The chariot returned | Ayodhya-Kanda-Sarga-057 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: குகனிடம் விடைபெற்று, அயோத்திக்குத் திரும்பி தசரதனிடம் செய்தியைச் சொன்ன சுமந்திரன்; தசரதனும், கௌசல்யையும் மயங்கி விழுந்தது...
இராமன் தென்கரையில் இறங்கியபோது, குஹன் சுமந்திரனிடம் நெடுநேரம் பேசிவிட்டு, பெருந்துக்கத்துடன் தன் கிருஹத்திற்கு {வீட்டிற்குச்} சென்றான்.(1) {இராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோர்} பரத்வாஜரைச் சந்தித்தது, பிரயாகையில் அவருடன் தங்கியது, கிரிக்கு {சித்திரகூட மலைக்குச்} சென்றது ஆகியவற்றை அங்கே இருந்தவர்கள் குறிப்பிட்டனர்[1].(2)
[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "அவர்களுடைய பரத்வாஜ முனிவரின் தரிசனமும், பிரயாகையில் கூடி வசித்ததும், சித்திரகூட மலைக்கு எழுந்தருளியதும் அங்கு வாஸம் செய்பவர்களால் அறிந்து கொள்ளப்பட்டது" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அந்த ஷ்ருங்கிபேரபுரத்திலுள்ள சாரர்கள், ராமதிகள் பரத்வாஜமுனிவரிடம் போவது, ப்ரயாகக்ஷேத்ரத்தில் அம்முனிவருடன் கூடியிருப்பது முதலாக சித்ரகூடபர்வதத்திற்குப் போகும் வரையிலும் நடந்த வ்ருத்தாந்தங்களெல்லாவற்றையும் ஸுமந்திரனுக்குத் தெரிவித்தனர்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "காட்டிலடிக்கடி ஸஞ்சரிக்கின்றவர்கள் முகமாய்ப் பெருமாள் பரத்துவாஜாச்ரமத்துக் கெழுந்தருளியதையும், அங்கிருந்து பிரயாகக்ஷேத்திரஞ் சேர்ந்ததையும், அங்கிருந்து திருச்சித்திர கூடம் வரையி லெழுந்தருளி யதையுங் கேட்டுணர்ந்து, அல்லும் பகலும் ஸ்ரீராமச்சந்திரரையே நினைத்துக் கொண்டிருந்தனர்" என்றிருக்கிறது.
அதன் பிறகு {செல்வதற்கு} அனுமதிக்கப்பட்ட சுமந்திரன், உத்தம ஹயங்களை {சிறந்த குதிரைகளைத் தேரில்} பூட்டி, மனவேதனையுடன் அயோத்தி நகரை நோக்கிப் பிரயாணம் செய்தான்.(3) அவன் {சுமந்திரன்}, சுகந்தமான வனங்களையும் {நறுமணம் கமழும் காடுகளையும்}, சரிதங்களையும் {ஆறுகளையும்}, சரஸ்களையும் {தடாகங்களையும்}, கிராமங்களையும், நகரங்களையும் கண்டு சீக்கிரமாக {அவற்றைக்} கடந்து சென்றான்.(4) அதன் பிறகு மூன்றாம் நாள் சாயுங்காலத்தில் {மாலை நேரத்தில்} அயோத்தியை அடைந்த அந்த சாரதி {சுமந்திரன்}, அஃது ஆனந்தமற்றிருப்பதைக் கண்டான்.(5)
அது சூனியமாகவும், நிசப்தமாகவும் இருப்பதைக் கண்ட சுமந்திரன், பரம துக்கத்தில் மூழ்கி, பெருஞ்சோகத்தால் பீடிக்கப்பட்டு {பின்வருமாறு} சிந்தித்தான்:(6) "கஜங்களுடனும், அச்வங்களுடனும், ஜனங்களுடனும், ஜனாதிபனுடனும் {யானைகளுடனும், குதிரைகளுடனும், மக்களுடனும், மக்கள் தலைவனுடனும்} இருந்த நகரம், ராமனை நினைத்து உண்டான துக்கத்தால் சோகாக்னியில் எரிந்து விட்டதோ?" {என்று நினைத்தான்}.(7)
இவ்வாறான சிந்தனையில் தொலைந்த அந்த சூதன், வேகமாகச் செல்லும் வாஜிகளில் {குதிரைகளில்} நகரதுவாரத்தை {நகரவாயிலை} அடைந்து, துரிதமாக அதற்குள் பிரவேசித்தான்.(8) சூதனான அந்த சுமந்திரன், அதன்பிறகு, "இராமன் எங்கே?" என்று கேட்டவாறே தன்னை நோக்கி ஓடிவந்த நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நரர்களை {மனிதர்களை} நெருங்கினான்.(9) அவன் அவர்களிடம், "மஹாத்மாவும், தார்மீகனுமான ராகவனால் {ராமனால்} கங்கையில் அனுமதி கொடுக்கப்பட்டபிறகு, அவனிடம் {ராமனிடம்} விடைபெற்றுக் கொண்டு நான் திரும்பி வந்தேன்" என்று மறுமொழி கூறினான்.(10)
அவர்கள் {ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் கங்கையைக்} கடந்து விட்டனர் என்பதை அறிந்த அந்த ஜனங்களின் முகங்கள் கண்ணீரால் நிறைந்தன. அவர்கள், பெருமூச்சுவிட்டபடியே, "அஹோ" என்றும், "சீ, சீ" என்றும், "ஹா, ராமா" என்றும் சொல்லி உரக்க அழுதனர்.(11)
அவன் {சுமந்திரன்}, கூட்டங்கூட்டமாக நின்றிருந்த அவர்களின் {இவ்வாறான} சொற்களையும் கேட்டான், "இங்கே ராகவனைக் காணாத நாம் நிச்சயம் கெட்டொழிந்தோம்.(12) தானம், யாகம், விவாஹம், மஹத்தான சமாஜ {பெருங்கூட்டமாகக் கூடும்} நிகழ்ச்சிகளிலும் இனி ஒருபோதும் தார்மீகனான ராமனை நாம் காணமாட்டோம்.(13) சுகத்தை அளிக்கும் வகையில், இந்த ஜனங்களுக்குப் பிரியமானவற்றைத் தகுந்த முறையில் செய்து, பிதாவை {ஒரு தந்தையைப்} போல இந்நகரத்தை ராமன் பரிபாலித்தான்" {என்று சொல்லி அந்த மக்கள் அழுதனர்}.(14)
கடைகளின் வழியாகச் செல்லும்போது, ராமனை நினைத்து சோகமாக வருந்திக் கொண்டிருக்கும் ஸ்திரீகளின் புலம்பல்களை சாளரங்களின் {ஜன்னல்களின்} வழியாக இவ்வாறே அவன் {சுமந்திரன்} கேட்டுச் சென்றான்.(15) அந்த சுமந்திரன், தன் முகத்தை மறைத்துக் கொண்டு {முக்காடிட்டுக் கொண்டு} ராஜமார்க்கத்தின் மத்தியில் தசரத ராஜன் இருந்த கிருஹத்திற்குச் சென்றான்.(16) அவன் ரதத்தில் இருந்து இறங்கி, ராஜவேஷ்மத்திற்குள் {அரண்மனைக்குள்} சீக்கிரமாகப் பிரவேசித்து, மஹாஜனகுலங்களால் {பெரும் மக்கள் கூட்டத்தால்} நிறைந்திருந்த ஏழு உள்கட்டுகளையும் கடந்து சென்றான்.(17)
அவன் {சுமந்திரன்} வருவதைக் கண்டு, மாளிகைகளிலும், விமானங்களிலும், பிராசாதங்களிலும் {அரண்மனைகளிலும்} இருந்த நாரியைகள் {பெண்கள்}, ராமனைக் காணாமல் சோர்ந்து, "ஹா", "ஹா" என்று அலறினர்.(18) கண்ணீரால் நிறைந்த பிரகாசமான கண்களுடன் கூடிய ஸ்திரீகள் வேதனையை வெளிக்காட்டாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.(19)
ராமனை நினைத்து சோகத்தில் தவித்த தசரதனின் ஸ்திரீகளுக்குரிய அந்தந்த பிராசாதங்களில் {அரண்மனைகளில்} இருந்து வெளிப்படும் மெல்லிய கிசுகிசுப்புகளையும் அவன் {சுமந்திரன்} கேட்டான்.(20) "இராமனுடன் சென்று, இங்கே அவனில்லாமல் திரும்பியிருக்கும் இந்த சூதன் {சுமந்திரன்}, அழுது கொண்டிருக்கும் கௌசல்யையிடம் என்ன சொல்லப் போகிறான்?(21) புத்திரன் வெளியே சென்றுவிட்ட பிறகும் தொடர்ந்து ஜீவித்திருக்கும் கௌசல்யையின் இந்த துர்ஜீவிதம் நிச்சயம் எளிதானதல்ல {வாழ்வது கடினம்}[2] என்றே நான் நினைக்கிறேன்" {என்று மக்கள் பேசுவதை சுமந்திரன் கேட்டான்}.(22) ராஜனின் ஸ்திரீகள் சொன்ன சத்திய ரூபமான அந்த வாக்கியங்களைக் கேட்டவாறு, சோகத்தில் எரிந்து கொண்டிருப்பதைப் போலத் தோன்றிய அந்த கிருஹத்திற்குள் விரைவாக நுழைந்தான்.(23)
[2] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "கௌசல்யை பலவந்தமாகப் பிழைத்திருக்கிறாளென்பது மிகவும் கஷ்டமாயிருப்பது. இப்படி துக்கப் பிழைப்பாகப் பிழைத்திருப்பது மற்றொருவருக்கும் தரமன்றென்று நிஜமாக எனக்குத் தோன்றுகின்றது என்பது மஹேஸ்வரதீர்த்தர் உரை" என்றிருக்கிறது.
எட்டாவது கட்டுக்குள் நுழைந்த அவன் {சுமந்திரன்}, அந்த வெண்கிருஹத்திற்குள் தீனனாகவும், புத்திரசோகத்தில் வருந்தி முகம் வாடியவனாகவும் இருக்கும் {தசரத} ராஜனைக் கண்டான்.(24) சுமந்திரன், அங்கே அமர்ந்திருந்த அந்த நரேந்திரனை நெருங்கி வணங்கி, ராமன் சொல்லி அனுப்பியவற்றை உள்ளபடியே சொன்னான்.(25) அதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த ராஜன், ராமன் இல்லாத துயரத்தில் மூழ்கி மனம் குழம்பியவனாக பூமியில் மூர்ச்சித்து விழுந்தான்.(26) அந்தப் பிருத்வீபதி மூர்ச்சித்ததும் அந்தப்புரவாசிகள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் அந்த நிருபதி தரையில் விழும்போதே தங்கள் கைகளை உயர்த்திக் கதறி அழுதனர்.(27)
சுமித்ரை சகிதம் வந்த கௌசல்யை, விழுந்து கிடக்கும் தன் பதியைத் தூக்கிவிட்டு, இந்த சொற்களையும் சொன்னாள்:(28) "மஹாபாக்யவானே, கடினமான காரியங்களைச் செய்து வனவாசமிருப்பவனிடமிருந்து {ராமனிடமிருந்து} வந்த தூதரிடம் ஏன் ஏதும் பேசாமலிருக்கிறீர்?[3](29) இராகவரே, நயமற்றதைச் செய்துவிட்டு இப்போது வெட்கப்படுகிறீர். எழுவீராக. அஃது உமக்கு நற்செயலாகவே ஆகட்டும். சோகத்தால் சஹாயம் கிட்டாது {துன்புறுவதால் எந்தப் பயனும் இல்லை}.(30) தேவா, யாருக்குப் பயந்து ராமனைக் குறித்து இந்த சாரதியிடம் நீர் விசாரிக்காமலிருக்கிறீரோ, அந்தக் கைகேயி இங்கே இல்லை. அச்சமின்றி பேசுவீராக" {என்றாள் கௌசல்யை}.(31)
[3] இரதம் வந்து உற்றது என்று ஆங்கு யாவரும் இயம்பலோடும்வரதன் வந்துற்றான் என்ன மன்னனும் மயக்கம் தீர்ந்தான்புரைதபு கமல நாட்டம் பொருக்கென விழித்து நோக்கிவிரமமாதவனைக் கண்டான் வீரன் வந்தனனோ என்றான்.- கம்பராமாயணம் 1896ம் பாடல்பொருள்: {காடு சென்ற} தேர் வந்து சேர்ந்தது என்று அங்குள்ள அனைவரும் சொன்னதும், "வரதன் {ராமன்} வந்து விட்டான்" என்று கருதிய {தசரத} மன்னனும் மயக்கம் தீர்ந்தான். குற்றமற்ற தாமரை மலர் போன்ற கண்கள் பொருக்கென விழித்து நோக்கி, விரதம் நோற்ற சிறந்தவனிடம் "வீரன் {ராமன்} வந்தனனோ?" என்று கேட்டான்.
சோகத்தாலும், ஏக்கத்தாலும் கண்ணீர் பெருக மஹாராஜனிடம் இவ்வாறு பேசிய அந்தக் கௌசல்யை வேகமாகத் தரையில் விழுந்தாள்.(32) இவ்வாறு அழுது கொண்டே புவியில் விழும் கௌசலையையும், அவளது பதியையும் கண்டு சர்வ ஸ்திரீகளும் உரக்கக் கதறி அழுதனர்.(33) அந்தப்புரத்தில் எழும் ஒலியைக் கேட்டு முதியவர்களும், இளைஞர்களும், ஸ்திரீகளும் என மனிதர்கள் அனைவரும் சுற்றிலும் அழுது கொண்டிருந்தனர். அப்போது அந்த நகரம் மீண்டும் கலக்கமடைந்தது.(34)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 057ல் உள்ள சுலோகங்கள் : 34
Previous | | Sanskrit | | English | | Next |