Friday 23 February 2024

ஹனுமானின் ஆலோசனை | சுந்தர காண்டம் சர்க்கம் - 30 (44)

Counsel of Hanuman | Sundara-Kanda-Sarga-30 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதைக்கு ஆறுதல் சொல்வதா, வேண்டாமா என்று குழம்பிய ஹனுமான்; சீதையின் காதுக்கு மட்டும் கேட்கும் வகையில், இன்குரலில் ராமனைப் புகழ முடிவெடுத்தது...

Hanuman thinking what to do next after seeing Seetha's plight

விக்ராந்தனான {வீரமிக்க} ஹனுமானும், ராக்ஷசிகளின் அச்சுறுத்தல், திரிஜடை பேசியது, சீதை பேசியது என அனைத்தையும் உண்மையில் கேட்டான்.(1) அப்போது, நந்தனத்தின் தேவதையைப் போல அந்த தேவியை {சீதையைக்} கண்ட வானரன் {ஹனுமான்}, பல்வேறு விதங்களில் சிந்தையில் சிந்தித்தான்.(2) “எவள் மிகப்பல ஆயிரங்களிலான, அயுதங்களிலான  கபிகளால் {பதினாயிரங்களிலான குரங்குகளால்} சர்வ திக்குகளிலும் தேடப்படுகிறாளோ, அத்தகையவளை நான் கண்டுகொண்டேன்.(3) {சுக்ரீவரால்} சாரணனாக {ஒற்றனாகப்} பொருத்தமாக நியமிக்கப்பட்ட நான், கமுக்கமாகச் சென்று, சத்ருக்களின் சக்தியை உறுதி செய்து கொண்டு, இதையும் கண்டிருக்கிறேன்.(4) இராக்ஷசர்களின் விசேஷங்களையும், இந்தப் புரீயையும் {லங்காபுரி நகரத்தையும்}, ராக்ஷசாதிபதியான ராவணனின் பிரபாவத்தையும் கண்டிருக்கிறேன்.(5)

பதியை தரிசிக்க விரும்புகிறவளை, அளவில்லா வலிமை கொண்ட சர்வசத்வ தயாவதரின் பாரியையை ஆசுவாசப்படுத்துவதே பொருத்தமானது {அனைத்து உயிரினங்களிடமும் கருணை காட்டும் ராமரின் மனைவியான சீதையைத் தேற்றுவதே பொருத்தமானது}.(6) பூர்ணச் சந்திரனுக்கு ஒப்பான முகம் கொண்டவளும், {இதற்கு முன்பு} துக்கத்தைக் காணாதவளும், {இப்போது} துக்கத்தால் பீடிக்கப்பட்டவளும், துக்கத்தின் அந்தத்தை {முடிவை} எட்டாதவளுமான இவளை நான்  ஆசுவாசப்படுத்துவேன் {தேற்றுவேன்}.(7) சோகத்தால் பீடிக்கப்பட்ட நனவுடன் கூடிய இந்த தேவியை, ஆசுவாசப்படுத்தாமல் நான் திரும்பிச் சென்றால், என் புறப்பாடு தோஷமடையும் {குற்றமுள்ளதாகும்}.(8) நான் அங்கே திரும்பிச் சென்றுவிட்டால், புகழ்மிக்க ராஜபுத்திரியான ஜானகி, காப்பவர் எவரையும் காணாமல் தன் ஜீவிதத்தைக் கைவிடுவாள்.(9) பூர்ணச்சந்திரனுக்கு நிகரான முகமுடையவரும், சீதையைக் காணும் ஏக்கத்தில் இருப்பவருமான மஹாபாஹுவை {நீண்ட கரங்களைக் கொண்ட ராமரை}, நியாயமாக நான் ஆசுவாசப்படுத்த வேண்டும்.(10)

நிசாசாரிணிகள் {இரவுலாவி ராக்ஷசிகள்} பார்க்க நேரடியாகப் பேசுவது முறையாகாது. இந்த இக்கட்டான சூழலில் நான் இதை எப்படிச் செய்யப் போகிறேன்?(11) எஞ்சியிருக்கும் இந்த ராத்திரியில் நான் ஆசுவாசப்படுத்தவில்லையெனில், எல்லாவகையிலும் இவள் ஜீவிதத்தைக் கைவிடுவாள் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.(12) ஸுமத்யமையிடம் {நல்லிடையாளான சீதையிடம்} பேசாத என்னிடம், “எனக்கு சீதை சொன்ன சொற்களென்ன? {எனக்கு சீதை சொல்லியனுப்பிய செய்தியென்ன?}” என்று ராமர் விசாரித்தால், அதைக் குறித்து அவரிடம் நான் என்ன சொல்வேன்?(13) சீதையின் சந்தேசம் {செய்தி} ஏதுமில்லாமல் இங்கிருந்து துரிதமாகச் செல்லும் என்னிடம் குரோதமடையும் காகுத்ஸ்தர் {ராமர்}, தன் தீவிரக் கண்களால் {என்னை} எரித்துவிடுவார்.(14) இராமகாரணத்திற்காகத் தலைவரை {சுக்ரீவரைத்} தூண்டினாலும், சைனியத்துடன் வரும் அவரது வரவு வீணாகிவிடும்.(15)

இங்கேயே, ராக்ஷசிகளின் மத்தியில் வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்து, பெரும் சந்தாபத்தில் இருக்கும் இவளை நான் மெதுவாக ஆசுவாசப்படுத்த {தேற்ற} வேண்டும்.(16) இப்போது, மிகச்சிறிய வடிவில், அதிலும் விசேஷமாக வானர வடிவில் இருக்கும் என்னால், மானுஷர்களின் ஸம்ஸ்கிருத மொழியில் {மனிதர்களால் நன்றாகச் சீரமைக்கப்பட்ட மொழியில்} பேச இயலும்.(17) துவிஜரை {இருபிறப்பாளரைப்} போல ஸம்ஸ்கிருத மொழியை நான் பயன்படுத்தினால், “இவன் ராவணன்” என்றும், விசேஷமாக, “வானரனால் எப்படி பேச முடியும்?” என்றும் நினைத்துக் கொண்டு சீதை என்னால் பீதியடைவாள்.(18,19அ) அவசியம் மானுஷர்களுக்கு அர்த்தம் தரும் வாக்கியத்தையே நான் பேச வேண்டும்[1]. இல்லையெனில், அநிந்திதையான {நிந்திக்கத்தகாதவளான} இவளை சாந்தப்படுத்துவது சாத்தியமில்லை.(19ஆ,20அ) பூர்வத்தில் ராக்ஷசர்களால் அச்சுறுத்தப்பட்ட இந்த ஜானகி, என் ரூபத்தையும், பாஷையையும் {மொழியையும்} பார்த்து மீண்டும் அச்சமடைவாள்[2].(20ஆ,21அ)

[1] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "சம்ஸ்கிருதம் என்பது கடும் விதிகளால் அமைந்த இலக்கணத்தின் படி சீரமைக்கப்பட்ட பண்பட்ட மொழியாகும். "இராமாயணம் எழுதப்பட்ட காலத்தில் மேல்வகுப்பைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் சம்ஸ்கிருதம் பேசவில்லையெனினும், அவர்களால் புரிந்து கொள்ளப்பட்டது. மேலும், புரோகித வகுப்பைச் சார்ந்தவர்களாலும், கல்விமான்கள் பிறராலும் பொதுவாகப் பேசப்பட்டது" என்பதையே இந்தப் பத்திகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன" என்றிருக்கிறது.

[2] நரசிம்மாசாரியர் பதிப்பில், "நான்  மிகுதியும் ஸூக்ஷ்மமான தேஹம் பூண்டிருக்கின்றவன்; அதிலும் விசேஷித்து வானரன். ஆகையால் என்னை இந்த ராக்ஷஸஸ்த்ரீகள் கண்டுபிடிக்க வல்லரல்லர். அன்றியும் இவற்றிற்கு அனுகூலமாக மனிதர்கள் பேசுவது போல் ஸம்ஸ்க்ருத பாஷையை அவலம்பித்துப் பேசுகிறேன் அதுவும் இந்த ராக்ஷஸ ஸ்த்ரீகளுக்குத் தெரியாது. ஆனால் நான் ப்ராஹ்மணனைப் போல் ஸம்ஸ்க்ருதபாஷையில் பேசுவேனாயின், ஸீதை, "குரங்கு எங்கே? பேசுவது எங்கே? அதிலும் விசேஷித்து ஸம்ஸ்க்ருதபாஷை பேசுவது எங்கே?" என்று ஸந்தேஹித்து என்னை ராவணனாக ப்ரமித்துப் பயப்படுவாள். ஆயினும் பொருளடக்கமுடைய மனுஷ்ய வாக்யத்தை அவலம்பித்தே பேசியாக வேண்டும். இல்லையாயின், மற்றெவ்விதத்திலும் நிந்தைக்கிடமில்லாத இந்த ஸீதையை ஸமாதானப்படுத்த முடியாது. இந்த ஸீதை, நான் வானரனாயிருப்பதையும், மனுஷ்யரைப் போல் பேசுவதையுங் கண்டு, முன்பு இப்படிப்பட்ட ராக்ஷஸவேஷங்களைப் பார்த்துப் பயந்திருப்பவளாகையால் மேலும் இருமடங்காகப் பயமுறுவாள்" என்றிருக்கிறது.

பிறகு, மனஸ்வினியான இந்த விசாலாக்ஷி {சிறந்த மனம் கொண்ட நீள்விழியாளான சீதை}, காமரூபியான ராவணன் {விரும்பிய வடிவை ஏற்கவல்ல ராவணன்} என என்னை நினைத்துக் கொண்டு, பேரச்சமடைந்து சப்தம் போடுவாள்.(21ஆ,22அ) சீதை சப்தம் செய்த உடனேயே, அந்தகனுக்கு ஒப்பான கோரத்துடன் கூடிய ராக்ஷசிகணங்கள், நானாவித ஆயுதங்களைத் தரித்துக் கொண்டு {இங்கே} கூடுவார்கள்.(22ஆ,23அ) அப்போது எங்குமிருந்து என்னைச் சூழ்ந்து கொள்ளும் கோர முகம்படைத்தவர்கள், என்னைப் பிடித்து, தங்கள் பலம் அனைத்தையும் பயன்படுத்தி, வதம் செய்ய யத்னம் செய்வார்கள் {கொல்ல முயற்சிப்பார்கள்}.(23ஆ,24அ) உத்தம மரங்களின் சாகைகளையும் {கிளைகளையும்}, சிறு கிளைகளையும், தண்டுகளையும் பிடித்து, அங்கேயும், இங்கேயும் செல்லும் என்னைக் கண்டு பயத்தால் பீடிக்கப்பட்டு நடுங்குவார்கள்.(24ஆ,25அ)

விகார முகம் படைத்த ராக்ஷசிகள், வனத்தில் மஹத்தான ரூபத்துடன் {பெரும் வடிவில்} திரியும் என்னைக் கண்டு பயத்தால் பீடிக்கப்படுவார்கள்.(25ஆ,26அ) பிறகு, அந்த ராக்ஷசிகள், ராக்ஷசேந்திர நிவேசனத்தில் ராக்ஷசேந்திரனால் {ராவணனால்} நியமிக்கப்பட்டுள்ள பிற ராக்ஷசர்களையும் அழைப்பார்கள்.(26ஆ,27அ) வேக, உத்வேக காரணத்தால் அவர்கள், சூலங்கள், சக்திகள், வாள்கள் உள்ளிட்ட விதவிதமான ஆயுதங்களை கையில் எடுத்துக் கொண்டு போருக்கு விரைவார்கள்.(27ஆ,28அ) அனைத்துப் பக்கங்களிலும் அவர்களால் சூழப்படும் என்னால், ராக்ஷச பலத்தை {படைகளை} அழித்து, மஹோததியின் {பெருங்கடலின்} மறுகரையை அடைய இயலாது.(28ஆ,29அ) சீக்கிரமாக இயங்கும் {சுறுசுறுப்புள்ள ராக்ஷசர்கள்} பலரும் குதித்து என்னைப் பிடிப்பார்கள். இவளால் {நான் வந்த} அர்த்தத்தை அறிந்து கொள்ள முடியாது. நானும் சிறைபிடிக்கப்படுவேன்.(29ஆ,30அ)

அல்லது, ஹிம்சையில் ருசிகொண்டவர்கள் இந்த ஜனகாத்மஜையை {ஜனகனின் மகளான சீதையைக்} கொல்லவுங்கூடும். அடுத்தடுத்து நேர இருக்கும் ராமசுக்ரீவர்களின் காரியங்களும் விபத்தைச் சந்திக்கும்.(30ஆ,31அ) இராக்ஷசர்களால் சூழப்பட்டதும், மார்க்கமற்றதுமான {வழியற்றதுமான} இந்தப் பெருங்கடல் சூழ்ந்த ரகசிய தேசத்தில் {இடத்தில்} ஜானகி வசிக்கிறாள்.(31ஆ,32அ) போரில் நான் ராக்ஷசர்களால் கொல்லப்பட்டாலோ, {அவர்களால்} பிடிக்கப்பட்டாலோ, ராமரின் காரிய சாதனையில் சகாயம் செய்யும் வேறு எவரையும் நான் காணவில்லை.(32ஆ,33அ) நான் கொல்லப்பட்டால், எவ்வளவு யோசித்தாலும், நூறு யோஜனைகள் விஸ்தீரணமுள்ள பெருங்கடலைத் தாண்டக்கூடிய வேறு எந்த வானரனையும் நான் காணவில்லை.(33ஆ,34அ) இராக்ஷசர்களில் ஆயிரக்கணக்கானோரை தனியொருவனாகவே கொல்லும் சமர்த்தனாக இருந்தாலும், நான் மஹோததியின் {பெருங்கடலின்} மறுகரையை அடைவது சாத்தியமில்லை.(34ஆ,35அ) 

Hanuman thinking

யுத்தங்கள் அசத்தியமானவை {உண்மையற்றவை}; சந்தேகத்திற்குரியவை. சந்தேகத்திற்குரியவற்றில் எனக்கு விருப்பமில்லை. சந்தேகமுள்ள காரியத்தை சந்தேகமில்லாமல் {முன் பின் விசாரிக்காமல்} செய்யும் பிராஜ்ஞன் {அறிஞன்} எவன் இருக்கிறான்?(35ஆ,36அ) நான் பேசாதிருந்தால், வைதேஹி பிராணத்யாகம் செய்வாள் {தற்கொலை செய்து கொள்வாள்}. சீதையிடம் பேசினாலோ, இந்த மஹத்தான தோஷம் நேரும்.(36ஆ,37அ) தேசகாலங்களுக்கு {இருக்கும் இடத்திற்கும், நேரத்திற்கும்} விரோதமாக இருக்கும் குழம்பிய தூதனை அடையும் அர்த்தபூதங்கள், சூரியோதயத்தில் {மறையும்} இருளைப் போல  நாசமடையும் {நிறைவேறக்கூடிய செயல்களும் கெட்டுப் போகும்}.(37ஆ,38அ) அர்த்தம், அனர்த்தம் {செய்யக்கூடியது, செய்யக்கூடாதது} ஆகியவற்றில் புத்தி நிச்சயமடைந்தாலும், பண்டிதர்களென பெருமைப்படும் தூதர்கள், காரியங்களை சோபிக்கவிடாமல் கெடுப்பார்கள்.(38ஆ,39அ) காரியம் நாசமடையாதிருப்பது எப்படி? குழப்பம் நேராமல் இருப்பது எப்படி? சமுத்திர லங்கனம் {கடலைத் தாண்டியது} வீணாகாமல் இருப்பது எப்படி?(39ஆ,40அ) {சீதை} என் வாக்கியத்தை அச்சமில்லாமல கேட்பது எப்படி?” என்று சிந்தித்த மதிமானான ஹனுமான், {பின்வருமாறு} தன் மதியை அமைத்துக் கொண்டான்.(40ஆ,41அ)

“அகிலிஷ்ட கர்மங்களை {சிக்கலில்லாமல் செயல்களைச்} செய்பவரும், நல்ல பந்துவுமான {உறவினருமான} இராமரைப் போற்றினால், பந்துவிடம் {தன் கணவரிடம்} செலுத்தப்பட்ட மனத்தைக் கொண்டவள் அச்சமுறமாட்டாள்.(41ஆ,42அ) விதிதாத்மரும் {அனைத்தையும் அறிந்தவரும்}, இக்ஷ்வாகுக்களில் சிறந்தவருமான ராமரைக் குறித்து சுபமானவையும், தர்மத்திற்கு இணக்கமானவையுமான சொற்களை சமர்ப்பித்து,{42ஆ,43அ} மதுரமான குரலில் பேசி, இவள் எப்படி அனைத்தையும் நம்புவாளோ அப்படியே அனைத்தையும் செய்வேன்” {என்று தீர்மானித்தான் ஹனுமான்}.(42ஆ-44அ)

மஹானுபாவனான அந்த ஹனுமான், மரக்கிளைகளின் இடுக்கில் இருந்து கொண்டு, ஜகதிபதியின் பிரமதையை {உலகத்தலைவனான ராமனின் மனைவி சீதையைப்} பார்த்து, வீண்போகாத பலவித வாக்கியங்களை இவ்வாறே பேசத் தொடங்கினான்[3].(44ஆ,இ,ஈ,உ) 

[3] ஆதலான் இறத்தலே அறத்தின் ஆறு எனா
சாதல்காப்பவரும் என் தவத்தின் சாம்பினார்
ஈது அலாது இடமும்வேறு இல்லை என்று ஒரு
போது உலாம்மாதவிப் பொதும்பர் எய்தினாள் (5248)
கண்டனன் அனுமனும் கருத்தும் எண்ணினான்
கொண்டனன்துணுக்கம் மெய் தீண்டக் கூசுவான்
அண்டர் நாயகன் அருள்தூதன் யான் எனா
தொண்டை வாய்மயிலினைத் தொழுது தோன்றினான் (5249)

- கம்பராமாயணம், 5248, 5249 பாடல்கள், உருக்காட்டுப்படலம்

பொருள்: "ஆகையால்,  "இறப்பதே அறத்தால் காட்டப்படும் வழியாகும்" என்று நான் இறப்பதைத் தடுப்பவரும் நான் செய்த தவத்தினால் மயங்கியுள்ளனர். இந்தச் சமயம் தவிர வேறு சந்தர்ப்பம் இல்லை" என்று தனக்குள் கூறிக்கொண்டு மலர்கள் சூழ்ந்த ஒரு மாதவிச்சோலையை {குருக்கத்திச் சோலையை} அடைந்தாள்.(5248) இதைக் கண்ட ஹனுமான் அவளது நினைவை ஆராய்ந்து திடுக்குற்று, அவளைத் தீண்டவும் அஞ்சி, "தேவர்கள் தலைவனின் {ராமரின்} அருள் தூதன் நான்" என்று கூறி, கோவைக் கனி போன்ற வாயைக் கொண்ட மயில் போன்றவளை {சீதையைத்} தொழுது வெளிப்பட்டான். கம்பராமாயணத்தில் சீதை தன் தலைமுடிப்பின்னலால் தூக்கிட்டுக் கொள்ள எடுத்த முடிவு குறிப்பிடப்படவில்லை. மாறாக அவள் தற்கொலை எண்ணத்துடன் மாதவிச் சோலைக்குச் செல்கிறாள். அதேபோல, இந்த சர்க்கத்தில் ஹனுமான் சிந்திப்பது யாவும் கம்பராமாயணத்தில் இல்லை. சீதை மாதவிச் சோலைக்குப் போகும்முன் ஹனுமான் தன் மாயாசக்தியால் அரக்கியரை உறங்க வைக்கிறான் என்று இருக்கிறது.

சுந்தர காண்டம் சர்க்கம் – 30ல் உள்ள சுலோகங்கள்: 44


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை