Sharabhanga | Aranya-Kanda-Sarga-05 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சரபங்க முனிவரைச் சந்தித்தது; தேவேந்திரனின் வருகை குறித்து விசாரித்த ராமன்; சுதீக்ஷ்ணரிடம் செல்லுமாறு ராமனை அறிவுறுத்தி, யோகாக்னி பிரவேசம் செய்த சரபங்கர்...
பயங்கரனும், பலமிக்கவனுமான ராக்ஷசன் விராதனை வனத்தில் வதம் செய்த அந்த வீரியவான் {ராமன்}, சீதையைத் தழுவி ஆறுதல் கூறி, தேஜஸ்ஸுடன் ஒளிர்ந்து கொண்டிருந்தவனும், தன்னுடன் பிறந்தவனுமான லக்ஷ்மணனிடம் {இதைச்} சொன்னான்:(1,2அ) "கடப்பதற்கரிய இந்த வனம் கஷ்டமானது. நாமோ வனவாசிகளல்ல. தபத்தையே தனமாகக் கொண்ட சரபரங்கரிடம் சீக்கிரம் விரைவோம்.(2ஆ,3அ) தேவ செல்வாக்குடையவரும், தவத்தால் ஆத்மாவைத் தூய்மை செய்து கொண்டவருமான சரபங்கரின் ஆசிரமத்தை அடைந்த ராகவன் {ராமன்}, சரபங்கரின் அருகில் ஒரு மஹத்தான அற்புதத்தைக் கண்டான்.(3ஆ,4)
வசுதையை {பூமியைத்} தொடாமல் ஆகாசத்தில் உயர்ந்திருக்கும் தேரில், சூரியனுக்கும், வைஷ்வாநரனுக்கும் {அக்னிக்கும்} ஒப்பாகப் பிரகாசிக்கும் உடலைக் கொண்டவனும், விபுக்களால் {தேவர்களால்} பின்தொடரப்படுபவனும், ஒளிமிக்க ஆபரணங்கள் பூண்டவனும், களங்கமற்ற உடைகளைத் தரித்தவனுமான விபுதேஷ்வர தேவனை {இந்திரனை}, தன்னைப் போன்ற மஹாத்மாக்கள் பலர் பூஜித்துக் கொண்டிருப்பதை அவன் கண்டான்.(5,6,7அ) அவனது {இந்திரனின்} அருகில் பச்சைக் குதிரைகள் பூட்டப்பட்டதும், நடுப்பகல் ஆதித்யனைப் போன்ற பிரகாசத்துடன் கூடியதும், வெண்மேகக் கூட்டங்களுக்கு ஒப்பானதும், சந்திர மண்டலத்தைப் போன்றதும், ஆகாயத்தில் செல்வதுமான ரதத்தையும் கண்டான்.(7ஆ,8) {இந்திரனின்} தலைக்கு அருகில் சித்திரமாலைகளால் அலங்கரிக்கப்பட்டதும், களங்கமற்றதுமான குடையையும், தங்கக் கைப்பிடிகளுடன் கூடியவையும், மதிப்புமிக்கவையுமான சாமரங்களை எடுத்து வீசும் சிறந்த பெண்மணிகளையும் {அப்சரஸ்களையும்} கண்டான்.(9,10அ) கந்தர்வர்களும், அமரர்களும், சித்தர்களும், பரமரிஷிகள் பலரும் ஆகாயத்தில் இருந்து பல்வேறு சிறந்த துதிகளால் அந்த தேவனை {இந்திரனைத்} துதித்துக் கொண்டிருந்தனர்.(10ஆ,11அ)
