The history said by Hanuman | Sundara-Kanda-Sarga-35 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமலக்ஷ்மணர்களின் அடையாளங்களை சீதை கேட்க, அவற்றையும், உள்ளபடியே நடந்தவற்றையும், லங்கையை அடைந்ததையும், தான் பிறந்த வரலாற்றையும் சொன்ன ஹனுமான்...
வானரரிஷபனிடம் {வானரர்களில் சிறந்த ஹனுமானிடம்} இருந்து அந்த ராமகதையைக் கேட்ட வைதேஹி, மதுரமான குரலில் சாந்தமாக இந்த வசனத்தைச் சொன்னாள்:(1) “இராமருடன் உனக்கு தொடர்பு எங்கே ஏற்பட்டது? இலக்ஷ்மணரை எப்படி அறிந்தாய்? வானரர்களுக்கும், நரர்களுக்கும் இடையிலான சந்திப்பு எப்படி ஏற்பட்டது?(2) வானரா, ராமருக்கும், லக்ஷமணருக்கும் உரிய லிங்கங்கள் {அடையாளங்கள்} எவையோ, அவற்றை எனக்குச் சொல்வாயாக. மீண்டும் சோகம் என்னை அணுகாதிருக்கட்டும்.(3) அந்த ராமருக்கும், லக்ஷமணருக்கும் உரிய தோற்றம் எவ்வகையானது? ரூபம் எவ்வகையானது? தொடைகள் எப்படிப்பட்டவை? கைகள் எப்படிப்பட்டவை? எனக்குச் சொல்வாயாக” {என்றாள் சீதை}.(4)
வைதேஹியால் இவ்வாறு சொல்லப்பட்டதும், மாருதாத்மஜனான ஹனுமான், ராமனின் உண்மை நிலையை {உள்ளபடியே பின்வருமாறு} சொல்லத் தொடங்கினான்:(5) “வைதேஹி, கமலபத்ராக்ஷி {தாமரையைப் போன்ற கண்களைக் கொண்டவளே}, பர்த்தாவுக்கும், லக்ஷ்மணருக்கும் உரிய தோற்றங்களை அறிந்திருந்தாலும், ஐயோ அதிஷ்டவசத்தால் {என்னிடம்} நீ கேட்கிறாய்.(6) விசாலாக்ஷி {நீள்விழியாளே}, ராமருக்கும், லக்ஷ்மணருக்கும் உரிய சின்னங்கள் என்னென்னவோ, அவற்றைக் கண்டபடியே சொல்லப்போகும் என்னிடம் கேட்டுக்கொள்வாயாக.(7) ஜனகாத்மஜே {ஜனகனின் மகளான சீதையே}, இராமர் கமலபத்ராக்ஷர் {தாமரை இதழ்களைப் போன்ற கண்களைக் கொண்டவர்}; சர்வசத்வமனோஹரர் {அனைத்து உயிரினங்களின் மனங்களையும் கொள்ளை கொள்பவர்}; பிறந்ததிலிருந்தே ரூபதாக்ஷிண்யசம்பன்னராகத் திகழ்பவர் {அழகிய வடிவமும், பெருந்தன்மையும் நிறைந்தவராகத் திகழ்பவர்}.(8) தேஜஸ்ஸில் ஆதித்யனுக்கு {சூரியனுக்கு} ஒப்பானவர்; பொறுமையில் பிருத்விக்கு {பூமிக்கு} சமமானவர்; புத்தியில் பிருஹஸ்பதிக்கு சமமானவர்; புகழில் வாசவனுக்கு ஒப்பானவர்.(9) பரந்தபர் {பகைவரை எரிப்பவர்}; ஜீவலோகத்தை ரக்ஷிப்பவர்; சொந்த ஜனங்களையும் ரக்ஷிப்பவர்; தன் விருத்தத்தையும் {நடத்தையையும் / ஒழுக்கத்தையும்}, தர்மத்தையும் ரக்ஷிப்பவர்.(10)
பாமினி {அழகிய பெண்ணே}, ராமர் உலகத்திலுள்ள சாதுர்வர்ணங்களை {நான்கு வர்ணங்களை} ரக்ஷிப்பவர். உலகத்தாரின் மரியாதைகளுக்கு {விதிமுறைகளுக்கு} அவரே கர்த்தாவாகவும் {உருவாக்கியவராகவும்}, அவற்றைப் பின்பற்றச் செய்பவராகவும் இருக்கிறார்.(11) அர்ச்சிஷ்மான் {காந்தியுடன் விளங்குபவர்}; அதிகமாக அர்ச்சிக்கப்படுபவர் {வணங்கப்படுபவர்}; பிரம்மசரிய விரதத்தில் நிலைநிற்பவர்[1]; சாதுக்களின் உபகாரஜ்ஞர் {நல்லவர்களுக்குச் செய்ய வேண்டிய உதவிகளை அறிந்தவர்}; கர்மங்களின் பிரசாரஜ்ஞர் {செய்ய வேண்டிய செயல்களைச் செய்வதற்கான வழிமுறைகளைச் சொல்வதற்கு அறிந்தவர்}.(12) இராஜவித்யைகளில் பயிற்சி உள்ளவர்; பிராமணர்களை உபாசிப்பவர்; ஸ்ருதவான் {ஸ்ருதிகளை [சாஸ்திரங்களை] அறிந்தவர்}; சீலசம்பன்னர் {ஒழுக்கம் நிறைந்தவர்}; விநீதர் {பணிவுள்ளவர்}; பரந்தபர் {பகைவரைப் பீடிப்பவர்}.(13) யஜுர்வேதத்தில் பயிற்சியுள்ளவர்; வேதவித்துகளால் பூஜிக்கப்படுபவர்; தனுர்வேதத்திலும், பிற வேதங்களிலும், வேதாங்கங்களிலும்[2] நிஷ்டிதர் {நிபுணர்}.(14) தேவி, ராமர், அகன்ற தோள்களையும், நீண்ட கைகளையும் கொண்டவர்; சங்கு போன்ற கழுத்துடையவர்; சுபமான முகமுடையவர்; தோள் எலும்பு மறைந்தவர்; அழகிய சிவந்த கண்களைக் கொண்டவர்; ஜனங்களால் கேட்கப்படுபவர் {மக்களிடம் புகழ்பெற்றவர்}.(15)
[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், “க்ருஹஸ்தனாகிய இவன் ப்ரஹ்மசர்ய வ்ரதத்தில் நிலைநிற்கையாவது ருதுகாலந்தவிர மற்ற காலங்களில் ஸ்த்ரீ ஸங்கத்தை விட்டிருக்கை” என்றிருக்கிறது.
[2] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், “வேதங்களின் பொருளை எடுத்துரைப்பதும், அவற்றுக்கு {வேதங்களுக்குத்} துணைநூலாகக் கருதப்படுவதுமான புனித அறிவியலாகும். இப்பெயரின் கீழ் ஆறு அறிவியல்கள் வருகின்றன. சிக்ஷை (உச்சரிப்பு), கல்பம் (சடங்கு [செயல்முறை]), வியாகரணம் (இலக்கணம்), சந்தஸ் (சொல் இலக்கணம்), ஜ்யோதிஷம் (வானியல்), நிருக்தம் {கடின சொற்களுக்கான விளக்கம்) ஆகியவையே அவை.
துந்துபியின் ஒலியைப் போன்ற ஸ்வனம் {குரல்} உள்ளவர்; பளபளக்கும் வர்ணமுடையவர்; பிரதாபவான்; சமமானவர்; சமமாகப் பகிரப்பட்ட அங்கங்களைக் கொண்டவர்; சியாம வர்ணம் {கரிய நிறம்} கொண்டவர்.(16) உறுதியான {மார்பு, மணிக்கட்டு, முழங்கை ஆகிய} மூன்றையும், நீளமான {புருவங்கள், கைகள், உள்ளங்கால்கள் ஆகிய} மூன்றையும், சமமான {நுனிமயிர், முழந்தாள், விரைகள் ஆகிய} மூன்றையும், உன்னதமான {உயர்ந்தவையான மார்பு, நாபி, அடி வயிறு ஆகிய} மூன்றையும், சிவந்த {கடைக்கண்கள், நகங்கள், உள்ளங்கை,கால்கள்} மூன்றையும், மென்மையான {பாதம், தலைமயிர், ஆண்குறி ஆகிய} மூன்றையும், நித்தியம் கம்பீரமான {குரல், நடை, நாபி ஆகிய} மூன்றையும் கொண்டவர்.(17) {வயிற்றிலும், கழுத்திலும்} மடிப்புகள் மூன்றையும், பள்ளமான {மார்புக்குழி, பாதக்குழி, காம்புகள் ஆகிய} மூன்றையும், குறுகிய {கழுத்து, ஆண்குறி, முதுகு, கீழ்க்கால்கள் ஆகிய} நான்கையும், சிரசில் சுழிகள் மூன்றையும், கட்டைவிரலுக்குக் கீழ் {தாம் அறிந்த வேதங்களைக் குறிப்பிடும்} ரேகைகள் நான்கையும், நெற்றியில் ரேகைகள் நான்கையும், உயரத்தில் கிஷ்குகள் {முழங்கள்}[3] நான்கையும், சமமான {கைகள், முழங்கால்கள், கன்னங்கள், தொடைகள் ஆகிய} நான்கையும் கொண்டவர்.(18)
[3] கேஎம்கே மூர்த்தி {தேசிராஜுஹனுமந்தராவ்} பதிப்பில், நான்கு முழங்கள் என்பதற்கான அடைப்புக்குறியில் 96 அங்குலங்கள் என்று குறிப்பிடப்படுகிறது. அவ்வாறெனில் ராமனின் உயரம் 8 அடியாகும். பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில் இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கும் சொல் “கிஷ்கு” என்பதாகும். கிஷ்கு என்பது முன்னங்கையின் நீளத்தை குறிக்கும். அஃது ஒரு முழமாகும். ஒரு முழம் என்பதை 18 அங்குலங்கள் என்று கொண்டால், 72 அங்குலம் அல்லது 6 அடி உயரம் என்றாகிறது” என்றிருக்கிறது. தமிழ்ப்பதிப்பான நரசிம்மாசாரியர் பதிப்பில், அடைப்புக்குறிக்குள் (தொண்ணூற்றாறங்குல அளவுடையவன்) என்று குறிப்பிடப்படுகிறது. முழம் என்பது ஒரு மனிதனின் கைமுட்டியிலிருந்து நடுவிரலின் நுனிவரை உள்ள அளவாகும். “ஈட்டி எட்டு முழம் பாயும்; பணம் பாதாளம் மட்டும் பாயும்” என்ற தமிழ்ப் பழமொழியில் முழம் குறிப்பிடப்படுகிறது. விலைக்கு வாங்கும் வேட்டிக்கு நான்கு முழம், எட்டு முழம், பத்து முழம் என்று அளவைக் குறிப்பிடுவது இன்றும் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. தமிழகத்தில் ஒரு முழத்தின் அளவு 1⅜ அடியாகும். அதாவது 16.5 அங்குலங்களாகும். இராமன் நான்கு முழ உயரம் என்பதைத் தமிழக வழக்குப்படி கொண்டால் 66 அங்குலங்கள், அதாவது 5 அடி 5 அங்குலம் என்ற அளவு வரும். திரேதா யுகத்தில் மனிதர்கள் எவ்வளவு உயரம் இருந்தார்களோ? அவர்களின் முன்னங்கை அளவில் நான்கு முழங்களே ராமனின் உயரமாக இருக்க முடியும்.
சமமான துவந்தங்கள் {இரட்டைகளான புருவங்கள், நாசி துவாரங்கள், கண்கள், செவிகள், உதடுகள், காம்புகள், முழங்கைகள், மணிக்கட்டுகள், முழங்கால்கள், விரைகள், இடைப்பகுதிகள், கைகள், கால்கள், பின்தட்டுகள் ஆகிய} பதினான்கையும், நான்கு கூரிய பற்களையும், {சிங்கம், புலி, யானை, காளை ஆகியவற்றின் நடையைப் போன்ற} நான்கு கதிகளையும், சிறந்த உதடுகள், தாடைகள், நாசி ஆகியவற்றையும், பளபளப்பான {மயிர், கண்கள், பற்கள், தோல், உள்ளங்கால்கள் ஆகிய} ஐந்தையும், நீண்டவையான {முதுகு, கைகள், கைவிரல்கள், கால்விரல்கள், கண்கள், காதுகள், தொடைகள், உள்ளங்கால்கள் ஆகிய} எட்டையும் கொண்டவர்.(19) இராகவர், பத்மங்கள் போன்ற {முகம், வாய், கண்கள், நாவு, உதடுகள், தாடைகள், மார்பு, நகங்கள், கைகள், கால்கள் ஆகிய} பத்தையும்; பருத்த {மார்பு, தலை, நெற்றி, கழுத்து, தோள்கள், இதயம், வாய், கால்கள், முதுகு, பாதங்கள் ஆகிய} பத்தையும் கொண்டவர். {காந்தி, புகழ், மகிமை என்ற} மூன்றால் வியாபித்திருப்பவர்; {தந்தைவழி, தாய்வழி ஆகிய} இரண்டிலும் தூய்மையானவர்; உயர்ந்த {கக்கங்கள், வயிறு, மார்பு, மூக்கு, தோள், நெற்றிய ஆகிய} ஆறையும், நுட்பமான {கேசம், தாடிமீசை, நகம், உடல் மயிர், தோல், விரல்கள், ஆண்குறி, புத்தி, பார்வை ஆகிய} ஒன்பதையும் கொண்டவர்; {தர்மம், அர்த்தம், காமம் ஆகியவற்றால் முற்பகல், நடுப்பகல், பிற்பகல் ஆகிய} மூன்றிலும் வியாபித்திருப்பவர்.(20) சத்தியத்திலும், தர்மத்திலும் பற்றுடையவர்; ஸ்ரீமான் {செழிப்பானவர்}; சங்கிரஹத்திலும், அனுக்கிரஹத்திலும் விருப்பமுள்ளவர்; தேச காலங்களை அறிந்தவர்; சர்வ லோகத்தவரிடமும் பிரியமாகப் பேசுபவர்.(21) அபராஜிதரும் {வீழ்த்தப்பட முடியாதவரும்}, அவரது வைமாத்ர பிராதாவான {சிற்றன்னையிடம் பிறந்தவரும், உடன்பிறந்தவருமான} சௌமித்ரி {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணர்}, அன்பாலும், ரூபத்தாலும், குணத்தாலும் அதே விதமானவர் {ராமரையே போன்றவர்}.(22)
நரசார்தூலர்களான {மனிதர்களில் புலிகளான} அவ்விருவரும் உன்னைப் பார்க்கும் ஆவலில், மஹீ {பூமி} எங்கும் தேடியபடி எங்களை வந்தடைந்தனர்.(23) வசுந்தரையில் உன்னையே தேடித் திரிந்து கொண்டிருந்த அவ்விருவரும், மிருகபதியான சுக்ரீவரைக் கண்டனர்.{24} பிரியதரிசனங்கொண்ட அவர், {காண்பதற்கு இனிமையான சுக்ரீவர்}, பிராதாவிடம் கொண்ட பயத்தின் அர்த்தத்தால் பூர்வஜரால் {உடன்பிறந்தவனிடம் கொண்ட அச்சத்தின் காரணமாக அண்ணன் வாலியால்} விரட்டப்பட்டு, ஏராளமான மரங்கள் நிறைந்த ரிச்யமூக உச்சியில் அமர்ந்திருந்தார்.(24,25) பூர்வஜரால் {அண்ணனான வாலியால்} ராஜ்ஜியத்தில் இருந்து விரட்டப்பட்டவரும், சத்தியத்தில் உறுதியாக இருப்பவரும், ஹரிராஜாவுமான அந்த சுக்ரீவருக்கு, நாங்கள் ஒவ்வொருவரும் பணிவிடை செய்துகொண்டிருந்தோம்.(26) அப்போது, மரவுரி தரித்தவர்களும், சிறந்த தனுசைக் கையில் ஏந்தியவர்களுமான {ராமலக்ஷ்மணர்கள்} இருவரும், ரிச்யமூக சைலத்தின் ரம்மியமான தேசத்தை {அழகிய இடத்தை} வந்தடைந்தனர்.(27)
தனுசுகளுடன் வந்துகொண்டிருந்த அந்த நரவியாகரர்களை {மனிதர்களில் புலிகளான ராமலக்ஷ்மணர்களைக்} கண்ட அந்த வானரரிஷபர் {வானரர்களில் சிறந்த சுக்ரீவர்}, பயமோஹிதமடைந்து, அந்த கிரியின் சிகரத்திற்குத் தாவிச் சென்றார்.(28) பிறகு அந்த சிகரத்தில் இருந்த அந்த வானரேந்திரர் {வானரத் தலைவர் சுக்ரீவர்}, அவ்விருவரின் சமீபத்திற்கு {ராமலக்ஷ்மணர்களின் அருகில் செல்ல} என்னையே விரைவாக அனுப்பினார்.(29) சுக்ரீவரின் வசனத்தின்படியே நான், கைகளைக் கூப்பிக் கொண்டு, ரூபலக்ஷணசம்பன்னர்களும், பிரபுக்களுமான அவ்விரு புருஷவியாகரர்களை {மனிதர்களில் புலிகளான ராமலக்ஷ்மணர்களை} அடைந்தேன்.(30) உண்மையை அறிந்து கொண்டு, பிரீதியால் அவ்விரு புருஷரிஷபர்களையும் என் பிருஷ்டத்தில் {பின்னால்} ஏற்றிக் கொண்டு, அந்த தேசத்திற்கு {சுக்ரீவர் இருந்த இடத்திற்கு} அழைத்துச் சென்றேன்.(31) மஹாத்மாவான சுக்ரீவருக்கு உண்மை நிலையை அறிவித்தேன், அவர்கள் அன்யோன்யம் உரையாடிக் கொண்டதில் மிகுந்த பிரீதி உண்டானது.(32) பிறகு, ஹரீஷ்வரநரேஷ்வரர்களான அவ்விருவரும் {குரங்குகளின் தலைவரும், மனிதர்களின் தலைவருமான சுக்ரீவரும், ராமரும்}, பிரீதியால் நிறைந்து, பூர்வத்தில் நடந்த கதைகளைப் பேசி பரஸ்பரம் ஆசுவாசம் அடைந்தனர்.(33)
அப்போது, அந்த லக்ஷ்மணாக்ரஜர் {லக்ஷ்மணனின் அண்ணனான ராமர்}, பெரும் தேஜஸ்ஸுடைய பிராதாவான {பெரும் வலிமையுடையவரும், உடன்பிறந்தவருமான} வாலியால், ஸ்திரீ நிமித்தமாக விரட்டபட்ட சுக்ரீவரை சாந்தப்படுத்தினார்.(34) பிறகு லக்ஷ்மணர், சிரமமின்றி கர்மங்களைச் செய்யும் ராமருக்கு, உன்னைக் காணாததால் உண்டான சோகத்தை வானரேந்திரரான சுக்ரீவரிடம் தெரிவித்தார்.(35) இலக்ஷ்மணரால் சொல்லப்பட்ட சொற்களைக் கேட்ட அந்த வானரேந்திரரும், அதிக கிரஹகிரஸ்தத்தால் அம்சுமானை {ராஹுவால் பீடிக்கப்பட்டு ஒளியிழக்கும் சூரியனைப்} போல, அப்போது பிரபையிழந்தவரானார்.(36), இராக்ஷசனால் அபகரிக்கப்படும்போது, உன் அங்கங்களில் சோபித்தவையும், மஹீதலத்தில் {உன்னால்} வீசப்பட்டவையுமான ஆபரணஜாலங்கள் எவையோ, அவை அனைத்தையும் மகிழ்ச்சியுடன் கொண்டுவந்து ராமரிடம் காட்டிய ஹரியூதபர்கள் {குரங்குக்குழுத்தலைவர்கள்}, உன் கதியை {நீ சேர்ந்த இடத்தை / பாதையை} அறிந்தார்களில்லை.(37,38) அவை ராமரிடம் கொடுக்கப்பட்டபோது, அவர் நனவு தவறினார். ஒலியுடன் சிதறிய அவற்றை நானே கொண்டு வந்தேன்[4].(39) தேவப்பிரகாசம் கொண்டவரான அந்த தேவர் {ராமர்}, உனக்கு உரியவையும், அழகானவையுமான அவற்றை மடியில் வைத்துக் கொண்டு பலவிதங்களில் அழுது புலம்பினார்.