Bharata's vow | Ayodhya-Kanda-Sarga-088 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: வருத்தமடைந்த பரதன்; ஓர் உறுதியை ஏற்றது...
அவை அனைத்தையும் நன்றாகக் கேட்ட பரதன், தன் மந்திரிகளுடன் சேர்ந்து அந்த இங்குண மரத்தடியை அடைந்து, ராமனின் சயனத்தைக் கண்டான்.{1} அதன் பிறகு அவன் தன் அன்னையர் அனைவரிடமும் {பின்வருமாறு} சொன்னான், "இங்கே தான் அந்த மஹாத்மா {ராமர்}, தம் மேனி பூமியில் அழுந்தக் கிடந்திருக்கிறார்.(1,2) மஹாபாக்கியவானும், மதிமிக்கவருமான தசரதரின் பெருமைமிகு குலத்தைச் சேர்ந்த ராமர் வெறுந்தரையில் உறங்குவது தகுமோ?(3) மான் தோலால் மறைக்கப்பட்ட ஆடம்பர மெத்தைகளுடன் கூடிய மஞ்சங்களில் உறங்கும் அந்த புருஷவியாகரர் {மனிதர்களில் புலி}, வெறுந்தரையில் எவ்வாறு உறங்கினார்?(4)
விமானங்களுக்கு ஒப்பானவையும், சிறந்த விரிப்புகளுடன் கூடியவையும், புஷ்பக்குவியல்களால் அலங்கரிக்கப்பட்டவையும், சந்தனம், அகில் ஆகியவற்றால் நறுமணமூட்டப்பட்டவையும், உயர்ந்த வெண் மேகங்களைப் போல் பிரகாசிப்பவையும், கிளிகளின் கீச்சுகளை எதிரொலிப்பவையும், சிறந்த அரண்மனைகளையும் விஞ்சியவையும், குளுமையானவையும், நறுமணமிக்கவையும், பொன்னால் சுவர்கள் அமைக்கப்பட்டவையும், மேருவுக்கு நிகரானவையுமான கூட கோபுர, மாட மாளிகைகயில் வசித்து, கீதங்களும், வாத்தியங்களும் முழங்க, சிறந்த ஆபரணங்களின் ஒலிகள் மேலெழ, மிருதங்கங்களின் இன்னொலி அதிலும் மேலெழ, ஸூத, மாகத, வந்திகள் பலரும் துதிபாட அந்த பரந்தபர் {பகைவரை அழிப்பவரான ராமர்} சரியான காலத்தில் எழுப்பப்படுவாரே.(5-9)
இவ்வுலகில் இது நம்பமுடியாதது, எனக்கு சத்தியமாகவும் தோன்றவில்லை. என் மனம் உண்மையில் தடுமாறுகிறது. இஃது ஒரு ஸ்வப்னமாக {கனவாக} இருக்க நான் விரும்புகிறேன்.(10) தாசரதியான அந்த ராமரே வெறுந்தரையில் உறங்க வேண்டுமெனில் நிச்சயம் தைவதம் {தெய்வம்} காலத்தைவிடக் கொஞ்சமேனும் பலம்வாய்ந்ததில்லை.(11)
விதேஹ ராஜனின் மகளும், காண்பதற்கு இனிமையானவளும், தசரதரின் பிரியத்திற்குரிய மருமகளுமான சீதையும் வெறுந்தரையில் உறங்க வேண்டி வந்ததே.(12) இஃது என்னுடன் பிறந்தவரின் சயனமே. கடுந்தரையில் அங்கங்களால் நசுக்கப்பட்ட இந்தக் குசப்புற்கள் அனைத்திலும் இதோ சுவடுகள் தெரிகின்றன.(13) ஆங்காங்கே கனக {தங்கத்} துகள்கள் சிக்கியிருப்பது தென்படுகின்றன. உத்தமியான சீதை தன் ஆபரணங்களுடன் இந்த சயனத்தில் உறங்கியிருப்பாள் என நான் நினைக்கிறேன்.(14) அப்போது சீதையின் மேலாடை இங்கே சிக்கியிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவேதான் ஒளிரும் இந்த பட்டு இழைகள் இங்கே தென்படுகின்றன.(15) பர்த்தாவின் சயனமே சதிக்கு {கணவனின் படுக்கையே மனைவிக்கு} சுகமானது. சிறுமியும், சுகுமாரியும் {மென்மையானவளும்}, பரிதாபத்திற்குரியவளுமான அந்த மைதிலி துக்கத்தை உணர்ந்திருக்க மாட்டாள்.(16)
என்னால்தான் ராகவர் தன் பாரியையுடன் இத்தகைய சயனத்தில் அநாதையைப் போலக் கிடந்தார். ஹா, ஐயோ, நான் கொடூரன்[1].(17) பேரரசர்களின் குலத்தில் பிறந்தவரும், சர்வலோகத்திற்கும் சுகம் தருபவரும், சர்வலோகத்தின் பிரியத்திற்குரியவரும், கருநெய்தல் போன்ற கரிய நிறத்தையும், சிவந்த கண்களைக் கொண்டவரும், காண்பதற்கு இனியவரும், சுகத்திற்கே தகுந்தவரும், துக்கத்திற்குத் தகாதவருமான ராகவர், உத்தம ராஜ்ஜியத்தையும், சுகத்தையும் துறந்து எவ்வாறு வெறுந்தரையில் உறங்கினார்?(18,19)
[1] இயன்றது என் பொருட்டினால் இவ்விடர் உனக்கு என்ற போழ்தும்அயின்றனை கிழங்கும் காயும் அமுது என அரிய புல்லில்துயின்றனை எனவும் ஆவி துறந்திலென் சுடரும் காசுகுயின்று உயர் மகுடம் சூடும் செல்வமும் கொள்வென் யானே- கம்பராமாயணம் 2342ம் பாடல்பொருள்: இந்த இடர் உனக்கு என்னால் உண்டானது என்ற போதும், கிழங்கும், காயும் அமுதம் போல உண்டாய் எனவும், உறங்க இயலாத புற்படுக்கையில் உறங்கினாய் எனவும் அறிந்தாலும் நான் உயிரை விட்டேனில்லை. சுடரும் பொன்னால் செய்யப்பட்ட உயர்ந்த மகுடத்தை நான் சூடிக் கொள்வேன் போலும்.
சுபலக்ஷணங்களுடன் கூடிய லக்ஷ்மணன், தன்னுடன் பிறந்த ராமருடன் இக்கட்டான காலத்தில் சென்றான். அவனே பாக்கியவான். அவனே அதிர்ஷ்டசாலி.(20) பதியுடன் வனம் சென்ற வைதேஹியும் நிறைவடைந்தவளே. அந்த மஹாத்மாவுடன் இல்லாத நாம் அனைவரும் {அவரை அடைவோமா? மாட்டோமா? என்று} சந்தேகத்தில் அல்லாடுகிறோம்.(21) தசரதர் ஸ்வர்க்கத்தை அடைந்தார். இராமர் அரண்யத்தில் தஞ்சமடைந்தார். இந்தப் பிருத்வி மாலுமியற்ற ஓடத்தைப் போல எனக்குத் தெரிகிறது.(22) அவர் வனத்தில் வசித்தாலும், அவரது பாகுவீரியத்தால் {கைவலிமையால்} ரக்ஷிக்கப்பட்ட {பாதுகாக்கப்பட்ட} இந்த வசுந்தரையை {பூமியை} எவரும் மனத்தினாலும் வேண்டுவதில்லை.(23) ரக்ஷகர்கள் {காவலர்கள்} இல்லாத சூனிய மதில்களுடனும், கட்டுப்பாடற்ற ஹய துவிபங்களுடனும் {குதிரைகளுடனும், யானைகளுடனும்}, ரக்ஷிப்போரின்றி திறந்து கிடக்கும் நகர வாயில்களுடனும், மகிழ்ச்சியற்ற படைகளுடனும், வெறுமையாகவும், சீரற்ற முறையிலும் கிடக்கும் அந்த ராஜதானியை {தலைநகரான அயோத்தியை} நஞ்சுமிக்க உணவைப் போல சத்ருக்கள் விரும்புவதில்லை {கைப்பற்ற நினைக்கவில்லை}.(24,25)
இன்று முதல் நான் ஜடாமுடியும், மரவுரியும் தரித்துக் கொண்டு, பழங்களையும், கிழங்குகளையும் நித்தியம் உண்டு, வெறுந்தரையிலோ, புல்லின் மீதோ படுத்துக் கொள்வேன்.(26) அவரது உறுதிமொழியை வீணாக்காமல் நிறைவேற்ற, அவருக்காக {அவருக்குப் பதிலாக} எஞ்சிய காலமும் வனத்தில் சுகமாக வசித்திருப்பேன்.(27) சத்ருக்னனும், உடன் பிறந்தவருக்காக வசிக்கும் என்னுடன் இருப்பான். அந்த ஆரியர் {ராமர்}, லக்ஷ்மணனுடன் அயோத்தியைப் பரிபாலிப்பார்.(28)
இருபிறப்பாளர்கள் அந்தக் காகுத்ஸ்தரை {ராமரை} அயோத்தியில் அபிஷேகம் செய்விப்பார்கள். தேவர்கள் என்னுடைய இந்த மனோரதத்தை சத்தியமாக்குவார்கள்.(29) சிரந்தாழ்ந்து பலவகைகளில் நான் முன்வைக்கும் வேண்டுகோள்களை ஏற்றுக் கொள்ளவில்லையெனில், அவர் வனத்தில் திரியும் காலம் வரை, நானும் அவரைப் பின்தொடர்ந்து கொண்டிருப்பேன். இஃது அவர் அலட்சியம் செய்யத் தகாதது" {என்றான் பரதன்}.(30)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 088ல் உள்ள சுலோகங்கள்: 30
Previous | | Sanskrit | | English | | Next |