Friday, 22 July 2022

இராமனின் துயரம் | அயோத்தியா காண்டம் சர்க்கம் - 053 (35)

The grief of Rama | Ayodhya-Kanda-Sarga-053 | Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: இலக்ஷ்மணனை அயோத்திக்குத் திருப்பி அனுப்ப முயன்ற ராமன்; திரும்ப மறுத்த லக்ஷ்மணன்; ராமன் சம்மதித்தது...

Lakshmana consoling Rama

மகிழ்ச்சியளிப்பவர்களில் சிரேஷ்டனான ராமன், அந்த விருக்ஷத்தை {மரத்தை} அடைந்து, மேற்கு சந்தியை வழிபட்டு {மாலை வேளைக்கான சந்தியாவந்தனத்தைச் செய்து} லக்ஷ்மணனிடம் இதைச் சொன்னான்:(1) "ஜனங்களின் பாதங்கள் படும் இடத்தைத் தாண்டி இதோ நேர்வது சுமந்திரர் இல்லாத முதல் ராத்திரியாகும். அதற்காக நீ வருந்தாதே.(2) இலக்ஷ்மணா, இன்றிலிருந்து ராத்திரி வேளைகளில் சோம்பலின்றி நாம் ஜாக்கிரதையாக {விழிப்புடன்} இருக்க வேண்டும். சீதையின் யோகக்ஷேமம் {பாதுகாப்பு} நம்மைச் சார்ந்தே இருக்கிறது.(3) சௌமித்ரியே, இந்த ராத்திரியை எப்படியாவது கழிப்போம். நம்மால் அடையப்படுவதை {நாம் கொணரும் புற்கள், தழைகளை} விரித்து பூமியில் கிடப்போம்" {என்றான் ராமன்}.(4)

ஆடம்பர சயனத்திற்குப் பழக்கப்பட்டவன் {ராமன்}, மேதினியில் கிடந்தவாறே இந்த சுபச் சொற்களை சௌமித்ரியிடம் {சுமித்திரையின் மகனான லக்ஷ்மணனிடம்} சொன்னான்:(5) "இலக்ஷ்மணா, நிச்சயமாக இன்றும் மஹாராஜா {தசரதர்} துக்கத்துடனே உறங்குவார். ஆசைகள் நிறைவேறிய கைகேயியோ, திருப்தியில் நிறைந்திருப்பாள்.(6) பரதன் வருவதைக் காணும் அந்தக் கைகேயி தேவி, ராஜ்ஜிய காரணத்திற்காக மஹாராஜாவின் பிராணனைப் போக்காதிருக்க வேண்டும்.(7) கைகேயியின் வசத்தில் விழுந்து காமத்தால் பீடிக்கப்பட்டவரும்[1], என்னை இழந்து அநாதையாக இருப்பவருமான அந்த விருத்தரால் {முதியவரான தசரதரால்} என்ன செய்ய முடியும்?(8) இராஜரின் விசனத்தையும், அவரது மனக்குழப்பத்தையும் கருத்தில் கொள்கையில் அர்த்தத்தையும், தர்மத்தையும்விட காமமே {பொருளையும், அறத்தையும் விட இன்பமே} வலிமைமிக்கது என்று நான் நினைக்கிறேன்.(9) இலக்ஷ்மணா, கல்வியறிவற்ற எந்த மனிதனும், நம் தாதையைப் போலத் தன் இஷ்டப்படி, ஒரு பிரமதையின் {பெண்ணின்} நிமித்தமாக, என்னைப் போன்ற ஒரு புத்திரனைக் கைவிடுவானா?(10)

[1] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "ஸமஸ்த புருஷார்த்தங்களிலும் அபிலாஷமில்லாமலிக்கின்ற ஸ்ரீராமன், தனக்கு ராஜ்யங்கிடைக்கவில்லை யென்கிற வ்யாஜத்தை மனத்தில் வைத்துக் கொண்டு கைகேயியின் நிந்தையை முக்யமாகக் கருதி இங்ஙனம் கூறுவது யுக்தமோ? என்னில் - லக்ஷ்மணனை உதயமானவுடன் அயோத்யைக்குப் போவென்று சொல்லப் போகிறானாகையாலும், அந்த லக்ஷ்மணன் கைகேயியை த்வேஷித்தவனாகையாலும் அவனை ஸமாதானப்படுத்தி இங்ஙனம் அனுப்புவதற்காக நிந்தித்தானன்றி வேறில்லையென்று தெரியவருகின்றது" என்றிருக்கிறது.

ஐயோ, கைகேயி சுதனான பரதன் ஒருவனே தன் பாரியையுடன் சுகித்து, அதிராஜனைப் போல  வளமிக்க கோசலத்தை அனுபவிப்பான்.(11) தாதை வயது முதிர்ந்தவர், நானோ அரண்யத்தில் வசிக்கிறேன். அவனே சர்வ ராஜ்ஜியத்திற்கும் ஏகமுகனாக {ஒரே தலைவனாகத்} திகழ்வான்.(12) அர்த்தத்தையும், தர்மத்தையும் புறக்கணித்துவிட்டு காமத்தைப் பின்பற்றுபவன் எவனும், சீக்கிரமே தசரதரின் நிலையை அடைவான்.(13) சௌமியா, தசரதருக்கு முடிவை ஏற்படுத்துவதற்காகவும், என்னை நாடு கடத்துவதற்காகவும், பரதன் ராஜ்ஜியத்தை அடைவதற்காகவும்தான் கைகேயி {நம் வீட்டிற்குள்} வந்தாள் என நான் நினைக்கிறேன்.(14) 

சௌபாக்கியத்தின் செருக்கில் மோஹமடைந்திருக்கும் கைகேயி, என் பொருட்டு கௌசலையையும், சுமித்திரையையும் இப்போதே பீடித்திருப்பாள்.(15) இலக்ஷ்மணா, என் பொருட்டு சுமித்ரா தேவி துக்கத்தை அடையக்கூடாது. காலையில் இங்கிருந்து அயோத்திக்குள் நீ பிரவேசிப்பாயாக.(16) நான் சீதை சகிதனாகத் தனியாகவே தண்டகத்திற்கு {தண்டகாரண்யத்திற்குச்} செல்வேன். அநாதையாக இருக்கும் கௌசல்யைக்கு நீ நாதனாவாயாக {தலைவனாக இருப்பாயாக}.(17) சூத்திரக் கர்மங்களை {அற்பச் செயல்களைச்} செய்பவளான கைகேயி, துவேஷத்தினால் {வெறுப்பினால்} அநியாயங்களைச் செய்யக்கூடும். தர்மஜ்ஞனான {தர்மத்தை அறிந்தவனான} பரதனிடம், என் மாதாவை {கௌசலையை} ஒப்படைப்பாயாக.(18) 

சௌமித்ரியே, ஏதோ முற்பிறவியில் என் ஜனனி {அன்னை} ஸ்திரீகளைத் தங்கள் புத்திரர்களிடமிருந்து பிரித்திருக்க வேண்டும். நிச்சயம் அதனாலேயே இந்நிலை எழுந்திருக்கிறது.(19) கௌசல்யை, துன்பத்துக்கிடையில் நெடுங்காலம் என்னை வளர்த்தாள். என்னால் {தொண்டாற்றப்பட்டு அவளுக்குப்} பலன் விளைய வேண்டிய காலத்தில் நான் அவளைப் பிரிந்து வந்திருக்கிறேன். எனக்கு ஐயோ {இதுவும் எனக்கொரு பிழைப்பா?}.(20) சௌமித்ரியே, என் அம்பாவுக்கு முடிவற்ற சோகத்தைத் தந்திருக்கும் என்னைப் போன்ற ஒரு புத்திரன், ஒருபோதும் எந்தப் பெண்ணுக்கும் பிறக்கக்கூடாது.(21) இலக்ஷ்மணா, அவளது சாரிகையும் {மைனா} கூட என்னை விட அதிக பிரீதியுடையதென நான் நினைக்கிறேன். அது {அந்த மைனாவும், அருகில் இருக்கும் கிளியிடம்}, "சுகியே {கிளியே}, நம் பகைவனின் {பூனையின்} பாதத்தைக் கடிப்பாய்" என்று சொல்லும் வாக்கியத்தையாவது அவள் {கௌசல்யை} கேட்டிருப்பாள்[2].(22)

[2] தாதாசாரியர் பதிப்பில், "என் தாயாரால் வளர்க்கப்பட்ட அந்தச் சாரிகைப் பறவையும், என்னைவிடச் சிறந்ததென நினைக்கின்றேன், தாயாரின் மேலிதற்கும், இதன்மேல் தாயார்க்கும், ப்ரீதி மிகுதியுள்ளதாகுமன்றோ? இஃது கூடிலிருந்து பூனை வருவதைக் கண்டு கிளியை நோக்கி, அடா சுகா, நீ பகையாகிய இப்பூனையின் காலினைக் கடியென்று உரைக்கும் வாக்கியத்தை அடா கிளிபோலழகிய ராமா, நீ சத்ருவின் மூலத்தைக் கண்டிக்கக் கடவையென்று என்னை நோக்கிச் சொன்னதாகவுமெண்ணி மகிழும்படி அஃது என் தாயார் கேட்க உரைக்குமன்றோ?" என்றிருக்கிறது. பிபேக்திப்ராய் பதிப்பின் அடிக்குறிப்பில், "சாரிகைப்பறவை என்பது பேசப் பழக்கப்படும் ஒருவகை வளர்ப்புப் பறவையாகும். கௌசல்யை ஒரு சாரிகைப் பறவையை வளர்த்து வந்தாள். சுகா {சுகி} என்பது கிளியைக் குறிக்கும். சில சமயங்களில் பெண்கிளியும் சாரிகை என்று குறிப்பிடப்படுகிறது" என்றிருக்கிறது.

