Dushana killed | Aranya-Kanda-Sarga-26 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனுடன் உண்டான கடும்போரில் தூஷணனும், அவனது படைத்தலைவர்களும் கொல்லப்பட்டது; அழிவை அடைந்த ராக்ஷசப் படை...
மஹாபாஹுவான {பெருங்கைகளைக் கொண்ட} தூஷணன், தன் சைனியம் கொல்லப்படுவதைக் கண்டு, பீமவேகம் {பயங்கர வேகம்} கொண்டவர்களும், நிசாசரர்களும் {இரவுலாவிகளும்}, சமரில் பின்வாங்காதவர்களுமான ஐயாயிரம் ராக்ஷசர்களை ஏவினான்.(1,2அ) அவர்கள், சூலங்கள், பட்டிசங்கள், கட்கங்கள் ஆகியவற்றையும், சிலாவர்ஷத்தையும் {பாறை மழையையும்}, மரங்கள் மற்றும் சரவர்ஷத்தையும் {மர, சரமாரியையும்} இடையறாமல் பொழிந்து அவனை {ராமனை} முழுமையாக மறைத்தனர்.(2ஆ,3அ)
தர்மாத்மாவான ராகவன், பிராணனைப் பறிக்க வல்லவையும், மஹத்தானவையுமான அந்த மரமாரியையும், சிலாமாரியையும் நெருப்பு போன்ற சாயகங்களால் {மரத்தாலான மழையையும், பாறைகளாலான மழையையும் கூர்மையான அம்புகளால்} எதிர்கொண்டான்.(3ஆ,4அ) இராமன், மழையில் கண்களை மூடிக் கொள்ளும் ரிஷபத்தை {காளையைப்} போல {பொறுமையாக தாக்குதல்களைப் பொறுத்துக் கொண்டு} அந்த ராக்ஷசர்கள் அனைவரின் வதத்திற்காக பரம குரோதமடைந்தான்.(4ஆ,5அ) தேஜஸ்ஸில் எரிவதைப் போன்ற குரோதத்துடன் நீடித்தவன் {ராமன்}, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் தூஷணன் மீதும், அவனது சைனியத்தின் மீதும் சரங்களை ஏவினான்.(5ஆ,6அ)
சேனாதிபதியும், சத்ருதூஷணனுமான {பகைவரை நிந்திப்பவனுமான} அந்த தூஷணன், குரோதத்துடன் இடிக்கு ஒப்பான சரங்களால் அப்போது அந்த ராகவனைத் தாக்கினான்.(6ஆ,7அ) சமரில் வீரனான ராமன், ஒரு க்ஷுரேணத்தால் {அம்பால்} அவனது மஹத்தான தனுவையும், நான்கால் {நான்கு அம்புகளால்} நான்கு அசுவங்களையும் {குதிரைகளையும்} குரோதத்துடன் வெட்டி வீழ்த்தினான்.(7ஆ,8அ) கூரிய சரங்களால் அந்த அசுவங்களைக் கொன்றபிறகு, அர்த்தசந்திர பாணத்தால் சாரதியின் சிரத்தை வாங்கி, மூன்றால் அந்த ராக்ஷசனின் {தூஷணனின்} மார்பையும் தாக்கினான்.(8ஆ,9அ)
தனு முறிந்து, ரதம் ஒழிந்து, அசுவம் கொல்லப்பட்டு, சாரதியும் கொல்லப்பட்டவன் {தூஷணன்}, கிரி சிருங்கத்திற்கு {மலைச்சிகரத்திற்கு} நிகரானதும், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தவல்லதும், காஞ்சனப் பட்டைகளால் {பொன்கட்டுகளால்} கட்டப்பட்டதும், தேவ சைனியத்தையே தாக்கவல்லதும், கூரான இரும்பு ஆணிகளால் மறைக்கப்பட்டதும், பகைவரின் கொழுப்பில் தோய்ந்ததும், வஜ்ரத்தையும், இடியையும் நிகர்த்த ஸ்பரிசங் கொண்டதும், அந்நியர்களின் கோபுரங்களைப் பிளக்கவல்லதுமான பரிகம் ஒன்றை எடுத்தான்.(9ஆ-11) குரூர கர்மம் செய்பவனும் {கொடுஞ்செயல் புரிபவனும்}, நிசாசரனுமான {இரவுலாவியுமான} அந்த தூஷணன், போரில் மஹா உரகத்திற்கு {பாம்புக்கு} ஒப்பான அந்த பரிகத்தை எடுத்துக் கொண்டு ராமனை நோக்கி விரைந்து சென்றான்.(12)
அந்த ராகவன், தன்னை நோக்கிவந்து கொண்டிருந்தவனும், தோள்வளைகளால் அலங்கரிக்கப்பட்டவனுமான அந்த தூஷணனின் கைகளை இரண்டு சரங்களால் வெட்டினான்.(13) போர்முனையில் கைகள் வெட்டப்பட்ட அவனது பேருடலில் இருந்து, சக்ரத்வஜம் போல {இந்திரனின் கொடியைப் போல} அந்தப் பரிகம் நழுவி முன்னே விழுந்தது.(14) கைகள் வெட்டப்பட்ட தூஷணன், தந்தங்கள் முறிக்கப்பட்ட செருக்கு நிறைந்த மஹாகஜத்தைப் போலப் புவியில் விழுந்தான்.(15) போரில் வீழ்த்தப்பட்டு பூமியில் விழுந்த தூஷணனைக் கண்ட சர்வ பூதங்களும் {அனைத்து உயிரினங்களும்}, "சாது, சாது இதி {நல்லது, இது நல்லது}" என்று சொல்லி அந்தக் காகுத்ஸ்தனை {ராமனைப்} பூஜித்தன[1].(16)
[1] தேவர்கள் அர்த்து எழ முனிவர்கள் திசைதொறும் சிலம்பும்ஓவு இல் வாழ்த்து ஒலி கார்க்கடல் முழக்கு என ஓங்ககா அடா இது வல்லையேல் நீ என கணை ஒன்றுஏவினான் அவன் எயிறுடை நெடுந்தலை இழந்தான்.- கம்பராமாயணம் 3035ம் பாடல், கரன் வதைப் படலம்பொருள்: தேவர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்ய, திசையெங்கும் முனிவர்கள் ஆரவாரம் செய்ய, ஒழிவில்லாத வாழ்த்துகளின் ஒலி கரிய கடலின் முழக்கம் போல் ஓங்க, "நீ வல்லமையுள்ளவனென்றால் இதைத் தடுத்து உன்னைக் காத்துக் கொள்" என்று சொல்லி, கணை ஒன்றை ஏவினான் {இராமன்}. அவன் {தூஷணன்}, கோர தந்தங்களைக் கொண்ட தன் பெரிய தலையை இழந்தான்.
இதற்கிடையில், குரோதம் நிறைந்தவர்களும், சேனைத் தலைவர்களுமான மஹாகபாலன், ஸ்தூலாக்ஷன், மஹாபலனான பிரமாதி ஆகிய மூவரும், மிருத்யு பாசத்தால் {யமனின் சுருக்குக்கயிற்றால்} கட்டப்பட்டவர்களாக ஒன்றாகச் சேர்ந்து ராமனை நோக்கி விரைந்தனர்.(17,18அ) மஹாகபாலன் நீளமான சூலத்தை உயர்த்திக் கொண்டும், ராக்ஷசன் ஸ்தூலாக்ஷன் பட்டிசத்தை {பட்டாக்கத்தியை} எடுத்துக் கொண்டும், பிரமாதி பரசுடனும் {கோடரியுடனும்} விரைந்தனர்.(18ஆ,19அ) எதிர்த்து வரும் அவர்கள் தன்னை நெருங்கி விட்டதைக் கண்ட ராமன், அகாலத்தில் வந்த அதிதிகளை {விருந்தினர்களைப்} போல அவர்களை கூர்த்தீட்டப்பட்ட முனைகளுடன் கூடிய சாயகங்களால் {பாணங்களால்} வரவேற்றான்.(19ஆ,20அ)
அந்த ரகுநந்தனன் {ராமன்}, மஹாகபாலனின் சிரத்தை {தலையை} வெட்டித் தள்ளிவிட்டு, இன்னும் கணக்கற்ற சரங்களால் பிரமாதியை நிர்மூலமாக்கினான்.{20ஆ,21அ} ஸ்தூலாக்ஷனின் தடித்த கண்களைக் கூரிய சாயகங்களால் {அம்புகளால்} நிரப்பினான். க்ஷணப் பொழுதில் கொல்லப்பட்ட அவன் {ஸ்தூலாக்ஷன்} கிளைகளுடன் கூடிய பெரும் மரம் ஒன்றைப் போல பூமியில் விழுந்தான்.{21ஆ,22அ} சினங்கொண்டவனான அவன் {ராமன்}, தூஷணனைப் பின்தொடர்ந்து வந்த ஐயாயிரம் பேரையும், ஐயாயிரம் சரங்களால் யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பி வைத்தான்.(20ஆ-23அ)
தூஷணனும், அவனைப் பின்தொடர்ந்தவர்களும் கொல்லப்பட்டதைக் கேட்டுக் குரோதமடைந்த கரன், மஹாபலவான்களான தன் சேனை அதிகாரிகளிடம் {பின்வருமாறு} ஆணையிட்டான்:(23ஆ,24அ) "இந்த தூஷணன், தன்னைப் பின்தொடர்ந்து சென்றவர்களுடன் சேர்ந்து போரில் கொல்லப்பட்டான். சர்வ ராக்ஷசர்களும் மஹத்தான சேனையுடன் சென்று யுத்தத்தில் நானாவித வடிவமைப்புகளுடன் கூடிய சஸ்திரங்களை {ஆயுதங்களைக்} கொண்டு தீய மானுஷனாம் ராமனைக் கொல்வீராக" {என்றான் கரன்}.(24ஆ,25)
இவ்வாறு சொன்ன கரன், குரோதத்துடன் ராமனை நோக்கி விரைந்து சென்றான். சியேனகாமி, பிருதுக்ரீவன், யஜ்ஞசத்ரு, விஹங்கமன்,{26} துர்ஜயன், கரவீராக்ஷன், பருஷன், காலகார்முகன், ஹேமமாலி {மேகமாலி}, மஹாமாலி, ஸர்பாஸ்யன், ருதிராசனன்{27} என்ற மஹாவீரர்களான பன்னிரெண்டு படை அதிகாரிகள்[2] அந்த சைனியத்துடன் சேர்ந்து உத்தம சரங்களை ஏவியபடியே ராமனை நோக்கி விரைந்து சென்றனர்.(26-28) அப்போது அந்த தேஜஸ்வி {ராமன்}, எஞ்சியிருக்கும் அந்த சைனியத்தை, பாவகனை {அக்னியைப்} போன்றவையும், ஹேம வஜ்ரங்களால் {தங்கம், வைரங்களால்} அலங்கரிக்கப்பட்டவையுமான சாயகங்களால் {கணைகளால்} வதைத்தான்.(29) ருக்ம புங்கத்துடன் கூடியவையும் {தங்கத்தாலான கட்டுகளைக் கொண்டவையும்}, புகையுடன் கூடிய அக்னியைப் போல ஒளிர்பவையுமான அந்தக் கூரியவை {பாணங்கள்}, பெரும் மரங்களை {வீழ்த்தும்} வஜ்ரத்தைப் போல அந்த ராக்ஷசர்களை வீழ்த்தின.(30)
[2] இந்த ராக்ஷசர்களின் பெயர்களும், இந்த சர்க்கத்தின் 17 முதல் 20ம் சுலோகம் வரை சொல்லப்பட்ட மூவரின் பெயர்களும் ஏற்கனவே ஆரண்ய காண்டம் 23ம் சர்க்கத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
போர்முனையில் ராமன், நூறு ராக்ஷசர்களை நூறு கர்ணிகளாலும் {கணைகளாலும்}, ஆயிரம்பேரை ஆயிரத்தாலும் {பாணங்களாலும்} தாக்கினான்.(31) அவற்றால் {அந்தக் கர்ணிகளால்}, கவசங்களும், ஆபரணங்களும் உடைந்து, சரங்களும், விற்களும் சின்னாபின்னமாகி, ரத்தத்தால் பூசப்பட்டவர்களாக அந்த நிசாசரர்கள் {இரவுலாவிகள்} தரணியில் விழுந்தனர்.(32) கேசம் தளர்ந்து {தலைமயிர் அவிழ்ந்து}, ரத்தம் பெருக சமரில் விழுந்து கிடந்த அவர்களால் வசுதை {பூமி} முற்றும் குசப் புற்கள் பரவிய விஸ்தீரணமான மஹாவேதியை {பெரும் யாகசாலையைப்} போலிருந்தது.(33) கொல்லப்பட்ட ராக்ஷசர்களுடன் கூடிய அந்த வனம், மாமிசமும், ரத்தமும் கலந்த சேற்றுடன், க்ஷணப்பொழுதில் நரகத்திற்கு ஒப்பாக மஹா கோரமானது.(34)
பீமகர்மங்களை {பயங்கரச் செயல்களைச்} செய்பவர்களான அந்த ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரும், மானுஷனும், பதாதியுமான {காலாட்படை வீரனுமான} ராமன் ஒருவனாலேயே கொல்லப்பட்டனர்.(35) அந்த சைனியம் மொத்தத்திலும் மஹாரதனான கரனைத் தவிர, ராக்ஷசன் திரிசிரஸும், {மற்றபடி} ரிபுசூதனனான {பகைவரைக் கொல்பவனான} ராமனும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.(36) மஹாவீர்யவான்களும், கோரமானவர்களும், வெல்லப்பட முடியாதவர்களுமான ராக்ஷசர்கள் அனைவரும் அந்த லக்ஷ்மணாக்ரஜனால் ரணமூர்த்தத்தில் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமனால் போர்முனையில்} இவ்வாறே கொல்லப்பட்டனர்.(37) அப்போது கரன், அந்தப் பெரும்போரில் பலவனான ராமனால் அந்த பயங்கரப் படை அழிக்கப்பட்டதைக் கண்டு, அசனியை {இடியை / வஜ்ரத்தை} உயர்த்திய இந்திரனைப் போல அங்கிருந்த மஹத்தான ரதத்தில் ஏறிக் கொண்டு ராமனை நோக்கி விரைந்து சென்றான்.(38)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 26ல் உள்ள சுலோகங்கள்: 38
Previous | | Sanskrit | | English | | Next |