Demons eliminated | Aranya-Kanda-Sarga-20 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பதினான்கு ராக்ஷசர்களையும் கொன்ற ராமன்; அந்தப் படுகொலையை கரனிடம் அறிவித்த சூர்ப்பணகை...
கோரமான அந்த சூர்ப்பணகை, ராகவனின் ஆசிரமத்தை அடைந்ததும், அவ்விரு உடன்பிறந்தோரையும் {ராமலக்ஷ்மணர்களையும்}, சீதையையும் அந்த ராக்ஷசர்களுக்குக் காட்டினாள்.(1) அவர்கள், பர்ணசாலையில் லக்ஷ்மணனால் சேவிக்கப்பட்டு சீதையுடன் அமர்ந்திருக்கும் மஹாபலம் பொருந்திய ராமனைக் கண்டனர்.(2) ஸ்ரீமான் ராகவன், அங்கே வந்திருப்பவர்களையும், அந்த ராக்ஷசியையும் கண்டான். அப்போது ராமன், தேஜஸ்ஸில் ஒளிர்ந்து கொண்டிருந்த தன்னுடன் பிறந்த லக்ஷ்மணனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(3) "சௌமித்ரியே, இவளது {சூர்ப்பணகையின்} பாதையைப் பின்பற்றி இங்கே வந்திருக்கும் இவர்களை நான் வதம் செய்ய விரும்புவதால், ஒரு முஹூர்த்தம் சீதையின் பின் இருப்பாயாக" {என்றான் ராமன்}.(4)
அப்போது லக்ஷ்மணன், தன்னை அறிந்தவனான ராமனின் இந்த வாக்கியத்தைக் கேட்டு, "அவ்வாறே ஆகட்டும்" என்று சொல்லி ராமனின் வாக்கியத்திற்கு மதிப்பளித்தான்.(5) தர்மாத்மாவான ராகவன், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட மகத்தான வில்லை எடுத்து நாண்பூட்டி,[1] அந்த ராக்ஷசர்களிடம் {முன்னெச்சரிக்கை செய்யும் வகையில் பின்வருமாறு} சொன்னான்:(6) "தசரதனின் புத்திரர்களும், உடன்பிறந்தோருமான நாங்கள் இருவரும் ராமலக்ஷ்மணர்கள். கடப்பதற்கரிய தண்டகவனத்திற்குள் சீதையுடன் பிரவேசித்திருக்கிறோம்.(7) பழங்களையும் கிழங்குகளையும் உண்டு, புலனடக்கத்துடன் தர்மவழியில் நடந்து, தண்டகாரண்யத்தில் வசிக்கும் தாபஸ்விகளான எங்களை ஏன் நீங்கள் ஹிம்சிக்கிறீர்கள்?(8) உங்களைப் போன்ற பாப ஆத்மாக்களையும், பிறருக்குத் தீங்கு விளைவிப்பவர்களையும் பெரும்போரில் கொல்ல வேண்டுமெனும் ரிஷிகளுக்குக் கட்டுப்படும் வகையில் வில்லுடனும், சரங்களுடனும் இங்கே நான் வர வாய்த்திருக்கிறது.(9) நிசாசரர்களே {இரவுலாவிகளே}, நிறைவுடன் இருந்தால் திரும்பாமல் அங்கேயே இருப்பீராக. அல்லது, பிராணனின் பயன் வேண்டுமென்றால் விலகிச் செல்வீராக" {என்றான் ராமன்}.(10)
[1] ஏத்து வாய்மை இராமன் இளவலைகாத்தி தையலை என்று தன் கற்பகம்பூத்தது அன்ன பொரு இல் தடக் கையால்ஆத்த நாணின் அருவரை வாங்கினான்.- கம்பராமாயணம் 2891ம் பாடல்பொருள்: அனைவரும் புகழும் வாய்மையுடைய ராமன், தன் தம்பியிடம், "பெண்ணைக் காப்பாயாக" என்று சொல்லி, பொலிவு பெற்ற கற்பக மரம் போன்ற ஒப்பிலாத தன்னுடைய பெரிய கைகளால் கட்டப்பட்ட நாண்கயிற்றைக் கொண்ட மலை போன்ற வில்லை எடுத்தான்.
பிரம்மக்னர்களும் {பிராமணர்களைக் கொல்பவர்களும்}, சூலபாணிகளுமான அந்தப் பதினான்கு ராக்ஷசர்களும், அவனது சொற்களைக் கேட்டுப் பெருங்கோபம் அடைந்தனர். செவ்வரியோடிய கண்களைக் கொண்டவனும், மதுரமாகப் பேசுபவனுமான ராமனின் பராக்கிரமத்தை அறியாதவர்கள், குரோதத்தால் சிவந்த இரத்தக் கண்களுடனும், மகிழ்ச்சியுடனும் இந்தக் கடுஞ்சொற்களைச் சொன்னார்கள்:(11,12) "எங்கள் தலைவரும், மஹாத்மாவுமான கரனின் குரோதத்தைத் தூண்டிய நீயே, இப்போது யுத்தத்தில் எங்களால் கொல்லப்பட்டுப் பிராணனை விடப்போகிறாய்.(13) பலரான எங்கள் முன் தனியாக போர் முனையில் நிற்கும் சக்தி உனக்கேது? போரில் நீ போரிடுவதைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா?(14) எங்கள் கரங்களால் நாங்கள் பரிகங்களையும், சூலங்களையும், பட்டிசங்களையும் வீசும்போது, பிராணனையும், வீரியத்தையும், கையில் பிடித்திருக்கும் அந்த தனுவையும் நீ கைவிடுவாய்" {என்றனர் அந்த ராக்ஷசர்கள்}.(15)
கோபத்துடன் இதைச் சொன்ன அந்தப் பதினான்கு ராக்ஷசர்களும், தயக்கமில்லாமல் தங்கள் ஆயுதங்களை உயர்த்தியபடியே, தனியாக நின்று கொண்டிருந்த ராமனிடம் விரைந்து சென்று, தடுக்கப்பட முடியாதவனான அந்த ராகவனை நோக்கி தங்கள் சூலங்களை ஏவினர்.(16,17அ) காகுத்ஸ்தன் அந்தப் பதினான்கு சூலங்களையும் அதே எண்ணிக்கையிலானவையும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டவையுமான சரங்களால் முழுமையாகத் துண்டாக்கினான்.(17ஆ,18அ) அடுத்ததாக, பரம குரோதத்துடன் கூடிய அந்த மஹாதேஜஸ்வி {ராமன்}, கல்லில் கூராக்கப்பட்டவையும், சூரியனைப் போலப் பிரகாசிப்பவையுமான பதினான்கு நாராசங்களை எடுத்தான்.(18ஆ,19அ) அப்போது அந்த ராகவன், வில்லை எடுத்து, ராக்ஷசர்களை இலக்காக்கி, அதை வளைத்து, சதக்ரது {இந்திரன் ஏவும்} வஜ்ரத்தைப் போல அந்த பாணங்களை ஏவினான்.(19ஆ,20அ)
அவை வேகத்துடன் சென்று அந்த ராக்ஷசர்களின் மார்புகளைத் துளைத்து, உதிரஞ்சொட்ட வேகமாக வெளியேறி, எறும்புப் புற்றில் புகும் பன்னகங்களை {பாம்புகளைப்} போல பூமிக்குள் புதைந்தன.(20ஆ,21அ) அவற்றால் ஹிருதயங்கள் பிளவுண்டு, குருதியில் நனைந்து, சிதைந்து, உண்மையில் தங்கள் உயிர்களை இழந்து, வேரறுக்கப்பட்ட மரங்களைப் போல அவர்கள் பூமியில் விழுந்தார்கள்.(21ஆ,22அ) குரோதத்துடன் கூடிய அந்த ராக்ஷசி {சூர்ப்பணகை}, பூமியில் விழுந்தவர்களைக் கண்டு மூர்ச்சித்து, நடுங்கி, பெருங்கூச்சலிட்டவாறே திரும்பிச் சென்று, சற்றே காய்ந்த ரத்தத்துடன் பிசின் கட்டிய வல்லரி {ஆனைவணங்கி} மரம் போல் கரன் முன்னிலையில் மீண்டும் விழுந்தாள்.(22ஆ,23)
அப்போது அவள், தன்னுடன் பிறந்தானின் {கரனின்} சமீபத்தில், வதனத்தின் வர்ணமிழந்து, பெருங்குரலில் கதறி, மீண்டும் மீண்டும் கண்ணீர் வடித்து அழுதாள்.(24) கரனின் தமக்கையான சூர்ப்பணகை, போரில் வீழ்ந்த ராக்ஷசர்களைக் கண்டு, அங்கிருந்து தப்பியோடி, அந்த ராக்ஷசர்கள் கொல்லப்பட்டது குறித்த அனைத்தையும் {அவனிடம்} அறிவித்தாள்.(25)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 20ல் உள்ள சுலோகங்கள்: 25
Previous | | Sanskrit | | English | | Next |