அரிந்தமா {பகைவரை வெல்பவனே}, பெருஞ்சோகத்தில் இருப்பவளும், அற்ப பாக்கியமுள்ளவளும், புத்திரனற்றவளுமான அவளுக்குச் சிறு உதவியும் செய்ய இயலாத புத்திரனாகிய என்னால் என்ன காரியத்தைதான் செய்துவிட முடியும்?(23) அற்ப பாக்கியசாலியான என் மாதா கௌசல்யை, என்னைப் பிரிந்த பரம துக்கத்தால் பீடிக்கப்பட்டு, சோக சாகரத்தில் விழுந்து கிடப்பாள்.(24) இலக்ஷ்மணா, நான் கோபமடைந்தால் என் கணைகளைக் கொண்டு அயோத்தியை மட்டுமல்லாமல் மொத்த பிருத்வியையும் தனியொருவனாகக் கைப்பற்றுவேன். காரணமற்ற வீரியம் தகாது. ஒருபோதும் தகாது.(25) பாவமற்றவனே, அதர்மத்திலும், பரலோகத்திலும் உண்டாகும் பயத்தால் நான் பீதியடைகிறேன். அதனாலேயே நான் அபிஷேகம் செய்து கொள்ளவில்லை" {என்றான் ராமன்}.(26)

இராமன், அந்த நிசியில் {இரவில்}, கண்ணீர் நிறைந்த முகத்துடன், இவ்வாறும், பலவாறும் பரிதாபகரமாக அழுதவாறே ஜனங்களற்ற அந்த வனத்தில் அமைதியாக அமர்ந்தான்.(27) எரிந்து தணிந்த அனலனை {நெருப்பைப்} போலவும், கொந்தளித்தடங்கிய சாகரத்தைப் போலவும் அமைதியடைந்த ராமனை, லக்ஷ்மணன் {பின்வருமாறு} ஆசுவாசப்படுத்தினான்:(28) "ஆயுதந்தரித்தவர்களில் முதன்மையான ராஜரே, நீவிர் இல்லாத அயோத்தியாபுரியானது, நிச்சயம் சந்திரனில்லாத இரவுக்கு ஒப்பாக பிரபையிழந்திருக்கும் {ஒளியிழந்திருக்கும்}.(29) புருஷரிஷபரான ராமரே, இவ்வாறு பரிதபித்து, சீதைக்கும், எனக்கும் மனச்சோர்வை உண்டாக்குவது உமக்குத் தகாது.(30) இராகவரே, என்னாலோ, சீதையாலோ உம்மைப் பிரிந்திருக்க முடியாது. நீரில் இருந்து கரையில் வீசப்பட்ட மத்ஸ்யங்களை {மீன்களைப்} போல, எங்களால் ஒரு முஹூர்த்தமும் ஜீவித்திருக்க இயலாது.(31) பரந்தபரே {பகைவரை தகிக்கச் செய்பவரே}, உம்மைப் பிரிந்து, தாதையையோ, சத்ருக்னனையோ, சுமித்ரையையோ, ஏன் ஸ்வர்க்கத்தையோ கூட நான் தரிசிக்க விரும்பவில்லை" {என்றான் லக்ஷ்மணன்}.(32)

பிறகு, அங்கே சுகமாக அமர்ந்திருந்த அந்த தர்மவத்சலர்கள் இருவரும் {தர்மத்தை விரும்புகிறவர்களான ராமனும், லக்ஷ்மணனும்}, சற்றுத் தொலைவில் ஆலமரத்தினடியில்  இருந்த சயனத்தைக் கண்டு அதில் தங்களைக் கிடத்திக் கொண்டனர்.(33) பரந்தபனான ராகவன் {பகைவரை தகிப்பவனான ராமன்}, உத்தமப் பொருள் நிறைந்த லக்ஷ்மணனின் மொழியை உள்ளபடியே கவனமாகக் கேட்டு, நீண்ட கால தர்மத்தைப் பின்பற்றி, வனவாச காலம் முழுவதும் அவனுடன் கழிக்கத் தீர்மானித்தான்[3].(34) 

[3] நரசிம்மாசாரியர் பதிப்பின் அடிக்குறிப்பில், "இதற்கு, "பகைவரைப் பரிதபிக்கச் செய்யுந்திறமுடையோனாகிய ராமன் தனக்கு லக்ஷ்மணன் வனவாஸத்தைக் குறித்து ஆதரவுடன் சொன்ன மிக்க மேலான வார்த்தைகளைக் கேட்டுத் தான் வெகுகாலம் தர்மத்தில் நிலைநின்று லக்ஷ்மணனுக்கு எல்லா வர்ஷங்களும் தன்னோடு வனவாஸஞ் செய்யும்படி அனுமதி கொடுத்தான்" என்று மஹேஸ்வர தீர்த்தர் பொருள் கூறுகின்றார்" என்றிருக்கிறது.

இராகவ வம்சத்தின் வரங்களான அந்த மஹாபலர்கள் இருவரும், அதுமுதல், கிரிகளின் சாரலில் திரியும் சிங்கங்கள் இரண்டைப் போல, பயத்திற்கோ, சம்பிரமத்திற்கோ {பரபரப்பிற்கோ} இடமளிக்காமல் ஜனங்களற்ற அந்த வனத்தில் வசித்தனர்.(35)

அயோத்தியா காண்டம் சர்க்கம் – 053ல் உள்ள சுலோகங்கள் : 35

Previous | Sanskrit | English | Next

Labels

அகம்பனன் அகஸ்தியர் அக்னி அக்ஷன் அங்கதன் அசுவபதி அஞ்சனை அத்ரி அம்சுமான் அம்பரீசன் அயோமுகி அவித்தர் அவிந்தியன் அனசூயை அனலை அஜாமுகீ அஸமஞ்சன் அஹல்யை ஆதூர்த்தரஜஸ் இந்திரன் இந்திரஜித் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலங்கினி இல்வலன் உமை ஏகஜடை கங்கை கசியபர் கந்தமாதனன் கந்து கபந்தன் கபிலர் கரன் காகாசுரன் காதி கிருத்திகை குசத்வஜன் குசநாபன் குசன் குசன்1 குசாம்பன் கும்பகர்ணன் குஹன் கேசரி கேசினி கைகசி கைகேயி கோலபன் கௌசல்யை கௌசிகி கௌதமர் சண்டோதரி சதபலி சதாநந்தர் சத்தியவதி சத்ருக்னன் சபரி சபளை சமுத்திரன் சம்பாதி சரபங்கர் சரபன் சரமை சாகரன் சாந்தை சாரணன் சார்தூலன் சித்தார்த்தர் சித்ரரதன் சிம்ஹிகை சிவன் சீதை சுகன் சுக்ரீவன் சுதர்சனர் சுதாமன் சுதீக்ஷ்ணர் சுபார்ஷ்வன் சுமதி சுமந்திரன் சுமித்திரை சுயஜ்ஞர் சுனசேபன் சுஷேணன் சுஹோத்ரன் சூர்ப்பணகை சூளி தசரதன் ததிமுகன் தர்ம்பிருதர் தனு தாடகை தாரன் தாரை தான்யமாலினி திதி திரிசங்கு திரிசிரஸ் திரிஜடர் திரிஜடை திலீபன் துந்துபி துர்த்தரன் துர்முகன் துர்முகி துவிவிதன் தூஷணன் நளன் நாரதர் நிகும்பன் நிசாகரர் நீலன் பகீரதன் பரசுராமர் பரதன் பரத்வாஜர் பலி பனஸன் பாஸகர்ணன் பிரகஸன் பிரகஸை பிரபாவன் பிரம்மதத்தன் பிரம்மன் பிரஹஸ்தன் பிருகு பிலக்ஷன் புஞ்சிகஸ்தலை புஞ்ஜிகஸ்தலை மண்டோதரி மதங்கர் மது மந்தரை மயன் மருத்துக்கள் மஹாபார்ஷ்வன் மஹோதயர் மஹோதரன் மாண்டகர்ணி மாயாவி மாரீசன் மால்யவான் மைந்தன் மைனாகன் மோஹினி யுதாஜித் யூபாக்ஷன் ரம்பை ரிக்ஷரஜஸ் ரிசீகர் ரிஷ்யசிருங்கர் ருமை ரோமபாதன் லவன் வசிஷ்டர் வருணன் வஜ்ரதம்ஷ்டிரன் வஜ்ரஹனு வஸு வாதாபி வாமதேவர் வாமனன் வாலி வால்மீகி விகடை வித்யுஜ்ஜிஹ்வன் விபாண்டகர் விபீஷணன் விராதன் விரூபாக்ஷன் வினதன் வினதை விஷ்ணு விஷ்வகர்மன் விஷ்வாமித்ரர் விஸ்ரவஸ் ஜடாயு ஜம்புமாலி ஜனகன் ஜஹ்னு ஜாபாலி ஜாம்பவான் ஸகரன் ஸுபாஹு ஸுரஸை ஸோமதை ஸ்கந்தன் ஸ்தூலசிரஸ் ஸ்வயம்பிரபை ஹரிஜடை ஹனுமான் ஹிமவான் ஹேமை