Wednesday 6 March 2024

திருவாழி | சுந்தர காண்டம் சர்க்கம் - 36 (47)

Signet Ring given | Sundara-Kanda-Sarga-36 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: சீதையிடம் மோதிரத்தை ஒப்படைத்த ஹனுமான்; சீதையின் நம்பிக்கை...

Hanuman speaking to Seetha

மஹாதேஜஸ்வியும், பவனாத்மஜனுமான ஹனுமான், சீதையின் நம்பிக்கையைப் பெறும் காரணத்திற்காக மீண்டும் {பின்வரும்} வாக்கியத்தைப் பணிவுடன் பேசினான்:(1) “மஹாபாக்யவதியே, வானரனான நான், மதிமிக்க ராமரின் தூதனாவேன். தேவி, ராம நாமம் பொறிக்கப்பட்ட இந்த அங்குலியை {கணையாழியைப்} பார்.(2) உனக்கு நம்பிக்கையைக் கொடுக்கும் வகையில் மஹாத்மாவான அவரால் {ராமரால்} தத்தம் செய்யப்பட்டதைக் கொண்டு வந்தேன். சமாதானம் அடைவாயாக. உனக்கு பத்ரம் {மங்கலம் உண்டாகட்டும்}. துக்கத்தின் பலத்திலிருந்து விடுபடுவாயாக[1]” {என்றான் ஹனுமான்}.(3) 

[1] மீட்டும் உரை வேண்டுவன இல்லை என மெய்ப்பேர்
தீட்டியது தீட்ட அரிய செய்கையது செவ்வே
நீட்டு இது என நேர்ந்தனன் எனா நெடிய கையால்
காட்டினன் ஓர் ஆழி அது வாள் நுதலி கண்டாள்

- கம்பராமாயணம் 5290ம் பாடல்

பொருள்: “மீண்டும் நான் கூற வேண்டியவை ஏதுமில்லை; “உண்மையான பெயர் பொறிக்கப்பட்டதும், எழுதமுடியாத வேலைப்பாடுமிக்கதுமான இது {இந்தத் திருவாழி} செவ்வையாய் அமையும்” என்று கூறி {ராமன்} என்னிடம் கொடுத்தான்” என்று கூறிய {ஹனுமான்} தன் நெடிய கையால் ஒரு மோதிரத்தைக் காண்பித்தான். ஒளிமிக்க நெற்றியை உடையவள் {சீதை} அதைப் பார்த்தாள்.

அந்த விபூஷணத்தை {அணிகலனை} எடுத்துப் பார்த்த அந்த ஜானகி, பர்த்தாவையே {தன் கணவனையே} அடைந்ததைப் போல மகிழ்ச்சியடைந்தாள்.(4) அழகியான அந்த விசாலாக்ஷியின், அந்த வதனமும் {நீள்விழியாளான சீதையின் முகமும்}, சிவப்பும், வெண்மையும் கலந்த கண்களும், ராகுவில் இருந்து விடுபட்ட உடுராட்டை {நக்ஷத்திரங்களின் தலைவனான சந்திரனைப்} போல ஒளிர்ந்தன.{5} அப்போது, பாலையான {சிறுமியான} அவள், நாணமடைந்தவளாகவும், பர்த்தாவின் சந்தேசத்தால் {செய்தியால்} கிட்டிய மகிழ்ச்சியில் நிறைவடைந்தவளாகவும், பிரியத்தை வெளிப்படுத்தும் வகையில், அந்த மஹாகபியை {பெருங்குரங்கான ஹனுமானைப் பின்வருமாறு} புகழ்ந்தாள்:(5,6) “வானரோத்தமா, எத்தகைய நீ ஏகனாக இந்த ராக்ஷசபதத்தை {பொருட்டாக மதிக்காமல்} மீறினாயோ, அத்தகைய நீ விக்ராந்தன்; நீ சமர்த்தன், நீ பிராஜ்ஞன் {புத்திசாலி}.(7) சிலாகிக்கக்கூடிய விக்ரமத்துடன் கூடிய உன்னால், சதயோஜனை விஸ்தீரணமுடைய மகராலயம் கோஷ்பதமாக்கப்பட்டது {போற்றப்பட வேண்டிய வீரம் கொண்ட நீ, மாட்டுக்குளம்படி நீரைப் போல, நூறு யோஜனைகள் நீண்டிருக்கும் மகரங்களின் ஆலயமான பெருங்கடலைக் கடந்திருக்கிறாய்}[2].(8) வானரரிஷபா, அத்தகைய நீ இருக்கும்போது, ராவணனிடம் கொண்ட அச்சம் நாஸ்தியானது {அகன்றது}. அல்லது, உன்னை பிராக்ருத வானரனாக {சாதாரணக் குரங்காக}[3] நான் நினைக்கவில்லை.(9) கபிசிரேஷ்டா {குரங்குகளில் சிறந்தவனே}, விதிதாத்மரான ராமரால் அனுப்பப்பட்டவன் நீயென்றால், என்னுடன் சம்பாஷிக்கத்தகுந்தவனே {பேசத்தகுந்தவனே} ஆவாய்.(10)