வாசவன் {இந்திரன்} சரபங்கருடன் பேசிக் கொண்டிருந்தான். அந்த சதக்ரதுவை {நூறு வேள்விகளைச் செய்தவனான இந்திரனை} அங்கே கண்ட ராமன், லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} பேசினான்.(11ஆ,12அ) இராமன், தன்னுடன் பிறந்த லக்ஷ்மணனிடம் அந்த அற்புத ரதத்தைச் சுட்டிக் காட்டி, "இலக்ஷ்மணா, ஆகாயத்தில் ஆதித்யனைப் போல ஒளிரும் அருளும், ஒளியும் கூடிய அற்புத ரதத்தை அதோ பார்.(12ஆ,13) புருஹூதனான சக்ரனின் {வேள்விகளில் எப்போதும் இருப்புக்கு அழைக்கப்படுபவனான இந்தரனின்} குதிரைகளைக் குறித்து நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆகாயத்தில் அதோ தெரிவது அந்த திவ்ய ஹயங்கள் {தெய்வீகக் குதிரைகள்} என்பது திண்ணம்.(14)
புருஷவியாகரா, சௌமித்ரியே {மனிதர்களில் புலியே, லக்ஷ்மணா}, குண்டலங்கள் அணிந்தவர்களும், கைகளில் வாளுடன் இருப்பவர்களும், விஸ்தீரண மார்பைக் கொண்டவர்களும், பரிகாயுதம் போன்ற கைகளைக் கொண்டவர்களும், செவ்வாடை உடுத்தியவர்களும், வீழ்த்தக் கடினமான புலிகளைப் போன்றவர்களும், தீப்பிழம்புகளைப் போல் ஒளிரும் ஹாரங்களை தங்கள் மார்பில் சூடியவர்களும், இருபத்தைந்து வயது மதிக்கத்தக்கத் தோற்றம் கொண்டவர்களுமான நூறு, நூறு சிறந்த இளைஞர்கள் ஒவ்வொரு திசையிலும் நிற்கின்றனர் {பார்}.(15-17) அழகிய தோற்றம் கொண்ட புருஷவியாகரர்களான இந்த தேவர்கள், இப்போது போலவே எப்போதும் நிலையான வயதைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.(18) இரதத்தில் இருக்கும் அந்த ஒளிமிக்கவன் யார் என்பதைத் தெளிவாக நான் அறியும் வரை, இங்கேயே ஒரு முஹூர்த்தம் காலம் வைதேஹியுடன் காத்திருப்பாயாக" {என்றான் ராமன்}.(19)
இவ்வாறு, "இங்கேயே இரு" என்று சௌமித்ரியிடம் சொல்லிவிட்டு அந்த காகுத்ஸ்தன் {ராமன்}, சரபங்கர் ஆசிரமத்தை நோக்கிச் சென்றான்.(20) அப்போது, ராமன் தன்னை நோக்கி வருவதைக் கண்ட சசீபதி {சசியின் கணவனான இந்திரன்}, சரபங்கரிடம் அனுமதி பெற்றுக் கொண்டு, விபுக்களிடம் {தேவர்களிடம்} தனிமையில் இதைச் சொன்னான்:(21) "அதோ ராமன் இங்கே வருகிறான். அவன் என்னிடம் பேசுவதற்கு முன் என்னைக் காண வேண்டாம். என்னை வேறெங்கும் அழைத்துச் செல்லுங்கள். பிறரால் செய்ய முடியாத மஹத்தான கர்மத்தைக் குறுகிய காலத்தில் இவன் சாதிக்க வேண்டும். தன் காரியத்தை {உறுதிமொழியை} நிறைவேற்றி வெற்றியடைந்தவனாகவே நான் இவனைப் பார்ப்பேன்[1]" {என்றான் இந்திரன்}.(22,23)
