Depart to Lanka | Kishkindha-Kanda-Sarga-67 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமான் அளவற்ற தன் வலிமையை வெளிப்படுத்தி, மஹேந்திர மலைக்குச் சென்றது...
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கிய படங்களின் தொகுப்பு |
நூறு யோஜனைகள் கடப்பதற்காக, அகன்று விரிந்த வேகத்துடனே முழுமையாகத் தன்னைப் பெருக்கிக் கொண்ட அந்த மஹாபலவானை {ஹனுமானைக்} கண்ட வானரோத்தமர்கள்,{1} உடனேயே தங்கள் சோகத்தை விட்டுவிட்டு, மகிழ்ச்சியில் மூழ்கியவர்களாக கர்ஜித்தபடியே ஹனூமந்தனைப் போற்றினர்.(1,2) சுற்றிலும் இருந்த அவர்கள், திரிவிக்கிரமச் {மூன்றடியால் உலகளந்த} செயலில் உற்சாகம் அடைந்த பிரஜைகள் நாராயணனை {கண்டதைப்} போல அவனைக் கண்டு, மகிழ்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.(3) மஹாபலம்வாய்ந்த ஹனுமான், {இவ்வாறு} போற்றப்படுகையில் மகிழ்ச்சியடைந்து, பலம் அதிகரித்தவனாகத் தன் வாலை வேகமாக வளைத்து அடித்தபடியே இன்னும் அளவில் அதிகரித்தான்.(4)
சர்வ வானரபுங்கவர்களாலும் போற்றப்படுகையில், தேஜஸ்ஸில் நிறைந்த அவனது ரூபம் மிதமிஞ்சியதானது.(5) அகல விரிந்த கிரியின் குகையில், சிம்ஹம் எப்படித் துள்ளிக் குதிக்குமோ, அப்படியே இப்போது மாருதனின் ஔரஸ புத்திரன் {வாயு மைந்தன் ஹனுமான்} துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான்.(6) பெரிதும் வளர்ந்த அந்த மதிமிக்கவனின் முகம், பழுக்கக் காய்ந்த சட்டிக்கு ஒப்பாகச் சிவந்து, தூமமில்லாத பாவகனை {புகையற்ற நெருப்பைப்} போல சோபித்துக் கொண்டிருந்தது.(7)
ஹரிக்களின் {குரங்குகளின்} மத்தியில் ஊக்கத்துடன் முனைந்தெழுந்தவனும், பெரிதும் மகிழ்ச்சியடைந்தவனும், மயிர்க்கூச்சம் அடைந்த மேனியுடன் கூடியவனுமான ஹனுமான், முதிர்ந்த ஹரிக்களுக்கு மரியாதை செலுத்திவிட்டு {பின்வருமாறு} சொன்னான்:(8) “பர்வத உச்சிகளைத் தகர்ப்பவரும், ஹுதாசனனின் சகாவும் {அக்னியின் நண்பரும்}, அநிலரும் {காற்றாக வீசுபவரும்}, ஒப்பற்ற பலவானுமான வாயு ஆகாசகோசரராவார் {வானத்தில் திரிபவராவார்}.(9) சீக்கிர வேகம் கொண்டவரும், சீக்கிர நடை கொண்டவரும், மஹாத்மாவுமான அந்த மாருதரின் {வாயு தேவனின்} ஔரஸ புத்திரனான நான், தாவிச்செல்வதில் அவருக்குச் சமானனாவேன்.(10)
விஸ்தீரணமான அம்பரத்தை {வானத்தை} கிழித்துவிடுவதைப் போல நிற்கும் மேரு கிரியைத் தடையில்லாமல் ஆயிரம் முறை வலம் வரும் உற்சாகம் கொண்டவனாக இருக்கிறேன்.(11) என் கைகளின் வேகத்தால் சாகரத்தைக் கலக்கி, பர்வதங்கள், நதிகள், ஹிரதங்கள் {மடுக்கள்} உள்ளிட்ட உலகம் முழுவதையும் {அந்த சாகரத்திலேயே} மூழ்கடிக்கும் உற்சாகம் கொண்டவனாக இருக்கிறேன்.(12) வருணாலயமான சமுத்திரத்தை என் தொடைகளாலும், முழங்கால்களின் வேகத்தாலும் மேலெழச் செய்து, மஹாகிராஹங்களையும் {பெரும் முதலைகளையும் / சுறாக்களையும்} மேலெழச் செய்து வெளியே புரளச் செய்வேன்.(13) பன்னகங்களை உண்பவரும், பக்ஷிகளால் {பறவைகளால்} சேவிக்கப்படுபவரும், ஆகாசத்தில் பறப்பவருமான வைனதேயரை {வினதையின் மகன் கருடரை} ஆயிரம் முறை வலம் வரும் சக்தனாக இருக்கிறேன்.(14)
பிலவகரிஷபர்களே {சாவிச் செல்பவர்களில் காளைகளே}, அல்லது உதயத்திலிருந்து {உதய மலையில் இருந்து} புறப்பட்டு, ஜுவலிக்கும் கதிர்களை மாலையாகக் கொண்ட ஆதித்யன் அஸ்தமிக்கும் {அஸ்த மலையை அடையும்} முன் செல்லும் உற்சாகம் கொண்டவனாக இருக்கிறேன். அதன்பிறகும், பூமியைத் தீண்டாமல், மஹத்தான பீம வேகத்துடன் மீண்டும் திரும்பி வரும் உற்சாகம் கொண்டவனாக இருக்கிறேன்.(15,16) ஆகாச கோசரர்கள் {வானில் திரியும்} அனைவரையும் தாண்டிச் செல்லும் உற்சாகம் கொண்டவனாக இருக்கிறேன். சாகரத்தை வற்றச் செய்வேன், மேதினியைப் பிளப்பேன்.(17) பிலவங்கமர்களே, தாண்டிச் செல்லும்போது பர்வதங்களைப் பொடியாகச் செய்வேன். தாண்டிச் செல்லும்போது என் தொடை வேகத்தால் மஹார்ணவத்தையும் {பெருங்கடலையும்} பற்றி இழுப்பேன்.(18)
இப்போது ஆகாயத்தில் தாவப் போகும் என்னை, விதவிதமான புஷ்பங்களுடன் கூடிய கொடிகளும், மரங்களும் எங்குமிருந்து பின்தொடர்ந்து வரப் போகின்றன. அம்பரத்தில் {வானத்தில்} என் பாதை, ஸ்வாதியின் {சுவாதி நட்சத்திரத்தின்} பாதையைப் போல விளங்கும்.(19,20அ) வானரர்களே, கோரமான ஆகாசத்தில் பாய்ந்துச் செல்லும் என்னை, பறந்து செல்லும் சர்வபூதங்களும் பார்க்கப் போகின்றன.(20ஆ,21அ) பிலவங்கமர்களே {தாவிச் செல்பவர்களே}, மஹாமேருவின் பிரதிகாசத்துடன், திவத்தை {சொர்க்கத்தை} மறைத்துச் செல்பவனான என்னை, அம்பரத்தை விழுங்கப் போகிறவனைப் போலக் காண்பீர்கள்.(21ஆ,22அ) சமாஹிதத்துடன் தாவிச் செல்லும்போது மேகங்களைச் சிதறடிக்கவும், பர்வதங்களை நடுங்கச் செய்யவும், சாகரத்தைக் கலக்கவும் விரும்புகிறேன்.(22ஆ,இ) வைனதேயர் {வினதையின் மகனான கருடன்}, அல்லது மாருதரின் {வாயு} சக்தியுடன் தாவப் போகும் என்னை, வேறு எந்தப்பூதமும் பின்தொடர முடியாது. சுபர்ணராஜாவையோ {கருடரையோ}, மஹாபலம் பொருந்திய மாருதரையோ {வாயுவையோ} தவிர, அத்தகைய வேறு எவரையும் நான் பார்க்கவில்லை.(23) கருமேகத்தில் உதிக்கும் மின்னலைப் போல் உடனேயே, நிமிஷாந்தர மாத்திரத்தில் ஆலம்பனமில்லாத அம்பரத்தில் {தாங்கும் ஆதாரம் இல்லாத வானத்தில்} நான் பாயப் போகிறேன்.(24)
சாகரத்தைத் தாண்டும்போது, மூன்றடிகளையும் எளிதாக எடுத்து வைத்த விஷ்ணுவைப் போலவே என் ரூபமும் தோன்றப்போகிறது.(25) நான் புத்தியால் தெளிவாகப் பார்க்கிறேன். மனமும், சேஷ்டைகளும் {சகுனங்களும்} அவ்வாறே தெரிவிக்கின்றன. நான் வைதேஹியைப் பார்ப்பேன். பிலவங்கமர்களே, மகிழ்ச்சியடைவீராக.(26) மாருதருக்குச் சமமான வேகத்துடனும், கருடனுக்குச் சமமான வேகத்துடனும் பத்தாயிரம் யோஜனைகளையும் என்னால் கடக்க முடியும். இதுவே என் மதியாகும் {எண்ணமாகும்}.(27) எழுந்து சென்றால், வஜ்ரதாரியான வாசவனின் {இந்திரனின்}, அல்லது ஸ்வயம்பூவான பிரம்மனின் கையிலிருக்கும் அம்ருதத்தையும் வேகமாக இங்கே கொண்டு வந்துவிடுவேன்.{28} இலங்கையை அடியோடு பெயர்த்துக் கொண்டும் இங்கே வந்துவிடுவேன். இதுவே என் மதியாகும் {எண்ணமாகும்”, என்றான் ஹனுமான்}.(28,29அ)
அப்போது, அவ்வாறு கர்ஜனை செய்தவனும், அளவில்லா ஒளியைக் கொண்டவனுமான அந்த வானரசிரேஷ்டனிடம் {ஹனுமானிடம்} பெரும் மகிழ்ச்சியடைந்த ஹரயர்கள் {குரங்குகள், வளர்ந்த உடலுடன் கூடிய அவனைக் காண} வியப்புடன் மேலே பார்த்தனர்.(29ஆ,30அ) ஞாதிகளின் {உறவினரின்} சோகத்தை நாசம் செய்யும் அவனது அந்த வசனத்தைக் கேட்ட பிலவகேஷ்வரனான {தாவிச் செல்பவர்களின் தலைவனான} ஜாம்பவான், பெரிதும் மகிழ்ச்சியடைந்தவனாக {பின்வருமாறு} சொன்னான்:(30ஆ,31அ) “வீரா, கேசரிபுத்திரா, வேகவானே, மாருதாத்மஜனே, தாதா {ஐயா}, உன்னால் ஞாதிகளின் எல்லையற்ற சோகம் முற்றிலும் ஒழிந்தது.(31ஆ,32அ) உன் நன்மையை விரும்பி ஒன்றுகூடியிருக்கும் கபிமுக்கியர்கள், சமாஹிதத்துடன் {ஒரு முகமாக} காரியசித்தியின் பொருட்டு மங்கலக் காரியங்களைச் செய்வார்கள்.(32ஆ,33அ) இரிஷிகளின் அருளாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட முதிய கபிக்கள், குருக்கள் {பெரியோர்} ஆகியோரின் அருளாலும், நீ மஹார்ணவத்தை {பெருங்கடலைத்} தாண்டுவாய்.(33ஆ,34அ) வனஓகஸர்கள் அனைவரின் ஜீவன்களும் உன்னையே பின்தொடர்ந்து வருவதால், நீ திரும்பி வரும்வரை ஒற்றைக்காலில் நிற்கப் போகிறோம்” {என்றான் ஜாம்பவான்}.(34ஆ,35அ)
அப்போது அந்த ஹரிசார்தூலன் {ஹனுமான்}, அந்த வன ஓகஸர்களிடம் {வனத்தில் வசிப்பவர்களான குரங்குகளிடம் பின்வருமாறு} சொன்னான், “உலகத்தைக் கடக்கும் என் வேகத்தை எவராலும் தாங்கிக் கொள்ள முடியாது.(35ஆ,36அ) பெரும்பாறைகளுடனும், நெடும்பாறைகளுடனும் ஒளிரும் மஹேந்திர நகத்தின் {மலையின்} இந்தச் சிகரங்கள், ஸ்திரமானவையாகவும், உயர்ந்தவையாகவும் இருக்கின்றன.(36ஆ,37அ) நானாவித மரங்கள் படர்ந்தவையும், தாதுக்களின் வழியே சோபிப்பவையுமான இந்த மஹேந்திர சிகரங்களில் இருந்து நான் வேகமாகச் செல்லப் போகிறேன்.(37ஆ,38அ) இங்கிருந்து நூறு யோஜனைகளைத் தாண்டப்போகும் என்னுடைய வேகத்தை மஹத்தான இந்த சிகரங்களால் தாங்கமுடியும்” {என்றான் ஹனுமான்}.(38ஆ,39அ)
பிறகு, மாருதனாகவே {வாயுவாகவே} அறியப்பட்டவனும், மாருதாத்மஜனும் {வாயுவின் மகனும்}, அரிந்தமனுமான அந்த ஹரி {பகைவரை அழிக்கும் குரங்குமான அந்த ஹனுமான்}, நகசிரேஷ்டமான {சிறந்த மலையான} மஹேந்திரத்தில் ஏறினான்.{39ஆ,இ} அங்கே {அந்த மஹேந்திர மலையில்}, நானாவித புஷ்பங்களால் நிறைந்ததும்; மிருகங்களால் {மான்களால்} சேவிக்கப்படுவதுமான புல்வெளி இருந்தது; மலர்ந்த கொடிகளும், நித்தியம் புஷ்பங்கள், பழங்களைத் தரும் மரங்களும் இருந்தன;{40} சிம்ஹங்களும், சார்தூலங்களும் {புலிகளும்} திரிந்தன; மத்த மாதங்கங்கள் {மதங்கொண்ட யானைகள்} அதை சேவித்தன; மதங்கொண்ட துவிஜகணங்களின் {பறவைக்கூட்டங்களின்} ஒலி அலைமோதியது; நீரோடைகளும் நிறைந்து வழிந்து கொண்டிருந்தன.(39-41) விக்கிரமத்தில் மஹேந்திரனுக்கு சமமானவனும், மஹாபலம் வாய்ந்தவனுமான ஹரிசிரேஷ்டன் {குரங்குகளில் சிறந்த ஹனுமான்}, மகத்தான உயரம் கொண்ட மஹேந்திர சிகரத்தில் ஏறினான்.(42)
அந்த மஹாத்மாவின் கைகளால் பீடிக்கப்பட்ட மஹாசைலம் {பெரும் மலை}, சிம்ஹத்தின் உள்ளங்கால்களால் தாக்கப்பட்ட மத்தமஹாதுவீபத்தை {மதங்கொண்ட பெரும் யானையைப்} போலப் பிளிறியது.(43) பரந்து விரிந்து சிதறிய பாறைக் குவியலால் மிருகங்களும், மாதங்கங்களும் அச்சமடைந்தன; பெரும் மரங்கள் குலுங்கின; {புதிய} நீரருவிகளும் வெளிப்பட்டன[1].(44) அப்போது உயர்ந்த முகடுகளுடன் கூடிய அந்த மஹாகிரியை {பெரும் மலையை}, பானத்தில் {குடியில்} ஈடுபட்டு வெறி கொண்ட எண்ணற்ற கந்தர்வ மிதுனங்களும் {ஜோடிகள்}, பறக்கும் பறவைகளும், வித்யாதரகணங்களும் முற்றிலும் கைவிட்டன. உரகங்கள் {பாம்புகள்} ஓடி ஒளிந்தன. சைல சிருங்கங்களில் இருந்து பாறைகள் விழுந்தன.(45,46) அப்போது, அந்த தரணீதரம் {மஹேந்திர மலை}, பெருமூச்சுவிட்டபடியே பாதி அளவு வெளியே வந்த புஜகங்களினால் {பாம்புகளினால்}, பதாகைகளுடன் கூடியதைப் போலப் பிரகாசித்தது.(47) அச்சத்தில் கலங்கிய ரிஷிகளாலும் கைவிடப்பட்டபோது, அந்த உயர்ந்த மலையானது, மஹத்தான காந்தாரத்தில் {ஆழமான காட்டில்} வாட்டமுறும் வழிப்போக்கனைப் போலத் தெரிந்தது.(48)
[1] பகு வாய மடங்கல் வைகும் படர் வரை முழுதும் மூழ்கஉகு வாய விடம் கொள் நாகத்து ஒத்த வால் சுற்றி ஊழின்நெகு வாய சிகர கோடி நெரிவன தெரிய நின்றான்மக ஆமை முதுகில் தோன்றும் மந்தரம் எனலும் ஆனான்- கம்பராமாயணம் 4738ம் பாடல், மயேந்திரப் படலம்பொருள்: திறந்த வாயையுடைய ஆண்சிங்கங்கள் வாழ்கின்றதும், பரந்துள்ளதுமான {அந்த மகேந்திர} மலை முழுவதும் {அனுமனின் பாரத்தால்} மூழ்கவும், வரிசையாய்த் தோன்றும் சிதைந்த இடங்களையுடைய சிகரங்கள் பலவும் நெரிந்து பொடியாக, நஞ்சைக் கக்குகின்ற வாயையுடைய பாம்பினைப் போன்ற வாலைச் சுற்றிக் கொண்டு {பெரும்வடிவத்தில்} நின்றான். {திருமாலான} பெரிய ஆமையின் முதுகில் தோன்றிய மந்தர மலையைப் போலத் தெரிந்தான்.
வேகவானும், பரவீரஹந்தனும் {பகை வீரர்களைக் கொல்பவனும்}, மனஸ்வியும் {மனக்கட்டுப்பாடு கொண்டவனும்}, மஹானுபாவனுமான {பெருந்திறன்மிக்கவனுமான} அந்த ஹரிபிரவீரன் {ஹனுமான்}, மனத்தை திடப்படுத்திக் கொண்டு, வேகத்தில் ஆத்மாவை ஒருமுகப்படுத்தி, மனத்தால் லங்கையை அடைந்தவனானான்.(49)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 67ல் உள்ள சுலோகங்கள்: 49
*******கிஷ்கிந்தா காண்டம் முற்றும்*******
Previous | | Sanskrit | | English | | Next |