Third ideation | Kishkindha-Kanda-Sarga-54 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராஜ்ஜியத்தைக் கைவிட்டு, தனி ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தால், சுக்ரீவனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று அரசியல் தந்திரங்களைப் பயன்படுத்தி அறிவுரை கூறி அங்கதனைத் தேற்றிய ஹனுமான்...
Bing - Artificial Intelligence Pictures collage | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் கிடைத்த படங்களின் தொகுப்பு |
தாராதிபதியின் {சந்திரனின்} ஒளியுடன் கூடிய தாரன் இதைச் சொன்னபோது, அங்கதனால் அந்த ராஜ்ஜியம் அபகரிக்கப்படுமென ஹனுமான் நினைத்தான்.(1) ‘வாலிசுதன் {வாலியின் மைந்தனான அங்கதன்} அஷ்டாங்க புத்தியுடனும், சதுர்பலத்துடனும் {நால்வகை பலங்களுடனும்}, சதுர்தச {பதினான்கு} குணங்களுடனும் கூடியவன்’[1] என்று ஹனுமான் நினைத்தான்.(2)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “ஒரு சராசரி மனிதனின் நுண்ணறியுந்திறன் எட்டு அங்கங்களுடன் கூடியது என்று {பின்வருமாறு} சொல்லப்படுகிறது,“ஷு²ஷ்²ரூஷ ஷ²ரவணம் சைவ க்³ரஹணம் தா⁴ரணம் ததா² |ஊஹ அபோஹ அர்த² விஜ்ஞானம் தத்த்வ ஜ்ஞானம் ச தீ⁴ கு³ணா: |”அதாவது, 1. சுஷ்ரூஷம் - கூர்மையாக கவனித்தல், 2. சிரவணம் - கருத்தில் கொள்ளுதல், 3. கிரஹணம் - ஈர்த்து வைத்துக் கொள்ளுதல் {நினைவில் நிறுத்தல்}, 4. தாரணம் - நினைவில் மீட்டல், 5. ஊஹம் - ஊகித்தறிதல், 6. அபோஹம் - நுட்பமாகப் பகுத்தறிதல், 7. அர்த்தவிஜ்ஞானம் - அர்த்தங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளுதல், 8. தத்துவஞானம் - {உண்மையைப் புரிந்து கொள்ளுதல்} என்பன அந்த குணங்களாகும்.நால்வகை பலங்கள் என்பன 1. மனோபலம் - மனவலிமை, 2. பாஹுபலம் - தோள்வலிமை, 3. உபாய பலம் - உத்தி வலிமை, 4. பந்து பலம் - உறவினர் வலிமை என்று சொல்லப்படுகின்றன.பதினான்கு குணங்கள் என்பனவற்றுக்கு,“தே³ஷ² காலஜ்ஞத தா³ர்ட்⁴யம் ஸர்வ க்லேஷ² ஸஹிஷ்ணுதா |ஸர்வ விஜ்ஞானிதா தா³க்ஷ்யம் ஊர்ஜ: ஸம்வ்ருʼத மந்த்ரதா |அவிஸம்விதி³தா ஷௌ²ர்யம் ஷ²க்திஜ்ஞத்வம் க்ருʼதஜ்ஞதா |ஷ²ரண ஆக³த வத்ஸ்ல்யம் அமர்ஷத்வம் அசாலன |”என்று சொல்லப்படுகிறது.அதாவது, 1. தேசகாலஜ்ஞம் - இடம், நேரம் ஆகியவற்றை அறிதல், 2. தார்டியம் - கடுமை / மன உறுதி, 3. ஸர்வகிலேசஸஹிஷ்ணுதம் - தொல்லைகள் அனைத்தையும் பொறுத்துக் கொள்ளுதல், 4. சர்வவிஜ்ஞானிதம் - அனைத்தையும் அறிதல் / எல்லாம் உணர்தல், 5. தாக்ஷ்யம் - நிபுணத்துவம் / வல்லமை, 6. ஊர்ஜம் - விடாமுயற்சி, 7. ஸம்விருத மந்திரதம் - ஆலோசனைகளை வெளியிடாமல் மறைத்தல் 8. அவிஸம்விதிதம் - தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்தல் / அபத்தமாகப் பேசாதிருத்தல், 9. ஷௌர்யம் - துணிவு, 10. சக்திஜ்ஞத்வம் - பிறரின் வலிமையை முழுமையாக அறிதல், 11. கிருதஜ்ஞதம் - நன்றி மறவாமை, 12. சரணாகதவத்ஸல்யம் - அண்டியோரை அன்புடன் ஆதரித்தல், 13. அமர்ஷத்வம் - தேவையான இடங்களில் கோபத்தை வெளிப்படுத்தல், 14. அசாலனம் - நடுக்கமின்மை / கலக்கமின்மை / கலவரமின்மை என்பன அந்த குணங்களாகும்” என்றிருக்கிறது.
சுக்லபக்ஷத்தில் வளரும் சசியை {வளர்பிறைச் சந்திரனைப்} போல உறுதியிலும், தேஜஸ், பலம், பராக்கிரமம் ஆகியவற்றிலும் நிறைபவனும், பெரும் வர்த்தமானம் கொண்டவனும் {பேருடல் படைத்தவனும்},{3} புத்தியில் பிருஹஸ்பதிக்கு சமானனும், விக்கிரமத்தில் பிதாவுக்கு {வாலிக்கு} ஒப்பானவனும், சுக்கிரனுக்குப் புரந்தரனைப் போல கூரிய கவனத்துடன் தாரனை சேவிப்பவனும்,{4} தலைவனின் அர்த்தத்தில் {சுக்ரீவனின் காரியத்தில்} அலுப்படைந்தவனுமான அங்கதனை அனுகூலனாக்க சர்வ சாஸ்திர விசாரதனான ஹனுமான் பேச ஆரம்பித்தான்.(3-5) அவன் {ஹனுமான்}, நான்கு உபாயங்களில் மூன்றாவதை {பேதத்தை} விவரித்து, அந்த வானரர்கள் அனைவரையும் வாக்கிய சம்பத்தால் பேதிக்க {சொற்றொடர்களெனும் செல்வத்தால் பிரிக்கத்} தொடங்கினான்[2].(6)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “அரசியல் பகை தொடர்பாக 1. சாமம் {அமைதி அடைதல் / சமாதானம் செய்து கொள்ளல்}, 2. தானம் {கொடை அளித்தல்}, 3. பேதம் {பிரிவினை உண்டாக்கல்}, 4. தண்டம் {தண்டித்தல்} என்பனவே இந்த நான்கு உபாயங்களாகும்” என்றிருக்கிறது. அதில் மூன்றாம் உபாயம் என்பது பேதங்கொள்ளச் செய்வதாகும்.
அவர்கள் அனைவரிடமும் வேற்றுமையை உண்டாக்கிய பிறகு, கோபமெனும் உபாயத்துடன் கூடிய விதவிதமான பயங்கர வாக்கியங்களை அங்கதனிடம் சொல்லத் தொடங்கினான்:(7) “தாரேயா {தாரையின் மகனே}, நீ யுத்தத்தில் உன் பிதாவை {வாலியைக்} காட்டிலும் அதிசமர்த்தன். நிச்சயம் உன் பிதாவைப் போலவே கபிராஜ்ஜியத்தை {குரங்குகளின் ராஜ்ஜியத்தைத்} திடமாகத் தாங்கவல்லவன்.(8) ஹரிபுங்கவா, கபயர்கள் {குரங்குகள்} நித்தியம் நிலையற்ற சித்தம் கொண்டவர்கள். புத்திரர்கள், தாரங்கள் ஆகியோரைப் பிரிந்தவர்கள், நீ ஆணையிடுவதை சஹித்துக் கொள்ள மாட்டார்கள்.(9) எப்படி பிரத்யக்ஷமாக {நேரடியாகச் சொல்ல} முடியுமோ அப்படியே நான் உனக்குச் சொல்கிறேன். இந்த ஜாம்பவான், மஹாகபிக்களான நீலன், சுஹோத்ரன் உள்ளிட்ட இவர்களில் யாரும் உன்னை அனுசரிக்கமாட்டார்கள்.{10} நானும் மாட்டேன். அவர்களும், இவர்களுமான எங்கள் அனைவரையும் சாமம், தானம் முதலிய குணங்களாலும், தண்டத்தாலும் சுக்ரீவனிடம் இருந்து பிரிப்பது உனக்கு சாத்தியமில்லை.(10,11) பலவானின், எதிர் ஆசனத்தில் அமர்ந்து துர்பலன் {பலமற்றவன்} பேசினாலும், ஆத்மரக்ஷாகரத்திற்காகவும் {தற்காப்பிற்காகவும்} துர்பலன் {அந்த பலவானை} எதிர்க்கலாகாது.(12)
இதில் எந்த தாத்ரியை {குகையை} நினைக்கிறாயோ, {தாரன் சொல்ல} “இந்த பிலம்” என்று கேட்கிறாயோ, இவை அனைத்தையும் பிளப்பது லக்ஷ்மண பாணங்களுக்கு அற்ப காரியமே.(13) பூர்வத்தில் அசனி ஏவிய இந்திரனாலேயே அஃது அற்பமாக செய்யப்பட்டது எனும்போது, இலக்ஷ்மணர், தன் கூரிய பாணங்களால் இலை தொன்னையைப் போலக் கிழித்துவிடுவார்.(14) இந்த விதமான லக்ஷ்மணரின் நாராசங்கள், ஸ்பரிசத்தால் கிரிகளையே பிளக்கவல்ல அசனிக்கும், வஜ்ரத்திற்கும் சமமானவையாக இருக்கின்றன.(15) பரந்தபா {எதிரிகளை எரிப்பவனே}, நீ எப்போது கீழே இறங்குவாயோ அப்போதே சர்வ ஹரயர்களும் {குரங்குகளும்} ஒரு நிச்சயத்தை அடைந்து {உன்னைக்} கைவிடுவார்கள்.(16) புத்திரர்களையும், தாரங்களையும் நினைத்து நித்தியம் கவலையுடனும், பசியுடனும் {ஏக்கத்துடனும்}, துக்கத்துடனும் சயனங்களில் அழுது கொண்டிருப்பவர்கள் உன்னை விட்டுச் செல்வார்கள்.(17)
நலம் விரும்பும் நண்பர்களாலும், பந்துக்களாலும் கைவிடப்படும் நீ, அசையும் துரும்பைக் கண்டும் அச்சமடைபவனாக மாறுவாய்.(18) அதி உக்கிர வேகத்துடன் கூடியவையும், கூர்மையானவையும், கோரமானவையுமான லக்ஷ்மண சாயகங்கள் {அம்புகள்}, விலகிச் செல்லும் உன்னைக் கொல்ல ஏவப்பட்டால் அவற்றின் மஹாவேகத்தைத் தடுக்க முடியாது.(19) எங்களுடன் கூடியவனாகப் பணிவுடன் {கிஷ்கிந்தைக்குத்} திரும்பிச் சென்றால், முன்பைப் போலவே சுக்ரீவர் உன்னை ராஜ்ஜியத்தில் ஸ்தாபிப்பார்.(20) உன் பித்ருவ்யரும் {சிறிய தந்தையும்}, அன்பை விரும்புகிறவரும், திட விரதரும், தூய்மையானவரும், சத்தியப்ரதிஜ்ஞருமான அந்த தர்மராஜா {சுக்ரீவர்} நீ எவ்வகையிலும் நாசமடைவதை விரும்பமாட்டார்.(21) உன் மாதாவின் {தாரையின்} பிரியத்திற்கும், விருப்பத்திற்கும் உரியவர். அவரது ஜீவிதத்தின் அர்த்தமும் அதுவே. அவருக்கு {சுக்ரீவருக்கு} வேறு சந்ததியும் இல்லை. எனவே, அங்கதா, அங்கே செல்வாயாக” {என்றான் ஹனுமான்}.(22)
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 54ல் உள்ள சுலோகங்கள்: 22
Previous | | Sanskrit | | English | | Next |