The women of gynaecium | Ayodhya-Kanda-Sarga-065 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தசரதன் இறந்ததைக் கண்டுபிடித்த பெண்கள்; தசரதனின் மனைவியர் அனைவரும் பரிதாபமாக அழுதது...
அந்த ராத்திரி கடந்து விடியத் தொடங்கிய அடுத்த நாளில், உயர்ந்த பண்பாட்டைக் கொண்டவர்களும், உத்தம கல்வியைக் கற்றவர்களுமான சூதர்களும், மங்கல ஆசிகளை உதிர்ப்பவர்களும், துதிப்பதையே வழக்கமாகக் கொண்டவர்களுமான காயகர்களும் {பாடகர்களும்}, பல்வேறு வகைகளில் தங்கள் வாழ்த்துகளைச் சொல்பவர்களான வந்திகளும் அந்த பார்த்திப நிவேசனத்திற்கு {ராஜமாளிகைக்குத்} தனித்தனியாக வந்தனர்.(1,2) அவர்களின் துதிகளும், ராஜனைக் குறித்த உரத்த குரல் வாழ்த்துகளும், பாராட்டுகளும் அந்த மாளிகையின் உள்ளரங்குகளை நிறைக்கும் வண்ணம் முற்றாகப் பரவியது.(3) அந்த சூதர்கள் துதித்ததும், சில பாணிவாதகர்கள் {கைத்தாளமிடும் பாடகர்கள்}, அவனது {தசரதனின்} செயல்களைப் புகழ்ந்து கைத்தாளத்துடன் பாடிக்கொண்டிருந்தனர்.(4)
இராஜகுல கோசரங்களிலும் {ராஜமாளிகை வசிப்பிடங்களிலும்}, மரக்கிளைகளிலும், கூண்டுகளிலும் இருந்த பறவைகள் அவ்வொலியால் விழித்தெழுந்து கீச்சொலி எழுப்பத் தொடங்கின.(5) வீணையின் ஒலியுடன் வெளிப்பட்ட புண்ணிய சப்தங்களும், பூர்ண ஆசீர்வாதங்களுடன் கூடிய காதானங்களும் {புனிதப் பாடல்களும்} அந்த வேஷ்மத்தை {மாளிகையை} நிரப்பின.(6) பூர்வத்தில் இருந்ததைப் போலவே இப்போதும் தூய நடைமுறைகளைப் பராமரித்தவர்களும், கோவின் {அரசனின்} தொண்டில் திறம்படைத்தவர்களுமான பெண்களும், அலிகளும் அங்கே தொண்டாற்ற வந்தனர்.(7)
ஸ்நானத்தை {நீராடலைக்} குறித்து அறிந்தவர்கள், உரிய காலத்திலும், உரிய விதிப்படியும் மஞ்சள், சந்தனம் கலந்த நீரைக் காஞ்சன கடங்களில் {பொற்குடங்களில்} அங்கே கொண்டு வந்தனர்.(8) அவ்வாறே ஸ்திரீகுமாரிகளும் {கன்னிப் பெண்களும்}, மேனியில் பூசிக் கொள்வதற்கான மங்கல பொருட்களையும், சிற்றுண்டிகளையும், அலங்காரப் பொருட்களையும் கொண்டு வந்தனர்.(9) அவனருகே கொண்டு வரப்பட்ட சர்வமும், விதிப்படி மதிப்புடன் அங்கே வைக்கப்பட்டன. சர்வ லக்ஷணங்களும் பொருந்திய அவை அனைத்தும் சுகுணலக்ஷ்மீகரமாக {பேரருள் நிறைந்தவையாக} இருந்தன.(10) அதன்பிறகு பெரும் பரபரப்புடன் வந்த அவர்கள் அனைவரும், "இஃது என்ன" என்ற ஐயத்துடன் சூரியோதயம் வரையில் அவனை நெருங்காமல் அங்கேயே நின்றனர்.(11)
பிறகு அந்தக் கோசலேந்திரனின் {கோசல நாட்டுத் தலைவனான தசரதனின்} சயனம் வரை தடையில்லாமல் செல்லக்கூடிய ஸ்திரீகள் மட்டும் ஒன்றுகூடிச் சென்று, தங்கள் பர்த்தாவை நெருங்கி {தலைவனை / கணவனை நெருங்கி, மெதுவான வாக்கியங்களைச் சொல்லி} அவனை எழுப்பினர்.(12) விநயத்திலும், நயத்திலும் {பணிவிலும், அறிவிலும்} உசிதமான நடத்தை கொண்ட அவர்களும், அவனது சயனத்தை ஸ்பரிசிக்காததால் எதையும் உணராமலிருந்தனர்.(13) உறக்கத்தில் கனவு காணும்போதான உடலின் நிலை, அங்க அசைவுகள் போன்றவற்றை அறிந்தவர்களான அந்த ஸ்திரீகள், ராஜனின் பிராணனைக் குறித்த அச்சத்தில், பிரவாஹத்தை {நீரோட்டத்தை} எதிர்த்து நிற்கும் நீர்வஞ்சிப்புல் நுனிகளைப் போல நடுங்கிக் கொண்டிருந்தனர்.(14,15அ) எதிர்வரப்போகும் பாபத்தை நினைத்து அஞ்சிக் கொண்டிருந்த அந்த ஸ்திரீகளின் சந்தேக மனங்கள், அந்தப் பார்த்திபனை {மன்னன் தசரதனை} இவ்வாறு கண்டதும் ஒரு நிச்சயத்தையடைந்தன.(15ஆ,16அ)
புத்திரசோகத்தால் பீடிக்கப்பட்டவர்களும், உறங்கிக் கொண்டிருந்தவர்களுமான கௌசல்யையும், சுமித்திரையும் காலனால் முற்றிலும் பீடிக்கப்பட்டவர்களைப் போல விழிக்காமல் கிடந்தனர்.(16ஆ,17அ) பிரகாசமிழந்தவளும், வர்ணமிழந்தவளும் {நிறம் மங்கியவளும்}, சோகத்தாலும், சன்னதத்தாலும் {மயக்கத்தாலும்} மெலிந்திருந்தவளுமான கௌசல்யை, இருளில் மூழ்கிய தாரையை {நட்சத்திரத்தைப்} போல ஒளியிழந்திருந்தாள்.(17ஆ,18அ) ராஜனுக்கு அருகிலேயே இருந்த கௌசல்யா தேவியும், அவளது அருளில் இருந்த சுமித்திரையும் சோகக்கண்ணீரில் மறைந்த முகத்துடன், {முன்பு போல} ஒளிராமல் இருந்தனர்.(18ஆ,19அ) சுபர்களான அந்த தேவிகள் உறங்குவதையும், நிருபனின் நிலையையும் கண்ட அந்தப்புரத்தினர், உறக்கத்திலேயே அவனது பிராணன் போயிருக்க வேண்டுமென மனத்தில் நினைத்தனர்.(19ஆ,20அ) பிறகு பரிதாபத்திற்குரிய அந்த வராங்கனைகள் {பெண்கள்}, அரண்யத்தின் ஸ்தானத்தில் இருந்து விலக்கப்பட்ட கரேணங்களை {பெண் யானைகளைப்} போல உரத்த குரலில் அழுதனர்.(20ஆ,21அ)
அவர்களின் அலறலைக் கேட்ட கௌசல்யையும், சுமித்திரையும் உடனே நித்திரையில் இருந்து விடுபட்டு சுயநனவை அடைந்தனர்.(21ஆ,22அ) அப்போது அந்தப் பார்த்திபனைக் கண்டும், ஸ்பரிசித்தும் பார்த்த கௌசல்யையும், சுமித்திரையும், "ஹா நாதரே" என்று அலறியவாறே தரணீதலத்தில் {பூமியின் தரையில்} விழுந்தனர்.(22ஆ,23அ) மஹீதலத்தில் {பூமியின் தரையில்} உருண்டு, புரண்ட அந்த கௌசல்யேந்திரன் மகள் {கௌசல்யை}, ககனத்திலிருந்து விழுந்த தாரையை {வானத்திலிருந்து விழுந்த நட்சத்திரத்தைப்} போலப் பிரகாசிக்காமல் இருந்தாள்.(23ஆ,24அ) அந்த நிருபன் குணமழிந்தவனான போது {இறந்த பிறகு}, கொல்லப்பட்டு விழுந்த நாகவதுவை {பெண்யானையைப்} போலப் புவியில் விழுந்த கௌசலையை அந்த ஸ்திரீகள் அனைவரும் கண்டனர்.(24ஆ,25அ)
அதன்பிறகு, கைகேயீ பிரமுகர்களும் {கைகேயியைச் சார்ந்தவர்களும்}, நரேந்திரனின் ஸ்திரீகள் அனைவரும் சோகத்தால் பீடிக்கப்பட்டு அழுதவாறே சுயநனவு அகன்று விழுந்தனர்.(25ஆ,26அ) அழுது கொண்டிருந்தவர்களால் உண்டான பலத்த சந்நாதத்துடன் {ஓங்கி ஒலித்த ஒலியுடன்} இவர்களின் ஒலியும் இணைந்து, அந்தக் கிருஹத்தையே {வீட்டையே} பிளக்கும் பேரொலியானது.(26ஆ,27அ) திஷ்டாந்தத்தை {இறுதி முடிவை} அடைந்த அந்த நரதேவனின் சத்மம் {மன்னனின் அந்தப்புரம்}, மனவேதனையுற்று திகிலடைந்த ஜனாகுலத்தால் {மக்கள் கூட்டத்தால்} நிறைந்ததாகவும், முற்றிலும் கலக்கமுற்றதாகவும், சுற்றிலும் கலங்கிய பந்துக்களுடன் {உறவினர்களுடன்} கூடியதாகவும், துன்பத்தாலும், விரக்தியாலும் ஆனந்தம் இழந்ததாகவும் காணப்பட்டது.(27ஆ-29அ) புகழ்பெற்றவனான அந்த பார்த்திபரிஷபன் {மன்னர்களில் காளையான தசரதன்} காலமானதை அறிந்த அவனது பத்தினிகள் {மனைவியர்}, பெருந்துக்கத்துடன் அவனைச் சூழ்ந்து, அநாதைகளைப் போல ஒருவருக்கொருவர் கைகளைப் பற்றிக் கொண்டு பரிதாபகரமாக அழுது புலம்பினர்.(29ஆ-29உ)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 065ல் உள்ள சுலோகங்கள் : 29
Previous | | Sanskrit | | English | | Next |