Poor hunter | Ayodhya-Kanda-Sarga-085 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பரத்வாஜர் ஆசிரமத்திற்குச் செல்லும் வழியை விசாரித்த பரதன்; பரதனின் நோக்கம் குறித்து விசாரித்த குகன்; இராமனைத் திருப்பி அழைத்து வரும் தன் விருப்பத்தை வெளியிட்ட பரதன்; அழுது கொண்டிருந்த பரதனைத் தேற்றிய குகன்...
பெரும் நுண்ணறிவுமிக்கவனான பரதன், இவ்வாறு சொல்லப்பட்டதைக் கேட்டு, காரண, காரியங்கள் அடங்கிய வாக்கியத்தில் இவ்வாறு நிஷாதாதிபதியான குஹனிடம் மறுமொழி கூறினான்:(1) "என் குருவின் சகாவே {அண்ணனின் தோழனே}, தனியொருவனாக இத்தனை பெரிய சேனைக்கு விருந்தோம்பல் செய்ய விரும்பும் உன் ஆசை உண்மையில் பெரியது" {என்றான்}.(2)
ஸ்ரீமானும், மஹாதேஜஸ்வியுமான பரதன், குஹனிடம் இந்த உத்தம சொற்களைச் சொல்லிவிட்டு, மீண்டும் அந்த நிஷாதாதிபதியிடம் {பின்வருமாறு} சொன்னான்:(3) "குஹனே, பரத்வாஜர் ஆசிரமத்திற்கு எவ்வழியாகச் செல்ல வேண்டும்? தனித்துவமான இவ்விடம் கங்கையின் ஆழத்தால் கடக்க முடியாததாக இருக்கிறது" {என்றான் பரதன்}.(4)
கஹனகோசரனான {காட்டில் திரிபவனான} குஹன், மதிமிக்கவனான ராஜபுத்திரனின் இந்தச் சொற்களைக் கேட்டுக் கூப்பிய கைகளுடன் {இந்த} வாக்கியங்களைச் சொன்னான்:(5) "புகழ்மிக்க ராஜபுத்திரா, தன்விகளான செம்படவர்கள் மிக கவனமாக உன்னைப் பின்தொடர்வார்கள். நானும் உன்னைப் பின்தொடர்ந்து வருவேன்.(6) ஆனாயாசமாகச் செயல்புரியும் ராமனிடம் உனக்கு துஷ்டமில்லை {பொல்லாமை / தீய எண்ணம் ஏதுமில்லை} என நம்புகிறேன். உன்னுடைய இந்த மகத்தான சேனை என்னுள் சந்தேகத்தை எழுப்புகிறது" {என்று கேட்டான் குஹன்}.(7)
ஆகாசத்தைப் போன்று நிர்மலனான {மாசற்றவனான} பரதன், இவ்வாறு பேசிய குஹனுக்கு மெல்லிய குரலில் {பின்வருமாறு} பதிலளித்தான்:(8) "இத்தகைய கஷ்ட காலம் நேரக்கூடாது. நீ என்னை சந்தேகிப்பது ஒருபோதும் தகாது. என் அண்ணனான அந்த ராகவர், என் பிதாவுக்கு சமமாக என்னால் மதிக்கப்படுபவர்.(9) வனவாசம் செய்யும் அந்தக் காகுத்ஸ்தரை திருப்பி அழைத்து வரவே செல்கிறேன். குஹனே, உனக்கு வேறு எண்ணம் வேண்டாம். உன்னிடம் சத்தியத்தை {உண்மையைச்} சொல்கிறேன்" {என்றான் பரதன்}.(10)
பரதனின் சொற்களைக் கேட்டவன் {குஹன்}, மகிழ்ச்சி மிக்க வதனத்துடன் கூடியவனாக மீண்டும் {பின்வருமாறு} பரதனிடம் பேசினான்:(11) "நீ தன்யன் {பாக்கியம் செய்தவன்}. முயற்சியின்றி கிடைத்த ராஜ்ஜியத்தைத் துறக்க விரும்பும் உனக்கு நிகரான எவரையும் பூமியில் நான் கண்டதில்லை.(12) சிரமத்துடன் சென்ற ராமனைத் திருப்பியழைத்து வர நீ விரும்புவதால், உன் கீர்த்தி என்றென்றும் உலகில் சாஸ்வதமாக {நிலைத்து} இருக்கும்" {என்றான் குஹன்}[1].(13)
[1] என் புகழ்கின்றது ஏழை எயினனேன் இரவி என்பான்தன் புகழ்க் கற்றை மற்றை ஒளிகளைத் தவிர்க்குமாபோல்மன்புகழ் பெருமை நுங்கள் மரபினோர் புகழ்களெல்லாம்உன் புகழ் ஆக்கிக் கொண்டாய் உயர் குணத்து உரவுத் தோளாய்- கம்பராமாயணம் 2338ம் பாடல்பொருள்: உயர்ந்த குணங்களைக் கொண்டவனே, வலிமையான தோள்களைக் கொண்டவனே, அறிவில்லாத வேடனான நான் உன்னை எவ்வாறு புகழ்வேன்? சூரியன் என்று சொல்லப்படும் புகழெனும் ஒளித்தொகுதி, மற்ற கோள்களின் ஒளிகளை அடக்கி ஒளிர்வதைப் போல, பிற மன்னர்களாலும் புகழப்படும் பெருமையுடைய உங்கள் வம்சத்து மன்னர்களின் புகழ் அனைத்தையும் நீ உன் புகழ் ஆக்கிக் கொண்டாய்.
இவ்வாறு பரதனிடம் குஹன் பேசிக் கொண்டிருந்தபோது சூரியனின் ஒளி மங்கிப் பொலிவிழந்து, இரவும் வந்தது.(14) அந்த ஸ்ரீமான் {பரதன்}, தன் சேனையை முகாமிடச் செய்து, குஹனால் மகிழ்ச்சியடைந்தவனாக முகாமுக்குத் திரும்பி சத்ருக்னனுடன் சயனத்தை அடைந்தான்.(15) தர்மத்தைச் செய்வதையே நோக்கமாகக் கொண்டவனும், துயரடையத் தகாதவனும், மஹாத்மாவுமான அந்த பரதன், ராமனை சிந்தித்தபடியே சோகமடைந்தான்.(16)
வனமே எரிந்து கொண்டிருக்கும்போது பொந்தில் மறைந்திருந்து மரத்தை தகிக்கச் செய்யும் அக்னியைப் போல அந்த ராகவனின் {பரதனின்} சந்தாப நெருப்பும் {அவனது இதயத்திற்கு} உள்ளே எரிந்து கொண்டிருந்தது.(17) ஹிமவானில் {இமய மலையில்} இருந்து சூரிய வெப்பத்தால் உருகி வழியும் பனியைப் போல, அந்த சோகாக்னியில் உண்டான வியர்வை, அவனது அங்கங்கள் அனைத்திலிருந்தும் வழிந்தது.(18)
{இராமனையே நினைக்கும்} தியானமெனும் குகைகளையும், கல்தரைகளையும், பெருமூச்செனும் தாதுக்களையும், மனத்தளர்ச்சியெனும் மரக்கூட்டங்களையும், சோகத்தால் உண்டாகும் உடற்தளர்ச்சியெனும் சிகரங்களையும்,(19) கலக்கமெனும் எண்ணற்ற பிராணிகளையும், சந்தாபமெனும் {துன்பமெனும்} செடிகொடிகளையும், மூங்கில்களையும் கொண்ட மஹத்தான துக்க சைலத்தால் {துயர மலையால்} அந்தக் கைகேயிசுதன் {பரதன்} அழுத்தப்பட்டான்.(20)
அப்போது அந்த நரரிஷபன் {மனிதர்களிற் காளையான பரதன்}, பரமதுக்கத்தை அடைந்ததன் விளைவால் முற்றிலும் மனங்குழம்பியும், ஹிருதய ஜ்வரத்தால் {இதயப் பிணியால்} பீடிக்கப்பட்டும், அதிக கவலையினால் பெருமூச்சு விட்டுக் கொண்டும், மந்தையில் இருந்து தவறிய ரிஷபத்தை {காளையைப்} போல அமைதியற்றிருந்தான்.(21) அதன்பிறகு, மஹானுபவனான பரதன், தன் ஜனங்களுடன் கூடியவனாக, அதே மனநிலையில் இருந்த குஹனை அடைந்தான். அப்போது குஹன், மீண்டும் பரதனிடம் அவனது அண்ணனைக் குறித்துச் சொல்லி ஆறுதல் கூறினான்.(22)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 085ல் உள்ள சுலோகங்கள்: 22
Previous | | Sanskrit | | English | | Next |