[2] இங்கே, ஹனுமான் கடந்த கடல், நூறு யோஜனைகள் நீளங்கொண்டது என்று தெளிவாக உரைக்கப்படுகிறது, என்றாலும், வேறு வகையில், “நூறு யோஜனைகளையும், மகராலயத்தையும் {பெருங்கடலையும்}  மாட்டுக் குளம்படியாக்கியிருக்கிறாய்” என்று மொழிபெயர்த்தால் அர்த்தம் இன்றைய புரிதலுக்கு நேராக வந்துவிடும்.

[3] “பிராக்ருதம்” என்ற சொல் “சாதாரணமானது / இயல்பானது” என்ற பொருளைக் கொண்டது. “ஸம்ஸ்க்ருதம்” என்ற சொல், “நன்றாகச் செய்யப்பட்டது” என்ற பொருளைக் கொண்டது. பிராக்ருதம் என்றும், சம்ஸ்கிருதம் என்றும் நம்மிடையே புழங்கும் மொழிகள் இங்கே கவனத்தில் கொள்ளத்தக்கன. சுந்தர காண்டம் 31ம் சர்க்கம் 1ம் சுலோகத்திற்கான அடிக்குறிப்பில் ஹனுமான் சீதையிடம் என்ன மொழியில் பேசியிருக்கக்கூடும் என்ற ஆய்வில், அவன் தமிழில் பேசியிருக்கக்கூடும் என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த சுலோகத்தின்படி பார்த்தால், சீதை ஹனுமானிடம், “சாதாரண மொழியில் பேசக்கூடிய சாதாரண வானரனாக உன்னை நான் கருதவில்லை” என்று சொல்கிறாளோ என்னவோ? அடுத்த சுலோகத்திலேயே சீதை ஹனுமானிடம் நீ என்னிடம் பேசத்தகுந்தவனே என்று சொல்கிறாள். “இலக்கணத்திற்கு இணக்கமான செம்மொழியில் {சம்ஸ்கிருத மொழியில்} என்னிடம் பேசத்தகுந்தவனே” என்று சீதை சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

Hanuman giving the signet ring to Seetha

வெல்லப்படமுடியாதவரான ராமர், {ஒருவனுடைய} பராக்கிரமத்தை அறியாமல், விசேஷமாகப் பரீக்ஷிக்காமல் எவரையும் என்னிடம் அனுப்பமாட்டார்.(11) தர்மாத்மாவும், சத்தியசங்கிரருமான ராமரும், மஹாதேஜஸ்வியும், சுமித்ரானந்தவர்தனருமான {சுமித்திரையின் ஆனந்தத்தை அதிகரிப்பவருமான} லக்ஷ்மணரும் அதிஷ்டவசத்தாலேயே குசலமாக இருக்கின்றனர்.(12) காகுத்ஸ்தர் குசலமாக {ராமர் நலமாக} இருந்தால், யுகாந்தத்தில் உதிக்கும் அக்னியைப் போல, சாகரத்தை மேகலையாக {கடலை இடைக்கச்சையாகக்} கொண்ட மஹீயை ஏன் தஹிக்காமல் {பூமியை எரிக்காமல்} இருக்கிறார்?(13) மாறாக அவ்விருவரும், ஸுரர்களையே {தேவர்களையே} நிக்ரஹஞ்செய்ய {அடக்கியாளக்} கூடிய சக்திமான்களாக இருந்தாலும், என் துக்கங்களுக்கான முடிவு ஏதும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.(14) இராமர், கலக்கமடையவில்லை என்று நம்புகிறேன்; பரிதபிக்கவில்லை என்று நம்புகிறேன். புருஷோத்தமர், செய்ய வேண்டிய காரியங்களைச் செய்கிறார் என்று நம்புகிறேன்.(15) 

