Agastya gave arms | Aranya-Kanda-Sarga-12 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமன், லக்ஷ்மணன், சீதை ஆகியோருக்கு விருந்தோம்பல் செய்த அகஸ்தியர்; அவரிடம் இருந்து தெய்வீக வில்லையும், பல்வேறு ஆயுதங்களையும் பெற்றுக் கொண்ட ராமன்...
இராகவனின் தம்பியான லக்ஷ்மணன் அந்த ஆசிரமபதத்திற்குள் பிரவேசித்து, அகஸ்தியரின் சிஷ்யரை அணுகி, இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(1) "தசரதர் என்ற பெயரைக் கொண்ட ராஜாவின் மூத்த மகனும், பலவானுமான ராமர், தன் பாரியையான சீதை சஹிதராக {அகஸ்திய} முனிவரைக் காண்பதற்கு வந்திருக்கிறார்.(2) அவருடன் பிறந்த தம்பியும், அவரது ஹித அனுகூலனும் {நலன்விரும்பியும்}, பக்தனுமான என் பெயர் லக்ஷ்மணன். இஃது உமது செவிகளை எட்டியிருக்கலாம் {உமக்கும் இவை தெரிந்திருக்கலாம்}.(3) இத்தகைய நாங்கள், பிதாவின் சாசனத்தால் {ஆணையால்} இந்த உக்கிர வனத்திற்குள் பிரவேசித்தோம். நாங்கள் அனைவரும் {அகஸ்திய} பகவானைக் காண விரும்புகிறோம் என்று {அவரிடம்} தெரிவிப்பீராக" {என்றான் லக்ஷ்மணன்}.(4)
அந்த தபோதனர் {அகஸ்தியரின் சிஷ்யர்}, லக்ஷ்மணனின் அந்தச் சொற்களைக் கேட்டு, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லிவிட்டு, அதைத் தெரிவிப்பதற்காக அக்னி சரணத்திற்குள் {அக்னிஹோத்ர ஆலயத்திற்குள்} பிரவேசித்தார்.(5) அகஸ்தியருக்கு சம்மதமுள்ள {ஏற்புடைய} சிஷ்யரான அவர், விரைந்து பிரவேசித்து, செய்த தபத்தால் {கண்ணெடுத்துப்} பார்க்கவும் முடியாதவராக விளங்கும் அந்த முனிசிரேஷ்டரிடம் {சிறந்த முனிவரான அகஸ்தியரிடம்} கைகளைக் கூப்பிக் கொண்டு, ராமனின் வரவைக் குறித்து லக்ஷ்மணன் சொன்னதைப் போலவே இவ்வாறு சொன்னார்:(6,7அ) "பாரியையான சீதை சஹித ராமன், லக்ஷ்மணன் என்ற தசரத புத்திரர்கள் இருவரும் ஆசிரமபதத்திற்குள் பிரவேசித்திருக்கின்றனர்.(7ஆ,8அ) அந்த அரிந்தமர்கள் {பகைவரை அழிப்பவர்களான அவர்கள்} உமக்குத் தொண்டாற்றும் நோக்கில், உம்மைக் காண இங்கே வந்திருக்கிறார்கள். அனந்தரம் {அடுத்து} என்ன செய்ய வேண்டும் என்பதை ஆணையிடுவதே உமக்குத் தகும்" {என்றார் அந்த சிஷ்யர்}.(8ஆ,9அ)
அந்த சிஷ்யரின் மூலம் ராமன், லக்ஷ்மணன், மஹாபாக்யவதியான வைதேஹி ஆகியோரின் வரவைக் கேட்டவர் {அகஸ்தியர்}, இந்தச் சொற்களைச் சொன்னார்:(9ஆ,10அ) "உண்மையில் என் மனம் நீண்ட காலமாக எவனது வரவுக்காக ஏங்கியதோ, அந்த ராமன் இன்று என்னைக் காண வந்திருப்பது நற்பேறே.(10ஆ,11அ) அவர்களை ஏன் பிரவேசிக்கச் செய்யவில்லை? செல்வாயாக. ராமனையும், அவனது பாரியாளையும் {மனைவியையும்}, லக்ஷ்மணனையும் வரவேற்று என் சமீபத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக" {என்றார் அகஸ்தியர்}. (11ஆ,12அ)
தர்மஜ்ஞரும், மஹாத்மாவுமான அந்த முனிவர் இவ்வாறு சொன்னதும், அந்த சிஷ்யர் கைகளைக் கூப்பி வணங்கி, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொன்னார்.(12ஆ,13அ) பிறகு, குழப்பத்துடன் {பரபரப்புடன்} வெளிப்பட்ட அந்த சிஷ்யர், லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னார், "இந்த ராமர் எங்கே? முனிவர் காண ஹேதுவாக தானே பிரவேசிக்கட்டும்" {என்றார்}.(13ஆ,14அ)
பிறகு லக்ஷ்மணன், அந்த சிஷ்யருடன் வெளியே ஆசிரமபதத்திற்குச் சென்று, காகுத்ஸ்தனையும் {ராமனையும்}, ஜனகாத்மஜையான சீதையையும் அவருக்குக் காட்டினான்.(14ஆ,15அ) சிஷ்யர், அகஸ்தியரின் வாக்கியங்களைப் பணிவுடன் சொல்லி, வரவேற்புக்குத் தகுந்தவனான அவனை {ராமனை} நன்கு வரவேற்று, தகுந்த முறையில் பிரவேசிக்கச் செய்தார்.(15ஆ,16அ) இராமன், சீதை, லக்ஷ்மணன் ஆகியோர் சாந்தமான மான்கள் நிறைந்த அந்த ஆசிரமத்தைப் பார்த்தபடியே {ஆசிரமத்திற்குள்} பிரவேசித்தனர்.(16ஆ,17அ)
அங்கே அவன் பிரம்ம ஸ்தானம் {பிரம்மனின் ஆலயம்}, அதே போல அக்னி ஸ்தானம்,{17ஆ} விஷ்ணு ஸ்தானம், மஹேந்திர {இந்திர} ஸ்தானம், அதேபோல விவஸ்வத {சூரிய} ஸ்தானம், சோம {சந்திரன்} ஸ்தானம், பக {சிவ / செல்வதேவ} ஸ்தானம், குபேர ஸ்தானம்,{18} தாதா விதாதா ஸ்தானம், அதேபோல வாயு ஸ்தானம், மஹாத்மாவும், பாசஹஸ்தனுமான வாருண ஸ்தானம் {கைகளில் பாசக் கயிற்றைக் கொண்டவனுமான வருணனின் ஆலயம்}, அதே போல காயத்ரீ ஸ்தானம், வஸுக்கள் ஸ்தானம், நாகராஜ {ஆதிசேஷ} ஸ்தானம், கருட ஸ்தானம்,{20 கார்த்திகேய ஸ்தானம், தர்மஸ்தானம் ஆகியவற்றைக் கண்டான்[1].(17ஆ-21அ) அப்போது, சிஷ்யர்களால் சூழப்பட்டவராக அம்முனிவர் {அகஸ்தியர்} விரைந்து வந்து கொண்டிருந்தார். தேஜசால் ஒளிர்ந்து கொண்டிருந்த ராமனும், எதிரில் வந்து கொண்டிருக்கும் முனிவர்களைக் கண்டான்.(21ஆ,22அ) அந்த வீரன் {ராமன்}, லக்ஷ்மிவர்தனனான {செல்வத்தை / செல்வாக்கை அதிகரிப்பவனான} லக்ஷ்மணனிடம் இந்தச் சொற்களைச் சொன்னான், "இலக்ஷ்மணா, பகவானான அகஸ்திய ரிஷி இதோ வருகிறார். தகைமைமிக்க இவரை நான் தபங்களின் கொள்ளிடமாகக் கருதுகிறேன்" {என்றான் ராமன்}.(22ஆ,23)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்த சரணாலயங்கள், குறிப்பிட்ட தெய்வங்களை வழிபட அவர்களை இருப்புக்கு அழைப்பதற்கென ஆசிரமங்களில் அமைந்திருக்கும் புனித இடங்களாகும் {கோவில்களாகும்}. வேத கோட்பாட்டின்படி, பொதுவாக இவை எண்ணிக்கையில் பதினேழாக இருக்கும். இந்த இடங்கள் அனைத்தையும் கடந்த பிறகே ஹோம குண்டம், அதாவது வேள்விப்பீடம் வரும். எனவே, ஆசிரமங்களுக்குள்ளே வேறு எவரையும் அனுமதிப்பதில்லை. அவர்கள் ஆசிரமபதம் என்றழைக்கப்படும் ஆசிரம வாயிலிலேயே / முகப்புப் பகுதியிலேயே இருக்க வேண்டும். அதனாலேயே ராமன் ஆசிரமத்திற்குள் நுழைவதற்கான அனுமதியை வேண்டி நின்றான்" என்றிருக்கிறது. இந்த நடைமுறையை அகஸ்தியரிடம் மட்டும் பின்பற்றுவதற்கான நோக்கம் என்ன என்பதற்கு விடையில்லை என்றாலும், இந்த சர்க்கத்தின் 32 முதல் 36ம் சுலோகம் வரையிலுள்ள செய்தியின் பொருள் இதற்கான மறைமுக பதிலைச் சொல்லுவதாகவும் இருக்கக்கூடும். இராமாயணத்தின் செம்பதிப்பைத் தழுவிய பிபேக்திப்ராய் பதிப்பில், "பிரம்மா, அக்னி, விஷ்ணு, மஹேந்திரன், விவஸ்வான், சோமன், பகன், குபேரன், தாதா விதாதா, வாயு" ஆகியோருக்கான 10 ஆலயங்கள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. இங்கே குறிப்பிடப்படும் ஆலங்களில் சிவனுக்கென்ற ஓராலயம் இல்லையே என்று பல பதிப்புகளின் அடிக்குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. இங்கே சுட்டப்படும் பகன் என்பது ஓர் ஆதித்யனைக் குறித்தாலும், ருத்ர வடிவத்தையும் குறிக்கும். பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில், இந்த இடத்தில், "பகரென்னும் சிவபெருமான் ஆலயத்தையும்" என்று வருகிறது.
மஹாபாஹுவான அந்த ரகுநந்தனன், சூரியப் பிரகாசம் கொண்ட அகஸ்தியரைக் குறித்து இவ்வாறு சொல்லிவிட்டு, {நெடுஞ்சாண்கிடையாகத் தரையில்} விழுந்து அவரது பாதங்களை பற்றிக் கொண்டான்.(24) தர்மாத்மாவான அந்த ராமன், வைதேஹியான சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் சேர்ந்து அவரை வணங்கிவிட்டு, கைகளைக் கூப்பியபடி நின்றான்.(25) ஆசனமும் {இருக்கையும்}, நீரும் கொடுத்து காகுத்ஸ்தனை {ராமனை} வரவேற்று, குசலம் விசாரித்தவர் {அகஸ்தியர்}, "அமர்வாயாக" என்று சொன்னார்.(26) அதிதி பூஜை செய்து {விருந்தினரை வரவேற்று}, அக்னிக்குக் காணிக்கை அளித்தவர் {அகஸ்தியர்}, அர்க்கியம் கொடுத்து, வானப்ரஸ்த தர்மத்திற்குகந்த போஜனத்தையும் {உணவையும்} அவர்களுக்குக் கொடுத்தார்.(27) தர்மஜ்ஞரான அந்த முனிபுங்கவர் {அகஸ்தியர்}, தமது ஆசனத்தில் அமர்வதற்கு முன்னர், கைகளைக் கூப்பி நின்றிருந்த தர்மகோவிதனான ராமனிடம் {தர்மத்தை அறிந்தவர்களில் சிறந்தவனான ராமனிடம் பின்வருமாறு} சொன்னார்:(28) "காகுத்ஸ்தா, அக்னிக்குக் காணிக்கையளித்து, அர்க்கியம் கொடுத்து, அதிதி பூஜை செய்தவன் {விருந்தோம்பல் செய்தவன்}[2], தபஸ்விகளுக்கான நடைமுறையில் இருந்து மாறுபட்டால், போலி சாக்ஷியை {பொய் சாட்சி அளித்தவனைப்} போன்று பரலோகத்தில் தன் மாமிசத்தையே பக்ஷிப்பான் {தன் சதையையே உண்பான்}.(29) சர்வலோகத்தின் ராஜாவும், தர்மசாரியும் {அறவழியில் நடப்பவனும்}, மஹாரதனும் {பெரும் போர்வீரனும்}, பூஜைக்கும், மதிப்புக்கும் தகுந்தவனுமான நீ, பிரிய அதிதியாக {அன்புக்குரிய விருந்தினனாக} வந்திருக்கிறாய்" {என்றார் அகஸ்தியர்}[3].(30)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஒரு விருந்தினன், விருந்து அளிப்பவனை சொர்க்கங்களுக்குத் தகுந்தவனாக்குகிறான். "அக்னி வழிபாட்டிற்குப் பிறகும், உணவு உண்பதற்கு முன்பும் வருபவன் {விருந்தாளி} அன்புக்குரியவனாகவோ, இகழத்தகுந்தவனாகவோ, மூடனாகவோ, அறிஞனாகவோ இருப்பினும் விருந்தளிப்பவனை அவன் சொர்க்கத்திற்கு இட்டுச் செல்கிறான்" என்று பராசர சூத்திரம் சொல்கிறது. போலி சான்றளிக்கும் எந்த போலி சாட்சியும், நரகத்திற்கு மட்டும் செல்லாமல், தன் சதையையே உண்ணும் நிலைக்கும் ஆளாவான். விருந்தோம்பல் செய்பவனின் விஷயத்திலும் இதே நிலைதான்" என்றிருக்கிறது. அதாவது, போலியாக உபசரிப்பவனின் நிலையும் இதேதான் என்பது பொருள்.
[3] 30ம் சுலோகத்தை முதலிலும், 29ம் சுலோகத்தை அதற்கடுத்தும் படித்தால் பொருள் சரியாக விளங்கும்.
இவ்வாறு சொன்ன அகஸ்தியர், ராகவனை {ராமனைப்} பூஜித்து, அவனது விருப்பத்திற்குரிய பழங்கள், கிழங்குகள், புஷ்பங்கள் மற்றும் பிற பொருட்களையும் கொடுத்த பிறகு {பின்வருமாறு} சொன்னார்:(31) "புருஷவியாகரா {மனிதர்களில் புலியே}, ஹேம வஜ்ரங்களால் {பொன்னாலும், வைரங்களாலும்} அலங்கரிக்கப்பட்டதும், மஹத்தானதும், திவ்யமானதுமான இந்த வைஷ்ணவ வில்லை {விஷ்ணுவின் வில்லை}[4] விசுவகர்மன் நிர்மாணித்தான். சூரியப் பிரகாசம் கொண்டவையும், அமோகமானவையுமான {வீணாகாதவையுமான} இந்த உத்தம சரங்களை பிரம்மன் தத்தம் செய்தான்.(32,33அ) வற்றாதவையும், பாவகனை {அக்னியைப்} போல ஜுவலிக்கும் கூரிய பாணங்கள் நிறைந்தவையுமான இந்தத் தூணிகளையும், பொன்னால் அலங்கரிக்கப்பட்டதும், பொன்னுறையுடன் கூடியதுமான இந்த வாளையும் மஹேந்திரன் எனக்கு தத்தம் செய்தான்.(33ஆ,34) இராமா, பூர்வப் போரொன்றில், இந்த தனுசைக் கொண்டே மஹாசுரர்களைக் கொன்று, திவோகஸர்களின் {சொர்க்கவாசிகளின்} செழிப்பையும், பிரகாசத்தையும் விஷ்ணு மீட்டான்.(35) மாநதா {கௌரவத்தை அளிப்பவனே, ராமா}, இந்த தனுவையும், தூணிகளையும் {அம்பறாத்தூணிகள் இரண்டையும்}, சரங்களையும், கட்கத்தையும் {வாளையும்}, ஜயத்துக்காக வஜ்ரத்தை ஏந்தும் வஜ்ரதாரிப் போல {வெற்றி அடைவதற்காக வஜ்ராயுதத்தை ஏந்தும் இந்திரனைப் போலப்} பெற்றுக் கொள்வாயாக[5]" {என்றார் அகஸ்தியர்}.(36)
[4] தாதாசாரியர் பதிப்பில், "இங்கே பாராய், இந்த வில் விஸ்வகர்மனா லியற்றப்பட்ட ஸ்ரீமஹாவிஷ்ணுவினுடைய கோதண்டம்" என்றிருக்கிறது. இராமனை கோதண்டபாணி {கோதண்ட வில்லைத் தரித்தவன்} என்பார்கள். மூலத்தில் வைஷ்ணவில் {விஷ்ணுவின் வில்} என்றே இருக்கிறது.
[5] விழுமியது சொற்றனை இவ்வில் இது இவன் மேல்நாள்முழுமுதல்வன் வைத்துளது மூவுலகும் யானும்வழிபட இருப்பது இது தன்னை வடிவாளிக்குழு வழு இல் புட்டிலொடு கேடி என நல்கிஇப்புவனம் முற்றும் ஒரு தட்டினிடை இட்டால்ஒப்பு வரவிற்று என உரைப்ப அரிய வாளும்வெப்பு உருவு பெற்ற அரன் மேரு வரை வில்லாய்முப்புரம் எரித்த தனி மொய்க்கணையும் நல்கா- கம்பராமாயணம் 2685, 2686ம் பாடல்கள், அகத்தியப்படலம்பொருள்: "சிறப்பானவற்றைச் சொன்னாய். இவ்விடத்திலுள்ள இந்த வில் முற்காலத்தில் முழுமுதல்வன் {திருமால் / விஷ்ணு} வைத்திருந்தது; மூவுலகும் நானும் வழிபட இருப்பது, இவ்வில்லையும், கூர்மையான வாளிகளுடன் {அம்புகளுடன்} கூடிய இந்தக் குற்றமில்லா அம்புப்புட்டியோடு எடுத்துக் கொள்வாயாக" என்று சொல்லிக் கொடுத்தவர் {அகஸ்தியர்}, இந்த புவனம் முழுவதையும் ஒரு தராசுத் தட்டில் வைத்தாலும் ஒப்பானது என்று சொல்வதற்கு இயலாத அரிதான வாளையும், வெப்பத்தை உருவமாகக் கொண்ட அரன் மஹாமேரு மலையை வில்லாகக் கொண்டு, திரிபுரம் எரித்த ஒப்பிலாத வலிய கணையையும் கொடுத்தார்.
மஹாதேஜஸ்வியான பகவான் அகஸ்தியர் இவ்வாறு சொல்லிவிட்டு, அந்தச் சிறந்த ஆயுதங்கள் அனைத்தையும் ராமனுக்குத் தத்தம் செய்துவிட்டு, மீண்டும் {பின்வருமாறு} சொன்னார்.(37)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 12ல் உள்ள சுலோகங்கள்: 37
Previous | | Sanskrit | | English | | Next |