Wouldn't waste the word of assurance | Aranya-Kanda-Sarga-24 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: போருக்கான அறிகுறிகளைக் கண்ட ராமன்; சீதையை அழைத்துச் சென்று குகையில் இருக்குமாறு லக்ஷ்மணனிடம் சொன்னது; கரனை எதிர்க்கச் சென்றது...
கொடும் பராக்கிரமம் படைத்த கரன், அந்த ஆசிரமத்திற்குப் புறப்பட்டபோது, சகோதரனுடன் கூடிய ராமனும் அதே உத்பாதங்களை {அபசகுனங்களைக்} கண்டான்.(1) மயிர்க்கூச்செரியச் செய்யும் மஹாகோரமான அந்த உத்பாதங்களை {அபசகுனங்களை} பிரஜைகளுக்கு கேட்டை விளைவிப்பவையாகக் கவனித்துப் பெருங்கோபத்துடன் லக்ஷ்மணனிடம் {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான்:(2) "மஹாபாஹுவே, சர்வபூதங்களுக்கும் {அனைத்து உயிரினங்களுக்கும்} கேட்டை விளைவிக்கும் சர்வ ராக்ஷசர்களையும் அழிப்பதற்காகவே இந்த மஹா உத்பாதங்கள் எழுகின்றன என்பதை உணர்வாயாக.(3) இந்த மேகங்கள் ஆகாயத்தில் கொடுஞ்சப்தங்களை எழுப்பியபடியே உதிரத்தாரைகளுடன் கூடிய செம்பட்டை நிறம் கொண்டு கொடியவையாகத் திரிகின்றன.(4) இலக்ஷ்மணா, என் சரங்கள் அனைத்தும் யுத்தத்தை எதிர்பார்த்து பரவசத்துடன் புகைந்து கொண்டிருக்கின்றன. தங்கப்பூண்களைக் கொண்ட விற்களும் அவ்வாறே துடிக்கின்றன.(5)
இங்கே வனத்தில் திரியும் பக்ஷிகள் இம்மாதிரியாகக் கூவுவது, நமக்கு முன் பயத்தை உண்டாக்குகிறது {நம் எதிரே ஆபத்து எழுவதை முன்னறிவிக்கிறது}; நமக்கு ஜீவிதமும் {நம் உயிர் இருப்பதும்} சந்தேஹமே.(6) மிகப்பெரிய யுத்தம் இப்போது ஏற்படப்போகிறது. இதல் ஐயமில்லை. ஆயினும், சூரா, என்னுடைய இந்தக் கை மீண்டும் மீண்டும் துடிப்பது நமக்கு ஜயம் {வெற்றி} அருகில் இருப்பதையும், சத்ருக்களுக்கு பரஜயத்தையும் {தோல்வியையும்} உணர்த்துகிறது. உன் முகம் பிரகாசத்துடனும், மகிழ்ச்சியுடனும் காணப்படுகிறது.(7,8) இலக்ஷ்மணா, யுத்தத்திற்காகத் தயாராக இருப்பவர்களின் வதனம் காந்தியற்று இருந்தால் அவர்களின் ஆயுள் பறிபோகும்.(9) குரூர கர்மங்களைச் செய்பவர்களான {கொடுஞ்செயல் புரிபவர்களான} ராக்ஷசர்களின் கர்ஜனையும், அவர்களால் முழக்கப்படும் பேரிகைகளின் கோரமான பெருஞ்சத்தமும் இதோ கேட்கிறது.(10)
சுபத்தை விரும்புகிறவனும், வெற்றியை அடைய விரும்புகிறவனும், புத்திமிக்கவனுமான ஒரு புருஷன், வரப்போகும் ஆபத்தை எதிர்பார்த்து, முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.(11) ஆகையால் சரபாணி, தனுதரனாக {கையில் அம்பும், வில்லும் தரித்து} வைதேஹியை அழைத்துக் கொண்டு, அடைவதற்கரியதும், மரங்களடர்ந்திருப்பதுமான மலைக்குகையை அடைவாயாக.(12) இந்த வாக்கியத்திற்கு நீ மறுப்புரை கூறுவது விரும்பத்தகாதது. வத்ஸா {குழந்தாய்}, என்னிரு பாதங்களின் மீது நீ ஆணையிட்டவனாகிறாய். தாமதிக்காமல் செல்வாயாக.(13) சூரனும், பலவானுமான நீயொருவனே அவர்களை ஐயத்திற்கு இடமின்றி கொல்வாயெனினும், அந்த நிசாசரர்கள் {இரவுலாவிகள்} அனைவரையும் நானே அழிக்க விரும்புகிறேன்" {என்றான் ராமன்}[1].(14)
[1] நெறி கொள் மாதவர்க்கு முன்னே நேர்ந்தனென் நிருதர் ஆவிபறிக்குவென் யானே என்னும் பழமொழி பழுதுறாமேவெறி கொள் பூங்குழலினாளை வீரனே வேண்டினேன் யான்குறிக்கொடு காத்தி இன்னே கொல்வென் இக்குழுவை என்னா- கம்பராமாயணம் 2935ம் பாடல், கரன் வதைப்படலம்பொருள்: "வீரனே {இலக்ஷ்மணா}, தப நெறிகளைக் கடைப்பிடிக்கும் தபஸ்விகளுக்கு முன்பே உடன்பட்டு அரக்கரின் உயிரைப் பறிப்பேன் என்று நான் உறுதி கூறிய அந்தப் பழைய மொழியை வீணாக்காமல், இந்தக் கூட்டத்தை இப்போதே கொல்வேன். மணங்கமழும் பூக்கள் சூடிய கூந்தலைக் கொண்ட சீதையை நீ கருத்தோடு காப்பாயாக. நான் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்" என்றான் {ராமன்}.
இராமன் இவ்வாறு சொன்னதும், சரங்களையும், வில்லையும் உடனே எடுத்துக் கொண்ட லக்ஷ்மணன், சீதையை அழைத்துக் கொண்டு அடைதற்கரிய குகையில் தஞ்சம் புகுந்தான்.(15) அந்த லக்ஷ்மணன் சீதையுடன் குகையில் பிரவேசித்ததும், ராமன், "அவர்கள் இல்லாதது நல்லது" என்று சொல்லி, கவசத்தை அணிந்து கொண்டான்.(16) பிரகாசத்தில் அக்னிக்கு நிகரான அந்த கவசத்தால் அலங்கரிக்கப்பட்ட ராமன், இருளில் எழுந்த புகையற்ற அக்னியைப் போல விளங்கினான்.(17) அந்த வீரியவான், தன் மஹத்தான வில்லை உயர்த்தி, சரங்களை எடுத்துக் கொண்டு திசைகள் அனைத்தையும் நாணொலியால் நிரப்பியபடி அங்கேயே உறுதியாக நின்று கொண்டிருந்தான்.(18)
அப்போது கந்தர்வர்கள், தேவர்கள், மஹாத்மாக்களான சித்தர்கள், சாரணர்கள் ஆகியோரும் யுத்தத்தை தரிசிக்க வேண்டும் என்ற ஆவலினால் அங்கே ஒன்றுகூடி வந்தனர்.(19) உலகில் புண்ணிய கர்மங்களைச் செய்த மஹாத்மாக்களான ரிஷிகளும், பிரம்மரிஷிகளில் சிறந்தவர்களும் அங்கே ஒன்றுகூடி வந்து ஒருவரோடொருவர் {பின்வருமாறு} பேசிக் கொண்டனர்:(20) "உலகத்தால் மதிக்கப்படும் கோக்களுக்கும் {பசுக்களுக்கும்}, பிராமணர்களுக்கும் நன்மை உண்டாகட்டும். சக்கர ஹஸ்தனான {சக்கரபாணியான} விஷ்ணு, யுத்தத்தில் சர்வ அசுரர்களையும் கொன்றதைப் போல, ராகவனும் பௌலஸ்தியர்களான இந்த ரஜனீசரர்களை {இரவுலாவிகளை} வெல்லட்டும்" என்று இவ்வாறு சொல்லிவிட்டு, பரஸ்பரம் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு மீண்டும், "தர்மாத்மாவான ராமன், கொடிய செயல்புரியும் பதினான்காயிரம் ராக்ஷசர்களுக்குப் போரில் தனியாக எப்படி ஈடுகொடுப்பான்?" என்றும் {அவர்கள்} சொன்னார்கள்.(21-23) அங்கே விமானங்களில் இருந்த தேவர்களும், ராஜரிஷிகளும், சித்த கணங்களும், துவிஜரிஷபர்களும் {இருபிறப்பாளர்களில் காளைகளும்} குதூகலத்தில் பிறந்த ஆவலில் அங்கே இருந்தனர்.(24)
அப்போது திடமாக நிற்கும் ராமனின் தேஜஸ் அந்தப் போர்முனையை ஆக்கிரமிப்பதைக் கண்ட சர்வ பூதங்களும் {அனைத்து உயிரினங்களும்} பயத்தால் பீடிக்கப்பட்டன.(25) எந்தச் சிக்கலுமின்றி கர்மங்களைச் செய்யவல்ல ராமனின் ஒப்பற்ற ரூபம், குரோதத்துடன் கூடிய மஹாத்மாவான ருத்திரனின் ரூபத்தைப் போலிருந்தது.(26) தேவர்கள், கந்தர்வர்கள், சாரணர்கள் ஆகியோர் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோது, யாதுதானர்களின் {ராக்ஷசர்களின்} பேரொலி கொண்ட சேனை நாற்புறமும் கொடிய தோற்கவசம், ஆயுதம், துவஜம் {கொடி} ஆகியவற்றைக் கொண்டதாகக் காணப்பட்டது. ஒருவரையொருவர் பார்த்து அட்டகாசம் செய்கிறவர்களும், சிங்கநாதம் செய்பவர்களும், விற்களில் நாணொலி எழுப்புகிறவர்களும், அடிக்கடி ஆர்ப்பரிப்பவர்களும், பேரிரைச்சல் கொண்டவர்களும், துந்துபி வாத்தியங்களை அடிப்பவர்களுமான அவர்களுடைய பெரும் கோஷமானது அவ்வனத்தை நிரப்பிற்று.(27-29)
வனத்திலுள்ள கொடிய மிருகங்கள், அந்த ஆரவார சத்தத்தைக் கேட்டுப் பயந்து, அமைதியான இடம் தேடி திரும்பிப் பார்க்காமல் ஓடின.(30,31அ) மஹாவேகம் கொண்டதும், தாக்குதலுக்குரிய பலவிதமான ஆயுதங்களைக் கொண்டதும், சாகரத்திற்கு ஒப்பான கம்பீரத்தைக் கொண்டதுமான அந்தப் படையானது, ராமனை நோக்கி விரைந்து சென்றது.(31ஆ,32அ) இரணபண்டிதனான {போரில் வல்லவனான} ராமனும், அனைத்துப் பக்கங்களிலும் பார்வையைச் செலுத்தி, யுத்தத்தில் விருப்பமுள்ள அந்தக் கரனின் சைனியத்தைக் கண்டான்.(32ஆ,33அ) பயங்கரமான தனுஸ்ஸை வளைத்து, தூணிகளில் இருந்தும் கணைகளை எடுத்து ராக்ஷசர்கள் அனைவரையும் கொல்வதற்கான உக்கிர கோபத்தை அவன் {ராமன்} அடைந்தான்.(33ஆ,34அ)
யுகாந்த அக்னியைப் போல {பிரளயகால அக்னி போல்} குரோதத்தில் ஜுவலித்தபடி, ஏறெடுத்துப் பார்க்கவும் முடியாத தேஜஸ்ஸால் நிறைந்திருக்கும் அவனைக் கண்டு வனதேவதைகளும் அஞ்சியோடின.(34ஆ,35அ) அப்போது கோபங்கொண்ட ராமனின் ரூபம், தக்ஷனின் யாகத்தை அழிக்க வந்த பினாகினீயின் {பினாகபாணியான ருத்திரனின்} வடிவத்தைப் போலத் தெரிந்தது.(35ஆ,இ) பிசிதாசனர்களின் {பச்சை மாமிசம் உண்பவர்களாலான} அந்த சைனியம், கார்முகைகள் {விற்கள்}, ஆபரணங்கள், ரதங்கள், அக்னிக்கு ஒப்பான காந்தியுடன் கூடிய கவசங்கள் ஆகியவற்றால் சூரியோதய காலத்தில் நீல மேகக் கூட்டம் போல இருந்தது.(36)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 24ல் உள்ள சுலோகங்கள்: 36
Previous | | Sanskrit | | English | | Next |