Kaushalya repents | Ayodhya-Kanda-Sarga-062 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: தன் தவறுக்கு வருந்தி மன்னனைத் தேற்றிய கௌசல்யை; துன்புற்ற தசரதன் உறக்கத்தில் ஆழ்ந்தது...
சோகத்தில் பீடிக்கப்பட்ட ராமனின் மாதாவால் {கௌசல்யையால்} இவ்வாறு கோபத்துடன் சொல்லப்பட்ட கடும் வாக்கியங்களைக் கேட்ட ராஜா {தசரதன்} துக்கத்துடன் சிந்திக்கத் தொடங்கினான்.(1) இவ்வாறு சிந்தித்த அந்த நிருபன் {மனிதர்களின் தலைவனான தசரதன்}, இந்திரியங்கள் கலங்கியவனாக மோஹமடைந்தான் {பொறிகள் கலங்கி மூர்ச்சித்தான்}. அந்தப் பரந்தபன் {பகைவரை எரிப்பவனான தசரதன்}, நீண்ட நேரத்திற்குப் பிறகே தன் நினைவை அடைந்தான்.(2)
அவன் {தசரதன்}, தன் நினைவு மீண்டதும், தீர்க்க உஷ்ண {நீண்ட வெப்பப்} பெருமூச்சைவிட்டான். தன் அருகில் நிற்கும் கௌசலையைக் கண்டு மீண்டும் {வருந்தி} சிந்திக்கத் தொடங்கினான்.(3) அவ்வாறு அவன் சிந்தித்த போது, சப்தத்தைக் கொண்டு துளைப்பவனாக {ஒலியைக் கொண்டே குறியை எய்பவனாகப்} பூர்வத்தில் அஞ்ஞானத்தால் {அறியாமையால்} தான் செய்த தீச்செயலை நினைத்தான்.(4) பிரபுவான அந்த மஹாராஜா {தசரதன்}, இந்த சோகத்தாலும், ராமனைக் குறித்த சோகத்தினாலும் பீடிக்கப்பட்டவனாக இரட்டை சோகங்களால் மனம் தளர்ந்தான்.(5)
இந்த சோகங்களால் பீடிக்கப்பட்ட அந்த பூபதி {நிலத்தலைவன் தசரதன்}, மெய்நடுங்கி, தலை கவிழ்ந்து கைக்கூப்பிக் கொண்டு, கௌசல்யையின் அருள் வேண்டி இதைச் சொன்னான்:(6) "கௌசல்யா, உன் அருளை வேண்டியே நான் இந்த அஞ்சலியைச் செய்கிறேன் {கைக்கூப்பிக் கெஞ்சுகிறேன். என்னை மன்னித்துக் கொள்வாயாக}. பிறரிடம் கூட நீ நித்தியம் வாத்சல்யத்துடனும் {பாசத்துடனும்}, அன்புடனும் இருந்து வருகிறாய்.(7) தேவி, தர்மத்தை உள்ளபடியே அறியும் நாரீகளுக்கு {பெண்களுக்கு}, பர்த்தா {கணவன்} குணவானாகவோ, நிர்குணனாகவோ {குணமற்றவனாகவோ} இருந்தாலும், உண்மையில் அவனே அவர்களுக்குப் பிரத்யக்ஷ தைவதமாவான் {கண்கண்ட தெய்வமாவான்}.(8) உலகத்திலுள்ள நன்மை தீமைகளைப் புரிந்து, நித்தியம் தர்மத்தையே நோக்கமாகக் கொண்டிருக்கும் நீ துக்கமடைந்திருந்தாலும், துக்கத்திலிருக்கும் என்னிடம் பிரியமற்ற {விரும்பத்தகாத} சொற்களைப் பேசக்கூடாது" {என்றான் தசரதன்}.(9)
கௌசல்யை, தீனனான ராஜனால் பரிதாபமாகச் சொல்லப்பட்ட அந்த வாக்கியத்தைக் கேட்டு, வாய்க்காலில் பெருகி ஓடும் புது மழைநீரைப் போலக் கண்ணீர் வடித்தாள்.(10) தாமரை மலர் போலக் கூப்பியிருந்த ராஜனின் கைகளைக் குவித்துத் தன் தலையைப் பற்றிக் கொண்டவள் {கௌசல்யை}, அழுது கொண்டே, பயத்துடன் கூடிய அவசரமான சொற்களைக் குழப்பத்துடன் சொன்னாள்:(11) "தேவா, சிரம்பணிந்து உம்மை யாசிக்கிறேன். பூமியில் நெடுஞ்சாண்கிடையாக விழுகிறேன். என்னைக் கேடு பீடித்தது. என்னிடம் நீர் பொறுமை காக்க வேண்டியதில்லை.(12) வீரரே, போற்றத்தகுந்தவனும், புத்திசாலியுமான கணவனால் எந்தப் பெண் வேண்டப்படுவாளோ, அவளுக்கு இரு உலகங்களும் இல்லை {இம்மையையும், மறுமையையும் இல்லை. இவ்வுலகத்திலுள்ளவர்களும் அவளை நிந்திப்பார்கள், பரலோகத்திலும் அவள் தண்டிக்கப்படுவாள்}.(13) தர்மஜ்ஞரே {தர்மத்தை அறிந்தவரே}, நான் தர்மங்களை அறிவேன். நீர் சத்தியவாதி என்பதையும் அறிவேன். ஆயினும் புத்திரசோகத்தில் தவித்த நான் மொழிதற்கரிய மொழிகளை மொழிந்தேன்.(14)
சோகம் தைரியத்தை நாசம் செய்யும், சோகம் கேள்வியை {கல்வியை} நாசம் செய்யும், சோகம் அனைத்தையும் நாசம் செய்யும். சோகத்துக்கு இணையான ரிபு {எதிரி} வேறேதும் இல்லை.(15) எதிரியின் கையிலிருந்து விழும் அடியைத் தாங்கிக் கொள்ள முடியும். திடீரென நேரும் சூக்ஷ்ம {சிறு} சோகத்தையுந் தாங்கிக் கொள்ளவே முடியாது.(16) வீரரே, தர்மத்தை அறிந்தவர்களும், சுருதிகளைக் கற்றவர்களும், தர்மார்த்தங்களில் {அறம், பொருள்களில்} உள்ள சிறு ஐயங்களிலும் தெளிவடைந்தவர்களுமான யதிகளுங் கூட சோகத்தால் மனம் பீடிக்கப்படும்போது வழிதவறுகிறார்கள்.(17) இராமன் வனவாசம் சென்று இன்றோடு பஞ்சராத்திரிகள் {ஐந்து இரவுகள்} ஆகின்றன. சோகத்தால் மகிழ்ச்சி அழிந்த எனக்கு, அது பஞ்ச வருஷங்களை {ஐந்து ஆண்டுகளைப்} போன்றது.(18) நான் அவனை {ராமனைக்} குறித்து சிந்திக்கையில், வேகமான நதிகளால் பெருகும் மஹத்தான சமுத்திர நீரைப் போல என் ஹிருதய சோகம் வளர்கிறது {என்றாள் கௌசல்யை}.(19)
கௌசல்யை இந்த சுபச் சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, சூரியன் மந்தமடைந்தான் {ஒளிமங்கினான் / மறைந்தான்}; இரவும் ஆனது.(20) இவ்வாறு கௌசல்யா தேவியால் மகிழ்ந்த அந்த நிருபன், சோகத்தைக் கடந்து நித்திரையின் வசமடைந்தான்.(21)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 062ல் உள்ள சுலோகங்கள் : 21
Previous | | Sanskrit | | English | | Next |