Dushana | Aranya-Kanda-Sarga-22 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கரன், தன் படைத்தளபதியான தூஷணனையும், தன் படையையும் போருக்கு ஆயத்தப்படுத்தியது; பதினான்காயிரம் ராக்ஷசர்களுடன் புறப்பட்டது...
சூர்ப்பணகை, இவ்வாறு ராக்ஷசர்களுக்கு மத்தியில் வைத்து இழித்துரைத்தபோது, சூரனான கரன் குரோதத்துடன் இந்தக் கடுஞ்சொற்களைச் சொன்னான்[1]:(1) "உனக்கு ஏற்பட்ட அவமானத்தின் காரணமாக எனக்குண்டான அளவில்லா குரோதம், {செரிக்காததும், உவர்ப்பு நிறைந்ததுமான} கடும் உப்புநீரைப் போல தரிக்க இயலாததாக இருக்கிறது.(2) க்ஷீண ஜீவிதம் கொண்ட மானுஷனும் {அற்ப ஆயுள் கொண்ட மனிதனும்}, தன் தீச்செயல்களால் இப்போது வதைக்கப்பட்டு பிராணனை விடப்போகிறவனுமான ராமனின் வீரியத்தை நான் அறிய வேண்டியதில்லை.(3) கண்ணீரை அடக்குவாயாக. இந்தக் கலக்கத்தைக் கைவிடுவாயாக. இராமனையும், அவனுடன் பிறந்தானையும் {லக்ஷ்மணனையும்} யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்புகிறேன்.(4) இராக்ஷசியே, பரசால் {கோடரியால்} வெட்டப்பட்டு, மந்தப் பிராணனுடன் {குற்றுயிராகக்} கிடக்கும் ராமனின் சிவந்த உதிரத்தை உஷ்ணத்துடன் {சுடச்சுட} நீ பருகுவாய்" {என்றான் கரன்}.(5)
[1] அங்கு அரக்கர் அவிந்து அழிந்தார் எனபொங்கு அரத்தம் விழிவழிப் போந்து உகவெங்கரப் பெயரோன் வெகுண்டான் விடைச்சங்கரற்கும் தடுப்பு அருந்தன்மையான்.- கம்பராமாயணம் 2896ம் பாடல்பொருள்: காளை வாகனமுடைய சங்கரனாலும் தடுக்க முடியாத தன்மை கொண்டவனும், கொடியவனுமான கரன் என்ற பெயரைக் கொண்டவன், அங்கு அரக்கர் இறந்து அழிந்தனர் என {சூர்ப்பணகைச் சொல்லக்} கேட்டு இரத்தம் பொங்க, விழிகள் வெளியே வர வெகுண்டான்.
கரனின் வதனத்திலிருந்து விழுந்த சொற்களைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சியடைந்தவள் {சூர்ப்பணகை}, மூடத்தனத்தால், "இராக்ஷசர்களில் {நீயே} சிறந்தவன்" என்று சொல்லித் தன்னுடன் பிறந்தனை மீண்டும் மீண்டும் புகழ்ந்தாள்.(6) முன்பு அவளால் {சூர்ப்பணகையால்} பழித்துரைக்கப்பட்டாலும், மீண்டும் இவ்வாறு புகழப்பட்ட கரன், அப்போது தூஷணன் என்ற பெயருடைய சேனாதிபதியிடம் {பின்வருமாறு} சொன்னான்:(7) "என் சித்தம் போல் {என் விருப்பப்படி} நடப்பவர்களும், போரில் திரும்பாதவர்களும், பயங்கர வேகம் கொண்டவர்களுமான பதினான்காயிரம் ராக்ஷசர்கள் இருக்கிறார்கள்.(8) கருநீல மேகத்தின் வண்ணத்தினரான அவர்கள் கோரமானவர்கள்; கொடுஞ்செயல் புரிபவர்கள்; உலகத்தாரை ஹிம்சித்துத் திரிபவர்கள்; பலசாலிகள்; உக்ரதேஜஸ் படைத்தவர்கள்.(9) சௌம்யா {மென்மையானவனே, தூஷணா}, என் ரதத்தையும், தனுவையும், சரங்களையும், சித்திரமான கட்கத்தையும் {வாளையும்}, விதவிதமான கூரிய சக்திகளையும் {வேல்களையும்} சீக்கிரம் என் முன்னால் கொண்டுவருவாயாக.(10) இரணகோவிதா {போரில் திறன்படைத்தவனே}, துர்விநீதனான {ஒழுக்கங்கெட்டவனான} ராமனை வதம் செய்வதற்காக பௌலஸ்தியர்களில் {புலஸ்திய குலத்தைச் சேர்ந்த ராக்ஷசர்களில்} மஹாத்மாக்களுக்கு முன் நான் புறப்பட விரும்புகிறேன்" {என்றான் கரன்}.(11)
அவன் இவ்வாறு பேசிக்கொண்டிருந்த போதே அந்த தூஷணன், பல்வேறு வண்ணங்களிலான நல்ல அசுவங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டதும், சூரிய வர்ணம் கொண்டதுமான மஹாரதம் வருவதை அறிவித்தான்.(12) மேருவின் சிகர வடிவம் கொண்டதும், புடம்போட்ட காஞ்சனத்தால் {பொன்னால்} அலங்கரிக்கப்பட்டதும், ஹேமச்சக்கரங்கள் {பொன்னாலான சக்கரங்கள்} பொருத்தப்பட்டதும், விசாலமானதும், வைடூர்யத்தாலான கூபரத்தை {நுகத்தடியைக்} கொண்டதும், காஞ்சனத்தாலான {பொன்னாலான} மீன்கள், புஷ்பங்கள், மரங்கள், சைலங்கள் {மலைகள்}, சந்திர சூரியர்கள், மங்கலமான பக்ஷி சங்கங்கள் {பறவைக் கூட்டங்கள்}, தாரைகள் {நக்ஷத்திரங்கள்} ஆகியவற்றால் எங்கும் சூழப்பட்டதும், துவஜம், கத்தி ஆகியவற்றைக் கொண்டதும், கிங்கிணி மணிகளால் அலங்கரிக்கப்பட்டதும், நல்ல அசுவங்கள் {குதிரைகள்} பூட்டப்பட்டதுமான அதில் {அந்த ரதத்தில்} கரன் பொறுத்துக் கொள்ளமுடியாத கோபத்துடன் ஏறினான்.(13-15) இரதங்கள், தோல்கள் {தோலாலான கவசங்கள்}, ஆயுதங்கள், துவஜங்கள் {கொடிகள்} ஆகியவற்றுடன் கூடிய அந்த மஹத்தான சைனியத்தையும், சர்வராக்ஷசர்களையும், தூஷணனையும் கண்ட கரன், "நடப்பீராக" என்றான்.(16)
தோல்கள் {கவசங்கள்}, ஆயுதங்கள், துவஜங்களுடன் கூடிய கோரமான அந்த ராக்ஷச சைனியம், மஹாநாதத்துடனும், மஹாவேகத்துடனும் ஜனஸ்தானத்தில் இருந்து புறப்பட்டது.(17) கைகளில் முத்கரங்கள் {இரும்புத் தடிகள்}, பட்டிசங்கள் {பட்டாக்கத்திகள்}, சூலங்கள், மிகக்கூரிய பரசுகள் {கோடரிகள்}, கட்கங்கள் {வாள்கள்}, சக்கரங்கள், பளபளக்கும் தோமரங்கள்,{18} சக்திகள் {வேல்கள்}, கோரமான பரிகங்கள், மிகப் பெரிய விற்கள், கதைகள், கத்திகள், முசலங்கள் {உலக்கைகள்} ஆகியவற்றோடும், வஜ்ராயுதங்களோடும்,{19} மிகப் பயங்கரர்களும், கரனின் சித்தம்போல் நடப்பவர்களுமான அந்த ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரும் ஜனஸ்தானத்திலிருந்து புறப்பட்டுச்சென்றார்கள்.(18-20)
பயங்கரத் தோற்றமுடைய அந்த ராக்ஷசர்கள், மிக வேகமாக விரைந்து கொண்டிருந்தனர். கரனின் ரதம் சற்றே அவர்களுக்குப் பின்னால் சென்றது.(21) அப்போது சாரதி, {அவர்களுக்கு முன்னால் செல்ல வேண்டும் என்ற} கரனின் அபிப்ராயத்தை அறிந்து கொண்டு, புடம்போட்ட காஞ்சனத்தால் {தங்கத்தால்} அலங்கரிக்கப்பட்டவைகளும், பல வர்ணமுள்ளவைகளுமான அசுவங்களை {குதிரைகளை} வேகமாக செலுத்தினான்.(22) இவ்வாறே, பகைவரைக் கொல்லும் கரனால் சீக்கிரமாகச் செலுத்தப்பட்ட ரதத்தின் சப்தம், திசைகளையும், உபதிசைகளையும் நிரப்பியது.(23) மஹாபலவானும், {கழுதை போன்ற} கொடிய குரல் உடையவனுமான கரன், கோபாவேசங்கொண்டு பகைவனைக் கொல்வதில் அந்தகனைப் போல் துரிதமடைந்து, கல்மழை பொழியும் மேகத்தைப் போல, சாரதியை மீண்டும் மீண்டும் அவசரப்படுத்தியபடியே கர்ஜித்துக் கொண்டிருந்தான்.(24)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 22ல் உள்ள சுலோகங்கள்: 24
Previous | | Sanskrit | | English | | Next |