Thursday, 15 September 2022

தைலத் தொட்டி | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 066 (29)

Oil trough | Ayodhya-Kanda-Sarga-066 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: கைகேயியை நிந்தித்த கௌசல்யை; ஈமச்சடங்குகளுக்காக காத்திருக்கும் மன்னனின் சடலத்தைப் பதப்படுத்திப் பாதுகாத்தது; இருளில் மூழ்கிய அயோத்தி...

Dasaratha's death

இறந்துவிட்ட பார்த்திபன் {மன்னன் தசரதன்}, முற்றிலும் அணைந்த அக்னியைப் போலவும், நீர் வற்றிய ஆர்ணவத்தை {கடலைப்} போலவும், பிரபையிழந்த ஆதித்யனை {சூரியனைப்} போலவும் கிடப்பதைக் கண்ட கௌசல்யை, அந்த ராஜனின் சிரஸைப் பற்றிக் கொண்டு {தசரதனின் தலையை மடியில் வைத்துக் கொண்டு}, பல்வேறு வகைகளில் சோகத்தால் பீடிக்கப்பட்டும், கண்கள் நிறைந்த கண்ணீருடனும், கைகேயியிடம் {இதைச்} சொன்னாள்:(1,2) "கைகேயீ, கொடூரியே, துஷ்டசாரிணியே {தீய நடத்தை கொண்டவளே}, ஆசைகள் நிறைவேறியவளாக இருப்பாயாக. ராஜரைக் கைவிட்டு, எந்தத் தடையுமில்லாமல், இடையூறேதுமில்லாமல் இந்த ராஜ்ஜியத்தை நீ அனுபவிப்பாயாக.(3) இராமன் என்னை விட்டுச் சென்றுவிட்டான். என் பர்த்தாவும் ஸ்வர்க்கத்திற்குச் சென்றுவிட்டார். உடன் வந்த கூட்டத்தை இழந்து, தீய வழியை அடைந்து ஜீவிப்பதில் எனக்கு விருப்பமில்லை.(4) 

தர்மத்தைக் கைவிட்ட கைகேயியைத் தவிர, எந்த ஸ்திரீதான் தன் தைவதமான பர்த்தாவை {தெய்வமான கணவனை} விட்டு விட்டு ஜீவிக்க விரும்புவாள்?(5) கெட்ட உணவை உண்பவனைப் போலவே ஒரு லுப்தனால் தன் தோஷத்தை {ஒரு பேராசைக்காரனால் தன் குற்றத்தைப்} புரிந்து கொள்ள முடியாது. ஒரு குப்ஜையினால் {கூனியினால்} ராகவ குலத்தை இந்தக் கைகேயி அழித்துவிட்டாள்.(6) தகாத செயலைச் செய்ய வற்புறுத்தப்பட்டதன் காரணமாக ராஜரால் ராமனும், அவனது பாரியாளும் {மனைவியும்} நாடுகடத்தப்பட்டனர் என்பதைக் கேட்டு ஜனகரும் என்னைப் போலவே பரிதபிக்கப் போகிறார்.(7) கமலபத்ரங்களைப் போன்ற கண்களைக் கொண்டவனும், தார்மிகனுமான ராமன் ஜீவித்திருந்தாலும் இங்கில்லாமல் போனதால், இப்போது நான் அனாதையும், விதவையுமானதை அறியமாட்டான்.(8) 

விதேஹராஜனின் மகளும், பரிதாபத்திற்குரியவளும், துக்கத்திற்குத் தகாதவளுமான சீதையும், வனத்தில் துக்கத்துடன் பயந்திருப்பாள்.(9) அவள், இரவுகளில் நாதமெழுப்பும் மிருக பக்ஷிகளின் {விலங்குகள், பறவைகளின்} பயங்கர கோஷங்களைக் கேட்டு நிச்சயம் பேரச்சங்கொண்டு ராகவனிடம் தஞ்சம் அடைவாள்.(10) புத்திரர்களற்றவரான அந்த விருத்தரும் {ஜனகரும்}, வைதேஹியை நினைத்தவாறே சோகத்தால் பீடிக்கப்பட்டவராகத் தமது ஜீவிதத்தை நிச்சயம் கைவிடுவார்.(11) பதிவிரதையான நானும், {தசரதரின்} இந்த சரீரத்தை ஆலிங்கனம் செய்தவாறு ஹுதாசனத்தில் {நெருப்பில்} நுழைந்து, இன்றே என் திஷ்டாந்தத்தை {எனக்கான முடிவை} அடைவேன்" {என்றாள் கௌசல்யை}.(12)

அப்போது வியாவஹாரிகள் {அரண்மனை அதிகாரிச்சிகள்}, துக்கத்தால் பீடிக்கப்பட்டவளும், பரிதாபத்திற்குரியவளும், {தசரதனின் உடலை} ஆரத்தழுவிக் கொண்டிருந்தவளுமான அந்தக் கௌசலையை அந்த இடத்தில் இருந்து தூக்கிச் சென்றனர்.(13) அதன் பிறகு குறிப்பிட்ட அமாத்தியர்கள் {அமைச்சர்கள்}, அந்த ஜகத்பதியை தைலதுரோண்யத்திலிட்டு {எண்ணெய்த் தொட்டியிலிட்டு} அந்த ராஜனுக்குச் செய்ய வேண்டிய சர்வ கர்மங்களையும் செய்தனர்.(14) சர்வத்தையும் அறிந்தவர்களான அந்த மந்திரிகள், புத்திரர்களில்லாத போது ராஜனை சங்கலனஞ் செய்ய {தகனஞ் செய்ய / எரியூட்ட} விரும்பாததால் அந்த பூமிபதியை இவ்வாறு {பதப்படுத்தி} பாதுகாத்தனர்.(15) 

அந்த நராதிபனை அவர்கள் {மந்திரிகள்} தைலதுரோண்யத்தில் கிடத்துவதை அறிந்த ஸ்திரீகள், "ஹா {ஐயோ}, இவர் இறந்துவிட்டாரே" என்று கதறி அழுதனர்.(16) கண்ணீர் வழியும் கண்களுடன் கூடிய முகங்களைக் கொண்ட அந்தப் பரிதாபத்திற்குரியவர்கள், சோகசந்தாபத்தால் பீடிக்கப்பட்டு அழுதவாறே தங்கள் கைகளை உயர்த்திக் கொண்டு {பின்வருமாறு} பரிதாபமாக அழுது புலம்பினார்கள்:(17) "ஹா, மஹாராஜா, பிரியவாதியும் {அன்புடன் பேசுபவனும்}, சதா சத்தியசந்தனுமான {எப்போதும் சத்தியத்தைக் காப்பவனுமான} ராமன் இல்லாதபோது, ஏன் எங்களை விட்டுச் சென்றீர்?(18) இராமன் தொலைதூரத்தில் இருக்கும்போது விதவைகளாகியிருக்கும் நாங்கள், துஷ்டஸ்வபாவம் கொண்டவளும், பதிக்னையுமான {பதியைக் கொன்றவளுமான} கைகேயியின் அருகில் எப்படி வாழ்வோம்?(19) பிரபுவும், ஆத்மவானும், ஸ்ரீமானும், சதா எங்களுக்கும், உமக்கும் நாதனாக {பாதுகாவலனாக} விளங்கியவனுமான அந்த ராமன், நிருபதிசிரியத்தை {ராஜ்ஜியலக்ஷ்மியை} விட்டு விட்டு வனத்திற்குச் சென்றுவிட்டான்.(20) நீரும் இல்லாமல், அந்த வீரனுமில்லாமல் விசனமோஹத்தில் இருக்கும் {துன்பத்தில் மெய்மறந்திருக்கும்} நாங்கள், கைகேயியால் இகழப்பட்டு எவ்வாறு காலங்கழிப்போம்?(21) ராஜரையும், ராமனையும், மஹாபலம் பொருந்திய லக்ஷ்மணனையும், சீதையையும் எவள் கைவிட்டாளோ அவள் பிறரையும் ஏன் கைவிடமாட்டாள்?" {என்று சொல்லி அழுதுபுலம்பினர்}.(22)

சோகத்தில் அதிகமாகக் கண்ணீர் சிந்திய அந்த ராகவனின் வரஸ்திரீகள் {தசரதனின் சிறந்த மனைவியர்}, ஆனந்தமிழந்தவர்களாக வரிசையாகத் தரையில் உருண்டு புரண்டனர்.(23) மஹாத்மாவான அந்த ராஜன் இல்லாத அயோத்தியாபுரி, பர்த்தா இல்லாத ஸ்திரீயைப் போலவும், சந்திரனில்லாத நிசியைப் போலவும் ஒளியிழந்திருந்தது.(24) கண்ணீருடன் கலங்கி நின்ற ஜனங்கள், "ஹா, ஹா" வென அழுது புலம்பிய குலாங்கனைகள் {கற்புடைய பெண்கள்}, சூன்யமான மாளிகைகளின் வாயில்கள், சதுரசாலைகள் ஆகியவற்றுடன் கூடிய அது {அந்த அயோத்தி}, பூர்வத்தைப்போன்ற ஒளியுடன் துலங்கவில்லை.(25)

நராதிபன் சோகத்துடன் திரிதிவத்திற்கு {ஸ்வர்க்கத்திற்குச்} சென்று, நிருபாங்கனைகள்  மஹீதலத்தில் கிடந்தபோது {மன்னனின் மனைவியர் தரையில் கிடந்தபோது}, ரவி {சூரியன்} தன் இயக்கத்தில் இருந்து பின்வாங்கி விரைவாகச் சென்றுவிட்டான். இருள் பரப்பத் தொடங்கும் ரஜனியும் {இரவும்} வந்தாள்.(26) அங்கே வந்த நண்பர்களும், உறவினர்களும், புத்திரர்கள் இல்லாத போது அந்த மஹீபதியின் தகனத்தை விரும்பவில்லை. இவ்வாறு சிந்தித்துக் கொண்டே சிந்தனைக்கும் புலப்படாத அந்த சயனத்தில் ராஜனை வைத்திருந்தனர்.(27) அந்த மஹாத்மாவால் {தசரதனால்} கைவிடப்பட்டதும், கண்ணீரால் குரலுடைந்த மக்களுடன் கூடிய சாலைகளையும், நாற்சந்திகளையும் கொண்ட அந்த நகரம், பாஸ்கரன் இல்லாத வானத்தைப் போலவும், நக்ஷத்ராகணங்கள் இல்லாத இரவைப் போலவும் பிரபையற்று ஒளியிழந்தது.(28) அந்த நரதேவன் {தெய்வீகனான தசரதன்} இறந்தபோது, அந்நகரத்தின் நரநாரீகள் கூட்டங்கூட்டமாகச் சேர்ந்து பரதனின் மாதாவை இகழ்ந்தும் அமைதியடையாமல் வேதனையடைந்தனர்.(29)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 066ல் உள்ள சுலோகங்கள் : 29

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை