Northern Entrance | Sundara-Kanda-Sarga-02 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இலங்காபுரி அமைந்துள்ள தீவைச் சுற்றிலும் இருந்த புவியியல்; இலங்கையின் பிரதான நுழைவாயிலை மிகச் சுருங்கிய வடிவில் அடைந்த ஹனுமான்...
This picture was created using Artificial Intelligence in Bing website and edited elsewhere | செயற்கை நுண்ணறிவின் மூலம் "பிங்" வலைத்தளத்தில் உண்டாக்கி திருத்தப்பட்ட படம் |
கடப்பதற்கரிய சாகரத்தைக் கடந்தும், ஸ்வஸ்தமாக {களைப்பில்லா நலத்துடன்} இருந்த அந்த மஹாபலவான் {ஹனுமான்}, திரிகூடத்தின் சிகரத்தில்[1] அமைந்திருந்த லங்கையைக் கண்டான்[2].(1) அப்போது, அந்த வீரியவான், மரங்கள் சொரிந்த புஷ்பவர்ஷத்தால் {மலர்மாரியால்} புஷ்பமயமானவனைப் போல அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தான்.(2) உத்தம விக்கிரமத்துடன் கூடிய அந்தக் கபி ஸ்ரீமான் {ஹனுமான்}, நூறு யோஜனைகளைக் கடந்தும் பெருமூச்சுவிடாமல், களைப்படையாமல் அங்கே நின்றான்[3].(3) {அவன்}, “நான் அனேக நூறு யோஜனைகளைக் கடப்பேன். நூறு யோஜனைகளெனக் கணக்கிடப்பட்ட சாகர அந்தத்தை {கடலின் எல்லையை / அக்கரையைக்} குறித்து என்ன சொல்வது?” {என்று நினைத்தான்}.(4)
[1] பாரதத்தின் ஜம்முகச்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு திரிகூட மலையும், ஜார்கண்ட் மாநிலத்தில், தேவ்கர் மாவட்டத்தில் ஒரு திரிகூட மலையும் இருக்கின்றன. அம்மலைகள் ஏதும் இங்கே பொருந்தாது. புராணங்களின் அடிப்படையில், மஹாமேரு மலையின் நான்கு புறங்களிலும் இருபது மலைகள் சூழ்ந்திருந்தன. அதிலொன்று இந்தத் திரிகூட மலையாகும். மஹாமேரு இமயத்தின் வடபகுதியில் இருந்ததாக நம்பப்படுகிறது. இங்கே குறிப்பிடப்படும் திரிகூடமோ தெற்கேயுள்ள இலங்கையில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. புராணங்களில் இதற்கொரு கதை சொல்லப்படுகிறது. வாயுதேவனுக்கும், {உலகைத் தாங்கும் நாகமன்னனான} வாசுகிக்குமிடையில், “இருவரில் எவர் பெரியவர்?” என்ற சச்சரவு நடந்தது. வாசுகி மஹாமேருவைச் சுற்றிலும் சுழன்று பற்றிக் கொண்டான். வாயுவால் அந்தப் பகுதிக்குள் நுழையமுடியாததால், பெருங்கோபம் அடைந்து, உலகம் முழுவதிலும் பெரும் சூறாவளியாக வீசினான். இதனால் மஹாமேருவும் நடுங்கியது. அச்சமடைந்த தேவர்கள் பிரம்மனையும், சிவனையும் நாடினர். பிரம்மனும், சிவனும் விஷ்ணுவிடம் அவர்களை அழைத்துச் சென்றனர். அதன் விளைவாக, வாசுகி தன் பிடியைத் தளர்த்தி அம்மலையை விடுவித்தான். அப்போது வாயு அங்கே புகுந்து, ஒரு பகுதியை தென் கடலுக்குள் தூக்கி வீசினான். அந்த மலையின் சிகரத்தில் விசுவகர்மனால் நிர்மாணிக்கப்பட்ட நகரமே லங்கை என்று அழைக்கப்படுகிறது. “பாகவத புராணத்தில், இந்த மலை இரும்பு, வெள்ளி, தங்கத்தாலான மூன்று சிகரங்களுடன் 10,000 யோஜனைகள் அளவு கொண்டதாகச் சொல்லப்படுகிறது” என்று விக்கியில் தரவு கிடைக்கிறது https://en.wikipedia.org/wiki/Trikuta
[2] மண் அடி உற்று மீது வான் உறுவரம்பின் தன்மைஎண் அடி யற்ற குன்றில் நிலைத்து நின்று எய்த நோக்கிவிண் இடை உலகம் என்னும் மெல்லியல் மேனி நோக்கக்கண்ணடி வைத்தது அன்ன இலங்கையைத் தெரியக் கண்டான்- கம்பராமாயணம், 4831ம் பாடல், கடல் தாவு படலம்பொருள்: கீழ்ப்பாகம் பூமியிலும், மேற்பாகம் ஆகாயத்திலும் பொருந்தியிருக்கும் எல்லையின் தன்மை நினைக்க இயலாத {பவள} மலையில் நிலைத்து நின்று {ஹனுமான்}, வானத்தில் உள்ள தேவலோகம் என்னும் பெண்ணானவள் தன்னுடைய மேனியை நோக்க கண்ணாடி வைத்தாற்போன்று இருந்த லங்கையை அடைந்து நோக்கித் தெரியக் கண்டான். வால்மீகியில் லம்ப மலை என்று கூறப்படுவது இங்கே பவள மலை என்று அழைக்கப்படுகிறது.
[3] துர்கா-கிஷோர் கோபல்லே {கே.எம்.கே.மூர்த்தி} பதிப்பின் அடிக்குறிப்பில், “ஹனுமான், நூறு யோஜனைகள் கொண்ட பெருங்கடலைக் கடந்ததாக இந்த சுலோகத்திலும், இன்னும் பிறவற்றிலும் குறிப்பிடப்படுகிறது. தற்போது இந்தியாவின் தென்முனைக்கும், ஸ்ரீலங்காவின் வடக்கு முனைக்கும் இடையே கரைக்குக் கரை உள்ள தொலைவு, சுமார் 60 மைல்களாகும். {குறைந்தபட்சம்} ஒரு யோஜனைக்கு 2.5 மைல்கள் என்று கொண்டாலும், நூறு யோஜனைகள் என்பது 250 மைல்களாகின்றன. {பொதுவான அளவீடுகளின்படி ஒரு யோஜனை என்பது சற்றேறக்குறைய 8 கி.மீ. என்பதை ஏற்கனவே கண்டிருக்கிறோம்}. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்பரப்பு சிலகாலத்திற்கு முன்பு நிலப்பரப்புகளால் அமைந்திருந்தது என்ற தற்போதைய புவியியலாளர்களின் கோட்பாட்டுடன் இஃது ஒத்திசைகிறது. பழங்காலத்தில், தற்போதைய ரகுநாதபுரத்தின் {ஒருவேளை ராமநாதபுரமோ} தெற்கே உள்ள பெரும்பகுதி நிலப்பரப்பால் மூடப்பட்டிருந்தது. மேலும், திரிகூடம், லம்பம், சுவேலம் உள்ளிட்ட மலைகள் ராமாயணத்தின்படி லங்கையின் வடக்கே இருந்தன. ஆனால் தற்போது இந்த மலைகள் தென்பகுதியில் காணப்படுகின்றன. இராமாயண காலத்தில் தற்போதைய லங்கையின் வடபகுதிகள் நீரில் மூழ்கியிருந்தன என்பதையே இஃது உணர்த்துகிறது” என்றிருக்கிறது. தமிழ்நாட்டில் திருப்புல்லணி அருகில் ரகுநாதபுரம் என்ற ஒரு கிராமம் இருக்கிறது.
வீரியவான்களில் சிரேஷ்டனும் {சிறந்தவனும்}, பிலவதர்களில் {தாவிச் செல்பவர்களில்} உத்தமனுமானவன் {ஹனுமான்}, பெருங்கடலைக் கடந்து, லங்கைக்கு வேகமாகச் சென்றான்.(5) வனங்களுக்கு மத்தியில், கந்தம் நிறைந்த நீலவண்ணப் புல்வெளிகள், பெரும்பாறைகளுடன் கூடிய நகவந்தங்கள் {சிறந்த மலைகள்} ஆகியவற்றின் வழியே சென்றான்.(6) பிலவகரிஷபனும், தேஜஸ்வியுமான ஹனுமான், புஷ்பித்த வனவரிசைகளின் மரங்களால் மறைக்கப்பட்ட சைலங்களில் {மலைகளில்} நடந்து சென்றான்.(7) அந்தப் பவனாத்மஜன் {வாயுவின் மைந்தன்}, அந்த அசலத்தில் {மலையில்} நின்று, {திரிகூட} மலையின் உச்சியில் இருந்த அந்த லங்கையையும், அதன் வனங்களையும், உபவனங்களையும் கண்டான்.(8)
நன்றாகப் புஷ்பித்திருக்கும் ஸரளங்கள் {தேவதாரு மரங்கள்}, கர்ணிகாரங்கள் {கோங்கு மரங்கள்}, பேரீச்சைமரங்கள், முறளங்கள், எலுமிச்சைகள், குடஜங்கள் {மலைமல்லிகள்}, கேதகங்கள் {தாழைகள்},{9} பூர்ண கந்தம் கொண்ட {நன்மணம் நிறைந்த} பிரியங்கு {ஞாழல்}, நீர்க்கடம்பம், ஏழிலைப்பாலை, புஷ்பமயமான அசனம் {மருதம்}, கோவிதாரம் {மலையாத்தி}, கரவீரம் {அலரி / அரளி} ஆகியவற்றையும்,{10} புஷ்ப பாரத்தால் வளைந்தவையும், மொட்டுகளுடையவையும், பறவைகளால் நிறைந்தவையும், பவனனால் {காற்றினால்} அசைக்கப்பட்ட உச்சிகளுடன் கூடியவையுமான மரங்களையும்,{11} ஹம்ஸங்கள் {அன்னங்கள்}, காரண்டவங்கள் {நீர்க்காக்கைகள்} நிறைந்த, பத்மங்கள் {தாமரைகள்}, நீலோத்பலங்கள் அடர்ந்த வாபிகளையும் {படிகளுடன் கூடிய கிணறுகளையும்}, விதவிதமான நீர்நிலைகளையும்,{12} அனைத்துப் பருவங்களிலும் பழங்களும், புஷ்பங்களும் நிறைந்த விதவிதமான விருக்ஷங்களால் அடர்ந்தவையும், மனோஹரமானவையுமான நானாவித சோலைகளையும், ரம்மியமான உத்யானவனங்களையும் அந்தக் கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான ஹனுமான்} கண்டான்.(9-13)
அந்த லக்ஷ்மீவான் {ஹனுமான்}, ராவணனால் பாலிதம் செய்யப்படும் லங்கையை நெருங்கினான். சுற்றிலும் பத்மங்கள் {தாமரைகள்}, நீலோத்பலங்கள் ஆகியவற்றுடன் கூடிய அகழிகளால் அஃது அலங்கரிக்கப்பட்டு இருந்தது.{14} சீதையைக் கவர்ந்து வந்ததால், ராவணனாலும், பயங்கரவில்லாளிகளும், இடைவிடாமல் உலவுகிறவர்களும், உக்கிரத்வனிகளை {கடுங்குரல்களைக்} கொண்டவர்களுமான ராக்ஷசர்களாலும் நன்றாகக் காவல் காக்கப்பட்டது.{15} அந்த ரம்மியமான மஹாபுரி {லங்கை}, காஞ்சனமயமான பிராகாரங்களால் {பொன்மயமான மதிற்சுவர்களால்} சூழப்பட்டிருந்தது. சரத்கால மேகங்களுக்கு ஒப்பானவையும், கிரகங்களுக்கு ஒப்பான கிருஹங்களாலும் {கோள்களுக்கு ஒப்பான வீடுகளாலும்},{16} வெண்ணிறமாக உயர்ந்தகன்ற நீண்ட வீதிகளாலும், திவ்யமான பதாகைகள், துவஜங்களின் மாலைகளாலும் {கொடிகள், கொடிமரங்களின் வரிசைகளாலும்},{17} சித்திர வேலைகள் செய்யப்பட்டவையும், காஞ்சனமயமானவையுமான தோரண வாயில்களாலும் நிறைந்திருந்த லங்கை, {சொர்க்கத்தில் இருக்கும் தேவர்களின் தலைநகரான அமராவதியை} திவத்தின் தேவபுரியைப் போலிருப்பதை ஹனுமான் கண்டான்.(14-18)
அந்த கபிசிரேஷ்டன், கிரியின் உச்சியில், சுபமான, வெண்ணிற பவனங்களுடன் {மாளிகைகளுடன்} கூடிய லங்கையை, ஆகாசத்தில் அமைந்திருக்கும் ஒரு புரத்தை {நகரத்தைப்} போலக் கண்டான்.(19) ஹனுமான், ராக்ஷசேந்திரனால் {ராவணனால்} பாலிதம் செய்யப்படுவதும், விஷ்வகர்மனால் நிர்மாணிக்கப்பட்டதுமான அந்த புரி {நகரம்}, வானத்தில் மிதப்பதைப் போலக் கண்டான்.(20) பிராகாரத்தின் {மதிற்சுவற்றின்} மேடையை இடையின் முன்புறமாகவும் {மடியாகவும் / அல்குலாகவும்}, பெரும் நீர்க் கொள்ளிடத்தை {அகழியை} வஸ்திரமாகவும், சதக்னிகளையும், சூலங்களையும் கேசமாகவும், காவற்கோபுரங்களைக் காதணிகளாகவும் கொண்டவளும்,{21} விஷ்வகர்மனின் மனத்தில் நிர்மாணிக்கப்பட்டவளுமான லங்கையின் உத்தர துவாரத்தை {வடக்கு வாயிலை} அடைந்த வானரன் {ஹனுமான், பின்வருமாறு} சிந்தித்தான்.(21,22)
கைலாச சிகரத்திற்கு ஒப்பானதும், அம்பரத்தை {வானத்தைத்} தீண்டுவதைப் போலும், உயர்ந்த உத்தம பவனங்களால் {சிறந்த மாளிகைகளால்}, ஆகாசத்தில் பறப்பது போலும் இருப்பதும்,{23} நாகங்களால் {நிறைந்த} போகவதியைப் போல, கோரமான ராக்ஷசர்களால் சம்பூர்ணமாக நிறைந்ததும், சிந்திப்பதற்கரிய வகையில், தூய்மையாக, நன்கு அமைக்கப்பட்டதும், பூர்வத்தில் குபேரனால் ஆளப்பட்டதும்,{24} பாம்புகளால் {காக்கப்படும்} குகையைப் போல, கோரப்பற்களையுடையவர்களும், சூரர்களும், சூலம், பட்டிசம் முதலிய ஆயுதங்களைக் கைகளில் தரித்தவர்களும், கோரர்களுமான ராக்ஷசர்களால் ரக்ஷிக்கப்படுவதுமான{25} அதை {லங்கையைக்} கண்டு, மஹத்தான காப்பாக உள்ள சாகரத்தையும், கோரரிபுவான {கொடும்பகைவனான} ராவணனையும் குறித்து அந்த வானரன் {பின்வருமாறு} சிந்தித்தான்:(23-26) “ஹரயர்கள் {குரங்குகள்} இங்கே வந்தாலும், பயனற்ற நிலையையே அடைவார்கள். ஸுரர்களாலும் {தேவர்களாலும்} யுத்தம் மூலம் லங்கையை வெல்ல இயலாது.(27) இராவணனால் பாலிக்கப்படும் லங்கை அறிவதற்கரியதாகவும், அடைதற்கரியதாகவும் இருக்கிறது. மஹாபாஹுவான ராகவர், இங்கே வர வாய்த்தாலும் என்ன செய்வார்?(28) இராக்ஷசர்களிடம் வலியுறுத்துவதற்கான அவகாசம் இல்லை; தானத்திற்கும் இல்லை; பேதத்திற்கும் இல்லை. யுத்தத்தை நோக்கில் கொள்ளவும் முடியாது[4].(29) மஹாத்மாக்களான வாலிபுத்திரன் {அங்கதன்}, நீலன், மதிமிக்கவரான ராஜர் {சுக்ரீவர்}, நான் ஆகிய நான்கு வானரர்களுக்கு மட்டுமே {இங்கே வருவதற்கான} கதி இருக்கிறது.(30) வைதேஹி ஜீவித்திருக்கிறாளா, இல்லையா என்பதை அறிய வேண்டும். அந்த ஜனகாத்மஜையைக் கண்ட பிறகே, இவற்றைக் குறித்துச் சிந்திக்க வேண்டும்” {என்று நினைத்தான் ஹனுமான்}.(31)
[4] “இராக்ஷசர்களிடம் இன்சொல்லில் சமாதானம் பேசியோ, கொடையளித்தோ, பிரிவினையைத் தூண்டியோ காரியம் சாதிக்கும் வாய்ப்பில்லை. யுத்தத்தைக் குறித்து சிந்திக்கவும் முடியாது” என்பது இங்கே பொருள். அதாவது, ராக்ஷசர்களிடம் சாம, தான, பேத உபாயங்களுக்கான வாய்ப்பில்லை. தண்டம் குறித்து சிந்திக்கவும் முடியாது.
அதன்பிறகு, ராமனின் செழிப்பில் விருப்பமுள்ளவனான அந்த கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான ஹனுமான்}, அந்த கிரிசிருங்கத்தில் {மலைச்சிகரத்தில்} நின்றபடியே ஒரு முஹூர்த்தம் {பின்வருமாறு} சிந்தித்தான்:(32) “பலம்வாய்ந்தவர்களும், குரூரர்களுமான ராக்ஷசர்களால் காவல்காக்கப்படும் ராக்ஷசபுரிக்குள் இந்த ரூபத்தில் நான் பிரவேசிக்க இயலாது.(33) உக்கிர சக்தி கொண்டவர்களும், மஹாவீரியர்களும், பலவந்தர்களுமான சர்வ ராக்ஷசர்களையும் வஞ்சித்துவிட்டே நான் ஜானகியைத் தேட வேண்டும்.(34) நான் காணப்புலப்படாத ரூபத்தில் ராத்திரியில் லங்காபுரிக்குள் பிரவேசிப்பதே, என் மஹத்தான பணியை சாதிப்பதற்கான பிராப்தகாலமாகும்” {என்று நினைத்தான்}.(35)
ஹனுமான், ஸுராஸுரர்களும் {தேவர்களும், அசுரர்களும்} அடைவதற்கரிய அப்பேர்ப்பட்ட புரீயைக் கண்டு {லங்கை நகரத்தைக் குறித்துப் புரிந்து கொண்டு}, மீண்டும் மீண்டும் பெருமூச்சுவிட்டபடி அதைக் குறித்தே {பின்வருமாறு} சிந்தித்தான்:(36) “இராக்ஷசேந்திரனும், துராத்மாவுமான ராவணனுக்குப் புலப்படாமல், எந்த உபாயத்தால் ஜனகாத்மஜையான மைதிலியை பார்க்க {சீதையைத் தேடப்} போகிறேன்?(37) தம்மை உணர்ந்த ராமரின் காரியம் நசிவடையாமல் இருக்க {கெடாதிருக்கச்} செய்வது எப்படி? எவருமில்லாத இடத்தில், ஜனகாத்மஜையைத் தனிமையில் ஏகனாக {தனியனாக} பார்ப்பது எப்படி?(38) தேச, காலங்களுக்கு விரோதமான, தளர்ந்த மனநிலையுடன் கூடிய தூதனை அடைந்தால், நிறைவேறக்கூடிய அர்த்தங்களும் {காரியங்களும்} சூரியோதயத்தில் இருளைப் போல நசிவடையும்.(39) அர்த்தாநர்த்தங்களுக்கிடையே {லாப நஷ்டங்களுக்கு இடையில் / செய்யத்தகுந்தன, செய்யத்தகாதன ஆகியவற்றுக்கிடையில்} நிச்சய புத்தியும் சோபிக்காது {மிகச்சிறந்த தீர்மானமும் விளங்காது}. பண்டிதர்களென மதிக்கப்படும் தூதர்களும், {தங்கள் ஆணவத்தால்} காரியங்களுக்குத் தீங்கு விளைவிப்பார்கள்.(40)
காரியம் நசியாமல் இருப்பது எப்படி? மனத்தளர்ச்சி நேராமல் இருப்பது எப்படி? சமுத்திரத்தைக் கடந்தது வீணாகாமல் இருப்பது எப்படி?(41) இராக்ஷசர்கள் என்னைக் கண்டுவிட்டால், ராவணனைக் கொல்ல விரும்பும் புகழ்பெற்ற மனம் கொண்ட ராமரின் இக்காரியம் வீணாகிவிடுமே.(42) இராக்ஷசர்கள் அறியாமல் ராக்ஷச ரூபத்திலும் எங்கும் இருப்பது சாத்தியமில்லை. வேறு வடிவங்களைக் குறித்துச் சொல்லவும் வேண்டுமா?(43) என் மதி இதுவே. வாயுவே கூட அறியப்படாமல் இங்கே சஞ்சரிக்க முடியாது. பலசாலிகளான ராக்ஷசர்கள் அறியாதது ஏதுமில்லை.(44) என் சுயரூபத்துடன் இங்கிருந்தால், நாசத்தையே அடைவேன். தலைவரின் அர்த்தத்திற்கும் {ராமரின் காரியத்திற்கும்} தீங்கு நேரும்.(45) எனவே, நான் சுயரூபத்தைச் சுருக்கிக் கொண்டு, ராகவரின் அர்த்தசித்திக்காக ரஜனியில் {ராமரின் காரியசாதனைக்காக, இரவில்} லங்கைக்குள் நுழையப் போகிறேன்.(46) அணுகுதற்கரிய புரீக்குள் ராத்திரியில் பிரவேசித்து, ராவணனின் சர்வ பவனங்களிலும் {மாளிகைகள் அனைத்திலும்} தேடினால், ஜனகாத்மஜையைக் கண்டுவிடுவேன்” {என்று நினைத்தான் ஹனுமான்}.(47)
வீரக் கபியான ஹனுமான், வைதேஹியைக் காணும் ஆவலில் இவ்வாறு சிந்தித்த பிறகு, சூரிய அஸ்தமனத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.(48) சூரியன் அஸ்த கதியை அடைந்ததும், மாருதி, பூனையளவு மாத்திரமேயுள்ளவனாகத் தன் தேஹத்தைச் சுருக்கிக் கொண்டு, அற்புதமாகக் காணப்பட்டான்.(49) வீரியவனான ஹனுமான், பிரதோஷ காலத்தில் {இரவின் முதல் ஜாமத்தில்} துரிதமாகப் பாய்ந்து சென்று, நன்கு வகுக்கப்பட்ட மஹாபாதைகளுடன் கூடிய ரம்மியமான புரிக்குள் {லங்கைக்குள்} பிரவேசித்தான்.(50) தங்க, வெள்ளி வண்ண ஸ்தம்பங்களுடனும், கந்தர்வ நகரத்திற்கு ஒப்பான வகையில் தங்கமயமான ஜாலங்களுடனும் {சாளரங்களுடனும்} கூடிய பிரசாதமாலைகளை {மாளிகைகளின் வரிசைகளைக்} கொண்டதாகவும்.{51} ஸ்படிகங்களால் இழைக்கப்பட்டதும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டதும், ஏழடுக்கு, எட்டு அடுக்குத் தளங்களுடன் கூடியதுமான மஹாபுரியை அவன் {ஹனுமான்} கண்டான்.(51,52) வைடூரியங்களாலும், மணிகளாலும், முத்துஜாலங்களாலும் சித்திரமாக அலங்கரிக்கப்பட்ட தளங்களுடன் கூடிய ராக்ஷச பவனங்கள் அங்கே ஒளிர்ந்து கொண்டிருந்தன.(53) சித்திர வண்ணங்ளுடைய காஞ்சத்தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட ராக்ஷசர்களின் லங்கை எங்கும் ஒளியூட்டப்பட்டதாகத் தெரிந்தது.(54)
சிந்திப்பதற்கரியதும், அற்புதத் தோற்றம் கொண்டதுமான லங்கையைக் கண்ட பிறகு, அந்த மஹாகபி {ஹனுமான்}, வைதேஹி, விசனத்துடன் இருப்பாளா, மகிழ்சியாக இருப்பாளா என்பதைக் காணும் ஆவலுற்றான்.(55) அவன், பெரும் மதிப்புமிக்க ஜாம்பூநத ஜாலங்களையும் {தங்கச் சாளரங்களையும்}, தோரணங்களையும் {வாயில்களையும்} கொண்டதும், பீமபலம்வாய்ந்த ராவணனால் பாலிக்கப்படுவதும், க்ஷபாசரைர்களால் {இரவில் திரிபவர்களான ராக்ஷசர்களால்} சூழப்பட்டதும், நெருங்கிய வரிசையில் அமைக்கப்பட்டதும், வெண்கட்டடங்களுடன் கூடியதுமானதை {அந்த லங்காபுரியைக்} கண்டான்.(56) ஆயிரங்கதிர்களுடன் கூடிய சந்திரனும், அவனுக்குத் துணைபுரிபவனைப் போலத் தாரா கணங்களுடன் {நக்ஷத்திரங்களுடன்} மத்திய கதியை அடைந்து ஒளிர்ந்து, ஜோதி விதானத்தால் {ஒளிக்கூடாரத்தால்} உலகத்தை மறைத்து, ஆயிரங்கதிர்களுடன் உதித்தெழுந்தான்.(57) அந்த ஹரிபிரவீரன் {குரங்கு வீரன் ஹனுமான்}, பால், தாமரைத்தண்டு போன்ற வெண்ணிறத்தில், சங்குப் பிரபையுடன் ஒளிர்ந்தபடியே உதித்துக் கொண்டிருந்த சந்திரனை, சரஸில் நீந்திக் கொண்டிருக்கும் ஹம்சத்தைப் போலக் கண்டான்.(58)
சுந்தர காண்டம் சர்க்கம் – 02ல் உள்ள சுலோகங்கள்: 58
Previous | | Sanskrit | | English | | Next |