The deed of Rama | Aranya-Kanda-Sarga-28 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனுக்கும், கரனுக்கும் இடையில் நடந்த போர்; தேரை இழந்த கரன்; தேவர்களும், முனிவர்களும் ராமனின் செயலைக் கொண்டாடியது...
போரில் தூஷணனும், திரிசிரஸும் கொல்லப்பட்டதைக் கண்டும், ராமனின் விக்கிரமத்தை {ஆற்றல்வீரத்தைக்} கண்டும் கரன் அச்சமடைந்தான்.(1) அந்தக் கரன், எதிர்க்கப்பட முடியாத மஹாபலமுள்ள ராக்ஷச சைனியமும், திரிசிரஸ், தூஷணன் ஆகியோரும் ராமன் ஒருவனாலேயே அழிந்ததைக் கண்டு,{2} அந்த ராக்ஷச பலம் {படை} முற்றிலும் அழிந்ததைக் கவனித்து மனம் வருந்தி, இந்திரனை நோக்கிச் சென்ற நமுசியைப் போல ராமனை நெருங்கினான்.(2,3)
கரன், வில்லை வலுவுடன் வளைத்து, விஷமிக்க பாம்பைப் போன்று சீற்றமிக்கவையும், ரத்தத்தையே போஜனமாக {தங்கள் உணவாகக்} கொண்டவையுமான நாராசங்களை {இரும்புக் கணைகளை} ராமனின் மீது ஏவினான்.(4) இரதத்தில் இருந்த கரன், தன் சிக்ஷையால் {பயிற்சியால்} நாண்கயிற்றைச் சுண்டி, சஸ்திரங்களை {ஆயுதங்களை} அசைத்து சமரில் சரங்களுடன் பல்வேறு மார்க்கங்களில் திரிந்தான் {பலவிதமான கதிகளைச் செய்து காட்டினான்}.(5) மஹாரதனானவன் {கரன்}, சர்வ திசைகளையும், உபதிசைகளையும் பாணங்களால் பூர்ணமாக நிரப்பினான். இராமனும் அவனைப் பார்த்து அதிமஹத்தான தனுவை முழுமையாக வளைத்து,{6} பர்ஜன்யன் {மேகதேவன்} மழைத்தாரைகளால் மறைப்பதைப் போல அக்னிப் பொறிகளுடன் கூடிய, {நெருப்பு போன்று} சகிக்க முடியாத சாயகங்களால் நாபத்தை {பாணங்களால் ஆகாயத்தை} இடைவெளியற்றதாகச் செய்தான்.(6,7) கரனும், ராமனும் ஏவிய கூர்மையான பாணங்களால் அந்த ஆகாசத்தைச் சுற்றிலும் இடைவெளியின்றி எங்கும் சர மயமானது.(8)
ஒருவரையொருவர் வதம் செய்யும் ஆவலில் இருவரும் ஒருவரோடொருவர் யுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அந்த சர ஜாலத்தால் {அம்புவலையால்} மறைக்கப்பட்டு சூரியன் பிரகாசித்தானில்லை.(9) அப்போது கரன், தோமரத்தால் மஹாதிவிபத்தை {ஈட்டியால் பெரும் யானையைக்} குத்துவதைப் போல அந்தப் போரில் நாளீகங்கள், நாராசங்கள், கூரிய முனைகளைக் கொண்ட விகர்ணிகள் ஆகியவற்றால் ராமனைத் தாக்கினான்.(10) இரதத்தில் தனுஷ்பாணியாக நின்ற அந்த ராக்ஷசன் {கரன்}, சர்வ பூதங்களுக்கும் பாசஹஸ்தனான அந்தகனை {அனைத்து உயிரினங்களுக்கும் பாசக்கயிற்றுடன் கூடிய யமனைப்} போலத் தெரிந்தான்.(11)
சர்வ சைனியத்தையும் ஆண்மையுடன் சளைக்காமல் அழித்த பெரும் வலிமைமிக்க ராமன் இப்போது முழுமையாக சோர்வடைந்திருப்பதாகக் கரன் கருதினான்.(12) சிங்கத்திற்கு ஒப்பான பராக்கிரமத்தையும், சிங்கத்தின் நடையையும் கொண்டவனை {கரனைக்} கண்ட ராமன், அற்ப மிருகத்தைக் கண்ட சிங்கத்தைப் போல கலங்காதிருந்தான்.(13) பிறகு கரன், சூரியனைப் போலப் பிரகாசிக்கும் மகத்தான ரதத்தில் ஏறி, பாவகனை அடையும் பதங்கத்தை {அக்னியை அடையும் அந்துப்பூச்சியைப்} போல ராமனை நோக்கிச் சென்றான்.(14)
அப்போது ஹஸ்த லாகவத்தை {கைகளின் நளினத்தை} வெளிப்படுத்திய கரன், மஹாத்மாவான அந்த ராமனின் சரம்பூட்டிய வில்லைக் கைப்பிடியில் முறித்தான்.(15) இன்னும் கோபமடைந்தவன் {கரன்}, சக்ரனின் இடிக்கு {இந்திரனின் வஜ்ரத்திற்கு} ஒப்பான பிரகாசத்துடன் கூடிய ஏழு சரங்களை எடுத்து {ராமனின்} போர்க்கவசத்தைத் தாக்கினான்.(16) பிறகு கரன், ஒப்பற்ற வலிமை கொண்ட ராமனின் மீது ஆயிரம் சரங்களை ஏவித் துன்புறுத்தி அந்த சமரில் மஹாநாதம் செய்தான்.(17) பிறகு கரன், நல்ல கணுக்களை உடைய பாணங்களை ஏவியபோது, ஆதித்தியனின் பிரகாசத்தைக் கொண்ட ராமனின் கவசம் முற்றாக அழிந்து பூமியில் விழுந்தது.(18)
அங்கங்கள் அனைத்திலும் சரங்களால் தாக்கப்பட்ட அந்த ராகவ ராமன், குரோதமடைந்து புகையின்றி எரியும் அக்னியைப் போன்ற சீற்றத்துடன் அந்த சமரில் ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(19) அப்போது, சத்ருக்களை அழிப்பவனான ராமன், கம்பீர முழக்கம் செய்யும் மற்றொரு மஹத்தான தனுவை எடுத்து, பகைவனை அழிப்பதற்காக அதில் நாணேற்றினான்.(20) பிறகு, மஹரிஷியால் {அகஸ்தியரால்} வெகுமதியாக அளிக்கப்பட்டதும், சிறந்ததுமான அந்த மஹத்தான வைஷ்ண தனுவை உயர்த்தியபடியே கரனை நோக்கி விரைந்து சென்றான்[1].(21) அப்போது குரோதத்துடன் கூடிய ராமன், கனக புங்கங்களுடனும் {தங்க இறகுகளுடனும்}, வளைந்த முனைகளுடன் கூடிய சரங்களால் சமரில் அந்தக் கரனின் துவஜத்தை வெட்டி வீழ்த்தினான்.(22) காண்பதற்கு இனிய அந்த காஞ்சனத்வஜம் {கொடிமரம்}, தேவதைகளின் ஆணையால் தரணியில் இறங்கிய சூரியனைப் போலச் சிதறி விழுந்தது.(23)
[1] இங்கே கம்பராமாயணத்தில், "இராமன் வில்லொடிந்து நின்றதும், ஆகாயாத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த வருணன் ஒரு வில்லை அளித்தான்" என்றிருக்கிறது. அது பின்வருமாறு:என்னும் மாத்திரத்து ஏந்திய கார்முகம்சின்னம் என்றும் தனிமையும் சிந்தியான்மன்னன் மன்னவன் செம்மல் மரபினால்பின் உறத் தன் பெருங் கரம் நீட்டினான்.கண்டு நின்று கருத்து உணர்ந்தான் எனஅண்டர் நாதன் தடக்கையில் அத்துணைபண்டு போர் மழுவாளியைப் பண்பினால்கொண்ட வில்லை வருணன் கொடுத்தனன்.- கம்பராமாயணம் 3051, 3052ம் பாடல்கள், கரன் வதைப்படலம்பொருள்: {அவ்வாறு அந்த வில் ஒடிந்த} மாத்திரத்தில் மன்னர்மன்னன் தசரதனின் மகனான ராமன், தான் ஏந்திய கார்முகம் {வில்} துண்டிக்கப்படவும், தனித்திருப்பதை சிந்தியாமல், மரபின்படி தன் நீண்ட கையைப் பின்புறம் நீட்டினான்.(3051) வருணதேவன் இதைக் கண்டு நின்று, அதன் கருத்தை உணர்ந்து, பண்டைய போர்க் கோடரியைக் கொண்டவனிடமிருந்து {பரசுராமரிடமிருந்து} உரிமையால் பெற்றுக்கொண்ட {வைஷ்ணவ} வில்லை, தேவர்களின் தலைவனான ராமனின் நெடுங்கையிலே கொடுத்தான்.(3052)
சினங்கொண்டவனும், மர்மங்களை {யுக்திகளை} அறிந்தவனுமான கரன், தோமரத்தால் மாதங்கத்தை {ஈட்டியால் யானையைக்} குத்துவதைப் போல, நான்கு கணைகளால் ராமனின் மார்பைத் துளைத்தான்.(24) அந்த ராமன், கரனின் கார்முகத்திலிருந்து {வில்லில் இருந்து} ஏவப்பட்ட பல்வேறு பாணங்களால் காயமடைந்து, உதிரத்தால் நனைந்த அங்கங்களுடன் கடும் எரிச்சலடைந்தான்.(25) தன்விகளில் {வில்லாளிகளில்} சிறந்தவனும், பரம வில்லைக் கொண்டவனுமான அவன் {ராமன்}, அந்தப் பெரும்போரில் தன் தனுவை எடுத்து, இலக்கை நோக்கி குறி பார்த்து, ஆறு சரங்களை ஏவினான்.(26) ஒரு பாணத்தால் சிரஸையும், அடுத்த இரண்டால் கைகளையும் தாக்கினான். அதற்கடுத்து மூன்று அர்த்தச்சந்திர பாணங்களால் மார்பைத் தாக்கினான்.(27) பிறகு குரோதமடைந்த மஹாதேஜஸ்வி {ராமன்}, அந்த ராக்ஷசனைக் கொல்வதற்காக, பாஸ்கரனுக்கு {சூரியனுக்கு} ஒப்பானவையும், கல்லில் கூராக்கப்பட்டவையுமான பதிமூன்று நாராசங்களை எடுத்தான்.(28)
சமரில் இந்திரனுக்கு சமமான பலவானான ராமன், சிரித்துக் கொண்டே அந்தப் போரில் ஒன்றால் அவனது ரதத்தின் யுகத்தையும் {ஒரு பாணத்தால் கரனின் தேரின் நுகத்தடியையும்}, நான்கால் அவனது குதிரைகளையும் தாக்கினான். ஆறால் கரனின் சாரதியுடைய சிரத்தையும் {தலையையும்}, மூன்றால் திரிவேணுவையும் {ஏர்க்காலையும்}, இரண்டால் {அந்தத் தேரின்} அச்சையும் வெட்டி வீழ்த்தினான். பிறகு, பனிரெண்டு பாணங்களால் சரம்பூட்டப்பட்ட கரனின் தனுவை முறித்தான். அந்த மஹாபலன் {ராமன்}, வஜ்ரத்துக்கு ஒப்பான பதிமூன்றால் {பதிமூன்று பாணங்களால்} கரனைத் துளைத்தான்.(29-31) தனு முறிந்தது, ரதம் அழிந்தது, அசுவங்கள் கொல்லப்பட்டன, சாரதியும் கொல்லப்பட்டான். அப்போது கீழ குதித்த கரன் கதாபாணியாக பூமியில் நின்றான்.(32)
விமானங்களில் இருந்த தேவர்களும், மஹரிஷிகளின் கூட்டமும் ஒன்றாக சேர்ந்து, பெரும் மகிழ்ச்சியடைந்து, கைகளைக் கூப்பிக் கொண்டு மஹாரதனான ராமனின் அந்தக் கர்மத்தைப் பூஜித்தனர்.(33)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 28ல் உள்ள சுலோகங்கள்: 33
Previous | | Sanskrit | | English | | Next |