நிருபதிசுதர் {மன்னர்மகன் ராமர்} தீனமடையவில்லை, குழப்பமடையவில்லை, காரியங்களில் திசைதிரும்பவில்லை என்று நம்புகிறேன். புருஷகாரியங்களை {மனிதனால் ஆகக்கூடிய எல்லா முயற்சிகளையும்} செய்து கொண்டிருக்கிறார் என்று நம்புகிறேன்.(16) பரந்தபர் {எதிரிகளை அழிக்கும் ராமர்}, இருவிதமான உபாயங்களையும், மூன்றுவித உபாயங்களையும் பின்பற்றி[4], மித்ரர்களிடம் {நண்பர்களிடம்} நல்ல ஹிருதயத்துடனும், பகைவரை வெல்லும் விருப்பத்துடனும் இருக்கிறார் என நம்புகிறேன்.(17) மித்ரர்களை அடைகிறார் என்றும், மித்ரர்களால் அடையப்படுகிறார் என்றும் நம்புகிறேன். நல்ல ஹிருதயம் கொண்ட மித்ரர்களால் மதிக்கப்படுகிறார் என்றும் நம்புகிறேன்.(18) பார்த்திவாத்மஜர் {மன்னர்மகனான ராமர்} தேவர்களின் அருளை அடைய ஆசைப்படுகிறார் என்று நம்புகிறேன். மனித முயற்சியையும், விதியையும் அறிந்திருக்கிறார் என்று நம்புகிறேன்.(19) வானரா, ராகவர், தன்னுடன் வசிக்காததால் என்னிடம் கொண்ட சினேகத்தை இழக்கவில்லை என்று நம்புகிறேன். இந்த விசனத்தில் இருந்து என்னை விடுவிப்பார் என்று நம்புகிறேன்.(20)

[4] பிபேக்திப்ராய் பதிப்பில், “இது சாம, தான, பேத, தண்டங்களைக் குறிக்கிறது. தானம் இங்கே பொருந்தாது. எனவே, தண்டமும், பேதமும் இரண்டு வழிமுறைகளாக இருக்க வேண்டும். மூன்று வழிமுறைகள் என்பன சாமம், பேதம், தண்டமாக இருக்க வேண்டும்” என்றிருக்கிறது.

நித்தியம் சுகங்களையே பழகியவரும், அசுகத்திற்குப் பழக்கப்படாதவருமான ராகவர், பெருந்துக்கத்தை அடைந்து, துன்பத்தில் மூழ்கவில்லை என்று நம்புகிறேன்.(21) கௌசல்யை, அப்படியே சுமித்திரை, அதேபோல பரதர் ஆகியோரின் குசலத்தைத் தொடர்ந்து கேட்டு வருகிறீர்கள் என்று நம்புகிறேன்.(22) மதிப்புக்குத் தகுந்த ராகவர், என் நிமித்தமாகவே சோகத்தில் இருப்பார் என்று நம்புகிறேன். என்னைக் காப்பதைத் தவிர வேறெதையும் மனத்தில் கொள்ளமாட்டார் என்று நம்புகிறேன்.(23) பிராதாவத்ஸலரான {உடன்பிறந்தோரிடம் அன்பு கொண்ட} பரதர், துவஜங்களுடன் {கொடிகளுடன்} கூடியதும், மந்திரிகளால் பாதுகாக்கப்பட்டதுமான பயங்கர அக்ஷௌஹிணியை[5] எனக்காக அனுப்பி வைப்பார் என்று நம்புகிறேன்.(24) வானராதிபதியான ஸ்ரீமான் சுக்ரீவன், பற்களையும், நகங்களையும் ஆயுதங்களாகக் கொண்ட வீர ஹரிக்களுடன் {குரங்குகளுடன்} எனக்காக வருவான் என்று நம்புகிறேன்.(25)

[5] கேஎம்கே மூர்த்தி {தேசிராஜு ஹனுமந்தராவ்} பதிப்பின் அடிக்குறிப்பில், “ஓர் அக்ஷௌஹிணி என்பது 10 அனிகினிகளைக் கொண்டது, அல்லது 21870 யானைகள், 21870 தேர்கள், 65610 குதிரைகள், 109350 காலாட்படையினர் ஆகியவற்றைக் கொண்டது” என்றிருக்கிறது. மஹாபாரதம், ஆதிபர்வம், 2ம் அத்தியாயம், 23 முதல் 26ம் சுலோகம் வரை ஓர் அக்ஷௌஹிணியில் உள்ள படையினரின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டிருக்கிறது.

சூரரும், சுமித்ரானந்தவர்தனரும் {சுமித்திரையின் ஆனந்தத்தை அதிகரிப்பவரும்}, அஸ்திரவித்துமான {அஸ்திரங்களில் தேர்ச்சி பெற்றவருமான} லக்ஷ்மணர், தன் சரஜாலங்களால் ராக்ஷசர்களை அழிப்பார் என்று நம்புகிறேன்.(26) ரௌத்திரமாக ஜொலிக்கும் அஸ்திரங்களால் போர்க்களத்தில் நட்புஜனங்களுடன் சேர்த்து ராவணன் கொல்லப்படுவதை அற்ப காலத்திற்குள் நான் பார்ப்பேன் என்று நம்புகிறேன்.(27) ஹேமத்திற்கு {தங்கத்திற்கு}[6] சமானமான வர்ணத்தையும், பத்மத்திற்கு {தாமரைக்கு} சமானமான காந்தியையும் கொண்ட அவருடைய அந்த முகம், ஜலம் வறண்டதும் ஆதபனால் பத்மத்தை {வெயிலால் வாடும் தாமரையைப்} போல, என்னைவிட்டுப் பிரிந்த சோகத்தால் தீனமடைந்து {வருந்தி}, வாடியிருக்காது என்று நம்புகிறேன்.(28) எவர் தர்மத்தின் குறியீடாக ராஜ்ஜியத்தைக் கைவிட்டாரோ, பாத நடையாக அரண்யத்திற்குள் என்னை அழைத்துச் சென்றபோது கலக்கமோ, பீதியோ, சோகமோ அடையாதவர் எவரோ, அவர் ஹிருதயத்தில் தைரியத்துடன் இருப்பார் என்று நம்புகிறேன்.(29) தூதா, சினேகத்தில் எனக்கு சமமானவர்களாகவோ, {என்னைவிட} மேலானவர்களாகவோ, அவரது மாதாவும் இல்லை; பிதாவும் இல்லை; வேறு யாரும் இல்லை. பிரியரின் {ராமரின்} செயல்பாட்டைக் கேட்பது எதுவரையோ, அதுவரையே நான் ஜீவிக்க விரும்புகிறேன்[7]” {என்றாள் சீதை}.(30) 

[6] இராமன் கரிய நிறம் கொண்டவன் என்று பல இடங்களில் குறிப்புகள் இருக்கின்றன. தங்கநிறத்தில் முகம் கொண்டவன் என்று சீதை சொல்வது இங்கே பொருந்துவதாக இல்லை. துக்கத்தில் இருக்கும் எவரும், தன் குழந்தை கரிய நிறம் கொண்டதாக இருந்தாலும், அன்புடன், “தங்கமே” என்று சொல்வதைப் போன்றதாக இருக்க வேண்டும்.

[7] தர்மாலயப் பதிப்பில், “தூதரே, என்னால் ஸ்நேஹமூலமாய் மஹாப்பிரஸித்தி பெற்ற பிதாவும் இவருக்கு ஸமானமாய் மனதில் கொள்ள முடியாது; மாதாவும் முடியாது; வேறு யாராகட்டும் முடியாது; எப்பொழுது அன்பரது விருத்தாந்தத்தை கேட்பேனோ அதுவரையிலேதான் நான் உயிரை வைத்திருக்க நினைத்திருக்கறேன்” என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், “ராமனைப் பிரிந்தும் ப்ராணன்களை வைத்துக் கொண்டிருக்கிறேனே என்று சிந்திக்க வேண்டாம். இந்த ராமனுக்குத் தாயிடத்திலும் தந்தையிடத்திலும் என்னிடத்திலுள்ள ஸ்னேகத்தைக் காட்டிலும் மேலான ஸ்னேஹம் கிடையாது. அவனுடைய ஸ்னேஹத்திற்கெல்லாம் நானே இருப்பிடம். ஆகையால் இப்படிப்பட்ட ப்ரீதிக்கிடமான நான் ப்ராணன்களை விடுவேனாயின், ராமன் எள்ளளவும் ஜீவித்திருக்க மாட்டானாகையால், என் ப்ராணநாதன் என்னைக் கொண்டுபோக ப்ரயத்தனஞ்செய்யும் ஸமாசாரம் எனக்குத் தெரியும்வரையில், ராமதூதா, நான் பிழைத்திருக்க விரும்புகின்றேன்” என்றிருக்கிறது. வி.வி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், “அவர் என்னிடம் கொண்ட சினேகம், மாதா, பிதா, அல்லது வேறு யாரிடம் கொண்டதையும்விட மேலானதாகும். தூதா, என் அன்புக்குரிய தலைவரைக் குறித்த செய்தியைக கேட்கும் வரையில் நான் பிழைத்திருக்க விரும்புகிறேன்” என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “மாதாவிடமோ, பிதாவிடமோ, வேறு யாரிடமோ அவர் கொண்ட சினேகம், என்னிடம் கொண்ட சினேகத்தைவிட மேலானதோ சமமானதோ இல்லை. ஓ தூதா, என் அன்புக்குரியவரைக் குறித்த எதையும் கேட்கும் வரையே நான் உயிரைத் தக்க வைத்திருப்பேன்” என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பில், “சினேகத்தில் அவர் தன் மாதாவுக்கும், தன் பிதாவுக்கும், வேறு யாருக்கும் இடையில் பேதங்கற்பிப்பதில்லை. நான் வேறு யாருக்கும் சமமானவளே. ஓ தூதா, என் அன்புக்குரியவரைக் குறித்து கேட்கும் வரையே நான் பிழைத்திருக்க விரும்புகிறேன்” என்றிருக்கிறது.