(40) அவற்றைப் பார்த்து மீண்டும், மீண்டும் அழுது வருந்திக் கொண்டிருந்த தாசரதியின் சோகஹுதாசனத்தை {தசரதரின் மகனான ராமரின் சோகத்தீயை} அவை மூண்டெழச் செய்தன.(41) துக்கத்தால் பீடிக்கப்பட்ட அந்த மஹாத்மா நீண்டநேரம் கீழே கிடந்தார். விதவிதமான வாக்கியங்களைச் சொல்லி பெருஞ்சிரமத்துடன் நான் அவரை எழுப்பினேன்.(42) மஹாபாஹுவான அந்த ராகவர், சௌமித்ரி சகிதராக அவற்றைப் பார்த்து, மீண்டும் மீண்டும் காட்டிவிட்டு, சுக்ரீவரிடம் சேர்ப்பித்தார்.(43)
[4] கிஷ்கிந்தா காண்டம் 6ம் சர்க்கம், 14-16ம் சுலோகங்களில் சுக்ரீவனே சீதையின் ஆபரணங்களை ராமனிடம் காட்டுகிறான். இங்கே ஹனுமான் சொல்வது வேறு வகையில் அமைந்திருக்கிறது. தர்மாலயப்பதிப்பில், “பின்னர் உமது தேஹத்தில் பிரகாசித்துக் கொண்டிருந்தவையும், அரக்கனால் தூக்கிக் கொண்டு போகப்படும் உம்மால் எந்த நகை வகைகள் பூமியில் கழற்றி எறியப்பட்டனவோ அவைகள் எல்லாவற்றையும் வானரவீரர்கள் பரமானந்தம் கொண்டவர்களாய் எடுத்துக் கொண்டுவந்து ஸ்ரீராமருக்கு முன் வைத்தார்கள்; உங்களது போய்ச் சேர்ந்த இடத்தையோவெனில் தெரியாதிருந்தார்கள். அவர் பிரக்ஞையற்றிருக்கையில் ஸ்ரீராமருக்கு கணீரென்று ஒலி செய்து கொண்டு கீழே சிதறியவைகளாய் என்னாலும் பொறுக்கி வைக்கப்பட்ட அவைகளும் ஆதீனமாக்கப்பட்டன” என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், “அனந்தரம், ராக்ஷஸன் உன்னைக் கொண்டு போகும்பொழுது நீ உன் அவயவங்களில் ப்ரகாசித்துக் கொண்டிருந்த சில ஆபரணங்களைக் கழற்றித் தரையில் போகட்டனையே! அவற்றையெல்லாம் வானரயூதபதிகள் கொண்டு வந்து மிகுதியும் ஸந்தோஷத்துடன் ராமனுக்குக் காண்பித்தனர்; அன்றி உன் போக்கிடம் அவர்களுக்குத் தெரியாதாகையால் அதை மொழிந்திலர். அவ்வாபரணங்கள் முன்பு ஆகாயத்தினின்று கலகலவென்று சப்தித்துக் கொண்டு விழுந்து சிதறும்பொழுது அவற்றை நானே எடுத்துக் கொண்டு வந்தனன். அவற்றை ஸுக்ரீவன் ராமனுக்குக் கொடுக்கையில், அவன் அவற்றைக் கண்டு துக்கத்தினால் ப்ரஜ்ஞை தவறப்பெற்று மூர்ச்சை அடைந்தனன்” என்றிருக்கிறது. கோரக்பூர் கீதா பிரஸ் தமிழ்ப்பதிப்பில், “பின்னர், ராட்சஸனால் அபகரித்துச் செல்லப்பட்டபோது, உங்கள் உடலிலிருந்து பூமியில் கழற்றி எறியப்பட்ட அணிகலன்கள் அனைத்தையும், வானர வீரர்கள் கொண்டு வந்து மகிழ்ச்சியுடன் இராமனுக்குக் காட்டினார்கள். ஆனால், உங்களைப் பற்றிய வேறு விவரங்கள் எதுவும் தெரியவில்லை. நீங்கள் கழற்றி எறிந்தவுடன், அந்த அணிகலன்கள், “ணங்”, “ணங்” என்று உரசிக் கொண்டு கீழே சிதறி விழுந்தன; அவைகளை நானே பொறுக்கிக் கொண்டு வந்தேன். (அவைகளைக் கண்டதும்) அவர் (இராமன்) மன உறுதியை இழந்தார்” என்றிருக்கிறது.
ஆரியையே, உன்னைக் காணாத அந்த ராகவர், அக்னியுடன் மஹத்தாக ஜொலிக்கும் ஓர் அக்னிபர்வதத்தை {எரிமலையைப்} போல நித்தியம் பரிதபித்துக் கொண்டிருந்தார்.(44) மஹாத்மாவான அந்த ராகவர், எரியும் வீட்டிலுள்ள அக்னியைப் போல, உனக்கான சோக சிந்தனையில் தகித்தவாறே நித்திரையில்லாமல் இருந்தார்.(45) இராகவர், உன்னைக் காணாத சோகத்தால, மஹத்தான பூகம்பத்தில் மஹாசைலத்தைப் போல நடுங்கிக் கொண்டிருந்தார்.(46) நிருபாத்மஜே, உன்னைக் காணாமல் ரம்மியமான கானகங்களிலும், நதிகளிலும், பிரஸ்ரவணங்களிலும் {அருவிகளிலும்} திரிந்தும் இன்பத்தைக் காணாமல் இருக்கிறார்.(47) ஜனகாத்மஜே, மனுஜசார்தூலரான அந்த ராகவர் {மனிதர்களில் புலியான அந்த ராமர்}, மித்ரபந்துக்களுடன் கூடிய ராவணனைக் கொன்று, சீக்கிரமே உன்னை அடைவார்.(48)
இராமசுக்ரீவர்கள் இருவரும் ஒன்றுகூடியபோதே, வாலியைக் கொல்வதற்கும், அப்படியே உன்னைத் தேடிக்கண்டுபிடிப்பதற்கும் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.(49) வீரர்களான அந்தக் குமாரர்கள் {இளவரசர்களான ராமலக்ஷ்மணர்கள்} இருவரும், கிஷ்கிந்தையை அடைந்த பிறகு, ஹரீஷ்வரரான அந்த வாலி யுத்தத்தில் வீழ்த்தப்பட்டார்.(50) இராமர் போரில் வாலியை விரைவாகக் கொன்ற பிறகு, சுக்ரீவரை சர்வரிக்ஷஹரிசங்கத்தினரின் பதியாக்கினர் {கரடி, குரங்குக் கூட்டத்தினர் அனைவரின் தலைவராக்கினர்}.(51) தேவி, இப்படியே ராமசுக்ரீவருக்குள் ஓர் ஐக்கியம் ஏற்பட்டது. அவ்விருவரின் தூதனாகவே இங்கே வந்திருக்கும் ஹனுமந்தனாக என்னை அறிவாயாக.(52) ஸ்வராஜ்ஜியத்தை அடைந்த சுக்ரீவர், மஹாபலம் பொருந்திய ஹரீஷ்வரர்களை {குரங்குத் தலைவர்களை} அழைத்து, உன் அர்த்தத்திற்காக {உன்னைத் தேடும் நிமித்தமாகப்} பத்து திசைகளிலும் அனுப்பி வைத்தார்.(53) மஹௌஜஸரும் {பெரும் வலிமைமிக்கவரும்}, வானரேந்திரருமான சுக்ரீவரின் ஆணையின்படியே, அத்ரிராஜனுக்கு ஒப்பானவர்கள் மஹீயெங்கும் புறப்பட்டுச் சென்றனர் {மலைகளின் அரசனான இமயத்துக்கு ஒப்பான குரங்குகள் பூமியெங்கும் புறப்பட்டுச் சென்றனர்}.(54) பிறகு, சுக்ரீவரின் வசனத்தை நிறைவேற்றுபவர்களான அத்தகைய நாங்களும், பிற வானரர்களும், {உன்னைத்} தேடியபடியே, வசுதை {பூமி} முழுவதும் சுற்றுகிறோம்.(55)
இலக்ஷ்மீவானும், மஹாபலவானும், வாலியின் மகனும், அங்கதன் என்ற பெயரைக் கொண்டவனுமான ஹரிசார்தூலன் {குரங்குகளில் புலி} மூன்றில் ஒரு பாகத்தினருடன் புறப்பட்டுச் சென்றான்.(56) சிறந்த பர்வதமான விந்தியத்தில் பாதை தொலைந்தவர்களும் {வழிதவறியவர்களும்}, துக்கத்தில் நிறைந்தவர்களுமான எங்களுக்குப் பல ராத்திரிகளும், பகல்களும் கடந்து சென்றன.(57) கால வரம்பை மீறியவர்களும், காரியத்தில் நிராசை கொண்டவர்களுமான அத்தகைய நாங்கள், கபிராஜரிடம் {சுக்ரீவரிடம்} கொண்ட பயத்தால், பிராணன்களைக் கைவிடும் தீர்மானத்தை அடைந்தோம்.(58) வனதுர்க்கங்களிலும், கிரி பிரஸ்ரவணங்களிலும் {அடைதற்கரிய காடுகளிலும், மலைகளிலும், அருவிகளிலும்} தேடியும் தேவியின் பதத்தை {சீதாதேவியான நீ இருக்குமிடத்தை} அடைய முடியாத நாங்கள், பிராணன்களைக் கைவிட ஆயத்தமானோம்.(59) வைதேஹி, பிராயோபவேசத்தில் {பட்டினி கிடந்து உயிரைத் துறக்க ஒருப்பட்ட மனத்துடன்} அமர்ந்திருக்கும் வானரபுங்கவர்கள் அனைவரையும் கண்டு சோகார்ணவத்தில் {சோகக்கடலில்} பெரிதும் மூழ்கிய அங்கதன், உன் நாசத்தையும், அப்படியே வாலியின் வதத்தையும், ஜடாயுவின் மரணத்தையும், எங்கள் பிராயோபவேசத்தையும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தான்.(60,61) ஸ்வாமியின் சந்தேசத்தில் நிராசையுடன் கூடியவர்களும் {தலைவர் சுக்ரீவரின் ஆணையை நிறைவேற்றுவதில் நம்பிக்கையிழந்தவர்களும்}, உயிரிழக்க விரும்பியவர்களுமான அத்தகைய எங்களின் காரியத்திற்கெனவே {வந்ததைப்} போல மஹாவீரியவானான சகுனி {பறவையானவர், அங்கே} வந்தார்.(62)
கிருத்ரராஜாவின் சோதரனும் {கழுகரசர் ஜடாயுவின் சகோதரனும்}, சம்பாதி என்ற பெயரைக் கொண்டவருமான அந்த கிருத்ரராஜா {கழுகரசன்}, பிராதாவின் {உடன்பிறந்தானின்} வதத்தைக் கேட்டுக் கோபத்துடன் இந்த வசனத்தைச் சொன்னார்:(63) “வானரோத்தமர்களே, என்னுடன் பிறந்த இளையவன் {என் தம்பி ஜடாயு} எவனால் கொல்லப்பட்டான்? எங்கே வீழ்த்தப்பட்டான்? இதையே நீங்கள் சொல்ல வேண்டுமென விரும்புகிறேன்” {என்றார் சம்பாதி}.(64)
பீம ரூபங்கொண்ட ராக்ஷசன், உன்னை உத்தேசித்து, ஜனஸ்தானத்தில் அந்த மஹானை {ஜடாயுவை} எப்படி வதம் செய்தானோ, அப்படியே அவரிடம் {சம்பாதியிடம்} அங்கதன் சொன்னான்.(65) சிறந்த இடையைக் கொண்டவளே, ஜடாயுவின் வதத்தைக் கேட்டு துக்கமடைந்த அந்த அருணாத்மஜர் {அருணனின் மகன் சம்பாதி}, நீ ராவணனின் ஆலயத்தில் இருப்பதாகச் சொன்னார்.(66) பிரீதியை அதிகரிக்கும் அந்த சம்பாதியின் அந்த வசனத்தைக் கேட்ட நாங்கள், அங்கதனை முன்னிட்டுக் கொண்டு துரிதமாக அங்கிருந்து புறப்பட்டோம்.(67) பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்கள்} பெரும் மகிழ்ச்சியையும், நிறைவையும் அடைந்தனர். உன்னைக் காணப் போவதில் உற்சாகம் அடைந்து, விந்தியத்தில் {விந்திய மலையில்} இருந்து எழுந்து, சாகரத்தின் உத்தர அந்தத்தை {பெருங்கடலின் வடகரையை} அடைந்தனர்.(68) உன்னைக் காணும் உற்சாகத்துடன் அங்கதனை முன்னிட்டுக் கொண்டு வேலோபாந்தத்தை {கடற்கரையை} அடைந்த அனைவரும் மீண்டும் பீதியடைந்து சிந்தனையில் ஆழ்ந்தனர்.(69) அப்போது சாகரத்தைப் பார்த்த நான், துயரத்தில் இருக்கும் ஹரிசைனியத்தின் {குரங்குப் படையின்} தீவிர பயத்தைப் போக்கும் வகையில், நூறு யோஜனைகளைத் தாண்டினேன்[5].(70)
[5] 5:31:15ல் அமைந்த வாக்கியத்திற்குக் கொடுக்கப்பட்டிருக்கும் [2]ம் அடிக்குறிப்பை மீண்டும் காண்க.
இராக்ஷசர்களால் நிறைந்த லங்கையிலும் ராத்திரியில் நான் பிரவேசித்தேன்; இராவணனையும், சோகத்தில் மூழ்கியிருக்கும் உன்னையும் நான் கண்டேன்.(71) தேவி, அநிந்திதே {நிந்திக்கத்தகாதவளே}, இவை யாவையும் எப்படி நடந்தனவோ அப்படியே உன்னிடம் சொல்லியிருக்கிறேன். தாசரதியின் {தசரதரின் மகனான ராமரின்} தூதன் நான். என்னிடம் பேசுவாயாக.(72) தேவி, ராமரின் உத்யோகத்தைச் செய்பவனாகவும், உன் நிமித்தமாக இங்கே வந்திருக்கும் சுக்ரீவரின் அமைச்சனாகவும், பவனாத்மஜனாகவும் {வாயுமைந்தனாகவும்} என்னை அறிவாயாக.(73) சஸ்திரங்கள் தரிப்பவர்கள் அனைவரிலும் சிறந்தவரான உன்னுடைய காகுத்ஸ்தரும் {ராமரும்}, குரு ஆராதனையில் {பெரியோருக்குத் தொண்டாற்றுவதில்} ஈடுபடுபவரும், நல்ல லக்ஷணங்களைக் கொண்டவருமான லக்ஷ்மணரும் குசலமாக {நலமாக} இருக்கிறார்கள்.(74)
தேவி, வீரியவானும், உன்னுடைய பர்த்தாவுமான அவருடைய {ராமரின்} ஹிதத்தை விரும்பும் நான், சுக்ரீவரின் வசனத்தின் பேரில் ஏகனாக {தனியாக} இங்கே வந்திருக்கிறேன்.(75) காமரூபியான நான் {விரும்பிய வடிவை ஏற்கவல்லவனான நான்}, உன்னைத் தேடும் விஷயத்தில் உதவியேதும் இல்லாமல், தனியாகத் திரிந்து, இந்த தக்ஷிணதிக்கை {தென்திசையை} அடைந்தேன்.(76) அதிஷ்டவசத்தால் உனது தரிசனம் கிட்டியதைச் சொல்லி, உன் நாசத்தால் புலம்பிக் கொண்டிருக்கும் ஹரிசைனியத்தினரின் சந்தாபத்தை நான் போக்கப் போகிறேன்.(77) தேவி, அதிஷ்டவசத்தாலேயே என் சாகர லங்கனம் வியர்த்தமாகவில்லை {நான் கடலைத் தாண்டியது வீணாகவில்லை}. அதிஷ்டவசத்தாலேயே உன்னை தரிசனம் செய்யும் இந்தப் புகழை நான் அடையப் போகிறேன்.(78) மஹாவீரியரான ராகவர், மித்ரபந்துக்களுடன் கூடிய ராக்ஷசாதிபன் ராவணனைக் கொன்று, உன்னை சீக்கிரமே மீட்டுக் கொள்ளப் போகிறார்.(79)
வைதேஹி, கிரிகளில் உத்தமமானதும், மால்யவான் {கௌரஜம்}[6] என்ற பெயரைக் கொண்டதுமான கிரி இருக்கிறது. கேசரி என்ற ஹரியானவர் {குரங்கானவர்} அங்கிருந்து கோகர்ண பர்வதத்திற்குச் சென்றார்.(80) என் பிதாவான அந்த மஹாகபியானவர் {கேசரி}, தேவரிஷிகளின் ஆணையின் பேரில், நதீபதியின் {கடற்கரை அருகிலுள்ள} புண்ணிய தீர்த்தத்தில், {அசுரன்} சம்பசாதனனைக் கொன்றார்[7].(81) மைதிலி, வாதத்தால் {வாயுதேவன் மூலம்} அந்த ஹரியானவரின் க்ஷேத்திரத்திலேயே {கேசரியின் மனைவிக்கே} நான் பிறந்தேன். என் சொந்த கர்மத்தாலேயே {நான் செய்த செயலாலேயே} உலகத்தில் நான் ஹனுமான் என்று அறியப்படுகிறேன்.(82) வைதேஹி, விசுவாச அர்த்தத்திற்காகவே பர்த்தாவின் குணங்கள் {உனக்கு நம்பிக்கை ஊட்டுவதற்காகவே உன் கணவர் ராமரின் குணங்கள்} என்னால் சொல்லப்பட்டன. குற்றமற்ற தேவி, சீக்கிரமே ராகவர் இங்கிருந்து உன்னை அழைத்துச் செல்வார்” {என்றான் ஹனுமான்}.(83)
[6] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “இங்கே குறிப்பிடப்படும் மலை வெவ்வேறு பதிப்புகளில் வெவ்வேறு பெயரில் சொல்லப்படுகிறது. செம்பதிப்பு “கௌரஜம்” என்பதைப் பயன்படுத்துகிறது” என்றிருக்கிறது.
[7] பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், “சம்பசாதனன் என்ற பெயருடைய அசுரனும் கடற்கரையில் இருந்தான், கோகர்ணம் என்ற பெயருடைய தீர்த்தமும் கடற்கரையில் இருந்தது. அதன்பிறகே {சம்பசாதனனைக் கொன்ற பிறகே} கேசரிக்கு மகன் பிறப்பதற்கான வரமளிக்கப்பட்டது” என்றிருக்கிறது.
சோகத்தில் மெலிந்தவளான சீதை, இவ்வாறு ஹேதுவான காரணங்களாலும், போதுமான அடையாளங்களாலும் விசுவாசமடைந்து {நம்பிக்கையடைந்து}, தூதனாக அவனை அடையாளங்கண்டு கொண்டாள்.(84) ஒப்பற்ற மகிழ்ச்சியடைந்த ஜானகி, வளைந்த இமைகளுடன் கூடிய நேத்திரங்களில் {கண்களில்} இருந்து ஆனந்தத்தில் பிறந்த ஜலத்தை {கண்ணீரை} வடித்தாள்.(85) அகன்ற, அழகிய, வெண்மையான கண்களில் ஓரம் சிவந்தவளான அந்த விசாலாக்ஷியின் அந்த வதனம், ராகுவிடமிருந்து விடுபட்ட உடுராட்டை {நக்ஷத்திரங்களின் மன்னனான சந்திரனைப்} போல சோபித்தது.(86)
ஹனுமந்தனைத் கபியென்று அவள் நினைத்தாளேயன்றி மாறாக இல்லை என்பது வியக்தமானது {தெளிவானது / வெளிப்படையானது}. அப்போது ஹனூமான், பிரியதரிசனந்தரும் அவளிடம் மேலும் {பின்வருமாறு} சொன்னான்:(87) “மைதிலி, உனக்குச் சொல்லப்பட்ட இவை யாவற்றையும் கொண்டு ஆசுவாசமடைவாயாக. நான் என்ன செய்ய வேண்டும்? அல்லது உன் விருப்பம் எப்படி? நான் திரும்பிச் செல்லப் போகிறேன்.(88) மைதிலி, மஹாரிஷிகளின் தூண்டுதலின் பேரில் கபிவீரரால் {கேசரியால்} போரில் அசுரன் சம்பசாதனன் கொல்லப்பட்டான். வாயுவின் பிரபவத்தால் வானரனான {வாயுவை ஆதாரமாகக் கொண்டு வானரனாகப் பிறந்த} நான், பிரபாவத்தில் {ஆற்றலில்} அவருக்கே ஒப்பானவனாவேன்” {என்றான் ஹனுமான்}.(89)
சுந்தர காண்டம் சர்க்கம் – 35ல் உள்ள சுலோகங்கள்: 89
Previous | | Sanskrit | | English | | Next |