The order of Khara | Aranya-Kanda-Sarga-19 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: அங்கம் சிதைந்த சூர்ப்பணகையைக் கண்டு கோபமடைந்த கரன்; இராமன், லக்ஷம்ணன், சீதை குறித்த சூர்ப்பணகையின் வர்ணனை. இராமனைத் தாக்க பதினான்கு ராக்ஷசர்களை அனுப்பிய கரன்...
இராக்ஷசன் கரன், தன் தமக்கை விரூபமாக இரத்த வெள்ளத்தில் கிடப்பதைக் கண்டு, குரோதத்தால் எரிந்தவனாக {பின்வருமாறு} கேட்டான்:(1) "எழுவாயாக. உன் மோஹத்தையும் {மயக்கத்தையும்}, குழப்பத்தையும்விட்டு, உன் ரூபத்தை இவ்வாறு விரூபமாக்கியவன் எவன் என்பதைத் தெளிவாகச் சொல்வாயாக.(2) விஷப்பல்லுடன் கூடியதும், தாக்குதல் தொடுக்காமல் மிக அருகிலேயே கிடப்பதுமான கிருஷ்ணசர்ப்பத்தை {கரும்பாம்பை} விரல் நுனியால் விளையாட்டாகச் சீண்டியவன் எவன்?(3) உன் அருகே வந்து மோஹத்தால் உத்தம விஷத்தை அருந்தியவனும், இப்போது அறியாமையால் தன் கழுத்தைச் சுற்றிக் காலபாசத்தை {யமனின் பாசக்கயிற்றைப்} போட்டுக் கொண்டவனும் எவன்?(4) பலமும், பராக்கிரமும் நிறைந்தவளும், காமரூபிணியும் {விரும்பிய வடிவந்தரித்து விரும்பிய இடத்தில் திரிபவளும்} அந்தகனுக்கு சமமானவளுமான உன்னை இந்த அவஸ்தைக்கு ஆளாக்கியவன் எவன்?(5) தேவர்கள், கந்தர்வர்கள், பூதங்கள், ரிஷிகள் உள்ளிட்ட மஹாத்மாக்களில் உன்னை இவ்வாறு சிதைத்து விரூபியாக்கும் அளவு மஹாவீர்யம் படைத்தவன் எவன்?(6)
சகஸ்ராக்ஷனும், பாகசாசனனுமான {ஆயிரம் கண்களைக் கொண்டவனும், பாகனைக் கொன்றவனுமான} மஹேந்திரன் உள்ளிட்ட அமரர்களில் எனக்கு விருப்பமில்லாததைச் செய்யக்கூடிய எவனையும் இந்த உலகத்தில் நான் காணவில்லை.(7) நீர் கலந்திருக்கும் பாலை குடிக்கும் சாரஸத்தை {கொக்கை / அன்னப்பறவையைப்} போல இப்போதே ஜீவிதத்தை முடிக்கும் கணைகளை ஏவி {அவனது உடலில் இருந்து} பிராணனைப் பறிக்கப் போகிறேன்.(8) சரங்களால் மர்மங்கள் பிளக்கப்பட்டு என்னால் போரில் வீழ்த்தப்பட்டு, மேதினி பருக விரும்பும் நுரையுடன் கூடிய உதிரத்தைக் கொண்டவன் எவன்?(9) போரில் என்னால் கொல்லப்பட்டு, மாமிசத்தைப் பக்ஷிக்க விரும்பும் பறவைக் கூட்டங்கள் மகிழ்ச்சியாகக் கொத்தப் போகும் காயத்தை {உடலைக்} கொண்டவன் எவன்?(10) இஹத்தில் போரில் என்னால் இழுக்கப்படும் அந்த ஆதரவற்றவனைக் காக்க தேவர்களோ, பிசாசங்களோ, கந்தர்வர்களோ, ராக்ஷசர்களோ சக்தர்களல்லர்.(11) மெதுவாக உணர்வு மீள்வாயாக. எவன் உன்னை வனத்தில் தாக்கி வீழ்த்தினானோ, அந்த துர்விநீதனை {ஒழுக்கங் கெட்டவனைக்} குறித்து என்னிடம் சொல்வாயாக" {என்றான் கரன்}.(12)
அப்போது, விசேஷமான குரோதத்துடன் இருக்கும் தன்னுடன் பிறந்தானின் இந்தச் சொற்களைக் கேட்ட சூர்ப்பணகை, கண்ணீருடன் இந்த வாக்கியங்களைச் சொன்னாள்:(13) "இளைஞர்களும், வடிவழகர்களும், சுகுமாரர்களும் {மென்மையான மேனியுள்ளவர்களும்}, மஹாபலவான்களும், தாமரை இதழைப் போன்ற நீள்விழிகளைக் கொண்டவர்களும், மரவுரிகளையும், கருப்பு மான் தோலை உடுத்தியவர்களும்,{14} பழங்கள், கிழங்குகள் உண்பவர்களும், அமைதியான தபஸ்விகளும், பிரம்மசாரிகளும் {பிரம்மத்தைப் பின்பற்றி நடப்பவர்களும்}, தசரதனின் புத்திரர்களும், உடன்பிறந்தவர்களுமான ராமலக்ஷ்மணர்கள் எனும் இருவர் அங்கே இருக்கின்றனர்[1].(14,15) கந்தர்வ ராஜர்களுக்கு இணையான பார்த்திபத் தன்மைகளுடன் {ராஜலக்ஷணங்களுடன்} கூடிய அவ்விருவரும், தேவர்களா, தானவர்களா என்பதை என்னால் அறியமுடியவில்லை[2].(16)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சூர்ப்பணகை, "மன்னன் தசரதனின் மகன்களான ராமலக்ஷ்மணர்கள் இருவர்" என்று சாதாரணமாகச் சொல்லாமல் "இளைஞர்கள்", "வடிவழகர்கள்", "மென்மையான மேனி கொண்டவர்கள்" என்றெல்லாம் சொல்வதை உரையாசிரியர்கள் மூன்று வகைகளில் பொருள் கொள்கின்றனர். 1) காமம் நிறைந்த பெண்ணின் பார்வை. 2) இராமலக்ஷ்மணர்களின் ஆற்றலை சிறுமையாக் சொல்லி கரனின் பெருமையை அதிகமாகச் சொல்லும் பார்வை 3) கரனின் வீரத்தைப் பரிகாசம் செய்து ராமலக்ஷ்மணர்களுடன் போரிடத் தூண்டும் பார்வை" என்றும், மேற்கண்ட மூன்று வகை பார்வைகளுக்கான சொல்சொல்லான விரிவான விளக்கங்களும் இருக்கின்றன.
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "சில பதிப்புகளில் "தானவர்களா?" என்பதற்குப் பதில் "மானுஷர்களா?" என்றிருக்கிறது. இந்த சர்க்கத்தின் 22ம் சுலோகத்தில் கரன் அவர்களை மனிதர்கள் என்றே குறிப்பிடுகிறான். தானவர்களாலோ, தேவர்களாலோ தன் குலத்திற்குத் தீங்கிழைக்க முடியாது என அவன் நம்புகிறான்" என்றிருக்கிறது.
அங்கே அவர்கள் இருவரின் மத்தியில் இளமை நிறைந்தவளும், வடிவழகியும், சர்வ ஆபரண பூஷிதையும் {ஏராளமான ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும்}, நல்லிடை கொண்டவளுமான ஒரு நாரீயை {பெண்ணை} நான் கண்டேன்.(17) அந்தப் பிரமதையை {அழகிய பெண்ணை} முன்னிட்டே அவர்கள் இருவரும் சேர்ந்து ஓர் அநாதாசதியை {நாதனற்ற, நெறிவழுவிய பெண்ணைப்} போல என்னை இந்த அவஸ்தைக்கு உள்ளாக்கினார்கள்.(18) போர்முனையில் அவர்கள் இருவரும், அந்த நேர்மையற்றவளும் கொல்லப்பட்டு, சிந்தப் போகும் நுரையுடன் கூடிய உதிரத்தை நான் பருக விரும்புகிறேன்.(19) நீ அங்கே செய்யும் செயலால் போரில் அவளும், அவர்களும் சிந்தும் உதிரத்தை நான் பருக வேண்டும். இதுவே என் பிரதம {முதன்மையான} ஆசையாகும்" {என்றாள் சூர்ப்பணகை}[3].(20)
[3] கண்டு நோக்க அருங்காரிகையாள்தனைக்கொண்டு போனவன் இலங்கையர் கோக்கு எனாவிண்டு மேல் எழுந்தேனை வெகுண்டு அவர்துண்டம் ஆக்கினர் மூக்குஎனச் சொல்லினாள்.- கம்பராமாயாணம் 2881ம் பாடல், கரன் வதைப்படலம்பொருள்: காணற்கரிய அழகுடைய இப்பெண்ணைக் கண்டு, "இலங்கையரின் மன்னனுக்கு {ராவணனுக்குக்} கொண்டு போவேன்" என்றுசொல்லி அவள் மேல் நான் பாய்ந்தபோது சினமடைந்த அவர்கள் என் மூக்கை அறுத்தார்கள் என்று சொன்னாள் {சூர்ப்பணகை}.
அவள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே குரோதமடைந்த கரன், மஹாபலவான்களும், அந்தகனுக்கு ஒப்பானவர்களுமான சதுர்தச {பதினான்கு} ராக்ஷசர்களிடம் {பின்வருமாறு} ஆணையிட்டான்.(21) "சஸ்திர சம்பன்னர்களும் {ஆயுதபாணிகளும்}, மரவுரியும், கருப்பு மான்தோலும் உடுத்தியவர்களுமான மானுஷ்யர்கள் இருவர், கோரமான தண்டகாரண்யத்திற்குள் ஒரு பிரமதையுடன் {அழகிய பெண்ணுடன்} பிரவேசித்திருக்கின்றனர்.(22) அவர்கள் இருவரையும், கெட்ட நடத்தை கொண்ட அவளையும் கொன்ற பிறகு திரும்புங்கள். என் பகினியான {தமக்கையான} இவள் அவர்களின் உதிரத்தைப் பருக வேண்டும்.(23) இராக்ஷசர்களே, அங்கே சென்று உங்கள் தேஜஸ்ஸால் அவர்கள் இருவரையும், அந்தப் பிரமதையையும் கொன்று என்னுடைய பகினியான {தமக்கையான} இவள் இஷ்டப்படும் மனோரதத்தை நிறைவேற்றுவீராக.(24) உடன்பிறந்தவர்களான அவர்கள் இருவரையும் போரில் நீங்கள் கொல்வதைக் கண்ட பிறகு மகிழ்ச்சியடையும் இவள் போர்க்களத்தில் வேடிக்கையாக {அவர்களின்} உதிரத்தைப் பருகுவாள்" {என்றான் கரன்}.(25)
இவ்வாறான ஆணையைப் பெற்ற அந்தப் பதினான்கு ராக்ஷசர்களும், பலமான காற்றால் வழிநடத்தப்படும் கரிய மேகங்களைப் போல அவளுடன் அங்கே {சூர்ப்பணகையுடன் பஞ்சவடிக்குச்} சென்றனர்.(26) ஆனால் இவ்வாறு அந்த நிசாசரர்கள் {இரவுலாவிகள்} கூரிய ஆயுதங்களுடன் சென்றாலும், உதித்து ஜுவலிக்கும் அக்னியை {எரியும் காட்டுத் தீயைக்} கடக்க முடியாத வனதுவிபத்தை {காட்டு யானையைப்} போல ராமனை ஒடுக்க இயலாதவர்களானார்கள்.(27)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 19ல் உள்ள சுலோகங்கள்: 27
Previous | | Sanskrit | | English | | Next |