இவ்வாறு மஹா அர்த்தத்துடனும், மதுர அர்த்தத்துடனும் கூடிய வசனத்தை வானரேந்திரனிடம் {வானரத் தலைவன் ஹனுமானிடம்} சொன்ன தேவி {சீதை}, ராம அர்த்தம் பொருந்திய அவனது {ஹனுமானின்} விருப்பத்திற்குரிய சொற்களைக் கேட்பதற்காக மீண்டும் அமைதியடைந்தாள்.(31) சீதையின் வசனத்தைக் கேட்டவனும், பீம விக்ரமம் கொண்டவனுமான மாருதி {வாயுமைந்தன் ஹனுமான்}, தன் கைகளை சிரசில் கூப்பிக் கொண்டு {பின்வரும்} வாக்கியத்தை மறுமொழியாகச் சொன்னான்:(32) “கமலலோசனே {தாமரைக் கண்களைக் கொண்டவளே}, நீ இங்கிருப்பதை ராமர் அறியமாட்டார். எனவேதான், புரந்தரன் சசியை {இந்திரன் இந்திராணியை அழைத்துச்சென்றதைப்} போல, உன்னை உடனே அழைத்துச் செல்லவில்லை.(33) இராகவர், என் சொற்களைக் கேட்டதும், ஹரிரிக்ஷ கணங்களுடன் {குரங்கு, கரடிக் கூட்டத்தாருடன்} கூடிய மஹத்தான சம்முவை {படையை} அழைத்துக் கொண்டு, சீக்கிரமே வருவார்.(34) காகுத்ஸ்தர், கலங்கடிக்கப்பட முடியாத வருணாலயத்தை {பெருங்கடலைத்} தம் பாண வெள்ளத்தால் ஸ்தம்பிக்கச் செய்து, லங்காபுரியை ராக்ஷசர்களற்றதாகச் செய்யப் போகிறார்.(35) அந்நேரத்தில் மிருத்யுவே {யமனே} அசுரர்களுடனோ, தேவர்களுடனோ வந்து ராமபாதையில் குறுக்கிட்டு நின்றாலும், அவர்களையும் அவர் வதைத்துவிடுவார்.(36)

ஆரியையே, உன்னைக் காணாததால் உண்டான சோகத்தில் நிறைந்திருக்கும் அந்த ராமர், சிம்ஹத்தால் பீடிக்கப்பட்ட துவீபத்தை {யானையைப்} போல மகிழ்ச்சியைக் காணாதிருக்கிறார்.(37) தேவி, மலயத்தின் {மலயமலையின்} மீதும், விந்தியத்தின் மீதும், மேருவின் மீதும், மந்தரத்தின் மீதும், தர்த்துரத்தின் {தர்த்துர மலையின்} மீதும், பழங்கள், கிழங்குகள் மீதும் சபதம் செய்கிறேன் {ஆணையிட்டுச் சொல்கிறேன்},{38} நல்ல நயனங்களுடன் {கண்களுடன்} கூடியதும், கோவைக்கனி போன்ற அழகிய இதழ்களைக் கொண்டதும், உதிக்கும் பூர்ணச்சந்திரனைப் போல அழகிய தரிசனம் தருவதுமான அந்த ராமரின் முகத்தை நீ தரிசிப்பாய்.(38,39) வைதேஹி, நாகராஜனின் மூர்த்தத்தில் {யானையரசான ஐராவதத்தின் முதுகில்} அமர்ந்திருக்கும் சதக்ரதுவை {இந்திரனைப்} போல, பிரஸ்ரவண கிரியில் ராமரை சீக்கிரமே நீ தரிசிப்பாய்.(40) இராகவர் மாமிசம் உண்பதுமில்லை; மது பருகுவதுமில்லை. நித்தியம் மாலையில் பக்குவப்படுத்தப்படும் வன உணவையே உண்கிறார்[8].(41) 

[8] தர்மாலயப் பதிப்பில், “ஸ்ரீராகவர் பழங்களின் சதைப்பற்றுள்ள பாகத்தையும் புஜிப்பதில்லை. தேனாயிருந்தாலும் உட்கொள்ளுகிறதில்லை. நாடோறும் 24 நாழிகைக்கு மேல், 30 நாழிகைக்குள் ஆசாரத்துடன் தயாரிக்கப்பட்டதும், நீரில் வேகவிடப்பட்டதுமான காய்கிழங்கை புஜிக்கிறார்” என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், “உன்னைப் பிரிந்த வருத்தத்தில் ராமன் மாம்ஸம் தின்கிறதில்லை; மதுபானஞ் செய்கிறதில்லை. அவன் ப்ரதிதினமும் ஸாயங்காலத்தில் ஒரு தடவை வானப்ரஸ்தர்களுக்கு யோக்யங்களாக விதிக்கப்பட்ட வன்யங்களான காய்கிழங்குகளைச் சரீர தாரணத்திற்கு மட்டுமே புஜிக்கின்றனன்” என்றிருக்கிறது.

உன்னிடம் சென்ற அந்தராத்மாவுடன் கூடிய ராகவர், தன் உடலில் அமரும் ஈக்களையோ, கொசுக்களையோ, பூச்சிகளையோ, சர்ப்பங்களையோ விரட்டுவதில்லை.(42) இராகவர், நித்தியம் சோகத்தால் பீடிக்கப்பட்டு தியானத்திலிருக்கிறார். காமன் வசத்தை அடைந்தவர், வேறு எதையும் சிந்திப்பதே இல்லை.(43) இராமர், சதா நித்திரையற்றவராக இருக்கிறார். அந்த நரோத்தமர் {உத்தம மனிதர்} உறங்கினாலும், மதுரமான சொற்களால் “சீதே” என்று சொல்லி விழித்துக் கொள்கிறார்.(44) பழத்தையோ, புஷ்பத்தையோ, மனோஹரமான வேறு எதையோ கண்டுவிட்டால், உன்னை நினைத்து வருந்தி, “ஹா, பிரியே” என்று சொல்லிப் பெருமூச்சுவிடுகிறார்.(45) தேவி, மஹாத்மாவான அந்த ராஜசுதர் {இளவரசர் ராமர்}, “சீதே” என்று சொல்லி உன்னை மட்டுமே நினைத்து நித்தியம் பரிதபித்துக் கொண்டிருக்கிறார். திடவிரதத்துடன் கூடியவராக, உன்னைத் தேடுவதில் மட்டுமே பிரயத்னம் {முயற்சி} செய்கிறார்” {என்றான் ஹனுமான்}.(46)

இராமசோகத்திற்கு சமானமான சோகத்தையுடைய அந்த வைதேஹசுதை {விதேஹமன்னன் ஜனகனின் மகளான சீதை}, ராமகீர்த்தனத்தைக் கேட்டு, இன்னும் அதிக சோகத்தையே அடைந்து, சரத்காலத் தொடக்கத்தில் எஞ்சியிருக்கும் மேகங்களில் மறைந்த தெளிவற்ற சந்திரனுடன்கூடிய நிசியை {இரவைப்} போலிருந்தாள்.(47) 

சுந்தர காண்டம் சர்க்கம் – 36ல் உள்ள சுலோகங்கள்: 47


Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சம்பாதி சரபங்கர் சாகரன் சாந்தை சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்முகி தூஷணன் நளன் நாரதர் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் மண்டோதரி மதங்கர் மந்தரை மயன் மருத்துக்கள் மஹோதயர் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மைனாகன் மோஹினி யுதாஜித் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாயு வாலி வால்மீகி விகடை விபாண்டகர் விபீஷணன் விராதன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை