Companionship | Ayodhya-Kanda-Sarga-084 | Ramayana in Tamil
பகுதியின் சுருக்கம்: பரதனின் படை வருவதைக் கண்ட குஹன்; பரதனின் நோக்கத்தை அறிய விரும்பியது; விருந்தோம்பல் செய்த குஹன்...
கங்கா நதியின் ஓரம் முகாமிட்டிருக்கும் கொடிபடைகளைக் கண்ட நிஷாதராஜன் {குஹன்}, விரைவாகத் தன் ஞாதிகளிடம் {உறவினர்களிடம், பின்வருமாறு} பேசினான்:(1) "இதோ சாகரத்தைப் போன்ற இந்தப் பெருஞ்சேனையின் எல்லையை மனத்தில் எண்ணிப் பார்த்தாலும் காண முடியவில்லை.(2) அதோ அந்த ரதத்தில் கோவிதாரத்வஜம் {சீமை அத்தி / மாதுளை மரச் சின்னம் பொறித்த கொடி} நெடிதுயர்ந்திருக்கிறது. துர்ப்புத்தியுடன் கூடிய பரதனே வந்திருப்பது போலத் தெரிகிறது.(3) கைகேயி புத்திரனான பரதன், செம்படவர்களான நம்மை சிறைப்பிடிப்பானோ? கொல்வானோ? அல்லது அடைவதற்கரிய வசதிகளையும், செழிப்பையும் நாடும் அவன் {பரதன்}, தன் பிதாவால் ராஜ்ஜியத்தில் இருந்து விரட்டப்பட்ட தாசரதி {தசரதன் மகன்} ராமனைக் கொல்லத்தான் வந்திருக்கிறானோ?(4,5)
தாசரதி ராமன் என் தலைவனும், சகாவுமாவான். அவனது நன்மையில் விருப்பத்துடன் சன்னதர்களாக {ஆயுதம் ஏந்தியவர்களாக} இந்த கங்கையின் ஓரத்தில் நிலைத்திருப்பீராக.(6) நதிரக்ஷர்களான {ஆற்றைக் காப்பவர்களான} செம்படவர்கள் அனைவரும், துருப்புகளுடன் சேர்ந்து, மாமிசங்கள், கிழங்குகள், பழங்களை உண்டவாறே கங்கா நதியின் அருகில் நிலைத்திருக்கட்டும்.(7) பஞ்சசத நாவங்கள் {ஐநூறு படகுகள்} ஒவ்வொன்றிலும் நூறு கைவர்த்தன {செம்படவ} இளைஞர்கள் சன்னதர்களாக {ஆயுதம் ஏந்தியவர்களாக} நிலைத்திருக்கட்டும்" {என்று சொன்ன குஹன், பின்வரும்} இதையும் அறிவித்தான்:(8) "இங்கே பரதன் ராமனிடம் துஷ்டம் இல்லாதிருக்கிறான் {கெட்ட எண்ணம் இல்லாதிருக்கிறான்} என்று தெரிந்தால் மட்டுமே இந்த சேனை இன்று பாதுகாப்பாக கங்கையைக் கடக்க வேண்டும்" {என்றான் குஹன்}[1].(9)
[1] ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோவேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாளோதோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல்லன்றோஏழைமை வேடன் இறந்திலன் என்று எனை ஏசாரோ- கம்பராமாயணம் 2317ம் பாடல்பொருள்: ஆழமானதும், நீண்ட பெரிய அலைகளைக் கொண்டதுமான இந்த ஆற்றை இவர்கள் கடந்து போய்விடுவார்களா? யானைகளுடன் கூடிய நீண்ட படையைக் கண்டு நானும் விலகிச் செல்லும் வில்லாளோ? தோழமை என்று அவர் {ராமன்} சொல்லிய சொல் ஒப்பற்ற சொல் அல்லவா? {இவர்களைப் போகவிட்டால்} "அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே" என்று என்னை யாவரும் ஏச மாட்டார்களா?
நிஷாதிபதியான குஹன், இவ்வாறு சொல்லிவிட்டு, மத்ஸ்ய மாமிசத்தையும் {மீன் இறைச்சியையும்}, தேனையும் காணிக்கையாக எடுத்துக் கொண்டு பரதனை அணுகினான்.(10) அப்போது, பிரதாபவானும், வினயமறிந்தவனுமான சூதபுத்திரன் {சுமந்திரன்} அவன் வருவதைக் கண்டு, பரதனிடம் பணிவுடன் {பின்வருமாறு} சொன்னான்:(11) "ஆயிரம் ஞாதிபரிவாரத்தால் {உறவினர்களால்} சூழப்பட்ட இந்த ஸ்தபதி {தலைவன் குஹன்}, தண்டகாரண்யத்தை நன்கறிந்தவனாவான். இந்த விருத்தன் {முதியவன் / பெரியவன்}, உன்னுடன் பிறந்தானின் {ராமனின்} சகாவுமாவான்.(12) எனவே, காகுத்ஸ்தா {பரதா}, நிஷாதிபனான குஹன் உன்னைக் காணட்டும். இராமலக்ஷ்மணர்கள் எங்கே இருக்கின்றனர் என்பதை இவன் சந்தேகமின்றி அறிவான்" {என்றான் சுமந்திரன்}.(13)
சுமந்திரனின் இந்த சுபச் சொற்களைக் கேட்ட பரதன், "சீக்கிரமாகக் குஹன் என்னைப் பார்க்கட்டும்" என்ற சொற்களைச் சொன்னான்.(14)
அனுமதி கிடைத்ததும் மகிழ்ச்சியடைந்த குஹன், தன் ஞாதிகளால் சூழப்பட்டவனாகப் பணிவுடன் பரதனை அணுகி, இந்தச் சொற்களைச் சொன்னான்:(15) "இந்த தேசம் {இடம்}, உன் மாளிகையின் புறக்கடைத் தோட்டமாகும். நாங்கள் அனைவரும் உன் தொண்டர்களாவோம். நீ இந்த தாசனின் வீட்டில் வசிக்க வேண்டுமென வேண்டுகிறோம்.(16) நிஷாதர்களால் திரட்டப்பட்ட கிழங்குகளும், பழங்களும், காய்ந்தவையும், பச்சையாக இருப்பவையுமான தரமான மாமிசங்களும், வனத்தில் விளைபவை பிறவும் இங்கே இருக்கின்றன.(17) இந்த சேனை இவற்றை உண்டு இவ்விரவில் இங்கே வசிக்கலாமென நான் நம்புகிறேன். விருப்பத்திற்குரிய விதவிதமானவற்றால் அர்ச்சிக்கப்படும் நீ, உன் சேனையுடன் நாளை செல்லலாம்" {என்றான் குஹன்}.(18)
அயோத்தியா காண்டம் சர்க்கம் – 084ல் உள்ள சுலோகங்கள்: 18
Previous | | Sanskrit | | English | | Next |