Enter and leave from cavity | Kishkindha-Kanda-Sarga-52 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வானரர்களின் நோக்கத்தையும், மலைப்பிளவிற்குள் நுழைந்ததற்கான காரணத்தையும் சொன்ன ஹனுமான்; பிலத்திலிருந்து வானரர்களை வெளியே கொண்டு வந்து விட்ட ஸ்வயம்பிரபை...
Bing - Artificial Intelligence Picture | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படம் |
அப்போது, தர்மசாரிணியும், ஒருப்பட்ட மனம் கொண்டவளுமான அந்த தபஸ்வினி {ஸ்வயம்பிரபை}, ஓய்ந்திருந்த சர்வ ஹரியூதபர்களிடமும் {குரங்குக் குழுத் தலைவர்கள் அனைவரிடமும்} இந்த வசனத்தைச் சொன்னாள்:(1) “வானரர்களே, பழங்களை பக்ஷித்ததன் மூலம், உங்கள் களைப்பு நீங்கியிருந்தால், என்னால் கேட்கத் தகுந்த அனைத்துக் கதைகளையும் நான் கேட்க விரும்புகிறேன்[1]” {என்றாள் ஸ்வயம்பிரபை}.(2)
[1] உண்ண உள பூச உள சூட உள ஒன்றோவண்ண மணி ஆடை உள மற்றும் உள பெற்றேன்அண்ணல் அவை முற்றும் அறவிட்டு வினை வெல்வான்எண்ண அரிய பல் பகல் இருந்தவம் இழைத்தேன்ஐய இருபது ஓசனை அமைந்த பிலம் ஐயாமெய் உளது மேல் உலகம் ஏறும் நெறி காணேன்உய்யும் நெறி உண்டு உதவுவீர் எனின் உபாயம்செய்யும் வகை சிந்தையில் நினைத்தீர் சிறிது என்றாள்.- கம்பராமாயணம் 4584, 4585ம் பாடல்கள், பிலம் புக்கு நீங்கு படலம்பொருள்: "{பழம், கிழங்கு முதலிய} உண்பதற்குரிய பொருள்கள் உள்ளன, {சந்தனம் முதலிய} பூசுவதற்குரிய பொருள்கள் உள்ளன, {மாலைகள் முதலிய} சூடுவதற்குரிய பொருள்கள் உள்ளன. இவையில்லாமல் இன்னும் உள்ளன. இவை அனைத்தையும் நான் பெற்றிருக்கிறேன். இவற்றையும் அனுபவிக்காமல், பற்றுகளை நீக்கி, தீவினையை வெல்ல எண்ணி, அரிய நெடுங்காலம் பெருந்தபம் செய்து வந்தேன்.{4584} ஐயா, இந்த மலைப்பிளவு நூறு யோசனை விரிந்திருக்கிறது. மேலுலகம் ஏறிச் செல்லும் வழியை நான் அறிய மாட்டேன். உதவி செய்வீர்கள் என்றால், நான் ஈடேறும் வழி ஏற்படும் உபாயத்திற்கான வழிவகையை உங்கள் மனத்தில் சிறிதாவது கருதுங்கள்" என்றாள் {சுயம்பிரபை}.
மாருதாத்மஜனான {வாயு மைந்தனான} ஹனுமான், அவளது அந்த வசனத்தைக் கேட்டுப் பணிவுடன் உள்ளபடியே {பின்வருமாறு} சொல்லத் தொடங்கினான்:(3) “சர்வலோகராஜாவும், மஹேந்திரனுக்கும், வருணனுக்கும் ஒப்பானவரும், தாசரதியுமான {தசரதரின் மகனுமான} ஸ்ரீமான் ராமர், தன்னுடன் பிறந்த லக்ஷ்மணருடனும், தன் பாரியையான {மனைவியான} வைதேஹியுடனும் தண்டகவனத்தில் பிரவேசித்தார். அவரது பாரியை {ராமரின் மனைவியான சீதை} ஜனஸ்தானத்தில் இருந்து ராவணனால் பலவந்தமாகக் கடத்தப்பட்டாள்.(4,5)
வீரரும், வானரமுக்கியர்களின் ராஜாவும், சுக்ரீவன் என்ற பெயரைக் கொண்டவருமான வானரர், அந்த ராஜாவின் சகா {ராமரின் தோழர்} ஆவார். அவரே எங்களிடம் பிரஸ்தாபித்தார் {இவ்வாறு செல்லும்படி சொன்னார்}.(6) “அகஸ்தியர் சஞ்சரிப்பதும், யமனால் ரக்ஷிக்கப்படுவதுமான தக்ஷிணத்திற்கு {தென்திசைக்கு}, அங்கதன் முதலான பிரமுகர்களான நீங்கள், இந்த முக்கிய வானரர்களுடன் சேர்ந்து,{7} காமரூபிகளான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவனான} ராக்ஷசர்கள் அனைவருடன் கூடிய ராவணனையும், வைதேஹியான சீதையையும் தேடிச் செல்வீராக” என்று ஆணையிட்டார் {சுக்ரீவர்}.(7,8)
நாங்கள் அனைவரும், {சமுத்திரம் வரையில் உள்ள} தக்ஷிண திசை முழுதிலும் தேடினோம். பசியால் பீடிக்கப்பட்ட நாங்கள் அனைவரும், ஒரு விருக்ஷத்தின் {மரத்தின்} அடியில் தஞ்சமடைந்தோம்.(9) வர்ணமிழந்த வதனத்துடன் கூடிய அனைவரும், சர்வ தியான பராயணர்களாக, சிந்தனையெனும் மஹார்ணவத்தில் மூழ்கி, மறுகரைக்குக் கடந்து செல்ல முடியாதவர்களாக இருந்தோம்[2].(10) கண்கள் அலைபாய்ந்து கொண்டிருந்தபோது, கொடிகளும், மரங்களும் அடர்ந்து, இருள் சூழ்ந்திருந்த மஹாபிலத்தைக் கண்டோம்.(11) அங்கிருந்து {அந்த பிலத்திலிருந்து} நீர்த்துளிகளுடன் கூடிய சிறகுகளைக் கொண்டவையும், ஜலத்தில் நனைந்தவையுமான ஹம்சங்களும், குரரங்களும், சாரஸங்களும், வேறு பறவைகளும் வெளியே வந்து கொண்டிருந்தன.(12) “நல்லது, அங்கே பிரவேசிப்போம்” என்று நான் பிலவங்கமர்களிடம் {தாவிச் செல்லும் குரங்குகளிடம்} சொன்னேன். அவர்கள் அனைவருங்கூட அந்த அனுமானத்தையே அடைந்திருந்தனர்.(13)
[2] நிறம் மங்கிய முகங்களுடன் கூடிய அனைவரும், திட்டமிடுவதிலேயே முழுழையாக ஆழ்ந்து, சோகமெனும் பெருங்கடலில் மூழ்கி, அக்கரையை அடைய முடியாதவர்களாக இருந்தோம்” என்பது இங்கே பொருள்.
பிறகு, காரியத்தின் அவசரத்தால் தூண்டப்பட்ட நாங்கள் அனைவரும், {இந்த பிலத்தின்} கீழிறங்கி, பரஸ்பரம் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு, இங்கே இறங்கி வந்தோம்.(14) இருள் சூழ்ந்த இந்த பிலத்திற்குள் உடனே பிரவேசித்தோம். இவ்வளவே எங்கள் காரியம். இத்தகைய செயல்களின் மூலமே நாங்கள் இங்கே வந்தோம். பசித்து, மனம் தளர்ந்தவர்களாகவே நாங்கள் உன்னிடம் வந்தோம்.(15,16அ) பசியால் பீடிக்கப்பட்ட நாங்கள், உன் ஆதித்ய தர்ம தத்தத்தினால், கிழங்குகளையும், பழங்களையும் உண்டோம்[3].(16ஆ,17அ) பசியுடன் மரணத்தின் வாயிலில் இருந்த எங்கள் அனைவரையும் நீ ரக்ஷித்ததற்குப் பிரதியுபகாரமாக வானரர்கள் உனக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைச் சொல்வாயாக” {என்றான் ஹனுமான்}.(17ஆ,18அ)
[3] “விருந்தோம்பும் அறம் செய்யும் நீ தந்த கிழங்குகளையும், கனிகளையும் நாங்கள் பக்ஷித்தோம்” என்பது இங்கே பொருள்.
வானரர்கள் இவ்வாறு சொன்னபோது, சர்வஜ்ஞையான {அனைத்தையும் அறிந்தவளான} ஸ்வயம்பிரபை, சர்வ வானரயூதபர்களிடமும் {அங்கே இருந்த குரங்குக் குழுத்தலைவர்கள் அனைவரிடமும்} இவ்வாறு மறுமொழி கூறினாள்:(18ஆ,19அ) “வலிமைமிக்க சர்வ வானரர்களிடமும் நான் மகிழ்ச்சியடைகிறேன். தர்மத்துடன் நடந்து கொள்ளும் எனக்கு, {உங்களால் செய்ய முடிந்த} எந்தக் காரியமும் இங்கே இல்லை” {என்றாள் ஸ்வயம்பிரபை}[4].(19ஆ,20அ)
[4] தேசிராஜுஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இராமாயணத்தின் பிற பதிப்புகளில் இந்த சர்க்கம் இந்த சுலோகத்துடனேயே {4:19} நிறைவடைகிறது. இதன் பின்வரும் செய்திகள், அடுத்து வரும் சர்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன” என்றிருக்கிறது. ஆங்கிலத்தில், வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி, பிபேக்திப்ராய் ஆகியோரின் பதிப்புகளிலும், தமிழில் தர்மாலயப்பதிப்பிலும், நரசிம்மாசாரியர், தாதாசாரியர் ஆகியோரின் பதிப்புகளிலும் இந்த இடத்திலேயே, அதாவது 19ஆ,20அ சுலோகத்திலேயே இந்த சர்க்கம் நிறைவடைகிறது. இந்த சர்க்கத்தில் எஞ்சிய பகுதி, அடுத்த சர்க்கத்தில் தொடர்கிறது. ஆங்கிலத்தில், தேசிராஜுஹனுமந்தராவ், மன்மதநாததத்தர், ஹரிபிரசாத் சாஸ்திரி ஆகியோரின் பதிப்புகளிலும், கோரக்பூர் கீதா பிரஸ் பதிப்பின் தமிழ், ஆங்கிலப் பதிப்புகள் இரண்டிலும்கூட இங்கே காணும் வகையிலேயே இந்த சர்க்கம் 32 சுலோகங்களைக் கொண்டதாக இருக்கிறது.
இவ்வாறு அந்த தபஸ்வினி, தர்மத்திற்கு சம்மதமான, சுபமான வாக்கியத்தை ஹனுமானிடம் சொன்னபோது, அவன் நிந்திக்கத்தகாத கண்களைக் கொண்டவளிடம் {ஸ்வயம்பிரபையிடம், பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(20ஆ,21அ) “தர்மசாரிணியான உன்னை நாங்கள் சரணடைந்தோம். மஹாத்மாவான சுக்ரீவர், எங்களுக்கு எந்த சமயத்தை {கெடுவாகக்} கொடுத்தாரோ, அந்தக் காலம் பிலத்தில் திரிந்து கொண்டிருந்தபோதே கடந்துவிட்டது.(21ஆ,22) அத்தகையவளான {தர்மசாரிணியான} உனக்கு, அந்த சுக்ரீவ வசனத்தை மீறித் தொலைந்தும், ஆயுசுடன் இருக்கும் எங்களை, இந்த பிலத்திலிருந்து கடக்கச் செய்வதே தகும்.(23) தர்மசாரிணியே, சுக்ரீவரிடம் கொண்ட பயத்தால், தயங்கும் எங்கள் அனைவரையும், {இங்கிருந்து} கொண்டு செல்வதே {காப்பாற்றுவதே} உனக்குத் தகும். நாங்கள் செய்ய வேண்டிய மஹத்தான காரியம் இருக்கிறது. இங்கே இருந்தால், எங்களால் அந்தக் காரியத்தைச் செய்ய முடியாது” என்றான் {ஹனுமான்}.(24,25அ)
ஹனுமதன் இவ்வாறு சொன்னதும், அந்த தபஸ்வினி {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னாள், “{இந்த பிலத்தில்} பிரவேசித்தால் ஜீவனுடன் திரும்புவது அரிது என்றே நினைத்திருந்தேன்.(25ஆ,26அ) நியமங்களினாலும், தபத்தின் பிரபாவத்தினாலும், இந்த வானரர்கள் அனைவரையும் இந்த பிலத்திலிருந்து கொண்டு செல்ல விரும்புகிறேன்.(26ஆ,27அ) கண்களை மூடாமல் வெளியேற முயல்வது சாத்தியமில்லை. சர்வ வானரபுங்கவர்களே, கண்களை இமைக்காதீர்கள் {மூடுங்கள்}” {என்றாள் ஸ்வயம்பிரபை}.(27ஆ,28அ)
அப்போது செல்ல விரும்பியவர்கள் அனைவரும், மகிழ்ச்சியுடன் இமைக்காமல் இருந்து, மென்மையான அங்கங்களின் {கைவிரல்களின்} துணையுடன் விழிக்காமல் இருந்தனர்.(28ஆ,29அ) பிறகு, கைகளால் மறைக்கப்பட்ட முகங்களுடன் கூடியவர்களும், மஹாத்மாக்களுமான வானரர்கள், இமைப்பொழுதில் மாத்திரமே இவ்வாறு பிலத்திலிருந்து வெளியே வந்தனர்[5].(29ஆ,30அ)
[5] இந்த ரிக்ஷபிலமே கொல்லி மலையிலுள்ள ஓர் மலைக்குடைவென்றும், இந்த "ஸ்வயம்பிரபையே, கொல்லிப்பாவை" என்றும் அந்த வட்டார மக்களால் நம்பப்படுகிறது.
அங்கே அவர்கள் அனைவரிடமும் பேசிய தர்மசாரிணியான அந்த தபஸ்வினி {ஸ்வயம்பிரபை}, விஷமத்திலிருந்து வெளிவந்தவர்களுக்கு ஆறுதலளிக்கும் வகையில் {பின்வருமாறு} சொன்னாள்:(30ஆ,31அ) “நானாவித மரங்களாலும், கொடிகளாலும் சூழப்பட்டது ஸ்ரீமான் விந்திய கிரியாகும்.{31ஆ} இது பிரஸ்ரவண சைலமாகும் {அருவிகளுடன் கூடிய மலையாகும்}. பெரும் நீரைக் கொண்ட இந்த சாகரத்திலும் உங்களுக்கு நன்மையே விளையட்டும். வானரரிஷபர்களே {வானரர்களில் சிறந்தவர்களே, என்னுடைய} பவனத்திற்கு {வீட்டிற்குச்} செல்கிறேன்” என்று சொன்ன ஸ்வயம்பிரபை, {அந்த வானரர்களை பிலத்திற்கு வெளியே விட்டுவிட்டு} ஸ்ரீமானான அந்த பிலத்திற்குள்ளேயே {மீண்டும்} பிரவேசித்தாள்.(31ஆ,32)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 52ல் உள்ள சுலோகங்கள்: 32
Previous | | Sanskrit | | English | | Next |