Lanka attained | Sundara-Kanda-Sarga-01 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: சாரணர்களின் பாதையில் பயணித்த ஹனுமான்; மைனாக மலையுடன் பேசியது; தடையேற்படுத்திய சுரசையும், சிம்ஹிகையும்; பெருங்கடலைக் கடந்து, லங்கையை அடைந்த ஹனுமான்...
This picture was generated using Artificial Intelligence in Bing website | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கப்பட்ட படம் |
பிறகு அந்த சத்ருகர்ஷனன் {பகைவரை அழிப்பவனான ஹனுமான்}, ராவணனால் கொண்டு செல்லப்பட்ட சீதை இருக்கும் இடத்தைத் தேட, சாரணர்கள் சஞ்சரிக்கும் பாதையில் செல்ல விரும்பினான்.(1) செய்வதற்கரிய நிகரில்லா கர்மத்தைத் தடைகளேதுமின்றி செய்ய விரும்பிய அந்த வானரன், தலையையும், கழுத்தையும் உயர்த்திக் கொண்டு, கவாம்பதியை {பசுவின் தலைவனான காளையைப்} போலக் காட்சியளித்தான்.(2) பிறகு, மஹாபலவானான அந்த தீரன், குளிர்ந்த நீரை ஒத்த வைடூரிய வர்ணப் புல்வெளிகளில் சுகமாகத் திரிந்து கொண்டிருந்தான்.(3) அந்த மதிமிக்கவன் {ஹனுமான்}, பறவைகளை அச்சுறுத்திக் கொண்டும், தன் மார்பால் மரங்களை சாய்த்தும், பல மிருகங்களை உதைத்தபடியும் கேசரியை {சிங்கத்தைப்} போல் நடந்து கொண்டிருந்தான்.(4)
கருப்பு, வெள்ளை, நீலம், லோகிதம் {சிவப்பு}, மஞ்சள், மற்றும் இலை வர்ணங்களில் இயல்பாக அமைந்திருக்கும் தாதுக்களால் அலங்கரிக்கப்பட்டதும்,{5} காமரூபிகளும் {விரும்பிய வடிவம் ஏற்கவல்லவர்களும்}, குடும்பத்துடன் கூடியவர்களுமான யக்ஷர்கள், கின்னரர்கள், கந்தர்வர்களாலும், தேவர்களையொத்த பன்னகர்களாலும் {தெய்வீகப் பாம்புகளாலும்} நிறைந்ததும்,{6} சிறந்த நாகங்களை {யானைகளைக்} கொண்டதுமான அந்த கிரிவரத்தலத்தில் {சிறந்த மலையின் அடியில்}, அந்தக் கபிவரன் {சிறந்த குரங்கான ஹனுமான்}, ஹிரதத்தில் உள்ள நாகத்தை {மடுவில் உள்ள யானையைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(5,6,7)
அவன், சூரியனுக்கும், மஹேந்திரனுக்கும், பவனனுக்கும் {வாயுவுக்கும்}[1], ஸ்வயம்புவுக்கும் {பிரம்மனுக்கும்}, பூதங்களுக்கும் அஞ்சலி செலுத்திவிட்டு, புறப்படுவதில் தன் மதியைச் செலுத்தினான்.(8) கிழக்கு முகமாக நின்று, தன் பிறப்புக்குப் பொறுப்பான பவனனுக்கு {வாயு தேவனுக்கு} அஞ்சலி செலுத்தியபிறகு, தக்ஷிண {தென்} திசையில் செல்ல தன்னைப் பெருக்கிக் கொண்டான்.(9) சிறந்த பிலவங்கமர்கள் {தாவிச் செல்பவர்களில் சிறந்தவர்கள்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே, தாவுவதற்கு நிச்சயம் செய்து கொண்டு, ராமனின் வெற்றிக்காக, பர்வகால {அமாவசை, பௌர்ணமி கால} சமுத்ரத்தைப் போலப் பெருகினான்.(10)
[1] மன்மதநாததத்தர் பதிப்பில் இந்த இடத்தில் "காற்று" என்று மொழிபெயர்த்துவிட்டு, அதன் அடிக்குறிப்பில், "பவனன் என்றால், சிந்திப்பவர்களுக்கு அறிவைப் புகட்டுவதன் மூலம், அவர்களைத் தூய்மைப்படுத்துபவன் என்று பொருள்" என்றிருக்கிறது. இந்தச் சொல்லும், பொருளும் வாயு தேவனைக் குறிப்பன.
அளவிடமுடியாத பிரமாணமுள்ள சரீரத்துடன் பெருங்கடலைத் தாண்ட விரும்பி, பர்வதத்தை {மலையைத்} தன் கைகளாலும், கால்களாலும் அழுத்தினான்.(11) கபியால் பீடிக்கப்பட்ட அந்த அசலம் {மலை}, ஒரு முஹூர்த்தம் சலசலத்ததில், புஷ்பித்த உச்சிகளைக் கொண்ட மரங்கள், தங்கள் புஷ்பங்கள் அனைத்தையும் உதிர்த்தன.(12) அந்த மரங்கள் உதிர்த்த சுகந்தமான புஷ்பக்கொத்துகளால் மறைக்கப்பட்ட சைலம் {மலை}, {மலர்த்தோட்டம் போல} சர்வம் புஷ்பமயமாகக் காட்சியளித்தது.(13) அந்தப் பர்வதம், அந்த உத்தம வீரனால் பீடிக்கப்பட்டு, மதங்கொண்ட யானையின் மதத்தைப் போல நீரைப் பெருக்கியது.(14) அந்த பலவானால் {ஹனுமானால்} பீடிக்கப்பட்ட மஹேந்திர பர்வதத்தில்[2] காஞ்சனம் {தங்கம்}, அஞ்சனம் {மை}, வெள்ளி ஆகியவற்றின் ரேகைகள் வெளிப்பட்டன.(15) அந்த சைலம், மத்திமத் தழல்களுடன் கூடிய அனலனின் தூமராஜியை {நெருப்பின் புகைத் தூண்களைப்} போலப் பாறைகளையும், விசாலமான கந்தகப் பாறைகளையும் உதிர்த்தது.(16)
[2] இது தமிழகத்தில் உள்ள மலய மலைத்தொடரில் உள்ள தெக்குமலைச் சிகரம் என்று நம்பப்படுகிறது
குகைகளில் வாழும் பூதங்கள் {உயிரினங்கள், ஹனுமானால்} பீடிக்கப்பட்ட கிரியால், அனைத்துப் பக்கங்களிலும் பீடிக்கப்பட்டுப் பரிதாபக் குரல்களில் கதறின.(17) சைலம் பீடிக்கப்பட்டதால் உண்டான அந்த மஹத்தான நாதம், பிருத்வியையும், திசைகளையும், உபவனங்களையும் {தோப்புகளையும்} நிறைத்தது.(18) தெளிவான ஸ்வஸ்திக லக்ஷணையுடன் கூடிய சர்ப்பங்கள், தங்கள் பெருந்தலைகளில் இருந்து கோரமான பாவகத்தை {நெருப்பைக்} கக்கியபடியே, பற்களால் பாறைகளைக் கடித்தன.(19) கோபத்துடனும், நஞ்சுடனும் கூடிய அவற்றால் கடிக்கப்பட்டபோது, நெருப்பால் பற்றப்பட்டு எரிந்த பெரும்பாறைகள், ஆயிரந்துண்டுகளாகப் பிளந்து விழுந்தன.(20) அந்தப் பர்வதத்தில் வளர்ந்த ஔஷதஜாலங்கள் {மூலிகை வரிசைகள்}, விஷத்தை முறிக்கக்கூடியவையாக இருந்தாலும், அந்த நாகங்களின் விஷத்தை முறிக்கும் சக்தியற்றவையாகின.(21)
தபஸ்விகள், “இந்த கிரியை பூதங்கள் பிளக்கின்றன” என்று நினைத்து பயந்தோடினார்கள். வித்யாதரர்களும் அவ்வாறே அச்சமடைந்தவர்களாக ஸ்திரீகணங்களுடன் {தங்கள் பெண்களுடன்} சேர்ந்து,{22} பானபூமியில் {மது பருகிக் கொண்டிருந்த இடத்தில்} தங்கத்தாலான மதுக்குடங்கள், பாத்திரங்கள், பொன்வண்ணத்திலான குடுவைகள்,{23} உயர்தரமான லேகியங்கள் {துவையல்கள்}, பக்ஷணங்கள், விதவிதமான மாமிசங்கள், எருதுத் தோல்களாலான கேடயங்கள், தங்கக் கைப்பிடியுடன் கூடிய கட்கங்கள் {வாள்கள்} ஆகியவற்றை விட்டுவிட்டு பயந்தோடினர்.(22-24) சிவந்த மாலைகளைக் கழுத்தில் சூடியிருந்தவர்களும், மேனியில் சந்தனம் பூசியிருந்தவர்களும், தாமரை போன்ற கண்களைக் கொண்டவர்களும், குடிவெறியால் கண்கள் சிவந்தவர்களுமான அவர்கள் ககனத்திற்கு {வானத்திற்குத்} திரும்பிச் சென்றனர்.(25) ஹாரம், நூபுரம் {சிலம்பு}, கேயூரம் {தோள்வளை}, பாரிஹாரம் {கைவளை}[3] ஆகியவற்றைத் தரித்திருந்த ஸ்திரீகள், ஆச்சரியப் புன்னகையுடன் ரமணர்கள் {தங்கள் காதலர்கள்} சகிதராக ஆகாசத்தில் நின்று கொண்டிருந்தனர்.(26) வித்யாதரர்களும், மஹரிஷிகளும், தங்கள் மஹாவித்யையை வெளிப்படுத்தும் வகையில் ஆகாசத்தில் ஒன்றாக நின்று கொண்டு அந்தப் பர்வதத்தைப் பார்த்தனர்.(27)
[3] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "பாரிஹாரம் என்பதற்கு கட்கர், "சிறப்பு" என்று பொருள் கொள்கிறார். தீர்த்தரோ, "கைவளை" என்று பொருள் கொள்கிறார். நான் தீர்த்தரையே பின்பற்றுகிறேன்" என்றிருக்கிறது.
அப்போது {அந்த வித்தியாதரர்களும் ரிஷிகளும்}, விமல அம்பரத்தில் {தெளிந்த வானில்} வசித்திருக்கும் தூய ஆத்மாக்களான சாரணர்கள், சித்தர்கள் மற்றும் ரிஷிகளின் {பின்வரும்} சப்தத்தைக் கேட்டனர்:(28) “பர்வதசங்காசனும், மாருதாத்மஜனுமான {மலைக்கு ஒப்பானவனும், வாயுவின் மைந்தனுமான} இந்த ஹனுமான், மகராலயமான {முதலைகள், சுறாக்களின் வசிப்பிடமான} சமுத்திரத்தை மஹாவேகத்துடன் கடக்க விரும்புகிறான்.(29) இராமனின் அர்த்தத்திற்காகவும், வானரர்களின் அர்த்தத்திற்காகவும் செயற்கரிய கர்மத்தைச் செய்யத் தீர்மானித்து, அடைவதற்கரிய சமுத்திர மறு கரையை அடைய விரும்புகிறான்” {என்றனர்}.(30)
இவ்வாறான அந்த மஹாத்மாக்களின் வார்த்தைகளைக் கேட்ட வித்யாதரர்கள், ஒப்பற்றவனான அந்த வானரரிஷபனைப் பர்வதத்தில் கண்டனர்.(31) அசலத்திற்கு ஒப்பானவன் {மலைக்கு ஒப்பான ஹனுமான்}, மயிர்சிலிர்ப்பை உண்டாக்கும் வகையில் குலுங்கி, பெரும் மேகத்தைப் போல மஹத்தான நாதம் செய்தான்.(32)
குதிக்கும் முன், பக்ஷிராஜா உரகத்தை {பறவையரசான கருடன் பாம்பைச் சுழற்றி வீசுவதைப்} போல, மயிரால் மறைந்திருக்கும் தன் லாங்கூலத்தை {வாலை} மேலும், கீழுமாகச் சுழற்றி உதறினான்.(33) வேகத்தை அடைந்த அவனது வாலானது, கருடனால் அபகரிக்கப்பட்ட மஹா உரகத்தைப் போல முதுகில் சுருண்டு காணப்பட்டது.(34) கபியானவன் {அந்தக் குரங்கானவன்}, மஹாபரிகங்களுக்கு ஒப்பான கைகளை ஊன்றி, இடையை குறுக்கி, சரணங்களை {கால்களை} அழுத்தினான்.(35) ஸ்ரீமானும், வீரியவானுமான அவன் {ஹனுமான்}, தோள்களையும், கழுத்தையும் வளைத்துச் சுருக்கி, தேஜஸ், வலிமை, வீரியம் ஆகியவற்றைப் பெருக்கினான்.(36) கண்களை மேலுருட்டி, தூரத்திலிருந்து மார்க்கத்தைக் கண்டு, ஆகாசத்தை நோக்கி, பிராணனை ஹிருதயத்தில் அடக்கினான்.(37)
கபிகுஞ்சரனும் {குரங்குகளில் யானையும்}, மஹாபலவானும், வானரசிரேஷ்டனுமான {வானரர்களில் சிறந்தவனுமான} அந்த ஹனுமான், குதிக்கும் முன், பாதங்களை திடமாக ஊன்றிக் கொண்டு, காதுகளை வளைத்து, வானரர்களிடம் இந்த வசனத்தைச் சொன்னான்:(38) “இராகவர் விடும் சரம், காற்றின் வேகத்தில் எப்படி செல்லுமோ, அப்படியே ராவணனால் பாலிதம் செய்யப்படும் லங்கைக்குச் செல்வேன்.{39} இலங்கையில் அந்த ஜனகாத்மஜையை {ஜனகரின் மகளான சீதையைப்} பார்க்காவிட்டால், அதே வேகத்தில் ஸுராலயத்திற்கு {தேவர்களின் வசிப்பிடத்திற்குச்} செல்வேன்.{40} திரிதிவத்திலும் {சொர்க்கத்திலும்} சீதையைப் பார்க்காவிட்டால், சிரமமேதுமின்றி ராக்ஷசராஜாவான ராவணனைப் பிடித்துக்கட்டிக் கொண்டுவருவேன்.{41} எவ்வகையிலேனும் காரியம் நிறைவேறியவனாக, சீதையுடன் திரும்பிவருவேன். அல்லது, ராவணனுடன் கூடிய லங்கையை அடியோடு பெயர்த்துக் கொண்டு வருவேன்” {என்றான் ஹனுமான்}.(39-42)
வானரோத்தமனான ஹனுமான், வானரர்களிடம் இவ்வாறே சொன்னான்.{43} சுபர்ணனை {கருடனைப்} போலத் தன்னைக் கருதியவனும், மஹாவேகவானுமான அந்த கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான ஹனுமான்}, சிந்திக்காமல் வேகமாகத் துள்ளிக் குதித்தான்.(43,44) அவன், வேகத்துடன் குதித்து ஏறியபோது, அந்த மலையில் முளைத்த மரங்கள் யாவும், கிளைகள் அனைத்தையும் இழுத்துக் கொண்டு மேலெழுந்தன.(45) அவன், புஷ்பங்களுடன் ஒளிர்ந்த மரங்களைத் தன் தொடைகளின் வேகத்தால் தன்னுடன் இழுத்துக் கொண்டு, மதங்கொண்ட நாரைகளுடன் அம்பரத்தில் {வானத்தில்} உயர்ந்து சென்றான்.(46) தொடைகளின் வேகத்தால் எழுந்த விருக்ஷங்கள், தீர்க்கமார்க்கத்தில் {நீண்ட வழியில்} புறப்பட்டுச் செல்லும் பந்துவை {உறவினரைப் பின்தொடர்ந்து செல்லும் மற்றொரு} பந்துவைப் போல[4] ஒரு முஹூர்த்தம் அந்தக் கபியை {குரங்கான ஹனுமானைப்} பின்தொடர்ந்து சென்றன.(47) தொடைகளின் வேகத்தால் எழுந்த சாலங்களும், வேறு உத்தம மரங்களும், மஹீபதியை {பின்தொடர்ந்து செல்லும்} சைனியத்தைப் போல ஹனூமந்தனைப் பின்தொடர்ந்து சென்றன.(48) கபியான ஹனுமான், புஷ்பித்த உச்சிகளைக் கொண்ட மரங்களால் சூழப்பட்ட பர்வதத்தின் தோற்றத்தில் அற்புத தரிசனத்தை அளித்தான் {அற்புதமாகக் காட்சியளித்தான்}.(49) அதன் பிறகு, சாரம் நிறைந்தவையான விருக்ஷங்கள், மஹேந்திரனிடம் கொண்ட பயத்தால் வருணாலயத்தில் {மூழ்கிய} பர்வதங்களைப் போல உப்புநீரில் மூழ்கின.(50)
[4] “நெடுந்தூரம் செல்லும் உறவினரைச் சிறிது தூரம் பின்தொடர்ந்து செல்லும் மற்றொரு உறவினரைப் போல அந்த மரங்கள் ஹனுமானைப் பின்தொடர்ந்து சென்றன” என்பது பொருள்.
