South as said by Sugreeva | Kishkindha-Kanda-Sarga-41 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: ஹனுமான், நீலன், அங்கதன், ஜாம்பவான் உள்ளிட்ட வானரர்களை தென் திசையில் தேடுமாறு ஆணையிட்ட சுக்ரீவன்; தெற்குத் திசை குறித்த வர்ணனை...
சுக்ரீவன் மஹத்தான அந்த வானர பலத்தை {படையைக் கிழக்கே} அனுப்பியபிறகு, நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வானரர்களை தக்ஷிணத்திற்கு {தென்திசைக்கு} அனுப்பத் தொடங்கினான்.(1) அக்னிசுதனான {அக்னியின் மகனான} நீலனையும், வானரன் ஹனூமந்தனையும், பிதாமஹனின் சுதனும் {பிரம்மனின் மகனும்}, மஹாஓஜசனுமான {ஆற்றல்மிகுந்தவனுமான} ஜாம்பவந்தனையும் {ஜாம்பவானையும்},{2} சுஹோத்ரனையும், சராரியையும், அதேபோல சரகுல்மனையும், கஜன், கவாக்ஷன், கவயன், சுஷேணன், விருஷபன் ஆகியோரையும்,{3} மைந்தன், துவிவிதன் ஆகியோரையும், சுஷேணன் {விஜயன் / சரபன்}[1], கந்தமாதனன், ஹுதாசன சுதர்களான {அக்னியின் மகன்களான} உல்காமுகன், அனங்கன் ஆகிய இருவரையும்,{4} அங்கதனையும், வேறு பிரமுகர்களையும், வேக விக்கிரம சம்பன்னர்களான {வேகமும், வீரமும் நிறைந்த} வீரர்களையும், விசேஷங்களை அறிந்தவனும், வீரனுமான கபிகணேஷ்வரன் {குரங்குக் கூட்டத்தின் தலைவனான சுக்ரீவன்} அழைத்தான்.(2-5)
[1] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “மேலுள்ள சுலோகங்களில் சொல்லப்படும் சுஷேணன், தாரையின் தந்தையல்ல. சுக்ரீவன் வேறு திசைக்கு அனுப்பும்போது அவனைக் குறித்தும் பின்னர் சொல்கிறான்” என்றிருக்கிறது.
அப்போது, அந்த ஹரிவீரர்களில் உறுதியும், வலிமையும் மிக்க அங்கதனைத் தலைவனாக்கி தக்ஷிண திசைக்கு {தெற்குத் திசைக்கு} அனுப்பினான்.(6) அந்தத் திசையில் கடப்பதற்கரிதான சில தேசங்களை அந்த கபீஷ்வரன் அந்த கபி முக்கியர்களிடம் {பின்வருமாறு} நன்கு விளக்கிச் சொன்னான்:(7) “ஆயிரம் சிரங்களை {சிகரங்களைக்} கொண்டதும், நானாவித மரங்கள், கொடிகள் நிறைந்ததுமான விந்தியம், மஹா உரகங்களால் சேவிக்கப்படும் நர்மதா நதி,{8} ரம்மியமான கோதாவரி, மஹாநதியான கிருஷ்ணாவேணி, மஹாபாக்கியம் நிறைந்ததும், மஹா உரகங்களால் சேவிக்கப்படுவதுமான வரதம் {வரதை}, மேகலம் {மேகலை}, உத்கலம் {உத்கலை}, தசார்ண நகரங்கள்,{9} அப்ரவந்தி {அச்வவந்தி}, அவந்தி, விதர்ப்பம், ருஷ்டிகம், ரம்மியமான மாஹீசகம் ஆகிய எல்லா இடங்களிலும் பார்ப்பீராக[2].(8-10) அதேபோல, வங்க கலிங்கம் {மத்ஸ்யம்} ஆகியற்றின் அந்தங்களிலுள்ள கௌசிகத்திலும் {காசிகத்திலும்}, பர்வதங்கள், நதிகள், குகைகள் ஆகியவற்றிலும், தண்டகாரண்யத்திலும், கோதாவரி நதியிலும், அதே போல ஆந்திரத்திலும், புண்ட்ரத்திலும், சோழம், பாண்டியம், கேரளம் ஆகிய அனைத்திலும் நெருக்கமாகப் பார்ப்பீராக {தேடுவீராக}[3].(11,12) தாது மண்டலங்களையும், விசித்திர சிகரங்களையும் கொண்டதும், செழிப்புமிக்கதும், அழகாக புஷ்பித்திருக்கும் காடுகளைக் கொண்டதுமான அயோமுக பர்வதங்களை[4] அடைந்து, சந்தன வன தேசத்திலும் {சந்தன மரங்கள் நிறைந்த காடுகளிலும்}, மஹா கிரிகளிலும் {குடகு உள்ளிட்ட பெரும் மலைகளிலும்} தேடுவீராக[5].(13,14அ)
[2] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “மஹாநதி என்பதைத் தனியாகக் கொண்டால் அஃது ஒடிசாவில் இருக்கும் நதியாகும். அங்கே இருந்த ராஜ்ஜியம் உத்கலம், அல்லது கலிங்க ராஜ்ஜியமாகும். அவ்வாறு தனியாகக் கொள்ளாவிட்டால் பெரும் நதியான கிருஷ்ணாவேணி என்று கொள்ள வேண்டும். மேகலை என்பது அமர கண்டக பர்வதம் என்று பூர்வத்தில் அழைக்கப்பட்டதும், நர்மதை உற்பத்தியாவதுமான மலையாகும். வரதா நதி இப்போது வார்தா ஆறு என்று மஹாராஷ்டிராவில் அழைக்கப்படுகிறது. சுக்ரீவன் சொல்லும் ஆறுகளின் வரிசை தற்கால வரைபடத்திற்குத் தகுந்தவாறு இல்லை. இருந்திருந்தால் மஹாநதி கோதாவரிக்கு முன்பு சொல்லப்பட்டிருக்க வேண்டும். சில பதிப்புகளில் அப்ரவந்தி நாடு, அஷ்வவந்தி என்று அழைக்கப்படுகிறது. அவந்தி என்பது அரேபிய குதிரைகளுக்குப் புகழ்பெற்ற பழம்பெரும் நாடாகும். அது மத்திய பிரதேஷில் இருக்கும் உஜ்ஜைனைச் சூழ்ந்திருக்கும் பகுதியாகும். இங்கே சுக்ரீவனின் விவரிப்பில் வரிசை சிதறியிருப்பதாகவே தெரிகிறது” என்றிருக்கிறது.
[3] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “சில பதிப்புகளில் வங்க தேசத்திற்குப் பதிலாக மத்ஸ்ய தேசம் குறிப்பிடப்படுகிறது. வங்கம் என்பது இன்றைய இந்தியாவில் மேற்கு வங்க மாநிலமும், பங்களாதேஷ் நாடும் இணைந்த பகுதியாகும். கௌசிகம் என்பது சில பதிப்புகளில் காசிகம் என்றிருக்கிறது. கலிங்கம் என்பது வங்கத்தை வடக்கில் கொண்ட ஒடிசாவாகும். ஆந்திரா என்பது இன்றைய ஆந்திராவாகும். சோழம் என்பது இன்றைய தமிழகம் ஆகும், அதிலுங்குறிப்பாகத் தமிழகத்தின் வடபகுதியாகும். புண்ட்ரம் {பல்லவம்} என்பது குத்துமதிப்பாக ஆந்திரத்திற்கும், சோழத்திற்கும் இடைப்பட்ட நிலப்பகுதியாகும். பாண்டியம் என்பது கன்னியாகுமரியை அந்தமாகக் கொண்ட தென்தமிழகமாகும். கேரளம் என்பது கோகர்ணம் முதல் கன்னியாகுமரி வரையுள்ள இன்றைய கேரள மாநிலமாகும். அதன் வரலாற்றுப் பெயர் சேர ராஜ்ஜியம் என்பதாகும். அசோகன் காலத்திலேயே அது கேரளபுத்ரம் என்றழைக்கப்பட்டது” என்றிருக்கிறது.
[4] வட சொற்கும் தென் சொற்கும் வரம்பு ஆகிநான்மறையும் மற்றை நூலும்இடை சொற் பொருட்கு எல்லாம் எல்லை ஆய்நல் அறிவுக்கு ஈறு ஆய் வேறுபுடை சுற்றும் துணை இன்றி புகழ் பொதிந்தமெய்யே போல் பூத்து நின்றஅடை சுற்றும் தண் சாரல் ஓங்கியவேங்கடத்தில் சென்று அடைதிர் மாதோ- கம்பராமாயணம் 4472ம் பாடல், நாடவிட்ட படலம்பொருள்: {சம்ஸ்கிருதம் உள்ளிட்ட} வடதிசை மொழிகளுக்கும், {தமிழ் உள்ளிட்ட} தென்திசை மொழிகளுக்கும் எல்லையாகத் திகழ்வதும், நான்கு வேதங்களும், பிற சாத்திரங்களும் தம்மிடம் குறித்துள்ள பொருள்கள் அனைத்திற்கும் முடிவான பொருளைத் தன்பாற் கொண்டுள்ளதும், நல்லறிவுக்கு வரம்பாகி, பக்கத்தில் பொருந்திய உவமானப் பொருள் ஏதுமில்லாமல் புகழ் பொதிந்த உடலைப் போல பூத்து நிற்கும் தேனடைகளால் சுற்றிலும் குளிர்ந்த தாழ்வரைகளைக் கொண்டதும், உயர்ந்து நிற்பதுமான வேங்கட மலையை அடைவீராக.
[5] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இந்த மலை அகஸ்திய மலை என்றும் அழைக்கப்பட்டது. இது தாமிரபரணி ஆறு உற்பத்தியாகும் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்கிறது” என்றிருக்கிறது.
அங்கிருந்து திவ்யமானவளும், தெளிந்த நீரின் கொள்ளிடமும், அப்சரஸ் கணங்களுடன் விளையாடிக் கொண்டிருப்பவளுமான காவிரியானவள்[6] பாய்ந்து கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.(14ஆ,15அ) மஹாஓஜசம் கொண்ட அந்த மலய நக {பேரொளிமிக்க அந்த மலய மலையின்} உச்சியில், ஆதித்யனுக்கு ஒப்பாக அமர்ந்திருக்கும் ரிஷிசத்தமரான அகஸ்தியரை அங்கே காணலாம்.(15ஆ,16அ) அங்கிருந்து மஹாத்மாவும், தூய்மையானவருமான அவரது {அகஸ்தியரின்} அனுமதியைப் பெற்றுக் கொண்டு, நீர்வாழ்வனவற்றைப் பிடிப்பவர்களால் பெரிதும் போற்றப்படுபவளான தாம்ரபர்ணீ எனும் மஹாநதியைக் கடப்பீராக.(16ஆ,17அ) சித்திர சந்தன வனங்களால் {சந்தன மரங்கள் நிறைந்த அழகான காடுகளால்} மறைக்கப்படும் துவீபவாரிணியான அந்த யுவதி {இளம்பெண்ணான தாமிரபரணி}[7] காந்தத்தை ஈர்க்கும் காந்தத்தைப் போல சமுத்திரத்திடம் செல்கிறாள்.(17ஆ,18அ)
[6] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “காவிரி ஆறானது, தென் தீபகற்பத்திலுள்ள மிகச் சிறந்த ஆறாகும். இது தென்மேற்கிலுள்ள கூர்க் {குடகுப்} பகுதியில் பிரஹங்கிரி மலைகளில் இருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்து, பெருமளவு நிலப்பரப்பிற்கு பாசனம் செய்துவிட்டு, வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்த ஆற்றுடன் தொடர்புடைய பல புராணக் கதைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று, “அகஸ்திய முனிவர் கங்கையாற்றில் இருந்து நீரைக் கொண்டு வந்தார்; அவரது கமண்டலத்தில் இருந்து பாய்ந்ததே காவிரி” என்பதாகும். காகாவிரி என்பதே அசல் தமிழ்ப்பெயராகும். இதில் காகம் என்பது காக்கையைக் குறிக்கும், விரி என்பது பரந்து விரிந்து பாய்வதைக் குறிக்கும். அகஸ்தியர் கங்கை நீரைக் கொண்டு வந்தபோது, அவரது கமண்டலத்தில் இருந்து காட்டில் பாய்ந்ததால் அது காவிரி என்றழைக்கப்பட்டது. கா என்பது இந்திரனின் தோட்டமாகும். அது காவிரி என்று அழைக்கப்பட்டாலும், “புலவாய் வாழி காவேரி, நடந்தாய் வாழி காவேரி” என்று சிலப்பதிகாரம் பதிவு செய்கிறது.
[7] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “தாமிரபரணி ஆற்றின் கரையோரமெங்கும் சந்தன மரங்கள் இருந்தன. அவற்றை அவளது நீர் தொடர்ந்து தேய்ப்பதன் மூலம் அவளுக்கு சந்தனக்குழம்பைத் தருகிறது. அவள், தன் கணவனான சமுத்திரத்தை நெருங்கும்போது, தீவுகளைப் போன்ற அவளது மார்பகங்கள், கரைகளெங்கும் உள்ள மரங்களால் கொடுக்கப்படும் அந்த சந்தனக்குழம்பால் பூசப்பெறுகின்றன என்பது கவித்துவ வெளிப்பாடாகும். தாம்ரபர்ணி, தாமிரவருணி, அல்லது தாம்ரவர்ணி என்ற சொற்கள் அனைத்தும் தாமிரம், வர்ணம் என்ற சொற்களில் இருந்து வந்தன. கரையெங்கும் உள்ள சந்தன மரங்களின் மென்தாமிர நிறத்தால், “தாமிரம் போன்ற கரைகளைக் கொண்ட ஆறு” என்ற பொருளில் அவ்வாறு அழைக்கப்பட்டது. அவள் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அகஸ்திய மலையில் தோன்றி, புனிதக்ஷேத்திரமான பாபநாசம் வழியாகப் பாய்ந்து, திருநெல்வேலியைச் செழிப்படையச் செய்து, வங்கக் கடலில் கலக்கிறாள். இந்த நதியின் கரைகளில் எண்ணற்ற வைணவத் திருப்பதிகள் இருக்கின்றன. இது குறித்தும் பல புராணக் கதைகள் இருக்கின்றன. அகஸ்திய முனிவர் தாமிரபரணி உற்பத்தியானதிலிருந்து இருபத்தேழு நாட்களில் அவளை சமுத்திரத்திடம் அழைத்துச் சென்றதாகச் சொல்லப்படும் கதையும் அவற்றில் ஒன்றாகும். தாமிரபரணி ஆற்றுக்குப் பிறகு, சிம்ஹள தேசம், அதாவது இன்றைய ஸ்ரீலங்கா இருக்கிறது. இந்தத் தீவு முதலில் “தப்ரோபனே” Taprobane என்ற பெயரால் அலக்சாண்டரின் படையெடுப்பின் மூலம் ஐரோப்பிய உலகத்திற்கு முதன்முதலாகத் தெரியப்படுத்தப்பட்டது. இருப்பினும் உண்மையான வடிவம் தாம்பபன்னி, அதாவது சம்ஸ்கிருதத்தில் தாம்ரபர்ணி என்பது “செவ்விலை கொண்டது” என்ற பொருளைக் கொண்டதாகும். ப்தாலமி (Ptolemy) இத்தீவை சலீகே என்றழைத்திருக்கிறான். அது சிம்ஹலகம் என்பதன் திரிந்த வடிவமாகும். அபு ரிஹான் இதை சிங்கல் தீப் என்று அழைக்கிறார். அதன்பிறகு இஃது அரேபிய பெயரில் திலான் என்றழைக்கப்பட்டது. அதன்விளைவாக சிலோன் என்றும் அழைக்கப்பட்டது. நீண்ட காலத்திற்குப் பிறகு ராமாயணத்தில் உள்ளபடியே லங்கா என்றழைக்கப்பட்டது. இருப்பினும் அதற்கு முன் ஸ்ரீ என்பது சேர்க்கப்பட்டு ஸ்ரீலங்கா என்று இன்று அழைக்கப்படுகிறது” என்று ஏன்சியன் ஜியோகரஃபி ஆஃப் இந்தியா Ancient Geography of India என்ற நூலில் இருக்கிறது” என்றிருக்கிறது. தாமிரபரணிக்கு பொருநை என்ற தமிழ்ப்பெயரும் உண்டு. இந்த அடிக்குறிப்பில், தாமிரபரணிக்கு அடுத்து இலங்கை வர்ணிக்கப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், அடுத்த சுலோகத்தில் பாண்டியர்களின் பழம்பெரும் தலைநகரான கபாடபுரம் குறிப்பிடப்படுகிறது. அதன் பிறகே மஹேந்திரகிரி குறிப்பிடப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வானரர்களே, அங்கிருந்து ஹேமமயமானதும் {பொன்மயமானதும்}, திவ்யமானதும், முத்து, மணிகளால் அலங்கரிக்கப்பட்டதுமான பாண்டியர்களின் கவாடத்தை {கபாடபுரத்தை} அடைந்து, அங்கும் பார்ப்பீராக.(18ஆ,19அ) பிறகு சமுத்திரத்தை அடைந்து, அர்த்தத்தை நிச்சயமாகத் தீர்மானித்துக் கொண்டு,{19ஆ} அகஸ்தியரால் அங்கே சாகரத்தின் அந்தரத்தில் {கடலில்} வைக்கப்பட்டதும், அழகிய மரங்களடர்ந்ததுமான உத்தம பர்வதம் ஸ்ரீமான் மஹேந்திரம் என்றழைக்கப்படுகிறது.{20} ஜாதரூபமயமான {பொன்மயமான} அந்த ஸ்ரீமான் {செழிப்பான மகேந்திர பர்வதம்} மஹார்ணவத்திற்குள் {பெருங்கடலுக்குள்} மூழ்கிக் கிடக்கிறது[8].(19ஆ-21அ) நானாவிதமானவையும், புஷ்பித்தவையுமான மரங்களுடனும், கொடிகளுடனும் சோபிப்பதும்,{21ஆ} முக்கியமான தேவ, ரிஷி, யக்ஷர்களாலும், அப்சரஸ்களாலும் சேவிக்கப்படுவதும், சித்த, சாரண சங்கங்களால் {கூட்டங்களால்} நிறைந்திருப்பதும், மனோஹரமானதுமான {மனத்தைக் கொள்ளை கொள்வதுமான}{22} அந்த மலைக்கு சஹஸ்ராக்ஷன் {ஆயிரங் கண்களைக் கொண்ட இந்திரன்} ஒவ்வொரு மங்கல நாளிலும் {அமாவாசை பௌர்ணமிகளில்} சதா வந்து கொண்டே இருக்கிறான்.(21ஆ-23அ) அதன் {மகேந்திர மலையின்} மறுகரையில் நூறு யோஜனைகள் விஸ்தாரம் கொண்டதும், மானுஷர்கள் கடப்பதற்கரியதும், பளபளப்பதுமான அந்த துவீபத்தின் {லங்கைத் தீவின்} எல்லை வரைத் தேடுவீராக.(23ஆ,24அ) அங்கே சீதையை விசேஷமாகவும், எவ்வாறாயினும் தேடுவீராக. அந்த தேசத்திலேயே வதம் செய்யத் தகுந்தவனும், துராத்மாவும், ராக்ஷசாதிபனும், சஹஸ்ராக்ஷனுக்கு {இந்திரனுக்கு} நிகராகப் பிரகாசிப்பவனுமான ராவணன் வசிக்கிறான்[9].(24ஆ,25)
[8] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “இந்தியாவின் தென்பகுதியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் முடிவில், தாடகை மலை, மஹேந்திரகிரி, மருந்துவ மலை ஆகிய மூன்று மலைகள் இருக்கின்றன. தாடகை மலை என்பது தாடகை என்ற ராக்ஷசி இருந்த காடுகளைக் கொண்டது என்றும், ராமன் தன் பால பருவத்தில் இவ்வளவு தூரம் வந்தே தாடகையை வதம் செய்தான் என்றும் நம்பப்படுகிறது. மஹேந்திரகிரியில் இருந்தே ஹனுமான் லங்கைக்குத் தாவினான். இந்த மலையில் வெளிப்படும் ஆற்றுக்கு ஹனுமான் என்று பெயரிடப்பட்டுள்ளது. {போரில் சாய்ந்த} இலக்ஷ்மணனை குணமடையச் செய்வதற்கு, ஹனுமான் இமயத்தில் இருந்து சஞ்சீவினி மூலிகையைக் கொண்டுவந்தபோது விழுந்த இமயத்தின் ஒரு பகுதியே மருந்துவமலை என்று நம்பப்படுகிறது. இப்போதும் அந்த வட்டார மக்கள் அந்த மலையில் விளையும் மூலிகைகளால் பலனடைந்து வருகின்றனர். அங்கே கிடைக்கும் கசப்பான இலைகளும் சமைக்கப்படும்போது இன்சுவையை அடைகின்றன. மறுபுறம் ஸ்ரீலங்காவிலும் இதற்கு ஒப்பாக சிங்களத்தில் ருமசலகண்டம் என்றழைக்கப்படும் மூலிகை மலை இருக்கிறது” என்றிருக்கிறது.
[9] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “பெருங்கடலின் மறுகரையில் உள்ள இந்தத் தீவே ராவணனின் லங்கை என்றும், இன்றைய ஸ்ரீலங்கா என்றும் நம்பப்படுகிறது. தாமிரபரணி ஆற்றுடன் கூடிய இந்தத் தீவின் தொடர்பு மேற்கண்டவாறே குறிப்பிடப்படுகிறது. இங்கே ஒரு சச்சரவு நேர்கிறது. {தாமிரபரணி ஆற்றுக்குப் பிறகு, பாண்டியர்களின் கபாடபுரம் குறிப்பிடப்படுவது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியதாகும்}. சுக்ரீவன் 4:7:2ல் தனக்கு ராவணனின் இருப்பிடம் தெரியாதென்கிறான். ஆனால் இப்போதோ ராவணன் வசிக்கும் குறிப்பிட்ட தீவையே அடையாளம் காட்டுகிறான். அப்போது சுக்ரீவன் பொய் சொன்னானா என்று கேட்கலாம். புத்திசாலி மன்னன் எவனும் தனக்குத் தெரிந்த ரகசியத்தை, அதுவும் அரசாங்க ரகசியத்தைச் சொல்லமாட்டான். முதலிலேயே சுக்ரீவன் ராமனிடம் இதைச் சொல்லியிருந்தால், ராமன் வாலியைக் கொல்லாமல் நேரடியாக லங்கைக்குச் சென்றிருப்பான். சுக்ரீவனின் நலத்திற்கு இஃது உகந்ததல்ல. சுக்ரீவனுக்கு ராவணன் வசிக்கும் லங்கை தெரிந்திருந்தது என்பது சரியே. ஆனால் சீதையைக் கடத்திச் சென்று லங்கையில்தான் ராவணன் வைத்திருப்பான் என்பதற்கான உத்தரவாதம் ஏதுமில்லை. எனவே அந்த சந்தேகத்தையே சுக்ரீவன் அங்கும், இங்கும் பயன்படுத்திக் கொள்கிறான். மேலும் தாரையின் மூலமே சுக்ரீவன் ராவணன் குறித்த விபரங்களை அறிந்தான் என்பதை நம்புவதற்கும் இடமிருக்கிறது. ஆனால் சுக்ரீவன் இளவரசனாக இருந்தவன். இவற்றையெல்லாம் அறியாமல் இருந்திருக்கமாட்டான். அவன் வேண்டுமென்ற ராமனிடன் உண்மையை மறைத்தான் என்றும் எடுத்துக் கொள்ளலாம். ராவணனின் வசிப்பிடம் தெரிந்திருந்தால் மற்ற திசைகளுக்கெல்லாம் சுக்ரீவன் ஏன் வானரர்களை அனுப்ப வேண்டும் என்று கேட்கப்பட்டால், திருடன் எவனும் தன் கொள்ளையைத் தன் வீட்டில் பதுக்க மாட்டான் என்ற திடமான நம்பிக்கையே அதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். இங்கேயுங்கூட சுக்ரீவனால் லங்கையின் உட்பகுதிகளை விரிவாக விவரிக்க முடியவில்லை. சுக்ரீவன் சொல்லும் புவியியல் சார்ந்த செய்திகளைக் கேட்டு மலைக்கும் ராமனுங் கூட, ராவணனின் இந்தக் குறிப்பட்ட இடத்தை முன்பே நீ ஏன் சொல்லவில்லை என்று கேட்பதுமில்லை. எனவே, சுக்ரீவன் தகவலைச் சொல்ல மறுப்பது முற்றிலும் அரசியல் சார்ந்தது. இப்போதோ தன் காரியம் நிறைவேறி, நண்பரின் நோக்கமான சீதையேத் தேடும் அவசியத்திற்காக இவற்றை வெளிப்படுத்துகிறான் என்றும் கொள்ளலாம்” என்றிருக்கிறது.
அந்த தக்ஷிண சமுத்திரத்தின் மத்தியில், நிழலைக் கொண்டு தன் இரையை ஈர்த்து உண்பவளும், அங்காரகை என்று நன்கறியப்பட்டவளுமான ராக்ஷசி இருக்கிறாள்[10].(26) இவ்வாறு சந்தேகமுள்ள இடங்களிலும், சந்தேகமற்ற இடங்களிலும், சந்தேகங்கள் தொலையும்வண்ணம் அளவில்லா ஆற்றல்படைத்த நரேந்திரனின் பத்தினியை {மனிதர்களின் தலைவரான ராமரின் மனைவி சீதையைத்} தேடுவீராக.(27) அதை {லங்கையெனும் அந்தத் தீவைக்} கடந்ததும், நூறு யோஜனைகள் தூரத்தில், லக்ஷ்மீவானும், சித்தர்கள், சாரணர்களால் சேவிக்கப்படுவதும், புஷ்பிதகம் என்ற பெயரைக் கொண்டதுமான ஒரு கிரி {மலை} சமுத்திரத்தில் இருக்கிறது.(28) சந்திர, சூரியக் கதிர்களுக்கு ஒப்பான சாகர நீரில் இருக்கும் அதன் {புஷ்பிதக மலையின்} உயர்ந்த சிருங்கங்கள், அம்பரத்தை {சிகரங்கள், வானத்தை} முட்டுவது போல பிரகாசித்துக் கொண்டிருக்கும்.(29) அதில் காஞ்சனமாக {பொன்னாக} இருக்கும் ஏக சிருங்கத்தை {ஒரு சிகரத்தை} திவாகரன் சேவிக்கிறான். ஒரே வெண்வெள்ளி {போன்ற ஒரு சிகரத்தை} நிசாகரன் {சந்திரன்} சேவிக்கிறான். நன்றியற்றவர்களாலும், அன்பற்றவர்களாலும், நாஸ்திகர்களாலும் பார்க்க இயலாததாக அவை {புஷ்பிதக மலையில் இருக்கும் பொன்சிகரமும், வெள்ளி சிகரமும்} இருக்கின்றன.(30)
[10] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “சிம்ஹிகை என்றும் அழைக்கப்பட்ட இந்த ராக்ஷசியை, சுந்தரகாண்டத்தில் ஹனுமான் கிழித்தெறிகிறான்” என்றிருக்கிறது.
வானரர்களே, அந்த சைலத்தை சிரசால் {மலையைத் தலையால்} வணங்கி முற்றாகத் தேடுவீராக. அடைவதற்கரியதும், கடப்பதற்கரியதுமான அவ்வழியில் நாற்பது யோஜனைகளில் சூரியவான் என்ற பெயரில் ஒரு பர்வதம் இருக்கிறது.(31,32அ) அதைக் கடந்ததும், விருப்பத்திற்குரிய அனைத்துப் பழங்களைத் தரவல்லவையும், எக்காலத்திலும் மனோஹரமானவையும் விருக்ஷங்கள் {மரங்கள்} நிறைந்ததும், வைத்யுதம் என்ற பெயரைக் கொண்டதுமான பர்வதம் இருக்கிறது.(32ஆ,33அ) வானரர்களே, அங்கே மிகச்சிறந்த பழங்களையும், கிழங்குகளையும் உண்டு, மதிப்புமிக்க மதுவை {தேனைப்} பருகிவிட்டு மேலும் தொடர்ந்து செல்வீராக.(33ஆ,34அ) அங்கே நேத்திரங்களையும் {கண்களையும்}, மனத்தையும் கவர்வதும், குஞ்சரம் என்ற பெயரைக் கொண்டதுமான பர்வதம் இருக்கிறது. அதில் விஷ்வகர்மனால் நிர்மாணிக்கப்பட்ட அகஸ்திய பவனமும் இருக்கிறது.(34ஆ,35அ) அங்கே ஒரு யோஜனை விஸ்தாரம் கொண்டதும், தசயோஜனை {பத்து யோஜனை} உயரம் கொண்டதும், திவ்யமானதும், நானாவித ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டதுமான காஞ்சனசரணம் {அகஸ்தியரின் பொன்மாளிகை} இருக்கிறது.(35ஆ,36அ)
அங்கே போகவதி என்ற பெயரைக் கொண்டதும், சர்ப்பாலயமாக {பாம்புகளின் வசிப்பிடமாகத்} திகழ்வதுமான புரீ {நகரம்},{36ஆ} விசாலமான வீதிகளுடனும், அடைவதற்கரிய தன்மையுடனும், எங்கும் {அனைத்துப் பக்கங்களிலும்} பாதுகாப்புடனும் திகழ்கிறது. கோரமானவையும், கூரிய பற்களையும், மஹாவிஷத்தையும் கொண்டவையுமான பன்னகங்களால் {பாம்புகளால்} பாதுகாக்கப்படும் அதில் {போகவதியில்},{37} சர்ப்பராஜனும், மஹாகோரனும், புகழ்பெற்றவனுமான வாசுகி வசித்து வருகிறான்.(36ஆ-38அ) அந்த போகவதீ புரீயிலும் {அந்த போகவதி நகரத்திலும்}, அதைவிட்டு வெளியேறியதும் சூழ்ந்திருக்கும் அந்தர {தென்னெல்லை} தேசங்களிலும் தேடுவீராக. (38ஆ,39அ)
அந்த தேசங்களை {இடங்களைத்} தாண்டியதும், மஹா ரிஷபத்திற்கு ஒப்பானதும், சர்வரத்தினமயமானதும், ஸ்ரீமான் ரிஷபன் என்ற பெயரைக் கொண்டதுமான பர்வதம் இருக்கிறது.(39ஆ,40அ) அங்கே காவிக்கற்களுடன் மஞ்சளாகவும், பத்மகமாகவும் {தாமரை இலையின் பச்சையாகவும்}, வான் நீலமாகவும், அக்னி போன்ற பிரபையைக் கொண்ட திவ்யமான சந்தன மரங்கள் இருக்கின்றன.(40ஆ,41அ) அந்த சந்தன மரங்களைக் கண்டு, கடந்ததும், ஒருபோதும் தீண்டத்தகாததும், கோரமானதுமான ரோஹித வனம் கந்தர்வர்களால் பாதுகாப்புடன் இருக்கிறது.(41ஆ,42அ) அங்கே சைலூஷன், கிராமணி, சிக்ஷன், சுகன், அதேபோல பப்ரு என்ற பெயரைக் கொண்டவர்களும், சூரியனுக்கு ஒப்பான பிரபையுடனும் கூடியவர்களும், சூரியன், சோமன், அக்னி ஆகியோரின் புண்ணிய கர்மங்களைச் செய்தவர்களுமான ஐந்து கந்தர்வ பதிகள் வசித்து வருகின்றனர்.(42ஆ,43) பிருத்வியின் அந்தமான அங்கே, வெல்லப்படமுடியாதவர்களும், ஸ்வர்க்கத்தை வென்றவர்களும் இருக்கின்றனர். அதன் பிறகு மிகப் பயங்கரமான பித்ரு லோகத்தை {மூதாதையரின்} உலகத்தை நீங்கள் சேவிக்க வேண்டாம்.(44)
வீர வானரபுங்கவர்களே, கஷ்டமான இருளால் சூழப்பட்ட இந்த யமராஜதானி {யமனின் தலைநகர்} வரை மட்டுமே நீங்கள் செல்வதற்கும், தேடுவதற்கும் சாத்தியமாகும். அதன்பிறகு உடலுறுப்புகளைக் கொண்டவர்களால் செல்ல முடியாது.(45} இவை அனைத்தையும், வேறு இடங்களையும் கண்டு, நுட்பமாகத் தேடி, வைதேஹியின் கதியை அறிந்து, திரும்பி வருவதே உங்களுக்குத் தகும்.(46) எவன் ஒரு மாசத்திற்கு முன்பே திரும்பி, “சீதையைக் கண்டேன்” என்று சொல்வானோ, அவன் எனக்கு இணையாக வாழும் போகத்தையும், சுகங்களையும் அனுபவிப்பான்[11].(47) என் பிராணன்களிலும் விசேஷமான அவனைவிட பிரியதரன் {அன்புக்குரியவன்} எவனுமில்லை. பலமுறை அபராதம் செய்திருந்தாலும் {குற்றங்களில் ஈடுபட்டிருந்தாலும்} அவன் என் பந்துவாகிவிடுவன்.(48) அளவில்லா பலமும், பராக்கிரமும் கொண்டவர்களும், பரந்துபட்ட குணங்களையும், குலங்களையுங் கொண்டவர்களுமான நீங்கள் அனைவரும், மனுஜபதியின் மகளை {மனிதர்களின் தலைவனான ஜனகனின் மகளான சீதையை} எப்படி மீட்பீர்களோ, அந்த குணத்திற்குத் தகுந்த புருஷார்த்தம் {ராமன் என்ற மனிதனின் நோக்கத்தை நிறைவேற்றும் காரியம்} ஆரம்பமாகட்டும்” {என்றான் சுக்ரீவன்}.(49)
[11] தேசிராஜு ஹனுமந்தராவ் பதிப்பின் அடிக்குறிப்பில், “சுந்தரகாண்டத்தில் சீதையைக் கண்டுபிடித்த ஹனுமான், “சீதையைக் கண்டேன்” என்ற அதே சொற்களையே சொல்லும் பகுதிக்கு உரையாசிரியர்கள் பெரும் மதிப்பை அளிக்கின்றனர்” என்றிருக்கிறது.
கிஷ்கிந்தா காண்டம் சர்க்கம் – 41ல் உள்ள சுலோகங்கள்: 49
Previous | | Sanskrit | | English | | Next |