Akampana | Aranya-Kanda-Sarga-31 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஜனஸ்தானத்தில் நடந்தவற்றை ராவணனிடம் தெரிவித்து, சீதையை அபகரிக்குமாறு சொன்ன அகம்பனன்; மாரீசனிடம் சென்ற ராவணன்; இராவணனை அறிவுறுத்திய மாரீசன்...
பிறகு அவசரத்துடன் கூடிய அகம்பனன், ஜனஸ்தானத்திலிருந்து வேகமாகப் புறப்பட்டுச் சென்று லங்கையில் பிரவேசித்து, ராவணனிடம் {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(1) "இராஜாவே, ஜனஸ்தானத்தில் இருந்த ராக்ஷசர்கள் பலர் கொல்லப்பட்டனர். போரில் கரனும் கொல்லப்பட்டான். நான் எப்படியோ இங்கே வந்து சேர்ந்தேன்" {என்றான் அகம்பனன்}.(2)
இவ்வாறு சொல்லப்பட்டதும், தசக்ரீவன் {பத்துத் தலையன், ராவணன்}, ரத்தம் போன்ற கண்களுடன் குரோதமடைந்து, தேஜஸ்ஸால் சுடுபவனைப் போல அந்த அகம்பனனிடம் இதைச் சொன்னான்:(3) "வெல்லப்பட முடியாத என் ஜனஸ்தானத்தை அழித்தவன் எவன்? அந்த ஆயுள் முடிந்தவன் {பகைவனான என்னிடம் தன் உயிரைக் கொடுக்கப் போகிறவன்} எவன்? இனி உலகங்கள் எதனிலும் வாழமுடியாதவன் எவன்?(4) எனக்குப் பிரியமற்றதைச் செய்துவிட்டு, சுகமாக இருக்க மகவானும் {இந்திரனும்} சக்தனல்ல; வைச்ரவணனும் {குபேரனும்}, யமனும், ஏன் விஷ்ணுவும் சக்தரல்லர்.(5) காலனுக்கும் காலனான நான் பாவகனையும் தஹிக்கச் செய்வேன் {அக்னியையும் எரித்துவிடுவேன்}; மிருத்யுவையும் மரண தர்மத்தில் {யமனையும் மரணமடைபவர்களின் தர்மத்தில்} இணைத்துவிடுவேன்.(6) நான் குரோதமடைந்தால், என் தேஜஸ்ஸால் ஆதித்யனையும், பாவகனையும் எரிப்பேன். வேகத்தால் வாதத்தின் {வாயுவின்} வேகத்தையும் வலுவுடன் தடுப்பேன்" {என்றான் ராவணன்}.(7)
இவ்வாறு சினங்கொண்ட அந்த தசக்ரீவனிடம் கொண்ட பயத்தில், குழறும் குரலுடன் கூடிய அகம்பனன் தன் கைகளைக் கூப்பிக் கொண்டான். பிறகு, ராவணனிடம் அபயம் யாசித்தான்.(8) ராக்ஷசர்களில் சிறந்தவனான தசக்ரீவன், அவனுக்கு {அகம்பனனுக்கு} அபயத்தை {பாதுகாப்பை உறுதி} அளித்தான். அப்போது அந்த அகம்பனன் நம்பிக்கையுடன் தயக்கமின்றி {பின்வரும்} இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(9) "சிங்கம் போன்ற உடற்கட்டைக் கொண்டவனும், இளைஞனும், வலிமைமிக்க தோள்களைக் கொண்டவனும், உருண்டு திரண்ட மஹாபுஜங்களைக் கொண்டவனும், தசரத புத்திரனும், ராமன் என்ற பெயரைக் கொண்டவனும்,(10) சியாமள {கரிய} வர்ணனும், பெரும் புகழையுடையவனும், ஒப்பற்ற பராக்கிரமத்துடன் கூடியவனுமான ஒரு ஸ்ரீமானால் ஜனஸ்தானத்தில் தூஷணனுடன் கூடிய கரன் கொல்லப்பட்டான்" {என்றான் அகம்பனன்}.(11)
இராக்ஷசாதிபனான ராவணன், அகம்பனனின் சொற்களைக் கேட்டு, நாகேந்திரனை {பாம்புகளின் தலைவனைப்} போலப் பெருமூச்சுவிட்டபடியே இந்தச் சொற்களைச் சொன்னான்:(12) "அந்த ராமன், ஸுரேந்திரனோடும் {தேவர்களின் தலைவனான இந்திரனோடும்}, சர்வ அமரர்களோடும் சேர்ந்து ஜனஸ்தானத்திற்கு வந்திருக்கிறானா? அகம்பனரே, சொல்வீராக" {என்றான் ராவணன்}.(13)
மீண்டும் ராவணனின் வாக்கியத்தைக் கேட்டு நடுக்கமடைந்த அகம்பனன், அந்த மஹாத்மாவின் {ராமனின்} பலத்தையும், விக்கிரமத்தையும் இன்னும் அதிகமாகச் சொன்னான்:(14) "இராமன் என்ற பெயரைக் கொண்ட மஹாதேஜஸ்வி, சர்வ தனுஷ்மதர்களிலும் {வில்லாளிகள் அனைவரிலும்} சிறந்தவனாகவும், திவ்யாஸ்திரங்களின் குணங்களுடன் கூடியவனாகவும், யுத்தத்தில் பரம தர்மவானாகவும் {அல்லது உயர்ந்த புரந்தரனுக்கு நிகரானவனாக} இருக்கிறான்.(15) ஒத்த ரூபம் கொண்ட அவனது தம்பி லக்ஷ்மணனும், பலவானாகவும், ரத்தம் போன்ற கண்களுடனும், துந்துபியின் குரலுடனும் கூடியவனாகவும், சசிக்கு {சந்திரனுக்கு} ஒப்பான முகத்தைக் கொண்டவனாகவும் இருக்கிறான்.(16)
இராஜர்களில் சிறந்தவனான அந்த ஸ்ரீமான் {ராமன்}, அநிலனையும் {வாயுவையும்}, பாவகனையும் {அக்னியையும்} போன்ற அவனுடன் {லக்ஷ்மணனுடன்} சேர்ந்தே ஜனஸ்தானத்தை அழித்தான்.(17) மஹாத்மாக்களான தேவர்களைக் குறித்து இங்கே சிந்திக்கவும் வேண்டாம். அவர்கள் அங்கே இல்லை. உருக்ம {தங்கப்} புங்கங்களுடனும், இறகாலான சிறகுகளுடனும் ராமன் ஏவிய சரங்கள், ஐந்து தலை சர்ப்பங்களாக மாறி ராக்ஷசர்களை அழிக்கத் தொடங்கின.(18,19அ) இராக்ஷசர்கள் பயத்துடன் எங்கேயெல்லாம் ஓடினார்களோ அங்கேயெல்லாம் ராமனே தங்கள் முன் நிற்பதாக உணர்ந்தனர். அனகா {பாவமற்றவனே}, உன்னுடைய ஜனஸ்தானம் இவ்வாறே அவனால் அழிக்கப்பட்டது" {என்றான் அகம்பனன்}.(19ஆ,20)
அகம்பனன் சொன்னவற்றைக் கேட்ட ராவணன், பின் வரும் வாக்கியத்தைச் சொன்னான், "இராமனையும், லக்ஷ்மணனையும் கொல்வதற்காக நான் ஜனஸ்தானம் செல்ல விரும்புகிறேன்" {என்றான் ராவணன்}.(21)
அவன் இவ்வாறு சொன்னதும் அகம்பனன் இதைச் சொன்னான், "இராஜாவே, ராமனின் பலத்தையும், பௌருஷத்தையும் {ஆண்மையையும் / வீரத்தையும்} உள்ளபடியே சொல்கிறேன் கேட்பீராக.(22) பெரும்புகழ்பெற்ற ராமன், விக்கிரமத்தால் வெல்லப்பட முடியாதவன். பூர்ணமான நீருடன் ஓடும் நதியின் வேகத்தை சரங்களால் அவன் தடுத்துவிடுவான்.(23) ஸ்ரீமானான அந்த ராமன், திடமாக நிலைத்திருக்கும் நக்ஷத்திரங்கள், கிரகங்கள் உள்ளிட்ட விண்ணையேகூட இடிந்து விழச் செய்துவிடுவான். {நீரில்} மூழ்கும் மஹீயையும் {பூமியையும்} அவன் உயர்த்திவிடுவான்.(24) அந்த விபு {சாமர்த்தியசாலியான அந்த ராமன்}, சமுத்திரத்தின் கரையைப் பிளந்து, உலகங்களை அதில் அமிழச் செய்துவிடுவான். சமுத்திரத்தின் வேகத்தையும், வாயுவையும்கூட சரங்களால் அவன் அடக்கிவிடுவான்.(25)
புகழ்மிக்கவனான அந்த புருஷ சிரேஷ்டன் {மனிதர்களில் சிறந்த ராமன்}, தான் விரும்பினால், விக்கிரமத்தால் {வீரத்தால்} உலகங்களை அழித்துப் புதிதாக மீண்டும் சிருஷ்டிக்கும் சக்தனாக இருக்கிறான்.(26) தசக்ரீவா {பத்துத்தலை ராவணா}, சுவர்க்கத்தை வெல்ல இயலாத பாப ஜனங்களைப் போல ரணத்தில் {போரில்} உன்னாலோ, உலகில் உள்ள ராக்ஷசர்களாலோ ராமன் வெல்லப்பட முடியாதவனாக இருக்கிறான்.(27) சர்வ தேவர்களாலும், அசுரர்களாலும் கூட அவனைக் கொல்ல முடியுமென நான் நினைக்கவில்லை. அவனை வதைக்கும் ஒரே உபாயம் இதுவே, அதை ஏகமனத்துடன் கேட்பாயாக.(28)
உலகில் உத்தமியும், இளமை நிறைந்தவளும், சமமாகப் பகுக்கப்பட்ட அங்கங்களைக் கொண்டவளும், ஸ்திரீ ரத்தினமும், ரத்தின பூஷிதையும் {ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவளும்}, அழகிய இடையைக் கொண்டவளும், சீதை என்ற பெயரைக் கொண்டவளுமான ஒருத்தி அவனது பாரியையாக {மனைவியாக} இருக்கிறாள்.(29) அவளுக்கு நிகரான ஒரு ஸ்திரீ, தேவிகளிலும் இல்லை, கந்தர்விகளிலும் இல்லை, அப்சரஸ்களிலும் இல்லை. பன்னகிகளிலும் இல்லை எனும்போது மானுஷிகளில் எவ்வாறு இருக்க முடியும்?(30) மஹாவனத்தில் உள்ள அவனது பாரியாளை {மனைவியை} நீ அபஹரிப்பாயாக. இராமன் சீதையை இழந்தால் உண்மையில் அவனால் {இவ்வாறு} இருக்க இயலாது" {என்றான் அகம்பனன்}[1].(31)
[1] இந்த அகம்பனன் ராவணனின் தாய்மாமனாவான். அதாவது ராவணனின் தாய் கைகசியின் தமயனாவான்.
இராக்ஷசாதிபனான ராவணனுக்கு அந்த வாக்கியம் பிடித்திருந்தது. அந்த மஹாபாஹு {ராவணன்}, சற்றே சிந்தித்துவிட்டு, அகம்பனனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(32) "ஏற்கிறேன். அதிகாலையில் சாரதியுடன் தனியாக நான் செல்ல விரும்புகிறேன். இந்த மஹாபுரிக்கு {லங்காபுரிக்கு} வைதேஹியை மகிழ்ச்சியுடன் அழைத்து வருவேன்" {என்றான் ராவணன்}.(33)
இவ்வாறு சொன்ன ராவணன், கழுதைகள் {கோவேறு கழுதைகள்}[2] பூட்டப்பட்டதும், ஆதித்யனின் {சூரியனின்} வர்ணத்தை கொண்டதுமான ரதத்தின் மீதேறி, சர்வ திசைகளையும் பிரகாசிக்கச் செய்தபடியே பிரயாணித்தான்.(34) அந்த ராக்ஷசேந்திரனுக்கு உரியதும், நக்ஷத்திரப் பாதையில் வேகமாகச் செல்லக்கூடியதுமான அந்த மஹத்தான ரதம், மேகத்தில் ஒளிரும் சந்திரனைப் போலத் திகழ்ந்தது.(35) அவன் தூரத்தில் உள்ள {மாரீசனின்} ஆசிரமத்தை அடைந்ததும், தாடகையின் மகனால் {மாரீசனால்} வரவேற்கப்பட்டான். மாரீசன், மனிதர்களுக்குக் கிடைத்தற்கரிய பக்ஷியங்களாலும் {சிற்றுண்டிகளாலும்}, போஜனங்களாலும் {உணவுகளாலும்} அந்த ராஜனை அர்ச்சித்தான் {ராவணனை உபசரித்தான்}.(36)
[2] ஆண் கழுதைக்கும், பெண் குதிரைக்கும் பிறந்தவை கோவேறு கழுதைகள். "கர" என்ற சம்ஸ்கிருதச் சொல் கழுதையையும், கோவேறு கழுதையையும் குறிக்கும்.
மாரீசன் தானே முன்வந்து ஆஸனமும், நீரும் கொடுத்துப் பூஜித்து, அர்த்தம் பொதிந்த {பின்வரும்} சொற்களைச் சொன்னான்:(37) "ராக்ஷசாதிபனே, ராஜாவே, லோகங்களின் குசலம் எப்படி? {உலகத்தினர் அனைவரும் நலமாக இருக்கின்றனரா?} நீ அவசரமாக வந்திருப்பது எதனால் என்பதை அறியாத ஆவலில் கேட்கிறேன்" {என்று கேட்டான்}.(38)
மாரீசன் இவ்வாறு சொன்ன பிறகு, மஹாதேஜஸ்வியும், வாக்கிய கோவிதனுமான {பேசுவதில் சமர்த்தனுமான} அந்த ராவணன், இந்த வாக்கியத்தைச் சொன்னான்:(39) "தாதா {ஐயா}, எதற்கும் சளைக்காத ராமனால் என் ஆரக்ஷம் {பாதுகாப்புப் படை} முற்றாக அழிக்கப்பட்டது. அழித்தற்கரிய ஜனஸ்தானம் முழுவதும் யுத்தத்தில் அழிக்கப்பட்டது. அவனது பாரியையை {ராமனின் மனைவியை} அபஹரித்து வரும் காரியத்தில் நீ எனக்கு நட்புடன் உதவ வேண்டும்" {என்றான் ராவணன்}.(40,41அ)
மாரீசன், அந்த ராக்ஷசேந்திரன் சொன்ன சொற்களைக் கேட்டு {பின்வரும்} வாக்கியங்களைச் சொன்னான், "மித்திர ரூபத்தில் உள்ள சத்ருவான எவன் {நண்பனின் வடிவில் உள்ள எந்தப் பகைவன்}, சீதையைக் குறித்துச் சொன்னான். இராக்ஷச சார்தூலா {ராக்ஷசர்களில் புலியே}, உன்னால் நிந்திக்கப்பட்டு, உன்னிடம் மகிழ்ச்சியற்றிருப்பவன் எவன்?(41ஆ,42) "சீதையை இங்கு அழைத்து வா" என்று சொன்னவன் எவன் என்பதை எனக்குச் சொல்வாயாக. மொத்த ராக்ஷசலோகத்தின் சிகரத்தையே {உன்னையே} சிதைக்க விரும்புகிறவன் எவன்?(43) எவன் உன்னை {இந்த அடாத காரியத்தில்} தூண்டுகிறானோ அவன் சத்ருவே. இதில் ஐயமேதும் இல்லை. அவன் உன்னைக் கொண்டு பாம்பின் வாயிலிருக்கும் விஷப்பல்லைப் பிடுங்க விரும்புகிறான்.(44)
எவனால், எந்த நோக்கத்திற்காக நீ இந்த தவறான பாதையில் அடியெடுத்து வைத்தாய்? இராஜாவே, சுகமாகத் துயில் கொண்ட உன் தலையில் அடித்தவன் எவன்?(45) இராவணா, மிக சுத்தமான வம்சம், நெருக்கமான ஜனங்கள் ஆகியவற்றைத் துதிக்கையாகக் கொண்டதும், தேஜஸ்ஸை {வலிமையை} மதமாகக் கொண்டதும், எதற்கும் சளைக்காத தோள்களைக் கொம்புகளாகக் கொண்டதுமான ராகவனென்ற காந்திமிக்க ஹஸ்தி {மதயானை} போரில் கண்ணெடுத்தும் பார்க்கத் தக்கதல்ல.(46)
இரணத்தின் {போரின்} மத்தியில் திடமாக அங்கங்களைத் தொடும் வாலைக் கொண்டதும், சிறந்த ராக்ஷசர்களெனும் மான்களைக் கொலை செய்வதும், சரங்களையே பூரண அங்கங்களாகக் கொண்டதும், கூர்மையான வாளைக் கோரைப் பற்களாகக் கொண்டதும், தூங்கிக் கொண்டிருப்பதுமான அந்த நிருசிம்ஹத்தை {மனித சிங்கத்தை} நீ விழிக்கச் செய்வது யுக்தமல்ல {நல்லதல்ல}.(47)
ராக்ஷச ராஜாவே, விற்களெனும் முதலையுடையதும், புஜவேகமெனும் பெரும் சேற்றைக் கொண்டதும், சரங்களெனும் அலைகளையுடையதும், போரெனும் பிரவாகங்களை உடையதுமான அதிகோரமான ராம பாதாளத்தில் குதிப்பது யுக்தமல்ல.(48)
இலங்கேசுவரா, ராக்ஷசேந்திரா {லங்கையின் தலைவா, ராக்ஷசர்களின் தலைவா}, அருள்புரிவாயாக. இலங்கைக்கு நல்லபடியாகத் திரும்பிச் செல்வாயாக. நீ உன் தாரங்களுடன் {மனைவியருடன்} நித்தியம் இன்புற்று வாழ்வாயாக. வனத்தில் ராமனும் பாரியையுடன் {மனைவியுடன்} இன்புற்று இருக்கட்டும்" {என்றான் மாரீசன்}.(49)
இவ்வாறு மாரீசன் சொன்னதும், தசக்ரீவனான ராவணன் லங்காபுரிக்குத் திரும்பிச் சென்று, உத்தம கிருஹத்திற்குள் நுழைந்தான்[2].(50)
[2] இந்த சர்க்கம் முழுவதும் செம்பதிப்பான பிபேக்திப்ராய் பதிப்பில் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இந்த சர்க்கம் முழுவதிலும் சூர்ப்பணகைக்கு நேர்ந்த அங்கபங்கத்தை இந்த அகம்பனன் ராவணனிடம் சொல்கிறானில்லை. இலக்ஷ்மணனையும், சீதையையும் குகைக்கு அனுப்பிவிட்டு, ராமன் மட்டுமே பதினான்காயிரம் ராக்ஷசர்களைக் கொன்றதாகச் சொல்லப்பட்டிருக்கும்போது, இராமனும், லக்ஷ்மணனும் சேர்ந்து அரக்கர்களை வதம் செய்தது போன்ற தொனியிலேயே இங்கே 17ம் சுலோகத்தில் அகம்பனன் பேசுகிறான். கர, தூஷண, திரிசரஸ் மற்றும் பதினான்காயிரம் ராக்ஷசர்களின் வதத்திற்குக் காரணமாகத் திகழ்ந்த சூர்ப்பணகையின் பெயரே கூட இங்கு ஒருமுறையேனும் உரைக்கப்படவில்லை. இராமாயணத்தில் முக்கிய பாத்திரமான ராவணன் எந்த அறிமுகமும் இன்றி சாதாரணமாக இங்கே அறிமுகப்படுத்தப்படுகிறான். ஆனால் அடுத்த சர்க்கத்தில் விரிவாக விவரிக்கப்படுகிறான். ஆய்வாளர்கள் இந்த சர்க்கத்தை இடைச்செருகல் என்றே கருதுகிறார்கள்.
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 31ல் உள்ள சுலோகங்கள்: 50
Previous | | Sanskrit | | English | | Next |