Nandigrama | Yuddha-Kanda-Sarga-125 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: இராமனால் அனுப்பப்பட்ட ஹனுமான், ராமனின் வரவை குஹனிடமும், பரதனிடமும் அறிவிப்பது...
பிறகு, துரிதவிக்ரமனும், பிரியத்தை விரும்புகிறவனுமான ராகவ ராமன், அயோத்தியை நினைத்து பிரியமானதைக் குறித்துச் சிந்தித்தான்.(1) மதிமிக்கவனும், தேஜஸ்வியுமான அவன் இவ்வாறு சிந்தித்துவிட்டு, வானரர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்தி, பிலவங்கமனான ஹனூமந்தனிடம் {பின்வருமாறு} சொன்னான்:(2) "பிலவகசத்தமா {தாவிச் செல்பவர்களில் சிறந்தவனே}, சீக்கிரம் துரித கதியில் அயோத்திக்குச் சென்று, நிருபதிமந்திரத்தில் {அரசமாளிகையில்} உள்ள ஜனங்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை அறிவாயாக.(3)
பிறகு, கஹனகோசரனாக {வானத்தில் செல்பவனாக} குஹனின் சிருங்கபேரபுரத்தை அடைந்து, நிஷாதிபதியிடம் குசலம் {நலம்} விசாரிக்கும் என் வசனத்தை சொல்வாயாக.(4) நான் குசலமாகவும், ஆரோக்கியமாகவும், பிணியற்றவனாகவும் இருப்பதைக் கேட்டு குஹன் பிரீதியடைவான். அவன் என் ஆத்மாவுக்கு சமமான சகா ஆவான்.(5) பிரீதியடையும் நிஷாதிபதி குஹன், அயோத்யையின் மார்க்கத்தையும் {அயோத்திக்குச் செல்லும் வழியையும்}, பரதனின் இயல்பையும் உனக்கு அறிவிப்பான்.(6)
குசலம் விசாரிக்கும் என் சொற்களை பரதனிடமும் சொல்வாயாக. பாரியையுடனும் {மனைவி சீதையுடனும்}, லக்ஷ்மணனுடனும் சித்தார்த்தனாக {ஏற்ற காரியம் நிறைவேறியவனாக} வரும் என்னைக் குறித்து அவனிடம் சொல்வாயாக.(7) பலவானான ராவணனால் வைதேஹி அபகரிக்கப்பட்டதையும், சுக்ரீவனுடனான சம்வாதத்தால் ரணத்தில் {என் பேச்சுவார்த்தையால் போரில்} வாலி வதம் செய்யப்பட்டதையும்,(8) உன்னால் மைதிலி தேடப்பட்டதையும், அதேபோல, குறைவற்ற ஆபகாபதியான மஹாதோயத்தை {விரிந்த நீர்பரப்பின் தலைவனும், பெரும் நீர்க்கொள்ளிடமுமான கடலைக்} கடந்து எப்படி உன்னால் அவள் கண்டடையப்பட்டாள் என்பதையும்,(9) சமுத்திரத்திற்குச் சென்றதையும், சாகரனின் தரிசனத்தையும், அதேபோல, எப்படி சேது காரிதம் செய்யப்பட்டது {பாலம் கட்டப்பட்டது}, எப்படி ராவணன் கொல்லப்பட்டான் என்பதையும்,(10) மஹேந்திரனாலும், பிரம்மனாலும், வருணனாலும் வரதானம் செய்யப்பட்டதையும், மஹாதேவனின் அருளால் பிதாவை {தந்தை தசரதரை} நான் சந்தித்ததையும்,(11) சௌம்யா, ராக்ஷசராஜனுடனும் {விபீஷணனுடனும்}, ஹரீக்களின் ஈஷ்வரனுடனும் {குரங்குகளின் மன்னனான சுக்ரீவனுடனும்} நான் வந்து கொண்டிருப்பதையும் அவனிடம் {பரதனிடம்} சொல்வாயாக.(12)
"இராமன், சத்ருகணங்களை {பகைக் கூட்டத்தை} வென்று, உத்தம புகழை அடைந்து, அர்த்தம் நிறைவேறி, மஹாபலவான்களான மித்ரர்களுடன் {நண்பர்களுடன்} வந்து கொண்டிருக்கிறான்",(13) என்ற இதைக் கேட்கும்போது, பரதன் எந்த முகத் தோற்றத்தைக் கொள்கிறான் என்பதையும், என்னைக் குறித்து அவன் என்ன கருதுகிறான் என்ற அனைத்தையும் தெரிந்து கொள்வாயாக.(14) சர்வ விருத்தாந்தங்களையும் {செய்திகள் அனைத்தையும்} அறிந்து கொள்வாயாக. முகவர்ணம், திருஷ்டி {பார்வை}, பேச்சு, இங்கிதங்கள் ஆகியவற்றால் உள்ளனவற்றை உள்ளபடியே அறிந்து கொள்வாயாக.(15)
சர்வகாலங்களிலும் நிறைவானதும் {அனைத்தும் கிடைப்பதும்}, ஹஸ்த, அஷ்வ, ரதங்களால் {யானைகள், குதிரைகள், தேர்களால்} நிறைந்ததுமான பித்ரு, பைதாமஹர்களின் ராஜ்யத்தை {தந்தை, பாட்டன் வழி அரசை} நோக்கி எவனுடைய மனம்தான் திரும்பாது?(16) ஸ்ரீமான் பரதன், ராஜ்ஜியத்துடன் {நீண்ட காலம்} கொண்ட தொடர்பால், தானே அர்த்தமாக்கிக் கொள்ளக் கருதினால் {அரசாள விரும்பினால்}, அகில வசுதை முழுவதற்கும் ரகுனந்தனன் தகுந்தவனே {ரகுக்களின் மகிழ்ச்சியை அதிகரிப்பவனான அந்த பரதனே பூமி முழுவதையும் ஆளட்டும்}.(17) வானரா, அவனது புத்தி, முயற்சி ஆகிய யாவற்றையும் அறிந்து கொண்டு, {அயோத்திக்கு} எவ்வளவு தூரம் இருக்கிறதோ, அவ்வளவும் நாங்கள் கடப்பதற்கு முன், சீக்கிரம் வருவதே உனக்குத்தகும்" {என்றான் ராமன்}.(18)
இவ்வாறு ஆணையிடப்பட்ட மாருதாத்மஜன் ஹனுமான், மானுஷ ரூபம் தரித்துக் கொண்டு துரிதமாக அயோத்யைக்குச் சென்றான்.(19) பிறகு, மாருதாத்மஜனான ஹனூமான், உத்தம பன்னகங்களை {பெரும்பாம்புகளை} வேகமாக விரட்டும் கருத்மானை {கருடனைப்} போல வேகமாக எழுந்தான்.(20) விஹகேந்திராலயமும் {பறவைகளின் மன்னனுடைய வசிப்பிடமும்}, சுபமானதுமான பித்ரு {தன் தந்தை வாயு தேவனின்} பாதையில் பாய்ந்து, பயங்கரமான கங்காயமுனா சங்கமத்தைக் கடந்து,{21} சிருங்கபேரபுரத்தை அடைந்து, குஹனை அணுகியவனும், வீரியவானுமான அந்த ஹனுமான், சுபமான இந்தச் சொற்களை மகிழ்ச்சியுடன் கூறினான்:(21,22) "சத்திய பராக்கிரமரும், காகுத்ஸ்தரும், உமது சகாவுமான அந்த ராமர், சீதையுடனும், சௌமித்ரியுடனும் கூடியவராக உமது குசலத்தை {நலத்தை} விசாரிக்கிறார்.(23) முனிவரின் வசனப்படி இன்று பஞ்சமியின் ரஜனியை {இரவைக்} கழித்துவிட்டு, பரத்வாஜரால் அனுமதிக்கப்பட்ட ராகவரை காலையில் நீர் காண்பீர்" {என்றான் ஹனுமான்}.(24)
இவ்வாறு சொன்ன மஹாதேஜஸ்வி {ஹனுமான்}, மகிழ்ச்சியில் ஏற்பட்ட மயிர்ச்சிலிர்ப்புடன், எதையும் கருதாமல் {எந்த வித பதிலையோ, உபசரிப்பையோ எதிர்பாராமல், தன் பணியில் ஒன்றியக் கருத்துடன்} பெரும் வேகத்தில் உயரத் தாவினான்.(25) அவன் ராமதீர்த்தத்தையும் {பரசுராம தீர்த்தத்தையும்}, அதேபோல வாலுகினீ நதியையும், வரூதீ {வரூதினி}, கோமதீ {நதிகளையும்}, அதேபோல பயங்கரமான சாலவனங்களையும் கண்டான்,{26} பல்லாயிரம் பிரஜைகளுடன் கூடிய எண்ணற்ற ஜனபதங்களும் இருந்தன.(26,27அ) அந்தக் கபிகுஞ்சரன் {குரங்குகளில் யானையான ஹனுமான்}, துரிதமாக தூரங்களைக் கடந்து சென்று,{27ஆ} நந்திகிராமத்தின் சமீபத்தில் இருந்த முற்றும் மலர்ந்த மரங்களை அடைந்தான். அவை {அந்த மரங்கள்} ஸுராதிபனின் {இந்திரனின்} உபவனமான சைத்ரரதத்தின் மரங்களைப் போல,{28} ஸ்திரீகளுடனும், புத்திரர்களுடனும், முதியவர்களுடனும் விளையாடுபவர்களால் நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தன.(27ஆ-29அ)
அயோத்தியிலிருந்து ஒரு குரோச மாத்திரத்தில் {தூரத்தில்}, மரவுரியையும், கருப்பு மான் தோலையும் ஆடையாக அணிந்து,{29ஆ} தீனனாகவும் {வாடியவனாகவும்}, மெலிந்தவனாகவும், ஆசிரமவாசியாகவும் இருக்கும் பரதனைக் கண்டான். ஜடை தரித்தவனும், புழுதி படிந்த அங்கங்களுடன் கூடியவனும், பிராதாவின் {உடன்பிறந்த அண்ணன் ராமனின்} பிரிவால் துன்புற்றவனும்,{30} பழங்களையும், கிழங்குகளையும் உண்பவனும், தாந்தனும் {மனத்தை அடக்கியவனும்}, தபஸ்வியும், தர்மசாரியும் {அறம் ஒழுகுபவனும்}, மேல்நோக்கிய பெரும் ஜடாபாரத்துடன் கூடியவனும், மரவுரியை மேலாடையாகக் கொண்டவனும்[1],{31} நியதனும் {புலன்களை அடக்கியவனும்}, பாவிதாத்மனும் {தியானத்தால் ஆத்ம தூய்மை அடைந்தவனும்}, பிரம்மரிஷிக்கு சமமான தேஜஸ்ஸைக் கொண்டவனும், அந்த {ராமனின்} பாதுகைகளை முன்வைத்து வசுந்தரையை ஆள்பவனும்,{32} உலகத்தின் சாதுர்வர்ணங்களையும் {நான்கு வர்ணத்தாரையும்} சுற்றிலும் பயத்திலிருந்து காப்பவனும், நல்ல அமைச்சர்களுடனும், தூய புரோஹிதர்களுடனும்,{33} காஷாய வஸ்திரம் தரித்த பலமுக்கியர்களுடனும் {கந்தலாடை அணிந்த படைத் தலைவர்களுடனும்} கூடியவனுமாக பரதன் நின்றிருந்தான்.(29ஆ-34அ) அந்த ராஜபுத்திரன் {பரதன்}, மரவுரியையும், கருப்பு மான் தோலையும் ஆடையாக உடுத்தியிருப்பதை ஏற்காதவர்களும், தர்மவத்ஸலர்களுமான அந்தப் பௌரர்கள் {அறம் விரும்பும் அந்நகர மக்கள்} போகங்களை அனுபவிப்பதில் ஈடுபாடில்லாதவர்களாக இருந்தனர்[2].(34ஆ,35அ)
[1] நினைத்தலும் தடம் கண் இணை நீர் வரஇனத்த தண்டலை நாட்டு இருந்தேயும் அக்கனத்த கந்தமும் காயும் கனிகளும்வனத்த அல்ல அருந்த இல் வாழ்க்கையான்- கம்பராமாயணம் 10156ம் பாடல், யுத்த காண்டம், மீட்சிப் படலம்பொருள்: {இராமனை} நினைத்ததும் நீள்விழிகளில் நீர் பெருக, கூட்டமான சோலைகளை சூழ்ந்த தன் நாட்டில் இருந்தும், அந்த மேன்மையுடைய கிழங்கும், காயும், பழங்களும் உடைய காட்டில் கிடைக்கையும் பொருள்களை அல்லாமல் பிறவற்றை அருந்தாத வாழ்க்கை கொண்டவனாக இருந்தான் {பரதன்}.
[2] தர்மாலயப் பதிப்பில், "மரவுரியையும், மான்தோலையுமுடுத்தியவரும், தருமத்திலசஞ்சலா பற்றுடையவருமான அந்த சக்கிரவர்த்தி திருக்குமாரரை (பரதரை) அந்த நகரஜனங்கள் சுகித்திருக்கச் செய்ய முடிந்தார்களில்லை" என்றிருக்கிறது. நரசிம்மாசாரியர் பதிப்பில், "அவர்கள், ராஜகுமாரனாகிய பரதன் மரவுரிகளையும் க்ருஷ்ணாஜினத்தையும் தரித்திருக்கையில், தர்மத்தில் மிகுதியும் விருப்பமுற்றிருக்கிற தாங்களும் அவனை விட்டு நல்ல வஸ்த்ரம் முதலிய போகங்களை அனுபவிக்கப் பொறாதிருந்தனர்" என்றிருக்கிறது. அதன் அடிக்குறிப்பில், "இங்கு, "நஹிதே ராஜபுத்ரம் தம் சீரக்ருஷ்ணாஜினாம்பரம் || பரிமோக்தும் வ்யவஸ்யந்தி பௌரா வை தர்மவத்ஸலம்" என்பது மூலம். மந்த்ரிகள் முதலிய பட்டணத்து ஜனங்கள், பரதனைச் சுற்றிச் சூழ்ந்திருப்பினும் அந்த பரதனை அனுபவிக்க (காண்பதற்கு) முயற்சி கொள்ளாதிருந்தனர். அவனைக் காணும் விஷயத்தில் ஆசையற்றிருந்தனரென்று கருத்து. ஏனென்னில் (ராஜபுத்ரம்) ராமனைப் பிரிந்த உத்தரக்ஷணத்திலேயே மரணம் அடைந்த சக்ரவர்த்தியின் புதல்வனல்லவா இவன். இப்பொழுது ராமன் வாரானாயின், இவனை நாம் எப்படி பெறுவோமென்று வருந்தி அவனைக் காணப் பொறாதிருந்தனர். அங்ஙனம் காணாதிருந்தமைக்கு மற்றொரு காரணமும் சொல்லுகிறார்கள் - தர்மத்திற்காகச் சரீரத்தை விடுவதில் பிதாவைப் போன்றவன். பதினான்கு ஸம்வத்ஸரங்கள் {வருடங்கள்} கடந்த பின்பும் ராமன் வருவதைக் காணாமையால், ப்ராணன்களை விடமுயன்ற பரதனைக் கண்டு பட்டணத்து ஜனங்கள் வருத்தப்படுவதாக இந்த சுலோகத்தில் சொல்லப்பட்டது. இங்ஙனம் பூர்வாசார்யர்கள் கூறும்படி" என்றிருக்கிறது. கோரக்பூர், கீதாபிரஸ் பதிப்பில், "அறநெறி கடைப்பிடிக்கும் அரசகுமாரர் (பரதன்) மரவுரியையும் கருமான் தோலையும் அணிந்து கொண்டு தவசியாக இருக்கும்போது, நகர மக்கள் எவரும் எந்தச் சுகபோகத்தையும் நாடவில்லை" என்றிருக்கிறது.
தர்மஜ்ஞனும் {தர்மத்தை அறிந்தவனும்}, தர்மனே {தர்மதேவனான யமனே} மற்றொரு தேகம் எடுத்து வந்தவனைப் போன்றவனுமான அவனிடம் {பரதனிடம்}, மாருதாத்மஜனான ஹனுமான், கைகளைக் கூப்பியவாறு {பின்வரும்} வாக்கியத்தைச் சொன்னான்:(35ஆ,36அ) "தண்டகாரண்யத்தில், மரவுரியும், ஜடையும் தரித்து வசித்தவரான எந்தக் காகுத்ஸ்தருக்காக நீர் வருந்துகிறீரோ, அவர் உமக்கு {தமது} குசலத்தைச் சொல்லியிருக்கிறார்.(36ஆ,37அ) தேவரே, உமக்குப் பிரியமானதைச் சொல்லப் போகிறேன். பயங்கர சோகத்தைக் கைவிடுவீராக. இந்த முஹூர்த்தத்தில் பிராதாவான {உம்முடன் பிறந்த அண்ணனான} ராமருடன் {மீண்டும்} சேரப்போகிறீர்.(37ஆ,38அ) இராமர், ராவணனைக் கொன்று மைதிலியை மீட்டெடுத்து, அர்த்தம் நிறைவேறி, மஹாபலவான்களான மித்ரர்கள் {நண்பர்கள்} சகிதராக வந்து கொண்டிருகிறார்.(38ஆ,39அ) மஹாதேஜஸ்வியான லக்ஷ்மணரும், புகழ்மிக்கவளான வைதேஹியான சீதை, மஹேந்திரனுடன் சசி {இந்திரனுடன் கூடிய இந்திராணி} எப்படியோ, அப்படியே ராமருடன் கூடியவளாகவும் வருகிறார்கள்" {என்றான் ஹனுமான்}.(39ஆ,40அ)
ஹனுமதன் இவ்வாறு கூறியதும், கைகேயிசுதனான பரதன், மகிழ்ச்சியடைந்த உடனேயே பூமியில் விழுந்தான்; அந்த மகிழ்ச்சியால் மோஹம் அடைந்தான் {மயக்கமடைந்தான்}.(40ஆ,41அ) இராகவன் {ரகு குல} பரதன், ஒரு முஹூர்த்தத்திற்குப் பிறகு, மீண்டும் ஆசுவாசமடைந்து, பிரியத்திற்குரியதைச் சொன்ன ஹனூமந்தனிடம் இதைச் சொன்னான்.(41ஆ,42அ) ஸ்ரீமான் பரதன், பரபரப்புடன் கபியை {குரங்கான ஹனுமானைத்} தழுவிக் கொண்டு, அசோகத்தில் {மகிழ்ச்சியில்} பிறந்தவையும், பிரீதிமயமானவையும், விபுலமானவையுமான கண்ணீர்த் துளிகளைச் சிந்தினான்.(42ஆ,43அ) "அனுக்ரோசத்துடன் {கருணை கூர்ந்து} இங்கே வந்திருக்கும் நீ தேவனா? மானுஷனா?{43ஆ} பிரியத்திற்குரிய செய்தியைப் பிரியத்துடன் சொன்ன உனக்கு நூறாயிரம் பசுக்களையும், நூறு சிறந்த கிராமங்களையும்,{44} குண்டலங்களுடன் கூடியவர்களும், சுப ஆசாரங்கள் உடையவர்களும், பாரியையாகக் தகுந்தவர்களுமான பதினாறு கன்னியரையும், ஹேமவர்ணம் {பொன்நிறம்} கொண்டவர்களும், அழகிய நாசிகளையும், தொடைகளையும் கொண்டவர்களும், சசி {சந்திரன்} போன்ற சௌம்யமான முகத்தைக் கொண்டவர்களும்,{45} சர்வாபரணங்களும் பூண்டவர்களும், நல்ல குலஜாதிகளில் பிறந்தவர்களும், சிறந்தவர்களுமான ஸ்திரீகளையும் கொடுக்கிறேன்" {என்றான் பரதன்}.(43ஆ-46அ)
நிருபாத்மஜன் {அரசகுமாரன்}, கபிப்ரவீரனிடம் {குரங்களில் சிறந்த வீரனான ஹனுமானிடம்} இருந்து அற்புதத்திற்கு ஒப்பான ராமனின் வருகையைக் கேட்டுப் பெரும் மகிழ்ச்சியடைந்தான். இராமனைக் காணும் ஆவலில், மீண்டும் மகிழ்ச்சி மேலிட்டவனாக {பின்வரும்} இந்தச் சொற்களைக் கூறினான்.(46ஆ,இ)
யுத்த காண்டம் சர்க்கம் – 125ல் உள்ள சுலோகங்கள்: 46
| Previous | | Sanskrit | | English | | Next |


