Sunday 22 May 2022

வனத்திற்குப் புறப்பட்ட ரதம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 040 (51)

The chariot out to forest | Ayodhya-Kanda-Sarga-040 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோர் வனத்திற்குப் புறப்பட்டது; குடிமக்கள், அரசிகள், அரசன் ஆகியோர் அழுது புலம்பியது...

Rama Sita Lakshmana set to forest

அப்போது, தீனர்களான ராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் {தசரத} ராஜனின் பாதங்களைத் தொட்டு வணங்கி, கைகளைக் கூப்பியவாறே அவனை பிரதக்ஷிணம் செய்தார்கள் {வலம் வந்தார்கள்}.(1) தசரதனிடம் விடைபெற்றுக் கொண்டவனும், தர்மத்தை அறிந்தவனும், சோகத்தில் கலங்கியிருந்தவனுமான ராகவன், சீதை சகிதனாக தன் அன்னையை {கௌசலையை} வணங்கினான்.(2) தம்பியான லக்ஷ்மணன் அவனை உடனே பின்தொடர்ந்து சென்று கௌசலையை வணங்கிவிட்டு, தன் மாதாவான சுமித்ரையின் பாதத்தைப் பற்றினான்.(3) 

அவனது ஹிதத்தை விரும்பிய அவனது மாதா {சுமித்திரை}, மஹாபாஹுவும், தன்னை வணங்குபவனுமான லக்ஷ்மணனின் உச்சி முகர்ந்து, அழுது கொண்டே அந்த சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம் பின்வருமாறு} சொன்னாள்:(4) "அன்புக்குரியவனிடம் {ராமனிடம்} பெரும்பற்று கொண்ட உன்னை வனவாசம் செய்ய அனுமதிக்கிறேன்[1]. புத்திரா, இவ்வாறு செல்லும் உன் அண்ணன் ராமனை ஒருபோதும் புறக்கணிக்காதே.(5) அனகா {பாவமற்றவனே}, வறுமையிலும், செழிப்பிலும் அவனே உனக்கு கதியாக இருக்கிறான். ஜேஷ்டனுக்கு {மூத்தவனுக்கு} வசப்பட்டு நடப்பதே இந்த உலகத்தில் நல்லோரின் தர்மமாக இருக்கிறது.(6) தானம் செய்வது, யஜ்ஞ தீக்ஷை எடுப்பது {வேள்வி தொடங்கும் சடங்கைச் செய்வது}, போர்களில் உடலைத் தியாகம் செய்வது ஆகியவை இந்தக் குலத்திற்கு உசிதமான சநாதன நடைமுறைகளாகும்" {என்றாள் சுமித்திரை}.(7)

[1] வி.வி.சுப்பாராவ் ஆங்கிலப் பதிப்பில், "அன்புக்குரியவர்களிடம் பெரும்பற்றுக் கொண்டிருந்தாலும் நீ வனத்தில் வசிக்கப் பிறந்தவன். புத்திரா, வழியில் செல்லும் உன் அண்ணன் ராமனிடம் ஒருபோதும் கவனம் இல்லாமல் இருந்துவிடாதே" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், "உன் நலம் விரும்பியிடம் நீ அர்ப்பணிப்பு கொண்டவன் என்பதால் நான் உன்னை வனத்தில் வசிக்க அனுமதிக்கிறேன். மகனே, வனத்திற்குப் புறப்படும் உன் அண்ணன் ராமனைக் கவனித்துக் கொள்வதில் தவறிவிடாதே" என்றிருக்கிறது. பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "குழந்தாய் நீ வனவாஸம் செய்வதின் பொருட்டே பிறந்தவன். சகல பிரஜைகளுக்கும் அன்பனும், தமையனும், வெளிப்பிரதேசங்களிலிருக்கின்றவனுமான ஸ்ரீராமனிடத்தில், அபூர்வ பக்தியுடையவனாய் அபராதமென்பதற்கே இடங்கொடாதே" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "அடா என்னருமை நற்புதல்வா, உலகமனைத்துக்கு முறவாகிய ஸ்ரீராமபிரானிடத்தில் பத்திதலைக் கொண்டு கணப்பொழுதும் பிரியாமல் அவர்க்குக் குற்றேவல் செய்வதன் பொருட்டே நீ பிறந்திருக்கின்றமையால், அவருடன் வனவாஸஞ் செய்வதன் பொருட்டு என்னாலும் விடைகொடுக்கப்பட்டவனாகின்றனை" என்றிருக்கிறது.

இராகவனால் விரும்பப்பட்டவனும், {புறப்படத்} தயாராக இருந்தவனுமான லக்ஷ்மணனிடம் இவ்வாறு சொன்ன சுமித்திரை, மீண்டும் அவனிடம்,"புறப்படுவாயாக,(8) ராமனை தசரதராக {தந்தையாக} அறிவாயாக. ஜனகன் மகளை {சீதையை} நானாகவே {தாயாக} அறிவாயாக. ஐயா, அடவியை {காட்டை} அயோத்தியாகவே கருதி சுகமாகச் செல்வாயாக"[2] {என்றாள் சுமித்திரை}.(9)

[2] வி.வி.சுப்பாராவ் பதிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் மஹேஸ்வர தீர்த்தர் உரையில், "அண்ணனுக்குக் கீழ்ப்படிந்திருப்பதே தர்மமாகும். இராமனை உன் தந்தையாகவும், சீதையை உன் அன்னையாகவும், அயோத்தி நகரத்தைக் காடாகவும் அறிவாயாக. அல்லது, ராமனை விஷ்ணுவாகவும், சீதையை லக்ஷ்மியாகவும், காட்டை விஷ்ணுவின் வசிப்பிடமாகவும் அறிவாயாக. அல்லது, தசரதர் இறந்துவிட்டார் என்பதை அறிந்து, கணவரின் இழப்பால் நான் என் தந்தையின் வசிப்பிடத்தில் வாழ்கிறேன் எனவும், ராமன் இல்லாத அயோத்தியைக் காடாகவும் புரிந்து கொள்வாயாக. அல்லது ராமனையும், தசரதனையும் பின்பற்றப்பட வேண்டிய இருவகை குருக்களாகவும், அவர்களில் ஒருவரை உதவுபவராகவும், மற்றொருவரை உதவ இயலாதவராகவும் அறிவாயாக. அயோத்தியைக் காடெனப் புரிந்து கொள்வாயாக. உலக இன்பங்களுக்காக ராஜ்ஜியத்தை அனுபவிப்பது, அல்லது பேரின்பத்திற்காக அண்ணனுக்குக் கீழ்படிவது ஆகியவற்றில் எது சிறந்தது?" என்றிருக்கிறது.

அப்போது பணிவுள்ளவனும், விநயமறிந்தவனுமான சுமந்திரன், கைகளைக் கூப்பியவாறு வாசவனிடம் {இந்திரனிடம்} பேசும் {இந்திரனின் தேரோட்டியான} மாதலியைப் போல அந்த காகுத்ஸ்தனிடம் {ராமனிடம்} இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(10) "பெரும் புகழ்பெற்ற ராஜபுத்திரா, ரதத்தில் ஏறி பத்ரமாக இருப்பாயாக {உனக்கு மங்கலம் உண்டாகட்டும்}. எவ்விடம் செல்லச் சொல்கிறாயோ அங்கே உன்னை சீக்கிரமாக அழைத்துச் செல்வேன்.(11) சதுர்தச வருஷங்கள் {பதினான்கு ஆண்டுகள்} நீ வனத்தில் வசிக்கப் போகிறாய். {கைகேயி} தேவியால் உன்னிடம் சொல்லப்பட்ட அந்த வருஷங்கள் இதோ தொடங்கிவிட்டதாகக் கருதுவாயாக" {என்றான் சுமந்திரன்}.(12)

அழகிய அங்கங்களைக் கொண்ட சீதை, தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு, சூரியனைப் போல் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த ரதத்தில் மகிழ்ச்சியான மனத்துடன் ஏறினாள்.(13) அதன்பிறகு, சகோதரர்களான ராமலக்ஷ்மணர்களும், பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், நெருப்பைப் போல ஒளிர்வதுமான அதில் துரிதமாக ஏறினர்.(14) சீதையின் மாமன் {தசரதன்}, பர்த்தாவைப் பின்தொடர்ந்து செல்லும் அவள், வனவாசம் செய்யப் போகும் காலத்தைக் கணக்கில் கொண்டு வஸ்திரங்களையும், ஆபரணங்களையும் அவளுக்கு தத்தம் செய்தான்.(15) அதே போல அந்த சகோதரர்களுக்கும், பல்வேறு ஆயுதங்களும், கவசங்களும், கேடயங்களும், கைகளுக்கான தோலுறைகளும் ரதத்தின் மத்தியில் வைக்கப்பட்டிருந்தன.(16) சீதை உள்ளிட்ட மூவரும் ஏறிவிட்டதைக் கண்ட சுமந்திரன், வாயுவேகத்திற்கு இணையாகச் செல்லக்கூடியவையும், பெரிதும் போற்றப்படுபவையுமான அஷ்வங்களை {குதிரைகளை} விரைவாகச் செலுத்தினான்.(17)

இராகவன், மஹா அரண்யத்திற்குப் புறப்பட்டுச் சென்ற பிறகு அந்த நகரம் பலமிழந்திருந்த ஜனங்களால் நீண்ட நேர மயக்கத்தில் ஆழ்ந்தது.(18) புலன்கலங்கிய மதங்கொண்ட யானைகளின் பிளிறல்களுடனும், {கட்டுவாரின்றி திரியும்} குதிரைகளின் ஆபரண கிங்கிணி ஒலிகளுடனும் அந்த நகரம் பெருஞ்சலசலப்பால் நிறைந்தது.(19) பெருந்துன்பத்தில் பீடிக்கப்பட்டிருந்த அந்நகரத்தின் பாலர்களும் {சிறுவர்களும்}, விருத்தர்களும் {முதியவர்களும்}, வெப்பத்தால் பீடிக்கப்பட்டவன் நீரை நோக்கி ஓடுவதைப் போல ராமனை நோக்கி ஓடினார்கள்.(20) 

அவனையே நோக்கியவையும், கண்கள் நிறைந்த கண்ணீருடன் கூடியவையுமான முகங்களைக் கொண்ட அவர்கள் அனைவரும், {தேருக்குப்} பின்னாலும், பக்கங்களிலும் தொங்கிக் கொண்டே அவனிடம் {சுமந்திரனிடம்} இதை உரக்கச் சொன்னார்கள்:(21) "சூதரே, குதிரைகளின் கடிவாளங்களைப் பிடித்து மெதுமெதுவாகச் செல்வீராக. நாங்கள் காண்பதற்கரிய ராமனின் முகத்தைப் பார்த்துக் கொள்கிறோம்.(22) தேவர்களின் மகனுக்கு ஒப்பான ராமன் வனத்திற்குச் சென்றாலும் அவனுடைய மாதாவின் ஹிருதயம் பிளக்காமல் இருப்பதால் நிச்சயம் அஃது எஃகினாலானதாக இருக்க வேண்டும். இதில் ஐயமேதுமில்லை.(23) வைதேஹி {விதேஹ இளவரசியான சீதை}, அர்க்கனின் {சூரியனின்} பிரபையை விட்டகலாத மேருவைப் போல கணவனை விடாமல் தர்மத்தில் அர்ப்பணிப்புடன் நிழலைப் போலப் பின்தொடர்ந்து சென்று தன் கடமையைச் செய்கிறாள்.(24) இலக்ஷ்மணா, எப்போதும் பிரியத்துடன் பேசுபவனும், தேவனுக்கு இணையானவனுமான உன் அண்ணனை எப்போதும் நீ கவனித்துக் கொள்கிறாய். அஹோ, நீயே சித்தார்த்தன் {நோக்கம் நிறைவேறியவன்}.(25) இவனைப் பின்தொடர்ந்து செல்லும் உனக்கு இதுவே மகத்தான சித்தி {பெருஞ்சாதனை}, இதுவே  மகத்தான நற்பேறு, இதுவே ஸ்வர்க்கத்திற்கான மார்க்கமுமாகும்" {என்றனர் மக்கள்}.(26) வழியும் கண்ணீரைக் கட்டுப்படுத்த இயலாத அந்த நரர்கள், இவ்வாறு சொன்னவாறே இக்ஷ்வாகு நந்தனனும் {இக்ஷ்வாகுக்களை மகிழ்ச்சியடையச் செய்பவனும்}, பிரியத்திற்குரியவனுமான அவனை {ராமனைப்} பின்தொடர்ந்து சென்றனர்.(27)

அப்போது தீனமான மனம் கொண்ட ராஜா, தன் பிரியத்திற்குரிய புத்திரனை காணப் போவதாகச் சொல்லிக் கொண்டு, தீனர்களாக இருந்த ஸ்திரீகளால் சூழப்பட்டவனாகத் தன் கிருஹத்திலிருந்து வெளியே வந்தான்.(28) மஹா குஞ்சரம் {பெரும் யானை} கட்டப்பட்டதும் பிளிறும் கரேணுக்களின் {பெண் யானைகளின்} எதிரொலியைப் போல அவன் எதிரில் ஸ்திரீகள் அழுவதன் பேரொலி கேட்டது.(29) அந்த நேரத்தில் ஸ்ரீமான் காகுத்ஸ்த {காகுத்ஸ்தனின் வழித்தோன்றலான தசரத} ராஜாவாக நன்கு அறியப்பட்ட அந்த பிதா, கிரஹணத்தால் மறைக்கப்பட்ட பூர்ணசசியை {முழு நிலவைப்} போலப் பொலிவிழந்தான்.(30)

அப்போது சிந்தனைக்கப்பாற்பட்ட வடிவைக் கொண்ட ஸ்ரீமான் தசரதாத்மஜன் {தசரதனின் மகன் ராமன்} அந்த சூதனிடம் {சுமந்திரனிடம்}, "துரிதமாக செலுத்துவீராக" என்று வேண்டிக் கேட்டுக் கொண்டான்.(31) இராமன் அந்த சூதனிடம், "செல்வீராக" என்று சொல்லவும், ஜனங்கள் அவனிடம், "நிறுத்துவீராக" என்று சொல்லவும், இரண்டையும் செய்ய முடியாமல் அந்த சூதன் நடைபாதையில் {குதிரைகளைத்} தூண்டினான்.(32) மஹாபாஹுவான ராமன் செல்லும்போது சாலையில் எழுந்த பெரும்புழுதியானது, அந்நகரத்து ஜனங்களின் கண்ணீர் படிந்து தணிந்தது.(33) இராகவன் பிரயாணப்பட்டபோது அந்த நகரம் கண்ணீரால் நனைந்து, "ஆ, ஆ" என்ற கதறல்களால் நிறைந்து, பெரும் வருத்தத்தில் மயங்கிக் கிடந்தது.(34) மீன்களின் கொந்தளிப்பில் தாமரைகளில் இருந்து சொட்டும் நீரைப் போல, ஆயாசத்தில் {வேதனையில்} பிறந்த கண்ணீர், ஸ்திரீகளின் கண்களில் இருந்து பாய்ந்தது.(35)

ஏக சிந்தையுடன் இருக்கும் அந்நகரைக் கண்ட நிருபதியான ஸ்ரீமான் {தசரதன்}, வேரறுந்த மரத்தைப் போல துக்கத்துடன் கீழே விழுந்தான்.(36) பெருந்துக்கத்தில் ராஜன் பலவீனமடைவதைக் கண்ட நரர்களின் {ஐயோவென்ற} அழுகுரல் ராமனின் பின்னால் இருந்து எழுந்தது.(37) சில ஜனங்கள், "ஆ, ராமா" என்று கதறியும், வேறு சிலர், "ராமனின் மாதாவே" என்று அழுதும் மொத்த அந்தப்புரத்தையும் அலறச் செய்தனர்.(38) திரும்பிப் பார்த்த ராமன், விசனத்துடனும், குழம்பிய மனத்துடனுமிருக்கும் ராஜாவும், தன் மாதாவும் பாதையில் பின்தொடர்ந்து வருவதைக் கண்டான்.(39) வலையில் அகப்பட்ட மான்குட்டியால் தன் தாயைக் காண முடியாததைப் போல, தர்மபாசத்தில் கட்டுண்ட அவனால் அவர்களை நேரடியாகப் பார்க்க முடியவில்லை.(40) யானங்களில் {பல்லக்குகளில்} வரத் தகுந்தவர்களும், சுகத்திற்குப் பழக்கப்பட்டவர்களும், துக்கத்திற்குத் தகாதவர்களுமான அவர்கள் பாத நடையாக வருவதைக் கண்டு, சாரதியிடம், "சீக்கிரமாக செலுத்துவீராக" என்று கேட்டுக் கொண்டான்.(41) அந்த புருஷவியாகரன் {மனிதர்களில் புலியான ராமன்}, தன் பிதாவையும், மாதாவையும் கண்டு சகித்துக் கொள்ள இயலாமல், அங்குசத்தால் குத்தப்பட்ட துவிபத்தை {யானையைப்} போல துக்கமடைந்தான்.(42)

ram-leaving

கன்றை விரும்பும் பசுவானது, {கொட்டகையில்} கட்டப்பட்டிருக்கும் கன்றுக்காக வீட்டுக்கு வருவதைப் போலவே வாத்ஸல்யமுடைய {புத்திர பாசம் கொண்ட} இராமனின் மாதா {கௌசல்யை}  தன் பிள்ளையை நோக்கி ஓடினாள்.(43) இராமலக்ஷ்மண சீதைக்காக, கண்களில் கண்ணீர் வழிய அழுது கொண்டே, "இராமா, ராமா" என்றும், "ஆ, சீதா" என்றும், "இலக்ஷ்மணா" என்றும் கதறியவாறே ஆடுவதைப் போல ரதத்தை நோக்கி இவ்வாறு ஓடிவரும் தன் மாதா கௌசலையை மீண்டும் மீண்டும் அவன் கண்டான்.(44,45) தசரதன், "நிற்பீராக" என்று கதற, ராகவன், "செல்வீராக, செல்வீராக" என்று சொல்ல சுமந்திரனின் மனமானது, இரண்டு சக்கரங்களுக்கிடையில் சிக்கிக் கொண்டதைப் போல் தோன்றியது.(46) 

அப்போது ராமன் அவனிடம் {சுமந்திரனிடம்} இதைச் சொன்னான், "நீண்ட கால துக்கம் பாபிஷ்டம் {அவர்கள் துன்புறுவதை நீண்ட நேரம் பார்ப்பது தவறு}. பின்னர் கடிந்து கேட்கப்பட்டாலும், {இந்த அழைப்பு} உமக்குக் கேட்கவில்லை என்று ராஜரிடம் சொல்வீராக" {என்றான் ராமன்}[3].(47)

[3] வி.வி.சுப்பாராவ் பதிப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் அம்ருத கடகரின் உரையில், "துன்பத்தை நீட்டிப்பது ஆபத்தானது என்பதால் ராமன் தீங்கில்லாத இந்த பொய்யைச் சொல்லத் தூண்டுகிறான்" என்றிருக்கிறது.

அந்த சாரதி {சுமந்திரன்}, ஹயங்கள் {குதிரைகள்} சென்று கொண்டிருந்தாலும், ராமனின் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து, அந்த ஜனங்களிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, அவற்றை மேலும் விரைவாகச் செலுத்தினான்.(48) இராஜனின் ஜனங்கள், {மனத்தால்} ராமனை பிரதக்ஷிணஞ்செய்து திரும்பி வந்தனர். அந்த மனிதர்கள் தங்கள் மனங்களுடன் திரும்பி வந்தார்களில்லை. அவர்களின் கண்ணீர்ப்பெருக்கும் குறையவில்லை.(49)

அமாத்யர்கள் {அமைச்சர்கள்} மஹாராஜனிடம் இதைச் சொன்னார்கள், "எவன் திரும்பி வர வேண்டுமென விரும்புகிறோமோ அவனை நெடுந்தூரம் பின்தொடரக் கூடாது" {என்றனர்}.(50) சர்வ குணங்களும் பொருந்திய இந்த சொற்களைக் கேட்ட ராஜா, பரிதாபத்திற்குரியவனாக நின்று, அங்கம் முழுவதும் வியர்த்து, மனம் சோர்வடைந்த தோற்றத்துடன் தன் பாரியைகளுடன் {மனைவிகளுடன்} சேர்ந்து சுதனையே {மகனையே} பார்த்துக் கொண்டிருந்தான்.(51)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 040ல் உள்ள சுலோகங்கள் : 51

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை