Sweet words of Hanuman | Sundara-Kanda-Sarga-31 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனின் மகிமையை உரைத்த ஹனுமான்; இதில் மகிழ்ச்சியடைந்த சீதை, மரக்கிளையில் அமர்ந்திருக்கும் ஹனுமானைக் கண்டது...
இவ்வாறு பலவிதங்களில் சிந்தையில் சிந்தித்த மஹாகபி {பெருங்குரங்கான ஹனுமான்}, வைதேஹிக்கு {மட்டும்} கேட்கும் அளவில் {பின்வரும்} மதுரமான வாக்கியத்தைப் பேசினான்[1]:(1) “தசரதன் என்ற பெயருடைய ராஜா, ரதங்கள், குஞ்சரங்கள, வாஜிகள் {தேர்கள், யானைகள், குதிரைகள்} ஆகியவற்றைக் கொண்டவராகவும், இக்ஷ்வாகுக்களில் பெரும்புகழ்பெற்றவராகவும், புண்ணியசீலராகவும், மஹாகீர்த்தியுடையவராகவும்,(2) இராஜரிஷிகளில் குணசிரேஷ்டராகவும், தபத்தில் ரிஷிகளுக்கு சமமானவராகவும், சக்ரவர்த்தி குலத்தில் பிறந்தவராகவும், பலத்தில் புரந்திரனுக்கு {இந்திரனுக்கு} சமமானவராகவும்,(3) அஹிம்சையை விரும்புகிறவராகவும், பெருந்தன்மை உள்ளவராகவும், இரக்கமுள்ளவராகவும், சத்தியபராக்கிரமராகவும், இக்ஷ்வாகு வம்சத்தில் முக்கியமானவராகவும், லக்ஷ்மீவானாகவும், லக்ஷ்மிவர்தனராகவும்,(4) பார்த்திபர்களுக்குரிய பண்புகளுடன் {ராஜலட்சணங்களுடன்} கூடியவராகவும், செல்வப்பெருக்கு உடையவராகவும், பார்த்திபரிஷபராகவும் {மன்னர்களில் சிறந்தவராகவும்}, சதுரந்தங்களால் {நான்கு எல்லைகளால்} சூழப்பட்ட பிருத்வியில் புகழ்பெற்றவராகவும், சுகத்தைக் கொடுப்பவராகவும் சுகமாக இருந்தார்.(5)
[1] சென்ற சர்க்கத்தில் சீதையுடன் சம்ஸ்கிருதத்தில் பேச வேண்டாம் என்று தீர்மானித்த ஹனுமான், மனிதர்களுக்குப் புரியும் இனிய மொழியில் பேசினான் என்பதற்குப் பொருள் கொள்ளும் முயற்சியில், அம்மொழி தமிழாகவே இருக்க முடியும் என்று ஆய்வாளர்கள் சிலர் சொல்கிறார்கள். “சம்ஸ்கிருதம் பேசினால் ராவணன் பேசுகிறான்” என்று சீதை ஐயுறுவாள் என்று நினைத்த ஹனுமான், ஒரு காலத்தில் லங்கையின் பொதுவான வழக்கு மொழி என்று கருதப்படும் “தமிழில் பேசினால், லங்கையிலேயே வாழ்ந்து வரும் ராட்சசிகள் தமிழைப் புரிந்து கொள்வார்கள்” என்று ஐயுறமாட்டானா? என்பது மாற்றுத்தரப்பின் வாதம். ஹனுமான் சம்ஸ்கிருதத்தில் பேசியிருக்க மாட்டான் என்பது, முன்சென்ற சர்க்கத்தில் வரும் குறிப்பைக் கொண்டு சொல்லப்படுகிறது. வால்மீகியில், இதுவரை வந்துள்ள சர்க்கங்களில், ஹனுமான் சீதையிடம் என்ன மொழியில் பேசினான் என்பதற்கான நேரடிக் குறிப்புகளேதும் இல்லை. இதே காண்டத்தின் 36ம் சர்க்கம் 9ம் சுலோகத்தில், பிராக்ருதம், சம்ஸ்கிருதம் குறித்த ஒப்பீடு இருக்கிறது. ஒருவேளை இங்கே ஹனுமான் பேசுவது பிராக்ருத மொழியாகவும் இருக்கலாம்.
அத்தகையவருக்கு {அந்த தசரதருக்கு}, பிரியத்திற்குரியவராகவும், தாராதிபனுக்கு ஒப்பான முகம் கொண்டவராகவும், விசேஷஜ்ஞராகவும் {சிறப்புகளை அறிந்தவராகவும்}, தனுசு தரித்தவர்களில் சிரேஷ்டராகவும், ராமன் என்ற பெயரைக் கொண்ட ஜ்யேஷ்ட புத்திரன் {மூத்த மகன்} இருந்தார்.(6) தன் விருத்தத்தை {நடத்தையை} ரக்ஷிப்பவரும், தன் ஜனங்களை ரக்ஷிப்பவரும், ஜீவலோகத்தை ரக்ஷிப்பவரும், தர்மத்தை ரக்ஷிப்பவரும், பரந்தபரும் {பகைவரை எரிப்பவரும்},(7) சத்தியத்தைப் பேசுபவருமான அந்த வீரர், விருத்தரான {முதிர்ந்தவரான} பிதாவின் வசனத்தால், பாரியையுடனும், பிராதாவுடனும் {மனைவியுடனும், உடன்பிறந்தவருடனும்} நாடு கடந்து வனத்திற்குச் சென்றார்.(8) அந்த மஹாரண்யத்தில் மிருகங்களை வேட்டையாடுகையில், சூரர்களும், காமரூபிகளுமான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான} ராக்ஷசர்கள் பலர் அவரால் கொல்லப்பட்டனர்.(9) கரதூஷணர்கள் ஹதத்தையும், ஜனஸ்தான வதத்தையும் {பதினான்காயிரம் ராக்ஷசர்கள் கொல்லப்பட்டதையும்} கேட்டுக் கோபமடைந்த ராவணனால் ஜானகி அபகரிக்கப்பட்டாள்.{10} வனத்தில் மாயா மிருக ரூபத்தால் {மாயமான் வடிவத்தில் வந்த மாரீசனால்} ராமர் வஞ்சிக்கப்பட்டார்.(10,11அ)
அந்த ராமர், அநிந்திதையான அந்த சீதா தேவியை வனத்தில் தேடிக் கொண்டிருந்தபோது, சுக்ரீவர் என்ற பெயருடைய வானரரைச் சந்தித்து மித்ரராக்கி {நண்பராக்கிக்} கொண்டார்.(11ஆ,12அ) பிறகு, பரபுரஜயரும் {பகைவரின் நகரங்களை வெல்பவரும்}, மஹாபலவானுமான அந்த ராமர், வாலியைக் கொன்று, சுக்ரீவரிடம் அந்தக் கபிராஜ்ஜியத்தை {குரங்குகளின் ராஜ்ஜியத்தைக்} கொடுத்தார்.(12ஆ,13அ) சுக்ரீவரால் அனுப்பப்பட்டவர்களும், காமரூபிகளுமான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவர்களுமான} ஆயிரக்கணக்கான ஹரயர்கள் {குரங்குகள்}, சர்வ திக்குகளிலும் அந்த தேவியைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்.(13ஆ,14அ) வேகவானான நான், சம்பாதியின் வசனத்தால், அந்த விசாலாக்ஷிக்காக {நீள்விழியாளான சீதைக்காக} நூறு யோஜனைகள் நீளங்கொண்ட சாகரத்தைத்[2] தாண்டினேன்.(14ஆ,15அ) அவள் {சீதை} எப்படிப்பட்ட ரூபமும், எப்படிப்பட்ட வர்ணமும், எப்படிப்பட்ட அங்க லக்ஷணங்களும் கொண்டவள் என ராகவரிடம் இருந்து கேட்டேனோ, அத்தகையவள் என்னால் காணப்பட்டாள்” {என்றான் ஹனுமான்}.(15ஆ,16அ)
[2] நூறு யோஜனைகள் என்றால் கிட்டத்தட்ட 800 கி.மீ. வரும். இன்றைய தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையுள்ள ஆகாய மார்க்கத் தொலைவு வெறும் 27 கி.மீ. ஆகும். தனுஷ்கோடியில் இருந்து இன்று லங்கையில் அசோக வனம் என்று சொல்லப்படும் இடம் வரையுள்ள ஆகாய மார்க்கத் தொலைவும் 200 கி.மீ. தான் வருகிறது. இதைப் போன்ற சுலோகங்களில் வரும் குறிப்புகளைக் கொண்டுதான் சில ஆய்வாளர்கள் ராமாயண லங்காபுரி, இன்றைய இலங்கை இல்லை என்று வாதிடுகின்றனர். இதே சுலோகத்தை "நூறு யோஜனைகளையும், சாகரத்தையும் தாண்டி வந்தேன்" என்று மொழிபெயர்த்தால் இதன்பொருள் மாறிவிடும். கிஷ்கிந்தை {இன்றைய ஹம்பி} முதல் தனுஷ்கோடி வரையுள்ள தொலைவு 740 கி.மீ. ஆகும். ஒரு யோஜனை எட்டு கிலோமீட்டர் என்று கொண்டால், 92.5 யோஜனைகள் வருகிறது. தனுஷ்கோடி முதல் அசோகவனம் வரையுள்ள தொலைவு 25 யோஜனைகள். ஆக, நாம் கொள்ளும் யோஜனை அளவில் கொஞ்சம் குறைத்தாலே சற்றேறக்குறைய 100 யோஜனைகள் தொலைவு வந்துவிடுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த வானரபுங்கவன் {வானரர்களில் சிறந்த ஹனுமான்} இந்தச் சொற்களைச் சொல்லிவிட்டு அமைதியடைந்தான். அதைக் கேட்ட ஜானகியும் பரம வியப்பில் ஆழ்ந்தாள்.(16ஆ,17அ) பிறகு கிலேசத்தில் {கவலையில்} மூழ்கிய நனவுடன் கூடியவளும், சுருண்ட கேசம் கொண்டவளும், பயந்தவளுமான அவள், சிம்சுப விருக்ஷத்தை நோக்கி தன் வதனத்தை {முகத்தை} உயர்த்தினாள்.(17ஆ,18அ) கபி வசனத்தை {குரங்கான ஹனுமானின் சொற்களைக்} கேட்டு, சர்வ திசைகளையும், உபதிசைகளையும் நோக்கிய சீதை, சர்வாத்மனான ராமனை நினைவுகூர்ந்து பரம மகிழ்ச்சியை அடைந்தாள்.(18ஆ,இ,ஈ,உ) அக்கம்பக்கமும், மேலும், கீழும் பார்த்தவள், சிந்தனைக்கு அப்பாற்பட்ட புத்தியைக் கொண்டவனும், உதய மலைக்குப் பின்னெழும் சூரியனைப் போன்ற பிங்காதிபதியின் {குரங்குகளின் தலைவனான சுக்ரீவனின்} அமைச்சனுமான வாதாத்மஜனை {வாயு தேவனின் மகனான ஹனுமானைக்} கண்டாள்.(19)
சுந்தர காண்டம் சர்க்கம் – 31ல் உள்ள சுலோகங்கள்: 19
Previous | | Sanskrit | | English | | Next |