Mace Splintered | Aranya-Kanda-Sarga-29 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன் சோர்வடைந்ததாகக் கருதி அவனைப் போரிடத் தூண்டிய கரன். கரன் எறிந்த பெரும் கதாயுதம், விண்ணில் பாய்ந்து கொண்டிருக்கும்போதே அதைத் துண்டாக்கிய ராமன்...
மஹாதேஜஸ்வியான ராமன், ரதமில்லாமல் கதாபாணியாக எதிரே நின்ற கரனிடம் முதலில் மிருதுவாகவும், பின்பு கடுமையான வாக்கியங்களையும் {பின்வருமாறு} சொன்னான்:(1) "கஜ, அசுவ, ரதங்கள் {யானைகள், குதிரைகள், தேர்கள்} நிறைந்த மஹத்தான படையுடன் கூடிய உன்னால் உலகம் யாவிலும் அருவருக்கத்தக்க மிகக் கொடிய கர்மங்கள் {இந்த தண்டகாரண்யத்தில்} செய்யப்பட்டன.(2) பூதங்களுக்குத் தீங்கிழைக்கும் பாப கர்மங்களைச் செய்யும் கொடியவன், மூன்று உலகங்களுக்கும் ஈசுவரனாக இருப்பினும் நிலைக்க மாட்டான்.(3) க்ஷணதாசரா {இரவுலாவியே}, உலகிற்கு எதிரான கர்மங்களை {செயல்களைச்} செய்யும் பயங்கரன், துஷ்ட சர்ப்பத்தைப் போல சர்வ ஜனங்களாலும் கொல்லப்படுவான்.(4) லோபத்தாலோ, காமத்தாலோ {பேராசையாலோ, ஆசையாலோ} பாபங்களைச் செய்யும் புத்தியற்ற ஒருவன், ஆலங்கட்டியால் மகிழ்ச்சியடையும் பிராஹ்மணியை {அரணையைப்} போல அவற்றின் பலனை அனுபவிப்பான்[1].(5)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பிராஹ்மணி என்றழைக்கப்படும் இந்தக் குறிப்பிட்ட பல்லி வகைக்கு {அரணைக்கு} ஆலங்கட்டிகள் நஞ்சுமிக்கவையாகும். ஒருவன் சுயமாக ஈட்டியவற்றில் சிறிய பகுதியையும் பிரியாமல் இருக்க ஏங்குதல் லோபமாகும், முற்றிலும் கிடைக்காதவற்றைக் குறித்து ஏங்குவது மோகமாகும். {இங்கே காமம் என்று குறிப்பிடப்படுவது ஆசையாகும்}. மக்கள் தாங்கள் சுயமாக ஈட்டியவற்றைப் பாதுகாக்கும் அதே வேளையில், கிடைக்காத பொருள்களையும் ஈட்ட முயற்சிக்கும்போது பாபம் செய்கிறார்கள். இரண்டுமே தவறுதான் என்று உணர்ந்த பிறகும், எவரேனும் இந்தத் தீமைகளைத் தொடர்ந்து செய்தால் அது மன்னிக்கமுடியாத குற்றமாகிறது. இங்கே குறிப்பிடப்படும் சிவப்பு வால் பல்லியின் {அரணையின்} உருவகம், பழைய பதிப்புகளில் இல்லை என்று கூறப்படுகிறது. இன்னும் வேறு பதிப்புகளில் மற்றுமொரு வேறுபாடாக, "சுயமதிப்பை இழந்த பிராமணன்" என்ற உவமை இங்கே சொல்லப்படுகிறது. அடுத்து கரன் {மனத்தில்} கேட்கக்கூடிய கேள்வியான, "நான் என்ன பாபம் செய்தேன்?" என்பதற்கு அடுத்த சுலோகத்தில் ராமன் பதில் சொல்கிறான்" என்று இருக்கிறது.
இராக்ஷசா, தண்டாகரண்யத்தில் வசிக்கும் மஹாபாக்கியவான்களும், தர்மசாரிகளுமான தபஸ்விகளைக் கொன்று, நீ என்ன பலனை அடையப் போகிறாய்?(6) உலகத்தால் அருவருக்கத்தக்க பாப கர்மங்களைச் செய்யும் குரூரர்கள் ஐசுவரியத்தை அடைந்தாலும், வேரறுந்த மரங்களைப் போல நீண்ட காலம் நிலைக்க மாட்டார்கள்.(7) மரங்களில் தோன்றும் பருவகால புஷ்பங்களைப் போல பாப கர்மத்தின் கர்த்தா {பாபச் செயல் புரிந்தவன், சரியான} காலம் வரும்போது கோர பலனை நிச்சயம் அடைவான்.(8) க்ஷணதாசரா {இரவுலாவியே}, விஷங்கலந்து புசிக்கப்பட்ட அன்னத்தால் {விளையும் பலனைப்} போலவே உலகத்தில் பாப கர்மங்களின் பலன் சீக்கிரமே அடையப்படுகிறது.(9)
நிசாசரா {இரவுலாவியே}, உலகம் விரும்பாததைச் செய்ய விரும்பி கோர பாபம் செய்பவர்களின் பிராணனைப் பறிக்கும் ராஜ ஆணையுடனே நான் வந்திருக்கிறேன்.(10) இப்போது நான் ஏவப்போகும் காஞ்சனபூஷண சரங்கள், வல்மீகத்தில் இருந்து வரும் பன்னகத்தை {பொன்னால் அலங்கரிக்கப்பட்ட அம்புகள், புற்றிலிருந்து வரும் பாம்பைப்} போல உன்னைப் பிளந்து வெளியேறும்.(11) இப்போது போரில் கொல்லப்படும் நீயும், உன் சைனியமும், தண்டகாரண்யத்தில் உன்னால் புசிக்கப்பட்ட தர்மசாரிகளைப் பின்பற்றிச் செல்வீராக.(12) பூர்வத்தில் உன்னால் கொல்லப்பட்ட பரமரிஷிகள், விமானங்களில் இருந்து கொண்டு, இப்போது பாணங்களால் கொல்லப்பட்டு, நரகத்திற்கு செல்லப் போகும் உன்னைப் பார்க்கட்டும்.(13) குலாதமா {குலத்தில் இழிந்தவனே}, நீ விரும்பியபடியே போரிடும் முயற்சியைச் செய்வாயாக. பனம்பழத்தைப் போல இப்போது நான் உன் சிரத்தைக் கொய்யப் போகிறேன்" {என்றான் ராமன்}.(14)
இவ்வாறு ராமன் சொன்னதும், குரோதமடைந்தவன் {கரன்}, ரத்தம் போன்று சிவந்த கண்களுடன் சிரித்துக் கொண்டே, குரோதத்தால் மெய்மறந்தவனாக ராமனிடம் {பின்வரும்} மறுமொழியைக் கூறினான்:(15) "தசரதாத்மஜா {தசரதனின் மகனே}, யுத்தத்தில் சாதாரண ராக்ஷசர்களைக் கொன்றுவிட்டு புகழுக்குத் தகாத உன்னை நீயே எவ்வாறு புகழ்ந்து கொள்கிறாய்?(16) விக்ராந்தர்களும் {வெற்றியாளர்களும்}, பலவந்தர்களுமான நரரிஷபர்கள் {மனிதர்களில் காளைகள்}, தங்கள் சொந்த தேஜஸ்ஸை {வலிமையைக்} குறித்த எதையும் கர்வத்துடன் சொல்ல மாட்டார்கள்.(17) இராமா, உலகில் விவேகமும், கண்ணியமுமற்ற, அற்ப க்ஷத்ரியர்களே நீ பிதற்றுவதைப் போல அர்த்தமில்லாத பெருமை பேசுவார்கள்.(18) சமரில், அதுவும் மிருத்யு {மரணம்} வருங்காலத்தில், எந்த வீரனும் தன் குலம் குறித்துப் பேசமாட்டான். அந்நேரத்தில் தேவையில்லாமல் தன்னைத் தானே எவன் புகழ்ந்து கொள்வான்?(19)
அக்னியில் உள்ள குசப்புல்லானது, புடம்போட்ட சுவர்ண ரூபத்தில் தெரிவதைப் போல தற்புகழ்ச்சி செய்து கொண்டு எல்லா வகையிலும் உன் லகுத்வத்தையே {அற்பத்தனத்தையே} நீ வெளிப்படுத்துகிறாய்.(20) கதை {கதாயுதம்} தரித்து இங்கே நிற்கும் என்னை, தாதுக்களால் மறைக்கப்பட்டு, தரணியைத் தாங்கும் பர்வதத்தைப் போல அசைக்கப்பட முடியாதவனாக நீ காணவில்லை இல்லையா?(21) மூவுலகங்களுக்கும் பாசஹஸ்தனான அந்தகனை {மூவுலக உயிரினங்களின் உயிரையும், தன் கையிலுள்ள பாசக்கயிற்றால் பறிக்கும் யமனைப்} போல கதாபாணியான நானே ரணத்தில் {போரில்} உன் பிராணனை அழிக்க வல்லவன்.(22) உன்னிடம் சொல்வதற்கு உண்மையில் நிறைய இருக்கின்றன. எனினும் நான் சொல்லப் போவதில்லை. சவிதன் {சூரியன்} அஸ்தமனமாகிறான். யுத்தத்திற்கு விக்னம் நேரலாகாது {இடையூறு உண்டாகலாகாது}.(23) பதினான்காயிரம் ராக்ஷசர்களை நீ கொன்றிருக்கிறாய். உன்னை முற்றாக அழித்துவிட்டு இன்றே அவர்களால் உண்டான கண்ணீரை நான் துடைக்கப் போகிறேன்" {என்றான் கரன்}.(24)
பரம அங்கதங்களுடன் கூடிய {சிறந்த தோள்வளைகளை அணிந்திருந்த} கரன், இவ்வாறு சொல்லிவிட்டு, பரம குரோதம் அடைந்து, அசனியை {இடியைப்} போல ஒளிரும் அந்த கதையை {கதாயுதத்தை} ராமன் மீது வீசினான்.(25) கரனின் கைகளில் இருந்து ஏவப்பட்டதும், ஒளிமிக்கதுமான அந்த மஹத்தான கதை, விருக்ஷங்கள் {மரங்கள்}, குல்மங்கள் {புதர்கள்} ஆகியவற்றை பஸ்மமாக்கிவிட்டு {சாம்பலாக்கிவிட்டு} அவனது சமீபத்தை அடைந்தது.(26) இராமன், தன்னை நோக்கி வருவதும், மிருத்யுபாசத்திற்கு ஒப்பானதுமான அந்த மஹத்தான கதை, அந்தரிக்ஷத்தில் {ஆகாயத்தில்} வந்து கொண்டு இருக்கும்போதே சரங்களால் துண்டுகளாக வெட்டினான்.(27) மந்திர ஔஷதங்களின் {மூலிகைகளில்} பலத்தால் வீழ்த்தப்பட்ட வியாளியை {பெண்பாம்பைப்} போல, சரங்களால் பிளக்கப்பட்ட அந்த கதையானது, முற்றிலும் நொறுங்கி தரணீதலத்தில் விழுந்தது.(28)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 29ல் உள்ள சுலோகங்கள்: 28
Previous | | Sanskrit | | English | | Next |