Angada spoke to Sampaati | Kishkindha-Kanda-Sarga-57 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராவணனுடன் ஜடாயு யுத்தம் செய்ததையும், சீதையைத் தேடி தாங்கள் அடைந்த அவலநிலையையும் சம்பாதியிடம் சொன்ன அங்கதன்...
ஹரியூதபர்கள் {குரங்குக் குழுத் தலைவர்கள்}, சோகத்தில் தழுதழுத்த ஸ்வரத்துடன் கூடிய {சம்பாதியின்} அந்த வாக்கியத்தைக் கேட்டாலும், அவனது கர்மத்தில் உண்டான சந்தேகத்தால் நம்பிக்கை கொள்ளாதிருந்தனர்.(1) பிராயத்தில் {சாகும் வரை உண்ணாவிரதத்தில்} அமர்ந்திருந்த அந்தப் பிலவங்கமர்கள், கிருத்ரனை {தாவிச் செல்லும் குரங்குகள், கழுகான சம்பாதியைக்} கண்டபோது, ரௌத்திர புத்தியை அடைந்து, “இது நம் அனைவரையும் பக்ஷிக்கப்போகிறது.(2) பிராயத்தில் அமர்ந்திருக்கும் நம்மை பக்ஷித்தால், அனைத்துக் காரியங்களும் நிறைவேறியவர்களாக சீக்கிரம் இங்கிருந்து சித்தி அடைவோம்” என்றனர்.(3)
அந்த சர்வ ஹரியூதபர்களும் இந்த புத்தியை அடைந்த பிறகு, கிருத்ரனை கிரியின் சிருங்கத்தில் {அந்தக் கழுகை மலைச்சிகரத்தில்} இருந்து இறக்கியபோது, அங்கதன் அவனிடம் {சம்பாதியிடம்},(4) “பக்ஷியே, பிரதாபவானும், வானரேந்திரரும், என் ஆரியரும் {உன்னதப் பாட்டனாரும்}, ரிக்ஷராஜா என்ற பெயரைக் கொண்டவருமான ஒரு பார்த்திபர் இருந்தார். அவரது மகன்கள் இருவரும் தார்மிகர்களாக இருந்தனர்.{5} பெரும் பலசாலிகளான சுக்ரீவர், வாலி ஆகியோர் இருவரும் அவரது புத்திரர்களாவர். என் பிதா வாலி, தன் கர்மத்தால் உலகில் புகழ்பெற்ற ராஜாவாக இருந்தார்.(5,6)
இக்ஷ்வாகுக்களில் மஹாரதரும், மொத்த ஜகத்தின் ராஜாவும், தாசரதியுமான {தசரதரின் மகனுமான} ஸ்ரீமான் ராமர், தண்டக வனத்திற்குள் பிரவேசித்தார்.{7} உடன் பிறந்த லக்ஷ்மணனுடனும், பாரியையான வைதேஹியுடனும் பிதாவின் {தந்தை தசரதரின்} ஆணைக்குக் கட்டுப்பட்டும், தர்மநெறிக்கு உட்பட்டும் அங்கே இருந்து வந்தார்.(7,8) அவரது பாரியை {மனைவியான சீதை}, ஜனஸ்தானத்தில் இருந்து ராவணனால் பலவந்தமாகக் கடத்தப்பட்டாள். இராமருடைய பிதாவின் மித்ரரும் {தந்தையின் நண்பரும்}, ஜடாயு என்ற பெயரைக் கொண்டவருமான கிருத்ர ராஜா {கழுகரசர்}, வைதேஹியான சீதை வான்வழியில் கடத்தப்படுவதைக் கண்டார்.(9,10அ) இராவணனை ரதமற்றவனாகச் செய்து, மைதிலிக்காகப் போராடி களைத்த அந்த முதியவர், ரணத்தில் ராவணனால் கொல்லப்பட்டார்.(10ஆ,இ) அந்தக் கிருத்ரர் {கழுகார்} இவ்வாறே வலிமைமிக்க ராவணனால் கொல்லப்பட்டார். இராமரால் ஸம்ஸ்கிருதம் {நற்காரியங்கள்} செய்யப்பட்டு, உத்தம கதியையும் அடைந்தார்.(11)
பிறகு, ராகவர் என் பித்ருவ்யரும் {சிறிய தந்தையும்}, மஹாத்மாவுமான சுக்ரீவரிடம் சக்யத்தை {நட்பை} ஏற்படுத்திக் கொண்டு, என் பிதாவை வதம் செய்தார்.{12} சுக்ரீவரும், அவரது அமைச்சர்களும் என் பிதாவுடன் விரோதம் பாராட்டியதால், ராமர் வாலியைக் கொன்றார்.(12,13) அந்த சுக்ரீவர், அவரால் {ராமரால்} ராஜ்ஜியத்தில் ஸ்தாபிக்கப்பட்டு, வானரேஷ்வரரானார். வானர முக்கியர்களின் ராஜாவான அவர் எங்களிடம் பிரஸ்தாபித்தார் {கேட்டுக் கொண்டார் / சுக்ரீவரே எங்களை இங்கே அனுப்பிவைத்தார்}.(14) இவ்வாறே ராமருக்கான முயற்சியில் இறங்கி, ஆங்காங்கே தேடினாலும், ராத்திரியில் சூரியப்பிரபையைப் போல, வைதேஹியை அடைந்தோமில்லை.(15)
அத்தகைய நாங்கள், நல்ல சமாஹிதத்துடன் தண்டகாரண்யத்தில் தேடிக் கொண்டிருந்தபோது, தரணியில் விரிந்திருந்த பிலத்திற்குள் அறியாமல் பிரவேசித்தோம்.(16) மயனின் மாயையால் உண்டாக்கப்பட்ட அந்த பிலத்திற்குள் தேடிக் கொண்டிருந்தபோதே எங்களுக்கு எதை சமயம் என ராஜா {சுக்ரீவர்} அமைத்திருந்தாரோ அந்த மாசம் கடந்தது.(17) கபிராஜரின் {குரங்குகளின் மன்னனுடைய} வசனத்திற்குக் கட்டுப்பட்டவர்களான நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்ட உறுதியை மீறிய பயத்தால் பிராயத்தில் {சாகும் வரை உண்ணாவிரதத்தில்} அமர்ந்திருக்கிறோம்.(18) இலக்ஷ்மணருடன் கூடிய அந்த காகுத்ஸ்தரும் {ராமரும்}, சுக்ரீவரும் குரோதம் அடைந்திருக்கும்போது, அங்கே {கிஷ்கிந்தைக்குச்} சென்றாலும், எங்கள் அனைவரின் ஜீவிதம் நிலைக்காது” {என்றான் அங்கதன்}.(19)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 57ல் உள்ள சுலோகங்கள்: 19
Previous | | Sanskrit | | English | | Next |