To abduct the damsel | Aranya-Kanda-Sarga-36 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஜனஸ்தானத்திற்கு நேர்ந்த கதையைச் சொல்லி, சீதையை அபகரிக்க உதவுமாறு மாரீசனை வேண்டிய ராவணன்; கிலியடைந்த மாரீசன்...
தாதா {ஐயா} மாரீசா, நான் சொல்லும் சொற்களைக் கேட்பாயாக. துன்பத்தில் உள்ள எனக்கு நீயே பரம கதியாகத் திகழ்கிறாய்.(1) என் சகோதரனான {தம்பியான} கரன், மஹாபாஹுவான தூஷணன், என் சகோதரியான {தங்கையான} சூர்ப்பணகை, மஹாதேஜஸ்வியும் {பெரும் வலிமைமிக்கவனும்}, பிசிதாசனனுமான {பச்சை மாமிசம் உண்பவனுமான} ராக்ஷசன் திரிசிரன், சூரர்களும், இலக்கைத் தவறாமல் வீழ்த்துபவர்களுமான வேறு பல நிசாசரர்கள் {இரவுலாவிகள்}, ராக்ஷசர்கள் ஆகியோர், என்னால் நியமிக்கப்பட்டவர்களாக, மஹா அரண்யத்தில் தர்மசாரிகளாகத் திரியும் முனிவர்களைத் துன்புறுத்திக் கொண்டும், ஜனஸ்தானத்தை வசிப்பிடமாகக் கொண்டும் வசித்து வந்தார்கள் என்பதை நீ அறிவாய்.(2-4)
பீம கர்மங்களை {பயங்கரச் செயல்களைச்} செய்பவர்களும், இலக்கை அடைபவர்களும், கரனின் சித்தத்தை {விருப்பத்தைப்} பின்பற்றியவர்களுமான அத்தகைய ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேர் இருந்தனர்.(5) ஜனஸ்தானத்தில் வசித்து வந்த மஹாபலர்கள், ராக்ஷசன் கரனின் தலைமையில், அவனால் ஆதரிக்கப்பட்டவர்களாகத் தாக்குதலுக்குரிய நானாவித சஸ்திரங்களை {ஆயுதங்களைத்} தரித்துக் கொண்டு, ராமனுடன் போரிடச் சென்றனர்[1].(6,7அ) கோபத்துடன் கூடியவனான ராமன், போர்முனையில் கடுஞ்சொல் ஏதும் பேசாமல், தனுவை வளைத்து சரங்களை ஏவத் தொடங்கினான்.(7ஆ,8அ) பதாதியான அந்த மானுஷன் {காலாட்படை வீரனான அந்த மனிதன்}, உக்கிர தேஜஸ்ஸுடன் கூடிய ராக்ஷசர்கள் பதினான்காயிரம் பேரையும், தன் கூரிய சரங்களால் அழித்துவிட்டான்.(8ஆ,9அ) அந்தப் போரில் கரன் கொல்லப்பட்டான், தூஷணனும் வீழ்த்தப்பட்டான், திரிசிரனும் கொல்லப்பட்டான், தண்டகமும் நிர்பயமாக்கப்பட்டது {பயம் ஒழிந்ததாக்கப்பட்டது}[2].(9ஆ,10அ)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "இந்தக் கதை இந்த காண்டத்தின் 33ம் சர்க்கமாக வரும் அகம்பனன் கதையிலேயே விவரிக்கப்படுகிறது. ஆனால் இந்த இடத்தில் ராவணன் சொல்லும் விதம் முந்தையதில் இருந்து வேறுபடுகிறது. அகம்பனன் அத்தியாயம் மூலப்படைப்புக்குரியதா, இடைச்செருகலா என்ற விவாதத்திற்குப் பயன்படும் மற்றுமொரு இடமாக இது திகழ்கிறது" என்றிருக்கிறது.
[2] திருகு சினத்தார் முதிர மலைந்தார் சிறியோர் நாள்பருகினன் என்றால் வென்றி நலத்தில் பழி அன்றோஇரு கை சுமந்தாய் இனிதின் இருந்தாய் இகல் வேல் உன்மருகர் உலர்ந்தார் ஒருவன் மலைத்தான் வரி வில்லால்.- கம்பராமாயணம் 3241ம் பாடல், மாரிசன் வதைப்படலம்பொருள்: "பெரும் சினமுடையவரும், முற்றிய போரில் ஈடுபட்டவரும் எனக்கு சிறியோரும் {இளையவராகி கரன் முதலானோர்} அழிந்தனர் என்றால், இதுவரை வெற்றியே பெற்று வந்த என் பெருமைக்கு இது பழியாகாதா? கொடிய வேலேந்திய உன் மருமக்கள் வேறொருவனின் கட்டமைந்த வில்லால் இறந்துவிட்டாலும், நீ இரண்டு கையையும் சுமந்தபடி இனிதாக வாழ்ந்து கொண்டிருக்கிறாய்" என்பது மேற்கண்ட பாடலின் பொருள். ராவணனுக்கு மாரீசன் மாமன் முறை என்பது இந்தப் பாடலின் மூலம் வெளிப்படுகிறது.
குரோதமடைந்த பிதாவால், காலடி வைக்க இடமில்லாமல் பாரியையுடன் விரட்டப்பட்டு, க்ஷீணஜீவிதத்தை {அற்பவாழ்வை} அடைந்த ராமனெனும் இழிந்த க்ஷத்திரியன், அந்த சைனியத்தையே அழித்துவிட்டான்.(10ஆ,11அ) சீலமற்றவனும், முரடனும், கடுமை நிறைந்தவனும், மூர்க்கனும், லுப்தனும் {தன்னலம் கொண்டவனும்}, அஜிதேந்திரியனும் {புலன்களை வெல்லாதவனும்}, தர்மத்தைக் கைவிட்டவனும், பூதங்களுக்கு {உயிரினங்களுக்குத்} தீமை செய்வதில் திளைப்பவனும்,(11ஆ,12அ) வைரம் {பகை} இல்லாமலேயே, வெறும் பலத்தை மட்டுமே சார்ந்து என் பகினியின் {சகோதரியான சூர்ப்பணகையின்} காதுகளையும், நாசியையும் சிதைத்தவனும் எவனோ அவனுடைய {அந்த ராமனின்} பாரியையும், ஸுரஸுதைக்கு {தேவமகளுக்கு} ஒப்பானவளுமான சீதையை விக்ரமத்தால் {வீரத்தால்} ஜனஸ்தானத்தில் இருந்து கொண்டு வருவதில் எனக்கு நீ சகாயம் செய்வாயாக[3].(12ஆ-14அ)
[3] வெப்பு அழியாது என் நெஞ்சும்உலர்ந்தேன் விளிகின்றேன்ஒப்பு இலர் என்றே போர் செயல்ஒல்லேன் உடன் வாழும்துப்புஅழி செவ்வாய் வஞ்சியைவௌவ துணை கொண்டிட்டுஇப்பழி நின்னால் தீரிய வந்தேன்இவண் என்றான்.- கம்பராமாயணம் 3242ம் பாடல், மாரீசன் வதைப்படலம்பொருள்: மனத்தின் வெப்பம் தணியாமல் நெஞ்சம் வாடி அழிகிறேன். அவர்கள் எனக்கு ஒப்பிலாதவர்கள் என்பதால் போரிட விரும்பாமல், அவர்களுடன் வாழ்பவளும், பவளத்தை வெல்லும் செவ்விதழ்களையுடையவளுமான வனிதையைக் கவர்ந்து வர உதவி வேண்டியும், எனக்கு நேர்ந்த பழியைத் துடைக்க வேண்டியும் இங்கே வந்தேன் என்றான்
மஹாபலவானே, நீ எனக்கு சகாயம் செய்தால், என் தரப்பில் உன்னையும், என் சகோதரர்களையும் சேர்ந்து, ஸுரர்களுடன் {தேவர்களுடன்} போரிடவும் நான் சிந்திக்கமாட்டேன். எனவே, ராக்ஷசா, சமர்த்தனான நீ எனக்கு சகாயம் செய்வாயாக.(14ஆ,15) வீரியத்திலும், யுத்தத்திலும், செருக்கிலும் உனக்கு நிகர் எவருமில்லை. நீ உபாயஜ்ஞனாகவும், மஹாசூரனாகவும், மஹாமாய விசாரதனாகவும் இருக்கிறாய் {வெற்றிக்கான வழிமுறைகளை அறிந்தவனாகவும், பெரும் சூரனாகவும், மந்திர வித்தைகளில் பெரும் மாயைகளை நன்கு உணர்ந்தவனாகவும் இருக்கிறாய்}.(16) நிசாசரா, அதற்காகவே நான் உன் சமீபம் வந்தேன். சகாய காரியத்திற்கான அந்த கர்மத்தை {எனக்கு உதவ நீ செய்ய வேண்டியதை} நான் சொல்கிறேன் கேட்பாயாக.(17)
ரஜத பிந்துக்களுடன் கூடிய சித்திரமான சுவர்ண மிருகமாகி {ஆச்சரியப்படுத்தும் வெள்ளிப் புள்ளிகளுடன் கூடிய ஒரு பொன்மானாகி} அந்த ராமனின் ஆசிரமத்தில் சீதையின் முன்பு நீ திரிவாயாக.(18) மிருக ரூபத்திலான {மானின் வடிவிலான} உன்னைக் காணும் சீதை, தன் பர்த்தாவிடமும் {கணவனான ராமனிடமும்}, லக்ஷ்மணனிடமும், "இதைப் பிடிப்பீராக" எனச் சொல்வாள். இதில் ஐயமில்லை.(19) அப்போது, அவ்விருவரும் இல்லாத அந்த சூனியத்தில் {வெற்றிடத்தில்}, சுகமாகவும், தடையேதும் இல்லாமலும், ராஹு {அபகரித்த} சந்திர பிரபையைப் போல சீதையை நான் அபகரிக்க விரும்புகிறேன்.(20) அதன்பிறகு, பாரியை அபகரிக்கப்பட்டதில் ராமன் பீடிக்கப்படும்போது {சோர்வடையும்போது}, நிறைவடைந்த அந்தராத்மாவுடன் {உள்ளத்துடன்} சுகமாகவும், எளிதாகவும் {நான் அவனுக்குப்} பதிலடி கொடுக்க விரும்புகிறேன்" {என்றான் ராவணன்}.(21)
இராம கதையைக் கேட்ட மஹாத்மாவான அந்த மாரீசனின் வாய் முற்றிலும் வறண்டது, அவன் முற்றிலும் திகிலடைந்தவனானான்.(22) உலர்ந்த உதடுகளை நாவால் நனைத்தபடியே, நேத்திரங்களை {கண்களை} இமைக்காதவன் போலவும், உயிரற்ற உயிரினத்தைப் போலவும் துன்புற்று ராவணனை நிமிர்ந்து நோக்கினான்.(23) மஹாவனத்தில் ராமனின் பராக்கிரமத்தை அறிந்த அவன் {மாரீசன்}, நடுங்கிக் கலங்கிய மனத்துடன் கைகளைக் கூப்பி, அவனது ஹிதத்திற்காகவும் {ராவணனின் நலத்திற்காகவும்}, தன்னுடைய ஹிதத்திற்காகவும், {உண்மைகள் பொதிந்த சொற்களில்} தத்துவமான வாக்கியங்களை ராவணனிடம் சொல்லத் தொடங்கினான்.(24)
ஆரண்ய காண்டம் சர்க்கம் – 36ல் உள்ள சுலோகங்கள்: 24
Previous | | Sanskrit | | English | | Next |