலன்களையும், தோஷங்களையும் அறியாமல் கர்மங்களை {செயல்களை} ஆரம்பிக்கிறானோ, அவன் நிச்சயம் பாலன் {[மூடன் என்ற பொருளில்] சிறுவன்} என்றே அழைக்கப்படுவான்.(7) எவன் புஷ்பங்களைக் கண்டு, பலனில் கொண்ட {அவை பழங்களைக் கொடுக்கும் என்ற} பேராசையில் பலாச {புரச} மரத்தை வளர்த்து மாந்தோப்புகளை வெட்டியழிப்பானோ, அவன் பலன் {பழங்கள்} விளையும்போது அழுது புலம்புவான்[1].(8) எவன் பலனை அறியாமல் அவசரமாகச் செயல்படுவானோ, அவன் அந்த கிம்சுகங்களை {பலாச / புரசமரங்களை} வளர்த்தவன் போலவே பலன் விளையும் காலத்தில் வருந்துவான்.(9) மாந்தோப்பை வெட்டி பலாசங்களை வளர்த்தவனைப் போல துர்மதியுடன் கூடிய நானும் பலன் விளையும் காலத்தில் ராமனைக் கைவிட்டுவிட்டு அழுது புலம்புகிறேன்.(10)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பில், "எவனாவதொருவன், புஷ்பம் எவ்வளவோ, அவ்வளவே பலமும் விளையுமென்று புஷ்பத்தைப் பார்த்து பலத்தில் பேராசையுடையவனாகி, மாம்பூ சிறியதும் வர்ணமில்லாதிருப்பதுமாகையால் அந்த வ்ருக்ஷத்தின் பலம் சிறியதாகவே யிருக்குமென்றும், பெரியதும் அழகிய வர்ணம் பொருந்தியதுமாகிய பலாசின் புஷ்பங்களைப் பார்த்து அந்த வ்ருக்ஷத்தின் பலம் பெரிதாயிருக்குமென்றும் ஆலோசித்துக் கொண்டு மாந்தோப்புகளை யெல்லாம் வெட்டி வேரைக் களைந்து பலாச வ்ருக்ஷங்களை வைத்து ஜலம் பாய்ச்சி வளர்ப்பானாயின், அவன் பலமுண்டாகுங்காலத்தில் பலாசவ்ருக்ஷத்தில் தான் எதிர்பார்த்திருந்த மஹாபலத்தைக் காணாமல் மன வருத்தமுறுவான்" என்றிருக்கிறது.
கௌசல்யே, நான் குமாரனாக இருந்தபோதே சப்தவேதியாக {[சப்த பேதத்தை] ஒலியைக் கொண்டே இலக்கைக் காணாமல் வீழ்த்தும் திறன் படைத்தவனாக} அறியப்பட்டேன். சப்த ஞானத்தை அடைந்த தனுர்வீரனான நான், அந்தக் குமார காலத்தில்தான் இந்தப் பாபத்தைச் செய்தேன்.(11) தேவி, இஹத்தில் {இவ்வுலகில்} அறியாமையில் விஷத்தை உண்ணும் பாலனுக்கு நேர்வதைப் போல என் செயலே {நான் செய்த பாபமே} இத்தகைய துக்கத்தை எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது.(12) எவனோவொரு அந்நிய புருஷன் பலாச மரங்களில் மோஹித்ததைப் போலவே நானும் சப்தவேத்யமயத்தின் {ஒலியைக் கொண்டே இலக்கை வீழ்த்தும் திறனின்} பலனை சரியாக அறிந்தேனில்லை.(13)
தேவி, நீ கன்னியாக இருந்தாய். நான் யுவராஜனாக இருந்தேன். அப்போது ஊக்கத்தையும், ஆசையையும் வளர்க்கும் மழைக்காலம் வந்தது.(14) பூமியின் ரசத்தைப் பருகி, தன் கதிர்களால் ஜகத்துக்கு வெப்பத்தைத் தரும் ரவி {சூரியன்}, பிரேதங்கள் {மாண்டோர்} திரியும் பயங்கரத் திசைக்குள் {தென்திசைக்குள்} நுழைந்தான்.(15) உஷ்ணம் திடீரென உள்ளடங்கியது. நீருண்ட மேககணங்கள் தென்பட்டன. தவளைகளும், சாரங்கங்களும் {மான்கள் / வானம்பாடிப் பறவைகள் / வண்டுகள்}, மயில்களும் மகிழ்ச்சியில் நிறைந்திருந்தன.(16) நீராடியதைப் போலச் சிறகுகள் நனைந்த பறவைகள், காற்றினாலும், மழையினாலும் படபடக்கும் நுனிகளைக் கொண்ட மரங்களைக் கடுஞ்சிரமத்துடன் அடைந்தன.(17) பொழிந்த இடத்திலேயே {நீரிலேயே} மீண்டும் மீண்டும் பொழிந்து கொண்டிருந்த நீரால் சூழப்பட்டதும், அசையாத மத்தசாரங்கங்களுடன் கூடியதுமான அசலம் {மதங்கொண்ட யானைகளுடன் கூடிய மலை} கடல் போலத் திகழ்ந்தது[2].(18) அருவிகள் தெளிந்த நீரைக் கொண்டவையாக இருப்பினும், பஸ்மம் {சாம்பல்}, கிரியின் தாதுக்கள் {மலைக்கனிமங்கள்} ஆகியவற்றுடன் கலந்து வெள்ளை, சிவப்பு வண்ணங்களில் பாம்புகளைப் போல {வளைந்து நெளிந்து} பாய்ந்து கொண்டிருந்தன.(19) அருவிகள் தெளிந்த நீரைக் கொண்டவையாகவே இருப்பினும், மழைபொழியத் தொடங்கியதும் வழிதவறிய செந்நீருடன் கலந்து பாய்ந்து கொண்டிருந்தன[3].(20)
[2] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "பர்வதம் பொழிந்ததாயும், ஓயாமல் பொழிந்து கொண்டிருக்கிறதுமான நீரால் மூடப்பட்டதாயும் மதங்கொண்ட யானைகளையுடையதுமாக சமுத்திரமென விளங்கிற்று" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "யானையானது தாரைதாரையாகத் தன் மேல் விழுந்தும் விழுந்து கொண்டுமிருக்கிற மழை ஜலத்தினால் (அதாவது விடாமழையினால்) மறைக்கப்பட்டு ஜலம் சுற்றிலும் சூழ்ந்த மலை போலவும், அலைகளின்றி அசையாமலிருக்கின்ற ஸமுத்ரம் போலவும் ப்ரகாசித்துக் கொண்டிருந்தது" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "பொழிந்தனவும், பொழிகின்றனவுமாகியுள்ள மழைநீர்களினால் நனைக்கப்பட்ட மதயானையும், மலைபோலசைவற்றும், கடல்போலக் கறுத்துந்திகழ்ந்து நின்றது" என்றிருக்கிறது. கீதா பிரஸ், கோரக்பூர், தமிழ்ப்பதிப்பில், "அதுவரை பொழிந்த மழையாலும், அடிக்கடி பெய்து கொண்டிருக்கும் மழையாலும் மூடப்பட்ட மதங்கொண்ட யானைகளை உடைய மலை, அலைகள் இல்லாத சமுத்திரம் போல விளங்கிற்று" என்றிருக்கிறது. கே.எம்.கே.மூர்த்தி ஆங்கிலப் பதிப்பில், "ஏற்கனவே விழுந்திருந்த நீரில் மீண்டும் மீண்டும் விழும் நீரால் சூழப்பட்ட மலையானது, மதங்கொண்ட மான்களுடன் கடல் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் ஆங்கிலப் பதிப்பில், "மதங்கொண்ட சாரங்கங்களைக் கொண்ட மலையானது, அடுத்தடுத்த விழுந்த மழைநீரில் மறைந்து நீர்க்கொள்ளிடம் போலத் தெரிந்தது" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் ஆங்கிலப் பதிப்பில், "ஏற்கனவே பொழிந்திருந்த நீரில் தொடர்ந்து நீர் விழுந்து கொண்டிருந்தது. மதங்கொண்ட மான்கள் வசித்த மலைகள் நீர்த்தாரைகளில் மூழ்கியிருந்தன" என்றிருக்கிறது. ஹரிபிரசாத் சாஸ்திரி ஆங்கிலப் பதிப்பில், "மலை மண்ணின் படிவுகளிலிருந்து கரியதாகவும், ஆரவாரமிக்கதாகவும் தெளிந்த நீர் மந்தமாகப் பாய்ந்து கொண்டிருந்தது" என்றிருக்கிறது. கீதாபிரஸ் கோரக்பூர் ஆங்கிலப் பதிப்பில், "பொழிந்த நீராலும், தொடர்ந்து பொழிகின்ற நீராலும் மறைக்கப்பட்டதும், மதங்கொண்ட யானைகளைக் கொண்டதுமான மலையானது ஒரு கடலைப் போலத் தெரிந்தது" என்றிருக்கிறது. நாம் ஒப்பிடும் மொழியாக்கங்களுக்கிடையில் உள்ள வேறுபாடுகளைக் காட்டவே இந்தக் குறிப்பிட்ட சுலோகத்தின் பொருள் உள்ளபடியே அந்தந்தப் பதிப்புகளில் இருந்து தனித்தனியாக எடுத்துக்காட்டப்படுகிறது.[3] இருபதாவது சுலோகம், கிட்டத்தட்ட பத்தொன்பதாவது சுலோகத்தைப் போலவே இருப்பதால் பல பதிப்புகளில் தவிர்க்கப்பட்டிருக்கிறது.
அதிசுகம் விளையும் அந்தக் காலத்தில் நான், உடற்பயிற்சி செய்யும் {வேட்டையாடும்} உறுதியுடன், தனுவையும் {வில்லையும்}, அம்புகளையும் தரித்துக் கொண்டு ரதத்தின் மீதேறி சரயு நதியைப் பின்தொடர்ந்து சென்றேன்.(21) இந்திரியங்களை வெல்லாதவனான நான், ராத்திரியில் நீரருந்த அந்நதிக்கு வரும் மஹிஷத்தையோ {எருமைக்கடாவையோ}, கஜத்தையோ {யானையையோ}, வேறு காட்டு விலங்கையோ கொல்லும் நோக்கத்துடனும், நாணேற்றப்பட்ட வில்லுடனும் அங்கே ஏகாந்தமான {தனிமையான} ஓரிடத்தில் காத்திருந்தேன்.(22,23அ) சப்தத்தைக் கேட்டதும், அந்த தீரத்திற்கு வந்த வனவிலங்கை நோக்கித் திரும்பி அதைக் கொன்றேன், மேலும் அங்கே வந்த மற்றொரு பயங்கர மிருகத்தையும் கொன்றேன்.(23ஆ,24அ)
பிறகு கண்ணுக்குப் புலப்படாத அந்தகாரத்தில் {இருளில்} ஜலம் நிரம்பும் கும்பகோஷத்தை வாரணத்தின் ஒலி போலக் கேட்டேன் {நீர் நிரம்பும் ஒரு குடத்தின் ஒலியை யானையின் ஒலி போலக் கேட்டேன்}.(24ஆ,25அ) அப்போது நான், அந்த கஜத்தை {யானையை} அடையும் நோக்கத்தில், பாம்புக்கு ஒப்பானதும், ஒளிர்வதுமான சரம் ஒன்றை எடுத்தேன். வந்த சப்தத்தை இலக்காகக் கொண்டு,(25ஆ,26அ) பாம்புக்கு ஒப்பான அந்தக் கூரிய பாணத்தை ஏவினேன். பாணத்தால் மர்மம் {முக்கிய அங்கம்} பிளக்கப்பட்டு நீரில் விழுந்த வனவாசியின், "ஹா, ஹா" என்ற தெளிவான குரல் அங்கே விடியலில் எழுந்தது.(26ஆ,27)
அந்த பாணம் தாக்கிய போது, "என்னைப் போன்ற தபஸ்வியின் மீது சஸ்திரம் {ஆயுதம்} எவ்வாறு விழுந்தது?" என்ற மனுஷக் குரல் ஒன்று அங்கே வெளிப்பட்டது.(28) {மேலும் அந்தக் குரல்}, "வசிப்பிடத்தில் இருந்து தொலைவான நதியில் நீரெடுக்க ராத்திரியில் வந்த என்னை அம்பால் தாக்கியவன் எவன்? மேலும் நான் எவனுக்கு என்ன செய்துவிட்டேன் {தீங்கிழைத்தேன்}?(29) தண்டக்கோலை {ஹிம்சையைக்} கைவிட்டவனும், வனத்தில் விளையும் வனப்பொருள்களில் ஜீவிப்பவனுமான என்னைப் போன்ற ஒரு ரிஷி சஸ்திரத்தால் கொல்லப்பட எவ்வாறு விதிக்கப்பட்டது?(30) ஜடாமுடி தரித்தவனும், மரவுரியையே உடையாகக் கொண்டவனுமான என்னைக் கொல்ல விரும்பியவன் எவன்? நான் அவனுக்கு என்ன தீங்கு செய்தேன்?(31)
பயனற்ற அற்ப நோக்கத்துடன் இவ்வாறு செயல்பட்டது வீண் செயலே. குருவின் படுக்கையை களங்கப்படுத்தியவனைப் போன்றவனான அவனை எவனும் சாது {நல்லவன்} என்று போற்ற மாட்டான்.(32) என் ஜீவிதம் அழிவதற்காக {உன் உயிரை இழப்பதற்காக} நான் அதிகம் வருந்தவில்லை. நான் இறந்தால் என் மாதா, பிதா இருவருக்காகவும் வருந்துவேன்.(33) நான் மரணமடைந்தால், என்னால் நீண்ட காலம் பராமரிக்கப்பட்ட அந்த முதிர்ந்த ஜோடிகள் எந்த விருத்தியை {வாழ்வாதாரத்தை} அடைவார்கள்?(34) நானும், முதிர்ந்தவர்களான என் மாதாவும், பிதாவும் ஒரே கணையால் கொல்லப்பட்டோம். தற்கட்டுப்பாடில்லாதவனும், கிட்டத்தட்ட மூடனுமான எவனால் நாங்கள் அனைவரும் கொல்லப்பட்டோம்?" {என்றது அந்த மனிதக் குரல்}.(35)
அந்தப் பரிதாபமான குரலைக் கேட்டதும் தர்மத்தையே நோக்கமாகக் கொண்டவனும், துக்கத்தால் பீடிக்கப்பட்டவனுமான என் கைகளில் இருந்து வில்லும், சரங்களும் {நழுவி} புவியில் விழுந்தன.(36) பரிதாபமான அந்த அழுகுரலை நிசியில் {இரவில்} கேட்ட நான், சோகவேகத்தால் குழப்பமடைந்து, அடிக்கடி நினைவிழந்தேன்.(37) தீனமான மனத்துடனும், சோகமான உணர்வுடனும் அவ்விடத்தை அடைந்த நான், அந்த சரயுவின் தீரத்தில் கணையால் கொல்லப்பட்ட தபஸ்வியைக்[4] கண்டேன்.{38} அவரது தலைமுடி கலைந்திருந்தது; கும்பத்திலிருந்து {குடத்திலிருந்து} நீர் வடிந்து கொண்டிருந்தது; கணையால் தாக்கப்பட்ட அவர் புழுதியும், குருதியும் பூசப்பட்ட அங்கங்களுடன் கிடந்தார்.{39}(38,39)
[4] இந்த முனிமகனின் பெயர் சிரவண குமாரன் என்றும், தந்தையின் பெயர் சந்தனு, தாயாரின் பெயர் ஞானவதி என்றும் சொல்லப்படுகிறது. வால்மீகி ராமாயணத்தில் எங்கும் இந்தப் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அக்னிபுராணம் ஆறாம் அத்தியாயம் 37 முதல் 40 வரையுள்ள சுலோகங்களில் இந்த முனிமகனின் பெயர் யஜ்ஞதத்தன் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பயத்துடனும், அவஸ்தைப்பட்ட மனத்துடனும் கூடிய என்னை தேஜஸ்ஸால் எரித்து விடுபவரைப் போலத் தன் கண்களால் பார்த்தவர், அப்போது இந்தக் குரூரத்தைச் சொன்னார்:(40) "இராஜனே, பெற்றோருக்கு நீர் கொண்டு செல்ல வந்த என்னை நீ தாக்கினாய். வனத்தில் வசிப்பவனான நான் உனக்கு என்ன தீங்கைச் செய்தேன்?(41) ஒரே பாணத்தால் என் மர்மத்தைப் பிளந்த நீ, முதியவர்களும், பார்வையற்றவர்களுமான என் மாதா, பிதா இருவரையும் சேர்த்துக் கொன்றுவிட்டாய்.(42) துர்பலம் கொண்டவர்களும் {பலமற்றவர்களும்}, பார்வையற்றவர்களும், தாகம் கொண்டவர்களுமான அவர்கள் இருவரும் நிச்சயம் {எனக்காக} நீண்ட காலம் எதிர்பார்த்துக் காத்திருந்து, தங்கள் தாகத்தைக் கஷ்டத்துடன் அடக்கிக் கொண்டிருப்பார்கள்.(43) பூமியில் விழுந்து கிடக்கும் என்னைக் குறித்து என் பிதா அறியமாட்டார் என்பதால், நிச்சயம் தபமோ, சுருதியோ {புனித ஞானமோ / வேதமோ} பலனை விளைவிக்கவில்லை {பலனை விளைவித்திருந்தால் நான் விழுந்து கிடப்பதை என் தந்தை அறிந்திருப்பாரே}.(44) {நான் விழுந்து கிடக்கிறேன் என்பதை} அறிந்தாலும், வெட்டப்படும் மரத்தைக் காக்கும் சக்தியற்ற மற்றொரு மரத்தைப் போல, சக்தியற்றவரும், நடக்க இயலாதவருமான அவரால் என்ன செய்ய முடியும்?(45) இராகவா {ரகு குல தசரதா}, நீயாகவே சீக்கிரம் சென்று என் பிதாவிடம் சொல்வாயாக; அக்னியால் எரிக்கப்படும் வனத்தைப் போல, கோபத்தால் உன்னை அவர் எரித்துவிடமாட்டார்.(46) இராஜனே, என் பிதாவின் ஆசிரமம் எங்கே இருக்கிறதோ அங்கே இந்தக் காற்தடம் இருக்கும் {அந்த இடம் வரை என் கால் தடம் செல்லும்}. அங்கே சென்றதும் நீ அவரது அருளை வேண்டுவாயாக. கோபமடையும் அவர் உன்னை சபிக்காதிருக்கட்டும்.(47) இராஜனே, கணைமுகத்திலிருந்து என்னை விடுவிப்பாயாக. உயரத்தில் இருக்கும் அருவியானது, தீரத்தைப் பிளப்பதைப் போலவே, இந்தக் கூரிய சரம், மிருதுவாக இருக்கும் என் மர்மத்தைப் பிளக்கிறது" {என்றான் அந்த தபஸ்வி}.(48)
அவரிடமிருந்து கணையைப் பிடுங்கும்போது இந்த எண்ணம் என் மனத்தில் புகுந்தது. 'கணையுடன் இருந்தால் இவரது பிராணன் துன்புறும். கணையில்லை எனில் இவர் அழிவடைவார்' {என்று எனக்குத் தோன்றியது}.(49) அப்போது, தீனனாக {பரிதாபமாக} சோகத்துடன் துக்கித்துக் கொண்டிருந்த அந்த முனிசுதர் {முனிமகன் / சிரவண குமாரர்}, என் ஹிருதயத்தில் இருந்த வருத்தத்தை உணர்ந்தார்.(50)
துயரத்துடன் கூடிய விரக்தியில் மூழ்கி, வேதனையில் அங்கங்களை வருத்தி, தன் வாழ்வின் முடிவை நெருங்கிக் கொண்டிருந்த அவர், அதீத துன்பத்துடன் தரையில் சுருண்டு, மிகவும் சிரமத்துடன் என்னிடம் {பின்வருமாறு} பேசினார்:(51) "தைரியத்தால் என் சோகத்தை அடக்கி, நிலையான சித்தத்தை அடைகிறேன். பிரம்மஹத்தியைச் செய்தோம் என்ற எண்ணம் உன் ஹிருதயத்திலிருந்து அகலட்டும்.(52) இராஜனே, ஜனாதிபா {மக்களின் தலைவா}, நான் துவிஜனல்லன் {இருபிறப்பாளனல்லன்}. எனவே நீ வருந்தாதே. நான் ஒரு வைசியன் மூலம் ஒரு சூத்திரப் பெண்ணுக்குப் பிறந்தவன் {கலப்பு வர்ணத்தைச் சார்ந்தவன்}[5]" {என்றார் அந்த முனிமகன்}.(53)
[5] வர்ணக்கலப்பு குறித்து மஹாபாரதம், அநுசாஸனபர்வம் பகுதி – 48ல் விரிவாகப் பேசப்படுகிறது. வைசியனுக்கு சூத்திரப் பெண்ணிடம் பிறக்கும் மகன் வைசியனே ஆவான் என்று மேற்கண்ட சுட்டியில் சுலோகம் எண் 8ல் சொல்லப்பட்டிருக்கிறது.
பாணத்தால் மர்மம் பிளக்கப்பட்டவரும், நடுங்கியவாறே முயற்சித்துக் கொண்டிருந்தவருமான அவர் இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போதே நான், அந்த பாணத்தை அவரிடமிருந்து பிடுங்கினேன். அந்த தபோதனர் அச்சத்துடன் என்னைக் கண்டவாறே தன் பிராணனை விட்டார்.(54,55) பத்ரையே {அன்புமிக்கவளே}, ஜலத்தால் நனைந்த உடலைக் கொண்டவரும், வருந்தி அழுது கொண்டிருந்தவரும், மர்மம் பிளக்கப்பட்டு, இடையறாமல் பெருமூச்சு விட்டபடியே சரயுவில் கிடப்பவருமான அவரைக் கண்ட நான் பெரும் விசனத்தை {துக்கத்தை} அடைந்தேன்" {என்றான் தசரதன்}.(56)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 063ல் உள்ள சுலோகங்கள் : 56
Previous | | Sanskrit | | English | | Next |