[1] பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "ஸ்ரீராமர் இதோ இங்கு எழுந்தருளுகிறார். என்னிடம் பேசாதிருக்கின்றது எதுவோ அதற்குள் அவதார காரியத்தை முடிக்க வேண்டும். அதன்பின்னர்தான் என்னைப் பார்க்க வேண்டும். ஏனெனில் மற்றவர்களால் செய்ய முடியாத பெரும் காரியம் இவரால் முடிய வேண்டியிருக்கிறது. இவரை சீக்கிரத்திலேயே காரியம் கைகூடி வெற்றி பெற்றவராகவே நான் பார்க்கப் போகிறேன். என்னிடம் எதற்குள் கண்டு பேசாதிருக்கிறாரோ அதற்குள் விரைவிலேயே திரும்பிச் சென்றுவிடுவோம்" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "ஸ்ரீராமபிரானிங்கே ஏகாந்தமாக எழுந்தருளுகின்றனர்; இவர் இப்பொழுது என்னைக் காண்பது தகுதியற்றது; இவர் தம் பிரதிஜ்ஞையை முடித்த பின்பு, என்னைக் காண்க; பிறரொருவராலும் செயற்கரிய காரியங்கள் இம்மஹாநுபவராலேயே செயற்குறியனவாகியிருக்கின்றன; ஆதலின், இவர் இக்காரியங்களை முடித்த பின்பு, யானும் இவரைக் கண்டு மகிழ்வேனென்றுரைத்து விடைபெற்றுக் கொண்டு தேரூர்ந்து வானேறினன்" என்றிருக்கிறது. கோரக்பூர் பதிப்பில், "ஸ்ரீராமன் இதோ வந்து கொண்டிருக்கிறார். (நான் அவரை நேரில் பார்த்துப்) பேசுவதற்கு இடங்கொடாமல், என்னை வேறிடம் அழைத்துச் செல்லுங்கள். (அவரால், அவதார காரியம் முடிக்கப்பட வேண்டும். அவருடைய தெய்வத்தன்மை வெளிப்படாமல், மானுடராகவே இருந்து கொண்டிருந்தால்தான் இராவண வதம் நடைபெறும். அதன்) பின்னர்தான் அவர் என்னைச் சந்திக்க வேண்டும். இவர், பிறரால் செய்ய முடியாத ஓர் அரிய செயலைச் செய்ய வேண்டியிருக்கிறது. விரைவில். அந்தச் செயலை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்டபின், இவரைச் சந்திக்கிறேன். அந்தக் காரியத்தைச் செய்து முடித்துவிட்ட பிறகுதான், இவர் என்னைப் பார்க்க வேண்டும்" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதற்கு விளக்கம் அவசியம். இராவணன் தன்னை யாரும் கொல்லாதிருக்கும் வரம் வேண்டும்போது, மனிதர்களைக் குறிப்பிட மறந்துவிட்டான். எனவே ராவணனை மனிதனால் மட்டுமே கொல்ல முடியும். அதற்கு முன் இந்திரன் ராமனிடம் பேசிவிட்டால், ராமனின் தெய்வீக இயல்பு வெளிப்பட்டுவிடும். அதன் பிறகு அவனால் ராவணனைக் கொல்ல முடியாது. எனவே, அது {ராமன் இந்திரன் சந்திப்பு} தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாயிற்று" என்றிருக்கிறது.
இவ்வாறே, அரிந்தமனான வஜ்ரீ {பகைவரை வீழ்த்துபவனும், வஜ்ராயுதத்தைத் தரித்தவனுமான இந்திரன்} அந்த தபஸ்வியை மதித்து, அவரிடம் விடைபெற்றுக் கொண்டு, குதிரைகள் பூட்டப்பட்ட தன் ரதத்தில் திவத்திற்கு {சொர்க்கத்திற்குச்} சென்றான்.(24) சஹஸ்ராக்ஷன் {ஆயிரம் கண் படைத்த இந்திரன்} சென்றதும், ராகவன் தன்னைச் சார்ந்தவர்களுடன் சேர்ந்து, அக்னிஹோத்ரத்தின் அருகில் அமர்ந்திருந்த சரபங்கரை அணுகினான்.(25) இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் சரபங்கரின் பாதங்களில் பணிந்து, வரவேற்கப்பட்டும், வரவேற்புக்கு இணங்கியும் ஆசனம் அளிக்கப்பட்டவர்களாக அமர்ந்தனர்.(26)
அப்போது ராகவன், சக்ரன் {இந்திரன்} வந்த காரணத்தை விசாரிக்க, சரபங்கரும் ராகவனிடம் அனைத்தையும் {பின்வருமாறு} சொன்னார்:(27) "இராமா, அந்த வரதன் {வரம் தருபவனான இந்திரன்}, தன்னை உணராதோரால் {வெல்லாதோரால்} அடைய முடியாத பிரம்மலோகத்தை உக்கிர தபத்தினால் வென்ற என்னை அங்கே அழைத்துச் செல்ல விரும்பினான்.(28) நரவியாகரா {மனிதர்களில் புலியே}, அருகில் வந்து கொண்டிருக்கும் பிரிய அதிதியான {அன்புக்குரிய விருந்தினனான} உன்னை அறியாததாலும், காணாததாலும் பிரம்மலோகத்திற்குச் செல்லாதிருக்கிறேன்.(29) புருஷவியாகரா, தார்மீகனும் {தர்மவானும்}, மஹாத்மாவுமான உன்னைச் சந்தித்த பிறகே, குறைந்த பரமான திரிதிவத்திற்கு {சொர்க்கத்திற்கு} நான் செல்ல வேண்டும்.(30) நரசார்தூலா {மனிதர்களில் புலியே}, பிரம்மனுக்குரிய அழிவில்லாத மங்கல உலகங்கள் என்னால் வெல்லப்பட்டிருக்கின்றன. எனக்குரிய அவை அனைத்தையும் நீ ஏற்றுக் கொள்வாயாக" {என்றார் சரபங்கர்}.(31)
அந்த சரபங்க ரிஷி இவ்வாறு சொன்னதும், நரவியாகரனும், சர்வ சாஸ்திர விசாரதனுமான ராகவன் {மனிதர்களில் புலியும், சாத்திரங்கள் அனைத்திலும் அறிஞனுமான ராமன்} இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(32) "மஹாமுனிவரே, நானே அந்த உலகங்கள் அனைத்தையும் அடைவேன்[2]. இருப்பினும், இகத்தில் இந்தக் கானகத்தில் ஒரு வசிப்பிடத்தை நீர் சொல்வதையே விரும்புகிறேன்" {என்றான் ராமன்}.(33)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் இந்த சர்க்கத்தில் இதற்கு முன் ஏகப்பட்ட அடிக்குறிப்புகள் இருந்தாலும், அவை யாவும் ராமனை தெய்வீகனாக நிறுவுவதற்கான முயற்சிகளாகவே இருப்பதால் இங்கே கொடுக்கப்படவில்லை. இந்த சுலோகத்திற்கான விளக்கம் அவ்வாறு இல்லாததால் இங்கே அடிக்குறிப்பாகக் கொடுக்கப்படுகிறது. அது பின்வருமாறு, "இந்த சுலோகத்திற்கு, 'நான் என் முயற்சியாலேயே அவ்வுலகங்களை ஈட்டிக் கொள்வேன்' என்றும், 'நீர் ஈட்டிய உலகங்கள் அனைத்தையும் நான் ஏற்கிறேன்' என்றும், 'என்னால் மட்டுமே அவ்வுலகங்களை ஈட்டமுடியும்' என்றும், 'அனைத்தும் என்னிலேயே கலப்பதால், நானே அவை அனைத்தையும் உமக்குக் கொடுத்தேன்' என்றும் நான்கு வகைகளில் பொருள் கொள்ளலாம்" என்றிருக்கிறது.
