Friday 27 May 2022

தசரதன் புலம்பல் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 042 (34)

The lament of Dasharatha | Ayodhya-Kanda-Sarga-042 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: துக்கத்தால் பீடிக்கப்பட்டு உணர்விழுந்து தரையில் விழுந்த தசரதன். கைகேயியைப் பழித்துவிட்டு கௌசல்யையின் மாளிகையை அடைந்தது...

Kaikeyi Sumitra Dasharatha and Kaushalya

அவன் {ராமன்} சென்ற புழுதி தென்பட்ட வரை, அந்த இக்ஷ்வாகுக்களில் சிறந்தவன் {தசரதன்} தன் கண்களை விலக்காமல் {பார்த்துக் கொண்டே} இருந்தான்.(1) அந்த ராஜா {தசரதன்},  தார்மிகமிக்கவனான தன் பிரிய புத்திரனைப் பார்த்துக் கொண்டிருந்த வரை, அவன் தன் புத்திரனைக் காணும் வகையில் தரணியில் புழுதி  எழுந்து கொண்டே இருந்தது.(2) இராமன் சென்ற புழுதி தென்படாதபோது, அந்த பூமிபதி {தசரதன்} விசனத்தால் பீடிக்கப்பட்டவனாக தரணியில் விழுந்தான்.(3) அங்கனையான {அவனது மனைவியான} கௌசல்யை, அவனது வலப்பக்கம் சென்றாள், பரதனின் அன்புக்குரியவளான கைகேயி அவனது இடப்பக்கம் சென்றாள் {இருவரும் சேர்ந்து விழுந்து கிடந்த தசரதனைக் தூக்கினர்}.(4)

நேர்மை, தர்மம், விநயம் {அடக்கம்} ஆகியவற்றைக் கொண்ட ராஜா {தசரதன்}, அந்தக் கைகேயியைக் கண்டதும் இந்திரியங்கள் கலங்கியவனாக {இதைச்} சொன்னான்:(5) "கைகேயி, துஷ்டசாரிணியே {தீய வழியில் நடப்பவளே}, என் அங்கங்களைத் தொடாதே. உன்னைக் காண நான் விரும்பவில்லை. நீ என் பாரியையுமில்லை {மனைவியுமில்லை}, பந்துவுமில்லை {உறவுக்காரியுமில்லை}.(6) உன்னை அனுசரிப்பவர்களுக்கு {சார்ந்தவர்களுக்கு} என்னிடம் ஏதுமில்லை. எனக்கும் அவர்களால் ஏதுமில்லை. பேராசையால் தர்மத்தைக் கைவிட்ட உன்னை நான் கைவிடுகிறேன்.(7) உன் கைகளைப் பற்றி அக்னியை வலம் வந்ததன் மூலம் உண்டான அனைத்தையும் இம்மையிலும், மறுமையிலும் நான் கைவிடுகிறேன்.(8) ஒருவேளை பரதன் அழிவில்லாத இந்த ராஜ்ஜியத்தை அடைந்ததும் மகிழ்ச்சியடைந்தால், பித்ரார்த்தமாக {ஈமச்சடங்குகளின் மூலம்} அவனால் தத்தம் செய்யப்படும் எதுவும் என்னை அடையாமல் போகட்டும்" {என்றான் தசரதன்}.(9)

அப்போது சோகத்தில் மூழ்கியிருந்த கௌசல்யாதேவி, புழுதியில் மறைந்திருந்த அந்த நராதிபனை {மனிதர்களின் தலைவனான தசரதனைத்} தூக்கிவிட்டுத் திரும்பினாள்.(10) அந்த தர்மாத்மா, தபஸ்வியின் உடையில் இருந்த தன் புத்திரனை நினைத்து, தெரிந்தே பிராமண ஹதம் செய்தவனை {பிராமணனைக் கொன்றவனைப்} போன்றும், கையால் அக்னியைத் தீண்டியவனைப் போன்றும் வருந்தினான்.(11) இரதத்தின் தடங்களை நோக்கி மீண்டும் மீண்டும் திரும்பிய மன்னனின் முகம், ராகுவால் விழுங்கப்பட்ட அம்சுமானை {சூரியனைப்} போல துக்கத்தால் ஒளியிழந்தது.(12)

தனக்குப் பிரியமான புத்திரனை நினைத்தவன், துக்கத்தால் பீடிக்கப்பட்டுக் கதறி அழுதான். அதன்பிறகு தன் புத்திரன் நகர எல்லையை எட்டினான் என்பதை உணர்ந்ததும் {இவ்வாறு} சொன்னான்:(13) "என் மகனைச் சுமந்து சென்ற முக்கிய குதிரைகளின் காலடித்தடங்கள் பாதையில் தென்படுகின்றனவேயன்றி அந்த மஹாத்மா தென்படவில்லையே.(14) சந்தனம் பூசிக் கொண்டு, மிகச் சிறந்த ஸ்திரீகளால் சாமரம் வீசப்பட்டு, சுகமாக மெத்தைகளில் உறங்கிய என் உத்தம சுதன் {மகன்} ராமன், இனிமேல் எங்கோவொரு விருக்ஷத்தின் {மரத்தின்} வேரடியில் கிடப்பான், அல்லது மரக்கட்டையிலோ, கல்லிலோ சயனிப்பான் {படுப்பான்}.(15,16) அந்தப் பரிதாபத்திற்குரியவன், மலையருவிகளின் அருகில் {எழும்} கரேணுக்களின் ரிஷபத்தைப் போல {பெண் யானைகளின் தலைவனான ஆண் யானையைப் போலப்} புழுதிபடிந்தவனாக பெருமூச்சுவிட்டபடியே மேதினியில் விழித்தெழுவான்.(17) வனத்தில் திரியும் புருஷர்கள், தீர்க்கபாஹுவும் {நீண்ட கைகளைக் கொண்டவனும்}, லோகநாதனுமான ராமன் {அவ்வாறு} விழித்தெழுந்து, அநாதையைப் போலத் திரிவதை இனி காண்பார்கள்.(18) சுகத்திற்கே பழக்கப்பட்டவளான ஜனகனின் அன்புக்குரிய மகள் {சீதை}, இனி, கல்லும், முள்ளும் நிறைந்த வனத்தில் களைப்புடன் திரிவாள்.(19) வனம் குறித்து அறிமுகமில்லாத அவள், இனி மயிர்ச்சிலிர்ப்பை உண்டாக்கும் காட்டுவிலங்குகளின் கம்பீர ஒலிகளைக் கேட்டு பயப்படப் போகிறாள்.(20) கைகேயி, உன் விருப்பம் நிறைவேறட்டும். இந்த ராஜ்ஜியத்தில் விதவையாக வசிப்பாயாக. அந்தப் புருஷவியாகரன் {மனிதர்களில் புலியான ராமன்} இல்லாமல் ஜீவிப்பதில் எனக்கு விருப்பமில்லை" {என்றான் தசரதன்}.(21)

இவ்வாறு புலம்பிய ராஜா, ஜனக்கூட்டத்தால் சூழப்பட்டவனாக, உபஸ்நானம் செய்தவனின் {இறந்தவர்களுக்காக இறுதி நீராடல் செய்தவனின்} வீட்டைப் போலிருந்த தன் உத்தம நகருக்குள் பிரவேசித்தான்.(22) சூன்யமான நாற்சந்திகள், மாளிகைகள், மூடப்பட்ட கடைகள், கோவில்கள், துக்கத்தால் பீடிக்கப்பட்டு பலமற்றவர்களாக இருந்த மக்கள், நெரிசலற்ற மஹாபாதைகள் ஆகியவற்றுடன் கூடிய மொத்த நகரத்தையும் கண்ட அந்த ராஜா, ராமனையே நினைத்து புலம்பியபடி மேகத்திற்குள் சூரியனைப் போல அதற்குள் {அந்த நகரத்திற்குள்} பிரவேசித்தான்.(23) இராமன், வைதேஹி, லக்ஷ்மணன் ஆகியோரில்லாத அந்த மாளிகை, சுவர்ணனால் உரகங்களற்றதாக {கருடனால் பாம்புகளற்றதாகச்} செய்யப்பட்ட, கலங்கலற்ற பெருந்தடாகத்தைப் போலத் தெரிந்தது.(24)

