Shame in doubt | Ayodhya-Kanda-Sarga-097 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பரதனின் நோக்கத்தை உறுதியாகச் சொல்லி லக்ஷ்மணனைத் தணித்த ராமன்; சந்தேகத்தால் நாணமடைந்த லக்ஷ்மணன்; சித்திரகூடத்தைச் சுற்றிலும் முகாமிட்ட பரதனின் படை...
அப்போது ராமன், குரோதத்தால் ஆட்கொள்ளப்பட்டு ஆத்திரத்தில் இருந்தவனும், சௌமித்ரியுமான {சுமித்திரையின் மகனுமான} லக்ஷ்மணனைத் தணிக்கும் வகையில் இந்தச் சொற்களைச் சொன்னான்:(1) "மஹா வில்லாளியும், மஹாபுத்திமானுமான பரதன், தானே நேரடியாக இங்கே வந்தால், தனுசாலோ {வில்லாலோ}, கேடயத்துடன் கூடிய கத்தியினாலோ ஆகும் காரியம் {பயன்} என்ன?(2) இலக்ஷ்மணா, பிதாவிடம் சத்தியம் செய்து கொடுத்துவிட்டு, இங்கே வரும் பரதனைக் கொன்று, சாபத்தை அடைந்து, கிட்டும் ராஜ்ஜியத்தைக் கொண்டு நான் என்ன செய்யப் போகிறேன்?(3) பந்துக்களையோ, மித்ரர்களையோ அழித்து கிட்டும் திரவியத்தை, விஷம் கலந்த உணவைப் போலவே நான் ஏற்க மாட்டேன்.(4)
இலக்ஷ்மணா, தர்மம் {அறம்}, அர்த்தம் {பொருள்}, காமம் {இன்பம்}, அல்லது பிருத்வியை {பூமியைக்} கூட நான் {தம்பிகளான} உங்களுக்காகவே விரும்புகிறேன். இதை நான் உனக்கு உறுதியளிக்கிறேன்.(5) இலக்ஷ்மணா, "என்னுடன் பிறந்தவர்களின் பாதுகாப்பிற்காவும், அவர்களின் சுகத்திற்காகவுமே நான் ராஜ்ஜியத்தை விரும்புகிறேன்" என ஆயுதந் தீண்டி சத்தியம் செய்கிறேன்.(6) இலக்ஷ்மணா, சாகரம் சூழ்ந்த நிலத்தை அடைவது எனக்கு துர்லபமல்ல {அரிதானதல்ல / என்னால் இயலாததல்ல}. சௌம்யா, அதர்மத்தினால் கிட்டும் சக்ரத்துவத்தையும் {இந்திர நிலையையும்} நான் விரும்ப மாட்டேன்.(7) மாநதா {கௌரவமளிப்பவனே}, பரதனோ, நீயோ, சத்ருக்னனோ இல்லாமல் எனக்கு சுகம் உண்டென்றால் அது {அந்த சுகம்} நெருப்பில் பஸ்மமாகட்டும் {சாம்பலாகட்டும்}.(8)
உடன்பிறந்தவர்களிடம் நிறைந்த பாசத்துடனே பரதன் அயோத்திக்குத் திரும்பியிருக்க மாட்டானா? குலதர்மத்தை அனுசரிப்பவனான அவன், பிராணனைவிட எனக்குப் பிரியமானவன். வீரா, புருஷரிஷபா {மனிதர்களில் காளையே}, நான் நாடுகடத்தப்பட்டதையும், ஜானகியுடனும், உன்னுடனும் சேர்த்து வந்து, ஜடைதரித்து, மான் தோலுடுத்தியிருப்பதையும் கேட்டு, சினேகத்தாலும், ஹிருதயத்தைக் கலக்கும் சோகத்தாலும், இந்திரியங்கள் கலங்கியவனாக பரதன் என்னைக் காண வருகிறான். வேறு எதற்காகவும் அல்ல என நான் நினைக்கிறேன்.(9-11) அந்த ஸ்ரீமான் {பரதன்}, தன் அம்பாவான கைகேயியிடம் கோபமடைந்து, பிரியமற்ற வகையில் கடுமொழி பேசி, பிதாவை சமாதானப்படுத்தி, ராஜ்ஜியத்தை எனக்கு தத்தம் செய்யவே வருகிறான்[1].(12)
[1] பெருமகன் என்வயின் பிறந்த காதலின்வரும் என நினைகையும் மண்ணை என்வயின்தரும் என நினைகையும் தவிர தானையால்பொரும் என நினைகையும் புலமைப்பாலதோ- கம்பராமாயணம் 2419ம் பாடல்பொருள்: அந்தப் பெருமகன் {பரதன்}, என்னிடம் உண்டான அன்பில் வருகிறான் என நினைப்பதும், மண்ணை என்னிடம் தரப்போகிறான் என நினைப்பதுந் தவிர சேனையைக் கொண்டு போர்த் தொடுப்பான் என்று நினைப்பதும் அறிவிற்குகந்ததோ?
பரதனுக்கு நம்மை பார்க்க வருவதற்கான பிராப்த காலம் {தகுந்த நேரம்} இதுவே. நமக்கு பிரியமற்றதைச் செய்ய மனத்திற் சிறிய அளவிலேனும் அவன் கருத மாட்டான்.(13) பரதன் உனக்குப் பிரியமற்றதையோ, பயம் விளைவிக்குஞ் செயலையோ பூர்வத்தில் எப்போதாவது செய்திருக்கிறானா? பரதனை ஏன் நீ சந்தேகிக்கிறாய்?(14) பரதனிடம் நீ நிஷ்டூரமாகவோ {கொடுமையாகவோ}, பிரியமற்ற {விரும்பத்தகாத} வகையிலோ பேசாதே. பரதனிடம் பிரியமற்றுப் பேசுவது, என்னிடம் பிரியமற்று பேசியதாகவே ஆகும்.(15)
சௌமித்ரா, எத்துன்பம் வந்தாலும் புத்திரன் எப்படி பிதாவைக் கொல்வான்? உடன் பிறந்தவன் தன் பிராணனுக்கு நிகரான சகோதரனை எப்படிக் கொல்வான்?(16) இராஜ்ஜியத்திற்காகவே இந்தச் சொற்களை நீ பேசுகிறாயென்றால், பரதனைக் கண்டு, "ராஜ்ஜியத்தை இவனிடம் கொடு" என்று சொல்கிறேன்.(17) இலக்ஷ்மணா, "ராஜ்ஜியத்தை இவனிடம் கொடு" என்றதும், "அவ்வாறே கொடுக்கிறேன்" என்றே உண்மையில் அவன் சொல்வான்" {என்றான் ராமன்}.(18)
தன்னுடன் பிறந்தவனான அந்த தர்மசீலன் {ராமன்} இவ்வாறு சொன்னதும், அவனிடம் அர்ப்பணிப்புமிக்க லக்ஷ்மணன், லஜ்ஜையினால் காத்திரங்களுக்குள் {வெட்கத்தினால் தன் அங்கங்களுக்குள்} கூனிக் குறுகி ஒடுங்கினான்.(19) அந்தச் சொற்களைக் கேட்டு வெட்கமடைந்த லக்ஷ்மணன், "நம் பிதா தசரதரே நேரடியாக உம்மைக் காண வருகிறாரோ?" என்று கேட்டான்.(20)
இலக்ஷ்மணன் நாணமடைந்ததைக் கண்ட ராமன், {இவ்வாறு} பதிலளித்தான், "மஹாபாஹுவான அவரே நம்மைக் காண இங்கே வருகிறாரென நானும் நினைக்கிறேன்.(21) அல்லது, "நாம் சுகத்திற்கே உரியவர்கள்; வனவாசத்திற்கு அல்ல {துன்பத்திற்குத் தகுந்தவர்களல்ல}" என்று நினைத்து, நம்மை கிருஹத்திற்கு {வீட்டிற்குத்} திருப்பியழைத்துச் செல்ல வரலாம் எனவும் நினைக்கிறேன்.(22) அல்லது, என் பிதாவான ஸ்ரீமான் ராகவர் {தசரதர்}, எப்போதும் சுகத்தால் சேவிக்கப்பட்ட இந்த வைதேஹியை வனத்திலிருந்து திருப்பி அழைத்துச் செல்லவும் வரக்கூடும்.(23)
வீரா, உன்னத கோத்திரம் கொண்டவையும், மனோகரமாகப் பிரகாசிப்பவையுமான அந்தச் சிறந்த துரகங்கள் {குதிரைகள்} இரண்டும், அதோ வாயுவுக்கு சமமான வேகத்தில் வருகின்றன.(24) மதிமிக்கவரும், முதிர்ந்தவருமான நம் தாதைக்குரியதும் {தந்தை தசரதருக்குரியதும்}, சத்ருஞ்ஜயம் என்ற பெயரைக் கொண்டதுமான மஹாகாய நாகம் {பேருடல்யானை} அதோ வாஹினி முகத்தில் {படையின் முன்னணியில்} அசைந்தாடி வருகிறது.(25)
ஆனால், மஹாபாஹுவே, உலகத்தில் நன்கறியப்பட்ட திவ்யமான வெண்குடையைக் காணாததால் இங்கே எனக்கு ஒரு சந்தேகம் உண்டாகிறது.(26) இலக்ஷ்மணா, நீ விருக்ஷத்தின் {மரத்தின்} உச்சியில் இருந்து இறங்கி, என் சொற்படி செயல்படுவாயாக" என்றிவ்வாறு, தர்மாத்மாவான ராமன், அந்த சௌமித்ரியிடம் {லக்ஷ்மணனிடம்} சொன்னான்.(27) ஸமிதிஞ்ஜயனான {போரில் வெற்றிவாகை சூடுபவனான} லக்ஷ்மணன், அந்த சால மரத்தின் உச்சியில் இருந்து இறங்கிக் கைகளைக் கூப்பியபடியே ராமனின் அருகில் வந்து நின்றான்.(28)
சந்தடி ஏதும் ஏற்படுத்தலாகாது {கால் பதிக்கும் ஒலியும் கேட்கக்கூடாது} என்று பரதனால் ஆணையிடப்பட்ட சேனை, அந்த சைலத்தை {மலையைச்} சுற்றிலும் முகாமிட்டது.(29) கஜவாஜிரத குலங்களால் {யானை, குதிரை, தேர் கூட்டங்களால்} நிறைந்த அந்த இக்ஷ்வாகு சம்மு {படை}, அந்த பர்வதத்தைச் சுற்றிலும் ஒன்றரை யோஜை அளவுள்ள பகுதியை மறைத்தது.(30) நீதிமானான பரதனால் அழைத்துவரப்பட்ட அந்த சேனை, தன் ஆணவத்தைக் கைவிட்டு, தர்மத்தை முன்னிட்டுக் கொண்டு, அந்த ரகுநந்தனனை {ராமனைத்} தணிப்பதற்காக சித்திரகூடத்தில் பணிவுடன் பிரகாசித்தது.(31)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 097ல் உள்ள சுலோகங்கள்: 31
Previous | | Sanskrit | | English | | Next |