மேகத்திற்கு இணையான அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, நானாவிதமான மலர்களாலும், மொட்டுக்களாலும், தளிர்களாலும் மறைக்கப்பட்டவனாக, விட்டிற்பூச்சிகளுடன் கூடிய பர்வதத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(51) அவனது வேகத்தால் விடுபட்ட அந்த மரங்கள், புஷ்பங்களை உதிர்த்து, நண்பர்கள் திரும்பிச் செல்வதைப் போல நீரில் விழுந்தன.(52) வாயுவால் இயக்கப்பட்ட அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, விதவிதமான புஷ்பங்களுடன் கூடிய விசித்திரமான {பல வண்ணங்களிலான} மரங்களை சாகரத்தில் விழச்செய்தபோது, தாரைகளால் நிறைந்த ஆகாசத்தைப் போல மஹார்ணவமும் {பெருங்கடலும்} ஒளிர்ந்தது.(53,54அ) நானாவித வர்ணங்களிலான புஷ்பங்களுடன் கூடிய அந்த வானரன், மின்னல்களால் அலங்கரிக்கப்பட்ட வானத்து மேகத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(54ஆ,இ) அவனது வேகத்தால் விழுந்த புஷ்பங்களுடன் கூடிய நீரானது, காண்பதற்கினிய தாரைகள் உதிக்கும் அம்பரத்தை {வானத்தைப்} போல தென்பட்டது.(55,56அ) அந்த அம்பரத்தில் உள்ளவனின் விரிந்த கைகள், பர்வதத்தின் உச்சியில் இருந்து வெளிப்படும் ஐந்து தலை பன்னகத்தை {பாம்பைப்} போலத் தென்பட்டன.(56ஆ,57அ) அலைகளை மாலையாகக் கொண்ட மஹார்ணவத்தை {பெருங்கடலைப்} பருகிவிடுபவனைப் போல அந்த மஹாகபி ஒளிர்ந்தான். ஆகாசத்தையே பருகிவிடுபவனைப் போலவும் தெரிந்தான்.(57ஆ,58அ)
வாயுமார்க்கத்தை அனுசரித்துச் சென்றவனின் நயனங்கள் {கண்கள்}, பர்வதத்தில் ஈரனலன்களை {இரண்டு அக்னிகளைப்} போல, மின்னலின் பிரகாசத்துடன் ஒளிர்ந்து கொண்டிருந்தன[5].(58ஆ,59அ) செம்பழுப்புக் கண்களைக் கொண்டவர்களில் முக்கியமானவனின் {ஹனுமானின்} கண்கள், செம்பழுப்பாகவும், அகலமாகவும், உருண்டையாகவும், உதிக்கும் சந்திர சூரியர்களைப் போலவும் இருந்தன.(59ஆ,60அ) சிவந்த முகத்துடனும், சிவந்த நாசியுடனும் கூடியவன் {ஹனுமான்}, சந்தியின் செம்மையால் தீண்டப்பட்ட சூரிய மண்டலத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(60ஆ,61அ) அம்பரத்தில் {வானத்தில்} மிதந்த வாயுபுத்திரனின் வாலானது, நேராக நிற்கும் சக்ரத்வஜத்தை {இந்திரனின் கொடிமரத்தைப்} போல எழுந்து ஒளிர்ந்து கொண்டிருந்தது.(61ஆ,62அ) மஹானும், வெண்பற்களைக் கொண்டவனும், மஹாபிராஜ்ஞனும் {அனைத்தையும் அறிந்தவனும்}, சக்கர வடிவ வாலால் சூழப்பட்டவனுமான அநிலாத்மஜன் {வாயுவின் மைந்தன் ஹனுமான்}, பாஸ்கரனை {சூரியனைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(62ஆ,63அ) சிவந்து விளங்கும் வாலின் அடிப்பகுதியுடன் கூடிய அந்த மஹாகபி, பிளக்கப்பட்டு, மஹத்தான கைரிக தாதுக்கள் {காவிக் கற்கள்} தெரியும் கிரியைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(63ஆ,64அ) சாகரத்தைத் தாண்டும் அந்த வானர சிம்ஹத்தின் கக்கத்தில் வாயுவானது மேகத்தைப் போல கர்ஜித்துக் கொண்டிருந்தது.(64ஆ,65அ)
[5] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மலையில் இரண்டு நெருப்புகள் என்பது, ஒரு மலையில் உள்ள எரிமலைவாய்கள் இரண்டைக் குறிப்பிடுகிறது. குறைந்தபட்சம் இந்த உரையானது, இலக்கியத்தில் ஒப்புநோக்க அரிதான இந்த பத்திக்கு, அதன் உட்பொருளின் மதிப்பைத் தவறாமல் அளிக்கிறது. இருப்பினும் உரையாசிரியரோ, "காட்டுத்தீ" என்று இந்தச் சொல்லுக்குப் பொருள் கொள்கிறார்" என்றிருக்கிறது.
எப்படி வடக்கு முனையிலிருந்து வானத்தில் பெரும் வேகத்துடன் உல்கங்கள் {விண்கற்கள்} பாய்ந்து வருமோ அப்படியே அந்த கபிகுஞ்சரனும் {குரங்குகளில் யானையான ஹனுமானும்} காணப்பட்டான்.(65ஆ,66அ) பதத்பதங்கனுக்கு {சூரியனுக்கு} ஒப்பானவனும், வேகம் கொண்டவனும், நெடியவனுமான அந்த கபி {குரங்கான ஹனுமான்}, கயிற்றால் கட்டப்படும்போது அளவில் பெருகும் மாதங்கத்தை {யானையைப்} போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(66ஆ,67அ) அப்போது அந்த கபி, மேல் செல்லும் சரீரத்தால் கீழுள்ள சாகரத்தில் நிழலைக் கலந்து, மாருதனால் இயக்கப்படும் ஓடத்தைப் போலத் தெரிந்தான்.(67ஆ,இ)
சமுத்திரத்தின் எந்தெந்த தேசத்தில் அந்த மஹாகபி சென்றானோ, அந்தந்த இடங்கள் அவனது தொடைகளின் வேகத்தால் கலக்கமடைந்து காணப்பட்டன.(68) மஹாவேகமுள்ள அந்தக் கபி, சைலத்தைப் போன்ற உடல் படைத்த சாகரத்தின் அலை ஜாலங்களைத் தன் மார்பால் மோதியபடி பாய்ந்து சென்றான்.(69) பலவானான அந்த கபியினால் உண்டான காற்றும், மேகங்களில் இருந்து வந்த காற்றும் பயங்கரவொலியுடன் சாகரத்தைப் பெரிதும் கலக்கின.(70) அந்தக் கபிசார்தூலன் {குரங்குகளில் புலியான ஹனுமான்}, உப்புநீரின் பெரும் அலைஜாலங்களை இழுத்துச் சென்று, வானத்தையும் பூமியையும் பிரிப்பதைப் போல் பாய்ந்து சென்றான்.(71) அந்த மஹாவேகன், மஹார்ணவத்தில் {பெருங்கடலில்} எழுந்தவையும், மேருவுக்கும், மந்தரத்திற்கும் இணையானவையுமான அலைகளை எண்ணுபவனைப் போலக் கடந்து சென்றான்.(72) அப்படி அவனது வேகத்தால் எழும்பிய நீர்மேகமானது, சரத்கால மேகம் போலப் பரந்து விரிந்து அம்பரத்தில் {வானத்தில்} ஒளிர்ந்து கொண்டிருந்தது.(73)
அப்போது, திமிங்கலங்கள், முதலைகள், மீன்கள், ஆமைகள் ஆகியன, வஸ்திரங்கள் அகன்ற சரீரங்களின் அங்கங்களைப் போலத் திறந்த நிலையில் காணப்பட்டன.(74) பிறகு, சாகரத்தை ஆலயமாகக் கொண்ட புஜகங்கள் {பாம்புகள்} வானில் பாய்ந்து செல்லும் அந்த கபிசார்தூலனைக் கண்டு, “சுபர்ணன் {கருடன்}” என்று நினைத்தன.(75) அந்த வானரசிம்ஹத்தின் {வானரர்களில் சிங்கமான ஹனுமானின்} நிழலானது, பத்து யோஜனை விஸ்தீரணமும், முப்பது யோஜனை நீளமும் கொண்டதாக ஜலத்தில் அழகாகத் தெரிந்தது.(76) வாயுபுத்திரனைப் பின்தொடர்ந்த அந்த நிழல், வெண்மேகங்களின் அடர்த்தியான வரிசை போல, உப்பு நீரில் படர்ந்து பிரகாசித்தது.(77)
அந்த மஹாகபி, மஹாகாயம் {பேருடல்} கொண்ட மஹாதேஜஸ்வி, ஆதாரமில்லாத வாயுமார்க்கத்தில் செல்லும் சிறகுகளுடன் கூடிய பர்வதத்தைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(78) பலவானான அந்த கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான ஹனுமான்}, எந்த மார்க்கத்தில் சென்றானோ, அஃது ஆர்ணவத்தில் {கடலில்} பள்ளம் போல உடனே தோன்றியது.(79) பக்ஷிராஜனை {பறவைகளின் அரசனான கருடனைப்} போல பக்ஷிகளின் பாதையில் சென்ற ஹனுமான், மாருதனைப் போலவே மேகஜாலங்களைத் தன்னுடன் இழுத்துச் சென்றான்.(80) வெள்ளை, சிவப்பு, நீலம், மஞ்சள் போன்ற வர்ணங்களில் ஒளிர்ந்து கொண்டிருந்த பெரும் மேகங்கள், அந்தக் கபியால் {குரங்கான ஹனுமானால்} இழுத்துச் செல்லப்பட்டன.(81) மேகஜாலங்களுக்குள் மீண்டும் மீண்டும் பிரவேசிப்பவனாகவும், வெளிவருபவனாகவும் தென்பட்டவன், சந்திரனைப் போல மறைக்கப்பட்டவனாகவும், பிரகாசிப்பவனாகவும் தெரிந்தான்.(82) அப்போது, துரிதமாகப் பாய்ந்து செல்லும் அந்தப் பிலவங்கமனைக் {தாவிச் செல்பவனான ஹனுமானைக்} கண்ட தேவர்கள், கந்தர்வர்கள், தானவர்கள் புஷ்பமாரி பொழிந்தனர்.(83) இராமனின் காரியசித்திக்காகப் பாய்ந்து செல்லும் அந்த வானரோத்தமனைச் சூரியன் எரிக்கவில்லை; வாயுவும் குளிர்ந்து சேவித்தான்.(84) வானில் தாவிச் செல்லும் அந்த பெரும் பிரகாசம் கொண்டவனை ரிஷிகள் புகழ்ந்தனர்; தேவர்களும், கந்தர்வர்களும் அவனைப் புகழ்ந்து பாடினர்.(85) நாகர்களும், யக்ஷர்களும், ராக்ஷசர்களும், விபுதர்களும், பறவைகளும் என அனைவரும், சோர்வின்றிச் செல்லும் கபிவரனை {சிறந்த குரங்கைக்} கண்டு புகழ்ந்தனர்.(86,87அ)
பிலவகசார்தூலனான அந்த ஹனூமதன், தாவிச் செல்லும்போது, இக்ஷ்வாகு குல மானத்திற்காக, சாகரன் {பின்வருமாறு} சிந்தித்தான்:(87ஆ,88அ) “நான் வானரேந்திரனான ஹனூமதனுக்கு சகாயம் செய்யவில்லையென்றால், {தவறாகப்} பேச விரும்புகிறவர்களின் அனைத்து வகை {தவறான} பேச்சுகளுக்கும் ஆளாவேன்.(88ஆ,89அ) நான், இக்ஷ்வாகு நாதனான சகரனால் வளர்க்கப்பட்டேன். இக்ஷ்வாகுவுக்கு உதவும் இவன் வீழ்வது தகாது.(89ஆ,90அ) எப்படி இந்த கபி ஓய்வெடுக்க முடியுமோ அப்படி நான் நடந்து கொள்ள வேண்டும். என்னில் ஓய்வெடுத்த பிறகு எஞ்சியதை {மீதமுள்ள தொலைவை} சுகமாகக் கடந்து செல்லட்டும்” {என்று நினைத்தான்}.(90ஆ,91அ)
இவ்வாறான நன்மதியுடன் கூடிய சமுத்திரன், நீரில் மறைந்திருப்பவனும், ஹிரண்யநாபனும் {உந்தியில் தங்கத்தைக் கொண்டவனும்}, கிரிசத்தமனுமான மைனாகனிடம் {மலைகளில் உயர்ந்தவனுமான மைனாக மலையிடம், பின்வருமாறு} சொன்னான்:(91ஆ,92அ) “கிரிசிரேஷ்டா {மலைகளில் சிறந்தவனே}, பாதாளவாசிகளான அசுரர்களின் கூட்டத்திற்குத் தடையாகவே தேவேந்திரனால் நீ இங்கே நிலைநிறுத்தப்பட்டாய்.(92ஆ,93அ) மீண்டும் எழும்ப முயல்பவர்களும், ஜாதவீரியர்களுமான இவர்களுக்கு {பிறப்பால் வீரம் நிறைந்தவர்களுமான அசுரர்களுக்கு} அளக்கமுடியாத பாதாளத்தின் துவாரத்தை {வாயிலை} அடைத்தபடியே நீ நின்றிருக்கிறாய்.(93ஆ,94அ) சைலமே, உயர்வாகவும், தாழ்வாகவும், அகலமாகவும் வளரும் சக்தி உனக்குண்டு. எனவேதான் உன்னைத் தூண்டுகிறேன்; கிரிசத்தமா {மலைகளில் உயர்ந்தவனே}, நீ எழுவாயாக.(94ஆ,95அ)
கபிசார்தூலனும் {குரங்குகளில் புலியும்}, வீரியவானும், ராம காரியத்தை நிறைவேற்ற இத்தகைய பீம கர்மத்தைச் செய்பவனுமான இந்த ஹனுமான், வானத்தில் பறந்து உன் மேல் வருகிறான்.(95ஆ,96அ) இக்ஷ்வாகு குல வர்த்தினனான {தொண்டனான} இவனுக்கு இப்போது நான் சகாயம் செய்ய வேண்டும். இக்ஷ்வாகுக்கள் என்னால் பூஜிக்கத்தகுந்தவர்கள்; உன்னாலும் அதிகம் பூஜிக்கப்படத்தகுந்தவர்கள்.(96ஆ,97அ) நமக்கு நன்மையைச் செய்வாயாக. நம் காரியம் தவறக்கூடாது. செய்யப்பட வேண்டிய காரியம், செய்யப்படாமல் போனால் நல்லோரிடம் கடுமை அதிகரிக்கும்.(97ஆ,98அ) நீருக்கு மேல் எழுவாயாக. இந்தக் கபி பிலவர்களில் சிறந்தவன், அதிதியாக {விருந்தினராக} நம்மால் பூஜிக்கப்படத்தகுந்தவன் ஆவான். உன்னில் அவன் நிற்கட்டும்.(98ஆ,99அ) சாமீகரமஹாநாபா {உந்தியில் அதிகம் தங்க வண்ணத்தைக் கொண்டவனே}, தேவகந்தர்வ சேவிதா {தேவர்களுக்கும், கந்தர்வர்களுக்கும் தொண்டாற்றுபவனே}, ஹனுமான் உன்னில் இளைப்பாறிய பிறகு எஞ்சியதைக் கடந்து செல்லட்டும்.(99ஆ,100அ) காகுத்ஸ்தனின் {ராமனின்} கொடுமையின்மையையும், மைதிலி கடத்தப்பட்டதையும், பிலவகேந்திரனின் {தாவிச் செல்பவர்களின் தலைவனான ஹனுமானின்} சிரமத்தையும் கண்டு உதிப்பதே உனக்குத் தகும்” {என்றான் சமுத்ரன் / சாகரன்}.(100ஆ,101அ)
ஹிரண்யநாபனான {உந்தியில் தங்கத்தைக் கொண்டவனான} மைனாகன், லவணாம்பசன் {உப்புநீர் கொள்ளிடமான சமுத்திரன்} சொன்னதைக் கேட்டு, பெரும் மரங்களுடனும், கொடிகளுடனும் ஜலத்திலிருந்து துரிதமாக உதித்தெழுந்தான்.(101ஆ,102அ) அப்போது அவன் {மைனாக மலையானவன்}, திவாகரன் ஒளிரும் கதிர்களால் மேகங்களைக் கிழிப்பதைப் போல, சாகரஜலத்தைக் கிழித்தபடி உதித்தெழுந்தான்.(102ஆ,103அ) சுற்றிலும் நீரால் சூழப்பட்டிருந்த அந்த மஹாத்மா {மைனாக மலையானவன்}, சாகரனின் தூண்டுதலால் ஒரு முஹூர்த்தத்திற்குள் சிருங்கங்களுடன் வெளிப்பட்டு,{103ஆ,104அ} கின்னரர்களுடனும், மஹா உரகர்களுடனும், தங்கமயமான சிருங்கங்களுடனும், அம்பரத்தைத் தீண்டி ஆதித்யனுக்கு ஒப்பாக ஒளிர்ந்தான்.(103ஆ-105அ) சஸ்திரத்திற்கு ஒப்பான ஒளியுடன் {வாளின் நீல நிறத்துடன்} கூடிய ஆகாசம், தப்தஜாம்பூநதத்தை {புடம்போட்ட தங்கத்தைப்} போல உதித்த பர்வதத்தின் சிருங்கங்களால் காஞ்சனப் பிரபையுடன் கூடியதானது {பொன்வண்ணமானது}.(105ஆ,106அ) அந்த கிரிசத்தமன், ஜாதரூபமயமானவையும் {பொன்மயமானவையும்}, ஸ்வயம்பிரபையால் {தன்னொளியால்} ஒளிர்ந்தவையுமான சிருங்கங்களுடன் நூறு ஆதித்யர்களுக்கு இணையாகப் பிரகாசித்தான்.(106ஆ,107அ)
ஹனுமான், உப்புநீரின் மத்தியில், {மைனாக மலை}தன் முன் திடீரென எழுந்து நின்றதைத் தடையென நிச்சயித்தான்.(107ஆ,108அ) மஹாவேகமுள்ள அந்த மஹாகபி, மாருதன் மேகத்தை {தள்ளுவதைப்} போல, அங்கே நெடிதுயர்ந்திருந்ததைத் தன் மார்பால் வீழ்த்தினான்.(108ஆ,109அ) அந்தக் கபியால் {குரங்கான ஹனுமானால்} இவ்வாறு வீழ்த்தப்பட்ட அந்தப் பர்வதோத்தமன் {உத்தம மலையான மைனாகன்}, அந்தக் கபியின் வேகத்தை உணர்ந்து வியந்து ஆனந்தமடைந்தான்.(109ஆ,110அ)
ஆகாயத்தில் எழுந்த பர்வதன் {மைனாகன்}, பிரீதியுடனும், மகிழ்ச்சியான மனத்துடனும், மானுஷ ரூபத்தைத் தரித்து சிகரத்தில் நின்று, ஆகாசத்தில் சென்று கொண்டிருந்த அந்த வீரக்கபியை {ஹனுமானை} அணுகி, {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(110ஆ,111) “வானரோத்தமா, இந்தச் செயற்கரிய கர்மத்தைச் செய்த நீ, என் சிருங்கங்களில் இறங்கி சுகமாக இளைப்பாறுவாயாக.(112) இராகவனின் குலத்தில் பிறந்தவர்களால் உததி {பெருங்கடல்} விரிவடைந்தது. அந்த சாகரன் {பெருங்கடலானவன்}, ராமனின் ஹிதத்தில் {ராமனுக்கான நன்மையில்} ஈடுபட்டுள்ள உன்னை {பின்வருமாறு சொல்லி} வழிபடுகிறான்:(113) “செய்த நன்றிக்குக் கைம்மாறு செய்ய வேண்டும்”. இதுவே சநாதன தர்மமாகும். கைம்மாறைச் செய்ய விரும்பும் அத்தகையவன், உன் சம்மானத்திற்கு {மதிப்புக்குத்} தகுந்தவனாவான்.(114) “நூறு யோஜனைகளைத் தாண்டும் இந்தக் கபி {குரங்கு}, உன் தாழ்வரைகளில் இளைப்பாறிவிட்டு எஞ்சியதை {மீதமுள்ள தொலைவைக்} கடக்கட்டும்” என்று உன் நிமித்தம் உண்டான பஹுமானத்தால் {பெரும்நன்மதிப்பால்} என்னைத் தூண்டியவன் அவனே {அந்த சமுத்ரனே}[6]. ஹரிசார்தூலா {குரங்குகளில் புலியே}, நீ சற்றே தங்கி, என்னில் இளைப்பாறிச் செல்வாயாக.(115,116)
[6] கார்மேகவண்ணன் பணிபூண்டனன் காலின்மைந்தன்தேர்வான்வருகின்றனன் சீதையைத் தேவர் உய்யப்பேர்வான் அயல்சேறி இதில் பெறும் பேறு இல் என்னநீர்வேலையும் என்னை உரைத்தது நீதிநின்றாய்- கம்பராமாயணம், 4796ம் பாடல், கடல் தாவு படலம்பொருள்: நீதிவழி நிற்பவனே, “கார்மேகவண்ணனின் {ராமனின்} பணியை மேற்கொண்டுள்ள வாயு மைந்தன் {ஹனுமான்}, தேவர் மேன்மைபெற சீதையைத் தேடி வருகின்றான். பெரும் வானின் பக்கத்தில் சேர்வாயாக. இதைவிடப் பெரும்பேறு வேறேதுமில்லை” என்று என்னிடத்தில் நற்பண்பு வாய்ந்த கடலும் உரைத்தது.
ஹரிசிரேஷ்டா {குரங்குகளில் சிறந்தவனே}, அதற்காகவே இங்கே ஏராளமான கிழங்குகளும், பழங்களும், நறுமணமும், இன்சுவையும் மிக்க இன்னும் பலவும் இருக்கின்றன. அவற்றை உண்டு இளைப்பாறிய பிறகு செல்வாயாக.(117) கபி முக்கியா {குரங்குகளில் முக்கியமானவனே}, மூவுலகங்களிலும் நன்கறியப்பட்ட மஹாகுணங்களின் அடிப்படையிலான சம்பந்தம் உன்னிடம் எங்களுக்கும் இருக்கிறது.(118) மாருதாத்மஜா {வாயுவின் மகனே}, கபிகுஞ்சரா {குரங்குகளில் யானையே}, தாவுவதில் வேகவான்களுக்கு மத்தியில் முக்கியமானவனாக உன்னை நான் நினைக்கிறேன்.(119) தர்மத்தை அறிய விரும்புகிறவனாலோ, அறிந்தவனாலோ, ஓர் அதிதி {விருந்தினர்} சாதாரணனாக இருந்தாலும் பூஜிக்கப்படத்தகுந்தவனே. உன்னைப் போன்ற மஹான்களைக் குறித்து மீண்டும் என்ன சொல்வது?(120) கபிகுஞ்சரா, நீ மஹாத்மாவும், தேவவரிஷ்டனும் {தேவர்களில் சிறந்தவனுமான} மாருதனின் புத்திரன் ஆவாய். வேகத்தில் அவனுக்கே நீ இணையாவாய்.(121) தர்மஜ்ஞா {தர்மத்தை அறிந்தவனே}, நீ பூஜிக்கப்பட்டால், மாருதனே பூஜிக்கப்படுகிறான். எனவேதான் நீ எனக்குப் பூஜிக்கப்படத்தகுந்தவன் ஆகிறாய். இதில் காரணத்தைக் கேட்பாயாக.(122)
தாதா {ஐயா}, பூர்வத்தில், கிருத யுகத்தில் பர்வதங்கள் சிறகுகள் படைத்தவையாக இருந்தன. அவை, கருடனுக்கும், அநிலனுக்கும் {காற்றுக்கும்} இணையான வேகத்தில் சர்வதிசைகளிலும் சென்றன.(123) அவை அவ்வாறு சென்று கொண்டிருந்தபோது, ரிஷிகளுடன் சேர்ந்த தேவசங்கமும், பூதங்களும் {உயிரினங்களும்} அவற்றின் வீழ்ச்சியில் ஏற்பட்ட {அந்த மலைகள் விழுந்து அழிவு ஏற்படும் என்ற} சந்தேகத்தில் பயத்தை அடைந்தனர்.(124) சதக்ரதுவான சஹஸ்ராக்ஷன் {நூறு வேள்விகளைச் செய்தவனும், ஆயிரம் கண்களைக் கொண்டவனுமான இந்திரன்}, குரோதமடைந்தபோது, ஆங்காங்கே ஆயிரக்கணக்கில் இருந்த பர்வதங்களின் சிறகுகளைத் தன் வஜ்ரத்தால் வெட்டினான்.(125) அந்த தேவராதன் {இந்திரன்}, என்னை அணுகி, குரோதத்துடன் வஜ்ரத்தை உயர்த்தினான். அப்போது மஹாத்மாவான ஸ்வஸனனால் {வாயு தேவனால்} நான் தூக்கி வீசப்பட்டேன்.(126)
பிலவகோத்தமா {தாவிச் செல்பவர்களில் மேலானவனே}, இந்த உப்பு நீரில் தூக்கிவீசப்பட்டு, முழுமையான சிறகுகளுடன் காக்கப்பட்டேன். நான் உன் பிதாவாலேயே ரக்ஷிக்கப்பட்டேன்.(127) கபிமுக்கியா, மாருதர் என் மதிப்புக்குரியவர் ஆவார். எனவேதான் நான் உன்னை மதிக்கிறேன். எனக்கு உன்னுடனான இந்த சம்பந்தம் மஹாகுணங்கள் பொருந்தியது.(128) மஹாகபியே, இக்காரியத்தில் இவ்வாறு செல்லும் நீ, பிரீதியுடன் சாகரனுக்கும், எனக்கும் மகிழ்ச்சியளிக்கத் தகுந்தவனாக இருக்கிறாய்.(129) கபிசத்தமா, {எங்கள்} பூஜையையும், பஹுமானத்தையும், பிரீதியையும் ஏற்றுக் கொண்டு சிரமத்தைப் போக்கிக் கொள்வாயாக. உன் தரிசனத்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன்” {என்றான் மைனாகன்}.(130)
இவ்வாறு சொல்லப்பட்ட கபிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்த ஹனுமான்}, அந்த நகோத்தமனிடம் {மலைகளில் சிறந்தவனான மைனாகனிடம், பின்வருமாறு} சொன்னான், “நான் பிரீதியடைகிறேன். ஆதித்யம் {விருந்தோம்பல்} செய்யப்பட்டது. இந்தக் கோபம் விலகட்டும்[7].(131) காரியத்திற்கான காலம் என்னைத் துரிதப்படுத்துகிறது. பகற்பொழுதும் கடக்கிறது. இங்கே நடுவில் நிற்பதில்லை என்று நான் பிரதிஜ்ஞை செய்திருக்கிறேன்” {என்றான் ஹனுமான்}.(132)
[7] மன்மதநாததத்தர் பதிப்பின் அடிக்குறிப்பில், "மைனாகனின் விருந்தோம்பலை ஏற்றுக் கொள்ளாததால் அவனிடம் விளையும் சினம்" என்றிருக்கிறது.
வீரியவானான அந்த ஹரிபுங்கவன் {குரங்குகளில் முதன்மையான ஹனுமான்} இவ்வாறு சொல்லிவிட்டு, அந்த {மைனாக} சைலத்தைத் தன் கைகளால் தீண்டிவிட்டு, புன்னகையுடன் வானத்தில் புகுந்து சென்றான்.(133) அந்த அநிலாத்மஜன் {வாயு மைந்தன்}, பர்வதத்தாலும், சமுத்திரத்தாலும் பஹுமானத்துடன் பார்க்கப்பட்டான்; தகுந்த ஆசிகளாலும் பூஜிக்கப்பட்டான்.(134) சைலத்தையும், மஹார்ணவத்தையும் விட்டு வெகு தூரம் பாய்ந்து, விமலமான அம்பரத்தில் தன் பிதாவின் {மாசற்ற வானில், தன் தந்தையான வாயுவின்} பாதையைப் பின்பற்றிச் சென்றான்.(135) உயர்ந்த கதியையடைந்த வாயுமைந்தன், அந்த கிரியை மீண்டும் பார்த்தவாறே ஆதாரமற்ற விமலமான அம்பரத்தில் {மாசற்ற வானில்} சென்றான்.(136)
ஹனுமதன், அந்த செய்வதற்கரிய இரண்டாம் கர்மத்தைச் செய்ததைக் கண்ட சர்வ ஸுரர்களும், சித்தர்களும், பரமரிஷிகளும் {அவனைப்} போற்றினர்.(137) அங்கிருந்த தேவர்களும், சஹஸ்ராக்ஷனான வாசவனும் {ஆயிரம் கண்களைக் கொண்ட இந்திரனும்}, அந்தக் காஞ்சனனான சுநாபனின் {தங்கமயமான மைனாக மலையானவனின்} கர்மத்தால் மகிழ்ச்சியடைந்தனர்.(138) மதிமிக்க சசிபதி {சசியின் கணவனான இந்திரன்}, பர்வதசிரேஷ்டனான சுநாபனால் உண்டான பெரும் மகிழ்ச்சியில் தழுதழுத்த குரலில் {பின்வரும்} சொற்களை ஸ்வயமாக {தானே முன்வந்து} பேசினான்:(139) “ஹிரண்யநாபா, சைலேந்திரா, உன்னைக் குறித்துப் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சௌம்யா, உனக்கு அபயம் அளிக்கிறேன். சுகமாக இருப்பாயாக.(140) பயப்படக்கூடியதாக இருந்தாலும் பயம் இல்லாமல் நாறு யோஜனைகளைக் கடக்கப் போகும் விக்கிராந்தனான ஹனூமதனுக்கு நீ மஹத்தான சஹாயத்தைச் செய்திருக்கிறாய்.(141) தாசரதியான ராமனின் ஹிதத்திற்காக {நன்மைக்காக} சென்று கொண்டிருக்கும் இந்த ஹரிக்கு {குரங்கான ஹனுமானுக்கு} நற்காரியம் செய்த உன்னிடம் உறுதியான மகிழ்ச்சியை அடைகிறேன்” {என்றான் இந்திரன்}.(142)
தேவர்களின் பதியான சதக்ரது {இந்திரன்} மகிழ்ச்சியடைந்ததைக் கண்டபோது, அந்தப் பர்வதோத்தமனும் பெரும் மகிழ்ச்சியை அடைந்தான்.(143) அப்போது வரம் தத்தம் செய்யப்பட்ட அந்த சைலம் {மைனாகம்} அங்கேயே நிலைநின்றது. ஹனுமானும் ஒரு முஹூர்த்தத்தில் சாகரத்தை {கடலின் அந்தப் பகுதியைக்} கடந்தான்.(144)
அதன்பிறகு, தேவர்களுடன் கூடிய கந்தர்வர்களும், பரமரிஷிகளும், சூரியனுக்கு ஒப்பான பிரகாசம் கொண்டவளும், நாகங்களின் மாதாவுமான ஸுரஸையிடம் {பின்வருமாறு} பேசினார்கள்:(145) வாதாத்மஜனும் {வாயுவின் மைந்தனும்}, ஹனுமான் என்ற பெயரைக் கொண்டவனுமான இந்த ஸ்ரீமான், சாகரத்தைத் தாண்டிச் செல்கிறான். ஒரு முஹூர்த்த காலம் நீ அவனுக்கு விக்னத்தை {தடையை} ஏற்படுத்துவாயாக.{146} கோரமானதும், பர்வதத்திற்கு ஒப்பானதுமான ராக்ஷச ரூபத்தை அடைவாயாக. அஞ்சத்தக்க பற்களுடையதும், செம்பழுப்புக் கண்களுடையதும், வானத்திற்குச் சமமானதுமான முகத்தைக் கொள்வாயாக.(146,147) அவனது பலத்தையும், பராக்கிரமத்தையும், உபாயத்தையும் {நாங்கள்} அறிய விரும்புகிறோம். உன்னை வெல்வான்? அல்லது விஷாதத்தை {துன்பத்தை} அடைவான்” {என்றனர்}.(148)
அந்த தேவி, தைவதங்களால் {தேவர்களால்} இவ்வாறு கேட்டுக்கொள்ளப்பட்டு, கௌரவிக்கப்பட்டாள். சமுத்திரத்தின் மத்தியில் அந்த ஸுரஸை ராக்ஷசத் தோற்றம் பூண்டாள்.{149} விகாரமான, பயங்கர ரூபத்தில் அனைத்துக்கும் பயத்தை உண்டாக்கியவள், தாவிச் செல்லும் ஹனூமந்தனிடம் இதைச் சொன்னாள்:(149,150) “வானரரிஷபா {வானரர்களில் காளையே}, நீ ஈசுவரர்களால் என் உணவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறாய். நான் உன்னை பக்ஷிக்க விரும்புகிறேன். என்னுடைய இந்த வாய்க்குள் பிரவேசிப்பாயாக” {என்றாள் ஸுரஸை}.(151)
ஸுரஸையால் இவ்வாறு சொல்லப்பட்ட ஸ்ரீமான் வானரரிஷபன், மகிழ்ச்சிமிக்க வதனத்துடனும், கூப்பிய கைகளுடனும் இந்த வசனத்தைச் சொன்னான்:(152) “இராமன் என்ற பெயரைக் கொண்ட தாசரதி {தசரதனின் மகன் ராமர்}, தம்முடன் பிறந்த லக்ஷ்மணருடனும், தன் பாரியையான {மனைவியான} வைதேஹியுடனும் தண்டகவனத்திற்குள் பிரவேசித்தார்.(153) இராக்ஷசர்களிடம் கடும் வைரம் கொண்டவர், வேறு காரியத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவரது பாரியையும், புகழ்பெற்றவளுமான சீதையை ராவணன் அபகரித்துச் சென்றான்.(154) ராம காரணத்திற்காக நான் அவளிடம் தூதனாகச் செல்கிறேன். விஷயவாசினியே {[ராமனின்] குடிமகளே}, ராமருக்கு சஹாயம் செய்வதே உனக்குத் தகும்.(155) அல்லது, மைதிலியையும், தொல்லைகளை இல்லாமலாக்கும் ராமரையும் கண்ட பிறகு, உன் வாயை அடைவேன். உனக்கு சத்தியமாகப் பிரதிஜ்ஞை செய்கிறேன்” {என்றான் ஹனுமான்}.(156)
ஹனுமதன் இவ்வாறு சொன்னதும், காமரூபிணியான {விரும்பிய வடிவை ஏற்கவல்லவளான} ஸுரஸை {பின்வருமாறு} சொன்னாள், “எவராலும் என்னைக் கடந்து செல்ல முடியாது. இஃது என்னுடைய வரமாகும்” {என்றாள் ஸுரஸை}.(157) மேலும், நாகமாதாவான ஸுரஸை, பிரயாணித்துக் கொண்டிருந்த ஹனூமதனின் பலத்தை அறிய விரும்பி இந்த வாக்கியத்தையும் சொன்னாள்:(158) “வானரோத்தமா, இப்போது என் வதனத்திற்குள் பிரவேசித்த பிறகே நீ செல்ல முடியும். இந்த வரத்தைப் பூர்வத்தில் தாத்ரா {பிரம்மா} எனக்கு தத்தம் செய்தார்” என்றவள்,{159} விரைவாகத் தன் வாயை அகலத்திறந்து, மாருதியின் முன்னிலையில் நின்றாள்.(159,160அ)
ஸுரஸை இவ்வாறு சொன்னபோது, குரோதமடைந்த வானரபுங்கவன் {ஹனுமான்}, “என்னைத் தாங்கிக் கொள்ளும் வகையில் உன் வாயைத் திறப்பாயாக” என்றான்.(160ஆ,161அ) குரோதமடைந்த ஹனுமான், ஸுரஸையிடம் இவ்வாறு சொன்னபிறகு, பத்து யோஜனைகள் நெடியவனாகவும், பத்து யோஜனைகள் விஸ்தாரமானவனாகவும் வளர்ந்தான்.(161ஆ,162அ) பத்து யோஜனைகள் அகன்ற மேகத்திற்கு ஒப்பாக அவனைக் கண்ட ஸுரஸையும், தன் வாயை இருபது யோஜனைகள் விரித்தாள்.(162ஆ,163அ) அதன்பிறகு, குரோதமடைந்த ஹனுமானும், முப்பது யோஜனைகள் அகன்றான். ஸுரஸையோ, அதே போல நாற்பது யோஜனைகள் வாயை வளர்த்தாள். வீரனான ஹனுமான், ஐம்பது யோஜனைகள் நெடியவனானான்.(163ஆ,164) ஸுரஸை, தன் வாயை அறுபது யோஜனைகள் விரித்தாள். வீரனான ஹனுமான் அதேபோல எழுபது யோஜனைகள் வளர்ந்தான்.(165) ஸுரஸை, தன் வாயை எண்பது யோஜனைகள் வளர்த்தாள். அசலம் {மலை} போன்றவனான ஹனுமான் தொண்ணூறு யோஜனைகள் வளர்ந்தான்.(166)
{ஸுரஸையோ, தன் வாயை நூறு யோனைகள் அகன்றதாகச் செய்து கொண்டாள்}[8]. புத்திமானான வாயுபுத்திரன் {ஹனுமான்}, நீண்ட நாவுடன் கூடியதும், ஸுரஸையால் திறக்கப்பட்டதுமான அந்த வாயை, நரகத்திற்கு ஒப்பாக கோரமானதாகக் கண்டு, தன் உடலைப் பெரிதும் சுருக்கிக் கொண்டு கட்டைவிரல் அளவுள்ளவனானான்.(167,168அ) பெரும் வேகம் கொண்ட அந்த ஸ்ரீமான் {ஹனுமான்}, அந்த வாயை அடைந்து, வெளியேறி வந்து அந்தரிக்ஷத்தில் {வானத்தில்} நின்று, இந்த வசனத்தைச் சொன்னான்:(168ஆ,இ) “தாக்ஷாயிணி {தக்ஷனின் மகளே}, நான் உன் வாய்க்குள் பிரவேசித்துவிட்டேன். உன்னை வணங்குகிறேன். வைதேஹி இருக்குமிடத்திற்குச் செல்லப் போகிறேன். உன் வரமும் சத்தியமானது” என்றான்.(169)
[8] துர்கா-கிஷோர் கோபல்லேவின் {கே.எம்.கே.மூர்த்தியின்} பதிப்பில், இந்த வரி மட்டும் விடுபட்டிருக்கிறது. மற்ற பதிப்புகள் அனைத்திலும் இருக்கிறது. பதங்கள் பிரித்துப் பொருள் கொண்டு மொழிபெயர்க்கப்பட்ட வால்மீகி ராமாயணப் பதிப்பைக் கொண்ட https://valmikiramayan.net/ வலைத்தளத்தில், பாலகாண்டம், ஆரண்யகாண்டம், கிஷ்கிந்தா காண்டம் ஆகியவை அமரர் தேசிராஜு ஹனுமந்தராவ் அவர்களாலும், அயோத்தியாகாண்டம், யுத்தகாண்டம் ஆகியவை திரு.கே.எம்.கே.மூர்த்தி அவர்களாலும், சுந்தரகாண்டத்தின் சில பகுதிகள் திருமதி.துர்காநாகதேவி, திரு.வாசுதேவ கிஷோர் ஆகியோராலும், சில பகுதிகள் திரு.கே.எம்.கே.மூர்த்தி அவர்களாலும் செய்யப்பட்டன.
இராஹுவின் முகத்தில் இருந்து {விடுபட்ட} சந்திரனைப் போல, அந்த வானரம் தன் வதனத்தில் இருந்து விடுபட்டதைக் கண்ட ஸுரஸாதேவி, சுயரூபமெடுத்து {பின்வருமாறு} பேசினாள்:(170) “சௌம்யா {மென்மையானவனே}, ஹரிசிரேஷ்டா {குரங்குகளில் சிறந்தவனே}, சுகமாகச் சென்று அர்த்த சித்தியடைவாயாக. மஹாத்மாவான ராகவனுடன் வைதேஹியைச் சேர்த்து வைப்பாயாக” {என்றாள்}.(171)
ஹனுமதன், அந்த செய்வதற்கரிய மூன்றாம் கர்மத்தைச் செய்ததைக் கண்டபோது, பூதங்கள் {உயிரினங்கள்} அனைத்தும், “சாது, சாது {நன்று, நல்லது}” என்று சொல்லி அந்த ஹரியைப் புகழந்தன.(172) வேகத்தில் கருடனுக்கு ஒப்பானவனோ {ஹனுமானோ}, வருணாலயமான சாகரத்தை நெருங்கி, ஆகாசத்தில் புகுந்து சென்றான்.(173)
வாரிதாராபிகளால் {நீர்த்தாரைகளால் / மேகங்களால்} சேவிக்கப்படுவதும், பறவைகளால் சேவிக்கப்படுவதும், கைசிகாசாரியர்களால் {தும்புரு முதலிய சங்கீத, நாட்டிய ஆசிரியர்களால்}, சஞ்சரிக்கப்படுவதும், ஐராவதத்தால் சேவிக்கப்படுவதும்,{174} சிம்ஹங்கள், குஞ்சரங்கள், சார்தூலங்கள், பறவைகள், உரகங்கள் போன்றவற்றை வாகனங்களாகக் கொண்டவையும், பெரும் வேகத்தில் செல்பவையுமான விமலமான {மாசற்ற} விமானங்களால் நன்கலங்கரிக்கப்பட்டதும்,{175} பாவகங்கள் {நெருப்புகள்}, வஜ்ரத்திற்கு இணையான அசனிகள் {இடிகள்} ஆகியவற்றால் ஒளிர்வதும், புண்ணியச் செயல்களைச் செய்தவர்கள், மஹாபாக்கியவான்கள், ஸ்வர்க்கஜித்கள் {சொர்க்கத்தை வென்றவர்கள்} ஆகியவர்களால் அலங்கரிக்கப்பட்டதும்,{176} அதிகப்படியான ஹவ்யங்களைச் சுமக்கும் சித்திரபானுவால் {அக்னிதேவனால்} சேவிக்கப்படுவதும், கிரஹங்கள், நக்ஷத்திரங்கள், சந்திரன், அர்க்கன் {சூரியன்}, தாரகைகள் {நக்ஷத்திரங்கள்} ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டதும்,{177} மஹரிஷிகள், கந்தர்வர்கள், நாகர்கள், யக்ஷர்களின் கூட்டங்களால் நிறைந்ததும், இனிமையாக, மாசற்றதாக எங்கும் பரந்து விரிந்ததும், {கந்தர்வ மன்னன்} விஷ்வாவசுவால் சேவிக்கப்படுவதும்,{178} தேவராஜனின் கஜங்கள் சஞ்சரிப்பதும், சந்திரசூரியர்கள் செல்லும் பாதையானதும், மங்கலமானதும், பிரம்மனால் நிர்மாணிக்கப்பட்ட ஜீவலோகத்தின் பரந்த விதானமும்,{179} வீரர்களில் சிறந்த வித்யாதர கணங்களால் பல்வேறு வகைகளில் சேவிக்கப்படுவதுமான வாயுமார்க்கத்தில் கருத்மானை {கருடனைப்} போல மாருதி {மருதனின் மகனான ஹனுமான்} சென்றான்.(174-180) மாருதாத்மஜனான ஹனுமான், ஆதாரமில்லாத அம்பரத்தை அடைந்து, நீண்ட சிறகுகளைக் கொண்ட அத்ரிராட்டை {மலைகளின் அரசனைப்} போல எங்கும் தென்பட்டான்.(181)
சிம்ஹிகை என்ற பெயரைக் கொண்டவளும், காமரூபிணியுமான ஒரு ராக்ஷசி[9], அளவில் பெரியவனாக மிதந்து செல்பவனைக் கண்டு, தன் மனத்திற்குள் {பின்வருமாறு} சிந்தித்தாள்:(182) “நீண்ட காலத்திற்குப் பிறகு இந்த மஹத்தான உயிரினம் என் வசம் வாய்த்திருக்கிறது. நீண்ட காலத்திற்குப் பிறகு, இன்று உணவை உண்ணப் போகிறேன்” {என்று நினைத்தாள்}.(183) இப்படி மனத்தில் நினைத்துக் கொண்டே அவனது {ஹனுமானின்} நிழலைப் பற்றி இழுத்தாள். அந்த நிழல் பற்றப்பட்டபோது வானரன் {ஹனுமான், பின்வருமாறு} சிந்தித்தான்:(184) “சாகரத்தில் எதிராகவீசும் வாதத்தால் மஹாநவத்தை {எதிர்க்காற்றால் தள்ளப்படும் பெரும் ஓடத்தைப்} போல, பராக்கிரமம் குன்றியவனாக நான் பலவந்தமாக இழுக்கப்படுகிறேன்” {என்று நினைத்தான்}.(185) அப்போது மேலும், கீழும், பக்கவாட்டிலும் நோக்கிய அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, லவணாம்பசத்தில் {உப்புநீரில்} உதித்திருக்கும் மஹத்தான உயிரினத்தைக் கண்டான்.(186) அந்த வக்கிர முகத்தைக் கண்ட மாருதி {ஹனுமான்}, “அற்புத தரிசனத்துடனும், மஹாவீரியத்துடனும், நிழலை கிரஹிக்கும் உயிரினமென இதையே கபிராஜர் {சுக்ரீவர்} குறிப்பிட்டிருக்கிறார். இதில் சந்தேகம் இல்லை” என்று சிந்தித்தான்[10].(187)
[9] வெங்கார்நிறப் புணரி வேறேயும் ஒன்றப்பொங்கு ஆர்கலிப் புனல்தரப் பொலிவதே போல்இங்கு ஆர்கடத்திர் எனை என்னா எழுந்தாள்அங்கார தாரை பெரிது ஆலாலம் அன்னாள்- கம்பராமாயணம் 4815ம் பாடல், கடல் தாவு படலம்பொருள்: பெரிய ஆலகால விஷத்தைப் போன்ற அங்காரதாரை என்பவள், பொங்கும் புனலைப் பெற்றுள்ள அந்தக் கடல், தன்னிலும் வேறுபட்ட ஒரு வெப்பமான, கரிய நிறம் பெற்ற கடலைப் பெற்றெடுத்துப் பொலிவதைப் போல “என்னை இங்கே எவர் தாண்டிப் போகிறீர்” என்று கூறி வளர்ந்து எழுந்தாள்.
[10] 4:41:10ல் சுக்ரீவன் இவளைக் குறித்துச் சொல்லும்போது, "அந்த தக்ஷிண சமுத்திரத்தின் மத்தியில், நிழலைக் கொண்டு தன் இரையை ஈர்த்து உண்பவளும், அங்காரகை என்று நன்கறியப்பட்டவளுமான ராக்ஷசி இருக்கிறாள்" என்று சொல்கிறான். சுக்ரீவன் அங்கே அங்காரகை என்று சொல்லும் ராக்ஷசியே, இங்கே சிம்ஹிகை என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறாள்.
மதிமானான அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, அது சிம்ஹிகை என்பதை சரியாகப் புரிந்து கொண்டு, மழைக்காலத்துப் பெரும் மேகம் போன்ற பேருடலாக வளர்ந்தான்.(188) மஹாகபியின் உடல் வளர்வதைக் கண்டவள் {சிம்ஹிகை}, பாதாள அந்தரத்திற்கு {பாதாளத்தின் ஆழத்திற்கு} இணையாக வாயை விரித்தாள்.(189,190அ) அடர்ந்த மேகத்தைப் போல கர்ஜித்தபடியே வானரனை நோக்கி விரைந்தாள். அப்போது, மேதாவியான மஹாகபி, தன்னுடலுக்கும், மர்மங்களுக்கும் இணையாக அவள் தன் மஹத்தான வாயை விரித்திருப்பதைக் கண்டான்.(190ஆ,191) மஹாபலவானும், வஜ்ரத்திற்கு இணையான கடுமையைக் கொண்டவனுமான அந்தக் கபி {குரங்கான ஹனுமான்}, மீண்டும் தன்னைச் சுருக்கிக் கொண்டு, அவளது விரிந்த வாய்க்குள் விழுந்தான்.(192) சித்தர்களும், சாரணர்களும், ராஹுவால் விழுங்கப்படும் பர்வகால {பௌர்ணமியின்} பூர்ணச் சந்திரனைப் போல அவளது வாய்க்குள் மூழ்குபவனைக் கண்டனர்.(193) பிறகு, அந்த வானரன், தன் கூரிய நகங்களால் அவளது மர்மங்களைப் பிளந்தான். பிறகு மனத்திற்கு இணையான வேகத்துடனும், விக்கிரமத்துடனும் மேலே உயர்ந்தான்.(194) ஆத்மவானான {தற்கட்டுப்பாடுள்ள} அந்த கபிபிரவரன், தன் திருஷ்டியாலும் {பார்வையாலும் / அறிவினாலும்}, திடத்தாலும் {தைரியத்தாலும்}, தாக்ஷிண்யத்தாலும் {வலிமையாலும்} அவளை வீழ்த்தி, மீண்டும் வேகமாக வளர்த்தான்.(195)
ஹனுமதனால் ஹிருதயம் பிளக்கப்பட்டவள், பரிதாபமாக நீரில் விழுந்தாள். ஆகாசசாரிணிகளான பூதங்கள் {வானில் திரியும் உயிரினங்கள்}, வானரனால் சிம்ஹிகை ஹதம் செய்யப்பட்டதைக் கண்டு, அந்தப் பிலவகோத்தமனிடம் {தாவிச் செல்பவர்களின் மேன்மையான ஹனுமானிடம், பின்வருமாறு} பேசினர்:(196) “பிலவதாம்வரா {தாவிச் செல்பவர்களில் சிறந்தவனே}, மஹத்தான உயிரினத்தை நீ கொன்று இப்போது பீமகர்மத்தைச் செய்திருக்கிறாய். நீ எண்ணும் மங்கல அர்த்தத்தை {காரியத்தைச்} சாதிப்பாயாக.(197,198அ) வானரேந்திரா, திருதி {மனவலிமை / பொறுமை}, திருஷ்டி {பார்வை / அறிவு}, மதி {புத்திசாலித்தனம்}, தாக்ஷியம் {திறன் / சாமர்த்தியம்} என்ற இந்த நான்கிலும் உன்னைப் போல எவன் இருப்பானோ, அவன் கர்மங்களில் தொலைந்து போகமாட்டான்.(198ஆ,199அ)
பூஜிக்கத்தகுந்தவனான அந்தக் கபி, அவர்களால் மதிக்கப்பட்டு, இலக்கை அடையும் பிரயோஜனத்துடன் ஆகாசத்தில் நுழைந்து, பன்னகாசனனை {பாம்புகளைக் கொல்பவனான கருடனைப்} போலச் சென்றான்.(199ஆ,200அ) நூறு யோஜனைகளின் அந்தத்தில் {முடிவில்} கிட்டத்தட்ட மறுகரையை அடைந்தவன், சுற்றிலும் பார்வையைச் செலுத்தி, வனவரிசையைக் கண்டான்.(200ஆ,201அ) சாகை மிருகங்களில் சிரேஷ்டனானவன் {கிளைகளில் வாழும் மிருகங்களில் சிறந்த ஹனுமான்} கீழே இறங்கி, ஒரு துவீபத்தையும் {தீவையும்}, விதவிதமான மரங்களால் அலங்கரிக்கப்பட்ட மலயோபவனங்களையும் {மலய மலையின் உப வனங்களையும்} கண்டான்.(201ஆ,202அ) ஆத்மவானும், மதிமானுமானவன் {ஹனுமான்}, சாகரத்தையும், சாகரானூபத்தையும், சாகரானூபத்தில் ஜனித்த மரங்களையும் {கடலையும், கழிக்கரையையும், கழிக்கரையில் முளைத்திருக்கும் மரங்களையும்}, சாகரனுடைய பத்தினிகளின் முகங்களையும் {கடலின் மனைவிகளான ஆறுகளின் கழிமுகங்களையும்} பார்த்து, தானே ஆகாயத்தைத் மறைக்கும் பெரும் மேகத்திற்கு ஒப்பானவனாக இருப்பதைக் கண்டான்.(202ஆ-204அ)
அந்த மஹாகபி, “என் பேருடலையும், வேகத்தையும் கண்டால் ராக்ஷசர்கள் கௌதூஹலம் {ஆவல் / ஆர்வம்} அடைவார்கள்” என்று நினைத்தான்.(204ஆ,205அ) எனவே மஹீதரம் {மலை} போன்ற அந்த சரீரத்தைக் குறைத்துக் கொண்டு, மோஹத்தில் இருந்து விடுபடும் ஆத்மவானைப் போல இயல்புநிலையை அடைந்தான்.(205ஆ,206அ) ஹனுமான், அந்த ரூபத்தைப் பெரிதும் சுருக்கி, மூன்றடிகளால் பலியின் வீரியத்தை அழித்த விக்கிரமனான ஹரியை {விஷ்ணுவை / வாமனனைப்} போன்ற இயல்பான நிலையை அடைந்தான்.(206ஆ,207அ) நானாவித அழகிய ரூபங்களைத் தரிக்கவல்லவனும், பகைவர்களால் வீழ்த்தப்பட முடியாதவனுமான அவன், சமுத்திரத்தின் மறுதீரத்தை அடைந்து, தன்னை உணர்ந்து, அர்த்தத்தை நிச்சயித்துக் கொண்டு, ரூபம் மீண்டான்.(207ஆ,இ,ஈ,உ)
பிறகு, பெரும் மேகத்திரள்களுக்கு ஒப்பான அந்த மஹாத்மா, விசித்திர கூடங்களுடன் {முகடுகளுடன்} கூடியதும், கேதகம் {தாழை}, உத்தாலகம் {நறுவிலி}, நாளிகேரம் {தென்னை} ஆகியவை நிறைந்ததுமான லம்பம் என்ற கிரியின் கூடத்தில் {முகட்டில்} இறங்கினான்[11].(208)
[11] இஃது இன்றைய இலங்கையில் உள்ள பைபிள் ராக் மலை (Bible Rock - 763m) என்று நம்பப்படுகிறது. இது படலேகலா (Batlegala) என்றும் லம்பேகோடா (Lambegoda) என்ற மற்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மேற்குக் கடற்கரையில் (Negomboவில்) இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.
அந்தக் கபி, சமுத்திர தீரத்தை அடைந்தபோது, கிரியின் உச்சியில் இருந்து லங்கையைக் கண்டு, ரூபத்தைக் கைவிட்டு, மிருகங்களையும், பறவைகளையும் பீடித்தபடியே அந்த பர்வதத்தில் இறங்கினான்.(209) தானவர்களும், பன்னகர்களும் {பாம்புகளும்} நிறைந்ததும், பேரலைகளை மாலைகளாகக் கொண்டதுமான சாகரத்தை பலத்தால் கடந்து, பெருங்கடலின் தீரத்தில் அவன் இறங்கியபோது, {தேவர்களின் தலைநகரான} அமராவதி போலிருக்கும் லங்கையைக் கண்டான்.(210)
சுந்தர காண்டம் சர்க்கம் – 01ல் உள்ள சுலோகங்கள்: 210
Previous | | Sanskrit | | English | | Next |