Goddess Earth made to twitch | Aranya-Kanda-Sarga-25 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கரனும், அவனது படையும் ராமனைத் தாக்கியது; பதில் தாக்குதல் தொடுத்து ராக்ஷசர்களைக் கொன்ற ராமன்...
முன் செல்பவர்களுடன் கூடிய கரன், அந்த ஆசிரமத்தை அடைந்ததும், பகைவரைக் கொல்பவனான அந்த ராமன் கைகளில் தனுவை ஏந்தி குரோதத்துடன் இருப்பதைக் கண்டான்.(1) அவனைக் கண்ட கரன், நாண்பொருத்தப்பட்ட வில்லை உயர்த்தி, "இராமனின் எதிரில் செல்வாயாக" என்று சூதனிடம் {சாரதியிடம்} சொன்னான்.(2) அந்த சூதனும், கரனின் ஆணையின் பேரில், மஹாபாஹுவும், தனியாக நின்று தன் தனுவை அசைத்துக் கொண்டிருந்தவனுமான ராமன் நிற்கும் இடத்திற்கு குதிரைகளைச் செலுத்தினான்.(3) இவ்வாறு சென்று கொண்டிருந்தவனைக் {கரனைக்} கண்டு, அவனைப் பின்தொடர்ந்து சென்ற சர்வ ரஜனீசரர்களும் {இரவுலாவிகள் அனைவரும்} மஹாநாதத்துடன் அவனைச் சூழ்ந்து கொண்டனர்.(4) அந்த யாதுதானர்களுக்கு {ராக்ஷசர்களுக்கு} மத்தியில் ரதத்தில் இருந்த கரன், தாரைகளின் மத்தியில் {நக்ஷத்திரங்களின் நடுவில்} உதிக்கும் லோஹிதாங்கனை {செவ்வாயைப்} போல விளங்கினான்.(5)
அப்போது கரன், ஒப்பற்ற பலவானான ராமனை அந்தப் போரில் ஆயிரக்கணக்கான சரங்களால் தாக்கிவிட்டு மஹாநாதம் செய்தான்.(6) பின்னர் குரோதமுடைய நிசாசரர்கள் {இரவுலாவிகள்} அனைவரும், பயங்கர வில்லாளியும், எவராலும் வெல்லப்பட முடியாதவனுமான அந்த ராமன் மீது நானாவித சஸ்திரங்களை {ஆயுதங்களைப்} பொழிந்தனர்.(7) ஏற்கனவே கோபத்திலிருந்த ராக்ஷசர்கள் அந்தப் போரில் ராமனை முத்கரங்கள் {உலக்கைகள்}, பட்டிசங்கள் {பட்டாக்கத்திகள்}, சூலங்கள், பராசங்கள் {ஈட்டிகள்}, கட்கங்கள் {வாள்கள்}, பரசுகள் {கோடாரிகள்} ஆகியவற்றால் தாக்கினர்.(8) நீருண்ட மேகத்திற்கு ஒப்பானவர்களும், மஹாகாயம் {பேருடல்} படைத்தவர்களுமான அந்த மஹாபலவான்கள், யுத்தத்தில் ராமனைக் கொல்ல விரும்பி, ரதங்கள், வாஜிகள் {குதிரைகள்}, பர்வத சிகரங்களுக்கு {மலைச்சிகரங்களுக்கு} ஒப்பான கஜங்கள் {யானைகள்} ஆகியவற்றுடன் அந்தக் காகுத்ஸ்தனை எதிர்த்து விரைந்து சென்றனர்.(9,10அ)
அந்த ராக்ஷச கணங்கள், சைலேந்திரன் {மலைகளின் மன்னனான இமயத்தின்} மீது {மழைத்} தாரைகளைப் பொழியும் மஹா மேகங்களைப் போல இராமன் மீது சரங்களைப் பொழிந்தனர். (10ஆ,11அ) திதிகளில் {குறிப்பிட்ட நாட்களில்} பரிவார கணங்களால் சூழப்பட்ட மஹாதேவனை {சிவனைப்} போலக் குரூரத்தோற்றமுடைய அந்த ராக்ஷசக் கூட்டத்தால் ராமன் சூழப்பட்டிருந்தான்.(11ஆ,12அ) அந்த ராகவன், நதியின் வேகத்தைத் தனதாக்கிக் கொள்ளும் சாகரத்தைப் போல அந்த யாதுதானர்களால் {ராக்ஷசர்களால்} ஏவப்பட்ட சஸ்திரங்களை {ஆயுதங்களைத்} தன் கணைகளால் தடுத்துக் கொண்டிருந்தான்.(12ஆ,13அ) வஜ்ரங்கள் {இடிகள்} பலவற்றால் தாக்கப்பட்டாலும் ஜுவலிக்கும் மஹா அசலத்தை {மேரு மலையைப்} போலவே, கோரமான ஆயுதங்களால் தாக்கப்பட்ட அங்கங்களுடைய ராமனும் சோர்வடைந்தானில்லை.(13ஆ,14அ) இராகவனான {ரகு குலத்தைச் சேர்ந்தவனான} அந்த ராமன், அங்கமெங்கும் காயமடைந்து, ரத்தத்தால் பூசப்பட்டவனாக இருப்பினும், சந்தியா காலத்து மேகங்களால் மறைக்கப்படும் திவாகரனை {சூரியனைப்} போல விளங்கினான்.(14ஆ,15அ)
அப்போது, பல்லாயிரக்கணக்கானோர் சேர்ந்து தனி ஒருவனைத் தாக்குவதைக் கண்டு, தேவர்கள், கந்தர்வர்கள், சித்தர்கள், பரமரிஷிகள் ஆகியோர் வருத்தமடைந்தனர்.(15ஆ,16அ) பிறகு, கோபமடைந்த ராமன், தன் கார்முகத்தை மண்டலமாகச் செய்து {வில்லை வட்டமாக வளைத்து}, நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கூரிய பாணங்களை ஏவினான்.(16ஆ,17அ) அந்தப் போரில் ராமன், தடுக்க முடியாதவையும், சகிக்க முடியாதவைவும், காலபாசத்திற்கு ஒப்பானவையும், கழுகிறகுடன் கூடியவையும், காஞ்சனத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டவையுமான பாணங்களை விளையாட்டாக ஏவினான்.(17ஆ,18அ) இவ்வாறு விளையாட்டாக சத்ரு சைனியங்களின் மீது ராமன் ஏவிய அந்தச் சரங்கள், காலனால் வீசப்பட்ட பாசங்களைப் போல, அந்த ராக்ஷசர்களின் பிராணனைப் பறித்தன.(18ஆ,19அ) அந்த சரங்கள் அந்த ராக்ஷசர்களின் தேகங்களைப் பிளந்து, ரத்தத்தில் தோய்ந்தவையாக, கொழுந்து விட்டெரியும் அக்னிக்கு இணையான தேஜஸ்ஸுடன் ஒளிர்பவையாக ஆகாயத்தில் எழுந்தன.(19ஆ,20அ)
இராமனின் சாபமண்டலத்தில் {வட்டமான வில்லில்} இருந்து கணக்கின்றி ஏவப்பட்ட அதி உக்கிரமான கணைகள் அந்த ராக்ஷசர்களின் பிராணனை அபகரித்தபடியே வெளியே விழுந்தன.(20ஆ,21அ) இராமன் அந்தப் போரில், அத்தகைய நாற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான கணைகளை ஏவி தனுக்களையும் {விற்களையும்}, துவஜங்களின் {கொடிகளின்} துணிகளையும், தோல்களையும் {கவசங்களையும்}, சிரங்களையும் {தலைகளையும்}, ஆபரணங்களணிந்த கைகளையும், கரிகரங்களை {யானைகளின் துதிக்கைகளை} நிகர்த்த தொடைகளையும் அறுத்து எறிந்தான்.(21ஆ-22) இராமபாண குணத்தில் ஏவப்பட்டவை {அந்தக் கணைகள்}, காஞ்சன சேணத்துடன் {தங்க சேணத்துடன்} ரதத்தில் பூட்டப்பட்ட ஹயங்களை {குதிரைகளை} சாரதிகளுடனும், கஜங்களை {யானைகளை} பாகர்களுடனும், குதிரைகளுடன் கூடிய குதிரைவீரர்களையும், காலாட்களையும் போரில் கொன்று யமனின் வீட்டிற்கு அனுப்பின.(23,24)
அப்போது அந்த நிசாசரர்கள் {இரவுலாவிகளான ராக்ஷசர்கள்}, கூர்முனைகளுடன் கூடிய நாளீகம், நாராசம், விகர்ணி போன்றவற்றால் {போன்ற கணைகளால்} சிதைக்கப்பட்டு, பயங்கரமான குரலில் கதறினார்கள்.(25) இராமன் ஏவிய கூரிய பாணங்களால் மர்மங்கள் {இதயங்கள்} பிளக்கப்பட்டுத் துன்புற்ற அந்த சைனியம், தீயால் தகிக்கும் வறண்ட காட்டைப் போல மகிழ்ச்சியைக் காணாதிருந்தது.(26) பயங்கர பலசாலிகளும், சூரர்களுமான ரஜனீசரர்களில் {இரவுலாவிகளில்} சிலர், பரம குரோதத்துடன் ஈட்டிகள், சூலங்கள், பரசுகள் {கோடரிகள்} ஆகியவற்றை ராமன் மீது ஏவினர்.(27) மஹாபாஹுவான அந்த வீரியவான் {ராமன்}, போரில் அவர்களின் சஸ்திரங்களைத் தன் பாணங்களால் தடுத்து, அவர்களின் சிரங்களை {தலையை} வெட்டி பிராணனைப் பறித்தான்.(28) சிரம் துண்டிக்கப்பட்டவர்களும், கவசங்கள் அறுக்கப்பட்டவர்களும், விற்கள் வெட்டப்பட்டவர்களுமான அவர்கள் சுபர்ணன் {கருடன்} எழுப்பும் காற்றால் கலக்கமடைந்த மரங்களைப் போல பூமியில் விழுந்தனர்.(29) அதில் எஞ்சிய நிசாசரர்கள் {இரவுலாவிகள், ராமனின்} சரங்களால் தாக்கப்பட்டு, வேதனையடைந்தவர்களாக விரைந்து சென்று கரனிடம் தஞ்சமடைந்தனர்.(30)
அவர்கள் அனைவரையும் தேற்றி, {மீண்டும்} அழைத்துக் கொண்ட தூஷணன், குரோதத்துடன் {ருத்திரனிடம்} விரைந்து செல்லும் அந்தகனை {யமனைப்} போல, தனுவை எடுத்துக் கொண்டு குரோதத்துடன் ராமனை நோக்கி விரைந்து சென்றான்.(31) தூஷணனிடம் தஞ்சமடைந்தவர்கள் அனைவரும் பயமின்றி மீண்டும் திரும்பி, சாலம் {ஆச்சா மரம்}, தாலம் {பனைமரம்}, சிலம் {பாறை} ஆகியவற்றை ஆயுதங்களாக எடுத்துக் கொண்டு ராமனை நோக்கி விரைந்து சென்றனர்.(32) சூலங்கள், முத்கரங்கள் {உலக்கைகள்} ஆகியவற்றைக் கையில் கொண்டவர்களும், பாசங்களை {கயிறுகளைக்} கையில் கொண்டவர்களும், மஹாபலவான்களுமான அந்த ராக்ஷசர்கள், சரமாரிகளையும் {அம்புகளாலான மழையையும்}, சஸ்திரமாரிகளையும் {அயுதங்களாலான மழையையும்}, மரமாரிகளையும் {மரங்களாலான மழையையும்}, சிலாமாரிகளையும் {பாறைகளாலான மழையையும்} அந்தப் போரில் பொழிந்தனர்.(33,34அ)
இராமனுக்கும், அந்த ராக்ஷசர்களுக்கும் இடையில் மறுமுறை நேர்ந்த அந்த அற்புத யுத்தம், மயிர்க்கூச்சத்தை ஏற்படுத்தும் வகையில் மஹாகோரமானதாக இருந்தது.(34ஆ,35அ) பெருங்குரோதத்துடன் கூடிய அவர்கள், மீண்டும் ராகவனைச் சூழ்ந்து கொண்டு தாக்கினர். அப்போது அந்த மஹாபலவான் {ராமன்}, சர்வ திசைகளிலும், உபதிசைகளிலும் மீண்டும் தோன்றி சரமாரிகளைப் பொழிந்தபடியே எங்கும் சூழ்ந்திருக்கும் சர்வ ராக்ஷசர்களையும் கண்டு, பைரவ நாதம் {இடிமுழக்கம்} செய்து, அந்த ராக்ஷசர்களை நோக்கி பரம பாஸ்வரம் நிறைந்த {பெரும் பிரகாசத்துடன் கூடிய} காந்தர்வ அஸ்திரத்தை ஏவினான்.(35ஆ-37) அப்போது அந்த சாபமண்டலத்திலிருந்து {வட்டமாக வளைந்திருந்த அந்த வில்லில் இருந்து} ஆயிரக்கணக்கான சரங்கள் வெளிப்பட்டன. ஒன்றுசேர்ந்து வெளிப்பட்ட அந்த பாணங்களால் பத்து திசைகளும் முழுமையாக நிறைந்தன.(38)
சரங்களால் கோரமாகத் தாக்கப்பட்ட ராக்ஷசர்கள், அந்தச் சரங்கள் எடுக்கப்படுவதையோ, தொடுக்கப்படுவதையோ, அந்த உத்தமச் சரங்கள் விடுக்கப்படுவதையோ கண்டார்களில்லை.(39) சரங்களைக் கக்குபவன் போல ராமன் நின்று கொண்டிருந்த போது, அந்தச் சரங்களால் உண்டான அந்தகாரம் {இருள்}, திவாகரனையும் {சூரியனையும்}, ஆகாசத்தையும் மறைத்தது.(40) ஒரே நேரத்தில் விழுபவர்களாலும், ஒரே நேரத்தில் கொல்லப்பட்டவர்களாலும், ஒரே நேரத்தல் வீழ்ந்தவர்களாலும் வசுதையானது {பூமி} நீள அகலங்களில் முற்றிலும் நிறைந்தது[1].(41) அந்த ராக்ஷசர்கள் ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டவர்களாக, விழுந்து கிடப்பவர்களாக, காயமடைந்தவர்களாக, குத்தப்பட்டவர்களாக, சிதறுண்டவர்களாக, பிளவுண்டவர்களாகக் காணப்பட்டனர்.(42)
[1] சொரிந்த பல்படை துணிபட துணிபட சரத்தால்அரிந்து போந்தன சிந்திட திசை திசை அகற்றிநெரிந்து பார்மகள் நெளிவுற வனம் முற்றும் நிறையவிரிந்த செம்மயிர்க் கருந்தலை மலை வீழ்த்தான்.- கம்பராமாயணம் 2960ம் பாடல், கரன் வதைப் படலம்பொருள்: {இராக்ஷசர்கள்} பொழிந்த பலவகை ஆயுதங்களையும், பல துண்டுகளாகத் துண்டித்து, சரத்தால் அறுத்துத் தள்ளி, அதற்கு மேலும் வந்தவற்றை திசைகள் அனைத்திலும் சிதறச் செய்து, அகற்றி, பூமாதேவி நெரிந்து அதிக பாரத்தால் நெளியவும் அந்த வனம் முழுவதும் நிறையவும், விரிந்த செம்பட்டை மயிர்களுடையவையும், மலையைப் போன்றவையுமான பெரிய கருந்தலைகளைக் கீழே வீழ்த்தினான்.
அந்தச் சமரில் {போரில்} ராமனுடைய பாணங்களால் வெட்டப்பட்ட தலைப்பாகையுடன் கூடிய தலைகள், துண்டிக்கப்பட்ட தோள்வளைகளுடன் கூடிய புஜங்கள், தொடைகள், முழங்கால்கள், நானாவித ரூபங்களில் எண்ணற்ற ஆபரணங்களை அணிந்த ஹயங்கள் {குதிரைகள்}, முக்கிய துவிபங்கள் {யானைகள்}, பலவாறாய் பிளவுண்ட ரதங்கள், பலவித சாமரங்கள், குடைகள், நானாவித துவஜங்கள், சூலங்கள், பட்டிசங்கள் {பட்டாக்கத்திகள்}, துண்டிக்கப்பட்ட கட்கங்கள் {வாள்கள்}, ஈட்டிகள், சிதறிக் கிடக்கும் கோடரிகள், பலவாறாகத் துண்டிக்கப்பட்டப் பலவிதமான பராசங்கள் {கணைகள்}, துகள்களாக்கப்பட்ட பாறைகள் ஆகியவற்றால் நீள அகலங்களில் நிறைந்திருந்த பூமி பயங்கரமானதாகத் தெரிந்தது.(43-46) {எஞ்சியிருந்த} சர்வ ராக்ஷசர்களும், கொல்லப்பட்டவர்களைக் கண்டு, உற்சாகமிழந்து, பகைவரின் தலைநகரைக் கைப்பற்றக்கூடிய ராமனை நோக்கி நகர முடியாதவர்களாக இருந்தனர்.(47)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 25ல் உள்ள சுலோகங்கள்: 47
Previous | | Sanskrit | | English | | Next |