சக்ரனுக்கு {இந்திரனுக்கு} நிகரான பலம் கொண்ட ராகவன் {ராமன்} இவ்வாறு சொன்னதும், மஹாபிராஜ்ஞரான {அனைத்தையும் அறிந்தவரான} சரபங்கர் மீண்டும் இந்த சொற்களைச் சொன்னார்:(34) "இராமா, இந்த அரண்யத்தில், மஹாதேஜஸ்வியும், புலனடக்கம் கொண்டவரும், சுதீக்ஷ்ணர் என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு தார்மீகர் வசிக்கிறார். அவர் உனக்கான நன்மையைச் செய்வார்.(35) தூய்மையான இடத்தில் வசிக்கும் தபஸ்வியான சுதீக்ஷ்ணரிடம் நீ செல்வாயாக. வனத்தில் உன்னை ஒரு ரமணீயமான {இன்பந்தரும் அழகுடைய} இடத்தில் அவர் வசிக்கச் செய்வார்.(36) இராமா, புஷ்பங்களும், தெப்பங்களும் மிதக்கும் இந்த மந்தாகினியின் பாய்ச்சலுக்கு {ஓட்டத்திற்கு} எதிராகத் தொடர்ந்து சென்றால் அங்கே போய்ச்சேர்வாய்[3].(37) புருஷவியாகரா, இதுவே பாதை. தாதா {ஐயா}, ஒரு முஹூர்த்த காலம் என்னைப் பார். தோலை உதிர்க்கும் உரகத்தை {பாம்பைப்} போல என் அங்கங்களை நான் கைவிடப்போகிறேன்[4]" {என்றார் சரபங்கர்}.(38)
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இங்கே குறிப்பிடப்படும் மந்தாகினி என்பது கங்கையாற்றின் பெயராகும். தொடர்ந்து பாயும் எந்த நதியும் தக்ஷிண கங்கை என்றும், பாகீரதி முதலிய பெயர்களாலும் {மேற்குறிப்பட்டவாறு மந்தாகினி என்றும்} அழைக்கப்படுகின்றன. எனவே மந்தாகினி என்ற இந்தக் குறிப்புக்கு கங்கை என்று பொருள் கொள்ளாமல், ஆறு என்றே பொருள் கொள்ள வேண்டும். அடுத்து வரும் கிஷ்கிந்தா காண்டத்திலும் பம்பை நதி சில சந்தர்ப்பங்களில் மந்தாகினி என்றே அழைக்கப்படுகிறது" என்றிருக்கிறது. பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், "அங்கங்கு நதியை புஷ்பங்களாலும் படகுகளாலும் விளங்குவதாய் நீ பார்ப்பாய். இது நீ செல்ல வேண்டிய வழி" என்றிருக்கிறது. தாதாசாரியர் பதிப்பில், "இந்த நதிக்கு எதிராகச் சென்றால் அவருடைய ஆஸரமஞ் சேருவீர்கள்" என்றிருக்கிறது. கோரக்பூர் பதிப்பில், "தெப்பங்கள் போன்று ஏராளமான மலர்கள் மிதந்து செல்லும் இந்த மந்தாகினீ நதியின் ஓட்டத்திற்கு எதிரான திசையில் இப்படியே சென்றால் அந்த இடத்தை அடைவாய்" என்றிருக்கிறது. இராமன் இப்போது இருப்பது விந்திய மலைத்தொடரின் அருகிலுள்ள தண்டகாரண்யப் பகுதி என்பதால், இது ஏற்கனவே சித்திரகூடத்தின் அருகே சொல்லப்பட்ட மந்தாகினி நதியாக இருப்பதற்கான வாய்ப்பில்லை. மந்தாகினி என்றால் சம்ஸ்கிருதத்தில் "மெதுவாகச் செல்பவள் {பாய்பவள்}" என்று பொருள். எனவே மெதுவாகப் பாயும் எந்த நதிப்பகுதியையும் மந்தாகினி என்று அழைக்கப்படும் வாய்ப்புள்ளது. இங்கே குறிப்பிடப்படும் மந்தாகினி நர்மதையாறாகவே இருக்க வேண்டும். நர்மதா என்றால் "இன்பமளிப்பவள்" என்று பொருள்.
[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சரபங்கர் இறந்துவிட்டால், ராமன் அங்கேயே வசித்திருக்கலாம். ஆனால் சரபங்கர் அவனை சுதீக்ஷ்ணரிடம் அனுப்புகிறார், சுதீக்ஷ்ணர் அவனை அகஸ்தியரிடம் அனுப்புகிறார். இது ராமனைத் தெற்கு நோக்கியே செலுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியே ஆகும்" என்றிருக்கிறது.
பிறகு, மந்திரவித்தான அந்த மஹாதேஜஸ்வி {மந்திரங்களை அறிந்தவரான சரபங்கர்}, அக்னியை மூட்டி, ஆகுதி கொடுத்து {நெய்யினால் ஹோமம் செய்து}, அந்த ஹுதாசனத்துக்குள் {நெருப்புக்குள்} பிரவேசித்தார்[5].(39) அக்னி, அந்த மஹாத்மாவின் ரோமம் {உடல்மயிர்}, கேசம் {தலைமயிர்}, சுருங்கிய தோல், எலும்பு, மாமிசங்கள் ஆகியவற்றையும், குருதியையும் எஞ்சாமல் எரித்தான்[6].(40)
[5] இந்திரன் அருளினன் இறுதி செய்பகலாவந்தனன் மருவுதி மலர் அயன் உலகம்தந்தனென் என அது சாரலென் உரவோய்அந்தம் இல் உயர் பதம் அடைதலை முயல்வேன்ஆதலின் இது பெற அருள் என உரையாகாதலி அவளொடு கதழ் எரி முழுகிபோதலை மருவினன் ஒரு நெறி புகலாவேதமும் அறிவு அருமிகு பொருள் உணர்வோன்- கம்பராமாயாணம் 2627, 2628ம் பாடல்கள், சரபங்கன் பிறப்பு நீங்கு படலம்பொருள்: "உரமானவனே, இந்திரன் வந்தான், 'அழிகின்ற காலம் வரை பிரம்மலோகம் தந்தேன். தங்குவாயாக' என்று சொன்னான். அதைச் சேர விரும்பாமல் அழிவில்லா உயர் பரமபதத்தை அடைய முயல்வேன். ஆதலினால் அதை {பரமபதத்தை} அடைய அருள்வாய்" எனச் சொல்லி, ஓர் உறுதியான வழியைச் சொல்லாத வேதமும் அறிய முடியாத மேம்பட்ட பொருளை உணர்ந்தவர் {சரபங்கர்}, தன் காதலியோடு {மனைவியோடு} தழல்விட்டெரியும் நெருப்பில் முழுகி பரமனை அடைந்தார்.
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சரபங்க முனிவர் விருப்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட பாபம் இழைத்தாரா, இல்லையா என்ற கேள்வி இங்கே எழுகிறது. அவ்வாறு இல்லை. ஏனெனில், அவர் சாதாரண நெருப்பில் தம்மை அழித்துக் கொண்டதாக இங்கே சொல்லப்படவில்லை. புனித மந்திரங்கள் சொல்லி, யோக நெருப்பை இருப்புக்கு அழைத்து, ஆகுதிகள் இட்டு அதற்குள்ளேயே அவர் நுழைந்தார். சாதாரண நெருப்பில் ஒரு சடலத்தின் மண்டையோடும், முதுகெலும்பும், புனித நீரில் மூழ்குவதற்காக முழுமையாக எரிந்து சாம்பலாவதில்லை. இங்கே எதுவும் எஞ்சவில்லை என்று சொல்லப்படுகிறது. சரபங்க முனிவர் ராமனைக் கண்டதும், தன் உடல் சாதிக்க வேண்டிய பணி ஏதுமில்லை என்ற தெய்வீக ஞானத்தை அடைந்து, புனித நெருப்புக்குள் நுழைந்தார். ஒழுக்கத்திலும், நெறியிலும் மேன்மையானவர்களை தீண்டவும் முடியாத அக்னி, அவர்களைத் தன் மடியில் அமர்த்தி குளுமையான நிலையையே அளிப்பான். யுத்தகாண்டத்தில் சீதைக்கும் இதுவே நேர்கிறது. இராமனின் மூதாதையான பேரரசன் ஹரிஷ்சந்திரனின் தர்மபத்தினியான ராணி சந்திரமதிக்கும் இதுவே நேர்ந்தது. அநுஷ்ட்ந அஸமர்த²ஸ்ய வாந ப்ரஸ்த²ஸ்ய ஜீர்யத꞉ | ப்⁴ருʼகு³꞉ அக்³நி꞉ ஜலபாதேந தே³ஹ த்ய்கோ³ விதீ⁴யதே ||" என்று தர்மாகூடம் சொல்கிறது. அதாவது, "இந்த பூத உடலைக் குறித்த தெய்வீக ஞானத்தை அடைந்தவர்களும், நாள்தோறும் செய்ய வேண்டிய சடங்குகளுக்கான அனுஷ்டானங்களைப் பின்பற்ற முடியாதவர்களும் / இயலாதவர்களும், இல்லறம் விட்டு வானப்ரஸ்தம் மேற்கொண்டு காய்ந்தவர்களும் தங்கள் தேகங்களை நெருப்பிலோ, நீரிலோ இட்டும், மலைச் சிகரங்களில் இருந்து விழுந்தும் தியாகம் செய்யலாம்" என்பது பொருளாகும். இந்த சாதனைகள் யோகியருக்கானவை; சாமானியருக்கல்ல என்பதை தயவு செய்து புரிந்து கொள்வீராக" என்றிருக்கிறது. தம்மை அழைத்துச் செல்ல தெய்வீகத் தேரில் இந்திரனே நேரடியாக வந்தும் செல்லாமல், ராமனின் வரவுக்காகக் காத்திருந்து, அவனைக் கண்டு, அவனுக்கு வழிகாட்டி, தாம் செய்த புண்ணியங்கள் அனைத்தையும் அவனுக்குக் கொடுத்துவிட்டு, யோகாக்னியில் தம்மை அர்ப்பணித்துக் கொள்கிறார் முனிவர் சரபங்கர். அந்தப் புண்ணியப் பயனாலேயே தெய்வீகத் தேரில் இந்திரனே நேரடியாக வந்தான். அதையும், அதாவது அந்தப் புண்ணியப் பயன்களையும் ராமனுக்குக் கொடுத்துவிட்டு, எதையும் மிச்சம் வைத்துக் கொள்ளாமல், மிச்சமாக எதையும் விட்டுச் செல்லாமல் யோகத்தினால் அதே பலனை {பிரம்மலோகத்தை} அடைகிறார் சரபங்கர்.
அந்த சரபங்கர், பாவகனை {அக்னியைப்} போல ஒளிரும் குமாரனாகி {இளைஞனாகி}, அந்த அக்னிக் குவியலில் இருந்து பிரகாசத்துடன் வெளிப்பட்டு,(41) அக்னிஹோத்ரிகள், மஹாத்மாக்களான ரிஷிகள், தேவர்கள் ஆகியோரின் உலகங்களைக் கடந்து பிரம்மலோகத்திற்கு உயர்ந்தார்.(42) புவனத்தில் {பூமியில்} புண்ணிய கர்மங்களைச் செய்தவரான அந்த துவிஜரிஷபர் {இருபிறப்பாளர்களில் காளை}, அனுசரித்திருப்பவர்களுடன் கூடிய பிதாமஹனை {பாட்டன் பிரம்மனைக்} கண்டார். பிதாமஹனும் அந்த துவிஜரைக் கண்டு ஆனந்தமடைந்து "சுஸ்வாகதம் இதி {இது நல்வரவே}" என்று சொன்னான்.(43)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 05ல் உள்ள சுலோகங்கள்: 43
Previous | | Sanskrit | | English | | Next |