புலம்பிக் கொண்டிருந்த அந்த வசுதாதிபன் {பூமியின் தலைவன் தசரதன்}, மிருதுவான, தீனமான, ஸ்வரமற்ற, மந்தமான, அர்த்தமற்ற சொற்களை கடகட சப்தத்துடன் {பின்வருமாறு} சொன்னான்:(25) "என்னை சீக்கிரமாக ராமனின் மாதாவான கௌசல்யையின் கிருஹத்திற்கு அழைத்துச் செல்வீராக. உண்மையில் வேறெங்கும் என் ஹிருதயம் ஆசுவாசத்தை {என் மனம் தேறுதலை} அடையாது" {என்றான்}.(26)

வாயிற்காவலர்கள், ராஜா சொன்னதுபோலவே கௌசல்யையின் கிருஹத்திற்கு அவனை அழைத்துச் சென்றனர். அங்கே அவன் {மஞ்சத்தில்} மென்மையாகக் கிடத்தப்பட்டான்.(27) கௌசல்யையின் வீட்டிற்குள் பிரவேசித்தும், சயனத்தில் கிடத்தப்பட்டும்கூட அவனது மனக்கலக்கம் அடங்கவில்லை.(28) அந்த ராஜா, புத்திரர்கள் இருவர் இல்லாமலும், மருமகள் சென்றும் சந்திரனில்லாத அம்பரத்தை {வானத்தைப்} போலிருக்கும் அந்த பவனத்தை கண்டான்.(29) வீரியமிக்க அந்த மஹாராஜா, அதைக் கண்டு, தன் புஜத்தை உயர்த்தி உச்ச ஸ்வரத்துடன் {பின்வருமாறு} அழுதான்: "ஆ, ராகவா, எங்களை விட்டுச் சென்றுவிட்டாய்.(30) ஐயோ, அந்தக் காலம் வரை {பதினான்கு ஆண்டுகள்} ஜீவித்திருந்து, ராமன் திரும்பி வருவதைக் கண்டு, அவனைத் தழுவி சுகிப்பவர்களே நரோத்தமர்கள் {மகிழ்பவர்களே உத்தம மனிதர்கள்}" {என்றான் தசரதன்}.(31)

அதன்பிறகு, அவனுக்கு காலராத்திரியைப் போன்ற அந்த  ராத்திரி வந்தபோது, அர்த்தராத்திரியில் {நடுராத்திரியில்} தசரதன் கௌசல்யையிடம் இதைச் சொன்னான்:(32) "கௌசல்யா, ராமனுடன் சென்ற என் பார்வை திரும்பவில்லை. இப்போதும் என்னால் உன்னை சரியாகப்பார்க்க முடியவில்லை. உன் கைகளால் என்னைத் தீண்டுவாயாக" {என்றான்}.(33)

சயனத்தில் இருந்த அந்த நரேந்திரன் {மனிதர்களின் தலைவன் தசரதன்}, ராமனை மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணர்ந்த அந்த தேவி {கௌசல்யை}, அதிக மன உளைச்சலுடன் அவனருகே அமர்ந்து, பெருமூச்சுவிட்டபடியே துக்கத்துடன் புலம்பத் தொடங்கினாள்.(34)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 042ல் உள்ள சுலோகங்கள் : 34

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை