Khara killed | Aranya-Kanda-Sarga-30 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கரனைக் கொன்ற ராமன்; அவனைப் புகழ்ந்து, பூஜித்த தேவர்கள்; லக்ஷ்மணனும், சீதையும் குகையைவிட்டு வெளியே வந்தது...
தர்மவத்ஸலனான {தர்மத்தில் விருப்பமுள்ள} ராகவன், பாணங்களால் கதையை {அந்த கதாயுதத்தைத்} துண்டித்துவிட்டு, குழப்பத்தில் {படபடப்புடன்} இருந்த கரனிடம் சிரித்தவாறே இந்த வாக்கியங்களைச் சொன்னான்:(1) "இராக்ஷசாதமா {ராட்சசர்களில் இழிந்தவனே}, உன் பலம் முழுவதும் இவ்வளவுதான் என்பது காட்டப்பட்டுவிட்டது. என்னிலும் சக்தியில் குறைந்தவனான நீ தேவையில்லாமல் பிதற்றினாய்.(2) இந்த கதை, பிதற்றுவதில் சமர்த்தனாகிய உன் நம்பிக்கையை அழிக்கும் வகையில் பாணங்களால் சிதறுண்டு பூமிதலத்தை அடைந்தது.(3) "முற்றாக அழிந்த ராக்ஷசர்களால் உண்டான இந்தக் கண்ணீரைத் துடைக்கப் போகிறேன்" என்று நீ சொன்ன அந்தச் சொற்களும் பொய்யாகின.(4)
நீசனும், சீலத்தில் {ஒழுக்கத்தில்} இழிந்தவனும், பொய் விருத்தம் {நடத்தை} கொண்டவனும், இராக்ஷசனுமான உன் பிராணனை, கருடன் அம்ருதத்தை {கவர்ந்து சென்றதைப்} போல நான் அபஹரிக்கப்போகிறேன்.(5) இதோ என் பாணங்கள் உன் கண்டத்தை {தொண்டையைச்} சிதைக்கப் போகின்றன. நுரைக் குமிழிகளுடன் பெருகும் உன் ரத்தத்தை மஹீ {பூமி} பருகப் போகிறாள்.(6) உன் அங்கமெங்கும் புழுதியால் பூசப்பட்டு, புஜங்கள் இரண்டும் {பூமியில்} தளர்ந்து, அடைதற்கரிய பெண்ணைப் போல பூமியை அணைத்துக் கொண்டு, நீ {நித்திய} உறக்கம் கொள்ளப் போகிறாய்.(7) இராக்ஷசர்களில் இழிந்தவனே, நீ {நித்தியமான} நல்ல நித்திரையில் இருக்கும்போது, இந்த தண்டகம் சரண்யம் வேண்டுபவர்களுக்கு சரண்யமாக {புகலிடம் வேண்டும் தவசிகளுக்குப் புகலிடமாகத்} திகழும்.(8)
இராக்ஷசா, என் சரங்களால் ஜனஸ்தானத்தில் உன் ஸ்தானம் அழிந்ததும், முனிவர்கள் பயமற்றவர்களாக இந்த வனம் முழுவதும் சஞ்சரிப்பார்கள்.(9) பிறரை பயமுறுத்தும் ராக்ஷசிகள், பந்துக்கள் கொல்லப்பட்டு, கண்ணீரால் நனைந்த வதனங்களுடன் பயத்தால் தீனமடைந்து மிக விரைவில் {இங்கிருந்து} தப்பி ஓடப் போகிறார்கள்.(10) உன்னைப் போன்ற அருவருக்கத்தக்கவனைப் பதியாக {தலைவனாக / கணவனாக} அடைந்தவர்களும், உன் குலத்திற்குத் தகுந்தவர்களுமான அந்தப் பத்தினிகள், இனி அர்த்தமற்ற சோக ரசத்தை {சோகத்தின் சுவையை} அனுபவிக்கப் போகிறார்கள்.(11) சீலத்தில் கொடியவனே, குணத்தில் அற்பனே, நித்தியம் பிராமணர்களுக்கு கண்டகனே {முள்ளாய் இருப்பவனே}, உன் செயல்களின் மீது கொண்ட ஐயத்துடனேயே {அச்சத்தால் நடுங்கியவாறே} அந்த முனிவர்கள் ஹவிஸ்ஸை அக்னியில் இடுகிறார்கள்" {என்றான் ராமன்}.(12)
இவ்வாறு வனத்தில் {போரில்} பெருங்கோபத்துடன் பேசிய அந்த ராகவனிடம், ரோஷத்துடன் கூடிய அந்தக் கரன், கழுதை போன்ற கடுங்குரலில் {பின்வருமாறு} நிந்திக்கத் தொடங்கினான்:(13) "பயத்திலும் {ஆபத்திலும்} கூட பயமில்லாமல் திடமாகத் தற்புகழ்ச்சி செய்து கொள்வதால், மிருத்யு வசமடைந்த நீ பேசத்தக்கதையும், பேசத்தகாததையும் உன் புத்தியில் வாங்காமல் இருக்கிறாய்.(14) காலபாசத்தில் சிக்கிக் கொண்ட புருஷர்களே {மானிடர்களே}, ஆறு இந்திரியங்களும்[1] செயல் இழந்தவர்களாகி, காரியாகாரியங்களை {செய்யத்தக்கதையும், செய்யத்தகாததையும்} அறியாதவர்களாக இருப்பார்கள்" {என்றான் கரன்}.(15)
[1] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஐம்புலன்களும், மனமும் சேர்ந்து இங்கே ஆறு இந்திரியங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன" என்றிருக்கிறது.
அந்த நிசாசரன் {இரவுலாவி}, ராமனிடம் இவ்வாறு சொல்லிவிட்டு, தன் புருவங்களை நெரித்து, போரில் தாக்குதல் தொடுக்கக்கூடிய எதுவும் அருகிலெங்கும் இல்லாததைக் கவனித்து, மஹா சாலம் {பெரிய ஆச்சா மரம்} ஒன்றைக் கண்டான்.(16,17அ) அவன் உதட்டைக் கடித்துக் கொண்டு அதைப் பெயர்த்தெடுத்தான். அந்த மஹாபலன், அதை {அந்த ஆச்சா மரத்தை} இருகைகளாலும் வலுவுடன் உயரத் தூக்கி, உரக்க கத்தியபடியே ராமன் மீது வீசி, "நீ அழிந்தாய்" என்று கூச்சலிட்டான்.(17ஆ,18) பிரதாபவானான ராமன், தன்னை நோக்கிப் பாய்ந்து வரும் அதை {அந்த ஆச்சா மரத்தை} பாணத் தாரைகளால் துண்டித்து, அந்த சமரில் தீவிரமான கோபத்தை அடைந்து, கரனைக் கொல்லத் தீர்மானித்தான்.(19)
அப்போது ராமன், கோபத்தால் உடல் வியர்க்க, கடைக்கண்கள் சிவக்க, ஆயிரம் பாணங்களால் அந்தப் போரில் கரனைத் துளைத்தான்.(20) பாணங்கள் தைத்த அவனது உடலில் இருந்து நுரையுடன் கூடிய ரத்தம், பிரஸ்ரவண கிரியின்[2] நீர்த்தாரைகளைப் போல பூமியில் வேகமாக நிரம்பி வழிந்தது.(21) போரில் ராமபாணங்களால் மதிகலங்கிய அந்தக் கரன், உதிர கந்தத்தால் {ரத்த மணத்தால்} வெறிபிடித்து அவனை {ராமனை} நோக்கி வேகமாக ஓடினான்.(22) பராக்கிரமம் நிறைந்தவனும், அஸ்திரங்களில் நிபுணனுமான அவன் {ராமன்}, உதிரத்தில் {ரத்தத்தில்} நனைந்து ஆவேசத்துடன் எதிர்த்து வருபவனை {கரனைக்} கண்டு வேகத்துடன் சற்றே விலகி நின்றான்[3].(23)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "கிஷ்கிந்தா காண்டத்தில், சுக்ரீவனின் உதவிக்காகக் காத்திருக்கும்போது மழைக்காலத்தைப் புகழ்ந்து இந்த பிரஸ்ரவண மலையை எண்ணி வியக்கிறான்" என்றிருக்கிறது. "பிரஸ்ரவணம்" என்ற சொல் "அருவி" என்ற பொருளைக் கொண்டது. எனவே இந்த வாக்கியத்திற்கு "மலை அருவியின் நீர்த்தாரைகளைப் போல" என்று நேரடியாகவும் பொருள் கொள்ளலாம்.
[3] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் சாதனை செய்தவன் ராமன். அவன் இன்னும் சிறப்பாகத் தாக்குவதற்காகவே இரண்டு, அல்லது மூன்று அடிகள் பின்வாங்குகிறான்" என்றிருக்கிறது.
அப்போது ராமன், கரனைப் போரில் வதைப்பதற்காக, பாவகனை {நெருப்பைப்} போல ஒளிர்வதும், பிரம்மதண்டம் போன்றதுமான மற்றொரு சரத்தை அந்த சமரில் எடுத்தான்.(24) அந்த தர்மாத்மா, மதிமிக்கவனும், ஸுரராஜனுமான மகவானால் {இந்திரனால்} தத்தம் செய்யப்பட்டதை {அந்தக் குறிப்பிட்ட பாணத்தைப்}[4] பூட்டி உடனே அதைக் கரன் மீது தொடுத்தான்.(25) இராமன், தனுவை வளைத்து விடுத்த அந்தப் மஹாபாணம், இடிபோல் முழங்கியபடியே கரனின் மார்பில் பாய்ந்தது.(26) அந்த சர அக்னியில் கொளுத்தப்பட்ட கரன், ஸ்வேதாரண்யத்தில் {திருவெண்காட்டில்} ருத்திரனால் முற்றாக எரிக்கப்பட்ட அந்தகனைப் போலப் பூமியில் விழுந்தான்.(27) அந்தக் கரன், வஜ்ரத்தால் விருத்திரன் போலவும், நுரையால் நமுசி போலவும், இந்திரனின் அசனியால் {இடியினால்} பலன் {பலாசுரன்} போலவும் {அந்த பாணத்தால்} மாண்டு விழுந்தான்.(28)
[4] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "அகஸ்தியர் மூலம் கொடுக்கப்பட்டது" என்று இருக்கிறது. ஆரண்ய காண்டம் 12ம் சர்க்கத்தில் அகஸ்தியர் ராமனுக்கு ஆயுதங்கள் பலவற்றை வழங்குகிறார்.
அதே நேரத்தில், தேவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக, சாரணர்களுடன் சேர்ந்து துந்துபி முழக்கி, வியப்படைந்து, அனைத்துப் பக்கங்களில் இருந்தும் ராமனின் மீது புஷ்ப வருஷத்தை வர்ஷித்து {மலர் மாரியைப் பொழிந்து},(29,30அ) தங்களுக்குள் {பின்வருமாறு} பேசிக் கொண்டனர்: "கரனையும், தூஷணனையும் முக்கியர்களாகக் கொண்ட காம ரூபிகளான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களான} ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரும் ராமனின் கூரிய சரங்களால் ஒன்றரை முஹூர்த்த காலத்தில் கொல்லப்பட்டனர்[5].(30ஆ,31) விதிதாத்மாவான {தன்னை அறிந்த புத்திசாலியான} ராமன் செய்தது மஹத்தான கர்மமாகும். அஹோ பெருமை, அஹோ வீரியம், அஹோ மனோதிடம் {என்னே இவனது பெருமை, என்னே இவனது வீரம், என்னே இவனது மனோதிடம்}. இவன் {இந்த வீரம், மனோதிடம், பெருமை ஆகியவற்றுடன் கூடிய ராமன்} விஷ்ணுவைப் போலவே காணப்படுகிறான்[6]" {என்றனர்}. தேவர்கள் அனைவரும் இவ்வாறு சொல்லிவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றனர்.(32,33அ)
[5] ஒரு நாள் என்பது முப்பது முஹூர்த்தங்களைக் கொண்டதாகும். அதாவது பகலில் 15 முஹூர்த்தங்களையும், இரவில் 15 முஹூர்த்தங்களையும் கொண்டது ஒரு நாளாகும். ஒரு முஹூர்த்தம் என்பது இன்றைய கால அளவில் 48 நிமிடங்களாகும். எனவே, ஒன்றரை முஹூர்த்தம் என்றால் 72 நிமிடங்களாகும். அதாவது. கிட்டத்தட்ட ஒன்றேகால் மணி நேரத்திற்கு நெருக்கமாக இருக்கும்.
[6] ஒரு சில பதிப்புகளில் முனிவர்கள் பேசுவது முதலில், தேவர்கள் பேசுவது அடுத்ததாகவும் வருகிறது. அதாவது இந்தக் குறிப்பிட்ட பத்தி {அதாவது 29 முதல் 33அ வரையுள்ளது} அடுத்த பத்திக்கு {அதாவது 33ஆ முதல் 37அ சுலோகம் வரையுள்ள பகுதிக்கு} அடுத்ததாக வருகிறது. இராமாயணத்தில் வரும் இது போன்ற இடங்களே ராமனை மானிட நிலையிலிருந்து விஷ்ணுவின் நிலைக்கு உயர்த்துகின்றன.
அப்போது ராஜரிஷிகளும், பரமரிஷி கூட்டத்துடன் கூடிய அகஸ்தியரும்[7] சேர்ந்து பெரும் மகிழ்ச்சியடைந்து, ராமனைப் புகழ்ந்து, இதைச் சொன்னார்கள்:(33ஆ,34அ) "பாகசாசனனும் {பாகன் என்ற அசுரனைக் கொன்றவனும்}, மஹாதேஜஸ்வியும், புரந்தரனுமான {அசுரர் நகரைப் பிளந்தவனுமான} மஹேந்திரன், இதற்காகவே புண்ணிவானான சரபங்கரின் ஆசிரமத்திற்கு வந்திருந்தான்[8].(34ஆ,35அ) பாப கர்மங்களைச் செய்யும் சத்ருக்களான இந்த ராக்ஷசர்களை வதைப்பதற்கான உபாயமாகவே இந்த தேசத்திற்கு {இடத்திற்கு} உன்னை மஹரிஷிகள் அழைத்து வந்தனர்.(35ஆ,36அ) தசரதாத்மஜா, எங்களுடைய இந்தக் காரியம் உன்னால் செய்து முடிக்கப்பட்டது. எனவே, மஹரிஷிகள் இனி தண்டகவனத்திலேயே தங்கள் ஸ்வதர்மத்தைப் பின்பற்றுவார்கள் {கடமையைச் செய்வார்கள்}" {என்றனர்}.(36ஆ,37அ)
[7] பல பதிப்புகளில் இங்கே அகஸ்தியர் குறிப்பிடப்படவில்லை. தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பில் மட்டுமே இங்கே அகஸ்தியர் குறிப்பிடப்படுகிறார்.
[8] ஆரண்ய காண்டம் 5ம் சர்க்கத்தில் இந்நிகழ்வு குறிப்பிடப்பட்டிருந்தது. அங்கே ராமனே இந்திரனைக் காண்கிறான். இந்திரன் ராமனைக் காண மறுத்து சரபங்கரின் ஆசிரமத்தில் இருந்து விரைந்து சென்று விடுகிறான். எனவே, ராமனும், இந்திரனும் நேரடியாக சந்தித்துக் கொண்ட நிகழ்வு இதுவரை எங்கும் குறிப்பிடப்படவில்லை. இந்த சர்க்கத்தின் 25ம் சுலோகத்தில், "தேவராஜனான இந்திரனால் கொடுக்கப்பட்ட பாணத்தை வில்லில் பூட்டினான் ராமன்" என்று சொல்லப்படுகிறது. இந்தக் குறிப்பிட்ட {34ஆ முதல்37அ சுலோகம் வரையுள்ள} வாக்கியத்தை அகஸ்தியர் ராமனிடம் குறிப்பிடுவதாகக் கொண்டால், "இந்திரன் இந்த ஆயுதங்களை சரபங்கரிடம் கொடுத்தான், சரபங்கர் அவற்றை சுதீக்ஷ்ணரிடம் கொடுத்து வைத்திருந்தார். சுதீக்ஷ்ணர் என்னிடம் கொடுத்தார். அவற்றையே நான் உன்னிடம் கொடுத்தேன்" என்ற பொருள் தொக்கி நிற்கும். 35ஆ,36அ சுலோகத்திற்கான பொருளும் அப்போது தெள்ளெனத் துலங்கும்.
அதே நேரத்தில், வீரனான லக்ஷ்மணன், சீதையை அழைத்துக் கொண்டு, அடைதற்கரிய கிரி துர்கத்தில் {மலைக் குகையில்} இருந்து வெளியே வந்து, சுகமாக ஆசிரமத்தில் நுழைந்தான்[9].(37ஆ,38அ) அப்போது மஹரிஷிகளால் பூஜிக்கப்பட்ட விஜயீவீரனான {வெற்றிபெற்ற வீரனான} ராமன், லக்ஷ்மணனாலும் பூஜிக்கப்பட்டவனாக அந்த ஆசிரமத்திற்குள் பிரவேசித்தான்.(38ஆ,39அ) மஹரிஷிகளின் சுகத்திற்காக, சத்ருக்களை வதம் செய்த தன் பர்த்தாவை {கணவன் ராமனைக்} கண்ட வைதேஹி {சீதை}, பெரும் மகிழ்ச்சியடைந்து, அவனைத் தழுவிக் கொண்டாள்.(39ஆ,40அ) அந்த ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை}, இராக்ஷச கணங்கள் {கூட்டம்} கொல்லப்பட்டதைக் கண்டும், ராமன் சோர்வடையாததைக் கண்டும் அதிக மகிழ்ச்சியடைந்து உள்ளம் பூரித்தவள் ஆனாள்.(40ஆ,இ) பிறகு, மகிழ்ச்சியான முகத்துடன் கூடிய அந்த ஜனகாத்மஜை {ஜனகனின் மகளான சீதை}, ராக்ஷச சங்கத்தை அழித்ததால் மகிழ்ச்சியடைந்த முனிவர்களால் பூஜிக்கப்பட்டவனை {ராமனை} மீண்டும் தழுவிக் கொண்டு பெரும் மகிழ்ச்சியடைந்தாள்[10].(41)
[9] விண்ணின் நீங்கிய வெய்யவர் மேனியில்புண்ணின் நீரும் பொடிகளும் போய் உகஅண்ணல் வீரனைத் தம்பியும் அன்னமும்கண்ணின் நீரினில் பாதம் கழுவினார்.- கம்பராமாயணம் 3062ம் பாடல், கரன் வதைப்படலம்பொருள்: போரில் இறந்து விண்ணை அடைந்த கொடியவரின் {அரக்கரின்} உடலில் ஏற்பட்ட புண்ணின் இரத்தமும், தூசிகளும் நீங்கிவிடும்படி பெருமைமிக்க வீரனாகிய ராமனின் பாதங்களை, அவனது தம்பியும் {இலக்ஷ்மணனும்}, அன்னமும் {சீதையும்} தங்கள் கண்களின் நீரால் கழுவினர்.
[10] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "தெய்வத்தால் தீய சக்தி அழிக்கப்படும்போதெல்லாம், அதைப் படிப்பதன், அல்லது கேட்பதன் பலன் இறுதியில் சொல்லப்படும். கரவதத்திற்கும் அப்படியொரு பல சுருதி இருப்பதை மஹேசுவர தீர்த்தர் குறிப்பிடுகிறார். அது பின்வருமாறு.ஷ்²ருத்வா ஷ்²ரீ ராம விஜயம் பாப ப³தா⁴த் ப்ரமுச்யதே .ததை²வ ஸ்ருʼந்க²லா ப³ந்தா⁴த் ருʼண ப³ந்தா⁴த் விமுச்யதே .ஷ்²ருத்வா புஷ்பவதீ நாரீ தநயம் வம்ஷ² வர்த⁴நம் .லப⁴தே ராக⁴வேந்த்³ரஸ்ய ப்ரஸாதா³த் கீர்தி வர்த⁴நம் .. ஸ்காந்த³ புராண"இராமவிஜயத்தை {இராமனின் வெற்றியைக்} கேட்கும் ஒருவன் தன் பாபச்சங்கிலிகளில் இருந்தும், வதை {தண்டனைச்} சங்கிலிகளில் இருந்தும், கடன் சிக்கல்களில் இருந்தும் விடுபடுகிறான். இதைக் கேட்கும் புஷ்பவதியான ஒரு நாரீ பெண், வம்சத்தை விருத்தி செய்யும் தனயனை {மகனைப்} பெறுவாள். இராகவனின் அருளால் செழுமையும், புகழும் பெருகும்" - ஸ்கந்த புராணம்.
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 30ல் உள்ள சுலோகங்கள்: 41
Previous | | Sanskrit | | English | | Next |