Saturday, 5 October 2024

அழகிய லங்கை | யுத்த காண்டம் சர்க்கம் - 039 (29)

Beautiful Lanka | Yuddha-Kanda-Sarga-039 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இரவில், சுவேல மலையின் உச்சியில் இருந்து லங்கையின் காடுகள், அழகிய தோட்டங்கள், பூங்காக்கள், அரண்மனைகள் ஆகியவற்றைக் கண்டது...

Rama seeing Lankapuri in the peak of Trikuta mountain from Suvela Mountain


வீர ஹரிபுங்கவர்கள் {குரங்குகளில் முதன்மையானவர்கள்}, அங்கே சுவேலத்தில் அந்த ராத்திரியில் விழித்திருந்து லங்கையின் வனங்களையும், உபவனங்களையும் கண்டனர்.(1) சமமான நிலப்பரப்பு, விசாலமாகவும், ரம்மியமாகவும், நீண்டு தொடரும் சரணாலயமாகவும் கண்களுக்கு விருந்தளிப்பதைக் கண்டு அவர்கள் வியப்படைந்தனர்.(2) சம்பகம் {செண்பகம்}, அசோகம், புன்னாகம் {புன்னை}, சாலம் {ஆச்சா / மராமரம்}, தாலம் {பனை} ஆகியவற்றால் நிறைந்ததும், தமால {பச்சிலை மர} வனங்களால் மறைக்கப்பட்டதும், நாகமாலை {நாகேசர} மரங்களால் சூழப்பட்டதும்,{3} ஹிந்தாலம் {சீதாள மரம்}, அர்ஜுனம் {மருத மரம்}, முழுமையாகப் புஷ்பித்த நீபம் {கடம்பு}, சப்தபர்ணம் {ஏழிலைப்பாலை}, திலகம் {மஞ்சாடி}, கர்ணிகாரம் {கோங்கு / சரக்கொன்றை}, பாடலம் {பாதிரி} ஆகியவற்றுடன் கூடியதும்,{4}  நுனிகள் புஷ்பித்த, கொடிகள் படர்ந்த, திவ்யமான, பலவிதமான மரங்களுடனும் கூடிய லங்கை இந்திரனின் அமராவதியைப் போலிருந்தது.{5} விசித்திர மலர்களும், சிவந்த இளந்தளிர்களும் நிறைந்த மரங்களுடனும், நீல வண்ணமிக்க பசும்புல் தரையுடனும் அது {லங்கை} ஒளிர்ந்து கொண்டிருந்தது.(3-6)

அங்கேயிருந்த {சுவேல மலையில் இருந்த} மரங்கள், கந்தம் மிக்கவையும், மிக ரம்மியமானவையுமான புஷ்பங்கள், பழங்கள் ஆகியவற்றை, மானிடர்கள் {தரிக்கும்} பூஷணங்களை {ஆபரணங்களைப்} போலத் தரித்துக் கொண்டிருந்தன.(7) {குபேரனின்} சைத்ரரதத்திற்கும், {இந்திரனின்} நந்தனத்திற்கும் ஒப்பாக, சர்வ ருதுக்களிலும் {பருவகாலங்கள் அனைத்திலும்} ஷட்பதங்கள் {வண்டுகள்} நிறைந்து, மனத்தைக் கவரும் வகையில் அந்த வனம் பிரகாசித்தது.(8) அருவிகள் நிறைந்த அந்த வனத்தில், நீர்க்காக்கைகளுடனும், நாரைகளுடனும் ஆடும் மயில்களுடனும், குயில்களின் சப்தத்தையும் அவர்கள் கேட்டனர்.(9)

நித்யம் மதங்கொண்ட பறவைகள் வசிப்பவையும், வண்டுகள் மொய்ப்பவையும், கோகிலங்கள் {குயில்கள்} நிறைந்த மரக்கூட்டங்களைக் கொண்டவையும், பறவைகளின் நாதத்தால் ஒலிக்கப்பெற்றவையும்,{10} சிறந்த வண்டுகளின் ஒலியுடன் கூடியவையும், வண்டுகளால் வசிக்கப்பெற்றவையும், கோணாலகங்களாலும் {நீர்ப்பறவைகளாலும்}, சாரசப் பறவைகளாலும் ஒலிக்கப்பெற்றவையுமான{11} அந்த வனங்களிலும், உபவனங்களிலும் வீரர்களும், காமரூபிகளுமான ஹரயர்கள் {குரங்குகள்} மகிழ்ச்சியுடனும், களிப்புடனும் நுழைந்தனர்.(10-12) மஹா ஓஜஸர்களான அந்த வானரர்கள் அனைவரும், அங்கே பிரவேசித்தபோது, புஷ்பங்களின் ஸ்பரிசத்தால் நறுமணத்துடன் கூடிய தென்றல் இதமாக வீசிக் கொண்டிருந்தது.(13)

பிற யூதபர்களும் {குழு தலைவர்களும்}, ஹரிவீரர்களின் யூதங்களும் {குரங்கு வீரர்களின் குழுக்களும்} சுக்ரீவனின் அனுமதியின் பேரில் வெளியே வந்து பதாகைகளுடன் கூடிய லங்கைக்குச் சென்றனர்.(14) நாதம் செய்வதில் சிறந்தவர்கள், பறவைகளை அச்சுறுத்தி, மிருகங்களையும், துவீபங்களையும் {மான்களையும், யானைகளையும்} வெருண்டோடச் செய்து, தங்கள் நாதத்தால் அந்த லங்கையை நடுங்கச் செய்தனர்.(15) மஹாவேகம் கொண்டவர்களான அவர்கள், மஹீயை {பூமியைத்} தங்கள் சரணத்தால் {பாதங்களால்} பீடிக்கச் செய்ததும், அவர்களின் சரணத்தில் இருந்து உதித்த புழுதி திடீரென மேலே உயர்ந்தது.(16) அந்த சப்தத்தால் ரிக்ஷங்கள், சிம்ஹங்கள், வராஹங்கள், மஹிஷங்கள், வாரணங்கள், மிருகங்கள் {கரடிகள், சிங்கங்கள், பன்றிகள், எருமைகள், யானைகள், மான்கள்} ஆகியவை அச்சத்தால் பீதியடைந்து பத்து திசைகளிலும் ஓடின.(17)

திரிகூடத்தின் {திரிகூட மலையின்} ஒரு சிகரம் வானத்தை ஸ்பரிசிக்கும் அளவு மிக உயரமாக இருந்தது. எங்கும் புஷ்பங்களால் மறைக்கப்பட்டிருந்தது. பொன்னுக்கு ஒப்பானதாகக் காட்சியளித்தது.{18} நூறு யோஜனை விஸ்தீர்ணம் கொண்டதாகவும், விமலமானதாகவும் {களங்கமற்றதாகவும்}, காண்பதற்கு அழகானதாகவும் இருந்தது. சகல சம்பத்துகளாலும் நிறைந்திருந்தும், மிகப் பிரசித்தி பெற்றதுமான அது பறவைகளாலும் புக முடியாததாக இருந்தது.{19} மனத்தாலும் அடைதற்கரிதான அதில் {மானிடர்களால்} எப்படி ஏற முடியும்?(18-20அ) இராவணனால் பாலிதம் செய்யப்படும் லங்கை, அந்த சிகரத்திலேயே பத்து யோஜனை விஸ்தீர்ணத்திலும், இருபது யோஜனை நீளத்திலும் இருந்தது[1].(20ஆ,21அ) அந்தப் புரி, வெண் மேகங்களுக்கு ஒப்பான உயர்ந்த கோபுரங்களுடனும், வெள்ளி, காஞ்சன சாலைகளுடனும் சோபித்துக் கொண்டிருந்தது.(21ஆ,இ)

[1] தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பு, மன்மதநாததத்தர் பதிப்பு ஆகியவற்றில் மட்டுமே இந்த யோஜனைக் கணக்கு இருக்கிறது. மற்ற பதிப்புகளில் நூறு யோஜனை விஸ்தீர்ணம், முப்பது யோஜனை நீளம் என்று இருக்கிறது. தேசிராஜு ஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "இராவணனின் வசிப்பிடத்தை உள்ளடக்கிய லங்கையின் சரியான நீளம் மற்றும் அகலத்தைக் குறிப்பிடுவதாக இந்த சுலோகத்தை விளக்கி உரையாசிரியர்கள் முரண்பாடுகளை சரியாக்குகிறார்கள்" என்றிருக்கிறது.


விமானங்களுக்கு ஒப்பான பிராசாதங்களால் {அரண்மனைகளால்} உயர்வாக அலங்கரிக்கப்பட்ட லங்கை, ஆதவனுக்கு வெளிப்படும் மழைமேகங்களின் இடையே மத்தியம வைஷ்ணவபதம் {விஷ்ணு வைத்த இரண்டாம் அடியான ஆகாயம்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தது[2].(22) அதில் {அந்த லங்கையில்} ஆயிரம் ஸ்தம்பங்களால் {தூண்களால்} அலங்கரிக்கப்பட்ட ஒரு பிராசாதம் {ஓர் அரண்மனை}, கைலாச சிகரத்திற்கு ஒப்பாக வானத்தை முட்டுவதைப் போல தெரிந்தது.{23} எது நித்யம் ராக்ஷசர்களின் படையால் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறதோ, அது ராக்ஷசேந்திரனின் புர பூஷணமாக {லங்கா நகருக்கு ஆபரணமாக} விளங்கியது.(23,24)

[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மத்⁴யமம் வைஷ்ணவம் பத³ம் - விஷ்ணுவின் நடு அடி. விஷ்ணு வாமன வடிவை ஏற்று அசுர மன்னன் பலியை வஞ்சித்த போது, ஓர் அடியால் பூமியை மறைத்தான், மறு அடியால் வானத்தையும், இறுதி அடியால் சொர்க்கத்தையும் மறைத்தான்" என்றிருக்கிறது.


மனத்தைக் கவர்வதும், காஞ்சனமயமானதும், நானாவித விசித்திர தாதுக்களுடன் கூடிய பர்வதங்களால் அழகுற்று விளங்குவதும், உத்யான வனங்களால் அழகுற்று விளங்குவதும்,{25} நானாவித பறவைகளால் கூவப்பெற்றதும், நானாவித மிருகங்கள் வசிப்பதும், இடையிடையே நானாவித சோலைகளைக் கொண்டதும், நானாவித ராக்ஷசர்களால் காக்கப்படுவதும்,{26} ஏராளமான பொருளுடையதும் {செல்வங்களைக் கொண்டதும்}, குறைவற்றதுமான அந்த ராவணனின் புரியை லக்ஷ்மீவானான லக்ஷ்மணாக்ரஜன் {லக்ஷ்மணனின் அண்ணன்} ராமன், வானரர்கள் சகிதனாகக் கண்டான்.(25-27) அமரர்களுக்கு ஒப்பானவனும், வீரியவானுமான லக்ஷ்மணபூர்வஜன் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமன்}, மஹாகிருஹங்களால் {பெரும் மாளிகைகளால்} நிறைந்திருக்கும் அந்த புரீயைக் கண்டு வியப்படைந்தான்.(28) மஹத்தான படையுடன் கூடிய ராமன், ரத்னங்களால் பூர்ணமாக நிறைந்ததும், நானாவிதமாக அமையப்பெற்றதும், பிராசாத மாலைகளால் {அரண்மனை வரிசைகளால்} அலங்கரிக்கப்பட்டதுமான அந்தப் புரீயை, மஹாயந்திரங்களாலும், முக்கிய கவாடங்களாலும் {சிறந்த கதவுகளாலும்} சிறப்புற்று விளங்குவதாகக் கண்டான்.(29)

யுத்த காண்டம் சர்க்கம் – 039ல் உள்ள சுலோகங்கள்: 29

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை