Friday 20 May 2022

இராமனின் வேண்டுகோள் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 038 (18)

The request of Rama | Ayodhya-Kanda-Sarga-038 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: மரவுரியில் இருக்கும் மருமகளைக் கண்டு சினமடைந்த தசரதன்; கௌசலையை மதிப்புடனும், கருணையுடனும் நடத்துமாறு தன் தந்தையிடம் சொன்ன ராமன்...

Dasharatha and Rama

நாதனால் {ராமனால்} பாதுகாக்கப்பட்டவளாக இருந்தாலும் அநாதையைப் போல மரவுரியை உடுத்திக் கொண்டிருந்த அவளைக் {சீதையைக்} கண்ட சர்வஜனங்களும், "தசரதனுக்கு ஐயோ" வென உரக்கக் கதறினார்கள்.(1) அங்கே எழுந்த உரத்தவொலியால் துக்கமடைந்த மஹீபதி {தசரதன்} தன் ஜீவிதத்திலும், தர்மத்திலும், மதிப்பிலும் உள்ள நம்பிக்கையை இழந்தான்.(2) 

அந்த ஐக்ஷ்வாகன் {இக்ஷ்வாகு குலத்தவனான தசரதன்} உஷ்ணமான பெருமூச்சை விட்டபடியே தன் பாரியையிடம் {மனைவியான கைகேயிடம்} இதைச் சொன்னான், "கைகேயி, குசப்புல்லாலான மரவுரியுடன் செல்ல சீதை தகுந்தவளல்ல.(3) சுகுமாரியும் {மென்மையான பெண்ணும்}, சிறுமியும், சுகத்திற்கே பழக்கப்பட்டவளுமான இவள் வனத்திற்குத் தகுந்தவளல்ல என்ற சத்தியத்தையே என் குரு {வசிஷ்டர்} சொன்னார்.(4) மரவுரியைப் பெற்றுக் கொண்டு ஜனங்களுக்கு மத்தியில் துறவியைப் போலக் கலங்கி நிற்கும் ராஜவரரின் கன்னிகை {மன்னர்களிற் சிறந்த ஜனகரின் மகள் சீதை}, எவருக்கேனும் தீங்கிழைத்திருக்கிறாளா?(5) ஜனகனின் கன்னிகை அந்த மரவுரிகளை வீசி எறியட்டும். பூர்வத்தில் இத்தகைய பிரதிஜ்ஞை எதுவும் தத்தம் செய்யப்படவில்லை. இந்த ராஜபுத்ரி {சீதை} சர்வ ரத்தினங்களுடனும், முழு மகிழ்ச்சியுடனும் வனத்திற்குச் செல்லட்டும்.(6) 

ஜீவிக்கத் தகுதியற்றவனான என்னால் கொடும் பிரதிஜ்ஞையான ஒரு நியமம் ஏற்படுத்தப்பட்டது. வேணுவை {மூங்கிலை} அதன் புஷ்பமே {மலரே} எரித்து விடுவதைப் போல குழந்தைத்தனத்துடன் உன்னால் தொடங்கப்பட்ட காரியம் என்னை எரித்துவிடும்.(7) பாபியே, அதமையே {இழிந்தவளே}, ராமன் உனக்கு சிறு குற்றத்தையேனும் செய்தானெனக் கொள்ளப்பட்டாலும், வைதேஹியால் உனக்கு இங்கே என்ன அபகாரம் {தீமை} செய்யப்பட்டது?(8) தபஸ்வினியைப் போல மிருதுவானவளும், சீலம் {ஒழுக்கம்} கொண்டவளும், பெண்மானைப் போல மலரும் விழிகளைக் கொண்டவளுமான ஜனகனின் மகளால் இங்கே என்ன அபகாரம் செய்ய முடியும்?(9) பாபியே, இவ்வாறு ராமனை நாடுகடத்துவதே உனக்குப் போதுமானது. இந்தப் பாதகமான செயல்களை மேலும் செய்வதன் மூலம் உனக்கு என்ன {பயன் உண்டாகும்}?(10) தேவி, அபிஷேகத்திற்காக இங்கே வந்த ராமனிடம் நீ எவற்றைச் சொன்னாயோ அவற்றை மட்டுமே நான் அறிவேன்.(11) இவை யாவற்றையும் கடந்தும், சீதையையும் மரவுரி உடுத்த வைப்பதை உணர்ந்தும் {இவ்வாறு நீ செயல்படுவதால்} ஏதோவொரு வகையில் நரகத்திற்குச் செல்ல விரும்புகிறாய்" {என்றான் தசரதன்}.(12)

இவ்வாறு புலம்பிய மஹாத்மாவான அந்த ராஜா {தசரதன்} அந்த சோகத்திற்கான அந்தத்தை {முடிவைக்} காணாமல், புத்திர விசனத்தில் மூழ்கி, அதிகம் புண்பட்டவனாக பூமியில் விழுந்தான்.(13) வனத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த ராமன், ஆசனத்தில் {எழுந்து} அமர்ந்து தலையைக் கவிழ்ந்தவாறே பேசிக்கொண்டிருந்த தன் பிதாவிடம் இந்த வசனத்தைச் சொன்னான்:(14) தார்மீகரே, தேவா, புகழ்பெற்றவளும், என் மாதாவுமான இந்தக் கௌசல்யை, {வயது} முதிர்ந்தவளாக இருக்கிறாள். ஒழுக்கமுள்ளவளான இவள் உம்மைச் சிறிதும் நிந்திக்கமாட்டாள்.(15) வரதரே, என்னை இழந்தவளும், பூர்வத்தில் இந்தத் துன்பத்தைக் காணாதவளும், சோக சாகரத்தை {துன்பக்கடலை} அடைந்தவளுமான இவளை நீர் மதிப்பதே தகும்.(16) பூஜிக்கத்தகுந்தவரான உம்மால் பூஜிக்கத்தகுந்தவளான இந்த தபஸ்வினி, உம்மில் ஜீவிதத்தை அடைந்தால் என்னையே நினைத்து புத்திர சோகத்தை அடையாமல் இருப்பாள்.(17) மஹேந்திரனுக்கு ஒப்பானவரே, பெற்ற மகனிடம் அன்பு கொண்ட என் அன்னை, நான் வனத்தில் இருக்கையில் சோகத்தால் மெலிந்து தன் ஜீவிதத்தைக் கைவிட்டு யமனின் வீட்டை அடையாத வகையில் நீர் அவளைப் பார்த்துக் கொள்வீராக" {என்றான் ராமன்}.(18)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 038ல் உள்ள சுலோகங்கள் : 18

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை