Makaraksha | Yuddha-Kanda-Sarga-078 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: போர்க்களம் செல்ல மகராக்ஷனைப் பணித்த ராவணன்; மகராக்ஷன் போர்க்களம் நோக்கிச் சென்றது...
நிகும்பன் ஹதம் செய்யப்பட்டதையும் {கொல்லப்பட்டதையும்}, கும்பன் வீழ்த்தப்பட்டதையும் கேட்ட ராவணன், பெரிதும் கோபமடைந்து, அனலனை {நெருப்பைப்} போல எரிந்தான்.(1) குரோதம், சோகம் ஆகிய இரண்டிலும் நீக்கமற நிறைந்த நைர்ருதன் {ராக்ஷசன் ராவணன்}, கரபுத்ரனும், விசாலாக்ஷனுமான {கரனின் மகனும், அகன்ற விழிகளைக் கொண்டவனுமான} மகராக்ஷனிடம்,(2) "புத்ரா {மகனே}, என் ஆஜ்ஞையின் {ஆணையின்} பேரில், பலத்தால் {படையால்} சூழப்பட்டவனாகச் செல்வாயாக. வனௌகசர்களுடன் {வனத்தில் வசிப்பவர்களான வானரர்களுடன்} கூடிய ராகவன் {ராமன்}, லக்ஷ்மணன் ஆகிய இருவரையும் கொல்வாயாக" {என்றான் ராவணன்}.(3)
கராத்மஜனான {கரனின் மகனான} மகராக்ஷன், ராவணனின் சொற்களைக் கேட்டுத் தன்னை சூரனாக நினைத்து மகிழ்ந்து, "அப்படியே {ஆகட்டும்}" என்று நிசாசரனிடம் {இரவுலாவியான ராவணனிடம்} கூறினான்[1].(4)
[1] கம்பராமாயணத்தில் மகராக்ஷன், பின்வருமாறு மறுமொழி கூறுகிறான்.முந்தே என தாதையை மொய் அமர்வாய்அந்தோ உயிர் உண்டவன் ஆர் உயிர்மேல்உந்தாய் எனை யாதும் உணர்திலையோஎந்தாய் ஒரு நீ இடர் கூருதியோ.(8405)யானே செல எண்ணுவென் எய்த அவன்தான் நேர்வது தீது எனவே தணிவேன்வானே நிலனே முதல் மற்றும் எலாம்கோனே எனை வெல்வது ஓர் கொள்கையதோ?(8406)அருந் துயர்க் கடலுளாள் என் அம்மனை அழுத கண்ணள்பெருந் திருக் கழித்தல் ஆற்றாள் கணவனைக் கொன்று பேர்ந்தோன்கருந் தலைக் கலத்தின் அல்லால் கடனது கழியேன் என்றாள்பருந்தினுக்கு இனிய வேலாய் இன் அருள் பணித்தி என்றான்.(8407)- கம்பராமாயணம் 8405-8407 பாடல்கள், யுத்தகாண்டம், மகரக்கண்ணன் வதைப்படலம்பொருள்: {இதுவரை போரில் அழிந்தவர்களுக்கு} முன்பே, நெருங்கிய போரில் என் தந்தையின் ஆருயிர் உண்டவனின் {ராமனின்} உயிரைப் பறிக்க என்னை ஏவாமல் விட்டீர். ஐயோ, என்னை {என் சக்தியைக்} குறித்து ஏதும் உணர்ந்தீரில்லையோ? எந்தையே, {அதனால்} ஒப்பற்ற துயரை அடைந்தீரோ?(8405) அவன் {ராமன்} வர, நானே {அவனிடம்} செல்ல எண்ணுவேன். தானே முடிவெடுப்பது தீது என்றெண்ணி தணிவேன். வான், நிலம் முதலிய எல்லாவற்றிலும், கோனே {மன்னரே}, என்னை வெல்வதற்கு ஒரு கொள்கையுமுளதோ?(8406) அழுகின்ற கண்களுடன், அரிய துயரக்கடலில் ஆழ்ந்திருக்கும் என் அம்மனை {அன்னை}, பெருந்திருக்கழித்தல் {பெருமைக்குரிய மங்கல நாணை அவிழ்க்க} பொறுக்காமல், "கணவனைக் கொன்று சென்றவனின் கருந்தலைக் கலத்தில் அல்லால் கடனது கழியேன் {என் கணவனைக் கொன்ற ராமனின் கரிய மண்டையோட்டை பாத்திரமாகக் கொண்டு அல்லாமல் என் கணவனுக்குரிய கடனைச் செய்ய மாட்டேன்}" என்றாள். பருந்துகளுக்கு இனியன செய்யும் வேற்படையைக் கொண்டவரே, {என் தாயின் வஞ்சினத்தை நிறைவேற்றும் கடமை கொண்ட எனக்கு} இனிய அருள் புரிந்து, என்னைப் போருக்கு அனுப்புவீராக" என்றான் {மகரக்கண்ணன் / மகராக்ஷன்}.(8407)
பலவானான அவன் {மகராக்ஷன்}, தசக்ரீவனை {பத்துக் கழுத்துகளைக் கொண்ட ராவணனை} வணங்கி, பிரதக்ஷிணை செய்தான் {வலம் வந்தான்}. இராவணனின் ஆஜ்ஞையின்படி {ஆணையின்படி} சுபமாக ஒளிரும் கிருஹத்திலிருந்து வெளிப்பட்டான்.(5) கரபுத்ரன் {கரனின் மகனான மகராக்ஷன்}, தன் சமீபத்திலிருந்த பலாதியக்ஷனிடம் {படைத்தலைவனிடம் பின்வரும்} சொற்களைக் கூறினான், "இரதத்தைத் துரிதமாகக் கொண்டு வருவாயாக. சைனியத்தைத் துரிதமாக அழைத்து வருவாயாக" {என்றான் மகராக்ஷன்}.(6)
நிசாசரர்களின் பலாதியக்ஷன் {இரவுலாவிகளின் படைத்தலைவன்}, அவனது {மகராக்ஷனின்} வசனத்தைக் கேட்டு, சியந்தனத்தையும் {தேரையும்}, பலத்தையும் {படையையும்} அவனது சமீபத்தில் கொண்டு வந்தான்.(7) இரதத்தைப் பிரதக்ஷிணஞ்செய்து {தேரை வலம்வந்து, அதிலேறி}, சூதனை அழைத்த மகராக்ஷன், "ரதத்தை சீக்கிரம் செலுத்துவாயாக" என்று சொல்லி, அவனை {அந்த சூதனைத்} தூண்டினான்.(8)
பிறகு மகராக்ஷன், சர்வ ராக்ஷசர்களிடமும் இதைக் கூறினான், "இராக்ஷசர்களே, நீங்கள் யாவரும் என் முன்னிலையில் நன்கு யுத்தம்புரிவீராக.(9) மஹாத்மாவான ராக்ஷச ராஜர் ராவணன், சமரில் ராமலக்ஷ்மணர்கள் இருவரையும் கொல்லும்படி எனக்கு ஆணையிட்டிருக்கிறார்.(10) நிசாசரர்களே, இதோ {இன்று} ராமனையும், லக்ஷ்மணனையும், சாகைமிருகமான {கிளையில் வசிக்கும் விலங்கான} சுக்ரீவனையும், வானரர்களையும் என் உத்தம சரங்களால் வதைக்கப் போகிறேன் {உயர்ந்த கணைகளைக் கொண்டு கொல்லப்போகிறேன்}.(11) இதோ வந்திருக்கும் வானரர்களின் மஹாசம்முவை {பெரும்படையை}, காய்ந்த விறகை {எரிக்கும்} அனலனை {நெருப்பைப்} போல, சூலங்களைப் ஏவி முற்றாக அழிக்கப் போகிறேன்" {என்றான் மகராக்ஷன்}.(12)
பலவான்களும், நானாவித ஆயுதங்களைத் தரித்தவர்களுமான நிசாசரர்கள் {இரவுலாவிகள்}, மகராக்ஷனின் அந்த வசனத்தைக் கேட்டு சமாஹிதமடைந்தனர் {நிலைத்தன்மையடைந்தனர்}.(13) காமரூபிகளும் {நினைத்த வடிவை ஏற்க வல்லவர்களும்}, துருத்திய பற்களுடனும், பழுப்பு நிறக் கண்களுடனும், கலைந்த கேசத்துடனும் கூடிய அந்தக் குரூரர்கள், மாதங்கங்களை {மதங்கொண்ட யானைகளைப்} போல முழங்கி, பயத்தை உண்டாக்கியபடியே{14} மஹாகாயத்தால் நபஸ்தலத்தை {தங்கள் பேருடலால் ஆகாயத்தை} நடுங்கச் செய்து, மஹாகாயனான கராத்மஜனை {பேருடல் படைத்தவனும், கரனின் மகனுமான மகராக்ஷனைச்} சூழ்ந்து கொண்டு, மகிழ்ச்சியுடன் சென்றர்.(14,15)
சுற்றிலும் முழக்கப்பட்ட ஆயிரக்கணக்கான சங்குகள், பேரிகைகளாலும், சிம்மநாதத்தாலும், தோள் தட்டும் ஒலிகளாலும் அங்கே மஹாசப்தம் எழுந்தது.(16) சாரதியின் கரங்களில் இருந்த அவனது பிரதோதம் {சவுக்கு / உழவுக்கோல்} கீழே விழுந்தது. அந்த ராக்ஷசனின் துவஜமும் தைவத்தால் {மகராக்ஷனின் கொடிக்கம்பமும் விதிவசத்தால்} திடீரெனக் கீழே விழுந்தது.(17) அவனது ரதத்தில் பூட்டப்பட்டிருந்த அந்த ஹயங்கள் {குதிரைகள்}, தங்கள் நடையின் விக்ரமம் இழந்து, தடுமாறும் சரணங்களுடனும் {கால்களுடனும்}, கண்ணீர் வழியும் கண்களுடனும் தீனமாகச் சென்றன.(18) துர்மதியாளனும், ரௌத்திரனுமான அந்த மஹராக்ஷனின் அந்த நிர்யாணத்தில் {புறப்பாட்டில்}, பவனன் புழுதி படிந்து மிகக் கொடுமையாக வீசினான் {காற்று புழுதியுடன் மிகக் கொடுமையாக வீசிற்று}.(19)
வீரியம் நிறைந்தவர்களான ராக்ஷசர்கள், அவை யாவற்றையும் கண்டும், {அவற்றைக் குறித்துச்} சிந்திக்காமல், ராமலக்ஷ்மணர்கள் எங்கிருந்தனரோ அங்கே புறப்பட்டுச் சென்றனர்.(20) கரிய மேகங்களுக்கும், கஜங்களுக்கும், மஹிஷங்களுக்கும் துல்லியமான வர்ணத்தைக் கொண்டவர்களும் {கருமேகங்களுக்கும், யானைகளுக்கும், எருமைக்கடாக்களுக்கும் நிகரான நிறத்தைக் கொண்டவர்களும், கதை {கதாயுதம்}, வாள் ஆகியவற்றால் {தாக்கப்பட்ட} தழும்புகளை முகத்தில் கொண்டவர்களும், சமரில் முன்னணியில் இருப்பவர்களும், யுத்த கௌசலர்களுமான அந்த ரஜனீசரர்கள் {போரில் நல்ல திறம்பெற்றவர்களும், இரவுலாவிகளுமான அந்த ராக்ஷசர்கள்}, "அஹம் {நான்}, அஹம் {நான்}" என்று முழங்கியபடியே, அங்கேயும், இங்கேயும் திரிந்து கொண்டிருந்தனர்.(21)
யுத்த காண்டம் சர்க்கம் – 078ல் உள்ள சுலோகங்கள்: 21
Previous | | Sanskrit | | English | | Next |