State of suffering caused by fate | Ayodhya-Kanda-Sarga-058 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ராமனும், லக்ஷ்மணனும் சொல்லி அனுப்பிய செய்திகளைச் சொன்ன சுமந்திரன்...
அதன்பிறகு, {தசரத} ராஜன் மோஹத்திலிருந்து மீண்டு, மூச்சை மீண்டும் அடைந்ததும், அந்த சூதனை {சுமந்திரனை} அழைத்து ராம விருத்தாந்த காரணத்தை {ராமன் குறித்த செய்திகளைக்} கேட்டான்.(1) அப்போது தன் கைகளைக் கூப்பியபடியே அந்த சூதன், ராமனையே எண்ணி வருந்தி, துக்கத்தாலும், சோகத்தாலும் நிறைந்தவனும், புதிதாய் பிடிபட்ட துவிபத்தை {யானையைப்} போல பெருமூச்சுவிட்டு வேதனையடைந்தவனும், பிணி கொண்ட குஞ்சரத்தை {யானையைப்} போலச் சிந்தித்துக் கொண்டிருந்த விருத்தனுமான மஹாராஜனை {முதியவனுமான தசரதனை} அணுகினான்.(2,3)
பரம வேதனையில் இருந்த அந்த ராஜா {தசரதன்}, புழுதியால் அங்கம் மறைந்தவனும், கண்ணீர் நிறைந்த முகத்துடன் கூடியவனும், தன்னை நெருங்கி வரும் தீனனுமான அந்த சூதனிடம் {பின்வருமாறு} பேசினான்:(4) "சூதரே, விருக்ஷத்தின் வேரடியை அண்டி வாழும் அந்த தர்மாத்மா {ராமன்} எங்கே வசித்திருக்கிறான்? சுகங்களை அனுபவித்தவனான அந்த ராமன் என்ன உண்கிறான்?(5) சுமந்திரரே, பூமிபாலனின் ஆத்மஜனாக {மகனாக} உசிதமான சயனங்களுக்குப் பழகியவன், துக்கத்துடன் ஓர் அநாதையைப் போல எவ்வாறு பூமியில் {வெறுந்தரையில்} கிடக்கிறான்?(6) எவன் பயணித்தால் பாதாதி ரத குஞ்சரங்களும் {காலாட்படையும், தேர்களும், யானைகளும்} பின்தொடருமோ அந்த ராமன், ஜனங்களற்ற வனத்தில் தஞ்சம்புகுந்து எப்படி வாழ்கிறான்?(7)
காட்டு மிருகங்கள் திரிவதும், கிருஷ்ணசர்ப்பங்கள் {கரும்பாம்புகள்} வசிப்பதுமான வனத்தை குமாரர்களும், வைதேஹியும் எவ்வாறு அடைந்தனர்?(8) சுமந்திரரே, ராஜபுத்திரர்கள் இருவரும், பரிதபிப்பவளும், சுகுமாரியுமான சீதையும் ரதத்தில் இருந்து இறங்கி எவ்வாறு பாதநடையாகச் சென்றனர்?(9) சூதரே, மந்தர மலையில் நுழையும் அஸ்வினிகளைப் போல வனத்தின் எல்லைக்குள் பிரவேசிக்கும் என் ஆத்மஜர்களை நீர் கண்டிருப்பதால் சித்தார்த்தரானீர் {பலன்கள் அனைத்தையும் அடைந்தவரானீர்}.(10) சுமந்திரரே, வனத்தை அடைந்ததும் ராமன் சொன்ன சொற்களென்ன? இலக்ஷ்மணன் சொன்னவை என்ன? மைதிலி சொன்னவை என்ன?(11) சூதரே, ராமன் எங்கெங்கே அமர்ந்தான், உறங்கினான், உண்டான் என்பதைச் சொல்வீராக. அதன் மூலம், சாதுக்களின் மத்தியில் வாழ்ந்த யயாதிப் போல[1] நானும் ஜீவித்திருப்பேன்" {என்றான் தசரதன்}.(12)
[1] கே.எம்.கே. மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "மஹாபாரதத்தின் ஆதிபர்வத்தில், மன்னன் யயாதி, சொர்க்கத்தில் இருந்து விழும் நிலை தனக்கு ஏற்பட்ட போது "சாதுக்களின் மத்தியில் நான் விழ வேண்டும்" என்று இந்திரனை வேண்டினான். அதன்படியே அஷ்டகன், பிரதர்த்தனன், வசுமான், சிபி ஆகிய நான்கு தவசிகளும் பூமியில் தவம்பயின்றுவந்த இடத்தில் விழுந்து அவர்களுடன் உரையாடினான்" என்றிருக்கிறது. ஆதிபர்வம் பகுதிகள் 87 முதல் 93 வரை சொர்க்கத்தில் இருந்து யயாதி விழுந்த கதை இருக்கிறது. மஹாபாரதத்தின் வன, உத்யோக, அநுசாஸன பர்வங்களிலும் மீண்டும் சொல்லப்படுகிறது.
நரேந்திரனால் {தசரதனால்} இவ்வாறு கேட்கப்பட்டதும், அந்த சூதன் {சுமந்திரன்}, கண்ணீர் அடைக்கும் நடுங்கிய குரலில் அந்த ராஜனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(13) "மஹாராஜாவே, தர்மத்தையே பின்பற்றுபவனான ராகவன் {ராமன்}, தன் கைகளைக் கூப்பி, {உமக்குத்} தலை வணங்கி {உம்மிடம் சொல்லுமாறு} என்னிடம் {பின்வருமாறு} சொன்னான்:(14) "சூதரே, ஆத்மாவை அறிந்த மஹாத்மாவும், வணங்கப்படத் தகுந்தவருமான என் தாதையின் பாதங்களை என் சொற்களின் மூலம் தலையால் வணங்குகிறேன்.(15) சூதரே, எங்கள் ஆரோக்கியத்தையும், உரிய வணக்கத்தையும் வேற்றுமையின்றி மொத்த அந்தப்புரத்திற்கும் என் சொற்களில் நீர் சொல்வீராக.(16)
என் மாதாவிடம் {கௌசல்யையிடம்} என் நலத்தையும், என் வணக்கத்தையும், ஊக்கத்தையும் என் சொற்களில் சொல்வீராக.(17) "தேவி, தர்மத்தில் நிலைத்திருந்து, உரிய காலங்களில் அக்னி யாகங்களைச் செய்து, தேவரைப் போன்ற தேவரின் {தசரதரின்} பாதங்களை பரிபாலிப்பாயாக {ஆராதிப்பாயாக}.(18) அம்ப, மற்ற மாதாக்களிடம் பெருமையையும், மதிப்பையும் விட்டுவிட்டுப் பழகுவாயாக. ஆரியையான கைகேயியை, ராஜருக்கு அனுசரணையாக நடந்து கொள்ளச் செய்வாயாக.(19) குமாரனான {இளையவனான} பரதனிடம், ராஜனிடம் நடந்து கொள்வது போல மதிப்புடன் நடந்து கொள்வாயாக. ராஜர்கள் அர்த்தத்தில் ஜேஷ்டர்கள் {செல்வத்தில் பெரியவர்கள்}. ராஜதர்மத்தை நினைவில் கொள்வாயாக" {என்று என் அன்னை கௌசல்யையிடம் சொல்வீராக}.(20)
பரதனிடம் குசலம் {அவனது நலத்தை} விசாரித்துவிட்டு, "மாதாக்கள் அனைவரிடமும் நியாயப்படியான நன்னடத்தையைப் பின்பற்றுவாயாக" என்று என் சொற்களில் சொல்வீராக.(21) மேலும், இக்ஷ்வாகு குல நந்தனனான அந்த மஹாபாஹுவிடம் {வலிமைமிக்க கரங்களைக் கொண்ட பரதனிடம்}, "யௌவராஜ்ஜியத்தில் நிறுவப்பட்ட நீ, ராஜ்ஜியத்தில் நிறுவப்பட்டிருக்கும் நம் பிதாவுக்குக் கீழ்ப்படிந்து ஆட்சி செய்வாயாக.(22) ராஜர் வயது முதிர்ந்தவர். எனவே நீ அவரைத் தடுக்காதே. அவரது ஆணைகளை ஏற்றுக் கொண்டு ராஜகுமாரனாக {இளவரசனாக} நீ வாழ்வாயாக" {என்று பரதனிடம் சொல்வீராக என [சுமந்திரனான] என்னிடம் சொன்னான் ராமன்}.(23)
மேலும் அவன் {ராமன்}, அதிக கண்ணீர் சிந்தியபடியே என்னிடம் {பின்வருமாறும்} சொன்னான்: "புத்திரனுக்காக ஏங்கும் என் மாதாவை உன் மாதாவாகவே நீ பார்த்துக் கொள்வாயாக" {என்றும் பரதனிடம் சொல்லச் சொன்னான்}.(24) மஹாராஜாவே, தாமரை போன்ற சிவந்த கண்களைக் கொண்டவனும், பெரும் புகழ் படைத்தவனுமான ராமன், இவ்வாறு என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது, அதிகமாகக் கண்ணீர் வடித்தான்.(25)
பெரும் கோபமடைந்த லக்ஷ்மணனோ, பெருமூச்சுவிட்டபடியே {இந்த} வாக்கியத்தைச் சொன்னான்: "இந்த ராஜபுத்திரர் என்ன அபராதத்துக்காக {ராமர் என்ன குற்றத்திற்காக} நாடு கடத்தப்பட்டார்?(26) ராஜரும், கைகேயியின் லகு சாசனத்தை ஆசரித்து ஓர் அகாரியத்தை காரியமாகச் செய்ததால் {தசரதரும், கைகேயியின் இழிந்த ஆணையைப் பின்பற்றி செய்யக்கூடாத காரியத்தைச் செய்ததால்} நாங்கள் பீடிக்கப்பட்டிருக்கிறோம்.(27) லோப காரணத்தாலோ {ராஜ்ஜியத்தின் மீது கொண்ட கைகேயியின் பேராசையினாலோ}, வரதான நிமித்தமாகவோ {தரசரதர் கொடுத்த வரத்தினாலோ} ராமர் நாடு கடத்தப்பட்டிருந்தாலும், முற்றிலும் தவறாகவே அது செய்யப்பட்டிருக்கிறது.(28) காமத்தினாலோ {அசையினாலோ}, ஈச்வர செயலாலோ இது செய்யப்பட்டிருந்தாலும், ராமரைக் கைவிடுவதற்கான எந்தக் காரணத்தையும் நான் காணவில்லை.(29) ஆலோசிக்காமலும், புத்தி லாகவத்தாலும் {அவசர புத்தியாலும்}, ராகவரை நாடு கடத்தியது ஜனங்களிடம் சீற்றத்தையே விளைவிக்கும்.(30) நான் மஹாராஜரைப் பிதாவாகக் காணவில்லை {தசரதரை நான் தந்தையாகக் கருதவில்லை}. ராகவரே எனக்கு அண்ணனும், தலைவரும், பந்துவும் {உறவினரும்}, பிதாவும் ஆவார் {என்று சொன்னான் லக்ஷ்மணன்}.(31)
{பிறகு தசரதரான உமக்குச் சொல்லும் வகையில்}, சர்வலோகஹிதத்தில் விருப்பமுள்ளவரும், சர்வலோகபிரியருமான அவரை {அனைத்துலக நன்மையில் விருப்பமுள்ளவரும், மக்கள் அனைவராலும் விரும்பப்படுகிறவருமான ராமரைக்} கைவிட்ட இந்தக் கர்மத்தால் சர்வலோகமும் உம்மை எவ்வாறு அனுசரிக்கும்?(32) பிரஜைகள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும் தார்மிகரான ராமரை நாடுகடத்தியும், இந்த சர்வ லோகத்தையும் எதிர்த்தும் எவ்வாறு நீர் ராஜராக இருப்பீர்?" {என்றான் லக்ஷம்ணன்}.(33)
மஹாராஜாவே, பரிதாபத்திற்குரிய ஜானகி, பூதத்தால் பீடிக்கப்பட்டவளைப் போல பெருமூச்சுவிட்டபடியே, தன்னிருப்பை மறந்து, அசைவற்றவளாக நின்று கொண்டிருந்தாள்.(34) புகழ்பெற்றவளும், பூர்வத்தில் தீயூழேதும் காணாதவளுமான அந்த ராஜபுத்திரி {சீதை}, துக்கத்துடன் அழுது கொண்டே இருந்ததால் என்னிடம் எதையும் சொல்ல முடியாதவளாக இருந்தாள்[2].(35)
[2] ஆள்வினை ஆணையின் திறம்பல் அன்று எனாதாள்முதல் வணங்கிய தனித்திண் தேர்வலான்ஊழ்வினை வரும் துயர் நிலை என்று உன்னுவான்வாழ்வினை நோக்கியை வணங்கி நோக்கினான்- கம்பராமாயணம் 1877ம் பாடல்பொருள்: "பணியாளன் செய்ய வேண்டிய செயல் தலைவனின் கட்டளைக்கு மாறுபட்டு நடத்தலன்று" என்று கருதி {இராமனின்} பாதங்களில் வணங்கி எழுந்தவனும், வலிய தேரைச் செலுத்த வல்லவனுமான சுமந்திரன், "ஊழ்வினையால் வருகின்ற துன்பத்தின் நிலை இது" என்று கருதி உலக இன்ப வாழ்வுக்குக் காரணமானவளை {சீதையை} வணங்கி நோக்கினான்.
நான் புறப்படுவதைக் கண்டதும், வாடிய முகத்துடன் தன் பர்த்தாவை நிமிர்ந்து பார்த்து, திடீரெனக் கண்ணீர் வடித்தாள்.(36) இலக்ஷ்மணனுடைய கைகளின் பாதுகாப்பில் இருந்த ராமன் அவ்வாறே கண்ணீர் நிறைந்த முகத்துடன் கைகளைக் கூப்பினான். அதேபோல தபஸ்வினியான சீதை, ராஜரதத்தையும், என்னையும் கண்டு அழுதுகொண்டே இருந்தாள்" {என்றான் சுமந்திரன்}.(37)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 058ல் உள்ள சுலோகங்கள் : 37
Previous | | Sanskrit | | English | | Next |