Sorrowful city | Ayodhya-Kanda-Sarga-041 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன் நாடு கடத்தப்பட்டதால் அயோத்தியாவாசிகளும், அந்தப்புரவாசிகளும் அழுதது. இராமன் சென்றதும் அழுத இயற்கை...
புருஷவியாகரனான ராமன் கூப்பிய கைகளுடன் வெளியேறியபோது அந்தப்புரத்து ஸ்திரீகளின் மத்தியில் {இவ்வாறான} துயரக்கூக்குரல் எழுந்தது.(1) "நமக்கான பாதையாக எவன் இருந்தானோ, நாதனற்றவர்களும் {அநாதைகளும்}, பலமற்றவர்களும், மகிழ்ச்சியற்றவர்களுமான இந்த ஜனங்களின் பாதுகாவலனாக எவன் இருந்தானோ அந்த நாதன் எங்கே செல்கிறான்?(2) பழித்தாலும் கோபமடையாதவனும், கோபத்தைத் தூண்டும் செயல்களை கைவிடுபவனும், கோபமடைபவர்கள் அனைவரையும் தணிப்பவனும் {சமாதானப்படுத்துபவனும்}, துக்கத்தை சமமாகப் பகிர்ந்து கொள்பவனுமான அவன் எங்கே செல்கிறான்?(3) மஹாதேஜஸ்வியான எவன் தன் மாதாவான கௌசலையை எவ்வாறு நடத்துவானோ, அவ்வாறே நம்மையும் நடத்துவானோ அந்த மஹாத்மா எங்கே செல்கிறான்?(4) இந்த ஜனங்களையும், ஜகத்தையும் பாதுகாப்பவனும், கைகேயியால் துன்புற்ற மன்னரால் {தசரதனால்} வனத்திற்கு விரட்டப்பட்டவனுமான அவன் எங்கே செல்கிறான்?(5) அஹோ, அறிவை இழந்த ராஜா {தசரதன்}, சத்தியவிரதனும், தர்மவானும், அனைவரின் பிரியத்திற்குரியவனுமான ராமனை வனவாசம் செய்ய அனுப்பிவிட்டார்" {என்று சொல்லி கதறினர்}.(6)
இவ்வாறே அந்த மஹிஷிகள் {மன்னனின் மனைவியரான ராணிகள்} அனைவரும் துக்கத்துடன் கண்ணீர் சிந்தி, கன்றுகளை இழந்த பசுக்களைப் போல உரக்க கதறி அழுதனர்.(7) புத்திர சோகத்தில் மிகவும் பீடிக்கப்பட்டிருந்த அந்த மஹீபதி {பூமியின் தலைவனான தசரதன்}, அந்தப்புரத்தில் எழுந்த கோரமான அந்தத் துயரவொலியைக் கேட்டுப் பெருந் துக்கத்தில் ஆழ்ந்தான்.(8)
அங்கே அக்னிஹோத்ரங்கள் செய்யப்படவில்லை. கிருஹஸ்தர்கள் {இல்லறவாசிகள்} சமைக்கவில்லை. பிரஜைகள் எவரும் தங்கள் காரியங்களைச் செய்யவில்லை. சூரியனும் மறைந்தான்.(9) நாகங்கள் {யானைகள் / பாம்புகள், தாங்கள் உண்ட} கவளங்களைக் கக்கின. பசுக்கள் தங்கள் கன்றுகளுக்குப் பால் கொடுக்கவில்லை. முதல்முறையாக ஒரு புத்திரனைப் பெற்ற தாயும் மகிழ்ச்சியடையவில்லை.(10)
திரிசங்கு, லோஹிதாங்கன் {செவ்வாய்}, பிருஹஸ்பதி {குரு / வியாழன்}, புதன் உள்ளிட்ட சர்வ கிரஹங்களும் வக்கிரமடைந்து சந்திரனுடன் நின்றன.(11) நக்ஷத்திரங்கள் மினுங்கவில்லை. கிரஹங்கள் ஒளியை இழந்தன. விசாக நக்ஷத்திரம் பனியால் மறைக்கப்பட்டதாக ஸ்வர்க்கத்தில் காணப்பட்டது.(12) இராமன் வனத்திற்குச் சென்றதும், புயலின் வேகத்தில் எழுந்த பெருங்கடலைப் போல {பெருங்கடலின் அலைகளைப் போல, வானில்} தோன்றிய கரிய மேகங்கள் அந்நகரத்தைக் கலக்கமடையச் செய்தன[1].(13) திசைகள் அனைத்தும் கலங்கி இருளால் சூழப்பட்டவை போலிருந்தன. {வானில்} கிரகங்களோ, நக்ஷத்திரங்களோ வேறேதும் பிரகாசிக்கவில்லை.(14)
[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "த்ரிசங்குவும், அங்காரகனும், பிருஹஸ்பதி புதன் ஆகிய இவ்விரு கிரகங்களும் சந்திரனையும் தீங்கு விளைவிப்பவனாய் செய்து கொண்டு, கிருகங்கள் எல்லாமும், உலகத்துக்குத் துன்பத்தை விளைவிக்கின்றவைகளாய் நின்றுவிட்டன. ஆகாயத்தில் நக்ஷத்திரங்கள் ஒளியற்று இருந்தன. கிரகதேவர்களும் தேஜஸ்ஸின்றி இருந்தனர்கள். இக்ஷ்வாகு குல நக்ஷத்திரங்களாகிய விசாகைகளும், சக்ரவர்த்தியாருக்கு வரும் தீங்கை சூசிப்பிக்கின்ற வண்ணமாய் விண்வீழ்கொள்ளியுடன் கூடியிருக்கின்றவைகளாய் காணப்பட்டன. ஸ்ரீராமர் காட்டிற்கு எழுந்தருக்கையில் அந்த நகரமானது மழை மாரிகளைப் பொழியும் மேகக்கூட்டங்களோடு கூடிய காற்றின் வேகத்தால் பெருங்கடலானது மேலெழுந்து கலங்கிப் பொங்குகிறது எவ்வண்ணமோ அவ்வண்ணமே தாறுமாறாயிருந்தது" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "திரிசங்கு, அங்காரகன், புதன், பிருஹஸ்பதி முதலிய கிரஹங்களும், சிலர் சந்திரனுடன் ருஜுகதியாலும், வக்கிரகதியாலும் சேர்ந்தும், சிலர் ஏழாமிடத்திலும், மூன்று, பத்து, நான்கு, எட்டு, திரிகோணம் என்னுமிவ்விடங்களுள் ஒன்றிலிருந்து சந்திரனைப் பார்த்தும், உலகத்துக்குத் துன்பத்தை விளைவிப்பவர்களாகி நின்றனர்கள். மற்றுமுள்ள கிரஹதேவர்களும், நக்ஷத்திரங்களும், ஒளியற்று மலினமாயினர்கள். இக்ஷுவாகுகுல நக்ஷத்திரங்களாகிய விசாகைகளும், வழிதப்பித் தூமகேதுவுடன் கூடி ராஜனுக்குத் தீங்கினைத் தோற்றுவிப்பனவாக ஆகாயத்தில் காணப்பட்டன. மழைமாரியுடன் பெருங்காற்றெழுந்து பெருங்கடலும் மேலெழுந்து கலங்கிப் பொங்கியது போல அத்திருவயோத்தியும் நடுக்கமுற்றது" என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ் ஆங்கிலப்பதிப்பின் மஹேஸ்வரத் தீர்த்தர் உரையில், "செவ்வாய், குரு, புதன், சனி, சுக்கிரன் ஆகியவை வக்கிர கதியில் சந்திரனைச் சூழ்ந்து அபசகுனமாக நின்றன. விசாகையைத் தாயாகக் கொண்ட சூரியனின் வம்சத்தில் பிறந்த இக்ஷ்வாகு குலத்தின் நட்சத்திரமே இந்த விசாகமாகும். ஒன்பது கோள்களும் நீண்ட கால துயரங்களை முன்னறிவிக்கும் வகையில் ஒளி மங்கியிருந்தன" என்றிருக்கிறது. இவை எவற்றிலுமோ, பிபேக்திப்ராய், மன்மதநாததத்தர் பதிப்புகளிலோ திரிசங்கு என்பது கிரகமா, மனிதனா, மூன்று கிரகங்களின் சங்கமமா என்ற விளக்கம் ஏதும் இல்லை.
திடீரெனத் துயரத்தில் ஆழ்ந்த நகர ஜனங்கள் அனைவரும் ஆகாரத்திலோ {உணவிலோ}, பொழுதுபோக்கிலோ தங்கள் மனங்களைச் செலுத்தவில்லை.(15) அயோத்தியின் சர்வ ஜனங்களும், சோக சந்தாபத்தில் {துக்க வேதனையில்} பீடிக்கப்பட்டவர்களாக அடுத்தடுத்து நீண்ட பெருமூச்சுகளை விட்டபடியே அந்த ஜகத்பதிக்காக {ராமனுக்காக} அழுதனர்.(16) இராஜமார்க்கத்தில் செல்லும் ஜனங்கள், கண்ணீர் நிறைந்த முகங்களுடன் இருந்தனர். எவரும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரியவில்லை. அனைவரும் சோகத்தால் பீடிக்கப்பட்டவர்களாகவே இருந்தனர்.(17)
பவனன் {காற்று} குளுமையாக வீசவில்லை. சந்திரன் சௌம்யமாக {மென்மையாகக்} காணப்படவில்லை. சூரியன் உலகத்திற்கு வெப்பத்தைக் கொடுக்கவில்லை. ஜகம் முழுவதும் கொந்தளித்துக் கொண்டிருந்தது.(18) சுதர்களும் {மகன்களும்}, பர்த்தாக்களும் {கணவர்களும்}, சகோதரர்களும் ஸ்திரீகளை {தாய்மாரையும், மனைவிகளையும், சகோதர சகோதரிகளையும்} தேடவில்லை. அவர்கள் அனைவரும் அனைத்தையும் கைவிட்டு ராமனை மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தனர்.(19)
அப்போது, இராமனின் நண்பர்கள் அனைவரும் மனங்கலங்கி, சோக பாரத்தில் மூழ்கியவாறே சயனத்தை {படுக்கையை} விட்டு எழாமல் இருந்தனர்.(20) புரந்தரனால் {இந்திரனால்} கைவிடப்பட்ட பர்வதங்களுடன் கூடிய மஹீயை {மலைகளுடன் கூடிய பூமியைப்} போல பயத்தாலும், சோகத்தாலும் பீடிக்கப்பட்ட அந்த அயோத்தியும் காலாட்படை, யானைகள், குதிரைகள் ஆகியவற்றின் கர்ஜனையால் நிறைந்து நடுங்கிக் கொண்டிருந்தது.(21)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 041ல் உள்ள சுலோகங்கள் : 21
Previous | | Sanskrit | | English | | Next |