Ravana looks at the vanara army | Yuddha-Kanda-Sarga-026 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: மாளிகையின் உச்சிக்குச் சென்று ராமனின் படையைப் பார்த்த ராவணன்; படையில் உள்ள முக்கிய வானரர்களை ராவணனுக்குச் சுட்டிக்காட்டிய சாரணன்...
சாரணன் தயக்கமில்லாமல் சொன்ன அந்த பத்தியமான {நலம்பயக்கும்} சொற்களைக் கேட்ட ராஜா ராவணன், சாரணனிடம் {பின்வருமாறு} பதிலளித்தான்:(1) "தேவ, கந்தர்வ, தானவர்களே என்னுடன் யுத்தம் செய்தாலும், சர்வலோகமும் எனக்கு பயத்தை விளைவித்தாலும் சீதையை நான் கொடுக்க மாட்டேன்[1].(2) சௌம்யா, ஹரிக்களால் {குரங்குகளால்} அதிகம் பீடிக்கப்பட்டதால் பயத்தில் இவ்வாறு, 'சீதையைத் திருப்பித் தருவது நல்லது' என்று நீ நினைக்கிறாய்.(3) சமரில் என்னை வெல்லத்தகுந்த பகைவன் எவன்?" என்ற கடும் வாக்கியத்தைச் சொன்னான் ராக்ஷசாதிபன் ராவணன்.{4}
[1] யுத்த காண்டம் 24ம் சர்க்கத்தில், 37ம் சுலோகமாக இடம்பெற்ற அதே சுலோகம் இங்கும் வருகிறது.
பிறகு, அதைக் காண விரும்பிய ஸ்ரீமான் ராவணன், அங்கிருந்து வெண்பனியைப் போன்றதும், ஏராளமான தாலங்களின் {பனைமரங்களின்} உயரத்திற்கு சமமானதுமான பிராசாதத்தின் {மாளிகையின் உப்பரிகை} மேல் ஏறினான்.(4,5) குரோதத்தில் மூர்ச்சித்த ராவணன், {சுகன், சாரணன் என்ற} அவ்விரு சாரர்கள் சஹிதனாக சமுத்திரத்தையும், பர்வதங்களையும், வனங்களையும் பார்த்தான்.{6} பிருத்வி முழுவதும் பிலவங்கமர்களால் சம்பூர்ணமாக நிறைந்திருப்பதைக் கண்டான்[2].(6,7அ) இராஜா ராவணன், அபாரமானதும், கணக்கிடமுடியாததுமான வானரர்களின் மஹத்தான பலத்தை {படையைக்} கண்டு சாரணனிடம் மேலும் {பின்வருமாறு} கேட்டான்:(7ஆ,8அ) "இந்த வானரர்களில் முக்கியர்கள் யாவர்? சூரர்களும், மஹா உற்சாகம் கொண்டவர்களும் மஹாபலவான்களும் யாவர்? எங்கும் முன் நிற்பவர்கள் யாவர்?(8ஆ,9அ) சுக்ரீவன் யார் சொல்வதைக் கேட்பான்? யூதபங்களின் யூதபர்கள் {குரங்குக்கூட்டங்களின் குழுத்தலைவர்கள்} யாவர்? பிலவங்கமர்களின் பிரபாவம் என்ன? சாரணா, இவை அனைத்தையும் எனக்குச் சொல்வாயாக" {என்று கேட்டான் ராவணன்}.(9ஆ,10அ)
[2] வானரப் படை, லங்கைக்கு வந்து இறங்கியதும், அவர்களை ராவணன் தன் மாளிகையின் உப்பரிகையில் இருந்து பார்க்கிறான் என்றால், கடற்கரைக்கும், அவனது மாளிகைக்கும் இடையிலான தொலைவு மிகக் குறைவாகவே இருக்க முடியும். அசோக வனம், ராவணனின் மாளிகை ஆகியவை இன்றைய இலங்கையின் மத்தியப் பகுதியில் உள்ள நுவரெலியா மாவட்டத்தில் சீதா எலியா என்ற கிராமத்தில் உள்ளது என்று பொதுவாக நம்பப்படுகிறது. மத்திய லங்கையில் இருந்து வடக்கில் உள்ள கடற்கரையை ஊனக்கண்ணால் நிச்சயம் பார்க்க முடியாது. இந்தச் சர்க்கத்தில் உள்ள இந்தச் செய்தியின் காரணமாகவும், சில ஆய்வாளர்கள் "இராமாயண லங்கை, இன்றைய இலங்கையல்ல" என்று வாதிடுகின்றனர். "இந்த சர்க்கமும், அடுத்தடுத்து வரும் 27, மற்றும் 28ம் சர்க்கங்களும் இடைச்செருகலாக இருக்கக்கூடும்" என்று மறுதரப்பு வாதிடுகிறது. இந்த வாதத்திற்கு வலு சேர்க்கும் விதத்தில் யுத்தகாண்டத்தில் இனி வரப்போகும் 30ம் சர்க்கம் 2ம் சுலோகத்திலும், 31ம் சர்க்கம் 2ம் சுலோகத்திலும், ராமன் லங்கையை அடைந்து விட்டான் என்று சாரர்கள் சொல்லக் கேட்டு ராவணன் அதிர்ச்சி அடைகிறான். எனினும், இடைச்செருகல்கள் என நம்பப்படும் பெரும்பாலான சர்க்கங்களைத் தவிர்த்திருக்கும் செம்பதிப்பான விவேக் தேவ்ராயின் பதிப்பில் இந்த சர்க்கங்கள் இடம்பெற்றிருக்கவே செய்கின்றன.
அப்போது, முக்கியஜ்ஞனான {முக்கியமானவர்களை அறிந்தவனான} சாரணன், வனௌகசர்களில் {காட்டுவாசிகளான வானரர்களில்} முக்கியர்களைக் குறித்து விசாரித்துக் கொண்டிருந்த ராக்ஷசேந்திரனிடம் {பின்வரும்} வசனத்தைச் சொன்னான்:(10ஆ,11அ) "எந்த வானரன், லங்கையை நோக்கி நாதம் செய்தபடியே நின்று கொண்டு,{11ஆ} நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான யூதபர்களால் {குழுத்தலைவர்களால்} சூழப்பட்டிருக்கிறானோ, எவனுடைய மஹத்தான கோஷம், பிராகாரங்களுடனும், தோரணங்களுடனும் {மதில்களுடனும், அலங்காரவாயில்களுடனும்},{12} சைலங்களுடனும் {மலைகளுடனும்}, வனங்களுடனும், கானனங்களுடனும் கூடிய சர்வ லங்கையையும் நடுங்கச் செய்கிறதோ, சர்வ சாகை மிருகங்களின் இந்திரனான மஹாத்மா சுக்ரீவனின்{13} முன் {எவன்} நிற்கிறானோ, இவன் நீலன் என்று அழைக்கப்படும் வீர யூதபனாவான் {குழுத் தலைவனாவான்}.(11ஆ-14அ)
எந்த வீரியவான், கைகளை உயர்த்திக் கொண்டு, தன் பாதத்தால் மஹீயில் {பூமியில்} நடந்து கொண்டிருக்கிறானோ,{14ஆ} லங்கையைப் பார்த்துக் குரோதத்துடன் அடிக்கடி குதித்துக் கொண்டிருக்கிறானோ, கிரிசிருங்கத்திற்கு ஒப்பானவனாக, மலர்ந்த பத்மத்தை {தாமரையைப்} போன்றவனுமாக,{15} அதிகம் தூண்டப்பட்டவனாகத் தன் லாங்கூலத்தை {வாலை} மீண்டும் மீண்டும் சுழற்றி அடிக்கிறானோ, எவனது லாங்கூல சப்தத்தால் {வாலின் ஒலியால்} பத்துத் திசைகளும் எதிரொலிக்கின்றனவோ,{16} இவன் வானர ராஜன் சுக்ரீவனால் யௌவராஜ்ஜியத்தில் அபிஷேகிக்கப்பட்டவன் {இளவரசனாக பட்டம் சூட்டப்பட்டவன்}; அங்கதன் என்ற பெயரைக் கொண்டவன். உம்மைப் போருக்கு அறைகூவி அழைக்கிறான்.(14ஆ-17) {இவன்} வாலிக்குத் தகுந்த புத்திரன். எப்போதும் சுக்ரீவனின் பிரியத்திற்குரியவன். சக்ரனிடம் {இந்திரனிடம்} வருணன் எப்படியோ, அப்படியே ராகவ அர்த்தத்தில் {ராமனின் காரியத்தில்} திடங்கொண்டவன்[3].(18) இராகவனின் ஹிதத்தை விரும்புகிறவனும், வேகவானுமான ஹனூமதன் ஜனகாத்மஜையை {சீதையைக்} காண வந்ததில் அனைத்தும் இவனது மதிநுட்பமே.(19) வீரியவானான இவன் {அங்கதன்}, வானரேந்திரனின் {சுக்ரீவனின்} ஏராளமான யூதங்களை {துருப்புகளை} அழைத்துக் கொண்டு, தன்னுடைய அனீகனியை {படையைக்} கொண்டு, உம்மை மர்த்தனம் செய்ய {நசுக்க} வருகிறான்.(20)
[3] தந்தை மற்றையவன் சார்வு இல் வலத்தோர்அந்தரத்தர் அமுது ஆர்கலி காணமந்தரத்தினொடும் வாசுகியோடும்சிந்தரப் பெரிய தோள்கள் திரித்தான்- கம்பராமாயணம் 6883ம் பாடல், யுத்த காண்டம், இராவணன் வானரத் தானை காண் படலம்பொருள்: மற்றொருவன் {அங்கதனின்} தந்தை {வாலி} எவர் சார்பையும் வேண்டாத வலிமையுடையவன். வானுலகத்தார் கடலில் இருந்து அமுது பெறுமாறு, மந்தர மலையோடும், வாசுகியோடும் சுந்தரமான தன் பெரிய தோள்களால் {கடலைக்} கடைந்தவன் ஆவான். கம்பராமாயணத்தில், தந்தையின் பேராற்றலைச் சொல்லி சாரணன் ராவணனிடம் அங்கதனை அறிமுகப்படுத்துகிறான்.
வாலியின் மகனுக்கு {அங்கதனுக்குப்} பின், மஹத்தான பலத்தால் {படையால்} சூழப்பட்டவனும், போரில் வீரனும், சேதுவுக்கு {பாலம் கட்டுவதற்குக்} காரணமானவனுமான இந்த நளன் நிற்கிறான்.(21) எந்த ஹரிபுங்கவர்கள், இறுக்கிய காத்திரங்களுடனும், சிங்க முழக்கத்துடனும், குரோதத்தில் புருவங்களை உயர்த்தி, நெறித்துக் கொண்டும் வாதம் செய்து கொண்டிருக்கிறார்களோ,{22} எவர்கள் வெல்லப்பட முடியாத கோரர்களாக, சண்டர்களாக, பராக்கிரமர்களாக அஷ்டோ சத சஹஸ்ரமாக {எண்ணூறாயிரமாகவும்}, தசகோடி சதமாகவும் {பத்து நூறு கோடியாகவும்}[4] இருக்கிறார்களோ,{23} அந்த சந்தனவாசிகளான {சந்தனக் காட்டில் வசிப்பவர்களான} இந்த வீரர்களால் பின்பற்றப்படும் இவன் {நளன்}, தானே தன் அனீகனியைக் கொண்டு லங்கையை மர்த்தனம் செய்ய {நசுக்க} விரும்புகிறான்.(22-24)
[4] தேசிராஜுஹனுமந்தராவ்-கேஎம்கே மூர்த்தி பதிப்பில், "சந்தனக் காடுகளில் வசிப்பவர்களான ஆயிரம் கோடியே எட்டு லக்ஷம் பேர்" என்றிருக்கிறது. விவி.சுப்பாராவ்-பி.கீர்வானி பதிப்பில், "பத்து நூறு கோடியே ஒரு லக்ஷத்து எட்டு போர்வீரர்கள்" என்றிருக்கிறது. மன்மதநாததத்தர் பதிப்பில் எண்ணிக்கை ஏதும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இந்த வீரர்கள் அடுத்துக் குறிப்பிடப்படும் ஸ்வேதனைப் பின்பற்றியதாகச் சொல்லப்படுகிறார்கள். விவேக் தேவ்ராய் பதிப்பில், "ஆயிரங்கோடியே பத்து லட்சம் வீரர்கள்" என்றிருக்கிறது. ஆனால் இவர்கள் அங்கதனைப் பின்பற்றியவர்களாகச் சொல்லப்படுகிறார்கள். தர்மாலயப் பதிப்பில், "எண்ணூறாயிரங்களும், பத்து நூறு கோடிகளும் எந்த சந்தனக்காட்டில் வசிக்கும் வீரர்களும் இவனைப் பின்பற்றி வருகிறார்களோ" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "பத்து நூறு கோடியே எண்பது லக்ஷங்கணக்குடைய இவ்வானரர்களும் சந்தன வனத்தில் வசிக்குந்தன்மையுள்ள வீரர்களான பல வானரர்களும் நலனைப் பின்றொடரும் பரிவாரங்கள்" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதா பிரஸ் பதிப்பில், "அவர்கள் ஆயிரம் கோடி எட்டு லட்சம் வீரர்கள். இவர்கள் இவனை (நளனைப்) பின்தொடர்கிறார்கள்" என்றிருக்கிறது.
வெள்ளி நிறம் கொண்டவனும், சுறுசுறுப்பானவனும், பீமவிக்கிரமனும், புத்திமானும், மூவுலகங்களிலும் புகழ்பெற்ற சூரனுமான வானரன் சுவேதன், சுக்ரீவனிடம் விரைந்து வந்து, வானர சேனையை அணிவகுத்து, அனீகனிக்கு {படையினருக்கு} பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கிவிட்டு வேகமாகத் திரும்பிச் செல்கிறான்.(25,26)
எவன், பூர்வத்தில் கோமதி தீரத்தில் {கோமதி ஆற்றங்கரையில்} நானாவித மரங்களைக் கொண்ட கிரிகளுடனும், குன்றுகளுடனும் கூடிய சங்கோசனம் என்றழைக்கப்படும் ரம்மியமான பர்வதம் வரை திரிந்து,{27} அங்கே ராஜ்ஜியத்தை பரிபாலித்து வந்தானோ, இந்தக் குமுதன் என்ற பெயரைக் கொண்ட யூதபன், நூறாயிரம் பேரால் பின்தொடரப்படுகிறான்.{28} கோர கர்மங்களைச் செய்பவனான எவனுடைய நீளமான லாங்கூலத்தில் உள்ள {வாலிலுள்ள} முடி நீளமானதாகவும், சிவப்பாகவும், மஞ்சளாகவும், சாம்பல் நிறத்திலும், வெள்ளை நிறத்திலும் பரந்திருக்கிறதோ,{29} எதற்கும் சலியாதவனும், கோபமுடையவனும், சண்டனும், போரை விரும்புகிறவனுமான இந்த வானரனும் {குமுதனும்}, தன் அனீகனியைக் கொண்டு லங்கையை மர்த்தனம் செய்ய {நசுக்க} விரும்புகிறான்.(27-30)
சிங்கத்தைப் போன்றவனும், கபில {செம்மஞ்சள் / பொன்} நிறத்தவனும், நீண்ட முடியைக் கொண்டவனும், நிலையான கண்களுடன், லங்கையை எரித்து விடுவதைப் போலப் பார்த்துக் கொண்டிருப்பவனுமான எவன்,{31} காண்பதற்கினிய விந்தியம், கிருஷ்ணகிரி, ஸஹ்யம் ஆகிய பர்வதங்களில் சதா வசிப்பவனோ, இராஜரே {ராவணரே}, இவன் ரம்பன் என்ற பெயரைக் கொண்ட யூதபனாவான்.{32} நூற்று முப்பது லக்ஷம் ஹரிபுங்கவர்களில், அணிவகுத்து வரும் கோரர்களும், சண்டர்களும், சண்ட பராக்கிரமர்களுமான வானரர்கள்,{33} தங்கள் ஓஜஸ்ஸினால் {சக்தியினால்} லங்கையை மர்த்தனம் செய்ய {நசுக்க} விரும்பி பரிவாரங்களுடன் இவனைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.(31-34அ)
எவன் காதுகளை ஆட்டிக் கொண்டே மீண்டும் மீண்டும் கொட்டாவி விடுகிறானோ,{34ஆ} {எவன்} மிருத்யுவுக்கும் {யமனுக்கும் / மரணத்திற்கும்} அஞ்சாதவனோ, யுத்தத்தில் புறமுதுகிடாதவனோ, கோபத்தில் துடிப்பவனோ, மீண்டும் மீண்டும் கோணலாகப் பார்ப்பவனோ,{35} {எவன்} லாங்கூலத்தை {வாலைப்} பார்த்துக் கொண்டே சிங்க முழக்கம் செய்கிறானோ, இந்த மஹாபலவான், மஹாவேகம் கொண்டவன்; பயமற்றவன்; ரம்மியமான சால்வேயம் என்ற பர்வதத்தில்{36} சதா வசிப்பவன். இராஜரே, {இவன்} சரபன் என்ற பெயரைக் கொண்ட யூதபனாவான்.(34ஆ-37அ) இராஜரே, விஹாரர்கள் என்ற பெயரைக் கொண்டவர்களும்[5], {எண்ணிக்கையில்} நாற்பது லக்ஷம் பேருமான அவனது {சரபனின்} போர்வீரர்கள் அனைவரும் பலவான்களாவர்.(37ஆ,38அ)
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் - கேஎம்கே மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "விஹாரர்கள் என்றால் விருப்பம்போல் திரிபவர்கள் என்பது பொருள்" என்றிருக்கிறது.
எவன் ஆகாசத்தை மறைக்கும் மஹாமேகம் போலிருக்கிறானோ, ஸுரர்களின் மத்தியில் வாசவனை {தேவர்களின் மத்தியில் இந்திரனைப்} போல, வானர வீரர்களுக்கு மத்தியில் நிற்கிறானோ,{38ஆ,39அ} போரில் விருப்பமுள்ள எவனது சாகைமிருகேந்திரர்களின் {கிளைகளில் வசிக்கும் விலங்குத் தலைவர்களின்} மஹாகோஷம் பேரிகைகளின் முழக்கத்தைப் போலக் கேட்கப்படுகிறதோ,{39ஆ,40அ} எவன் உத்தம பர்வதமான பாரியாத்ரத்தில் வசிக்கிறானோ, நித்யம் யுத்தத்தில் பொறுத்துக்கொள்ளத் தகாதவனான இவன் பனசன் என்ற பெயருடைய யூதபனாவான்.(38ஆ-41அ) யூதபர்களில் சிறந்தவனான இவனது {பனசனின்} யூத பாகங்களில் ஐம்பது லக்ஷம் சிறந்த வீரர்கள், இவனைப் பணிவுடன் பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர்.(41ஆ,42அ)
எவன் பயங்கரமாக குதித்துக் கொண்டிருக்கும் சம்முவை {படையை} சோபிக்கச் செய்து, சமுத்திர தீரத்தில் இரண்டாம் சாகரத்தைப் போல நின்றுகொண்டு இருக்கிறானோ,{42ஆ,43அ} உத்தம நதியான பர்ணாச நதியைப்[6] பருகி வசித்திருக்கிறானோ, தர்தரத்திற்கு {தர்தர மலைக்கு} ஒப்பானவனான இவன் வினதன் என்ற பெயரைக் கொண்ட யூதபனாவான்.{43ஆ,44அ} இவனது படையில் அறுபது லக்ஷம் பிலவங்கமர்கள் இருக்கின்றனர்.(42ஆ-44ஆ)
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், "பர்ணாசை ஆறு, ராஜஸ்தானில் உள்ள பனாஸ் ஆறு என்று கருதப்படுகிறது. இந்த வினதன் பூர்வத்தில் அந்தப் பகுதியில் வசித்து வந்தவன் என்பதை இது குறிக்கிறது" என்றிருக்கிறது.
விக்ராந்தனும், பலவானும், குரோதனன் என்ற பெயரைக் கொண்டவனுமான வானரன், தன் யூதங்களுடனும் {துருப்புகளுடனும்}, அதன் பாகங்களுடனும் {பிரிவுகளுடனும்} உம்மை யுத்தத்திற்கு அறைகூவி அழைக்கிறான்.(45)
எந்த வானரன், காவிக் கல் போன்ற தன் உடலை வளர்த்துக் கொண்டு, சர்வ வானரர்களையும் அவமதிக்கும் வகையில் தன் பலத்தால் சதா செருக்குற்றிருக்கிறானோ,{46} கவயன் என்ற பெயருடைய {இந்த} தேஜஸ்வி, குரோதத்துடன் உம்மை எதிர்த்து நிற்கிறான்.(46,47அ) எழுபது லக்ஷம் பேர் இவனைப் பின்தொடர்கிறார்கள். இவன் தானே {தனியாகவே} லங்கையை மர்த்தனம் செய்ய {நசுக்க} விரும்புகிறான்.(47ஆ,இ) இந்த வீர யூதபர்களும், யூதபசிரேஷ்டர்ளும் தாங்கிக்கொள்ளப்பட முடியாதவர்கள். இவர்களின் எண்ணிக்கையை அறிய முடியாது. இவர்களின் யூதங்கள் பாகங்களாக {பிரிந்து} இருக்கின்றன.(48)
யுத்த காண்டம் சர்க்கம் – 026ல் உள்ள சுலோகங்கள்: 48
Previous | | Sanskrit | | English | | Next |