Monday, 21 November 2022

இராமநீதி | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 100 (76)

Instructions of Rama | Ayodhya-Kanda-Sarga-100 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இராஜநீதியை உரைக்கும் சாக்கில் தன் தந்தை மற்றும் பிறரின் நலத்தை பரதனிடம் விசாரித்த ராமன்...

Bharata and Rama

இராமன், ஜடை தரித்து, மரவுரியுடுத்தி, கூப்பிய கைகளுடன், யுக முடிவில் கண்காண முடியாத பாஸ்கரனை {சூரியனைப்} போலப் புவியில் கிடப்பவனை {பரதனைக்} கண்டான்.(1) வதன நிறம் இழந்தவனும், மெலிந்தவனுமான பரதனை எப்படியோ அடையாளம் கண்டு கொண்ட ராமன், தன்னுடன் பிறந்தானைக் கைகளால் அணைத்தான்.(2) இராகவனான ராமன், பரதனை உச்சிமுகர்ந்து, தன் மடியில் இருத்தி அணைத்துக் கொண்டு அமைதியாக {பின்வருமாறு} கேட்டான்:(3) "தாதா {அன்புக்குரிய ஐயா / குழந்தாய்}, நீ அரண்யத்திற்கு வந்திருக்கிறாயே, உன் பிதா எங்கே? அவர் ஜீவித்திருக்கையில் நீ வனம் வருதல் தகாது.(4) பரதா, நீண்ட காலத்திற்குப் பிறகு, வெகுதூரத்தில் இருந்து வந்திருக்கும் உன்னை, மெலிந்த அங்கங்களுடையவனாக இந்த அரண்யத்தில் காண்கிறேன். ஐயோ, தாதா, வனத்திற்கு ஏன் வந்தாய்?(5) 

தாதா, நீ இங்கே வந்திருக்கிறாயே, ராஜா பிழைத்திருக்கிறாரா? ராஜா தீனமடைந்து திடீரென லோகாந்தரம் {உலகத்தைவிட்டுச்} செல்லவில்லையே?(6)  சௌம்யா, பாலனான உன்னால் அழிவில்லாத ராஜ்ஜியத்திற்கு வீழ்ச்சியேற்படவில்லையே? தாதா, சத்தியவிக்கிரமரான {உண்மை வீரம் கொண்டவரான} நம் பிதாவுக்கு நீ தொண்டாற்றுகிறாயா?(7) சத்தியசங்கரரும் {சத்தியத்திற்கு உண்மையாக நடப்பவரும்}, ராஜசூயம், அச்வமேதம் ஆகியவற்றைச் செய்தவரும், தர்ம நிச்சயருமான ராஜா தசரதர் நலமாக இருக்கிறாரென நம்புகிறேன்.(8) 

தாதா, மஹாதேஜஸ்வியும், தர்மத்தில் பற்றுடையவரும், வித்வானும், பிரம்மஞானியுமான இக்ஷ்வாகுக்களின் உபாத்தியாயரை {ஆசிரியர் வசிஷ்டரை} முன்பைப் போலவே முறைப்படி பூஜிக்கிறாயா {கௌரவிக்கிறாயா}?(9) தாதா, கௌசல்யையும், சுமித்திரையும் சுகந்தானா? நன்மகனைப் பெற்ற ஆரியையான கைகேயிதேவி ஆனந்தமாக இருக்கிறாளா?(10) நல்ல குலத்தில் பிறந்தவரும், பணிவால் நன்கறியப்பட்டவரும், சாத்திரங்களை அறிந்தவரும், பொறாமையற்றவரும், உள்நோக்கும் நுண்ணறிவு பெற்றவருமான புரோஹிதரை {ஸுயஜ்ஞரை} நீ நன்கு மதிக்கிறாயா?(11) விதிகளை அறிந்தவரும், மதிமிக்கவரும், நீதிமானுமான ஒருவர் உன்னுடைய அக்னி காரியங்களில் எப்போதும் ஈடுபட்டு, ஆகுதிகள் அக்னிக்குக் காலத்தில் கொடுக்கப்படுவதை உனக்கு அறிவிக்கிறாரா?(12)

தாதா, நீ தேவர்கள், பித்ருக்கள், உன்னைச் சார்ந்தவர்கள் {உறவினர்கள்}, குருக்கள், பெரியவர்கள், பிதாவுக்கு நிகரானவர்கள், வைத்தியர்கள், பிராமணர்கள் ஆகியோரையும் மதிக்கிறாயா?(13) தாதா, அர்த்த சாஸ்திரங்களை நன்கறிந்தவரும், அஸ்திரங்களிலும் சஸ்திரங்களிலும் திறன்வாய்ந்தவருமான உன் உபாத்தியாயர் ஸுதன்வானை நீ மதிப்புடன் நடத்துகிறாயா?(14) 

உன்னைப் போன்ற சூரர்கள், கல்விமான்கள், ஜிதேந்திரியர்கள் {புலன்களை வென்றவர்கள்}, நல்ல குலத்தில் பிறந்தவர்கள், இங்கிதம் தெரிந்தவர்கள் ஆகியோரை உன் மந்திரிகளாக நியமித்திருக்கிறாயா?(15) இராகவா {பரதா}, சாஸ்திரங்களை நன்கறிந்தவர்களும், ஆலோசனைகளை வெளியிடாதவர்களுமான அமைச்சர்களுடன் மறைமுகமாகக் கேட்கப்படும் ஆலோசனையே ராஜாக்களின் வெற்றிக்கான மூலமாகத் திகழ்கிறது.(16) நித்திரையின் வசப்படாதிருக்கிறாயா? காலத்தில் விழித்துக் கொள்கிறாயா? புத்திசாலித்தனமான செயல்களை ராத்திரியின் பிற்பகுதியில் சிந்திக்கிறாயா?(17) தனியொருவனாக ஆலோசிக்காதிருக்கிறாயா? பலருடன் ஆலோசிக்காதிருக்கிறாயா? ஆலோசனையின் தீர்மானம் ராஷ்டிரத்தில் {நாட்டில்} பரவாமல் இருக்கிறதா?(18)

இராகவா {பரதா}, எளிய மூலதனத்தில், பெரும்பயன் விளையக்கூடிய காரியத்தைச் சிந்தித்து, தாமதிக்காமல் சீக்கிரமாகவே அதைச் செய்ய ஆரம்பிக்கிறாயா?(19) செயல்வடிவில் மட்டுமே நிச்சயிக்கப்பட்டவற்றை அறியாமல், முழுமையாகவோ, கிட்டத்தட்டவோ நிறைவேறிய பிறகே உன் காரியங்கள் அனைத்தையும் மற்ற பார்த்திபர்கள் அறிகிறார்களா?(20) தாதா, உன்னாலோ, உன்னுடைய அமைச்சர்களாலோ விவாதிக்கப்படுவனவற்றை யுக்தியாலோ, ஊகத்தாலோ, இங்கிதத்தாலோ பிறர் அறியாமல் இருக்கின்றனரா?(21) ஆயிரம் மூர்க்கர்களைக் காட்டிலும் ஒரே பண்டிதனை மட்டும்  வேண்டுகிறாயா? பண்டிதனே கடினமான காரியங்களிலும் மகத்தான பயனை விளைவிப்பான்.(22) ஒரு மஹீபதி ஆயிரக்கணக்கிலோ, பத்தாயிரங்கணக்கிலோ மூர்க்கர்களை நியமித்தாலும் அவர்களால் ஒரு ஸஹாயமும் இருக்காது.(23) மேதாவியும், சூரரும், திறன்மிக்கவரும், தூய்மையாளருமான ஒரே அமாத்தியரே {அமைச்சரே} கூட, ராஜனுக்கோ, ராஜனைப் போன்றவனுக்கோ பெருஞ்செழிப்பை விளைவிப்பார்.(24) முக்கிய பணியாட்களை {சமையல் உள்ளிட்ட} மஹத்தான கர்மங்களிலும், மத்தியமர்களை {படுக்கை போடுவது போன்ற} மத்திம {நடுத்தரப்} பணிகளிலும், சாதாரணர்களை {கால் அலம்புவது போன்ற} சாதாரணவற்றிலும் ஈடுபடுத்துகிறாயா?(25) நன்கு சோதிக்கப்பட்டவர்களும், கபடமற்றவர்களும், பித்ரு பிதாமஹர்களின் {தகப்பன், பாட்டன்} வழியில் வந்தவர்களும், தூய்மையானவர்ளும், சிறந்த கர்மங்களில் திறம்படைத்தவர்களுமான அமாத்தியர்களை நியமித்திருக்கிறாயா?(26)

கைகேயிசுதனே {பரதா}, உன்னுடைய உக்கிர தண்டத்தால் {கடுமையான தண்டனை முறையால்} ராஜ்ஜியத்தில் உன் பிரஜைகள் கலக்கம் அடையும் போது, மந்திரிகள் அதற்கு சம்மதிக்காமல் உன்னைத் தடுக்கின்றனரா?(27) யாஜகர்கள் {யாகம் செய்பவர்கள், நிந்திக்கும்} உக்கிர தானம் பெற்ற பதிதனை {இழிந்தவனைப்} போலவும், ஸ்திரீகள்  {பெண்கள், நிந்திக்கும்} காமுகர்களைப் போலவும் அவர்கள் {குடிமக்கள், அநியாய வரி வாங்குபவனாக} உன்னை நிந்திக்கவில்லையே?(28) நலத்தைக் கெடுக்கும் வைத்தியனையும், ஐசுவரியத்தில் ஆசை கொண்ட சூரனையும், பணியாட்களின் மனங்களைக் கெடுப்பவனான எவனையும் கொல்லாதவன் தானே கொல்லப்படுவான்.(29) 

மகிழ்ச்சியானவரும், சூரரும், மதிமிக்கவரும், துணிவுமிக்கவரும், தூய்மையானவரும், நல்ல குலத்தில் பிறந்தவரும், உடன் பணியாற்றுபவர்களால் விரும்பப்படுகிறவரும், திறம்படைத்தவருமான ஒருவரையே சேனாதிபதி {படைத்தலைவர்} ஆக்கினாயா?(30) பலவான்களும், யுத்தங்களில் திறன்மிக்கவர்களும், சிறந்த செயல்களுக்காக ஏற்கனவே கண்டுணரப்பட்டவர்களும், வீரமிக்கவர்களும் முக்கியர்களாக உன்னால் மதிக்கப்படுகின்றனரா?(31) படையினருக்குத் தகுந்த காலங்களில் கொடுக்க வேண்டியவற்றையும், தகுந்த ஊதியத்தையும் தாமதம் செய்யாமல் கொடுக்கிறாயா?(32) வேண்டியனவும், ஊதியமும் தாமதமாகும்போது, தங்கள் தலைவனுக்கு எதிரான கோபத்தை அடையும் பணியாட்களால் தீமை நேரக்கூடும். எனவே, அது மஹத்தான அனர்த்தம் {கேடு} என்று சொல்லப்படுகிறது.(33) பிரதான குலப்புத்திரர்கள் {க்ஷத்திரிய குலத்தில் பிறந்த முக்கியர்கள்} அனைவரும் உனக்குக் கீழ்ப்படிகிறார்களா? முழுமையான அர்ப்பணிப்புடன் தங்கள் பிராணனையும் உனக்காக விடுவார்களா?(34)

பரதா, ஜானபதத்தை {உள்ளூரைச்} சேர்ந்தவனும், பண்டிதனும், வித்வானும், திறம்படைத்தவனும், கூர்மதிவாய்ந்தவனும், தகுதியறிந்து பேசுபவனுமான ஒருவனையே தூதனாகத் தேர்ந்தெடுக்கிறாயா?(35) அந்நியரின் பதினெட்டு தீர்த்தங்கள்[1], தன் தரப்பின் பதினைந்து தீர்த்தங்கள் ஆகியனவற்றில் ஒவ்வொன்றையும், ஒருவரையொருவர் அறியாத மும்மூன்று சாரர்களால் {ஒற்றர்களால்} வேவு அறிகிறாயா?(36) பகைவரைக் கொல்பவனே {பரதா}, உன்னால் விரட்டப்பட்ட பகைவர்கள் சில காலங்கழித்துத் திரும்பி வந்தால் பலவீனர்கள் என்று எளிதாக எடுத்துக்கொள்ளாமல் இருக்கிறாயா?(37)

[1] கே.எம்.கே.மூர்த்தி பதிப்பின் அடிக்குறிப்பில், "1.முதன்மந்திரி, 2.ராஜபுரோஹிதர், 3.பட்டத்து இளவரசன், 4.சேனாதிபதி, 5.அந்தப்புரத்து வாயிற்காவலர்கள், 6.அந்தப்புரத்துக் காரியங்களை நிர்வாகிகள் {அந்தப்புர அதியக்ஷர்கள்}, 7.சிறைக் காவலர்கள் {காராகார அதியக்ஷர்கள்}, 8.கருவூல அதிகாரிகள், 9.ஆணை அறிவிப்பவர்கள் {கட்டியங்கூறுபவர்கள் / காரியநியோஜகர்கள்}, 10.விசாரணை அதிகாரிகள் {வழக்கறிஞர்கள்}, 11.நீதிபதி, 12.வரிவிதிப்பவர்கள், 13.ஊதியம் வழங்கும் அதிகாரிகள் {சேனாநாயகர்கள்}, 14.ஊதியத்திற்காக அரசாங்கக் கருவூலத்திலிருந்து நிதி பெறும் அதிகாரிகள், 15.பொதுப்பணிகளின் காவல் அதிகாரிகள் {நகராத்யக்ஷர்கள்}, 16.எல்லையோரங்களைக் காப்பவர்கள் {ராஷ்டிராந்தபாலர்கள்}, 17.தண்டனை வழங்கும் அதிகாரிகள் {தண்டபாலர்கள்}, 18.மலை, நீர், காடு முதலிய அரண் நிர்வாகிகள் ஆகியோரே அந்நியரின் பதினெட்டுத் தீர்த்தங்கள். மேற்கண்ட பட்டியலில் முதலமைச்சர், ராஜபுரோஹிதர், பட்டத்து இளவரசன் என்ற முதல் மூவரைத் தவிர மீதமுள்ளவர்கள், தன் தரப்பின் பதினைந்து தீர்த்தங்கள்" என்றிருக்கிறது. மஹாபாரதம் ஆதிபர்வம் 142ம் பகுதியில் இந்த பதினெட்டு தீர்த்தங்கள் குறித்த செய்தி 2ம் அடிக்குறிப்பாக இருக்கிறது. 

தாதா, லோகாயதம் {பொருள்முதல்வாதம்} பேசும் பிராமணர்களை சேவிக்காமல் இருக்கிறாயா? தங்களை {எல்லாம் தெரிந்த} பண்டிதர்களாகக் கருதிப் பெருமைப்படும் பாலர்களைப் போன்ற {அறியாமை கொண்ட} அவர்கள் தீங்கு விளைவிப்பதில் நிபுணர்களாவர்.(38) துர்புத்தி கொண்டவர்களான அவர்கள், முக்கிய தர்ம சாஸ்திரங்கள் இருக்கையில், {அவற்றைவிட்டுத்} தங்கள் தர்க்கபுத்தியைப் பற்றிக் கொண்டு அர்த்தமின்றி பேசுவார்கள்.(39) 

தாதா, பூர்வத்தில் வீரம் பொருந்திய நம் மூதாதையர்கள் வசித்திருந்ததும், உண்மையில் பெயருக்குத் தகுந்ததும் {பகைவரால் உண்மையில் புக முடியாததும்}, திடமான வாயில்களைக் கொண்டதும், ஹஸ்த, அச்வ, ரதங்களால் {யானை, குதிரை, தேர்களால்} நிறைந்திருப்பதும்,{40} சதா தங்கள் தங்கள் கர்மங்களில் ஈடுபடும் பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்களுடனும், மஹா உற்சாகத்தில் நிறைந்திருக்கும் ஜிதேந்திரியர்களான ஆரியர்களுடன் {புலன்களை வென்ற உன்னதர்களுடன்} கூடியதும்,{41} விதவிதமான வடிவங்களிலான அரண்மனைகளால் சூழப்பட்டதும், வித்வ ஜனகுலத்தால் {கற்றறிந்த மக்கள் கூட்டத்தால்} நிறைந்ததும் என அனைத்தையும் தன்னகத்தே கொண்டு செழித்திருக்கும் அயோத்தியைப் பத்திரமாகப் பாதுகாக்கிறாயா?(40-42)

நூற்றுக்கணக்கான வேள்விப்பீடங்களால் அலங்கரிக்கப்பட்டதும், அமைதியான ஜன குலத்தால் {மக்கள் கூட்டத்தால்} நிறைந்ததும், வளமுடையதும், தேவஸ்தானங்கள் {கோவில்கள்}, தண்ணீர்ப் பந்தல்கள், தடாகங்கள் ஆகியவற்றையும்,{43} மகிழ்ச்சியுடன் கூடிய நர நாரீகளையும் {ஆண்களையும், பெண்களையும்} கொண்டதும், சமாஜ உத்சவங்களால் {சமூக விழாக்களால்} பிரகாசிப்பதும், நன்கு உழப்பட்ட நிலங்கள் பொருந்தியதும், பசுநிரைகளை ஏராளமாகக் கொண்டதும், ஹிம்சையிலிருந்து முற்றிலும் விடுபட்டதும்,{44} மழையை எதிர்பார்க்கும் அவசியம் இல்லாததும் {ஆற்றுநீர்ப் பாய்ச்சலை உடையதும்}, {தோட்டம் முதலியவற்றுடன்} ரம்மியமாக இருப்பதும், கொடிய விலங்குகள் அற்றதும், பயங்கள் முற்றிலும் அற்றதும், {தங்கம், ரத்தினம் முதலியன விளையும்} சுரங்கங்களால் பிரகாசிப்பதும்,{45} பாபம் செய்யும் நரர்கள் அற்றதும், நமது பூர்விகர்களால் நன்கு பாதுகாக்கப்பட்டதுமான நம் ஜனபதம் {நாடு} முழுவதும் செல்வ செழிப்புடன் சுகமாக இருக்கிறதா?(43-46)

தாதா, பயிரிடுதல், பசுக்காத்தல் ஆகியவற்றை ஜீவனமாகக் கொண்டோர் அனைவரும் நீ விரும்பியபடி நடக்கிறார்களா? இந்த வர்த்தகத்தில் வாழும் மக்கள் உண்மையில் செழித்திருக்கிறார்களா?(47) நாட்டில் வசிப்போர் அனைவரும் ராஜதர்மத்தால் பாதுகாக்க வேண்டும். அவர்களைப் பாதுகாக்கத் தவறாமல் பராமரிக்கிறாயா? {அவர்கள் எதிர்பார்க்கும் பயங்களைப் போக்கி, தேவைகளைக் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்கிறாயா}?(48) நீ ஸ்திரீகளிடம் ஆறுதலாகப் பேசுகிறாயா? உன்னால் அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்களா? அவர்களை {பெண்களை} நம்பாமலும், அவர்களிடம் ரகசியங்களைச் சொல்லாமலும் இருக்கிறாயா?(49) நாக வனத்தை {யானைகள் நிறைந்த காட்டை} நன்கு காக்கிறாயா? {காட்டு யானைகளை வசப்படுத்திப் பிடிக்கவல்ல பெண் யானைகள்} தேனுகைகள் உன்னிடம் உள்ளனவா? பெண்யானைகள், அச்வங்கள், குஞ்சரங்கள் {ஆண் யானைகள்} ஆகியவற்றில் {அவற்றின் எண்ணிக்கையில்} திருப்தியடையாமல் இருக்கிறாயா?(50)

இராஜபுத்திரா, நித்தியம் விடியற்காலையில் எழுந்திருந்து மஹாபாதையில் {நெடுஞ்சாலையில்} மனுஷர்களின் முன்னிலையில் அலங்காரத்துடன் தோன்றுகிறாயா?(51) உன் பணியாட்கள் அனைவரும் உன் எதிரில் பயமற்றவர்களாக {அலட்சியத்துடன்} வராமல் இருக்கிறார்களா? மறுபுறம் அவர்கள் அனைவரும் உன் எதிரில் வந்ததும் விலகி ஓடுகிறார்களா? இதில் மத்திமமே நல்லது.(52) கோட்டைகள் அனைத்தும் தனம், தானியம், ஆயுதங்களாலும், நீராலும், யந்திரங்களாலும், சிற்பி, தனுதரர்களாலும் {வில்லாளிகளாலும்} பரிபூரணமாக நிறைந்திருக்கின்றவா?(53) இராகவா, வருமானம் மிகுதியாகவும், செலவுகள் குறைவாகவும் இருக்கின்றனவா? இராகவா, உன் கருவூலம் தகுதியற்றவர்களுக்கு எட்டாமல் இருக்கிறதா?(54) தேவர்கள், பித்ருக்கள், பிராமணர்கள், எதிர்பாரா விருந்தினர்கள், போர்வீரர்கள், மித்ர வர்கத்தினர் {பலதரத்திலான நண்பர்கள்} காரியங்களில் நீ நன்றாகச் செலவு செய்கிறாயா?(55) 

பரிசுத்தனும் {தூய இயல்பைக் கொண்டவனும்}, {மனம், வாக்கு, உடல் ஆகியவற்றில்} தூய்மையானவனும், அபகர்மம் {தீச்செயல்} புரிந்தான் என்று பொய்யாகக் குற்றஞ்சாட்டப்பட்டால், சாஸ்திரங்களை உணர்ந்தவர்களைக் கொண்டு நன்கு விசாரிக்காமல், பேராசையால் {அவசரப்பட்டு} கொல்லப்படாதிருக்கிறானா?(56) நரரிஷபா {மனிதர்களில் காளையே}, காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, விசாரணையில் போதுமான காரணங்களுடன் பிடிபடும் கள்வன், தனலோபத்தால் {செல்வப் பேராசையால்} விடுவிக்கப்படாமல் இருக்கிறானா?(57) இராகவா, செல்வமிக்கவனுக்கும், வறியவனுக்கும் இடையில் ஏற்படும் பிரச்சனைக்குரிய எந்த வழக்கிலும் அறிஞர்களாகிய உன் அமைச்சர்கள் பொருளாசை அற்றவர்களாக சார்பேதும் எடுக்காமல் விசாரிக்கிறார்களா?(58) இராகவா, பொய்க்குற்றஞ்சாட்டின் பேரில் தண்டிக்கப்படுவோர் சிந்தும் கண்ணீர், தன் விருப்பப்படி ஆணையிடுபவனின், புத்திரர்களையும், பசுக்களையும் {கால்நடைகளையும்} அழித்துவிடும்.(59)

இராகவா, முதியோர், பாலர்கள், முக்கிய வைத்தியர்கள் {முதன்மையான கல்விமான்கள்} ஆகியோரை தனம் {செல்வம்}, அன்பு, சொல் என்ற மூன்றாலும் உற்சாகப்படுத்துகிறாயா?(60) குருக்கள் {ஆசிரியர்கள்}, முதியவர்கள், தபஸ்விகள், தேவர்கள், அதிதிகள் {விருந்தினர்கள்}, நாற்சந்திகளில் உள்ள மரங்கள், சித்தார்த்தர்களான {முயற்சியினால் இலக்கை அடைந்தவர்களான} பிராமணர்கள் அனைவரையும் நீ வணங்குகிறாயா?(61) அர்த்தத்தால் {பொருளால் / செல்வத்தால்} தர்மத்தையும், தர்மத்தால் {அறத்தால்} அர்த்தத்தையும், பிரீதி {விருப்பம்}, லோபம் {பேராசை}, காமம் {இன்பம்} ஆகியவற்றால் அவ்விரண்டையும் {தர்மத்தையும், அர்த்தத்தையும்} அழிக்காமல் இருக்கிறாயா?(62) வெற்றி ஈட்டுபவர்களில் ரத்தினமே, காலத்தை அறிந்தவனே, வரங்களை அளிப்பவனே {பரதா}, அர்த்தம், தர்மம், காமம் ஆகியவை அனைத்தையும் காலத்தால் பகுத்து சேவிக்கிறாயா?(63) அனைத்தையும் உணர்பவனே, சாஸ்திரங்கள் அனைத்தையும் அறிந்தவர்களும், நகரவாசிகளும், கிராமவாசிகளும் உன் மகிழ்ச்சியை வேண்டுகிறார்களா?(64)

நாஸ்திகம் {1}, பொய்ம்மை {2}, குரோதம் {3}, அலட்சியம் {ஊக்கமின்மை} {4}, தாமதித்தல் {5}, ஞானிகளைத் தவிர்த்தல் {6}, சோம்பேறித்தனம் {7}, பஞ்சேந்திரிய பரவசனாயிருத்தல் {ஐம்புலன்களில் பற்று} {8},{66} காரியங்களில் தனியாக ஆலோசித்தல் {9}, அநர்த்தவாதிகளுடன் {மூடர்களோடு} ஆலோசித்தல் {10}, நிச்சயிக்கப்பட்டவற்றை ஆரம்பிக்காமல் இருத்தல் {11}, ரகசியம் காக்காமை {ஆலோசனைகளை மறைக்காமல் வெளிப்படுத்துதல்} {12},{66} மங்கலாதிகளை பிரயோகிக்காமை {சுபச்செயல்களைச் செய்யாமை} {13}, அனைவருக்கும் எதிராக எழுதல் {14} என்ற இந்த சதுர்தச {பதினான்கு} ராஜதோஷங்களைக் கைவிட்டாயா?(65-67)

இராகவா, {1.வேட்டை, 2.சூது, 3.பகலுறக்கம், 4.வீண்பேச்சு, 5.பெண்பழக்கம், 6.குடி, 7.ஆடல், 8.பாடல், 9.இசை, 10.பயணம் முதலிய} பத்தும், {1.பகைவரால் பகை, 2.பொருளால் பகை, 3.பெண்ணால் பகை, 4.சொல்லால் பகை, 5.தீங்கால் பகை என்ற} ஐந்தும், {1.சாம, 2.தான, 3.பேத, 4.தண்டம் முதலிய} நான்கும் ஆன வர்க்கங்களையும், {1.அரசன், 2.அமைச்சர், 3.நாடு, 4.கோட்டை, 5.பொருள், 6.சேனை, 7.நட்பு என்ற} ஏழு வர்க்கங்களையும், {1.கோளுரைத்தல், 2.சாகசம் செய்தல், 3.வஞ்சனை, 4.அன்பால் உண்டாகும் கோபம், 5.பொறாமை, 6.பொருளையிழத்தல், 7.வன்மொழி கூறல், 8.கடுந்தண்டனை விதித்தல் என்ற} எட்டு வர்க்கங்களையும், {1.செய்யத்தகாத செயலைச் செய்யும் முயற்சி, 2.செய்ய வேண்டிய செயலைச் செய்யாதிருத்தல், 3.செய்ய வேண்டிய செயல்களை காலமில்லா காலத்தில் செய்தல் என்ற} மூன்று வர்க்கங்களையும், {1.சுருதி, 2.உழவு, வியாபாரம், 3.நீதிசாஸ்திரம் என்ற} மூன்று வித்தைகளையும், ஐம்புலனடக்கத்தையும், {1.சந்தி, 2.விக்ரகம், 3.போருக்குச் செல்லல், 4.போருக்குச் செல்லாதிருத்தல், 5.பகைவரிடம் பேதம் உண்டாக்குதல், 6.பகைவரை அண்டியிருத்தல் என்ற} ஆறு குணங்களையும், விதியால் உண்டாகும் {1.தீ, 2.நீர், 3.பிணி, 4.பஞ்சம், 5.மரணம் என்ற} ஐந்து விசனங்களையும், {1.அதிகாரி, 2.கள்ளன், 3.அன்னியன், 4.அரசனுக்கு விருப்பமானவன், அரசனின் பேராசை என்ற} மனிதர்களால் தோன்றும் ஐந்து விசனங்களையும், பகைவரிடம் விசுவாசமற்றவர்களைத் தன் வசமாக்குவதையும், {1.ராஜ்ஜியம், 2.பெண், 3.ஸ்தானம், 4.தேசம், 5.இனத்தார், 6.பொருள் அபகரிப்பு, 7.மதம், 8.மானம், 9.காரியக்கேடு, 10.மதியின்மை, 11.சக்தியின்மை, 12.குணமின்மை, 13.தெய்வத்தையிகழ்தல், 14.அன்புக்குரியவர்களை இகழ்தல், 15.பொருளையிகழ்தல், 16.சுற்றத்தாரை இகழ்தல், 17.கருணையின்மை, 18.தேசத்தையிகழ்தல், 19.பொருளை மட்டுமே விரும்பல், 20.தான் கோரிய விஷயத்தில் மட்டுமே ஆசையுடன் இருத்தல் எனும்} இருபது வர்க்கங்களையும், {1.மந்திரி, 2.தேசம், 3.கோட்டை, 4.அரண், 5.தண்டம் என்ற} ஐந்து பிரக்ருதிகளையும், {1.நடுவிலரசன், 2.முன்னரசனுக்குப் பகைவன், 3.தன் நண்பன், 4.பகைவனின் நண்பன், 5.நண்பனின் நண்பன், 6.பகைவனின் நண்பனுக்கு நண்பன், 7.பார்ஷ்ணிக்ராஹன், 8.ஆக்ரந்தன், 9.பார்ஷ்ணிக்ராஹாஸாரன், 10.ஆக்ரந்தாஸாரன், 11.பக்கத்தில் இருப்பவன், 12.மத்தியமன், 13.புறத்திலிருப்பவன், 14.உதாசீனன் என்ற} பன்னிரெண்டு மண்டலங்களையும், {1.பகைவரைப் பகைத்தல், 2.பகைவரை நேசித்தல், 3.பலருடன் கூடுதல், 4.வஞ்சனை செய்தல், 5.அலட்சியம் செய்தல் எனும்}[2] ஐந்துவித யானங்களையும், இரண்டு வகையான சந்திவிக்ரகங்களையும் உள்ளபடியே நன்கு ஆராய்ந்து அதற்கேற்றவாறு நடந்து வருகிறாயா?(68-70)

[2] 68-70ம் சுலோகங்களுக்குள் {} என்ற அடைப்புக்குறிக்குள் இருப்பவை பி.எஸ்.கிருஷ்ணசுவாமி ஐயர் {தர்மாலயப்} பதிப்பில் இருந்து எடுத்தாளப்பட்டவை.

சாத்திரங்களில் கூறியுள்ளபடி, நான்கு அல்லது மூன்று மந்திரிகளுடன் சேர்ந்தோ, {ஒருவர் பின் ஒருவராகத்} தனித்தனியாகவோ {ராஜ்ஜிய காரியங்களில்} நீ ஆலோசனை செய்கிறாயா?(71) உனக்கு வேதங்கள் பலனளிக்கின்றனவா? உன் செயல்கள் பலன்களை விளைவிக்கின்றனவா? தாரங்களினால் {மனைவியரால்} உனக்கு நன்மை நேர்கிறதா? உன் கல்வி பலன்விளைவிக்கிறதா?(72) இராகவா {பரதா}, நான் முன்னமே சொன்னதைப் போல உன் புத்தியானது, ஆயுள், புகழ், தர்மம், காமம், அர்த்தங்களுக்கு இணக்கமாக இருக்கிறதா?(73) நம் தாதையும் {தந்தையும்}, பிதாமஹர்களும் {பாட்டன்களும்} பின்பற்றிய சுபமான நல்ல பாதையை நீயும் பின்பற்றுகிறாயா?(74) இராகவா {பரதா}, நன்கு சமைக்கப்பட்ட உணவை நீ தனியாக உண்ணாமல் இருக்கிறாயா? அதை அடைய விரும்பும் நண்பர்களுக்கும் கொடுக்கிறாயா?(75) மஹாமதி படைத்தவனும், வித்வானுமான ஒரு ராஜா, மொத்த வசுதையையும் {பூமியையும்} அடைந்து, நெறிவழுவாது, தர்மத்தால் பிரஜைகளை உரிய முறையில் பரிபாலித்து இகத்தில் {இவ்விடத்தில்} இருந்து விடுபடும்போது ஸ்வர்க்கத்தை அடைகிறான்" {என்றான் ராமன்}.(76)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 100ல் உள்ள சுலோகங்கள்: 76

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை