Is it a dream? | Sundara-Kanda-Sarga-32 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: கனவா, நிஜமா என்று அதிர்ந்த சீதை; ஹனுமான் பேசிய சொற்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று தேவர்களிடம் வேண்டியது...
அப்போது {சீதை}, சாகைகளின் அந்தரத்தில் {கிளைகளின் இடுக்கில்} மறைந்திருந்தவனும், வெள்ளை ஆடை உடுத்தியிருந்தவனும், மின்னல் கூட்டம் போல் பிங்கள {மஞ்சள்} வர்ணம் கொண்டவனுமான அவனை {ஹனுமானைக்} கண்டு அதிர்ந்தாள்.(1) முற்றும் மலர்ந்த அசோக மலர்த்திரள் போல் ஒளிர்ந்தவனும், புடம்போட்ட தங்கத்திற்கு ஒப்பான கண்களைக் கொண்டவனும், பணிவுள்ளவனும், பிரியவாதியுமான கபியை {இன்சொல் பேசும் குரங்கான ஹனுமானை} அங்கே அவள் {சீதை} கண்டாள்.(2)
பரம ஆச்சரியம் அடைந்த மைதிலி, {பின்வருமாறு} சிந்தித்தாள், “அஹோ, வானரத்தின் இந்த ரூபம் அணுகமுடியாததாகவும், பயங்கரமாகவும், காண்பதற்கரிதாகவும் இருக்கிறதே” {என்று சிந்தித்தாள்}.{3}
இவ்வாறு நினைத்து, மீண்டும் அவள் கலக்கமடைந்தாள்.(3,4அ) பயத்தால் கலங்கிய சீதை, கருணைக்குரிய வகையில் {பின்வருமாறு} புலம்பினாள்,{4ஆ} ”ராமரே, ராமரே” என்றும், லக்ஷ்மணரே” என்றும் {புலம்பினாள்}. துக்கத்தால் பீடிக்கப்பட்ட பாமினியான {அழகிய பெண்ணான} சீதை, பலவாறாக மந்த ஸ்வரத்தில் {மெல்லிய குரலில்} மந்தமாக அழுது கொண்டிருந்தாள்.(4ஆ,5)
பணிவுடன் அணுகும் அந்த ஹரிசிரேஷ்டனை {குரங்குகளில் சிறந்த ஹனுமானைக்} கண்டவளும், பாமினியுமான அந்த மைதிலி, “இது ஸ்வப்னம் {கனவு}” என்று சிந்தையில் நினைத்தாள்.(6) அங்கேயும், இங்கேயும் நோக்கியவள், கோணலான வாயைக் கொண்டவனும், சாகைமிருகேந்திரன் {கிளைகளில் வாழும் விலங்குகளின் தலைவனான சுக்ரீவன்} சொன்னதைச் செய்பவனும், பிங்கர்களில் {குரங்குகளில்} முதன்மையானவனும், பெரிதும் மதிக்கத் தகுந்தவனும், புத்திமான்களில் சிறந்தவனுமான ஹனுமானைக் கண்டாள்.(7)
அவனைக் கண்டதும், உயிரில்லாதவளைப் போல நனவைப் பெரிதும் இழந்த அந்த சீதை, நீண்ட நேரத்திற்குப் பிறகு நனவுமீண்டு, கண்களை அகல விரித்து, மீண்டும் {பின்வருமாறு} சிந்தித்தாள்:(8) “இன்று, சாஸ்திரகணங்களால் {பல சாஸ்திரங்களால்} விலக்கப்பட்ட, விகாரமான சாகைமிருகம் என்னால் ஸ்வப்னத்தில் காணப்பட்டது {கிளையில் வாழும் விலங்கான குரங்கைக் கனவில் நான் கண்டேன்}. இலக்ஷ்மணருடன் கூடிய ராமருக்கும், என் பிதாவான ஜனகராஜருக்கும் ஸ்வஸ்தி {நலமுண்டாகட்டும்}.(9) சோகத்தாலும், துக்கத்தாலும் பீடிக்கப்பட்ட எனக்கு நித்திரையில்லை என்பதால் இது ஸ்வப்னமாகக்கூட {கனவாகக்கூட} இருக்காது. பூர்ண இந்துவுக்கு {சந்திரனுக்கு} ஒப்பான முகம் கொண்டவரை {ராமரைப்} பிரிந்த எனக்கு சுகமே கிடையாது.(10)
அவரை மட்டுமே புத்தியில் சிந்தித்து, “ராமரே, ராமரே” என்று சதா என் குரலில் சொல்லிக் கொண்டிருப்பதால், அந்தக் கதையையே காண்கிறேன்; அதன் அர்த்தத்தையே கேட்கிறேன்.(11) இன்று அவரைக் குறித்த எண்ணத்தால் பீடிக்கப்பட்டவளாக, சர்வபாவத்துடன் {முழுமனத்துடன்} சதா அவரையே சிந்தித்துக் கொண்டிருப்பதால், அவ்விதமாகவே {அவரைப்பற்றியே} நான் காண்கிறேன். அவ்விதமாகவே {அவரைப்பற்றியே} கேட்கிறேன்.(12) மனோரதம் {என் மனத்தில் இருக்கும் விருப்பம்} நிறைவேறும் என்று நினைக்கிறேன். அதேபோலவே, புத்தியிலும் தர்க்கம் செய்கிறேன். அதற்கு ரூபம் இருக்காதே. இது ரூபத்துடன் வெளிப்பட்டு என்னைக் குறித்துப் பேசுவதன் காரணமென்ன?(13)
வஜ்ரியுடன் கூடிய வாசஸ்பதியையும், ஸ்வயம்புவையும், ஹுதாசனனையும் {இந்திரனுடன் கூடிய பிருஹஸ்பதியையும், பிரம்மனையும், அக்னியையும்} வணங்குகிறேன். இந்த வானரனால் என்முன்பு பேசப்பட்டவை எவையோ, அவை அப்படியே ஆகட்டும். வேறு வகையிலாகவேண்டாம்” {என்றாள் சீதை}.(14)
சுந்தர காண்டம் சர்க்கம் – 32ல் உள்ள சுலோகங்கள்: 14
Previous | | Sanskrit | | English | | Next |